நல்வினை செய்தவர்கள்
46. நல்வினை செய்தோர்

சரண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
     தானம்இளை யாது உதவினோன்,
  தந்தை சொல் மறாதவன், முன்னவற்கு ஆனவன்
     தாழ்பழி துடைத்த நெடியோன்,

வருபிதிர்க்கு உதவினோன், தெய்வமே துணை என்று
     மைந்தன் மனைவியை வதைத்தோர்,
  மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
     மாய்த்து உலகில் மகிமை பெற்றோர்,

கருதரிய சிபி, அரிச் சந்திரன், மாபலி,
     கணிச்சியோன், சுமித்திரை சுதன்,
  கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு
     கானவன், பிரக லாதன்,

அரியவல் விபீடணன் எனும் மகா புருடராம்
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     இதன் பொருள் ---

     அத்தனே --- தலைவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     சரண் எனக் காத்தவன் --- அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்றியவன்,

     மெய்யினால் வென்றவன் --- உண்மையே பேசி வெற்றி பெற்றவன்,

     இளையாது தானம் உதவினோன் --- சோர்வு படாமல் கொடையைக் கொடுத்தவன்!

     தந்தை சொல் மறாதவன் --- தந்தையின் சொல்லை மறுக்காதவன்,

     முன்னவற்கு ஆனவன் --- தனக்கு முன் பிறந்த தமையனுக்கு உற்ற துணையானவன்,

     தாய் பழி துடைத்த நெடியோன் --- தாய்க்கு நேர்ந்த பழியினைத் துடைத்த பெரியோன்,

     வரு பிதிர்க்கு உதவினோன் --- தென்புலத்தார்க்கு உதவி புரிந்தோன்.

     தெய்வமே துணை என்று மைந்தன் மனைவியை வதைத்தோர் --- கடவுளைத் துணையாக நம்பி மகனை வதைத்தவனும் மனைவியை வதைத்தவனும்,

     மாறான தந்தையைத் தமையனைப் பழிகண்டு மாய்த்து உலகில் மகிமை பெற்றோர் --- நன்னெறிக்கு மாறாக நடந்த தந்தையைக் கொன்றும், தமயனைக் கொன்றும் உலகில்  புகழ் பெற்றோர்,

     (ஆகிய இவர்கள் முறையே)

     கருதரிய சிபி --- நினைத்தற்கரிய பெருமை உடையசிபிச் சக்கரவர்த்தியும்,

     அரிச்சந்திரன் --- அரிச்சந்திரனும்,

     மாபலி --- மாபலியும்,

     கணிச்சியோன் --- பரசுராமனும்,

     சுமித்திரை சுதன் --- சுமித்திரையின் மகனான இலக்குவனும்,

     கருடன் --- கருடனும்,

     பகீரதனுடன் --- பகீரதனும்,

     சிறுத்தொண்டனொடு --- சிறுத்தொண்ட நாயனாரோடு,

     கானவன் --- வேடனும்,

     பிரகலாதன் --- பிரகலாதனும்,

     அரிய வல் விபீடணன் --- அரிய வலிமை உடைய விபீடணனும்,

     எனும் மகா புருடராம் --- எனக் கூறும் பெருமைக்கு உரியவர்கள் ஆவர்.

          விளக்கம் --- அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்ற, அதன் எடைக்கு ஈடாகத் தன்னுடைய உடம்பின் சதையையே அரிந்து கொடுத்தவன் சிபிச் சக்கரவர்த்தி.

     அரிச்சந்திரன் தன் வாழ்நாளில் கொண்டு விரதமான உண்மையையே பேசுவதைக் கடைப்பிடிக்கத் தனது மனைவியையும் மகனையும் விற்றதோடு, தானும் தோட்டிக்கு விலையானான்.

     மாபலிச் சக்கரவர்த்தி, வாமனராகத் தன்னை வந்து இரந்தவர், மாயையில் வல்ல திருமால் என்று அறிந்தும், சுக்கிராசார்யார் தனக்குச் சொன்ன நல்லுரைகளைப் பொருட்படுத்தாமல், வாமன மூர்த்தி வேண்டியபடி மூன்றடி மண்ணைக்
கொடுத்து, குரு மொழியை மறுத்தும் நற்கதி அடைந்தான்.

     பரசுராமன் தந்தை சொற்படி தாயைக் கொன்றான்.

     இலக்குமணன் தனது தமையனான இராம பிரானொடு காட்டிற்குச் சென்றான்.

     பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன் தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று வந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான் கருடன்.   

     பகீரதன் தன் முன்னோரான சகரர்கள் நற்கதி அடையக் கங்கையைப் பூவுலகில் கொணர்ந்து, சகரரின் சாம்பல் குவியலில் பாய்ச்சி அவர்களுக்கு உதவி புரிந்தான்..

     சிறுத்தொண்டர் அடியார் கோலத்துடன் வந்த சிவபிரான் அமுது செய்ய, தனது மைந்தனைக் கொன்று சமைத்தார்.

     பிரகலாதன் தன் தந்தைக்கு மாறுபட்டு நின்று, நரசிங்க மூர்த்தியால் தன் தந்தையையே கொல்வித்தான்.

     வீடணன் தன் தமையனான இராவணனுக்கு மாறாக நின்று இராமனைக் கொண்டு கொல்வித்தான்.

     இவர்கள் நன்னெறியிலே சென்றதனால், உலகியலுக்கு மாறான செயல்களைச் செய்தாலும், புகழ் பெற்றனர்.

     உலகியலுக்கு மாறாக இருந்தாலும், நன்னெறியில் நடப்பதே பெருமைக்கு உரியது. 


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...