திருவாரூர்ப் பரவையுள்மண்டளி




திரு ஆரூர்
(ஆரூர்ப் பரவையுண்மண்டளி)

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் இருக்கிறது.


இறைவர்              : தூவாய்நாதர்.

இறைவியார்           : பஞ்சில்மெல்லடியம்மை

தல மரம்                : பாதிரி

தீர்த்தம்                  : கமலாயம்(தேவதீர்த்தம்), சங்கு தீர்த்தம்,                                     கயா தீர்த்தம்,  வாணி தீர்த்தம் (சரஸ்வதி தீர்த்தம்),  
                               செங்கழுநீர் ஓடை.
  
தேவாரப் பாடல்கள்    : சுந்தரர் - தூவாயா தொண்டுசெய்வார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேர் நிலைக்கு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியை உடைய இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோயில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.

         "உன்னை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்" என்று உறுதி மொழி கொடுத்து சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்து கொளிகிறார் சுந்தரர். நாட்கள் செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேசுவரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், "இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. பெரியபுராணத்திற்கு மாறாக இப்படி ஒரு கதையும் வழங்கப்படுகிறது.

         துர்வாசர் உருவச்சிலை, பின்னப்படுத்தப்பட்ட வலது கை கட்டைவிரல்

         பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம் "இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து தன்னை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்"' என்றார். அதன்படி துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து இறைவனை பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன் பொங்கிவந்த கடலை அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். கோயிலின் அக்னி மூலையில் அமைந்துள்ள இக்குளம் தனி சிறப்புடையது. துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயினார் என்ற பெயர் ஏற்பட்டது. மக்கள் வழக்கில் துர்வாசர் கோவில் என்றால் தான் தெரியும். இத்தலத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் துர்வாசருக்கும் ஒரு உருவச்சிலை உள்ளது. ஒரு காலத்தில் இவர் மிகவும் உக்கிரகமாக இருந்ததால் ஆலயத்திறகு வருபவர்கள் துர்வாசர் உருவச்சிலை இருக்கும் விநாயகர் சந்நிதியை தவிர்த்து கோவில் வலம் வந்தனர். இந்த உக்கிரகத்தைக் குறைக்க துர்வாசர் சிலையிலுள்ள வலது கை கட்டைவரலை பின்னப்படுத்தியதாகவும், அதன்பின் மக்கள் பயமின்றி ஆலயத்தை வலம் வருவதாகவும் இவ்வாலயத்தின் குருக்கள் தெரிவிக்கிறார்.

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், திருதுருத்தி ஈசரைத் தொழுது, சில நாள்கள் தங்கி, பல பதிகளையும் வணங்கிக் கொண்டு, திருவாரூரை அணுகி, அத்தலத்தின் தோற்றத்தை ஒரு கண்ணால் கண்டு இன்புறாதவறாய், நிலமிசை வீழ்ந்து வணங்கி, மாலைக் காலத்தில் தொண்டர்களுடன் உள் அணைந்து, இத் திருக் கோயிலில் சென்று வணங்கி, "இங்கு எமது துயர் களைந்து கண் காணக்காட்டாய்" என்று வேண்டிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 303)

பாடல் எண் : 303
பொங்குதிருத் தொண்டருடன்
         உள்அணைந்து புக்குஇறைஞ்சி,
துங்கஇசைத் திருப்பதிகம்
         "தூவாயா" என்று எடுத்தே,
"இங்கு எமது துயர் களைந்து
         கண் காணக் காட்டாய்"என்று
அங்கணர் தம் முன் நின்று
         பாடி, அரும் தமிழ் புனைந்தார்.

         பொழிப்புரை : அன்புமிகும் அடியவர்களுடன் உள்ளே சென்று வணங்கி, மேலான இசையையுடைய திருப்பதிகமாய, `தூவாயா' எனப் பாட எடுத்தே, ` இங்கு எனது துயர்களைந்து கண்காணக் காட்டாய்' என்னும் பொருளியையப் போற்றி மகிழ்ந்து, கண்ணுதற் பெருமான் திருமுன்பு நின்று, அரிய தமிழ்மாலையைச் சூட்டினார்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 096 திருவாரூர்ப் பரவையுண் மண்டளி      பண் - பஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தூவாயா, தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயா, கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்,
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா,என் பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : தூய்தாகிய வாயினையுடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , உனக்குத் தொண்டு செய்பவர்கள் படுகின்ற துன்பங்களை நீக்கமாட்டாயோ ! ஐவர்கள் என்னை எப்போதும் குறிக்கொண்டு நோக்கி , உன்னை அடையவொட்டாமல் தடுப்பினும் , நாவையுடைய வாயால் , உன்னையே , நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வேனாகிய எனக்கு , ` ஆவா ` என்று இரங்கி , அச்சந் தீர்த்தருள் .


பாடல் எண் : 2
பொன்னானே, புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே, தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி
மின்னானே, செக்கர்வா னத்துஇள ஞாயிறு
அன்னானே, பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : பொன்போலச் சிறந்தவனே , தன்னாலே தன்னைப் புகழ்கின்ற , தானே விளங்குவதோர் ஒளியானவனே , ஒரோவொருகால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே , செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே , நின் புகழை எடுத்துரைத்தல் , ஞானியர்க்கு இயல்வதாம் ,


பாடல் எண் : 3
நாமாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம்ஆறுஎன் புண்ணியா, புண்ணியம் ஆனானே,
பேய்மாறாப் பிணம்இடு காடுஉகந்து ஆடுவாய்க்கு
ஆமாறுஎன் பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : புண்ணியத்தின் பயனாயும் , புண்ணியமாயும் உள்ளவனே, திருப்பரவையுண்மண்டளியுள் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , நீ அருளாது விடின் , நாப்பிறழாது உன்னையே நல்லனவற்றாற் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு ? பேய்கள் நீங்காத , பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடியவராதல் எவ்வாறு ?


பாடல் எண் : 4
நோக்குவேன் உன்னையே, நல்லன நோக்காமைக்
காக்கின்றார் ,கண்டுகொண் டார்ஐவர், காக்கிலும்
வாக்குஎன்னும் மாலைகொண்டு உன்னை என்மனத்து ஆர்க்கின்றேன், பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றார் . அவ்வாறு காத்து நிற்பினும் , சொல்லென்னும் மாலையால் , உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன் ; உன்னையே நினைக்கின்றேன் .


பாடல் எண் : 5
பஞ்சுஏரும் மெல்அடி யாளையொர் பாகமாய்
நஞ்சுஏரும் நன்மணி கண்டம் உடையானே,
நெஞ்சுஏர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேல்என், பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை யுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு , நஞ்சு காணப்படும் , நல்ல நீலமணி போலும் கண்டத்தை உடையவனே, திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார்களை , ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .


பாடல் எண் : 6
அம்மானே ஆகம சீலர்க்கு அருள்நல்கும்
பெம்மானே, பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே, தண்தமிழ் நூற்புல வாணர்க்குஓர்
அம்மானே, பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : யாவர்க்கும் தலைவனே, ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு, உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே, திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே, தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு, ஒப்பற்ற முதல்வனே, திருப் பரவையுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை . ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .


பாடல் எண் : 7
விண்தானே, மேலையார் மேலையார் மேல்ஆய
எண்தானே, எழுத்தொடு சொற்பொருள் எல்லாம்முன்
கண்டானே, கண்தனைக் கொண்டுஇட்டுக் காட்டாயே,
அண்டானே, பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : ` மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம், எண், எழுத்து, சொல், பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே, வானுலகத்தில் உள்ளவனே, திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, முன்பு என் கண்ணைக் கொண்டாய்; இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள்.


பாடல் எண் : 8
காற்றானே, கார்முகில் போல்வதொர் கண்டத்துஎம்
கூற்றானே, கோல்வளை யாளையொர் பாகமாய்,
நீற்றானே, நீள்சடை மேல்நிறை உள்ளதுஓர்
ஆற்றானே, பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : காற்றாய் உள்ளவனே , கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தையுடைய , எம் இனத்தவனே , கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு திரு நீற்றை அணிந்தவனே , நீண்ட சடையின் மேல் நிறைவுள்ளதாகிய ஒரு நதியை உடையவனே , திருப்பரவை யுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே .


பாடல் எண் : 9
செடியேன்நான், செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான், கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன்நான், கூறுமாறு உன்பணி கூறாத
அடியேன் நான், பரவையுண் மண்டளி அம்மானே

         பொழிப்புரை : திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக் கின்ற தலைவனே, நான் குற்றமுடையேன் ; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன் ; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன் ; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடுமாற்றாற் பாடாத ஓர் அடியேன் .


பாடல் எண் : 10
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை,
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து,இவை
விரும்புவார், மேலையார் மேலையார் மேலாரே

         பொழிப்புரை : கரந்தை , வன்னி , ஊமத்தை , கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை, அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர், மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார் .

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...