திருக் கரவீரம்





திருக் கரவீரம்
(கரையபுரம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "கரையபுரம்" என்று வழங்குகின்றனர்.

         திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோயில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் உள்ளது.


இறைவர்                   : கரவீரேசுவரர்.

இறைவியார்               : பிரத்யட்சமின்னம்மை.

தல மரம்                   : அலரி.

தீர்த்தம்                    : அனவரத தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - அரியும் நம்வினை.


         கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.

         கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தம் அனவரத தீர்த்தம் காணலாம். முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

         இக்கோயிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீசுவரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள என்பது ஐதீகம்.

         திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள திருப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறுநாள் இறைவனை பாடியுள்ளார் என்கின்றனர். இது பெரிய புராணத்தில் இல்லை. திருஞானசம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 573
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
         நீலமிடற்று அருமணியை வணங்கிப் போற்றி,
பாடுஒலிநீர்த் தலையாலங் காடு மாடு
         பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி,
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
         நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடி,
தேடுமறைக்கு அரியார்தம் விளமர் போற்றித்
         திருஆரூர் தொழநினைந்து சென்று புக்கார்.

         பொழிப்புரை : நிலைபெறும் `திருவாஞ்சியத்தில்\' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந்திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைகளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

 திருவாஞ்சியம் - வன்னிகொன்றை (தி.2 ப.7) - இந்தளம்.

திருப்பெருவேளூர் - அண்ணாவும் (தி.3 ப.64) - பஞ்சமம்.

திருக்கரவீரம் - அரியும் நம்வினை (தி.1 ப.58)- பழந்தக்கராகம்.

திருவிளமர் - மத்தகம் அணிபெற (தி.3 ப.88) - சாதாரி.

         திருத்தலையாலங்காட்டிலும் திருச்சாத்தங்குடியிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.




1.058  திருக்கரவீரம்             பண் - பழந்தக்கராகம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அரியும் நம்வினை உள்ளன ஆசுஅற,
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழுங்கர வீரத்துஎம்
பெரிய வன்கழல் பேணவே.

         பொழிப்புரை :வரிகள் அமைந்த சிறந்த நீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.


பாடல் எண் : 2
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுஉடன் சூடிய
கங்கை யான்திக ழுங்கர வீரத்துஎம்
சங்க ரன்கழல் சாரவே.

         பொழிப்புரை :தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.


பாடல் எண் : 3
ஏதம் வந்துஅடையா, இனி நல்லன,
பூதம் பல்படை ஆக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்துஎம்
நாதன் பாதம் நணுகவே.

         பொழிப்புரை :நல்லனவாகிய பூதகணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.


பாடல் எண் : 4
பறையு நம்வினை உள்ளன பாழ்பட,
மறையு மாமணி போல்கண்டம்
கறைய வன்,திக ழுங்கர வீரத்துஎம்
இறைய வன்கழ லேத்தவே.

         பொழிப்புரை :நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.


பாடல் எண் : 5
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதில் எய்தமுக்
கண்ணி னான்உறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.

         பொழிப்புரை :சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.


பாடல் எண் : 6
நிழலின் ஆர்மதி சூடிய நீள்சடை
அழலின் ஆர்அழல் ஏந்திய
கழலி னார்உறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்குஇல்லை துக்கமே.

         பொழிப்புரை :ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.


பாடல் எண் : 7
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன், ஆர்அழல் போல்ஒளிர்
கண்ட னார்உறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே.

         பொழிப்புரை :தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூரவிலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.



பாடல் எண் : 8
புனல் இலங்கையர் கோன்முடி பத்துஇறச்
சினவல் ஆண்மை செகுத்தவன்
கனல் அவன்உறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்குஇடர் இல்லையே.

         பொழிப்புரை :கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவ னாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.


பாடல் எண் : 9
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திரள் ஆகிய
கள்ளத் தான்உறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே.

         பொழிப்புரை :நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப்பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 10
செடி அமண்ணொடு சீவரத் தார்அவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்,
கடிய வன்உறை கின்ற கரவீரத்து
அடிய வர்க்குஇல்லை அல்லலே.

         பொழிப்புரை :முடைநாற்றம் வீசும் அமணர்களோடு காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள்கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 11
வீடு இலான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேல்கசி வால்தமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்இவை
பாடு வார்க்குஇல்லை பாவமே.

         பொழிப்புரை :அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...