திருவாரூர் - 1





                                                                திரு ஆரூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.


இறைவர்               : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்                                                                  (மூலத்தானம் - பூங்கோயில்) தியாகராஜர்

இறைவியார்           : அல்லியம்பூங்கோதைகமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

தல மரம்                : பாதிரி

தீர்த்தம்                  : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் -1. சித்தம் தெளிவீர்காள்,
                                                      2. பாடலன் நான்மறையன்,
                                                      3. பவனமாய்ச் சோடையாய்,
                                                      4. பருக்கையானை மத்தகத்,
                                                      5. அந்தமாய் உலகு.

                                               2. அப்பர்   - 1. பாடிளம் பூதத்தினான்,
                                                      2. மெய்யெலாம் வெண்ணீறு,
                                                      3. சூலப் படையானை,
                                                      4. காண்டலே கருத்தாய் ,
                                                      5. முத்து விதானம்,
                                                      6. படுகுழிப் பவ்வத்தன்ன,
                                                      7. குழல் வலங்கொண்ட,
                                                      8. குலம்பலம்பாவரு,
                                                      9. வேம்பினைப் பேசி ,
                                                       10. எப்போதும் இறையும்,
                                                        11. கொக்கரை குழல்,
                                                       12. கைம்மான மதகளிற்றின்,
                                                        13. உயிரா வணமிருந்,
                                                        14. பாதித்தன் திருவுருவில்,
                                                        15. நீற்றினையும் நெற்றிமே,
                                                       16. திருமணியைத் தித்திக்கும்,
                                                       17. எம்பந்த வல்வினை நோய்,
                                                       18. இடர் கெடுமாறெண்ணுதியேல்,
                                                       19. கற்றவர்கள் உண்ணும்,
                                                        20. ஒருவனாய் உலகேத்த.

                             3. சுந்தரர்  -  1. இறைகளோ டிசைந்த,
                                                      2. குருகுபா யக்கொழுங்,
                                                      3. தில்லைவாழ் அந்தணர்,
                                                      4. பத்திமையும் அடிமை,
                                                      5. பொன்னும் மெய்ப்,
                                                      6. கரையுங் கடலும்,
                                                      7. அந்தியும் நண்பகலும்,
                                                      8. மீளா அடிமை.

தல வரலாறு

          திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

          இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

          கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

          எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

சிறப்புக்கள்

          இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.

          இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

          ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில்.

          கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.

          கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.

          இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

          மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர் ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.

          தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

          பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம்.

          இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்:- 1. க்ஷேத்ரவரபுரம், 2. ஆடகேசுரபுரம், 3. தேவயாகபுரம், 4. முசுகுந்தபுரம், 5. கலிசெலா நகரம், 6. அந்தரகேசுபுரம், 7. வன்மீகநாதபுரம், 8. தேவாசிரியபுரம், 9. சமற்காரபுரம், 10. மூலாதாரபுரம், 11. கமலாலயபுரம் என்பனவாகும்.

          தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

          இத்தலத்திறைவர் வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.

          1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப் பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.

          தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.

          ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆதிரை திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தன் தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
          "மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

          சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.

          பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.

          சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

          சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

          இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

          தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

          சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்  அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
                                       வழிபாடு                 : இலிங்க வழிபாடு.
                                       முத்தித் தலம்         : திருநாவலூர்
                                       குருபூசை நாள்        : சித்திரை - சித்திரை.

          திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த் திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

நமிநந்தி அடிகள் வரலாறு

         சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர்.  வாய்மையில் சிறந்தவர்.   திருநீற்றன்பர்.  இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர்.  அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

         ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது.  அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

         சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை.  நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள்.  அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார்.  மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி.  அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது.  நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

         நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார்.  அது சுடர் விட்டு எரிந்தது.  அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார்.  சமணர்கள் நாணுற்றார்கள்.  

         நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார்.  அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார்.  மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

         திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று.  நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான்.  நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார்.  ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

         அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள்.  அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார்.  பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

         மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது.  சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

         நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

         நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

         தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல் பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

         தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

         இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள்.  அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

         சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.  அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள்.  நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

         பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார்.  மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான்.  சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

         தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார்.  மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான்.  நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார்.  சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

         அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

செருத்துணை நாயனார் வரலாறு

         செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார்.. அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழை தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

         கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர்.  வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

         ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார்.  அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

         அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார்.  அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது.  கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

         கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார்.  அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள்.  கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

         சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார்.  அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று.  சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

          திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

          கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

          சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தக்க நெடும் தேர் ஊர் அணி வீதிச் சீர் ஊர் மணிமாட ஆரூரில் எங்கள் அரு மருந்தே" என்று போற்றி உள்ளார்.

 ---------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 493
நாவுக் கரசர் எழுந்த ருளும்
         நல்லதிரு வார்த்தை கேட்ட போதே,
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன
         திருஞான சம்பந்தர், சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக,
         விரைந்துஎதிர் கொள்ள,மெய் அன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
         புறம்பணை எல்லை கடந்து போந்தார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் அப்பதிக்கு வருகின்றார் என்ற நல்ல திருவார்த்தையைக் கேட்டபொழுதே, ஆனேற்று ஊர்தியையுடைய சிவபெருமானின் மகனாரான திருஞானசம்பந்தர், தம் உள்ளத்தில் அன்பு பொங்கிய ஆசை மிகுதியால் விரைவாய் எதிர்கொள்ளும் பொருட்டு மெய்யன்பர்களுடனே மலர்களால் நிறைந்து விளங்குகின்ற வாவிகள் சூழ்ந்த திருப்புகலூரின் நகர்ப்புறத்து எல்லையைக் கடந்து சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 494
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
         அரசும் எதிர்வந் துஅணைய, வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
         பூசுரர் சிங்கமும், பொற்பின் எய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
         தாழ்ந்து வணங்கி, தனித்த னியே
மங்கலம் ஆகிய நல்வரவின்
         வாய்மை வினவி மகிழும் போது.

         பொழிப்புரை : சிவபெருமானின் திருவாரூரை வணங்கிவந்த திருநாவுக்கரசரும் எதிரில் வந்து சேர, மணம் கமழும் நீர் நிறைந்த சீகாழியில் தோன்றிய அந்தணர்களின் தலைவரான திருஞானசம்பந் தரும் அணிதிகழக் கூடி, ஒருவருக்கொருவர் தம் அன்பின் முறைமையால் எதிர்கொண்டு தாழ்ந்து வணங்கி, அவரவரும் தனித் தனியே மங்கலம் பொருந்திய நல்வரவின் மெய்ம்மையான நிகழ்ச்சியினைக் கேட்டு மகிழ்ந்தபோது,


பெ. பு. பாடல் எண் : 495
மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
         வேந்தரை நோக்கி, "விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர்
         அருள்உடை யோம்யாம், அந்தண்ஆரூர்
எப்பரி சால்தொழுது உய்ந்தது" என்று
         வினவிட, ஈறுஇல் பெருந்த வத்தோர்
செப்பிய வண்தமிழ் மாலை யாலே
         திருவா திரைநிகழ் செல்வம் சொன்னார்.

         பொழிப்புரை : மெய்ம்மையின் வடிவான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி, `விருப்பினால் அப்பராகிய தங்களை இங்கு வந்து அணையப் பெறுவதான பேற்றினைப் பெற்றோம். அழகிய குளிர்ச்சியையுடைய திருவாரூரினை வணங்கிவந்த பான்மையை அருள வேண்டும்\' என்று கேட்டருள, எல்லையில்லாத பெருந்தவத்தையுடைய திருநாவுக்கரசர் அதற்கு விடையாகக் கூறியருளிய வளமான தமிழ்மாலைத் திருப்பதிகத்தினால் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நிகழும் சிறப்புச் செய்தியை எடுத்துக் கூறினார்.

         நாவரசர் இது பொழுது அருளிய பதிகம், `முத்து விதானம்' (தி.4 ப.21) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருவாரூரில் திருவாதிரைப் பெருவிழா நிகழ்ந்து வந்த சிறப்புச் செய்தியை, இப்பதிக வழி நன்கு அறியலாம்.


பெ. பு. பாடல் எண் : 496
அரசுஅரு ளிச்செய்த வாய்மை கேட்ட
         அப்பொழுதே, அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் "சிந்தை யின்கண்
         தென்திரு ஆரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி
         மீண்டும்வந்து உம்உடன் மேவு வன்"என்று
உரவு கடல்கல் மிதப்பின் வந்தார்க்கு
         உரைத்து,உடன் பாடுகொண்டு, ஒல்லை போந்தார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசரும் திருப்பதிகத்தால் விடை கூறியதைக் கேட்ட அப்பொழுதே அவ்விடத்தில், திருவருளால் ஞானவமுது உண்டருளிய சீகாழித் தலைவரான பிள்ளையாரும், தென்திருவாரூரையடைந்து வணங்குதற்கு மனத்திலுண்டான காதலால் அங்குச் சென்று போற்றி மீண்டும் வந்து உம்மைக் கூடுவன் என்று, வலிய கடலைக் கல்லான மிதவையால் கடந்து வந்த அரசர் பெருமகனார் இடத்துச் சொல்லி, அவரது உடன்பாட்டைப் பெற்று விரைந்து சென் றருளினார்.


பெ. பு. பாடல் எண் : 497
சொற்பெரு வேந்தரும் தோணி மூதூர்த்
         தோன்றல்பின் காதல் தொடர, தாமும்
பொற்புக லூர்தொழச் சென்று அணைந்தார்,
         புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி,
         விடையவர் பாதம் பணிந்து போற்றி,
பற்பல ஆயிரம் தொண்ட ரோடும்
         "பாடல னான்மறை" பாடிப் போந்தார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசரும் சீகாழிப் பதியில் தோன்றிய பெருந்தகையாரான சம்பந்தரின் பின்னால் தம் காதல் தொடர்ந்து செல்லத் திருப்புகலூரில் தொழுவதற்குச் சென்று சேர்ந்தார். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் இடைவிடாத நினைவுடைய மனத்துடன் திருவிற்குடி வீரட்டானத்தை அடைந்து, ஆனேற்றூர்தியையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கிய பின்பு, பற்பல ஆயிரம் தொண்டர்களுடனே `பாடலன்நா மறை\' (தி.1 ப.104) எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு திருவாரூரை நோக்கிச் சென்றார்.

         பிள்ளையார் விடைபெற்றுச் சென்றதும், நாவரசரின் மனம் அவர்பின் தொடர, அவர் திருப்புகலூர் தொழச் சென்றார். பிள்ளையாரிடத்தும் பெருமானிடத்தும் அரசர் கொண்டிருந்த அன்பு மீதூர்வை விளக்கியவாறு. திருவிற்குடி வீரட்டத்தில் அருளிய பதிகம் `வடிகொள் மேனியர்' (தி.2 ப.108)எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவாரூர்ப் பெருமானை நினைந்து `பாடலன் நான் மறை\' (தி.1 ப.104)எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த திருப்பதிகத்தைப் பாடியவாறே சென்றருளினார். `வெள்ளேற்றான் மேய அள்ளலகன் கழனி ஆரூர் அடைவோமே' என இப்பதிகத்து வரும் மூன்றாவது பாடற் கருத்தை உளங்கொண்டே சேக்கிழார் இப்பதிகத்தைப் பாடியவாறே திருவாரூர்த் தொழப் போந்தார் என்றருளினார்.
    
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.105 திருவாரூர்                         பண் - வியாழக்குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாடலன் நான்மறையன், படிபட்ட கோலத்தன், திங்கள்
சூடலன், மூவிலைய சூலம் வலன்ஏந்தி,
கூடலர் மூஎயிலும் எரியுண்ணக் கூர்எரிகொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.

         பொழிப்புரை :திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக்கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம்புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.


பாடல் எண் : 2
சோலையில் வண்டுஇனங்கள் சுரும்போடு இசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றுஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.

         பொழிப்புரை :சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.


பாடல் எண் : 3
உள்ளம்ஓர் இச்சையினால் உகந்துஏத்தித் தொழுமின் தொண்டீர் மெய்யே,
கள்ளம் ஒழிந்திடுமின், கரவாது இருபொழுதும்
வெள்ளம்ஓர் வார்சடைமேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே.

         பொழிப்புரை :தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.


பாடல் எண் : 4
வெந்துறு வெண்மழுவாள் படையான் மணிமிடற்றான்அரையின்
ஐந்தலை ஆடுஅரவம் அசைத்தான் அணிஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றைஅம் தார்ப் பரமன் அடிபரவ, பாவம்
நைந்துஅறும், வந்தணையும் நாள்தொறும் நல்லனவே.

         பொழிப்புரை :அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.


பாடல் எண் : 5
வீடு பிறப்புஎளிதாம், அதனை வினவுதிரேல், வெய்ய
காடுஇட மாகநின்று கனல்ஏந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

         பொழிப்புரை :வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.

பாடல் எண் : 6
கங்கைஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடில்
மங்கைஓர் கூறுஉடையான், மறையான், மழுஏந்தும்
அங்கையினான் அடியே பரவி, அவன்மேய ஆரூர்
தம்கையி னால்தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

         பொழிப்புரை :கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடைமுடிமேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமைமங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.


பாடல் எண் : 7
நீறுஅணி மேனியனாய், நிரம்பா மதிசூடி, நீண்ட
ஆறுஅணி வார்சடையான், ஆரூர் இனிதுஅமர்ந்தான்,
சேறுஅணி மாமலர்மேல் பிரமன் சிரம்அரிந்த செங்கண்
ஏறுஅணி வெல்கொடியான் அவன்எம் பெருமானே.

         பொழிப்புரை :திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.
  
பாடல் எண் : 8
* * * * * * * * * *
பாடல் எண் : 9
வல்லியம் தோல்உடையான் வளர்திங்கள் கண்ணியினான்வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையில் நறவுஏற்றான்,
அல்லிஅம் கோதைதன்னை ஆகத்து அமர்ந்துஅருளி, ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

         பொழிப்புரை :வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற் குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.


பாடல் எண் : 10
செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுஉழல்வார்சொன்ன
இந்திர ஞாலம்ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்,
அந்தர மூஎயிலும் அரணம் எரிஊட்டி,  ஆரூர்த்
தந்திர மாஉடையான் அவன்எம் தலைமையனே.

         பொழிப்புரை :செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப்பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 11
நல்ல புனல்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதுஓர் இச்சையினால் வழிபாடுஇவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பம் துடைப்பாரே.

         பொழிப்புரை :தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.
                                             திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 498
துணர்இணர்ச் சோலையும், சாலி வேலித்
         துறைநீர்ப் பழனமும், சூழ்க ரும்பின்
மணமலி கானமும், ஞானம் உண்டார்
         மருங்குஉற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர், "அள்ளல் கழனி ஆரூர்
         அடைவோம்" எனமொழிந்து, அன்பு பொங்கப்
புணர்இசைச் செந்தமிழ் கொண்டு போற்றி,
         பொன்மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்.

         பொழிப்புரை : மலர்க் கொத்துகளையுடைய சோலைகளையும், நெல்லை வேலியெனக் கொண்ட நீர்த் துறைகளையுடைய வயல்களையும், மணம் பொருந்திய கரும்புக் காடுகளையும் ஞானமுண்ட பிள்ளையார், இரு மருங்கும் கண்டு மகிழ்ந்து, அணைபவராய் `அள்ளலகன் கழனியாரூர் அடைவோமே' எனக் கூறி, அன்பு மேன்மேல் பொங்க இசையுடன் கூடிய செந்தமிழ்ப் பதிகத்தால் போற்றி, அழகிய மதிலையுடைய திருவாரூரின் புறத்தே அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 499
வான்உயர் செங்கதிர் மண்டலத்து
         மருங்குஅணையும் கொடி மன்னும்ஆரூர்
தான்ஒரு பொன்உலகு என்னத் தோன்றும்
         தயங்குஒளி முன்கண்டு சண்பை வந்த
பால்நிற நீற்றர் "பருக்கை யானை"ப்
         பதிகத் தமிழ்இசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலும் சோலைத்
         திருப்பதி மற்றுஅதன் எல்லை சேர்ந்தார்.

         பொழிப்புரை : வானத்தே உயரச் செல்கின்ற சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்று மண்டலத்தின் பக்கத்தில் அணையும் நீண்ட கொடிகள் பொருந்திய திருவாரூர் நகர், ஒருபொன் உலகு என்ன விளங்கக் கண்டு, சீகாழியில் தோன்றிய பால் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்த சம்பந்தர், `பருக்கையானை\' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ் இசையினைப் பாடியும் ஆடியும் சென்று, தேனுடன் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த அப்பதியின் எல்லையை அடைந்தார்.

         திருவாரூர்த் திருநகரின் ஒளியைக் கண்ட பிள்ளையார் `பருக்கையானை' (தி.2 ப.101) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகத்தைப் பாடியருளினர். இப்பதிக முதற்பாடலில் `அருக்கன் மண்டலத் தணாவும் அந்தண்ஆரூர்\' (தி.2 ப.101 பா.1) எனப் பிள்ளையார் அருளிய குறிப்பை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இப்பாடலை அருளிச் செய்வாராயினர். தேனீ - ஈக்களில் ஒரு வகை; தேன் எடுப்பதால் தேன்+ஈ = தேனீ.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


2.101 திருவாரூர்                         பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பருக்கையானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பன்ஊர்,
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால் வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாட மாளிகைகளை உடைய திருவாரூர் .


பாடல் எண் : 2
விண்டவெள் எருக்கு,அலர்ந்த வன்னி,கொன்றை, மத்தமும்,
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவன் இருந்தஊர்
கெண்டைகொண்டு அலர்ந்த கண்ணி னார்கள்கீத ஓசைபோய்
அண்டர்அண்டம் ஊடுஅறுக்கும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :` மலர்ந்த வெள்ளெருக்குமலர் , விரிந்தவன்னி யிலை, கொன்றைமலர் , ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர் , கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர் .


பாடல் எண் : 3
கறுத்தநஞ்சம் உண்டுஇருண்ட கண்டர்,காலன் இன்உயிர்
மறுத்தமாணி தன்தன்ஆகம் வண்மைசெய்த மைந்தன்ஊர்
வெறித்துமேதி ஓடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி ஆவிபாயும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும் , காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர் . எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர் .


பாடல் எண் : 4
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில்,
குஞ்சி ஆர வந்தி செய்ய, அஞ்சல் என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல்அடிப் பணைத்த கொங்கை நுண்இடை
அஞ்சொலார் அரங்கு எடுக்கும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :காமம் , குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து , ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர் , பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும் , நுண்ணிடையையும் , அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர்.


பாடல் எண் : 5
சங்குஉலாவு திங்கள்சூடி, தன்னைஉன்னு வார்மனத்து
அங்குஉலாவி நின்றஎங்கள் ஆதிதேவன் மன்னும்ஊர்,
தெங்குஉலாவு சோலைநீடு தேன்உலாவு செண்பகம்
அங்குஉலாவி அண்டம்நாறும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி , தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர் , தென்னஞ்சோலைகளையும் , வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர் .


பாடல் எண் : 6
கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு
ஊள்ளம்ஒன்றி உள்குவார் உளத்துஉளான் உகந்தஊர்
துள்ளிவாளை பாய்வயல் சுரும்புஉலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும் , தீய எண்ணங்களையும் கைவிட்டு , அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர் , வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும் , சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும் , நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர் .


பாடல் எண் : 7
கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர், காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன், மன்னும்ஊர்
தெங்கின்ஊடு போகிவாழை கொத்துஇறுத்து, மாவின்மேல்
அங்கண்மந்தி முந்திஏறும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த . சருவவியாபகரும் , காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும் , மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர் , அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக் குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்ற திருவாரூர் .


பாடல் எண் : 8
வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் உரத்தொடும்
நெரித்தவன், புரத்தைமுன் எரித்தவன் இருந்தஊர்,
நிரைத்தமாளி கைத்திருவின் நேர்அனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும் , திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய , சிவபிரான் ஊர் , வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும் , வெண்ணகையும் செவ் வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர் .


பாடல் எண் : 9
இருந்தவன் கிடந்தவன் இடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்புஒணாத வானவன் மகிழ்ந்தஊர்,
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :தாமரைமலரில் இருந்த நான்முகனும் , பாம் பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 10
பறித்தவெண் தலைக்கடுப்பு அடுத்தமேனி யார்,தவம்
வெறித்தவேடன், வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவும்ஊர்,
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயல்செந்நெல்
அறுத்தவாய் அசும்புபாயும் அந்தண்ஆரூர் என்பதே.

         பொழிப்புரை :பறித்த வெள்ளிய தலையையும் , கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும் , உடைய சமணர் , மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும் , நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர் , மீண்டும் , மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து , செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும் , மண்வளமும் , நீர் வளமும் உடைய திருவாரூர் .


பாடல் எண் : 11
வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமாது அமர்ந்துஇருந்த அந்தண்ஆரூர் ஆதியை
நல்லசொல்லு ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானம்ஆள வல்லர்வாய்மை யாகவே.

         பொழிப்புரை :கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர் ; இஃது உண்மை .
திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 500
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
         பொழிந்து புவிமேற் பொலிவது என்ன,
எங்கும் குளிர்ஒளி வீசு முத்தின்
         இலங்கு சிவிகை இழிந்து அருளி,
செங்கை நிறைமலர் கொண்டு தூவி,
         திருஇருக் குக்குறள் பாடி ஏத்தி,
தங்கள் பிரான்அரசு ஆளும் ஆரூர்
         தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.

         பொழிப்புரை : உள்ளத்தினின்றும் பெருகிய பெருங்காதலாகிய வெள்ளத்தைச் சொரிந்து நிலவுலகத்தின் மீது விளங்குவதைப் போன்று எல்லாப் பக்கமும் குளிர்ந்த ஒளியை வீசும் முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி, தமிழ் வல்லுநரான பிள்ளையார், சிவந்த திருக்கைகளில் நிறைய மலர்களைக் கொண்டு தூவி வழிபட்டு உய்யுமாறு ஆற்றுப் படுத்தும் திருவிருக்குக்குறட் பதிகத்தைப் பாடி வணங்கி, தம் பெருமான் ஆட்சி செய்கின்ற திருவாரூர் நகரைப் பணிந்தார்.

         இதுபொழுது அருளிய திருவிருக்குக்குறள் திருப்பதிகம் `சித்தம் தெளிவீர்காள்' (தி.1 ப.91) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். ஆரூரை மலர்தூவி வழிபடல் வேண்டும் என்னும் குறிப்பை, இப்பதிகத்தின் 1, 3, 5, 6, 7 ஆகிய பாடல்களில் அருளுகின்றார். இதனையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும் `நிறைமலர் கொண்டு தூவிப்... பாடி... பணிவுற்றார் தமிழ்விரகர்' என்றருளுவாராயினர்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.091 திருவாரூர்                     பண் - குறிஞ்சி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சித்தம் தெளிவீர்காள் , அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி ஆகுமே.

         பொழிப்புரை :சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்ற வர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.


பாடல் எண் : 2
பிறவி அறுப்பீர்காள் , அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின் , துறவி ஆகுமே.

         பொழிப்புரை :பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.


பாடல் எண் : 3
துன்பம் துடைப்பீர்காள் , அன்பன் அணிஆரூர்
நன்பொன் மலர்தூவ , இன்பம் ஆகுமே.

         பொழிப்புரை :துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத்தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 4
உய்யல் உறுவீர்காள் , ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ , நையும் வினைதானே.

         பொழிப்புரை :உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.


பாடல் எண் : 5
பிண்டம் அறுப்பீர்காள் , அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ , விண்டு வினைபோமே.

         பொழிப்புரை :மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.


பாடல் எண் : 6
பாசம் அறுப்பீர்காள் , ஈசன் ஆணிஆரூர்
வாச மலர்தூவ நேசம் ஆகுமே.

         பொழிப்புரை :உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.


பாடல் எண் : 7
வெய்ய வினைதீர , ஐயன் அணிஆரூர்
செய்ய மலர்தூவ , வையம் உமதுஆமே.

         பொழிப்புரை :கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத்தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.


பாடல் எண் : 8
அரக்கன் ஆண்மையை , நெருக்கி னான்ஆரூர்
கரத்தி னால்தொழத் , திருத்தம் ஆகுமே.

         பொழிப்புரை :அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.


பாடல் எண் : 9
துள்ளும் இருவர்க்கும் , வள்ளல் ஆரூரை
உள்ளும் அவர்தம்மேல் , விள்ளும் வினைதானே.

         பொழிப்புரை :செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 10
கடுக்கொள் சீவரை , அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் , விடுப்பர் வேட்கையே.

                  பொழிப்புரை :கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.


பாடல் எண் : 11
சீரூர் சம்பந்தன் , ஆரூ ரைச்சொன்ன
பார்ஊர் பாடலார் , பேரார் இன்பமே.
        
         பொழிப்புரை :சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 501
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு
அடியர் சென்று, எதிர் கொள எழுந்தருளும் அஞ் ஞான்று,
வடிகொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவை யார் முடிவுஉறக் காண்பார்.

         பொழிப்புரை : ஒப்பில்லாத ஞான அமுதத்தை உண்ட சம்பந்தரைப் பணிவதற்காக அடியவர்கள் சென்று எதிர்கொள்ள எழுந்தருளும் அந்நாளில், வடித்தலைக் கொண்ட சூலத்தையுடைய இறைவர் நிலையாய் எழுந்தருளிய பொன்மதிலைக் கொண்ட திருவாரூரின் ஒளி பொருந்திய அணிநலன்களை முழுமையாகக் காண வல்லவர் யாவர்? ஒருவரும் இலர்.


பெ. பு. பாடல் எண் : 502
நான மான்மத நளிர்பெரும்சேற்றிடை நறும்பொன்
தூந றுந்துகள் சொரிதலில் சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்து அவை கரைந்து அலைய
வான மாரியில் பொழிந்தது மலர்மது மாரி.

         பொழிப்புரை : புனுகும் கத்தூரியும் கலந்த குளிர்ந்த பெருஞ் சேற்றில் உயர்ந்த பொன்னைப் போன்ற தூய சுண்ணப் பொடிகளைத் தூவுவதால், ஒளி பொருந்த அணிசெய்யப்பட்ட அத்தெருக்கள், அடி வழுக்குமாறு அந்தச் சேறும் துகளும் கரைந்து போக, வானத்தினின்று விழும் மழை போல் பூக்களிலிருந்து தேன்மாரி பொழிந்தது.


பெ. பு. பாடல் எண் : 503
ஆடல் நீடுவ துகில்கொடி கொடிகள் அணிகுழல்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ ரணம் நிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.

         பொழிப்புரை : மாடங்கள், மாளிகைகள் மண்டபங்கள் ஆகிய இவற்றின் பக்கங்கள் எல்லாம், துணிக் கொடிகளும், அழகான கூந்தலையுடைய பெண் கொடிகளும் ஆடலில் நீடுவன, வண்டுகளும், பொன் குடங்களும் மலர் இதழ்களில் சூழ்வன, வாழைகளும் தோரணங்களும் வரிசையான பாக்குகளும் காட்டைப் போன்ற காட்சியுடன் விளங்குவன.

பெ. பு. பாடல் எண் : 504
மாலை சூழ்புறங் கடைகளின் மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன் கோத்துஇடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர நிறம்புகர் படுக்கும்
பால ஆயின பவளவே திகைமலர்ப் பந்தர்.

         பொழிப்புரை : அத்தகைய பக்கங்களைச் சூழ்ந்த புறவாயில்களில், மாலைப் பொழுதில், மணிகளையுடைய வரிசையாய்த் தொங்க விடப்பட்ட விளக்குகளின் அழகிய நீண்ட சுடர் ஒளியுடன் தொடர்பு படுமாறு கோவை செய்து இடையிடையே தொங்கவிடப்பட்ட பெரிய நீலமணிகளின் நிழலானது கூடி அலைத்தலால், பவள நிறமுடைய திண்ணைகளின் மேல் உள்ள பூம்பந்தல்களின் செந்நிறம் கருமை நிறத்தையுடையனவாய் ஆயின.


பெ. பு. பாடல் எண் : 505
தழைம லர்த்தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடுஅரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல்இடம் யாவையும் மிடைந்து
மழைமு ழக்குஎன இயம்பின மங்கல இயங்கள்.

         பொழிப்புரை : தழைத்த பூம்பொய்கைகளும், சாலைகளும், தெற்றிகளும், சதுக்கங்களும், காதணிகளை அணிந்த பெண்கள் ஆடும் அரங்குகளும், தேவர் கூட்டமும் விரும்பும் சிறப்புடைய அகன்ற இடங்களும் ஆகிய எவ்விடங்களிலும் நெருங்கி மழை ஒலிபோல மங்கல இயங்கள் இயம்பின.


பெ. பு. பாடல் எண் : 506
விரவு பேரணி வேறுவேறு இன்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ் பெருந்திரு ஆரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்துஅணைந்து எதிர்கொளும் பொழுது.

         பொழிப்புரை : மேல் கூறப்பட்டவாறு பொருந்திய வெவ்வேறு வகைப்பட்ட இத்தகைய பேரணிகலன்கள் விளங்கும், தேனையுடைய மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளின் பெருமையைக் கொண்ட திருவாரூரில், அரசாளும் தியாகராசப் பெருமான் திருவருளால் அடியவர் கூட்டமும் மற்ற மக்களும் நகரத்தின் வெளியே வந்து அணைந்து பிள்ளையாரை எதிர்கொள்கின்ற அளவில்.


பெ. பு. பாடல் எண் : 507
வந்து இறைஞ்சு மெய்த் தொண்டர்தம் குழாத்து எதிர்வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
"அந்த மாய்உலகு ஆதி"யாம் பதிகம்அங்கு எடுத்தே
"எந்தை தான்எனை ஏன்று கொளும் கொல்"என்று இசைத்தார்.

         பொழிப்புரை : தம் எதிரே வணங்கும் மெய்த்தொண்டர் கூட்டத்தின் முன்னம் தாமும் எதிர் வணங்கி; சந்தமுடைய முத்தமிழ் வல்லுநர் ஆன சீகாழித் தலைவர், `அந்தமாயுல காதியாம்' எனத் தொடங்கு கின்ற திருப்பதிகத்தை அங்குத் தொடங்கி, `எம்பெருமானார்தாம் என்னை ஏற்றுக் கொள்வாரோ?' என்ற கருத்துடன் பாடி நிறைவு செய்தார்.

         குறிப்புரை : `அந்தமாய் உலகு ஆதியாம்' (தி.3 ப.45) எனத் தொடங்கும் திருப்பதிகம் கௌசிகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

திருஞானசம்பந்தர்  திருப்பதிகம்

3. 045    திருவாரூர்                           பண் - கௌசிகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அந்த மாய்உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்,
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூர்எம்
எந்தை தான்எனை ஏன்றுகொ ளும்கொலோ.

         பொழிப்புரை : சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணன் . திருவெண்ணீறு பூசிய வேத நாயகன் . என் சிந்தையில் புகுந்து விளங்குபவன் . திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ !


பாடல் எண் : 2
கருத்த னே,கரு தார்புர மூன்றுஎய்த
ஒருத்த னே,உமை யாள்ஒரு கூறனே,
திருத்த னே,திரு வாரூர்எம் தீவண்ண,
அருத்த, என்என்னை அஞ்சல்என் னாததே..

         பொழிப்புரை : இறைவர் என் கருத்திலிருப்பவர் . தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . ஒப்பற்றவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். தூயவர். திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர். எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள். அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ?


பாடல் எண் : 3
மறையன், மாமுனி வன்,மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்எரி யூட்டினான்,
சிறைவண்டு ஆர்பொழில் சூழ்திரு வாரூர்எம்
இறைவன் தான்எனை ஏன்றுகொ ளும்கொலோ.

         பொழிப்புரை : இறைவன் , வேதங்களை அருளிச் செய்து வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பெரிய தவத்தன் . பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன் . சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ !


பாடல் எண் : 4
பல்இல் ஓடுகை ஏந்திப் பலிதிரிந்து
எல்லி வந்துஇடு காட்டுஎரி ஆடுவான்,
செல்வ மல்கிய தென்திரு ஆரூரான்,
அல்லல் தீர்த்துஎனை அஞ்சல் எனும்கொலோ.

         பொழிப்புரை :இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர் . இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர் . செல்வச் செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ !



பாடல் எண் : 5
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி
விரிந்து ஏலர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதுஎனை வாடல் எனும்கொலோ.

         பொழிப்புரை : குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும் , விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ , மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும்போது , என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ !


பாடல் எண் : 6
வார்கொள் மென்முலை யாள்ஒரு பாகமா
ஊர்க ளார்இடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
ஆர்க ணாஎனை அஞ்சல் எனாததே.

         பொழிப்புரை : கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய் , செல்வவளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான் ?


பாடல் எண் : 7
வளைக்கை மங்கைநல் லாளைஓர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்,
திளைக்கும் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதுஎனை ஏன்றுகொ ளும்கொலோ.

         பொழிப்புரை : வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன் , தன்னை எதிர்த்து வந்த யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் . குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் , இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ !


பாடல் எண் : 8
இலங்கை மன்னன் இருபது தோள்இறக்
கலங்கக் கால்விர லால்கடைக் கண்டவன்,
வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
அலங்கல் தந்துஎனை அஞ்சல் எனும்கொலோ.

         பொழிப்புரை :இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர் இறைவர் . வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை தந்து அருளி , நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ !


பாடல் எண் : 9
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்,பனி மாமதிச் சென்னியான்,
செடிகள் நீக்கிய தென்திரு ஆரூர்எம்
அடிகள் தாஎன்னை அஞ்சல் எனும்கொலோ.

         பொழிப்புரை : நீண்டு உயர்ந்த திருமாலும் , பிரமனும் காணமுடியாத தன்மையராய்க் குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் தாங்கிய இறைவர் , மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார் . அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ !


பாடல் எண் : 10
மாசு மெய்யினர், வண்துவ ராடைகொள்
காசை போர்க்கும் கலதிகள் சொல்கொளேல்,
தேசம் மல்கிய தென்திரு ஆரூர்எம்
ஈசன் தான்எனை ஏன்றுகொ ளும்கொலோ.

         பொழிப்புரை : அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் , துவராடை அணிந்த புத்தர்களும் , கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர் , அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந் தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ !


பாடல் எண் : 11
வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே.

         பொழிப்புரை :வன்னி , கொன்றை , சந்திரன் , வில்வம் , ஆகியவற்றைச் சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை , நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 508
ஆன அத்திருப் பதிகம்முன் பாடிவந்து அணையும்
ஞான வித்தகர், மெய்த்தவர் சூழஅந் நகரார்
தூந றுஞ்சுண்ண மலர்பொரி தூஉய்த்தொழுது ஏத்த,
வான நாயகர் கோயில்வா யிலின்மருங்கு அணைந்தார்.

         பொழிப்புரை : அத்திருப்பதிகத்தைப் பாடி வந்து சேருகின்ற ஞானவித்தகரான பிள்ளையார், மெய்யடியார்கள் தம்மைச் சூழ்ந்து வரவும், அத்திருவாரூர் நகர மக்கள் தூய்மையான மணமுடைய சுண்ணப் பொடியையும், மலர்களையும் பொரியினையும் தூவித் தொழுது வணங்கவும், இவ்வாறு நகரத் தெருக்களைக் கடந்து சென்று தேவர் தலைவரான சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்தார்.


பெ.பு. பாடல் எண் : 509
மன்னு தோரண வாயில்முன் வணங்கிஉள் புகுவார்,
தன்னுள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பல்நெ டுஞ்சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்து,
சென்னி தாழ்ந்து,தேவாசிரி யன்தொழுது எழுந்தார்.

         பொழிப்புரை : தோரணங்கள் நிலைபெற அமைக்கப்பட்டு விளங்கும் வாயிலின் முன்பு வணங்கிக் கோயிலுக்குள் புகுந்தவரான பிள்ளையார், தனக்குள் எல்லா வகையான பெருமையும் கொண்ட நீண்ட ஒளி வரிசையின் பரப்பினைக் கண்டு, தலை வணங்கித் தேவாசிரிய மண்டபத்தை வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 510
மாடு சூழ்திரு மாளிகை வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலில் கோபுரம் பணிந்து,கை குவித்து,
தேடும் மால்அயற்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலம்உறப் பலமுறை பணிந்தார்.

         பொழிப்புரை : அம்மண்டபத்தின் அருகே, சுற்றிலும் சூழ்ந்த திருமாளிகையை வலங்கொண்டு வந்து வணங்கிக் கூடும் அன்பு மிகுதியால் கோபுரத்தைப் பணிந்து கைகூப்பித் தொழுது, தம்மைத் தேடிய திருமாலுக்கும், நான்முகனுக்கும் அறிதற்கு அரிய செழுமை யான மணிப்புற்றுள் இடம் கொண்டு நிலையாக எழுந்தருளியுள்ள இறைவரைப் பன்முறையும் நிலத்தில் விழுந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 511
பணிந்து வீழ்ந்தனர், பதைத்தனர், பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர், பாடினர், அறிவில்
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர் தமைக்கண்டு துதிப்பார்,
தணிந்த சிந்தையின் விரைந்துஎழு வேட்கையில் தாழ்ந்தார்.

         பொழிப்புரை : பணிந்து விழுந்தார்; பதைத்தார்; உடல் முழுதும் மயிர்க்கூச்செறியப் பரவிய நிலையில் ஆடினார்; பாடினார் தம் அறிவினுள்ளே தெளிவாகக் கண்டு கொண்டிருந்த மெய்ப் பொருளான சிவபெருமானை வெளியேயும் பார்த்துப் போற்றுபவராய்த் தம் உள்ளத்துள் விரைந்து எழும் விருப்புடன் வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 512
செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி கத்துஇசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை வாயிலின் புறம்போந்து
அஞ்செ ழுத்தின்மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்.

         பொழிப்புரை : செஞ்சொல்லாலான வண்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கி, நஞ்சை அமுதமாய் ஆக்கிய இறைவர் திருமுன்பு போற்றி, மேகங்கள் சூழ்கின்ற மாளிகையின் வாயில் பக்கத்தை அடைந்து, திருவைந்தெழுத்தின் மெய்ப்பொருளை உணர்ந்தவரான பிள்ளையார் திருமடத்தைச் சேர்ந்தார்.

         குறிப்புரை : இவ்வரிய திருப்பதிகம் கிடைத்திலது.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


         திருஆரூரினின்றும், திருவலிவலம், திருக்கோளிலி, திருத்தண்டலை நீள்நெறி ஆகிய தலங்களை வழிபட்டு, மீளவும் திருவாரூரில் எழ்ந்தருளிய ஞானசம்பந்தர், திருநாவுக்கரசரை நினைவு கூர்ந்த வண்ணம், திருப்புகலூரை விரும்பித் தொழுதற்குத் திருவுள்ளம் கொண்டு, திருவாரூரில் புறம் போந்த அளவில், அத்திருநகரைப் பிரிவதற்கு அஞ்சிய நிலையில் பதிகம் பாடியருளினார்.

பெரிய புராணம் - பாடல் எண் : 517.
அங்கு நன்மையில் வைகும்அந் நாள்சில அகல
நங்கள் தம்திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ அருளினால் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்துஅருள் செய்வார்.

         பொழிப்புரை : அவ்வாறு இருந்தருளிய நாள்கள் சில கழிய, திருநாவுக்கரசரை விரும்பி, பொங்கும் சிறப்பைக் கொண்ட திருப் புகலூரினை வணங்குவதற்கு விடைபெற்றுக் கொண்டு செல்பவராய்த் தங்கிய அத்திருவாரூர்ப் பதியின் புறம்பணையைச் சேர்ந்து அருள் செய்பவராய்,

  
பெ.பு. பாடல் எண் : 518
புவன ஆரூரினில் புறம்பு போந்து,
         அதனையே நோக்கி நின்றே,
"அவம்இலா நெஞ்சமே! அஞ்சல் நீ
         உய்யுமாறு அறிதி அன்றே.
சிவனது ஆரூர் தொழாய் நீ மற-
         வாது"என்று செங்கை கூப்பிப்
"பவனமாய்ச் சோடையாய்" எனும்திருப்
         பதிகம் முன் பாடினாரே.

         பொழிப்புரை : மண் உலகத்தில் சிறந்த திருவாரூரின் நகர்ப் புறத்தின் மருதநிலத்தில் போய்ச் சேர்ந்து, அந் நகரத்தையே நோக்கி நின்ற வண்ணம், `பயனில்லாது கழிந்து போகாத மனமே! நீ அஞ்சாதே! உய்யும் வகையினை அறிவாய் அல்லையோ! சிவபெருமானின் திருவாரூரை நீ மறக்காது தொழுவாயாக!\' எனச் சொல்லி சிவந்த கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு, `பவனமாய்ச் சோடையாய்' எனத் தொடங்கும் பதிகத்தை அந்நகரின் முன்பாடி அருளினார்.

         இத்திருப்பதிகம் `பவனமாய்' (தி.2 ப.79) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். நெஞ்சு அறிவுறுத்தலாக அமைந்த இப்பதிகம், பிள்ளையார் தம் அளவில் பிரிவாற்றாமையாகவும், நம்மனோர் அளவில் அறவுரையாகவும் அமைந்த பதிகமாகும்.  `பதிகமுன் பாடினாரே' என்பது `பதிகமே பாடி நின்றார்' என்றும் பாடம்.

    
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.079 திருவாரூர்                               பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பவனமாய்ச் சோடையாய் நாஎழாப்
         பஞ்சுதோய்ச்சு அட்ட உண்டு,
சிவனதாள் சிந்தியாப் பேதைமார்
         போலநீ வெள்கி னாயே,
கவனமாய்ப் பாய்வது ஓர்ஏறுஉகந்து
         ஏறிய காள கண்டன்,
அவனது ஆரூர்தொழுது உய்யலாம்
         மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தோய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 2
தந்தையார் போயினார், தாயரும் போயினார், தாமும் போவார்,
கொந்தவேல் கொண்டுஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்கொண்டுபோவார்,
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால், ஏழை நெஞ்சே,
அந்தண் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே.

         பொழிப்புரை :ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 3
நிணம்குடர் தோல்நரம்பு என்புசேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்,
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே,
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 4
நீதியால் வாழ்கிலை, நாள்செலா நின்றன, நித்த நோய்கள்
வாதியா, ஆதலால் நாளுநான் இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணர்கள் ஏத்தும் முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்னரர், தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 5
பிறவியால் வருவன கேடுஉள, ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே,
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 6
செடிகொள்நோய் யாக்கையஅம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத்து இன்புறல் ஆம்என்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்து அன்பராய் ஏத்து முக்கண்
அடிகள் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 7
ஏறுமால் யானையே சிவிகை அந்தளகம் ஈச் சோப்பி, வட்டில்
மாறிவாழ் உடம்பினார் படுவதுஓர் நடலைக்கு மயங்கி னாயே,
மாறுஇலா வனமுலை மங்கைஓர் பங்கினர் மதியம் வைத்த
ஆறன் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தாற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக்கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 8
என்பினால் கழிநிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்த இது நம் இல்லம்,
புன்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு
முன்புஎலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே
அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 9
தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தம்நீங் காதவர்க்கு உய்ந்துபோக்கு இல்எனப் பற்றி னாயே
வெந்தநீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 10
நெடியமால் பிரமனும் நீண்டுமண் இடந்துஇன்னம் நேடிக் காணாப்
படியனார், பவளம்போல் உருவனார், பனிவளர் மலையாள் பாக
வடிவனார், மதிபொதி சடையனார், மணிஅணி கண்டத்து எண்தோள்
அடிகள் ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்ன வடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக்காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 11
பல்இதழ் மாதவி அல்லிவண்டு யாழ்செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லிஅம் போதுஎரி ஆடும்எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதுஇலார் ஓதநீர் வைய கத்தே.

         பொழிப்புரை :பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லி வருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.
                                    திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


3.109 திருக்கயிலாயம்-திருவானைக்கா,திருமயேந்திரம் - திருவாரூர்   -               
                                    பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மண்அது உண்டஅரி, மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரரும்
கண்அது ஒங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளி யிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும்.


பாடல் எண் : 2
வந்துமால் அயன்அவர் காண்பரியார்,
வெந்தவெண் ணீறுஅணி மயேந்திரரும்,
கந்தவார் சடைஉடைக் கயிலையாரும்,
அந்தண ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.


பாடல் எண் : 3
மால்அயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைஅது ஓங்கும்வெண் நாவலாரும்
ஆலை ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.


பாடல் எண் : 4
கருடனை ஏறுஅரி அயனோர்காணார்
வெருள்விடை ஏறிய மயேந்திரரும்
கருள்தரு கண்டத்துஎம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.


பாடல் எண் : 5
மதுசூதன் நான்முகன் வணங்கஅரியார்,
மதியது சொல்லிய மயேந்திரரும்,
கதிர்முலை புல்கிய கயிலையாரும்,
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 6
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர், கயிலை, மயேந்திரரும்,
தக்கனைத் தலைஅரி தழல்உருவர்
அக்குஅணி அவர்ஆரூர் ஆனைக்காவே.

         பொழிப்புரை : சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.


பாடல் எண் : 7
கண்ணனும் நான்முகன் காண்புஅரியார்,
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை,எங்கள்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.


பாடல் எண் : 8
கடல்வண்ணன் நான்முகன் காண்புஅரியார்,
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்,
விடம்அது உண்டஎம் மயேந்திரரும்,
அடல்விடைஆ ரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.


பாடல் எண் : 9
ஆதிமால் அயன்அவர் காண்புஅரியார்,
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்,
காதிலொர் குழைஉடைக் கயிலையாரும்,
ஆதிஆ ரூர்எந்தை ஆனைக்காவே.

         பொழிப்புரை : தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 10
அறிவிஇல் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்,
வெறியமான் கரத்துஆரூர் மயேந்திரரும்,
மறிகடலோன் அயன் தேடத்தானும்
அறிவுஅரு கயிலையோன் ஆனைக்காவே.

         பொழிப்புரை : இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 11
ஏனமால் அயன்அவர் காண்புஅரியார்,
கானம்ஆர் கயிலைநன் மயேந்திரரும்,
ஆனஆ ரூர்ஆதி ஆனைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.

         பொழிப்புரை : பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவ பெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள்.

         ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்பட்டதாதலால் கூடல் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல். ஒவ்வொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன. நான்கு தலங்களையும் சொன்னபோதிலும், ஒவ்வொரு பாசுரமும் "ஆனைக்காவே" என்று முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர் ஆதி (ஆனைக்கா) என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் "ஆரூர் எந்தை" என்று முடிகின்றது. பத்தாவது பாடல் "கயிலையோன் ஆனைக்கா" என்று முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு தலங்களிலும் எழுந்தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய தமிழ் என்று வருகிறது.
        
                                             திருச்சிற்றம்பலம்

                                                                              ----  தொடரும் -----

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...