சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன




 32. சந்திரனைப் பார்த்து நாய்குரைத்தால் என்ன?

அந்தணரை நல்லவரைப் பரமசிவன்
     அடியவரை அகந்தையால் ஓர்
நிந்தனை சொன்னாலும் என்ன? வைதாலும்
     என்ன? அதில் நிடேதம் உண்டோ?
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
     நெறியாரே! துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த
     போதில்என்ன? தாழ்ச்சி தானே?

     இதன் பொருள் ---

     சுந்தரர்க்குத்  தூது சென்ற தண்டலை நீள்நெறியாரே --- சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரின் ஊடலை மாற்ற அவரிடம் தூதுபோன திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!,

     துலங்கும் பூர்ண சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த போதில் என்ன தாழ்ச்சி --- விளங்கும் முழுநிலவைப் பார்த்து ஒரு நாய் குரைப்பதனால் அந்த முழு நிலவுக்கு என்ன குறை உண்டாகும்?,

     (ஒன்றும் இல்லை. அதைப் போலவே),

     அந்தணரை --- மறையவர்களை,

     நல்லவரை --- நல்ல உள்ளம் கொண்டோரை,

     பரமசிவன் அடியவரை --- சிவபெருமானின் அடியவரை,

     அகந்தையால் ஓர் நிந்தனை சொன்னாலும் என்ன --- எள்ளத்தில் அகந்தை கொண்டு பழித்துக் கூறுவதால் என்ன?

     வைதாலும் என்ன -- இகழ்ந்தாலும் என்ன?

     அதில் நிடேதம் உண்டோ --- அவ்வாறு பழித்து இகழ்வதால் அவர்களுக்குப் பிறரால் விலக்கு உண்டாகுமோ? (இல்லை என்பதாம்).

          விளக்கம் --- ‘சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் போல' என்பதும் மலையைப் பார்த்து நாய் குரைத்தால் போல என்பதும் பழமொழிகள். சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது அதன் அறிவின்மையின் வெளிப்பாடு. அதனால் சந்திரனுக்கு ஒரு குறைவும் உண்டாவது இல்லை.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...