சிதம்பரம் - 0642. நகையால் எத்திகள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நகையால் எத்திகள் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
மாதர் வலையில் இருந்து அடியேனை விடுவித்து,
உனது திருவடியில் சேர்த்து அருள்வாய்

 
தனனா தத்தன தானத்தம்
     தனனா தத்தன தானத்தம்
          தனனா தத்தன தானத்தம் ...... தனதான

நகையா லெத்திகள் வாயிற்றம்
     பலமோ டெத்திகள் நாணற்றின்
          நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர்

நடையா லெத்திக ளாரக்கொங்
     கையினா லெத்திகள் மோகத்தின்
          நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச்

சிகையா லெத்திக ளாசைச்சங்
     கடியா லெத்திகள் பாடிப்பண்
          திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே

சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
     டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
          செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய்

பகையா ருட்கிட வேலைக்கொண்
     டுவரா ழிக்கிரி நாகத்தின்
          படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா

பணநா கத்திடை சேர்முத்தின்
     சிவகா மிக்கொரு பாகத்தன்
          பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே

சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
     தடியே னுக்கருள் பாலிக்குஞ்
          சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா

சுகரே சத்தன பாரச்செங்
     குறமா தைக்கள வால்நித்தஞ்
          சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நகையால் எத்திகள், வாயில் தம்-
     பலமோடு எத்திகள், நாண் அற்று, ன்
          நயனால் எத்திகள், நாறல் புண் ...... தொடைமாதர்,

நடையால் எத்திகள், ரக் கொங்-
     கையினால் எத்திகள், மோகத்தின்
          நவிலால் எத்திகள், தோகைப் பைங் ...... குழல்மேகச்

சிகையால் எத்திகள், சைச் சங்-
     கடியால் எத்திகள், பாடிப் பண்
          திறனால் எத்திகள், பாரத் திண் ...... தெரு ஊடே

சிலர் கூடிக் கொடு, ஆடிக் கொண்டு
     உழல்வாருக்கு உழல் நாய் எற்கு, ன்
          செயலால் அற்புத ஞானத் திண் ...... கழல்தாராய்.

பகையார் உட்கிட வேலைக் கொண்டு,
     உவர் ஆழி, கிரி நாகத்தின்
          படமோடு இற்றிட சூரைச் சங் ...... கரி சூரா!

பண நாகத்து இடை சேர் முத்தின்
     சிவகாமிக்கு ஒரு பாகத்தன்
          பரிவால், சத்து உபதேசிக்கும் ...... குரவோனே!

சுக ஞானக்கடல் மூழ்கத் தந்து,
     அடியேனுக்கு அருள் பாலிக்கும்
          சுடர் பாதக் குகனே! முத்தின் ...... கழல்வீரா!

சுக ரேசத் தன பாரச் செம்
     குறமாதைக் களவால் நித்தம்
          சுக மூழ்கி, புலியூர் நத்தும் ...... பெருமாளே.


பதவுரை

      பகையார் உட்கிட --- பகைத்து வந்த அசுரர்கள் அஞ்ச

     வேலைக் கொண்டு --- வேலாயுதத்தைக் கொண்டு,

     உவர் ஆழி --- உவர் நீர் நிறைந்த கடல்களும்,

     கிரி --- மலைகளும்,

     நாகத்தின் படமோடு இற்றிட --- ஆதிசேடனுடைய படங்களும் குலைந்து விழ,

     சூரைச் சங்கரி சூரா --- சூரபதுமனாதியரைச் சங்காரம் செய்த சூரரே!

      பண நாகத்து இடைசேர் முத்தின் --- பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த இடையை உடைய முத்துப் போன்றவளான

     சிவகாமிக்கு ஒரு பாகத்தன் --- சிவகாம வல்லியை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு

     பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே --- அன்புடன் மெய்ப்பொருளை உபதேசம் செய்த சற்குருநாதரே!

      சுகஞானக் கடல் மூழ்கத் தந்து --- சுகானந்தத்தைத் தருகின்ற மெய்ஞ்ஞானக் கடலில் முழுக வைத்து

     அடியேனுக்கு அருள்பாலிக்கும் சுடர்பாதக் குகனே --- அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகப் பெருமானே!

     முத்தின் கழல் வீரா --- முத்துக்களால் ஆன கழல்களை அணிந்த வீரரே!

      சுக ரேசத் தனபாரச் செம்குற மாதை --- இன்பச் சுவை ஊட்டும் மார்பகங்களை உடைய குறமாது ஆகிய வள்ளிபிராட்டியுடன் (ரேசம் - இரசம். சாறு சுவை.)

     களவால் நித்தம் சுகம் மூழ்கி --- களவியல் நெறியில் தினந்தோறும் சுகத்தை அனுபவித்து,

     புலியூர் நத்தும் பெருமாளே --- புலியூர் என்னும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      நகையால் எத்திகள் --- சிரித்து ஏமாற்றுபவர்கள்.

     வாயில் தம்பலமோடு எத்திகள் --- வாயில் உள்ள தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள்.

       நாண் அற்று இன் நயனால் எத்திகள் --- நாணமின்றி இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள்.

     நாறல் புண் தொடை மாதர் --- நாறுகின்ற புண்ணாகிய அல்குல் பொருந்திய தொடையை உடைய விலைமாதர்கள்,

     நடையால் எத்திகள் --- நடையாலேயே ஏமாற்றுபவர்கள்.

      ஆரக் கொங்கையினால் எத்திகள் ---  ஆரம் அணிந்துள்ள முலைகளால் ஏமாற்றுபவர்கள்.

      மோகத்தின் நவிலால் எத்திகள் --- காம மயக்கம் தரும் சொல்லால் ஏமாற்றுபவர்கள்.

       தோகைப் பைம் குழல் மேகச் சிகையால் எத்திகள் --- மயிலின் தோகையைப் போல பசியதும், மேகம் போன்ற கூந்தலால் ஏமாற்றுபவர்கள்.

       ஆசைச் சம் கடியால் எத்திகள் --- ஆசையை ஊட்டும் நல்ல வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். (சம் - நல்ல.  கடி - மணம்.)

     பாடிப் பண் திறனால் எத்திகள் --- பாடல்களைப் பாடும் தமது திறனால் ஏமாற்றுபவர்கள்.

       பாரத் திண் தெருஊடே --- பெரிய நெருக்கமான தெருக்களில்

     சிலர் கூடிக்கொ(ண்)டு ஆடிக் கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு --- கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு,

     உன் செயலால் அற்புத ஞானத் திண்கழல் தாராய் --- தேவரீரது அருள் திருவிளையாடலால், அற்புதமான ஞானமே வடிவான திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

பொழிப்புரை


     பகைத்து வந்த அசுரர்கள் அஞ்சுமாறு, வேலாயுதத்தைக் கொண்டு, உவர் நீர் நிறைந்த கடல்களும், மலைகளும், ஆதிசேடனுடைய படங்களும் குலைந்து விழ, சூரபதுமன் ஆதியரைச் சங்காரம் செய்த சூரரே!

         பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த இடையை உடைய முத்துப் போன்றவளான சிவகாம வல்லியை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு, அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருநாதரே!

         சுகானந்தத்தைத் தருகின்ற மெய்ஞ்ஞானக் கடலில் முழுக வைத்து  அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகக் பெருமானே!

     முத்துக்களால் ஆன கழல்களை அணிந்த வீரரே!

         இன்பச் சுவை ஊட்டும் மார்பகங்களை உடைய குறமாது ஆகிய வள்ளிபிராட்டியுடன் களவியல் நெறியில் தினந்தோறும் சுகத்தை அனுபவித்து, புலியூர் என்னும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         சிரித்து ஏமாற்றுபவர்கள். வாயில் உள்ள தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். நாணமின்றி இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். நாறுகின்ற புண்ணாகிய அல்குல் பொருந்தி உள்ள தொடையை உடைய விலைமாதர்கள், நடையாலேயே ஏமாற்றுபவர்கள். ஆரம் அணிந்துள்ள முலைகளால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரும் சொல்லால் ஏமாற்றுபவர்கள். மயிலின் தோகையைப் போல பசுமையும், மேகம் போல் கருநிறம் பொருந்தியும் உள்ள கூந்தலால் ஏமாற்றுபவர்கள். ஆசையை ஊட்டும் நல்ல வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடும் தமது திறனால் ஏமாற்றுபவர்கள்.  பெரிய நெருக்கமான தெருக்களில்  கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, தேவரீரது அருள் திருவிளையாடலால், அற்புதமான ஞானமே வடிவான திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழின் முதல் பகுதியில் விலைமாதர்கள், பொருள் மீது பற்றுக் கொண்டு, ஆடவரை எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை விரித்துக் கூறி, அறிவுறுத்துகின்றார் அடிகளார்.

சூரைச் சங்கரி சூரா ---

சூரபதுமனாதியரைச் சங்காரம் செய்த சூரரே!

மாயையின் மகனாகிய சூரபன்மன் சிவ மூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளத்திலே செருக்கு கொண்டு, அறநெறிப் பிறழ்ந்து, அமரர்க்குப் பெரும் துன்பத்தை விளைத்து வருகையில், குமாரக்கடவுள் தேவர் சிறை மீட்கப் போர் புரிந்தனர். அசுரர் அனைவரையும் அழிந்தனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலக் கொண்டு ஆயிரத்தெட்டு
அண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் வந்தான். அப் பெருந் தானையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள நடுங்கினர். தேவர்கள் அளக்கவொணா துன்பத்தை அடைந்தனர். குகப் பெருமானார் அப்பெருஞ் சேனைகளை எல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபன்மனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. அவுணர்கோன் முடிவில் “இக் குமரனைக் கொணர்ந்து யுத்தத்தை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று, சிறிது எனது சினம் தணிந்தபின் இக்குமரனோடு போர் புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து உலகம் முழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளை ஏந்தித் தேவர்களைக் கொல்லுதல் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பால் உணர்ந்த அரி அயன் ஆதி அமரர்கள்,

தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”

என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிரு முகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேய் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் இருக்கும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதிலழித்தது.

அரியு மயனோ டபய மெனவே
  அயிலை யிருள் மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.

சூரபன்மன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை யாது செய்ய வல்லது? இதன் திறத்தைக் காண்கின்றனன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்று, கடல் நடுவில், நெருப்புப் போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர் வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத் தூரம் அளவும் விசாலித்த, தலை கீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.

வன்னியின் அலங்கல் கான்று, வான்தழை புகையின் நல்கி,
பொன்என இணர்கள் ஈன்று, மரகதம் புரையக் காய்த்து,
செந்நிற மணிகள் என்னத் தீம்பழம் கொண்டு, கார்போல்
துன்னுபல் கவடு போக்கி, சூதமாய் அவுணன் நின்றான்.

அஷ்ட நாகங்களும் திக்கு கஜங்களும் சந்திர சூரியரும் எல்லா உயிர்களும் அஞ்சி ஓலமிட்டன.அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன; குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாந் தகர்ந்தன. நாரணனுலகும் நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவி கயிலையை நாடி இரிந்தனர். அக்கால் அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி யண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பேரனல் வடிவு தாங்கிச் சென்று,

தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும், பிறங்கு ஞாலத்து
ஆயிர கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன,
மீ உயர்ந்து ஒழுகி, ஆன்றோர் வெருவருந் தோற்றம் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.

விடம்பிடித்து அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம் பிடித்திட்ட தீயில் தோய்த்து, முன் இயற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே.

மூதண்ட முகடு வரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை யெல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது.

சிவகாமிக்கு ஒரு பாகத்தன் பரிவால், சத்து உபதேசிக்கும் குரவோனே ---

சிவகாமசுந்தரியை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு
அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருநாதர் முருகப் பெருமான்.

சுகஞானக் கடல் மூழ்கத் தந்து, அடியேனுக்கு அருள்பாலிக்கும் 
சுடர்பாதக் குகனே ---

சுகானந்தத்தைத் தருகின்ற மெய்ஞ்ஞானக் கடலில் முழுக வைத்து, அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகப் பெருமானே என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார். 

ஆன்மாக்களை பிறவிக் கடலில் இருந்து, முத்திக் கரையில் சேர்த்து, பத்தி என்னும் நீர்த் துறைக்கு இட்டுச் சென்று, ஆனந்தம் என்னும் கடலில் அமிழ்த்துவதே இறைவன் புரியும் அருள் விளையாடல் என்பதனை,

மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான் எடுத்து, நேயத்தால்,
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான், எந்தையார் பரதம் தான்.

என்னும் உண்மை விளக்கப் பாடலால் அறியலாம்.

பத்தித் துறை இழிந்து, ஆனந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கம் தெளிவது என்றோ? பொங்கு வெம் குருதி
மெத்திக் குதிகொள்ள வெம் சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரம்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே.   --- கந்தர் அலங்காரம்.

முத்தின் கழல் வீரா ---

முத்துக்களால் ஆன கழல்களைத் தனது திருவடியிலே அணிந்தவர் முருகப் பெருமான்.

மற்ற மணிகள் எல்லாம் பட்டை தீட்டினால் தான் ஒளிவிடும். நவமணிகளிலே இயல்பாகவே ஒளி விடுவது முத்து ஒன்றே ஆகும்.  இயல்பாகவே அருள் உள்ளம் கொண்டவன், கருணை வடிவானவன் இறைவன் என்பதை இது உணர்த்தும்.

கருத்துரை

முருகா! மாதர் வலையில் இருந்து அடியேனை விடுவித்து, உனது திருவடியில் சேர்த்து அருள்வாய்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...