இம்மையில் சுவர்க்க இன்பம்.





பாடல் எண். 58
நற்குணம் உடைய வேந்தை
     நயந்து சேவித்தல் ஒன்று,
பொற்புடை மகளிரோடு
     பொருந்தியே வாழ்தல் ஒன்று,
பற்பலரோடு நன்னூல்
     பகர்ந்து வாசித்தல் ஒன்று,
சொற்பெறும் இவைகள் மூன்றும்
     இம்மையில் சொர்க்கம் தானே.

இதன் பொருள் ----

     நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று --- நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பி, அவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்,
   
     பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று --- நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டு, அவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும்,

    பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று --- பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்து, அந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும்

    சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே --- புகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில், சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

     விளக்கம் --- உடம்பை விட்டபின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிர, துன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தை, இப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...