சிதம்பரம் - 0636. தறுகணன் மறலி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தறுகணன் மறலி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
காலன் கைப்படிந்து மடியும் முன்னர்
மெய்ப்பொருளை அறிந்து உள்ளம் அமைதி பெற அருள்


தனதன தனன தனதன தனன
     தனதன தனனாத் ...... தனதான


தறுகணன் மறலி முறுகிய கயிறு
     தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதி
     தலைகொடு பலசாத் ...... திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவி
     யலைபடு தலைமூச் ...... சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளை
     அலம்வர அடியேற் ...... கருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருக
     நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்
     நடமிடு புலியூர்க் ...... குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு
     கடலிடை பொடியாப் ...... பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவு
     கனவிலு மறியாப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தறுகணன் மறலி முறுகிய கயிறு
     தலைகொடு விசிறீக் ...... கொடுபோகும்

சளம் அது தவிர, அளவிடு சுருதி
     தலைகொடு பலசாத் ...... திரம் ஓதி,

அறுவகை சமயம் முறைமுறை சருவி
     அலைபடு தலை மூச் ...... சினை ஆகும்,

அருவரு ஒழிய, வடிவுஉள பொருளை
     அலம்வர அடியேற்க் ...... அருள்வாயே.

நறுமலர் இறைவி, அரிதிரு மருக,
     நகம் உதவிய பார்ப் ...... பதி வாழ்வே!

நதிமதி இதழி பணி அணி கடவுள்
     நடம்இடு புலியூர்க் ...... குமரேசா!

கறுவிய நிருதர் எறிதிரை பரவு
     கடல்இடை பொடியாப் ...... பொருதோனே!

கழல்இணை பணியும் அவருடன் முனிவு
     கனவிலும் அறியாப் ...... பெருமாளே.

  
பதவுரை

         நறுமலர் இறைவி அரி திருமருக --- மணமுள்ள தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் திருமாலுக்கும் திருமருகரே!

         நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே --- இமயமலை பெற்ற பார்வதிதேவியின் செல்வமே!

         நதி மதி இதழி பணி அணி கடவுள் நடம்இடு புலியூர்க் குமர ஈசா --- கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவர் நடனமாடும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே!

         கறுவிய நிருதர் --- கோபத்தோடு வந்த அசுரர்களை,

         எறிதிரை பரவு கடல் இடை --- வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில்

        பொடியாப் பொருதோனே --- தூளாகுமாறு போர் புரிந்தவரே!

         கழல் இணை பணியும் அவருடன் முனிவு --- வீரக் கழல்களை அணிந்த தேவரீரது திருவடி இணையைப் பணிபவரிடம் கோபம் கொள்வதை

         கனவிலும் அறியாப் பெருமாளே --- ஒருபோதும் அறியாத பெருமையில் மிக்கவரே!

         தறுகணன் மறலி முறுகிய கயிறு --- இரக்கமற்ற காலன் திண்ணிய பாசக்கயிற்றை

         தலைகொடு விசிறி --- அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து

         கொடு போகும் சளம் அது தவிர --- அடியேனது உயிரைக் கொண்டுபோகும் துன்பம் நேராமல் தவிர்க்க,

         அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி --- நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலான பல சாத்திரங்களையும் ஓதியும்,

         அறுவகை சமயம் முறைமுறை சருவி --- ஆறு சமயங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு

         அலைபடு தலை மூச்சினை ஆகும் --- அறிவு தெளியாமல் வேதனைப்பட்டு,

         அருவரு ஒழிய --- வெறுப்பினை உண்டுபண்ணும் செயல்கள் ஒழிந்து,

         வடிவு உள பொருளை அலம் வர அடியேற்கு அருள்வாயே --- பேரின்ப வடிவான மேலான பொருளை உள்ளம் அமைதி பெற அறியும்படி அடியேனுக்கு அருள்செய்ய வேண்டும்.


பொழிப்புரை


      மணமுள்ள தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் திருமாலுக்கும் திருமருகரே!

      இமயமலை பெற்ற பார்வதிதேவியின் செல்வமே!

     கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவர் நடனமாடும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி இருக்கும் குமரேசரே!

         கோபத்தோடு வந்த அசுரர்களை, வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில் தூளாக்கிப் போர் புரிந்தவரே!

     வீரக் கழல்களை அணிந்த தேவரீரது திருவடி இணையைப் பணிபவரிடம் கோபம் கொள்வதை ஒருபோதும் அறியாத பெருமையில் மிக்கவரே!

         இரக்கமற்ற காலன் திண்ணிய பாசக்கயிற்றை அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து, அடியேனது உயிரைக் கொண்டுபோகும் துன்பம் நேராமல் தவிர்க்க, நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலான பல சாத்திரங்களையும் ஓதியும், ஆறு சமயங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு, அறிவு தெளியாமல் வேதனைப்பட்டு, வெறுப்பினை உண்டுபண்ணும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவான மேலான பொருளை உள்ளம் அமைதி பெற அறியும்படி அடியேனுக்கு அருள்செய்ய வேண்டும்.

விரிவுரை

தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறி, கொடுபோகும் சளம் அது தவிர ---

தறுகண்ணன் என்னும் சொல் தறுகணன் என வந்தது.

தறுகண்மை - கொடுமை, வீரம், அஞ்சாமை.

மறலி - இயமன்.

கொடுமையும் அஞ்சாமையும் உடைய இயமன்.

வாழ்நாள் அறுகின்ற நாள் வரும்போது இயமன் வந்து, தனது கையில் உள்ள கயிற்றினை அதன் நுனியைப் பிடித்துக் கொண்டு உயிரின் மேல் விடுவான். உடம்பிலிருந்து உயிரைப்பிரித்துக் கொண்டு போவான்.  அந்த நிலை மிகவும் கொடுமையானது. மிகவும் துன்பத்தைத் தருவது. அது தவிரவேண்டும் என்கின்றார் அடிகள்.

சளம் - துன்பம், வஞ்சனை, மூர்க்கம்.

தீவினையைச் செய்த பாவிகளை இயமதூதர்கள் வடவா முகாக்கினிபோல் கொதித்துப் பாசக்கயிற்றால் இறுக்கிக் கட்டிக் கொண்டு, தமது இயமபுரம் கொண்டுபோய்த் துன்புறுத்துவார்கள்.

புண்ணியஞ் செய்தவர்களை இயம தூதுவர்கள் உபசரித்து, சுகமான வழியில் கொண்டு போவார்கள்.

யமலோகத்திற்கும் மனிதலோகத்திற்கும் இடையிலுள்ள வழி, எண்பத்தாறாயிரம் யோசனைத் தூரமாகும். அவ்வழியானது காடாகவும், கோரமாகவும், நாற்புறங்களிலும் தண்ணீரில்லாத வெளியாகவும் இருக்கிறது. அந்த வழியில் மரங்களின் நிழல் கிடையாது; தண்ணீருமில்லை; களைப்படைந்தவனும் இளைத்தவனுமான மனிதன் இளைப்பாறத்தக்க வீடுகளுமில்லை. யமனுடைய கட்டளையைச் செய்கின்ற யமதூதர்களால் ஆடவரும், மகளிரும் அப்படியே பூமியிலுள்ள மற்றவைகளும் அந்தவழியில் பலாத்காரமாகக் கொண்டுபோகப் படுகிறார்கள்.

எந்த மனிதர்கள் ஏழைகளுக்கு வண்டி, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுத்து உதவிசெய்கின்றார்களோ அவர்கள் அந்த வாகனங்களின்மேல் அந்த வழியில் துன்பமில்லாமல் செல்லுகிறார்கள்.

குடையைத் தானம் செய்தவர்கள் குடையினாலே வெய்யிலைத் தடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.

அன்னதானம் செய்தவர்கள் அந்த வழியில் அன்னத்தைப் புசித்துக் கொண்டு பசியின்றிச் செல்லுகிறார்கள்.

வஸ்திரங்களைக் கொடுத்தவர்கள் வஸ்திரமுள்ளவர்களாகவும், வஸ்திரம் கொடாதவர்கள் நிர்வாணராகவும் செல்லுகிறார்கள்.

பொன்னைக் கொடுத்தவர்கள் அலங்கரிக்கப் பட்டவர்களாக சுகமாகச் செல்லுகிறார்கள்.

பூதானம் செய்தவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அடைந்து இன்புற்று இனிது செல்லுகிறார்கள்.

தானியங்களைக் கொடுக்கிற மனிதர்கள் துன்பமின்றிச் செல்லுகிறார்கள்.

வீட்டைத் தானம் செய்கிற மனிதர்கள் விமானங்களில் மிக்க சுகமாகச் செல்லுகிறார்கள்;

தண்ணீரைத் தானம் செய்தவர்கள் தாகமில்லாதவர்களாயும் மிக மகிழ்ந்த மனமுள்ளவர்களாகவும் செல்லுகிறார்கள்;

விளக்கு தானம் செய்தவர்கள் பிரகாசமுள்ள வழியில் பிரகாசமுள்ள உருவத்துடன் செல்லுகிறார்கள்.

கோதானம் செய்தவர்கள் எல்லா பாவங்களாலும் விடுபட்டுச் சுகமாகச் செல்லுகிறார்கள்.

ஒரு மாதம் உபவாசம் இருப்பவர்கள் அன்னங் கட்டிய விமானத்தின் மீது செல்லுகிறார்கள்.

ஆறு நாளுக்கு ஒருதரம் உபவாசமிருப்பவர்கள் மயில்கள் பூட்டின விமானங்களின் மேல் செல்லுவார்கள்.

எந்த மனிதன் ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு மூன்று இரவுகளைக் கழிக்கிறானோ? இடைவேளைகளில் சாப்பிடுகிறதில்லையோ அவனுக்கு அழிவற்ற லோகங்கள் கிடைக்கின்றன.

தண்ணீர்ப் பந்தல் வைத்து கோடைக் காலத்தில் தாகத்தால் வாடும் மக்களுக்குத் தண்ணீரும் மோரும் கொடுத்து உதவிய உத்தமர்களுக்கு அந்த யமலோகத்தில் புஷ்போதகை என்ற நதியை உண்டாக்கிக் கொடுப்பார்கள். அந்த நதியில் அவர்கள் அமிருதம் போன்ற குளிர்ந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டு சுகமாய் இருப்பார்கள்.

எவர்கள் தீவினைகளைச் செய்தவர்களோ அவர்களுக்கு அந்த நதியில் சீயானது குடிப்பதற்கு ஏற்படுத்தப் படுகிறது.

மாமிசங்களைத் தின்றவர்கள் யமலோகத்தில் தமது மாமிசத்தைத் தானே யுண்டு தங்களுடம்பில் வடியும் உதிரத்தைக் குடித்துக்கொண்டுத் தீவாய் நகரத்தில் மல்லாக்கப் படுத்த வண்ணமாக பெருந்துன்பத்தை யனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

இவற்றை யெல்லாம் உணர்ந்து நாம் நல்வழிப்படுமாறு நமது பரம குருமூர்த்தியாகிய அருணகிரிநாத சுவாமிகள் நம் மீதுள்ள பெருங் கருணையால் உபதேசிக்குமாறு காண்க.

கிழியும் படிஅடற் குன்றுஎறிந் தோன்கவி கேட்டு,ருகி
இழியுமு கவி கற்றிடாது ருப்பீர், ரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.       --- கந்தர்அலங்காரம்.

எமன் வருவது இன்றைக்கா, நாளைக்கா என்று அலட்சியமாக இராதீர்கள். அவன் உங்கள் பின்னாலேயே இருக்கின்றான். (எப்போதாகிலும் வருவான். வந்தால் விடமாட்டான்.) அது உங்களளுக்குத் தெரியாது. எனவே, தீய செயல்களை விட்டு, மேலோர் சொன்ன அறத்தை இயன்ற வரையில் செய்து வாருங்கள்.                                           

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் ---  என்றுஎண்ணி
ஒருவுமின் தீயவை, ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.         --- நாலடியார்.

நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை,
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்,
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்,

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்,
எழுபதும்போகநீக்கி இருப்பதுமுப்பதே
                           (அவற்றுள்)
இன்புறுநாளும் சிலவே, அதாஅன்று
துன்புருநாளும் சிலவே, ஆதலால்
பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்குஆற்று

இடிகரை ஒத்தது இளமை,
இடிகரை வாழ்மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந்நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
           
இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில், நாளை
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான், பொருள் தரப் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குரவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,

தரியான் ஒருகணம், தறுகணாளன்,
உயிர் கொடு போவான், உடல் கொடு போகான்,
ஏதுக்கு அழுவீர், ஏழை மாந்தர்காள்!
உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர்ஆகில்,

உயிரினை அன்றும் காணீர், இன்றும் காணீர்,
உடலினை அன்றும் கண்டீர், இன்றும் கண்டீர்,
உயிரினை இழந்த உடல் அது தன்னைக்
களவு கொண்ட கள்வனைப்போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்து,

கூறை களைந்து, கோவணம் கொளுவி,
ஈமத் தீயை எரி எழ மூட்டி,
பொடிபடச் சுட்டு, புனல் இடை மூழ்கிப்
போய், தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப்படுமோ? சதுர் எனப்படுமோ?   ---  கபிலர் அகவல்.

இந்த யம பயம் தீரவேண்டுமானால், வள்ளல் பெருமான் அறிவுறுத்துவதைக் கேட்டு அதன் வழி நிற்கவேண்டும்.

.....       ......      .....       .....  நாழிகைமுன்

நின்றார், இருந்தார், நிலைகுலைய வீழ்ந்து, யிர்தான்
சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே, - பின்றாது

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம!உயிர்
விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே, - தட்டாமல்

உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே, - வண்தாரார்

நேற்று மணம் புரிந்தார் நீறானார் இன்று என்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே, - வீற்றுறுதேர்

ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே, - சேர்ந்தாங்கு

என்னே இருந்தார் இருமினார் ஈண்ணு இறந்தார்
அன்னே! எனக்கேட்டும் ஆய்ந்திலையே, - கொன்னே

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்து உதிரக் கண்டாய் - கரு ஒன்

றொடு திங்கள் ஐயைந்தில், ஒவ்வொன்றில், அந்தோ
கெடுகின்றது என்றதுவும் கேட்டாய், - படும் இந்

நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய், - பலன்உற்றே

காவென்று வீழ்ந்து, க் கணமே பிணமாக,
கோ என்று அழுவார் குறித்திலையோ, - நோவு இன்றிப்

பாலன் என்றே அன்னைமுலைப் பால்அருந்தும் காலையிலே
காலன் உயிர் குடிக்கக் கண்டிலையோ, - மேல்உவந்து

பெற்றார் மகிழ்வு எய்தப் பேசிவிளை யாடுங்கால்
அற்று ஆவி போவது அறிந்திலையோ, - கற்று ஆயப்

பள்ளி இடுங்கால், வனைப் பார நமன்வாயில்
அள்ளிஇடும் தீமை அறிந்திலையோ, - பள்ளிவிடும்

காளைப் பருவம் அதில் கண்டார் இரங்கிட,அவ்
ஆளைச் சமன்கொள்வது ஆய்ந்திலையோ, - வேளைமண

மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்று, வனே
சாப்பிள்ளை ஆதல்எண்ணிச் சார்ந்திலையே, - மேற்பிள்ளை

மாடை ஏர்ப் பெண்டு உடன் இல் வாழுங்கால், பற்பலர்தாம்
பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ, - வீடல் இஃது

இக்கணமோ, மேல் வந்திடும் கணமோ, அன்றி, மற்றை
எக்கணமோ என்றார், நீ எண்ணிலையே - தொக்கு உறுதோல்

கூடு என்கோ இவ்வுடம்பை, கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
ஏடு என்கோ, நீர்மேல் எழுத்து என்கோ, - காடு என்கோ,

பாழ்என்கோ, ஒன்பதுவாய்ப் பாவை என்கோ, வன்பிறவி
ஏழ் என்கோ, கன்மம் அதற்கு ஈடு என்கோ, - தாழ்மண்ணின்

பாண்டம் என்கோ, வெஞ்சரக்குப் பை என்கோ, பாழ்ங்கரும
காண்டம் என்கோ, ஆணவத்தின் கட்டு என்கோ, -கோண்தகையார்

மெய் என்கோ, மாய விளைவு என்கோ, மின் என்கோ,
பொய் என்கோ, மாயப் பொடி என்கோ, - மெய்யென்ற

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர்,
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே - தங்கு உலகில்

மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை, நீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே, - அற்றவரை

இக்கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு எனக்கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே, - இக்கட்டு

மண்பட்டு, வெந்தீ மரம் பட்டிடக் கண்டும்
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே, - பண்பட்ட

ஐயா அரைநாண் அவிழும் எனக் கேட்டு நின்றும்
மெய் ஆபரணத்தின் மேவினையே, - எய்யாமல்

காதில் கடுக்கன் கழற்றும் எனக் கேட்டு நின்றும்
ஏதுஇல் பணியினிடத்து எய்தினையே, - தாதிற்குத்

துற் கந்தமாகச் சுடுங்கால் முகர்ந்து இருந்தும்
நற் கந்தத்தின்பால் நடந்தனையே, - புற்கென்ற

வன்சுவைத்தீ  நாற்ற மலமாய் வரல் கண்டும்,
இன்சுவைப்பால் எய்தி இருந்தனையே, - முன்சுவைத்துப்

பாறு உண்ட காட்டில் பலர் வெந்திடக் கண்டும்
சோறு உண்டு இருக்கத் துணிந்தனையே, - மாறுண்டு

கூம்பு உலகம் பொய் எனநான் கூவுகின்றேன், கேட்டு,மிகு
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே, - ஆம்பலனோர்

நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல்வாழ்வை மெய் என்று இருந்தனையே, - சொல்,ஆவி

ஈன்றோன் தனை நாளும் எண்ணாமல், இவ்வுடம்பை
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே, - ஈன்றோர்கள்

நொந்தால் உடன் நின்று நோவார், வினைப்பகை தான்
வந்தால், அதுநீக்க வல்லாரோ, - வந்து ஆடல்

உற்ற சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார், தென் திசைவாழ்
மற்றவன் வந்தால் தடுக்க வல்லாரோ, - சிற்றுணவை

ஈங்கு என்றால் வாங்கி இடுவார், அருள்அமுதம்
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ, - தீங்கு அகற்றத்

தூண்டா மனை ஆதிச் சுற்றம் எலாம் சுற்றியிட
நீண்டாய், அவர் நன்னெறித் துணையோ, - மாண்டார்பின்

கூடி அழத் துணையாய்க் கூடுவார், வன் நரகில்
வாடி அழும் போது வருவாரோ, - நீடிய நீ

இச்சீவர் தன்துணையோ, ஈங்கு இவர்கள் நின்துணையோ,
சீச்சீ இது என்ன திறம் கண்டாய், - இச்சீவர்

நின்னை வைத்து முன் சென்றால், நீ செய்வது என், அவர் முன்
இந்நிலத்தில் நீ சென்றால் என் செய்வர், - நின் இயல்பின்

எத்தனை தாய், எத்தனை பேர், எத்தனை ஊர், எத்தனை வாழ்வு,
எத்தனையோ தேகம் எடுத்தனையே, - அத்தனைக்கும்

அவ்வவ் இடங்கள் தொறும் அவ் அவரை ஆண்டு ஆண்டு இங்கு
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ.....

காலனார் நெங்கொடும் தூதர்பாசம் கொடுஎன்
காலினார் தந்துஉடன்      கொடுபோகக்
காதலார் மைந்தரும் தாயராரும் சுடும்
கானமே பின்தொடர்ந்து    அலறாமுன்...      ---  திருப்புகழ்.

நின்அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.     ---  திருஞானசம்பந்தர்.

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
    அவனைக் காப்பது காரண மாக,
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
    வவ்வினாய்க்கு, ன்தன் வன்மை கண்டு, டியேன்,
எந்தை! நீ எனை நமன்தமர் நலியில்,
    "இவன் மற்று என் அடியான்" என விலக்கும்
சிந்தையால் வந்து, ன் திருவடி அடைந்தேன்
    செழும் பொழில் திருப்புன்கூர் உளானே.        --- சுந்தரர்.

அந்தகனும் எனைஅடர்ந்து வருகையினில்
     அஞ்சல் எனவலிய         மயில்மேல் நீ
அந்த மறலியொடு "உகந்த மனிதன், நமது
     அன்பன்" எனமொழிய      வருவாயே....            ---  (தந்தபசி) திருப்புகழ்.

.....       .....       .....       .....       சமனாரும்
பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது, எனைப்
     பரிகரித்து ஆவியைத் ......       தரவேணும்.      --- (கயல்விழித்) திருப்புகழ்.


அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி ---

இந்தப் பிறவித் துயரம் தீரும் வழிவகையை அளவில்லாத வேதங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. அவற்றை ஓதித் தெளிதல் வேண்டும். தெளிவு என்பது குருவின் மூலமாகத் தான் வாய்க்கும்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.     --- திருமந்திரம்.
  
ஆன்மாவின் கட்டு நிலையானது, வேதங்களையும், அருள் நூல்களையும் ஐயம் திரிபு அற ஒதி வர வர, கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் பருவத்தினைஅறிந்து, சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான். அப்பேறு வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தி இல்லதோர் குற்றமாகும். ஆதலின், அக்குற்றத்திற்கு ஆளாகாது என்றும் அக் குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.

ஞானகுருவின் திருவுருவைச் சிவனது அருள் திருமேனியாகவே காணுவதும், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுவதும், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருள் ஆணையாகப் போற்றிக் கேட்பதும், அவரது திருவுருவை உள்ளத்துள் தியானித்தல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

அறுவகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை மூச்சினை ஆகும் 
அருவரு ஒழிய ---

சருவுதல் - தொந்தரவு செய்தல், போராடுதல், நழுவுதல்.

தலைமூர்ச்சனை என்னும் சொல், உலக வழக்கில் தலைமூச்சினை எனப்படும். இந்தச் சொல்லுக்கு வருத்தம் என்று பொருள்.

அருவல் - துன்பம். அருவருப்பு - மிகுந்த வெறுப்பு.

ஆறு சமயங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு, அறிவு தெளியாமல் வேதனைப்பட்டு, வெறுப்பினை உண்டுபண்ணும் செயல்கள் ஒழியவேண்டும் என்கின்றார அடிகள்.

ஆன்மாவுக்கு இயல்பாகவே ஆணவம் என்னும் மலம் உள்ளது. இது மூலமலம் எனப்படும். ஆணவம் அறிவை மறைக்கும். மேலும், ஆன்மாவானது அறிவு உடைய பொருள். அது சிற்றறிவு. முற்று அறிவு அல்ல. எனவே, அறிவித்தால் அறிந்து கொள்ளும்.  அறிந்து கொண்ட வரையில் நான் அறிந்தேன் என்று அகம்பாவம் கொள்ளும். தான் கண்டதே உண்மை என்று சாதிக்கும்.

சாத்திரங்கள் மெய்யுணர்வு பெறும் வழியைக் காட்டும். சாத்திரங்களை ஓதுதவதாலேயே மெய்யுணர்வு பெற முடியாது. அவற்றை ஓதி, உணர்ந்து தெளிவது நூல் அறிவு. அவை காட்டிய வழியில் நடப்பது அனுபூதி எனப்படும். அனுபூதி - அனுபவ அறிவு.

அந்த அனுபவ அறிவுப் பெற முயலாமல், தான் அறிந்ததையே உண்ணு எனச் சாதிப்பது வெற்றுச் சமயவாதிகளின் தன்மை. காரணம் ஆன்மா அணவத்தோடு அத்துவிதமாகி உள்ளது.  சிவாத்துவிதம் பெற முயலவில்லை.

ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி, மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ.     --- தாயுமானார்.

அறுவகையான சமயங்களும் இறைவனை அடையும் வழியினைக் காட்டுவதே. ஒரு ஊருக்குச் செல்ல ஆறு விதமான வழிகள் அமைந்திருப்பதைப் போல. ஆறு வழிகளையும் செம்மையாக அறியாத மனிதர், தமது அறிவால் அறிந்து கொண்டதே சரியான வழி என்று வழிகளில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு, தம்மில் பிணக்கம் கொள்ளுவார்கள். இது மலையைப் பார்த்து நாய் குரைப்பதைப் போன்றது என்று இழித்து உரைக்கின்றார் திருமூல தேவர்.

ஒன்றதே பேரூர், வழிஆறு அதற்கு உள,
என்றது போலும் இரு முச் சமயமும்,
நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

ஆறு சமயங்களும் சொல் வகையாலும், செயல் வகையாலும் ஒன்றோடொன்று வேறுபட்டு இருந்தாலும், கருத்து வகையால் அவை ஒன்றோடொன்று இயைந்து இருப்பதை அறிந்து தெளியாது, ஒருவரோடு ஒருவர் கலகம் விளைத்து, உண்ட=மை அறிவைப் பெறாமல் இருப்பதும், ஒருவரை ஒருவர் இகழ்வதும் கூடாது.

சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி
         சொல்லிய ஆகமங்கள் எலாம் சூழப் போயும்,
ஒத்து முடியும் கூட ஓர் இடத்தே
         ஒருபதிக்குப் பலநெறிகள் உள ஆனால் போல்,
பித்தர் குணம் அதுபோல ஒருகால் உண்டாய்ப்
         பின்ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்,
கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில் பட்டோர்
         கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.
                                                             --- சிவஞான சித்தியார் - பரபக்கம்.          
        
     ஞானமே தனக்குச் சுதந்திர வடிவாக உடைய இறைவன், - சமய பேதங்கள் தோறும் அவன் அருளிச் செய்த ஆகமங்கள் எல்லாம் பலபேதம் ஆயினும், ஞானபாதம் எல்லா ஆகமங்களிலும் தம்முள் ஒத்துச் சென்று ஒரு பொருளையே நோக்கி முடியும். அது எதைப் போல என்றால், ஓர் ஊருக்கு உண்டாகிய வழிகள் எல்லாம் பலவகைப் பட்டாலும், அவைகள் எல்லாம் அந்த ஊரைச் சென்று சேர்வதற்கே உள்ளதைப் போல என்று அறிதல் வேண்டும். எல்லா ஆகமங்களிலும் ஞானபாதம் ஒன்றாகவே அமைந்திருக்கும் என்ற உண்மையைத் தெளிந்து அறிந்து இருப்பவர் முத்தி அடைவர். அல்லாமல் பித்து ஏறினவர் போல, தெளிந்த அறிவு இல்லாமல், முத்திநெறியை அறியாமலேயே, அதனை அறிந்தவர் போலக் கூவித் திரிகின்ற அறிவிலிகள் மகாமேருவைக் குறித்துப் போக மனம் கொண்டு, அவ்வழி சென்று அடையும் அறிவைப் பெறாமல், தான் அறிந்ததாகக் கொண்டு, மற்றொரு திசையில் போய் கடலில் விழுந்ததைப் போல் ஆகும். 

வள்ளல் பெருமான் இந்த உண்மையை விளக்குமாறு காண்க..

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ் சோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி.

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
     சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
     நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
     அருட்பெருஞ் சோதி என்று அறிந்தேன்,
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது, நான்
     உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
     நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே,
மேல் வருணம் தோல்வருணம் கண்டு அறிவார் இலை, நீ
     விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே!
கால் வருணம் கலையாதே, வீணில் அலையாதே,
     காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்பெபொருளே!
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற
     வயங்கு நடத்து அரசே! என் மாலை அணிந்து அருளே.

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
     இருவாய்ப்புப் புன்செயில் எருஆக்கிப் போட்டு,
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
     வழக்கு எலாம் குழிக்கொட்டி, மண்மூடிப் போட்டு,
தெருள் சாரும் சுத்தசன்மார்க்க நல் நீதி
     சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடல் செய்தீரே
     அருட்பெருஞ் சோதி என் ஆண்டவர் நீரே.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றும் உப
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் --- ஓதுகின்ற
பேய் ஆட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே, பிறர்தம்
வாய் ஆட்டம் தீர்ந்தனவே மற்று.

எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெரும் சோதியரே
     இறைவர் என்பது அறியாதே, இம் மதவாதிமகள் தாம்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே
     கதைக்கின்றார், சாகாத கல்வி நிலை அறியார்,
நவ்வி விழியாய்! இவரோ சில புகன்றார் என்றாய்,
     ஞானநடம் கண்டேன், மெய்த்தேன் அமுதம் உண்டேன்,
செவ்வைபெறு சமரசசன்மார்க்கம் தனிலே
     சேர்ந்தேன், அத் தீமொழியும் தேமொழி ஆயினவே.

சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்.

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ.    --- மணிவாசகம்.

சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ?
ஓதி உணர்ந்தது எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி.

சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடம் ஆச்சுதடி.

நூலால் உணர்வு அரிய நுண்மையினும் நுண்மையன்காண்,
பால்ஆறு சர்க்கரை போல் பரந்த பரிபூரணன் காண்.

உளக்கண்ணுக்கு அல்லாது ஊன் கண்ணால் ஓரும் அதோ?
விளக்குத் திடர் ஒளி போல் மேவி இருந்தாண்டி.

கல்நெஞ்சின் உள்ளை கழுமலம் பூத்தாற்போல்
என் நெஞ்சின் உள்ளே இணையடிகள் வைத்தாண்டி.      --- பட்டினத்தார்.

வடிவு உள பொருளை அலம் வர அடியேற்கு அருள்வாயே ---

வடிவம் - உருவம், உடம்பு, அழகு, நிறம், ஒளி, மெய்ச்சொல் என்னும் பொருள்களை உடையது.

இருள் என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கும். ஆணவத்தைக் குறிக்கும். அஞ்ஞானம் துன்பத்தை அளிக்கும்.

ஒளி என்பது ஞானத்தைக் குறிக்கும். ஞானம் பேரின்பத்தை அளிக்கும்.

பேரின்ப வடிவான மேலான பொருளை உள்ளபடி அறிந்தால் உள்ளம் காற்று அறியாத் தீபம் போல் சலனம் அற்று இருக்கும். இது சும்மா இருக்கும் சுகம். மெய்ப்பொருளை அறிந்து உள்ளம் அமைதி பெற அருளவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியாப் பெருமாளே ---

     வீரக் கழல்களை அணிந்த தேவரீரது திருவடி இணையைப் பணிபவரிடம் கோபம் கொள்வதை ஒருபோதும் அறியாத பெருமையில் மிக்கவரே என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார்.

நீறுஆகி, நீறுஉமிழும் நெருப்பும் ஆகி,
         நினைவாகி, நினைவு இனிய மலையான் மங்கை
கூறுஆகி, கூற்றுஆகி, கோளும் ஆகி,
         குணம்ஆகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த
         அனாசாரம் பொறுத்துஅருளி, அவர்மேல் என்றும்
சீறாத பெருமானைத் திருமாற்பேற்று எம்
         செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே.

முற்றாத முழுமுதலை, முளையை, மொட்டை,
         முழுமலரின் மூர்த்தியை, முனியாது என்றும்
பற்றுஆகிப் பல்உயிர்க்கும் பரிவோன் தன்னை,
         பராபரனை, பரஞ்சுடரை, பரிவோர் நெஞ்சில்
உற்றானை, உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
         ஒள்அழல்வாய் வேவவுறு நோக்கத் தானை,
செற்றானைத் திரிபுரங்கள், திருமாற்பேற்று எம்
         செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே.

என்றார் அப்பர் பெருமான். அடியார்கள் செய்த அனாசாரத்தைப் பொறுத்து அருள்பவன் இறைவன். இறைவனை வழிபடுவதில் நீங்காத அன்பு கொண்ட அடியார்கள், அறியாமை காரணமாகவும், செயலில் தடுமாற்றத்தாலும் புரியும் சிறு குற்றங்களைப் பொறுத்து அருள்வான் இறைவன்.

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும், வேறு
    முனிய அறியாத தேவர்       பெருமாளே.               --- (ஒருவழி) திருப்புகழ்.


கருத்துரை

முருகா! எமச் சிக்கினில் ஆகாமல், மெய்ப்பொருளை அறிந்து உள்ளம் அமைதி பெற அருள்வாய்.







                                         




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...