சிதம்பரம் - 0657. மனமே உனக்கு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மனமே உனக்குறுதி (சிதம்பரம்)

மனமே! உனக்கு நான் நன்மையே சொல்வேன்.
முருகப் பெருமானே உனக்கு நன்மையைத் தருபவன்.
அவனைத் தொழுது ஈடேறுவாய்.


தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா

மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே

மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை யற்றசுக ...... மதிபாலன்

நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன்

நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே

இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி

எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா

முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மனமே! உனக்கு உறுதி புகல்வேன், னக்கு அருகில்
     வருவாய், ரைத்த மொழி ...... தவறாதே,

மயில் வாகனக் கடவுள், அடியார் தமக்கு அரசு,
     மனமாயை அற்ற சுக ...... மதிபாலன்,

நினைவு ஏது உனக்கு, அமரர் சிவலோகம் இட்டு, மல
     நிலைவேர் அறுக்க வல ...... பிரகாசன்,

நிதி கா நமக்கு, றுதி அவரே, பரப்பிரம
     நிழல் ஆளியைத் தொழுது ...... வருவாயே.

இனம் ஓது ஒருத்தி ருபி, நலம் ஏர் மறைக்கு அரிய
     இளையோள் ஒர் ஒப்பும்இலி, ...... நிருவாணி,

எனை ஈண் எடுத்த புகழ் கலியாணி பக்கம்உறை
     இதழ்வேணி அப்பன்உடை ...... குருநாதா!

முனவோர் துதித்து, மலர் மழைபோல் இறைத்து வர
     முதுசூரரைத் தலைகொள் ...... முருகோனே!

மொழிபாகு, முத்துநகை, மயிலாள் தனக்கு உருகு
     முருகா! தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.

பதவுரை

      மனமே உனக்கு உறுதி புகல்வேன் --- மனமே, உனக்கு நன்மை தரக்கூடியவகளைக் நான் சொல்லுவேன்,

      எனக்கு அருகில் வருவாய் --- எனது அருகில் வருவாயாக.

     உரைத்த மொழி தவறாதே --- நான் சொல்லும் வார்த்தைகளின்படி தவறாமல் நயப்பாயாக.

     நினைவு ஏது உனக்கு --- உனக்கு வருத்தம் எதற்கு?

      மயில் வாகனக் கடவுள் --- மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம்.

     அடியார் தமக்கு அரசு --- அடியவர்களுக்கெல்லாம் அரசர்.

      மனமாயை அற்ற சுக மதிபாலன் --- மனத்தில் மயக்கம்  இல்லாத சுகத்தைத் தரும் ஞானமே வடிவான இளம் குழந்தை.

     அமரர் சிவலோகம் இட்டு --- ஞான ஒளி துலங்கும் சிவலோகத்தை உனக்குத் தந்தருளி,

      மலநிலை வேர் அறுக்கவல பிரகாசன் --- நிலைத்துள்ள இருளாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை வேரோடு அறுக்கவல்ல சோதி உருவானவர்,

      நிதி கா நமக்கு (அவரே) --- நமக்கு சங்க நிதி, பதுமநிதி, கற்பகச் சோலை போன்றவர் அவரே.

     உறுதி அவரே --- அவரே நமக்கு உறுதியைத் தரவல்லவர்,

     பரப்பிரமம் (அவரே) --- அவரே முழுமுதற் கடவுள். அவரை,

      இனம் ஓது ஒருத்தி ருபி --- நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகு உள்ளவளும்,

      நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் --- நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும்,

      ஒர் ஒப்பும் இலி ---  தனக்கு ஒப்பு இல்லாதவளும்,

     நிருவாணி --- உடையற்ற திகம்பரியும்,

      எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை --- என்னை ஈன்றெடுத்தவளும், புகழ் பெற்ற மங்களம் பொருந்தியவளுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட

      இதழ் வேணி அப்பன் உடை குருநாதா --- கொன்றை மாலை சூடிய திருச்சடையை உடைய எமது தந்தையாகிய சிவபெருமானின் குருநாதரே (என்றும்)

      முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்து வர ---முன்னவர்களாகிய பிரமன், திருமால், அரன் ஆகிய மும்மூர்த்திகளும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர,

      முதுசூரரைத் தலைகொள் முருகோனே --- பழமை வாய்ந்த சூரபதுமன் முதலிய அரக்கர்களின் சிரங்களைக் கொய்து அறுத்த முருகப் பெருமானே (என்றும்)

      மொழி பாகு --- பாகு போன்ற மொழி உடைவள்.

     முத்து நகை --- முத்துப் போன்ற பற்களையும் உடையவள்.  

     மயிலாள் தனக்கு உருகு முருகா --- மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளியம்மைக்காக உள்ளம் உருகும் முருகப் பெருமானே (என்றும்)

      தமிழ்ப் புலியுர் பெருமாளே --- தமிழ் மணம் கமழும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே (என்றும்)
    
      நிழல் ஆளியைத் தொழுது வருவாயே --- அறவடிவு ஆகிய எம்பெருமானைத் தொழுது வழிபட்டு அவரே கதி என்று வருவாயாக.

பொழிப்புரை

      மனமே, உனக்கு நன்மை தரக்கூடியவகளைக் நான் சொல்லுவேன், எனது அருகில் வருவாயாக. எனது சொல்லின்படி தவறாமல் நயப்பாயாக.

     உனக்கு வருத்தம் எதற்கு?

      மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம்.

     அடியவர்களுக்கெல்லாம் அரசர்.

      மனத்தில் மயக்கம்  இல்லாத சுகத்தைத் தரும் ஞானமே வடிவான இளம் குழந்தை.

     ஞான ஒளி துலங்கும் சிவலோகத்தை உனக்குத் தந்தருளி, நிலைத்துள்ள இருளாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை வேரோடு அறுக்கவல்ல சோதி உருவானவர்,

      நமக்கு சங்க நிதி, பதுமநிதி, கற்பகச் சோலை போன்றவர் அவரே. அவரே நமக்கு உறுதியைத் தரவல்லவர், அவரே முழுமுதற் கடவுள். அவரை, நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகு உள்ளவளும், நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், தனக்கு ஒப்பு இல்லாதவளும், திகம்பரியும், என்னை ஈன்றெடுத்தவளும், புகழ் பெற்ற மங்களம் பொருந்தியவளுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட கொன்றைமாலை சூடிய திருச்சடையை உடைய எமது தந்தையாகிய சிவபெருமானின் குருநாதரே என்றும், முன்னவர்களாகிய பிரமன், திருமால், அரன் ஆகிய மும்மூர்த்திகளும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, பழமை வாய்ந்த சூரபதுமன் முதலிய அரக்கர்களின் சிரங்களைக் கொய்து அறுத்த முருகப் பெருமானே என்றும், பாகு போன்ற மொழி உடைவள். முத்துப் போன்ற பற்களையும் உடையவள். மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளியம்மைக்காக உள்ளம் உருகும் முருகப் பெருமானே என்றும், தமிழ் மணம் கமழும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே என்றும், அறவடிவு ஆகிய எம்பெருமானைத் தொழுது வழிபட்டு அவரே கதி என்று வருவாயாக.

விரிவுரை

இத் திருப்புகழில் நெஞ்சறிவுறுத்தலாக நமக்கு ஓர் உண்மையைத் தெளிவித்து உள்ளார் அடிகளார்.

உறுதி ---

உறுதி என்னும் சொல்லுக்கு திடம், வலிமை, நன்மை, இலாபம், மேன்மை, சன்மார்க்க உபதேசம், நல்லறிவு, பயன் என்றெல்லாம் பொருள் உண்டு. அத்தனைப் பொருளும் இங்கே பொருந்தும்.

உயிருக்கு திடத்தைத் தருவதும், வலிமையைத் தருவதும், நன்மையைத் தருவதும், நட்டத்தைத் தவிர்த்து இலாபத்தைத் தருவதும், கீழ்மையைத் தவிர்த்து மேன்மையைத் தருவதும், நன்னெறியாகிய திருநெறிக்கு உபதேசமாக அமைவதும், நல்லறிவைத் தரக்கூடியதும், பயனாக அமைவதும் நான்கு.  அவை புருஷார்த்தங்கள் எனப்படும். மனிதன் அடையவேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அவை. வடமொழியில் இவற்றை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பர்.

மனிதனாக வடிவெடுப்பது பெரிதுதான். அதைவிடவும் மனிதனாக வாழ்வதே பெரிது ஆகும். "புருஷர் வடிவானதே அன்றி, புருஷார்த்தம் ஏதும் இல்லேன்" என்றார் தாயுமானார். மனிதனை மனிதனாக ஆக்குவது இந்த உறுதிப்பொருள்களாகிய புருஷார்த்தங்களே ஆகும். அவையே, உயிருக்கு இம்மை, அம்மை நலன்களை அளிக்கவல்லவை. ஆக்கத்தை அளிக்கவல்லவை. "ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.

வேதங்களையும், அதன் ஆறு அங்கங்களையும் கற்றும், கேட்டும் வல்லவர்களாகிய நால்வருக்கு, எல்லாமாய் அல்லதுமாய், மறைக்கு அப்பாலாய், இருந்த பொருளை ஓதியதன் பயனாகவும், கேட்டதன் பயனாகவும் உணரமுடியவில்லை. எனவே, அவர்களுக்கு உண்டான சொல் மயக்கம் அது தீர, அங்கை கொடு மோனஞானம் அது உணர்த்தி, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அவர்களுக்கு அறிவுறுத்தி, கல்லால மரத்தின் நிழலில் சிவபெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி, சின்முத்திரையைக் காட்டினார்.

கல்லாலின் புடை அமர்ந்து, நான்மறை, ஆறு
     அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும், வாக்கு இறந்த
     பூரணமாய், மறைக்கு அப்பாலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த, தனை
     இருந்தபடி இருந்து காட்டி,
சொல்லாமல் சொன்னவரை, நினையாமல்
     நினைந்து, பவத் தொடக்கை வெல்வாம்.       --- திருவிளையாடல்புராணம்.

பன்முகச் சமய நெறி படைத்தவரும்,
     யாங்களே கடவுள் என்றிடும்
பாதகத்தவரும், வாத தர்க்கமிடு
         படிறரும் தலை வணங்கிட,
தன்முகத்தில் உயிர் வர அழைக்கும்எம
         தருமனும் பகடு மேய்க்கியாய்த்
தனி இருப்ப, வட நீழல் ஊடு வளர்
         சனகன் ஆதி முனிவோர்கள் தம்
சொல்மயக்கம் அது தீர, அங்கைகொடு
         மோன ஞானம் அது உணர்த்தியே,
சுத்த நித்த அருள் இயல்பதாக உள
         சோம சேகர கிர்பாளுவாய்,
தென்முகத்தின் முகமாய் இருந்தகொலு
         எம்முகத்தினும் வணங்குவேன்,
தெரிவதற்கு அரிய பிரமமே! அமல!
         சிற்சுக உதய விலாசமே.                 --- தாயுமானார்.

அணிபெறு வடமர நிழலினில்
         அமர்வொடும் அடியிணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும்
         அருளிய பரன் உறைவிடம், ஒளி
மணிபொரு வருமர கதநில
         மலிபுனல் அணைதரு வயல்அணி
திணிபொழில் தருமணம் அதுநுகர்
         அறுபத முரல்திரு மிழலையே.      --- திருஞானசம்பந்தர்.

நூல் அடைந்த கொள்கையாலே நுன்அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்அறத்தை
ஆல்அடைந்த நீழல்மேவி அருமறை சொன்னது என்னே?
சேல் அடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.   --- திருஞானசம்பந்தர்.

சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா, நல் இதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தான்நினைந்து, ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண்ஆதி மேயது முதுகுன்றே. --- திருஞானசம்பந்தர்.

தாதுஆர் கொன்றை தயங்குமுடியர், முயங்கும் மடவாளைப்
போதுஆர் பாகம் ஆகவைத்த புனிதர், பனிமல்கும்
மூதார், உலகின் முனிவர் உடனாய்  அறம்நான்கு அருள்செய்த
காதுஆர் குழையர், வேதத் திரளர், கயிலை மலையாரே.   --- திருஞானசம்பந்தர்.

அறம்கிளரும் நால்வேதம் ஆலின்கீழ்
         இருந்துஅருளி அமரர்வேண்ட
நிறம்கிளர்செந் தாமரையோன் சிரம்ஐந்தின்
         ஒன்றுஅறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டுஅங்கு
         எழில்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்துமணி செலவிலக்கி
     முத்துஉலைப்பெய் முதுகுன்றமே.    --- திருஞானசம்பந்தர்.


உரித்தானை மதவேழம் தன்னை மின்னார்
         ஒளிமுடிஎம் பெருமானை உமைஓர் பாகம்
தரித்தானைத் தரியலர்தம் புரம்எய் தானைத்
         தன்அடைந்தார் தம்வினைநோய் பாவம் எல்லாம்
அரித்தானை ஆல் அதன்கீழ் இருந்து நால்வர்க்கு
         அறம்பொருள்வீடு இன்பம் ஆறுஅங்கம் வேதம்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து உளானைச்
         சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.         --- அப்பர்.


அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து அவருக்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பு ஏடீ,
அருந்தவருக்கு அறம்முதல்நான்கு அன்று அருளிச்செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ.   --- திருவாசகம்.

மனமாயை அற்ற சுக மதிபாலன் ---

நம்முடைய மனம் மாயையால் அறிவு கலங்கி இருக்கும். இறைவன் மாயைக்கு அப்பாற்பட்டவன். அவனுக்கு மாயை இல்லை. அறிவு மயங்கவில்லையானால் சுகம் இருக்கும்.  அறிவு மயங்கினால் துன்பம் இருக்கும்.

பாலன் என்பதற்கு குழந்தை என்றும் பொருள் கொள்ளலாம்.
பாலனம் - காப்பு. பாலன் - காப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். உயிர்களைக் காப்பவன் முருகப் பெருமான்.

அமரர் சிவலோகம் இட்டு, மலநிலை வேர் அறுக்கவல பிரகாசன் ---

அமரர் என்பது ஒளியைக் குறிக்கும். "அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்" என்றார் நாயனார். இருள் என்பது துன்பத்தைத் தரும் நரகம் என்று கொண்டால்,  "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்பதற்கு, ஒளி உலகமாகிய சிவலோகத்தில் சேர்க்கும் என்று பொருள் கொள்வதில் தவறில்லை.

மலம், மூலமலமாகிய ஆணவமலத்தையும், ஆகந்துக மலங்களாகிய மாயை கன்மம் இரண்டையும் குறிக்கும். இவை என்றும் நீங்காமல் உயிரோடு நிலைத்து, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருபவை. இந்த மும்மலங்களும் ஆன்மாவைத் துன்பத்தில் ஆழ்த்துவதால், இருள்மலம் என்றனர் பெரியோர். இருளை ஒளியால் ஓட்டலாம். இருள் மலத்தை அருள் ஒளியால் ஓட்டலாம். அருள் வடிவானவன் முருகப் பெருமான். எனவே, மலத்தை அறுக்கவல்ல முருகப் பெருமானைப் "பிரகாசன்" என்பது சாலப் பொருத்தம் உடையதே. "இருநோய் மலத்தை சிவஒளியால் மிரட்டி" என்றார் பிறிதொரு திருப்புகழில்.


நிதி அவரே ---

சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டையும் குறித்தார். சங்கு வடிவில் குவித்து வைக்கப்பட்ட நிதியைச் சங்கநிதி என்றும், தாமரை வடிவில் குவித்து வைக்கப்பட்ட நிதியைப் பதுமநிதி என்றும் சொல்லுவர். இது குபேரனிடத்தில் உள்ளதாகவும், குபேரன் சிவபெருமானுக்குத் தோழர் என்றும் சொல்லப்படும்.

இரண்டு நிதிகளுக்கும் உரியவர் சிவபெருமானே. சிவபெருமானுக்கு அத்தியந்தமாக உள்ளவரிடத்தல் இந்த இரண்டு செல்வங்களும் நிலைத்து இருக்கும். இதுவே உண்மை. சிவனடியார்களைத் திருமகளானவள் பிரியாது இருப்பாள் என்பதை,

செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்
வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.

என்னும் அப்பர் தேவாரப் பாடலே சான்று.

இனி, நிதி அல்லது செல்வம் என்பது, அருட்செல்வத்தையே குறிக்கும் என்பதாகவும் கொள்ளுதல் சாலப் பொருத்தம் உடையதே. "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் திருவள்ளுவ நாயனார். பொருளாகிய செல்வம் கீழ்மக்களிடமும் உள்ளதாலும், அது அழியக் கூடியது என்பதாலும், அதனைச் செல்வமாக அறிவுடையார் கொள்ளார். எனவே, "அருளாகிய செல்வமே அனைத்திலும் சிறந்த செல்வமாகும்" என்றார் நாயனார்.

அடியார் உறவும், அரன்பூசை நேசமும், அன்பும் அன்றி
படிமீதில் வேறு பயன் உளதோ? பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும், தாரமும், வாழுவும், குயக்கலங்கள்
தடியால் அடி உண்டவாறு ஒக்கும் என்று இனம் சார்ந்திலரே.

என்றார் பட்டினத்து அடிகள்.

அடியார் உறவை முதலில் வைத்து, பின்னர் அரன் நேசத்தை வைத்தார். இரண்டுமே உயிரை உய்விப்பன. மனிதனாகப் பிறந்த ஒருவன் கட்டாயமாக அடைய வேண்டியவை அடியார் உறவும், அரன்பூசை நேசமுமே ஆகும்.

சங்கம் என்பது கூட்டத்தைக் குறிக்கும். கூட்டம் என்றாலே அடியார் திருக்கூட்டத்தையே குறிக்கும். சங்கநிதி என்பது அடியார் திருக்கூட்டத்தில் இருந்து அருளைப் பெறுகின்ற நிலை.

பதுமம் - தாமரை. இறைவனுடைய திருவடியைத் தாமரை என்பர். பதுமநிதி என்பது இறைவன் திருவடிச் செல்வத்தைக் குறிக்கும்.

சங்கநிதி இல்லாமல் பதுமநிதியை அடைய முடியாது. எனவே, இரண்டுமே சேர்த்துக் குறிக்கப்பட்டது.

திருமங்கை என்று திருமுறைகளில் குறித்தது பொருட்செல்வத்தைத் தரும் இலக்குமியை அல்ல. பரமானந்த ஆவேசமாகிய மகாமோட்சலட்சுமியை அது குறிக்கும். சிவன் திருக்கோயில்களிலும் சிவபூசையிலும் மகாலட்சுமி என வழிபடப் பெறுவதும் இந்தச் சிவமே பெறும் திருவே ஆகும்.

"நிதியே, நித்தியமே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எனவே, உயிர்களுக்கு சங்கநிதி பதுமநிதி இரண்டையும் அருள்பவர் முருகப் பெருமான்தான் என்கின்றார் அடிகளார்.

கா அவரே ---

கா என்பது இங்கே கற்பகச் சோலையைக் குறித்தது. கற்பகமரம் என்பது அமரலோகத்தில் (ஒளி உலகத்தில்) உள்ளது. இருள்மலம் நீங்கிய உயிர்களுக்கு, இன்பமாகிய ஒளியைத் தருவது.  எல்லா இனபத்தையும் தருவது. அழியாத இன்பத்தைத் தருவது. இகபர சௌபாக்கியம் இம்மை மறுமை நலன்களை அருள வல்லது.

வெயில் வெம்மையைப் போக்க சோலை நிழல் உதவும். உயிர்த் துன்பத்தைப் போக்க இறைவன் திருவடி நிழல் உதவும்.

"சுழல்ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது, அடித் தொண்டர் துன்னும்
நிழல் ஆவன, என்றும் நீங்காப் பிறவி  நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ, கால வனம்கடந்த
அழல்ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே".


"மாசுஇல் வீணையும், மாலை மதியமும்,
வீசுதென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"

என்றார் அப்பர் பெருமான்.

கற்பகப் பொழிலைப் போன்றவன் இறைவன் என்பதை,

"அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே?
     அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்
     தொண்டருக்கு எண்திசைக் கனகம்,
பற்பதக் குவையும், பைம்பொன் மாளிகையும்,
     பவளவாயவர் பணைமுலையும்,
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
     கொண்ட சோளேச் சரத்தானே"

என்னும் கருவூர்த் தேவரின் திருவிசைப்பாவால் அறியலாம்.

உறுதி அவரே ---

மேலே சொல்லப்பட்ட உறுதிகளை உயிர்களுக்குத் தருபவன் இறைவனே என்றார்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே ---

நிழல் - குளிர்ச்சி, அருள், ஒளி, நீதி, புகலிடம், கொடை, செல்வம் என்னும் பொருள்களை உடையது.

உயிர்களுக்குப் பிறவி வெப்பத்தைத் தணிப்பவன் இறைவன் என்பதால் நிழல் ஆளி என்றார். உயிர்களுக்கு அருளை வாரி வழங்குபவன் இறைவன் என்பதால் நிழல் ஆளி என்றார். உயிர்களை இருளான துன்ப மருள் மாயையில் இருந்து விடுவித்து, அருள்வெளிக்கு ஏற்றுவதால் நிழல் ஆளி என்றார். உயிர்களுக்குப் புகலிடமாக உள்ளவன் இறைவன் என்பதால் நிழல் ஆளி என்றார்.


முனவோர் துதித்து,மலர் மழைபோல் இறைத்து வர ---

முருகப் பெருமானை மும்மூர்த்திகளும் மலர் மழை சொரிந்து துதிப்பதாக அருள்கின்றார் அடிகளார். திருத்தணிகை என்னும் திருத்தலத்தில் பிரமன், திருமால், அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகவேளை வழிபட்டார்கள்.

திருத்தணிகையில் சிவபெருமான் முருகரைத் தியானித்து உபதேசம் பெற்றனர். அந்த “வீராட்டகாசர்” ஆலயம் தணிகைக்கு அருகில் ஓடும் நந்தியாற்றுக்கு வடகரையில் உள்ளது. உபதேசித்த சாமிநாதர் ஆலயம் நந்தியின் தென்கரையில் உள்ளது.

திருமால் முருகரை வழபட்டுத் தாரகாசுரனால் கவரப்பட்ட சக்கராயுதத்தையும் சங்கையும் பெற்றார். விஷ்ணு தீர்த்தம் திருக்கோயிலுக்கு மேற்கே, அர்ச்சகர்களின் வீடுகளின் எதிரில் உளது.

பிரமதேவர் முருகரை வழிபட்டு சிருட்டித் தொழிலின் வன்மையைப் பெற்றனர். மலைமீது ஏறப்போகும் வழியில் பாதி தொலைவில், பிரம சுனையும் பிரமேசர் ஆலயமும் உள்ளன. இவ்வண்ணம் மூவரும் வழிபட்டதை இப்பாடலில் அருணகிரிநாத சுவாமிகள் குறிப்பிட்டனர்.

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
     திருமகள் நாயன்    தொழும்வேலா.        --- (கலைமடவார்) திருப்புகழ்.


கருத்துரை

மனமே, முருகப் பெருமானே உனக்கு நன்மையைத் தருபவன். அவனைத் தொழுது ஈடேறுவாய்.








No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...