சிதம்பரம் - 0648. பரமகுரு நாத


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரமகுரு நாத (சிதம்பரம்)
 
சிதம்பர முருகா!
சிறியனுக்கு அருள்வாய்


தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா


பரமகுரு நாத கருணையுப தேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
     பகருமதி காரப் ...... பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொக ராதி
     செகபதியை யாளப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருள தாகி அருவிடையை யூரு
     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்

உகமுடிவு கால மிறுதிகளி லாத
     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனி லூறு மருவினைகள் மாய
     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்

கனகசபை மேவி அனவரத மாடு
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பரமகுரு நாத! கருணை உபதேச!
     பதவி தரு ஞானப் ...... பெருமாள்காண்!

பகல் இரவு இலாத ஒளிவெளியில் மேன்மை
     பகரும் அதிகாரப் ...... பெருமாள்காண்!

திருவளரும் நீதி தின மனொகர! ஆதி
     செகபதியை ஆள்அப் ...... பெருமாள்காண்!

செகதலமும் வானும் மருவு ஐ அவை பூத
     தெரிசனை சிவாயப் ...... பெருமாள்காண்!

ஒருபொருள் அதுஆகி, அருவிடையை ஊரும்
     உமை தன் மணவாளப் ...... பெருமாள்காண்!

உகமுடிவு காலம் இறுதிகள் இலாத
     உறுதி அநுபூதிப் ...... பெருமாள்காண்!

கருவு தனில் ஊறும் அருவினைகள் மாய
     கலவி புகுதா மெய்ப் ...... பெருமாள்காண்!

கனகசபை மேவி, அனவரதம் ஆடு
     கடவுள், செக சோதிப் ...... பெருமாளே.

பதவுரை

         கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் --- பொன்னம்பலத்தில் எழுந்தருளி அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற கடவுளே!

         சோதிப் பெருமாளே --- ஓளி வடிவமானவரே! பெருமையில் மிக்கவரே!

         பரம குருநாத, கருணை உபதேச --- மேலான குருநாதரும், கருணையுடன் உபதேசம் புரிபவரும்,

         பதவி தரு ஞானப் பெருமாள்காண் --- மேலான பதங்களைத் தந்து அருளுபவருமான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         பகல் இரவு இலாத ஒளி வெளியில் --- போக்கும் வரவும், பகலும் இரவும், நினைப்பும் மறப்பும், சகல கேவலமும் அற்றதான ஞான ஒளிவீசும் பெருவெளியில்

         மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள் காண் --- மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         திருவளரும் நீதி, தின மனொகர, ஆதி --- முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே வடிவானவரும், விரும்பப் படுபவரும், ஆதி முதற்பொருளும்,

         செகபதியை ஆள் அப் பெருமாள் காண் --- உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்றவரும் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         செகதலமும் வானு மருவு ஐ அவை பூத --- மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி

         தெரிசனை சிவாயப் பெருமாள் காண் --- தரிசனம் தரும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்துப் பொருளான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் --- ஒப்பற்ற பரம்பொருளாகி அருமையான விடையின் மீது ஊர்ந்து வரும்,

         உமை தன் மணவாளப் பெருமாள் காண் --- பார்வதியின் மணவாளர் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         உக முடிவு --- ஊழிக் காலமும்,

       காலம் இறுதிகள் இலாத --- கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற ஏதும் இல்லாத

         உறுதி அநுபூதிப் பெருமாள் காண் --- உயிர்களுக்கு நன்மையைத் தரும் சிவாநுபூதி அருளும் பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய --- கருக்குழியில் இருந்தே ஊறி வருகின்ற, மீளவும் கருக்குழியிலேயே வீழ்த்துகின்ற கொடிய வினைகள் அழிய

         கலவி புகுதா மெய்ப் பெருமாள் காண் --- மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.


பொழிப்புரை


        பொன்னம்பலத்தில் எழுந்தருளி அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அமுபலவாணப் பெருமாளும், உலக சோதியுமான பெருமையில் மிக்கவரே!

         மேலான குருநாதரும், கருணையுடன் உபதேசம் புரிபவரும், மேலான பதங்களைத் தந்து அருளுபவருமான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         போக்கும் வரவும், பகலும் இரவும், நினைப்பும் மறப்பும், சகலகேவலமும் அற்றதான ஞான ஒளிவீசும் பெருவெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே வடிவானவரும், விரும்பப் படுபவரும், ஆதி முதற்பொருளும், உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்றவரும் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்துப் பொருளான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         ஒப்பற்ற பரம்பொருளாகி அருமையான விடையின் மீது ஊர்ந்து வரும், பார்வதியின் மணவாளர் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

     ஊழிக் காலமும், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற ஏதும் இல்லாததும், உயிர்களுக்கு நன்மையைத் தருவதும் ஆன சிவாநுபூதி அருளும் பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

         கருக்குழியில் இருந்தே ஊறி வருகின்ற, மீளவும் கருக்குழியிலேயே வீழ்த்துகின்ற கொடிய வினைகள் அழிய, மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

விரிவுரை

இத் திருப்புகழ் வேண்டுகோள் ஏதும் இன்றி, துதியாகவே அமைந்துள்ளது.

பரம குருநாத ---

பரம - மேலான
கு - அந்தகார இருள்
ரு - போக்குபவன்.

ஆணவ இருளை அகற்றுபவன் குரு. முருகன் குரு என்ற பேருக்கு உரியவன். ஆதலின், அப் பெருமான் எழுந்தருளிய மலை குருமலை எனப்படும். குரு, குருபரன், குருநாதன், குருசாமி, குருமூர்த்தி, பரமகுரு என்றெல்லாம் அப் பெருமானுடைய பெயர்கள் அமைந்திருப்பதை அறிக.

சனகாதி முனிவர்கள் நால்வரும் வேதங்களையும் ஆறு அங்கங்களையும் கற்று வல்லவர்கள். கேள்வியிலும் வல்லவர்கள். கற்றல் கேட்டல் உடைய பெரியோராகிய அவர்களுக்கும் உண்மைப் பொருள் அனுபவமாக விளங்கவில்லை. உண்மைப் பொருள் என்பது, மனவாக்குகளால் எட்ட முடியாததான பூரணப் பொருளாகவும், வேதங்களுக்கு அப்பாலாய் நின்றது. எல்லாப் பொருள்களிலும் நிறைந்ததாய் உள்ளது அது. அதுதான் என்றும், இதுதான் என்றும் சுட்டி அறியப்படாதது அது. அதனை அது இருந்தபடி இன்னது என்று சனகாதி முனிவர்க்கு மோன நிலையைக் காட்டி அறிவுறுத்தியவர் தென்முகக்கடவுளாக வீற்றிருந்த சிவபெருமான்.

அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை,
     ஆதலினால் அது எனலும் அறவே விட்டு,
மதுஉண்ட வண்டு எனவும் சனக னாதி
     மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தார் என்றும்,
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்ட
     படிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த
கதிகண்டு கொள்ளவும், நின் அருள்கூர் இந்தக்
     கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன்.

அன்று நால்வருக்கும் ஒளிநெறி காட்டும்
     அன்புடைச் சோதியே! செம்பொன்
மன்றுள் முக்கண்ணும், காளகண்டமுமாய்
     வயங்கிய வானமே! என்னுள்
துன்றுகூர் இருளைத் துரந்திடும் மதியே!
     துன்பமும் இன்பமும் ஆகி
நின்ற வாதனையைக் கடந்தவர் நினைவே!
     நேசமே நின்பரம் யானே.

அறிந்தஅறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை,
மறிந்த மனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.                 --- தாயுமானார்.


முப்பாழ் கடந்த முழுப்பாழுக்கு அப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண், --- தப்பாது

தீரா இடும்பைத் திரிபு என்பது யாதுஒன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன்காண், --- ஆராது

நித்தம் தெரியா நிலை மேவிய நமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண், --- வித்தர்என

யாதுஒன்றும் தேராது இருந்த நமக்கு, இவ்வுலகம்
தீது என்று அறிவித்த தேசிகன்காண்... --- திருவருட்பா.           

             
ரமுடன் அபரம் பகர்நிலை இவை எனத்
திரம்உற அருளிய திருவருட் குருவே!

மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே!

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணம் உறத் தெரித்து உள் குலவு சற்குருவே!

பதிநிலை பசுநிலை பாச நிலை எலாம்
மதிஉறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே!

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரம்உற விளங்கும் சாந்த சற்குருவே!

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரம்உற வளர்த்து வயங்கு சற்குருவே!

சிவ ரகசியம் எலாமு தெரிவித்து, னக்கே
நவநிலை காட்டிய ஞான சற்குருவே!

சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருட் சிவகுருவே!

அறிபவை எல்லாம் அறிவித்து, என் உள்ளே
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே!

கேட்பவை எல்லாம் கேட்பித்து, என் உள்ளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே!

காண்பவை எல்லாம் காட்டுவித்து, னக்கே
மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே!

செய்பவை எல்லாம் செய்வித்து, ஏனக்கே
உய்பவை அளித்து, ன் உள் ஓங்கு சற்குருவே!

உண்பவை எல்லாம் உண்ணுவித்து, ன் உள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே!

சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து,
ஏக அக்கரப் பொருள் ஈந்த சற்குருவே!

சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்து, ன்உள் விளங்கு சற்குருவே!

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே! --- திருவருட்பா.

அந்த குருநாதனுக்கும் குருவாக இருந்தவர் முருகப் பெருமான்.

இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருள்
குரு என உற்று இருந்தாய், அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத-
லால் உன் அடி உளமே கொண்ட
கனத்த அடியவருடைய கழல் கமலம்
உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மறிப்பதுவும் ஒழிந்திடுமே,
குறக் கொடியைச் சேர்ந்திட்டோனே.      --- பாம்பன் சுவாமிகள்.
  
கருணை உபதேச ---

உயிர்கள் மீது வைத்த எல்லை இல்லாக் கருணை பற்றி, அவைகளுக்குப் பக்குவம் நேரும் நிலையை உருவாக்கி, உண்மை அறிவைத் தெளியும் ஆர்வத்தைத் தந்து, குருநாதனாகத் திருமேனி தாங்கி வந்து, அருள் உபதேசம் புரிந்து, அஞ்ஞான இருளை நீக்கி, உண்மை ஞானத்தைப் பதிய வைப்பவன் இறைவன்.

இறைவன் கருணையே வடிவானவன் என்பதை, கற்பனை கடந்த சோதி, கருணையே வடிவமாகி என்னும் தெழ்வச் சேக்கிழார் திருவாக்கால் அறியலாம்.

இறைவன் கருணைக் கடலாக உள்ளான் என்பதை அப்பர் பெருமானும் அறிவுறுத்தி உள்ளார்.

மடல்ஆழித் தாமரைஆ யிரத்தில் ஒன்று
         மலர்க்கண் இடந்து இடுதலுமே மலிவான் கோலச்
சுடர்ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை,
         தும்பி உரி போர்த்தானை, தோழன் விட்ட
அடல்ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை
         அருவரைக்கீழ் அடர்த்தானை, அருள்ஆர் கருணைக்
கடலானை, கஞ்சனூர் ஆண்ட கோவைக்
         கற்பகத்தைக் கண்ஆரக் கண்டு உய்ந்தேனே.

உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனே என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையினை உடையவர்களாய், தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன் யார் எனக் கேட்டால், ஓம் என்னும் முதல் எழுத்தினை ஓதி, வேதங்களைப் பயிலுகின்ற அந்தணர்ள் வாழும் பிரமபுரத்தில் எழுந்தருளி உள்ள, மன்மதனின் உடலை எரியச் செய்த கண்ணுதல் கடவுளே ஆவான் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

தாம் என்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்கு
ஆம் என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான்,
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன் உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

இறைவனைக் கருணை சுரக்கும் கடல் போன்றவன் என்று தாயுமானார் அருளி உள்ளார்.
        
உடல்குளிர, உயிர்தழைக்க, உணர்ச்சி ஓங்க,
     உளம் கனிய, மெய்யன்பர் உள்ளத்து ஊடே
கடல்அனைய பேரின்பம் துளும்ப, நாளும்
         கருணைமலர்த் தேன்பொழியும் கடவுள் காவே!
விடல் அரிய எம் போல்வார் இதயம் தோறும்
         வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே! வேதம்
தொடல் அரிய வெளிமுழுதும் பரவி, ஞானச்
         சோதி விரித்து ஒளிர்கின்ற சோதித் தேவே.     ---  திருவருட்பா.


பதவி தரு ஞானப் பெருமாள் ---

பாதம் என்பது திருவடியைக் குறிக்கும். இறைவன் திருவடியானது உயிர்களை அழியாத பதத்தில் வைப்பதால் அது "பதம்" எனப்பட்டது. பதத்தில் இருப்பது பதவி நிலை. பதத்தில் இருக்க வைப்பது பதம் எனப்பட்டது.

பகல் இரவு இலாத ஒளி வெளியில் ---

இரவு - மறைப்பு. பகல் - நினைப்பு. இரவு என்பது கேவலம் எனப்படும் நிலை. உயிரானது அறிவு செயல்கள் ஏதும் இல்லாமல் தனியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு நிற்கும் நிலை. உயில் மட்டும் தனியே பசுத்துவமாய் நிற்கும் நிலை. 

சகலம் என்பது உயிரின் அறிவு இச்சை செயல்கள் ஆகியவை உடம்பு, கருவிகளோடு கூடி ஓரளவு விளங்குகின்ற நிலை.

நினைப்பு மறப்பு இன்றிய நிலையே சமாதி நிலை. 

இந்த நிலையைத்தான் எல்லாப் பெரியோர்களும் வியந்து கூறுகின்றனர். இதனைப் பெறுதற்கு ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.

பகல் - இரவு, நினைப்பு - மறப்பு, பிறப்பு - இறப்பு, இன்பம்- துன்பம். கேவலம் - சகலம்.

கேவல சகல நிலை இல்லாத நிலையைச் சுத்தம் என்பர். சுத்த நிலையை உயிரானது அடைதல் வேண்டும்.  இதனை "வான் இந்து கதிர் இலாத நாடு" என்றார் பிறிதொரு திருப்புகழில். "போக்கும் வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்து, உலவா இன்பம் மருவுவித்து" என்றார் குமரகுருபர அடிகள்.

இராப்பகல் அற்ற இடம்காட்டி, யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டைஅம் தாள்அருளாய், கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்று,அக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே.    

அராப் புனை வேணியன் சேய் அருள் வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப் புனை தண்டை அம் தாள் தொழல் வேண்டும்,கொடிய ஐவர்
பராக்கு அறல் வேண்டும்,  மனமும் பதைப்பு அறல்வேண்டும், என்றால்
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.     ---  கந்தர் அலங்காரம்.

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.... --- திருப்புகழ்.

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.                  --- கந்தர் அநுபூதி.

இரவுபகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம்
வரவும் திருக்கருணை வையாய் பராபரமே....
கங்குல்பகல் அற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே...       ---  தாயுமானார்.

நினைப்பு மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே”     --- திருமந்திரம்.

இரவுபகல் இல்லா இன்ப வெளி ஊடே
 விரவி விரவி நின்று உந்தீபற”                --- திருவுந்தியார்

அங்கு இங்கு எனாதபடி, எங்கும் ப்ரகாசமாய்,
                    ஆனந்த பூர்த்தியாகி,
     அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே
                    அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்
               தழைத்தது எது? மனவாக்கினில்
     தட்டாமல் நின்றது எது?  சமய கோடிகள் எலாம்
                    தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்குந் தொடர்ந்து எதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?
                    எங்கணும் பெருவழக்காய்
     யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
                    என்றைக்கும் உள்ளதுஎது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎது?  அது
                    கருத்திற்கு இசைந்தது, அதுவே
     கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்
                    கருதி, அஞ்சலி செய்குவாம்.         --- தாயுமானவர்.
  
மறக்கின்ற தன்மை இறத்தல்ஒப்பாகும், மனம்அதுஒன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தல்ஒப்பாகும், இப்பேய்ப் பிறவி
இறக்கின்ற எல்லைக்கு அளவில்லையே, இந்த சன்ம அல்லல்
துறக்கின்ற நாள் எந்த நாள்? பரமே! நின் தொழும்பனுக்கே.   --- தாயுமானவர்.

நிலைஉறும் நிர்ஆசையாம் உயர்குலப் பெண்டிரொடு
                  நிகழ் சாந்தம்ஆம் புதல்வனும்,
         நெறிபெறும் உதாரகுணம் என்னும்நல் பொருளும்,மருள்
                  நீக்கும் அறிவுஆம் துணைவனும்,
மலைவுஅறு நிர்ஆங்கார நண்பனும், சுத்தம் உறு
                  மனம்எனும் நல்ஏவலும்,
         வருசகல கேவலம் இலாத இடமும் பெற்று
                  வாழ்கின்ற வாழ்வு அருளுவாய்!
அலைஇலாச் சிவஞான வாரியே! ஆனந்த
                  அமுதமே! குமுத மலர்வாய்
         அணிகொள் பொன்கொடி, பசும்கொடி இருபுறம் படர்ந்து
                  அழகுபெற வரு பொன்மலையே!
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!          --- திருவருட்பா.

மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள் காண் ---

நினைப்பு  -  மறப்பு, பகல் - இரவு, சகலம் - கேவலம் ஆகியவை அற்ற நிலையில் விளங்கும் மேலான உண்மைப் பொருளை விளக்குகின்ற ஆட்சியைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமை மிகுந்தவர் முருகப் பெருமான் என்கின்றார்.

செகதலமும் வானு மருவு ஐ அவை பூத ---

மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்குகின்றது பரம்பொருள்.

மனமானது எந்தச் சூழலிலும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும். அது புறச் சூழலாகவும் இருக்கலாம். அகச் சூழலாகவும் அமையலாம். உலகமக்கள் பொதுவாகத் தேடுவது உலக இன்பத்தை. அடியார்கள் தேடுவது மெய்ப்பொருளை. அருணகிரிநாதப் பெருமானும் அவ்வாறு தேடினார். தமக்கு அகத்தும் புறத்தும் அமைந்துள்ள பொருள்களைக் கொண்டு, எது மெய்ப்பொருள் என்று தேடுகின்றார். அதை உணர்த்தியருள வேண்டியது பரம்பொருள். ஆன்ம அறிவால் அது கூடாது.

பருப்பொருள்கள் எல்லாமே ஐம்பூதங்களில் அடங்கி விடுவதால் ஐம்பூதங்களைக் குறிப்பிடுகின்றார். அகப் பொருள்களையும் குறிப்பிடுகின்றார். பொருள்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் உண்மையை உணர்வதற்கு அகக் கண் மட்டும் தான் தேவை. காரணம் ஒவ்வொரு பொருளிலும் ஒரு உண்மை பொதிந்து உள்ளது. அதற்கு மெய்ப்பொருள், உண்மை அல்லது சத்து என்று பொருள். பண்டங்கள் பலவற்றை நாம் காண்கின்றோம்.அவற்றின் உள்ளே மறைந்திருக்கும் உண்மைப் பொருளை நாம் காணமுடிவதில்லை. அனுபவத்தால் மட்டுமே காணமுடியும். சாத்துக்குடி, திராட்சை, மாம்பழம் போன்ற பொருள்கள் இனிக்கும் என்று தான் நமது அறிவுக்குத் தோன்றுகிறது. ஆனால் தின்று பார்த்தால் தான் தெரிகிறது புளிக்கின்ற பழங்களும் உண்டு என்று.  எனவே, பொருளின் உண்மை அநுபவத்தால் மட்டுமே விளங்கும்.

எல்லாப் பொருள்களிலும் கலந்துள்ள பொருள் பரம்பொருளே. பண்ணில் ஓசை, பழத்தில் இன்சுவை, கண்ணில் உள்மணி என்றெல்லாம் சொல்லப்படும். மண்முதலான ஐம்பூதங்களுள் மெய்ப்பொருளாகிய இறைவன் எவ்வாறு கலந்து உள்ளான் என்பதை நாம் அறிந்து கொள்வது நலம் பயக்கும்.  மண் ஒன்று பானையாக மாறுகின்றது. நாளடைவில் அந்த மண்பானையானது உருக்குலைந்து மீண்டும் மண்ணோடு மண் ஆகின்றது. மண்பானையைக் கண்ட போது அதனை உருவாக்கிய குயவனுடைய அறிவு, ஆற்றல், ஊக்கம், நமக்குத் தோன்றுகின்றது.  இந்த அறிவு, ஆற்றல், ஊக்கம்,  ஆகிய எதற்குமே உருவம் இல்லை. உருவம் இல்லாத ஒன்றை, ஒரு பொருளைக் கொண்டு உள்ளத்தால் உணர்ந்து கொள்ளுகின்றோம். ஐம்பூதங்களைக் காணும்போதும், பரம்பொருளின் திறமை அல்லது சத்தி என்பது விளங்கும்.

மண் என்றால் அதில் திண்மை இருக்கவேண்டும். திண்மை இருப்பதால் தான், இந்தப் பூமியானது எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இருக்கின்றது. மண்ணில் திண்மையை வைத்தவன் இறைவன். அதனால் "மண்ணில் திண்மை வைத்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "மண்ணினில் திண்மையை வகுத்து, அதில் கிடக்கை அண்உற வகுத்த அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.

நீர் என்றால் அதில் குளிர்ச்சி மட்டுமல்லாது சுவையும் இருக்கும். "நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் ஆர்உற வகுத்த அருட்பெருஞ்சோதி" என்றும், "நீரினில் சுவைநிலை நிறைத்து அதில் பல்வகை ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்சோதி" என்றும் வள்ளல்பெருமான் பாடினார்.

நெருப்பு என்றால் அதில் சூடு இருக்கவேண்டும். "தீயினில் வெம்மை செய்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான்.  "தீயினில் சூட்டுஇயல் சேர்தரச் செலவு இயல் ஆய்உற வகுத்த அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.

காற்று என்றால் அதில் ஊக்கம், அசைவு இருக்கவேண்டும். "மேதகு காலின் ஊக்கம் கண்டோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிர்இயல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.

வானம் கலப்பு நிலைக்கு உரியது. "பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல் அளிஉற அமைத்த அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.  வெளி எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து நிற்கும் என்பதால், "வெளியிடைக் கருநிலை, விரிநிலை, அருநிலை அளிகொள வகுத்த அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.

மண், நீர் இவை இரண்டும் நெருக்கமான தொடர்பு உடையவை.  இவை ஓர் இனம். சரியை நெறிக்கு வேண்டிய பூவையும் நீரையும் தருபவை. புறத்தில் இறைவனைக் காணத் துணை செய்பவை.

நெருப்பு காற்று இரண்டும் ஓர் இனம். இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. கிரியை நெறிக்கு வேண்டியது மூச்சை நிறுத்துதல். இதற்குக் காற்று. அதன் பிறகு தியானம். இது நெருப்பை உள்ளடக்கியது. அகத்தில் இறைவனைக் காணத் துணை செய்பவை. இது யோகம்.

மேலே கூறிய பஞ்ச பூதங்களிலும் கலந்துள்ள உண்மைப் பொருளைத் தெளிவதால் உண்டாவது ஞான உதயம். ஆன்மாவின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப ஞானம் தோன்றும். இதுவும் மெய்ப்பொருள் ஆகாது. மெய்ப்பொருளைக் காண்பதற்கான நிலையை வகுப்பது.

இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
         இயமானனாய் எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறு ஆகி
         ஆகாசமாய் அட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
         பிறர்உருவும் தம்உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்றுஆகி நாளை ஆகி
         நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே.       ---  அப்பர்.

முருகப் பெருமானுடைய திருவவதாரமும் வானில் இருந்து, காற்றுக்கும், அதில் இருந்து நெருப்புக்கும், அதில் இருந்து நீருக்கும், அதில் இருந்து மண்ணுக்கும் வந்த நிலையே.

இதனைக் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர்,

.....           .....           .....           தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் -  தந்து,

திருமுகங்கள் ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,  -  விரிபுவனம்

எங்கும் பரக்க, இமையோர் கண்டு அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால்  - அங்கண்

எடுத்து அமைத்து, வாயுவைக் "கொண்டு ஏகுதி"என்று, எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு

பூதத் தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று

அன்னவளும் கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப,  திருவுருவாய் - முன்னர்

அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி......

வெண்மையான ஒளி விளங்குகின்ற, அழகிய திருக்கயிலை மலையில், தொடுக்கப் பெற்ற அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற மூன்று திருக் கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபெருமான், அவ்விடத்தில் ஒருநாள் கொடிய அசுரர்கள் செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டு, ஆறு திருமுகங்களை உடையவராய், செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின் நின்றும், ஒரே சமயத்தில் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்த, அத்தீப் பொறிகள் விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ,  அவற்றைத் தேவர்கள் கண்டு அஞ்சவும், அதனை அறிந்து பொங்கிய அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக்கரத்தால் உடனே அவ்விடத்தினின்றும் எடுத்து, அவற்றின் வேகத்தை அடக்கி, வாயுதேவனை நோக்கி,  'நீ இவற்றை எடுத்துச் செல்வாயாக' என்று சிவபெருமான் அவனிடம் கொடுத்து அருள, வாயுதேவனும் அவற்றைப் பெற்று மெல்லக் கொண்டு சென்று, தன்னால் இயலாமல், தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி தேவனை நோக்கி,  'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய் உள்ள அக்கினித் தேவனே, நீ இப்பொறிகளை எடுத்துச் செல்வாயாக' என்று கூறி அவனிடம் கொடுக்க, அக்கினி தேவனும் அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்று, குளிர்ந்த கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க, அந்த கங்கா தேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை அற்றவளாய், தனது தலைமீது தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுத்தாள்.


தெரிசனை சிவாயப் பெருமாள்  ---

இப்படி எல்லாம் உயிர்களுக்குக் காட்சி தந்து, அனுபவ அறிவை வளர்த்து, மேலான நிலையில் வைத்து அருளுகின்ற சிவாயநம என்னும் திருவைந்தெழுத்துப் பொருளாக உள்ளவர் முருகப் பெருமான் என்கின்றார் அருணை வள்ளல். "நமசிவயப் பொருளோனே" என்றார் திருக்கயிலைத் திருப்புகழில்.

ந - என்னும் எழுத்து மும்மலங்களையும் தத்தம் தொழில்களில் ஏவிப் பாகம் வருவித்தல் பொருட்டு, அவற்றோடு உடனாய் நின்று உயிரை மறைத்தலால் திரோதான சக்தி என்றும் திரோதமலம் என்றும் கூறப்படும் சிவசக்தியையும்,

ம - என்னும் எழுத்து உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும்,

சி - என்னும் எழுத்து செம்பொருட் கடவுளையும்,

வ - என்னும் எழுத்து அம் முழுமுதற் கடவுளோடு நெருப்பிற் சூடுபோல் உடனாய் நிற்கும் திருவருளையும்,

ய - என்னும் எழுத்து உயிரையும் உணர்த்தும்.

திருவைந்தெழுத்தையே தனக்கு வடிவமாக உடையது பரம்பொருளாகிய சிவம். இதனைப் பின்வரும் உண்மை விளக்கப் பாடல்களால் அறியலாம்.

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள்  சிட்டன்
சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடு வான்.            

இறைவன் எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன். அவன் நடனம் செய்கிறான் என்றால் அதற்கு ஓர் இடம் வேண்டும் அல்லவா? அவனுக்கு உருவம் வேண்டும் அல்லவா? அவன் ஆடல் புரிவதற்குக் கொள்ளும் இடம் எது? உருவம் எது? என்ற வினாக்களுக்கு இச்செய்யுளில் விடை கூறுகிறார் ஆசிரியர். எட்டும் இரண்டும் உருவான இலிங்கத்தே என்றதனால் அவன் ஆடும் இடம் இன்னது என்பதைப் புலப்படுத்தினார். இலிங்கம் என்பதற்கு அடையாளம் அல்லது குறி என்பது நேர் பொருள். இங்கு அச் சொல் ஆதாரம் அல்லது இடம் என்ற பொருளில் வந்தது. எட்டும் இரண்டும் உருவான இடமே அவன் ஆடல் புரியும் இடமாகும்.

இறைவன் ஆடும் இடம் ஆன்ம அறிவு. ஆடுதற்குக் கொள்ளும் உருவம் "சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்து. திருவைந்தெழுத்தைத் திருமேனியாகக் கொண்டு இறைவன் நடனம் புரிகிறான். ஆன்மாவின் அறிவு தொழிற்படுதற்கு இன்றியமையாத் துணையாய் இருப்பது நாதம் ஆகும். நாதத்தில் தோன்றுவன மந்திரங்கள். மந்திரங்களை இறைவன் தனக்கு வடிவமாகக் கொள்வான்.மந்திரங்களுள் சிறந்தது திருவைந்தெழுத்தே என்பதால், அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு சிவபிரான் ஆன்ம அறிவினிடத்து விளங்குகிறான்.


ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம்  கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.                    

சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும்யகரம் அபயகரம்  பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம்அது தான்.                             

ஓங்காரமே நல் திருவாசி உற்றுஅதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்  ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்.                    

ஓம் என்னும் பிரணவமே அவனைச் சூழ்ந்துள்ள திருவாசியாகும். அப்பிரணவத்தில் தோன்றிய அக்கரங்கள் ஐம்பத்தொன்றும் திருவாசியில் விளங்கும் சுடர்களாகும். முதல் ஒலியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கி நிற்பவன் கூத்தப் பெருமான். அவனது கூத்தின் இயல்பை யான் எனது என்னும் செருக்கு அற்றவரே அறிவர். அவ்வாறு அறிந்து வழிபடும் பேறு பெற்றவர் பின் பிறவாத நிலையைப் பெற்றவர் ஆவர்.

உலகம் பொருளுலகம் எனவும், சொல்லுலகம் எனவும் இரு வகையாய் அமைந்துள்ளது. பொருள் வடிவாய் உள்ளவை (புவனம், தத்துவம், கலை) பொருளுலகம் ஆகும். ஒலிவடிவாய் வழங்கும் பலவகை மொழிகள் சொல்லுலகம் ஆகும். சொல்லுலகம் எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைமையை உடையது. எழுத்து வடமொழி பற்றி ஐம்பத்தொன்று எனக் கொள்ளப்படும். ஐம்பத்து மூன்று என்று கூறும் வழக்கும் உள்ளது. இவ்வெழுத்துக்களுள் அனைத்து மொழிகளின் எழுத்துக்களும் அடங்கும் என்னும் கருத்தினால் இவற்றை மாத்ருகா அக்கரங்கள் (தாய் எழுத்துக்கள்) என்று குறிப்பிடுவர். சொல்லுலகம் ஆகிய அனைத்து மொழிகளுக்கும் மூலமாய் இருப்பது நாதம் ஆகும். நாதம் ஓம் என்னும் குறியீட்டால் குறிக்கப்படும். அதனால், அது ஓங்காரம் எனப்படும். இன்னும், ஓங்காரம் ஐந்து கூறுகளை உடையதாகச் சொல்லப்படும். அவை அ, , ம், விந்து, நாதம் என்பன. இவற்றுள் முதலில் உள்ள மூன்றும் நம் செவியால் உணரப்படும் அகரம் முதலியன அல்ல. ஆயினும் அகரம் முதலியவற்றோடு ஒத்த தன்மை உடைமையால் அவையும் அகரம் முதலியனவாகவே ஒப்புமை பற்றிக் கூறப்படுகின்றன. ஓங்காரத்தின் கூறுகளாகிய அகரம் முதலிய ஐந்தும் பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும். ஆயினும் அவை திருவைந்தெழுத்தாகிய பஞ்சாக்கரம் போன்றவை அல்ல. ஆதலால் இவை சூக்கும பஞ்சாக்கரம் என்றே குறிக்கப்படும். இறைவன் அகர, உகர, மகர, நாத, விந்துக்களாய் நின்று, அந்தக் கரணங்களை இயக்கிப் பொருளுணர்வைத் தருகின்றான் என்பது பற்றி,

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா

என்று அருளிச் செய்தார் மாணிக்கவாசகர்.

பொருளுலகம் அனைத்திற்கும் முதல்வன் ஆகிய கடவுளே சொல்லுலகத்திற்கும் முதல்வன் ஆதலின் ஓங்காரத்தால் குறிக்கப்படுபவன் அவனே என்று நூல்கள் கூறும். ஓங்காரமே அவனது திருவுருவைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டமாகிய திருவாசி என்பதும், அத்திருவாசியில் அமைந்துள்ள 51 அல்லது 53 என்னும் எண்ணிக்கையுள்ள சுடர்கள், மாத்ருகா அக்கரங்கள் என மேலே குறிப்பிட்ட முதல் எழுத்துக்கள் என்பதும் உண்மை விளக்கத்தால் நாமறிந்த செய்திகள். நாம் கோயிலுக்குச் செல்லுகிறோம். கோயில் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், மூலவர் இருக்கும் கருவறை சிறியதாகத்தான் இருக்கும். ஏன் இப்படி இருள் அடைந்த குகை போன்ற இடத்தில் மூலமூர்த்தியை வைத்திருக்கிறார்கள்? என்று சிலர் நினைக்கலாம். நம் முன்னோர்கள் தெரியாமல் அப்படிச் செய்யவில்லை. ஒரு கருத்தோடுதான் அவ்வாறு அமைத்தார்கள். கோயிலிலுள்ள மூலத்தானம் நம் இதயத்தைப் போன்றது. இதயம் போன்ற சன்னல் இல்லாத இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் ஆண்டவன் முன் நின்று பார்த்தால் இருட்டில் தெரியாது. கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். பூசை செய்கிறவர் தீபாராதனை காட்டும் பொழுது மிக விளக்கமாகத் தெரியும். தீபாராதனை காட்டும் போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவது போலக் கையைச் சுற்றிக் காட்டுவார். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண வேண்டும். அப்படிக் காணுகிற திருவுருவை மனத்தில் நிலை நிறுத்தப் பழகுதல் வேண்டும்.

கூத்தப் பெருமானின் எடுத்த பொற்பாதத்தில் தம் அன்பை வைத்தவர் நிலத்தின் மேல் நெடுங்கிடையாய் விழுவர், பின்பு திருக்கூத்தினைக் காணவேண்டி எழுவர். தம்மையே தாம் மறந்து விடுவர். தற்பெருமை என்பது அவர்களுக்கு எங்கேயிருக்கும்? அஃது அறவே கெட்டொழியும்.

கையும் தலைமிசை புனை அஞ்சலியன;
         கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங்களும் உடன்
         உருகும் பரிவின; பேறு எய்தும்
மெய்யும் தரை மிசை விழும்; முன்பு எழு தரும்,
         மின் தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும் அவர்
         ஆர்வம் பெருகுதல் அளவுஇன்றால்  --- பெரியபுராணம்.

நமக்கு உறக்கம் என்பது ஒடுக்க நிலையாகும். உறக்கத்திலும் இறைவனது செயல் நம்மிடத்தில் நிகழ்கிறது. உறங்கச் செல்லும் போது ஒரு சிக்கலை நினைத்துக் கொண்டு அதை எப்படித் தீர்ப்பது என்று கவலையோடு நம்மையறியாமல் கண்ணயர்ந்து தூங்கி விடுவோம். மறுநாள் விடிந்து கண்விழித்த போது அச்சிக்கலை இப்படித்தான் தீர்க்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இத் தெளிவு எப்படி உண்டாயிற்று? இதற்கு நம்மால் விளக்கம் சொல்ல முடியாவிடினும் உறக்க நிலையில் இறைவன் நுட்பமாக நமக்குச் செய்த உதவியே அது எனலாம். இவ்வாறு இறைவன் செய்வது சூக்கும ஐந்தொழில் எனப்படும். இனி, மற்றொரு ஒடுக்க நிலையும் உண்டு. முற்றழிப்புக் காலத்தில் இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கித் தான் தனியனாய் நிற்கிற நிலை அது. அவ்வாறு ஒடுக்கி நிற்கும் முதல்வன் உலகத்தை மீளத் தோற்றுவித்தற் பொருட்டு அதற்கு ஆவனவற்றைச் செய்வான். அந்நிலையில் அவன் செய்வனவும் சூக்கும ஐந்தொழில் எனப்படும். அத்தொழில்கள் இப்படிப்பட்டவை எனத் தனித் தனியாக வகுத்துக் காட்டுதல் அரிதாகும்.

உயிரானது புருவ நடுவில் நின்று, கருவிகளோடு கூடிப் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையில் இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று இடைவிடாது உணர்த்தி வருகிறான். அவ்வாறு உணர்த்தவில்லையாயின் உயிர்க்கு அறிவு நிகழாது. இறைவன் உயிர்க்கு உணர்த்தும் முறைமையே அதி சூக்கும ஐந்தொழில் எனப்படுகிறது. இத்தொழில்களையும் தனித்தனியாக விளங்கிக் கொள்ளுதல் அரிதாகும்.

தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய இம் மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது.

ஊன நடனத்தை உணர்த்தும் உண்மை விளக்கப் பாடல் வருமாறு --

தோற்றம் துடிஅதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்  ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.                  

உடுக்கையால் ஒலியை உண்டாக்குதல் படைத்தல் தொழிலையும், அபயத் திருக்கரம் காத்தல் தொழிலையும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், உறுதியாக முயலகன் மேல் ஒரு காலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் உணர்த்தும். இவ்வாறாகக் கூத்தப் பெருமானது திருவுருவில் தோன்றும் குறிப்பை அறிந்து கொள்.

சிவபெருமானது நடனம் ஐந்தொழிற்கும் தானே முதல்வன் என்பதை உணர்த்தும். அந் நடனத்தில் ஐந்தொழிலும் விளங்குவதை இச் செய்யுள் அழகிய முறையில் விளக்குகின்றது. எண்ணிறந்த உயிர்களுக்கு அவ்வவற்றிற்கு ஏற்ற உடம்பைக் கொடுத்து உலகத்தில் இயங்கச் செய்வதே படைத்தல். தமருகத்தை அசைத்து நாதத்தை உண்டாக்கும் கை உலகத்தைத் தோற்றுவித்தலைக் குறிக்கும். இங்ஙனம் படைத்தது மட்டுமின்றி அவைகளைக் காக்கவும் செய்கின்றான். தாயின் வயிற்றில் உள்ள மகவுக்கு அவளறியாதபடி உணவு ஊட்டிக் காக்கின்ற இறைவனது கருணையை என்னென்பது! கூத்தப் பெருமானது வடிவத்தில் அபயம் தரும் கை காத்தலைக் குறிக்கும். இவ்வாறு காத்தலைப் புரிகின்ற இறைவன் அவைகளை அழித்தும் விடுகின்றானே. அழித்தல் என்பது அச்சமும் வருத்தமும் தரும் செயல் அல்லவா? அதனைச் செய்வது எதற்கு? என்று வினவலாம். உண்மையில் அழித்தல் என்பது உயிர்களின் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்பதை உணர்தல் வேண்டும். உடம்போடு கூடிய உயிர்கள் அவ்வுடம்பினால் வரும் அளவற்ற துன்பங்களை அனுபவித்துப் பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுச் சுழன்று பெரிதும் இளைப்பினை அடையும். அவ்விளைப்பு நீங்குதற் பொருட்டே உயிர்களை உடம்பினின்றும் பிரித்துச் சிறிது காலம் ஓய்வு கொள்ளும்படி செய்கின்றான். எனவே அழித்தல் என்பதும் உயிர்களின் நன்மை கருதியே செய்யப்படுவதாகும். இறைவனது நடனக் கோலத்தில் தீ யேந்திய கை அழித்தலைக் காட்டும்.

இனி, மறைத்தல் என்பது இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே காட்டி உலக போகத்தை நுகரச் செய்தல். உயிர் தன்னையறியும் பக்குவத்தை வருவித்தற் பொருட்டே இது செய்யப்படுகிறது. திருக்கூத்தில் முயலகனை மிதித்துள்ள திருவடி மறைத்தலைத் தெரிவிக்கும். அருளல் என்பது பாசங்களையெல்லாம் நீக்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்குதல். கூத்தப்பிரானது தூக்கிய திருவடி, பிறவியினின்றும் எடுத்துத் தன் திருவடி நிழலில் வைத்து அருளுதலை உணர்த்துவதாகும்.

முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும்.

ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய்  அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக  பர ஞானமாகப் பெறும். இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும்.

ஞான நடனத்தை உணர்த்தும் உண்மை விளக்கப் பாடல்.....

மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தான் எடுத்து  நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதம் தான்.                     

துடியை அசைத்தல் பக்குவம் எய்திய உயிரின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதாகும். நெருப்பை ஏந்தியுள்ள கை அவ்வுயிரைத் தொடரும் வலிய வினையைச் சுடுவதாயிருக்கும். ஊன்றிய திருவடி ஆணவ மலத்தை வலிகெட்டு நிற்கச் செய்வதாகும். எடுத்த திருவடி பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அவ்வுயிரை அந்நிலைகளினின்றும் உயர்த்தி அருள் நிலையில் வைப்பதாகும். எடுத்த அத்திருவடியின் வளைவும், அதனைக் காட்டி நிற்கும் வீசிய கையும், யான் எனது என்னும் செருக்கு அற அடங்கி நில் என்னும் பொருள்பட அமைத்த திருக்கையும் உயிரைப் பேரின்பத்தில் அழுத்தும் குறிப்பு உடையவை ஆகும்.

சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால், அதில் உதறிய கையை மாயையை உதறும் கையாகக் காணுதல் வேண்டும். வீசி அணைத்த கையை வருக என்று அழைத்து அருள் வழங்கும் கையாகக் காணுதல் வேண்டும். அமைத்த கையை இனிதே இருக்க எனத் தேற்றம் தரும் கையாகக் காணுதல் வேண்டும். தீ ஏந்திய கையை வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகக் காணுதல் வேண்டும். ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகக் காணுதல் வேண்டும். திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறை இதுவாகும்.


இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து ஆனந்தக் கூத்து எனப்படும்.

மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான் அந்த மானிடத்தே தங்கியிடும், --- ஆனந்தம்
மொண்டு, அருந்தி, நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்ட திரு அம்பலத்தான் கூத்து.              

புளியை நாவில் இட்டுச் சுவைக்காவிடினும் அதனைப் பார்த்த போதே பார்த்தவர்களுக்கு நாவில் நீர் ஊறும். அதுபோலக் கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்க்கு உள்ளத்தில் பேரின்பம் ஊற்றெடுக்கும்.

நாமும் அக் கூத்தினைக் காணத்தானே செய்கிறோம். நமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே. அது ஏன்? பருவம் வாயாத சிறுபெண் ஓர் ஆடவனைக் காணுங்கால் அக்காட்சி அவளுக்கு இன்பத்தைச் செய்யாது. அதே பெண் பருவமுற்றுக் காதலில் கவிழ்ந்த போது, தன் தலைவனை அவன் நோக்காத நேரத்தில் தான் நோக்கித் தன்னுள் இன்புறுகிறாள். அக்காட்சி அவளுக்கு மகிழ்ச்சியைச் செய்கிறது. பருவம் அமையாத சிறு பெண்ணின் நிலையில் நாம் இருக்கிறோம். இறையின்பத்திற்கு உரிய தகுதியும், அதன் மேல் வேட்கையும் இன்றி இருக்கிறோம். இறை இன்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் காட்சி இன்பத்தைச் செய்யாது.

ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் மெய்ஞ்ஞானமே ஆன திருவம்பலத்தினையும், ஆனந்த நடத்தினையும் கண்டு கும்பிட்டுக் களித்தார். கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார். ஆனந்த நடனமாகிய திருவமுதைக் கண்களால் உண்ணு அருளினார்.

உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின் கண்
அணையும் ஐம்பொறியளவினும் எளிவர அருளினை

எனப் போற்றினார். ஆளுடைய பிள்ளையாரது இந்த அனுபவ நிலையை இங்கே பொருந்த வைத்து நோக்க வேண்டும்.


கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய கலவி புகுதா மெய்ப் பெருமாள் ---

கருக் குழியில் இருந்தே ஊறி வருகின்ற, மீளவும் கருக் குழியிலேயே வீழ்த்துகின்ற கொடிய வினைகளை அழித்து, மீளவும் ஆன்மாவை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாதவர் முருகப் பெருமான்.

கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் ---

"திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

சிவபெருமான் கொண்ட திருமூர்த்தங்கள் அறுபத்து நான்கு. அறுபத்து நான்கு திருமூர்த்தங்களில் ஒன்றுதான் அம்பலவாணப் பெருமான். அவ்வாறு கூறப்படும் அறுபத்து நான்கு திருமூர்த்தங்களுமே முருகப் பெருமான்தான் என்கின்றார் அருணை வள்ளல்.  அருணை வள்ளலைத் தமது குருநாதராகக் கொண்ட பாம்பன் சுவாமிகள் அட்டாட்ட விக்கிரக லீலையில் இதனை வலியுறுத்திப் பாடி உள்ளார்.

சந்திர சேகரம், அர்த்த நாரீசுரம், சக்கரப் பிரதானம்,
தட்சிணாமூர்த்தம், லிங்கம் லிங்கோற்பவம், தட்சயக்கிய பங்கம்,
சந்தியின் நிர்த்தனம், சந்தத நிர்த்தனம், சண்டேச அநுக்ரகம்,
சலந்தரவதம், அகோராஸ்திரம், ஏகபதம், அசுவாரூடம்,
சத்யசதாசிவம், மிக்கசதாசிவம், தகுலகுளேசுவரம்,
சகஜசுகாசனம், கூர்மசங்காரம், மச்சாரி, வராகாரி,
சற்குருமூர்த்தம், உமேசம், உமாபதி, ஜயபுஜங்கத்ராசம்,
சார்த்தூல அரி, பைரவம், கல்யாணசுந்தரம், வடுகம், கிராதம்,

சுந்தர விருஷப ஊர்தி, விஷ அபஹரணம், சுவராபக்நம்,
துகளறு க்ஷேத்திர பாலகம், தொல்கருடாந்திகம், முகலிங்கம்,
துங்க கங்காதரம், கங்காவிசர்ஜனம்,  சுபசோமாஸ்கந்தம்,
சூரசிம்ஹாரி, கமாரி, எமாந்தகம்,  சுசிமாணவ பாவம்,
சுபகர பிரார்த்தனை மூர்த்தம், நறும் திரிபுராந்தகம், சுரர்பரசும்
சுமுககங்காளம், ரக்தபிட்சைப் பிரதானம், இருஞ்சுடரே
சுடர்கவுரீவரப் பிரதம், மகாபாசுபத சொரூபம், அணி
தோன்று புஜங்கலளிதம், ரிஷபாந்திகம், தோம்அறுகஜயுத்தம்,

விந்தை விளம்பு கஜாந்திகம், வீணைதயங்கு தட்சிணமூர்த்தம்,
மேதகயோக விநோதம்அதாக விளங்கு தட்சிணமூர்த்தம்,
விமலபிட்சாடணம், கவலை உத்தாரணம், வேதகணம் புகழும்
விதிசிர கண்டனம், கவுரிலீலாச மந்விதம், எழில்அரிஅர்த்தம்,
வீரபத்திரம், திரிமூர்த்தி முப்பாதம், மகாவேதாளி நடம்,
வெருவறும் ஏகபதத் திரிஉருவாய் விளம்பு அறுபது நான்கும்
விலாச அளிப்பு நிமித்தம் எடுத்தஓர் மெய்ப்பொருள் எது, அதுவே
விண்ணவர் மண்ணவர் கண்ணவர் யாவரும் வீடுஅருளாய், எனவே

வந்தனை புரிய இருந்துளன் நீ என, வண்தமிழால் மனசால்
வாழ்த்தி வணங்கு எனைஆள என்இருதய மலரில் எழுந்து அருளாய்.
மந்திர நாயக, தந்திர நாயக, மங்கள நாயக, ஓம்
மய, தவர் ஈசுர, பரம, குகேசுர வசன மனாதீத,
வரத, க்ருபாகர, குமர, பராபர, வரைவறு ஷாட்குண்ய
வஸ்துஎன் அற்புத, சத்திய, வித்தக, மரணமொடு அயனமிலா
வானவ, ஞானநபோ மணியே, திருமால்அயன் அறியா ஓர்
மாமலையின் பெயரான் குருநாத, என் மருள்தெறும் மாமுனியே.No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்ற மடியில் முடியாதே

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளுதல் கூடாது -----        இறைவன் எங்கே இருப்பான் என்றால் , எல்லா உயிர்களிலு...