நல்ல நகரமே சொர்க்க பூமி




48. நல்ல நகர வாசம் - சொர்க்க வாசம்.

வாவிபல கூபமுடன் ஆறுஅருகு சேர்வதாய்,
     மலைகாத வழியில் உளதாய்,
  வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய், செந்நெல்
     வயல்கள் வாய்க் கால்கள் உளதாய்,

காவிகம லம்குவளை சேர்ஏரி உள்ள தாய்க்,
     கனவர்த்த கர்கள்ம றைவலோர்
  காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல
     காவலன் இருக்கை உளதாய்,

தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை
     சிறக்கவுள தாய்,சற் சனர்
  சேருமிடம் ஆகுமோர் ஊர் கிடைத்து, அதில் அதிக
     சீவனமுமே கிடைத்தால்

ஆவலொடு இருந்திடுவதே சொர்க்க வாசமென்று
     அறையலாம். அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

       இதன் பொருள் ---

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     பல வாவி கூபமுடன் அருகு ஆறு சேர்வதாய் --- பல குளங்களும் கிணறுகளும் இருந்து, அருகில் ஆறும் இருப்பதாய்,

     காத வழியில் மலை உளதாய் --- காதவழித் தொலைவில் மலையை உடையதாய்,

     வாழை கமுகொடு தெங்கு பயிர் ஆவதாய் --- வாழையும் கமுகும் தென்னையும் பயிராகும் வளத்தை உடையதாய்,

     செந்நெல் வயல்கள் வாய்க்கால்களும் உளதாய் --- நல்ல நெல் விளையும் வயல்களையும், வாய்க்கால்களும் உடையதாய்,

     காவி கமலம் குவளைசேர் ஏரி உள்ளதாய் --- நீலோற்கலமும், தாமரையும், குவளையும் மலர்கின்ற ஏரியை உடையதாய்,

     கன வர்த்தகர்கள் மறைவலோர் காண்அரிய பலகுடிகள் நிறைவு உள்ளதாய் --- பெரு வணிகரும், வேதத்தில் வல்ல அந்தணரும், மற்றும் காண்பதற்கு இனிய பலவகைக் குடிமக்களும் நிறைந்ததாய்,

     நல்ல காவலன் இருக்கை உளதாய் --- நல்ல அரசனுடைய அரண்மனை உடையதாய்,

     தேவர் ஆலயம் ஆடல்பாடல் அணிமாளிகை சிறக்க உளதாய் --- தேவாலயமும்,  ஆடலாலும் பாடலாலும் அழகு பொருந்தி விளங்கும் மாளிகைகள் சிறந்து உள்ளதாய்,

     சற்சனர் சேரும் இடம் ஆகும் ஓர் ஊர் கிடைத்து --- நல்லோர் உறையும் இடமும் உடைய ஒர் ஊர் கிடைக்கப் பெற்று,

     அதில் அதிக சீவனமும் கிடைத்தால் --- அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும் பொருந்திவிட்டால்,

     ஆவலோடு இருந்திடுவதே சொர்க்க வாசம் என்று அறியலாம் --- அந்த ஊரில் விரும்பி வாழ்ந்து இருப்பதே சொர்க்க வாழ்வு என்று சொல்லலாம்.

          விளக்கம் --- நீர் வளமும், நில வளமும் நிறைந்து இருப்பதும், இயற்கை எழில் விளங்குவதும் ஒரு ஊருக்கு இன்றியமையாத வளங்கள் ஆகும். வணிகமும் செழித்து இருப்பது பொருள் கொள்ளுதல், விற்றல் முதலியவற்றுக்கு வாய்ப்பாக அமையும். வேதியர்கள் வாழ்வதும், இறைவழிபாட்டுக்கு இன்றியமையாத திருக்கோயில் இருப்பதும், ஆடல், பாடல்களுடன் விழாக்களும் மேலும் பெரும் சிறப்பு.   நாட்டை ஆளுகின்ற அரசனின் தலைநகரமாகவும் இருந்து, நல்ல குடிமக்களும் வாழ்ந்து இருக்கும் ஊரானால், அதுவே துன்பம் ஏதும் இல்லாத இன்ப வாழ்க்கைக்கே உரியதான சொர்க்க பூமியைப் போன்றது ஆகும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...