அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நஞ்சினைப் போலுமன
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
அடியேனுடைய
உயிர்த்துணை நீயே. காத்து அருள்வாய்.
தந்தனத்
தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்
நண்புகப்
பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண ...... மென்றுகூறல்
உன்செவிக்
கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து ......
மிஞ்சுவாரார்
உன்றனக்
கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்
கஞ்சனைத்
தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே
கண்கயற்
பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய்
அஞ்சவெற்
பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே
அண்டமுற்
பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
நஞ்சினைப் போலும் மன வஞ்சகக் கோளர்களை
நம்புதல் தீது என ...... நினைந்து, நாயேன்
நண்பு
உகு அப் பாதம் அதில் அன்பு உறத் தேடி, உனை
நங்கள் அப்பா சரணம் ...... என்றுகூறல்
உன்செவிக்கு
ஏறலைகொல், பெண்கள்மெல்
பார்வையைகொல்,
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவார்
ஆர்,
உன்
தனக்கே பரமும், என் தனக்கு ஆர் துணைவர்,
உம்பருக்கு ஆவதினின் ...... வந்து தோணாய்.
கஞ்சனைத்
தாவி முடி முன்பு குட்டு ஏய,மிகு
கண்களிப் பாக விடு ...... செங்கையோனே!
கண்கயல்
பாவை குற மங்கை பொன் தோள் தழுவு
கஞ்சுகப் பான்மை புனை ...... பொன்செய் தோளாய்!
அஞ்ச
வெற்பு ஏழுகடல் மங்க, நிட்டூரர் குலம்
அந்தரத்து ஏற விடு ...... கந்தவேளே!
அண்டமுன்
பார் புகழும் எந்தை பொற்பு ஊர்புலிசை
அம்பலத்து ஆடும் அவர் ...... தம்பிரானே.
பதவுரை
கஞ்சனைத் தாவி முடி
முன்பு குட்டு ஏய --- பிரமதேவனை அவனது தலையில்
முன்பு நன்றாகக் குட்டி
மிகு கண் களிப்பாக
விடு செங்கையோனே --- மிக்க களிப்புடன் வீசிய சிவந்த திருக்கரத்தினை உடையவரே!
கண் கயல் பாவை -- கயல் மீன் போலும்
கண்களை உடைய பாவையாகிய
குற மங்கை --- குற மகளாகிய வள்ளி
பிராட்டியின்
பொற்றோள் --- அழகிய தோள்களை
தழுவு கஞ்சுகப் பான்மை புனை பொன்செய் தோளாய்
--- தேவரீரது அழகிய திருத்தோள்களால், உடம்பைத்
தழுவியுள்ள சட்டை போன்று இறுகத் தழுவியவரே!
அஞ்ச வெற்பு --- கிரவுஞ்ச மலை
அஞ்ச,
ஏழு கடல் மங்க --- ஏழு கடல்களும் வற்றி
ஒடுங்கவும்,
நிட்டூரர் குலம் அந்தரத்து ஏறவிடு
கந்தவேளே --- கொடுமை நிறைந்த அசுரர் குலத்தை விண்ணுலகு செல்லும்படி விடுத்த கந்தவேளே!
அண்ட முன் பார் புகழும்
எந்தை
--- அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையாகி
பொற்பு ஊர் புலிசை
அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே --- அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில்
பொன்னம்பலத்தில் ஆடும் அம்பலவாணப் பெருமானுடைய தனிப்பெரும் தலைவரே!
நஞ்சினைப் போலும் --- கொடிய விடத்தைப்
போல்
மன வஞ்சகக் கோளர்களை --- மனத்திலே
வஞ்சம் கொண்டவர்களை
நம்புதல் தீது என நினைந்து --- நம்புதல்
தீமையைத் தரும் என்று நினைத்து
நாயேன் --- நாயினும்
கடைப்பட்டவனாகிய அடியேன்,
நண்பு உகு அப் பாதம் அதில் --- நன்மையே
பெருகுகின்ற தேவரீரது திருவடிகளில்
அன்பு உறத் தேடி --- உள்ளன்போடு தேடி
உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் --- தேவரீரை, "எங்கள் அப்பனே சரணம்"
என்று கூறி முறையிடுவது
உன் செவிக்கு ஏறலை கொல் ---
தேவரீரது திருச்செவிகளில் ஏறவில்லையா?
பெண்கள் மெல்
பார்வையை கொல் --- தேவிமார்களாகிய வள்ளி தேவயானை மேல் வைத்த பார்வையால்
இந்தப் பாராமுகமோ? (மேல் என்னும்
சொல் பாடலை நோக்கி, மெல் என வந்தது)
உன் சொலைத் தாழ்வு செய்து
மிஞ்சுவார் ஆர் --- உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லினை யார் மிஞ்சக்
கூடும்? (சல்லை என்னும் சொல், சொலை என
வந்தது).
உன் தனக்கே பரமும் --- அடியேனைத்
தாங்குதல் உமக்கே கடமை ஆகும். ( பரம் - பாரம். பாரமும் என்னும் சொல் பாடல்
சந்தத்தை நோக்கி பரமும் என வந்தது)
என் தனக்கு ஆர்
துணைவர்
--- தேவரீரை அன்றி அடியேனுக்குத் துணையாக யார் உள்ளனர்?
உம்பருக்கு ஆவதினின்
வந்து தோணாய் --- தேவர்களுக்கு அருளியது போல் அடியேன் முன்னும் தோன்றி
அருள் புரிக.
பொழிப்புரை
பிரமதேவனை அவனது தலையில் முன்பு
நன்றாகக் குட்டி, மிக்க
களிப்புடன் வீசிய சிவந்த திருக்கரத்தினை உடையவரே!
கயல் மீன் போலும் கண்களை உடைய பாவையாகிய குற மகளாகிய வள்ளி பிராட்டியின் அழகிய தோள்களை தேவரீரது அழகிய திருத்தோள்களால், உடம்பைத் தழுவியுள்ள சட்டை போன்று இறுகத்
தழுவியவரே!
கிரவுஞ்ச மலை அஞ்ச, ஏழு கடல்களும் வற்றி
ஒடுங்கவும், கொடுமை நிறைந்த அசுரர்
குலத்தை விண்ணுலகு செல்லும்படி விடுத்த கந்தவேளே!
அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும்
எம் தந்தையாகி, அழகிய புலியூர் என்னும்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடும் அம்பலவாணப் பெருமானுடைய தனிப்பெரும் தலைவரே!
கொடிய விடத்தைப் போல் மனத்திலே வஞ்சம் கொண்டவர்களை நம்புதல் தீமையைத்
தரும் என்று நினைத்து, நாயினும்
கடைப்பட்டவனாகிய அடியேன், நன்மையே பெருகுகின்ற தேவரீரது
திருவடிகளில் உள்ளன்போடு தேடி, தேவரீரை, "எங்கள் அப்பனே சரணம்" என்று கூறி
முறையிடுவது தேவரீரது
திருச்செவிகளில் ஏறவில்லையா? தேவிமார்களாகிய வள்ளி
தேவயானை மேல் வைத்த பார்வையால் இந்தப் பாராமுகமோ? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி
யார் மிஞ்சக் கூடும்? அடியேனைத் தாங்குதல் உமக்கே
கடமை ஆகும். தேவரீரை அன்றி அடியேனுக்குத்
துணையாக யார் உள்ளனர்? தேவர்களுக்கு
அருளியது போல் அடியேன் முன்னும் தோன்றி அருள் புரிக.
விரிவுரை
கஞ்சனைத்
தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செங்கையோனே ---
பிரமதேவனை
அவனது தலையில் முன்பு நன்றாகக் குட்டி, மிக்க
களிப்புடன் வீசிய சிவந்த திருக்கரத்தினை உடையவர் முருகப் பெருமான்.
கஞ்சம்
- தாமரை. தாமரை மலரைத் தனக்கு இருக்கையாக உடையவன் ஆதலால், பிரமதேவர் கஞ்சன் எனப்பட்டார்.
குமாரக்கடவுள்
திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளிய போது, ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி
தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும்
சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த
எல்லாக் கணர்களும், யான் எனது என்னும்
செருக்கின்றி, சிவபெருமானை வணங்கி
வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்குக் கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான்
வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள்
திரண்டால் என்ன எழுந்தருளி வந்து இருந்தார். அவர் அடிமலர் தொழுது தோத்திரம்
புரிந்து சென்றனர்.
பிரமதேவர்
குமரக் கடவுளைக் கண்டு வணங்காது,
“இவன்
ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப்
பெருமான் சிவன் வேறு தான் வேறன்று,
மணியும்
ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே
என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து
சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு
உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை
நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.
தருக்குடன்
செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது
கைகுவித்து, வணங்கிடாத பாவனையாக
வணங்கினன்.
கந்தப்பெருமான்
“நீ யாவன்” என்றனர்.
பிரமதேவர்
அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன்
“உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.
“நன்று!
வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.
சதுர்முகன்
இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.
உடனே
இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து,
திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி!
நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ
மந்திரத்தின் பொருளை விளக்குதி" என்றனர்.
தாமரைத்
தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா
மறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்
பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம்
எனப்படு மொழிப்பொருள் இயம்புக",என்று உரைத்தான்.
---கந்தபுராணம்.
ஆறு
திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன்
வினவுதலும், பிரமன் அக்குடிலை
மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய
ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலை குனிந்தனன். நாம்
சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப்
பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப்
பிறப்பிடமாகியும், காசியில்
இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியும் உள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின்
பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.
பிரமன்
“ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.
அது
கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதல் எழுத்திற்குப்
பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும்
புரிகின்றனையோ? பேதாய்!” என்று
நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.
“சிட்டி செய்வது இத்
தன்மையதோ?எனச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளும்
குலுங்க" ---கந்தபுராணம்.
பிரமதேவனது
அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதன் ஆகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர்
உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது
பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
திருக்
கஞ்சத்தனைக் கண்டித்து,
உறக்கம் குட்டி விட்டும், சற்
சிவக்கு, அன்று அப் பொருள்கொஞ்சிப் ...... பகர்வோனே!
---
(பருத்தந்த) திருப்புகழ்.
“வேதநான்முக மறையோ
னொடும் விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” ---
(காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய
பெருமாளே” --- (பரவை) திருப்புகழ்.
“ஆர ணன்றனை வாதாடி ஓருரை
ஓது கின்றென வாராது எனாஅவன்
ஆண வங்கெட வேகாவலாம்அதில் இடும்வேலா... --- (வாரணந்) திருப்புகழ்.
தருக்கிய
வேதன் சிறைப்பட, நாளும்
சதுர்த் தச லோகங் ...... களும் வாழச்
சமுத்திரம்
ஏழும், குலக்கிரி ஏழும்,
சளப்பட, மாவும் ...... தனிவீழத்
திருக்கையில்
வேல் ஒன்று எடுத்து, அமர் ஆடும்,
செருக்கு மயூரம் ...... தனில் வாழ்வே! --- (பெருக்க
உபாயம்) திருப்புகழ்.
“.... ..... ..... படைப்போன்
அகந்தை
உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின் உண்மை -- புகன்றிலையால்
சிட்டித்
தொழில்அதனைச் செய்வது எங்ஙன் என்று,
முனம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே” --- கந்தர்
கலிவெண்பா.
தருக்கிய
வேதன் சிறைப்பட, நாளும்
சதுர்த் தச லோகங் ...... களும் வாழச்
சமுத்திரம்
ஏழும், குலக்கிரி ஏழும்,
சளப்பட, மாவும் ...... தனிவீழத்
திருக்கையில்
வேல் ஒன்று எடுத்து, அமர் ஆடும்,
செருக்கு மயூரம் ...... தனில் வாழ்வே! --- (பெருக்க உபாயம்)
திருப்புகழ்.
அஞ்ச
வெற்பு, ஏழு கடல் மங்க, நிட்டூரர் குலம்
அந்தரத்து ஏறவிடு கந்தவேளே ---
மாயைகள்
பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை
ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும்
விண்ணுலகுக்குச் சென்றது.
கிரவுஞ்ச
மலை - வினைத்தொகுதி. தாரகன் - மாயை.
சூரபதுமன் - ஆணவம். சிங்கமுகன் - கன்மம். கடல் - பிறவித் துன்பம்.
வேல்
- வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள்
பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின்
வினையை வெல்லும் தன்மை உடையது வேல். "வினை ஓட விடும் கதிர்வேல்" என்றார்
அநுபூதியில். ஞானம் வெளிப்பட, மாயையும் ஆணவமும் அடங்கிப் போயின.
அறிவின்
தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை.
"கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய
நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார்
மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும்
அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்
என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், போர்வேல்
எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல்
கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்"
எனப்பட்டது.
சிவபெருமான்
தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார்.
அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்க்ளையும்
அறுத்தார்.
அண்டர்
உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டல நிறைந்த ரவி, சதகோடி மதிஉதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல், --- வேல் விருத்தம்.
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டல நிறைந்த ரவி, சதகோடி மதிஉதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல், --- வேல் விருத்தம்.
தேர்
அணிஇட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில்வேல்
கூர்
அணிஇட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேர்
அணிஇட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்ப்
பேரணி
கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. --- கந்தர் அலங்காரம்.
நஞ்சினைப் போலும் மன வஞ்சகக் கோளர்களை நம்புதல் தீது ---
கொடிய
விடத்தைப் போல், மனத்திலே வஞ்சம்
கொண்டவர்களை நம்புவது தீமையை விளைவிக்கும்.
விடம்
உண்டாரை மட்டுமே கொல்லும் தன்மை உடையது.
உள்ளத்தில்
விடம் உடையவர் கூட்டுறவு உயிரைப் பாவத்தில் சேர்த்து, எழுபிறப்பும் வாட்டி வதைக்கும் தன்மை உடையது.
வஞ்சகம்
என்பது,
ஆசை
காரணமாக உள்ளத்தில் எழும் ஒர் கள்ள உணர்வு. ஆசை காரணமாக ஒன்றை அடைய வேண்டி, அதற்கு
உரிய நெறியில் உண்மையாக முயலாமல், உள்ளத்தில் பொய்யை வைத்து, புறத்திலே
வேடமிட்டு,
நடித்து
வாழ்தல்.
வஞ்சகம்
என்பது இறைவன் மேல் படரும் சிந்தையை இடையே மாற்றி, தனது செயல்களைப்
பற்றுக் காரணமாகப் பிற இடங்களில் செலுத்தி நெஞ்சினை வஞ்சித்தல்.
ஔவைப்
பிராட்டியார் "பாம்பொடு பழகேல்" என்றார் ஆத்திசூடியில். இதன் பொருள், பாலை ஊட்டினாலும், விடத்தையே தரும் பாம்பு
போல,
எத்தனை
நன்மை செய்தாலும் அத்தனையும் பெறும் வரை காத்திருந்து பெற்று, முடிவில் நன்மை
செய்தவருக்கே தீமையை நினைக்கின்ற தன்மை உடையவரோடு சேர்ந்து பழகவேண்டாம் என்றது.
பழகுதல் என்பது நாளும் சேர்ந்து இருத்தல். எதனோடு, யாரோடு, யார் ஒருவர்
பழகுகின்றாரோ,
அதற்கு
உரிய குணமே அவரிடம் மிகுந்து இருக்கும்.
நெஞ்சில்
வஞ்சம் சிறிதும் இல்லாதவன் இறைவன் ஒருவனே.
அவனை உள்ளத்தில் வைத்து வழிபடும் அடியவரும் வஞ்சமற்றவரே. இறைவனை நினைந்தால்
நெஞ்சில் வஞ்சம் நீங்கும். நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்.
வஞ்சம்
என்பது கரவு என்றும் பொருள்படும். உள்ளத்தில் உள்ள தீமையை வெளிக்காட்டாமல், நல்லவர் போல்
நடிப்பது கரவு.
கரவு
என்ற சொல்லுக்கு, வஞ்சனை, மறைவு, களவு, பொய் என்று
பொருள்கள் உண்டு.
உள்ளத்தில்
கரவு உடையவர்கள் நற்கதி அடையமாட்டார்கள் என்பதை, "கரப்பவர்
தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்" என்னும் அப்பர் திருவாக்கால்
அறியலாம்.
இறைவனை
வழிபடுவது,
நெஞ்சத்தைப்
புலன்கள் வழி செலுத்தாமல், தூய்மை செய்து இறைவனுடைய அருளுக்குப் பாத்திரம்
ஆவதற்கே. இதனை
"நெஞ்சினைத் தூய்மை
செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ" என்ற அப்பர் திருநேரிசையால் அறிக.
பஞ்ச
பூத வலையில் பட்டால், வஞ்சகம் ஆறு போலப்
பெருகும். இறைவனை வழிபட்டால், வஞ்ச ஆறுகள் வற்றிப் போகும் என்பதை,
பஞ்ச
பூத வலையில் படுவதற்கு
அஞ்சி,
நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால்
நினைந்தேன், நினைவு எய்தலும்,
வஞ்ச
ஆறுகள் வற்றின காண்மினே.
என்னும்
அப்பர் திருவாக்கால் அறியலாம்.
பைஅரவக்
கச்சையாய்! பால் வெண்ணீற்றாய்!
பளிக்குக் குழையினாய்! பண்ஆர்இன்சொல்
மைவிரவு
கண்ணாளைப் பாகம் கொண்டாய்,
மான்மறிகை ஏந்தினாய், வஞ்சக் கள்வர்
ஐவரையும்
என்மேல் தரவு அறுத்தாய்,
அவர்வேண்டும்
காரியம்இங்கு ஆவது இல்லை,
பொய்
உரையாது உன்அடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. --- அப்பர்.
தெள்ளியர்
அல்லாத் தேரரோடு அமணர்
தடுக்கொடு சீவரம்
உடுக்கும்
கள்ளம்ஆர்
மனத்துக் கலதிகட்கு அருளாக்
கடவுளார் உறைவிடம்
வினவில்
நள்இருள்
யாமம் நான்மறை தெரிந்து
நலம்திகழ் மூன்றுஎரி ஓம்பும்
ஒள்ளியார்
வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி அதுவே. --- திருஞானசம்பந்தர்.
வஞ்சகம்
அற்ற உள்ளத்தோடு, இறைவனது
திருவைந்தெழுத்தை, உறக்க நிலையிலும்,விழிப்பு நிலையிலும் போற்றிச் சொல்லி
வாருங்கள். பல
வழிகளில் திரிந்து செல்லும் தன்மை உடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து, ஒருமுகப்படுத்தி, இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை
வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள்
இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே ஆகும் என்பார்
திருஞானசம்பந்தர்.
துஞ்சலும்
துஞ்சல்இ லாத போழ்தினும்
நெஞ்சகம்
நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம்
அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ
தைத்தன அஞ்செ ழுத்துமே. ---
திருஞானசம்பந்தர்.
நானும்
கள்ளன். எனது தொண்டும் கள்ளத்தொண்டு. இவ்வாறு வினைமுதலாகிய உள்ளமும், வினையாகிய செயலும் கள்ளத்தன்மை
நீங்காமல் நிகழ, காலம் வீணே
கழிகின்றது. ஞானத்தெளிவு சிறிதும் இல்லேன், அது உள்ளவன் போல கள்ளத் தொண்டிலேயே நின்று
உன்னைத் தேடினேன். நினைப்பவர் நினைந்த எல்லாம் நினைப்பவர் நினைப்புடன் இருந்து
நீயே உணர்கின்றாய் என்னும் உண்மையை நாடிக் கண்டேன். கண்ட பிறகு எனக்கு நானே சிரித்துக்
கொண்டேன் என்கிறார் அப்பர் பெருமான்.
கள்ளனேன்
கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேன் ஆகி
நின்று தேடினேன், நாடிக் கண்டேன்,
உள்குவார்
உள்கிற்று எல்லாம் உடன்இருந்து அறிதி என்று
வெள்கினேன்,
வெள்கி, நானும் விலாஇறச் சிரித்திட்டேனே.
இத்
உண்மையை, "வஞ்ச மனத்தான்
படிற்று ஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்" என்னும் திருக்குறளால்
காட்டினார் செந்நாப் போதார்.
புலன்கள்
கள்ளத் தன்மையை உடையன. அவை உயிர்க்கு உண்மை அறிவு தோன்றாமல் மறைத்து நிற்கும்.
கள்ளத் தன்மை நீங்கினால், அந்தப் புலன்களே இறைவனை அறியத் துணை நிற்கும்
என்பதை,
உள்ளம்
பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல்
பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத்
தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்
புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.
என்று
காட்டினார் திருமூல நாயனார்.
ஒவ்வொருவருடைய
உள்ளத்திலும்,
நற்புண்பகளாகிய
பல தீர்த்தங்கள் உள்ளன. முன் செய்த வினை நீங்குமாறு, அந்தத் தீர்த்தங்களில் மூழ்குவதை, மெல்லப் பயிலாத வஞ்சமனம் உடைய
அறிவிலிகள், புறத்தே பல
தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும்,
மேடும்
கடந்து நடந்து இளைக்கின்றனர் என்கின்றார் திருமூல நாயனார்.
உள்ளத்தின்
உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக்
குடைந்து நின்று ஆடார் வினைகெட,
பள்ளமும்
மேடும் பரந்து திரிவரே
கள்ள
மனம் உடைக் கல்வி இலோரே.
அகத்
தூய்மை இல்லாமல், புறத்திலே
தீர்த்தத்தில் முழுகுவதால் பயனில்லை என்பதைக் காட்டிய திருரூல நாயனாரின் அருள்வாக்கை, அப்பர் பெருமான்
பின்வரும் பாடல்களால் உறுதி செய்து அருளுகின்றார்.
கங்கை
ஆடில் என்! காவிரி ஆடில் என்!
கொங்கு
தண் குமரித்துறை ஆடில் என்!
ஓங்கு
மாகடல் ஓதநீல் ஆடில் என்!
எங்கும்
ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
கோடி
தீர்த்தம் கலந்து குளித்து, அவை
ஆடி
னாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும்
நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி
வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.
என
அப்பரும் அருளிச்செய்தல் காண்க.
நண்ணாத
வஞ்சரிடம் நாடி, நெஞ்சம்
நனிநொந்து நைந்து நவையாம்
புண்ணாகி
நின்ற எளியேனை அஞ்சல்
புரியாது, நம் பொன் அடியை
எண்ணாத
பாவி இவன் என்று தள்ளின்
என்செய்வது? உய்வது அறியேன்,
தண்ஆர்
பொழிற்கண் மதிவந்து உலாவு
தணிகாசலத்து இறைவனே.
என்று
வள்ளல் பெருமான் அருளிச் செய்வதால்,
வஞ்சகரிடம்
சேர்ந்து இருந்தால் நெஞ்சம் நைந்து, நைந்து குற்றமே உண்டாகும்.
எனவே, நஞ்சினைப்
போலும் மனத்தினை உடைய வஞ்சகர்களை நம்பினால் தீமையே விளையும் என்றார் அடிகளார்.
நண்பு
உகு அப் பாதம் அதில் அன்பு உறத் தேடி ---
நண்பு
- நட்பு, அன்பு, உறவு.
உகுதல்
-- சுரத்தல்,
சிந்துதல், சுரத்தல்,
அன்பு
சுரக்கின்ற திருப்பாதம் இறைவனுடையது. அதை உள்ளன்போடு தேடுதல் வேண்டும். உள்ளத்தில் அன்பு இல்லாமல், அன்பு உடையவர்
போல் வேடமிட்டுக் கொண்டு, வெற்றுக் கிரியைகளைச் செய்வதன் மூலம் அவன்
திருவடியைக் காண முடியாது. இதனை விதிமார்க்கதில் நின்ற சிவகோசரியார்க்கு, அன்பு
மார்க்கத்தில் நின்ற கண்ணப்ப நாயனாரின் அருட்செயல்கள் மூலம் காணுமாறு இறைவனே
அறிவுறுத்தியது காண்க.
துகள்
இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து
நலம் சிறந்த குடி மல்கிச் சென்னி மதி புனையவளர்
மணி மாடச் செழும் பதிகள் மன்னி
நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாட்டில் அவதரித்த, திருநாவுக்கரசு
நாயனார்,
அந்த
நெறி வழியே நின்று திருநல்லூர் என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய போது, அவருடைய
திருமுடிமேல் தனது திருவடியைச் சூட்டி அருளினார் சிவபெருமான் என்பதை,
நன்மைபெருகு
அருள் நெறியே வந்து, அணைந்து, நல்லூரின்
மன்னு
திருத்தொண்டனார் வணங்கி, மகிழ்ந்து எழும்பொழுதில்,
"உன்னுடைய
நினைப்பு அதனை முடிக்கின்றோம்" என்று அவர்தம்
சென்னிமிசைப்
பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
என்னும்
தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்கால் அறியலாம்.
பெண்கள்
மெல் பார்வையை கொல் ---
மேல்
என்னும் சொல் பாடலை நோக்கி, மெல் என வந்தது.
தேவிமார்களாகிய
வள்ளி தேவயானை மேல் வைத்த பார்வையால் இந்தப் பாராமுகமோ?
இருவர்
மயலோ? அமளி விதமோ?
என் என செயலோ? ...... அணுகாத
இருடி
அயன் மால் அமரர் அடியார்
இசையும் ஒலி தான் ...... இவை கேளாது? ---
திருப்புகழ்.
உன்
தனக்கே பரமும்
---
பரம்
- பாரம். பாரமும் என்னும் சொல் பாடல் சந்தத்தை நோக்கி பரமும் என வந்தது.
அடியேனைத்
தாங்குதல் உமக்கே கடமை ஆகும் என்கின்றார் அடிகளார். "கடன் ஆகும், இது கனம் ஆகும்" என்றார்
திருத்தணிகைத் திருப்புகழில்.
காக்கக்
கடவிய நீ,
காவாது
இருந்தக்கால்,
ஆர்க்குப்
பரம் ஆம் அறுமுகவா.
நம்
கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென்
கடம்பைத் திருக் கரக்கோயிலான்,
தன்
கடன் அதியேனையும் தாங்குதல்,
என்
கடன் பணி செய்து கிடப்பதே. ---
அப்பர்.
என்
தனக்கு ஆர் துணைவர் ---
உயிருக்கு
இறைவனே உண்மையான துணை ஆவான். இதை அறியாத உயிரானது துணை என்று தான் அறிந்ததையே
பற்றி நின்று, துயர் உற்றத்
துடித்தது. துணையாக இருப்பவன் அவன்தான் என்று திருவருளால் அறிந்தபின், அவனருளை நாடித் தினமும் துடிக்கின்றது.
காடோ? செடியோ? கடல்புறமோ? கனமே மிகுந்த
நாடோ? நகரோ? நகர் நடுவோ? நலமே மிகுந்த
வீடோ? புறத் திண்ணையோ? தமியேன்
உடல்வீழும் இடம்,
நீள்தோய்
குழுக்குன்றில் ஈசா! உயிர்த்துணை நின் பதமே. ---
பட்டினத்தார்.
பொடி
ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடிஆர்
மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி
ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்!
என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? ---
சுந்தரர்.
சூலம்
பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன்
தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த
ஆலம்
குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன்
வேலும்
திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே! ---
கந்தர் அலங்காரம்.
உம்பருக்கு
ஆவதினின் வந்து தோணாய் ---
முருகப்
பெருமான் தேவர்களின் துயர் தீர்க்க எழுந்தருளினான். தேவர்களுக்கு அருளியது போல் அடியேன்
முன்னும் தோன்றி அருள் புரிய வேண்டுகின்றார் அடிகாளர்.
கருத்துரை
முருகா!
அடியேனைத் தாங்குதல் உமக்கே கடமை ஆகும். அடியேனுக்குத்
துணை தேவரீரே. தேவர்களுக்கு அருளியது போல் அடியேன் முன்னும் தோன்றி அருள் புரிக.
No comments:
Post a Comment