இருந்தும் இறந்தோர்




32. இருந்தும் இறந்தோர்

மாறாத வறுமையோர், தீராத பிணியாளர்,
     வருவேட் டகத்தில் உண்போர்,
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்,
     மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய்து உய்குவோர், சிவிகைகள்
     சுமந்தே பிழைக்கின்றபேர்,
தொலையா விசாரத்து அழுந்துவோர், வார்த்தையில்
     சோர்வுபடல் உற்றபெரியோர்,

வீறாக மனையாள் தனக்கு அஞ்சி வந்திடு
     விருந்தினை ஒழித்துவிடுவோர்,
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
     மிக்கசபை ஏறும்அசடர்,

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்தசவம்
     ஆகி, ளி மாய்வர்கண்டாய்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     மாறாத வறுமையோர் --- என்றும் நீங்காத வறுமையில் உள்ளோர்,

     தீராத பிணியாளர் --- தீராத நோயால் பீடிக்கப்பட்டோர்,

     வரு வேட்டகத்தில் உண்போர் --- மாமனார் வீட்டில் உண்டு வாழ்பவர், 

     மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் --- மனைவியைத் தீய ஒழுக்கத்திலே ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளால் வாழ்க்கை நடத்துவோர்,

     மன்னும் ஒரு ராச சபையில் தூறாக நிந்தை செய்து உய்குவோர் --- அரச சபையிலே வீணான பழியைக் கூறி, அதனால் தனது சீவனத்தை நடத்துவோர்,

     சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் --- மனிதர்கள் அமர்ந்து செல்லும் பல்லக்கைச் சுமந்து வயிறு வளர்ப்போர்,

     தொலையாத விசாரத்து அழுந்துவோர் --- நீங்காத கவலையிலே மூழுகியவர்,

     வார்த்தையினில் சோர்வுபடல் உற்ற பெரியோர் --- சொன்ன சொல்லில் இருந்து மாறுபாடு கொண்ட பெரியோர்கள்,

     வீறாக மனையாள் தனக்கு அஞ்சி, வந்திடும் விருந்தினை ஒழித்து விடுவோர் --- மனைவிக்குப் பயந்து, வந்த விருந்தினரை விலக்கி விடுவோர்,

     செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை வீம்புடன் ஏறும் அசடர் --- செல்லுபடி ஆகாத வழக்கை நீதிமன்றங்களிலே பிடிவாதமாகச் சொல்லும் அசடர்கள்,

     இவர் எலாம் --- ஆகிய இவர்கள் எல்லாரும்,

     மாறாக --- முந்தைய பாடலிலே சொல்லப்பட்டவருக்கு மாறா,

     உயிருடன் செத்த சவம் ஆகி  ஒளி மாய்வர் --- உயிரோடு இருந்தாலும்,  இறந்த பிணமாகக் கருதப்பட்டு புகழ் குன்றுவர்.

     விளக்கம் --- வேட்டகம் - மாமனார் வீடு. வேட்ட அகம் -
விரும்பிய வீடு. விருந்து - புதுமை. விருந்தினர் - புதியவர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. சமைத்து உண்ண வழி இல்லாதவரை விருந்தினர் என்று கொள்ள வேண்டும்.

    இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
    விருந்து வந்தது என்று விளம்ப, வருந்திமிக
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடினான் தான்.

    ஔவையை விருந்தாளியாக அழைத்துச் சென்ற ஒருவன் ஔவையை வெளிப்புறம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று தன் மனைவி பக்கத்தில் அமர்ந்து அவன் முகத்தை உருவி முத்தமிட்டான். அவன் தலையைப் பேன் பார்த்து விட்டான். இப்படியெல்லாம் அன்பைக் காட்டிவிட்டு விருந்து வந்திருக்கிறதுஎன்றான். உடனே அவள் கொடைத்தன்மை இல்லாத தனது பிறவிக் குணத்தைக் காட்டலானாள். ஆட்ட பாட்டத்தோடு கணவனை ஓட ஓட முறத்தால் அடித்தாள். கொடை என்பது பிறவிக்குணம் என்றார் ஔவைப் பிராட்டியார்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம், - நித்தம்
நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

     சித்திரம் தீட்டுதல் கைப்பழக்கத்தால் கைகூடும். நாப்பழக்கத்தால் தமிழைம் கற்கலாம். கல்வி அறிவும் பாராயணம், எழுத்துப் பயிற்சி ஆகியவற்றால் கூடும். நடைப் பழக்கத்தால் நடை வரும். ஆனால், நட்பு உள்ளம், தயவு உள்ளம், கொடைப் பண்பு ஆகியவை உயிர்க்குணங்கள் என்பதால், அவைகள் ஒருவனுக்குப் பிறவிக் குணமாகவே பொருந்தி இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...