53. பிறவிக் குணம் மாறாது
கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும்,
கல்வியும், கருணை விளைவும்,
கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,
கனரூபம் உளமங் கையும்,
அலங்காத
வீரமும், பொறுமையும், தந்திரமும்,
ஆண்மையும், அமுத மொழியும்,
ஆனஇச் செயல்எலாம் சனனவா சனையினால்
ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம்சேரும்
ஒருவரைப் பார்த்துஅது பெறக்கருதின்
நண்ணுமோ? ரஸ்தா ளிதன்
நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
நாள்செயினும் வாரா துகாண்!
அலங்காரம்
ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
இதன் பொருள் ---
அலங்காரம் ஆக மலர்கொன்றை மாலிகை சூடும் அண்ணலே
---
மலர்ந்த கொன்றைமலர்களால் ஆன மாலையை அலங்காரமாக அணிந்த அண்ணலே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
கலங்காத சித்தமும் --- தெளிவான மனமும்,
செல்வமும் --- செல்வ வளமும்,
ஞானமும் --- உண்மை அறிவும்,
கல்வியும் --- நூல் அறிவும்,
கருணை விளைவும் --- கருணையின்
பெருக்கமும்,
கருது அரிய வடிவமும் --- எண்ணிப்
பார்க்க முடியாத உருவ அழகும்
போகமும் --- இன்ப அனுபவமும்,
தியாகமும் --- தனக்கு என வாழாத
தன்மையும்,
கனரூபம் உள மங்கையும் --- பேரழகு உடைய
இல்லாளும்,
அலங்காத வீரமும் --- அசைவு இல்லாத வீரமும்,
பொறுமையும் --- பிறர் செய்யும்
தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் முணமும்,
தந்திரமும் --- ஒரு காரியத்தைச்
சூழுகின்ற அறிவும்,
ஆண்மையும் --- ஆளுகைத் திறமையும்,
அமுத மொழியும் --- இனிமையாகப் பேசும்
இயல்பும்,
ஆன இச்செயல் எலாம் --- ஆகிய இவைகள்
யாவும்,
சனன வாசனையினால் ஆகி வரும் --- முற்பிறப்பின்
தொடர்ச்சியால் இழல்மாக விளைவனவே,
அன்றி --- அல்லாமல்,
நிலம் மேல் நலம் சேரும் ஒருவரைப் பார்த்து
--- உலகில் இந்த நலங்களை எல்லாம் பெற்று இருக்கும் ஒருவரைப் பார்த்து,
அது பெறக் கருதின் நண்ணுமோ --- அவற்றை
அடைய எண்ணினால், அவைகள் ஒருவனை வந்து
சாருமோ?
இல்லை, எப்படி எனில்,
இரஸ்தாளி தன் நற்சுவை தனக்கு வர --- இரஸ்தாளி
வாழைக்கு வாய்த்துள்ள நல்ல சுவையானது, தனக்குக்
கிடைக்கவேண்டி,
வேம்பு நெடிது நாள் தவம் செயினும் வாராது
--- இரஸ்தாளி வாழையானது பழுப்பதற்குத் துணை செய்யும் வேம்பு, நீண்ட நாள் தவம் புரிந்தாலும்
அதற்கு வாய்க்காது.
விளக்கம் --- மக்கள் பிறப்பானது, அவரவர் முன்செய்த வினையின் விளைவாக வாய்ப்பது.
நல்வினை செய்தவர் நற்பிறப்பை அடைந்து அதனால் வரும் இன்பங்களை அனுபவிப்பதும், தீவினை புரிந்தவர்
அதனால் வரும் துன்பங்களை அனுபவிப்பதும் நியதி. "வையத்து அறும்
பாவம் என்று அன்று இடார்க்கு, இன்று வெறும் பானை
பொங்குமோ மேல்" என்பார் ஔவைப் பிராட்டியார்.
நீர்
அளவே ஆகுமாம் நீர் ஆம்பல், தான்கற்ற
நூல்
அளவே ஆகுமாம் நுண்அறிவு, - மேலைத்
தவத்து
அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,
குலத்து
அளவே ஆகும் குணம். --- மூதுரை.
நீரில்
வளரும் அல்லிக் கொடியானது, நீரின் அளவே இருக்கும்.
அதுபோல,
நுண்ணிய
அறிவானது,
ஒருவன்
படித்த நூல்களின் அளவாகவே இருக்கும். ஒருவன் பெற்றுள்ள செல்வம் என்பது, அவன் முற்பிறவியில்
செய்த தவத்தின் அளவாகவே இருக்கும். குணமானது, தான் பிறந்த குடியின் அளவாகவே
இருக்கும்.
No comments:
Post a Comment