தீவினை செய்து மடிந்தோர்
47. தீவினை செய்து மடிந்தோர்

வாய்இகழ்வு பேசிமிகு வாழ்வுஇழந் தோன், சிவனை
     வைதுதன் தலைபோ யினோன்,
  மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடல்எலாம்
     மாறாத வடுவா யினோன்,

தாயத்தி னோர்க்குஉள்ள பங்கைக் கொடாமலே
     சம்பத்து இகழ்ந்து மாய்ந்தோன்,
  தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்
     தந்திவடி வாய் அலைந்தோன்,

மாயனைச் சபையதனில் நிந்தைசெய்து ஒளிகொள்நவ
     மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
  வருநகுட னொடுதக்கன் குருடன்
     மகன், வழுதி, சிசுபா லனாம்!

ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!
     அவனிபுகழ் அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ----

     ஆயும் அறிவாளரொடு தேவர் பணி தாளனே --- இறையருளைப் பெறுகின்ற நன்னெறியை ஆராய்கின்ற அறிஞர்களும், தேவர்களும் பணிந்து வணங்கும் திருவடியை உடையவனே!

      அவனி புகழ் - உலகம் புகழுகின்ற, 

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வாய் இகழ்வு பேசி, மிகு வாழ்வு இழந்தோன் --- வாயினால் பிறரை இகழ்ந்து பேசி, தனது சிறந்த வாழ்வை இழந்தவன்,

     சிவனை வைது தன் தலை போயினான் --- சிவபெருமானை நிந்தனை செய்து தனது தலையை இழந்தவன்,

     மற்றொருவர் தாரத்தில் இச்சை வைத்து உடல் எலாம் மாறாத வடு ஆயினோன் --- பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு தனது உடம்பு முழுதும் நீங்காத வடுவைக் கொண்டவன்,

     தாயத்தினோர்க்கு உள்ள பங்கைக் கொடாமலே சம்பத்து இழந்து மாய்ந்தோன் --- பங்காளிக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், தனக்குரிய செல்வத்தையும் இழந்து மடிந்தவன்,

     தக்க பெரியோர் தமை வணங்கா மதத்தினால் தந்தி வடியாய் அலைந்தோன் --- தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால் யானை வடிவாக அலைந்தவன்,

     மாயனைச் சபை அதனில் நிந்தனை செய்து, ஒளிகொள் நவமணி முடி துணிந்து மாய்ந்தோன் --- மாயத்தில் வல்ல கண்ணனை அவையிலே பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணிகளால் ஆன தனது முடியை இழந்து இறந்தவன்

     (ஆகிய இவர்கள், முறையே,)

     வரு நகுடனோடு --- இந்திர பதவிக்கு வந்த நகுடனும்,

     தக்கன் --- தக்கனும்,

     அயிராவதன் --- அயிராவதம் என்னும் யானையை உடைய இந்திரனும்;

     குருடன் மகன் --- திருதராட்டிரன் மகனாகிய துரியோதனனும்,

     வழுதி --- பாண்டிய மன்னனும்,

     சிசுபாலன் ஆம் --- சிசு பாலனும் ஆகிய இவர்களே ஆவார்.

       விளக்கம் --- நகுடன் நூறு அசுவமேத யாகம் என்னும் பரிவேள்விகளைச் செய்து இந்திர பதவியைப் பெற்றான். ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே ஏறி தேவலோகம் செல்லுகையில், இந்திராணியின் மீது கொண்ட ஆசையால், விரைந்து செல்ல எண்ணி, சிவிகையைத் தாங்குபவர்களை விரைந்து செல்லவேண்டி, ‘சர்ப்ப! சர்ப்ப' என விரைந்து செல்லும்படி பெரியோர்களை மதிக்காமல் ஏவியதால் மலைப் பாம்பாகும்படியாக அகத்திய முனிவரால் சபிக்கப் பெற்று, அரிதில் பெற்ற இந்திர பதவியை இழந்தான்.

     சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்; அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார்; பிரமன் விழுந்தான்; தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.  

     இந்திரன் கௌதம முனிவரின் பன்னியான அகலிகை மேல் காதல் கொண்டு,  முனிவரைத் தமது குடிலை விட்டு, காலைக் கடன் கழிக்கச் செல்லுமாறு உபாயம் செய்து போக்கி, கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். இதனை அறிந்ததும் அமலிகையைக் கல்லாகுமாறு கௌதம முனிவர் சபித்தார்.

     துரியோதனன் தன் பங்காளிகளான பாண்டவரோடு சூதாடி, அவர்களின் உரிமையைக் கவர்ந்தான். பாண்டவர்களோடு மூண்ட பாரதப் போரில், தனது தம்பியர் முதலான அனைவரையும் இழந்து, இறுதியில் தானும் மடிந்தான்.

     சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டிருந்தான்.  "யார் இவனைத் தொடுகையில் இவனது கைகள் இரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்" என்று ஆகாயவாணி கூறிற்று. அவ்வாறே பலரும் தொடும்போது மறைபடாத கைகளும் கண்ணும், கண்ணபிரான் தொட்டதும் மறைந்தன. அதனால் இவனைக் கொல்பவன் கண்ணனேஎன்று அறிந்த சிசுபாலனின் தாய், ஏது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாதுஎன்று கண்ணனை வேண்டினாள்.  அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கண்ணன் இவன் எனக்கு நூறு பிழை செய்யும் அளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன். சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டி, எப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்து வைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணம் செய்துகொண்டது இவனது பகைமை உணர்வை மிகுதியாக்கியது.
பின்பு இந்திரப்பிரஸ்தத்தில் நாரதரின் சொறுபடி ராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.

     இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட, கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தருமர் ஆகியோரின் மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான்.

     கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது.

     யானை வடிவாக ஆன பாண்டிய மன்னன் பற்றிய செய்தி விளங்கவில்லை.

     தீய வழியிலே செல்வோர் தீமை அடைவது உறுதி. "கெடுவான் கேடு நினைப்பான்" என்பது மழமொழி.

தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...