மனிதர்களில் விலங்குகள்

40. மக்களில் விலங்குகள்

தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
     தள்ளிச்செய் வோர்குரங்கு;
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
     தாம்பயன் இலாதமரமாம்;

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
     வெறியர்குரை ஞமலியாவர்;
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
     மேன்மையில் லாதகழுதை;

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
     தூங்கலே சண்டிக்கடா;
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
     துட்டனே கொட்டுதேளாம்;

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
     வலமாக வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா --- முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு --- தான் கொண்டதுதான் கொள்கை எனக் கொண்டு, பெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர் மனிதர்களில் குரங்கு போன்றவர்.

     சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் --- பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில், குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர்.

     வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர் --- வேண்டுமென்றே செல்வாக்கு அற்றவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள் மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள்.

     மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மையில்லாத கழுதை --- தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள் மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்.

     சோம்பலோடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா --- சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்குமூஞ்சியே மனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான்.

     சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் --- மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்பவன் கீழ்மகன் தான் மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.

     விளக்கம் --- மனிதர்களில் அறிவு மிக்கவர், அறிவில் குறைந்தவர், அறிவே இல்லாதவர் என்று உண்டு. நன்மை தீமைகளை அறிந்தவர் அறிவு மிக்கவர். நன்மை தீமைகளைப் பகுத்து உணர மாட்டாதர் அறிவில் குறைந்தவர். தீமையையே பயிலுபவர்கள் அறிவை இல்லாதவர்கள். அறிவில் சிறந்தவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கொள்ளவேண்டும். தீமைகளைத் தள்ள வேண்டும். பெரியோர் சொல்லும் அறவுரைகளைப் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததையே செய்பவன் குரங்கைப் போன்றவன் என்றார். மழையில் நனைந்த ஒரு குரங்குக்கு, மரத்தில் கூடு கட்டி வாழ்ந்த தூக்கணாங்குருவி சொன்ன அறிவுரை நன்மையைத் தரவில்லை என்ற கதை யாவரும் அறிந்ததே.

     அவையிலே குறிப்பு அறியும் திறம் இருக்கவேண்டும். குறிப்பறிதல் என்பது கருத்து அறிந்து நடந்து கொள்ளுதல் ஆகும்.  குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையே பாடி வைத்தார் திருவள்ளுவ நாயனார். குறிப்பறிய மாட்டாதவன் உணர்ச்சியற்ற மரத்தைப் போன்றவன் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவைல்ல நல்ல மரங்கள், --- சவைநடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான், குறிப்பு அறிய
மாட்டாதவன் நல் மரம்.

     கிளைகளையும் கொம்புகளையும் உடையனவாகி காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. கற்றோர் சபையின் நடுவே, ஒருவர் நீட்டிய ஓலையைப் படிக்கமாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே நல்ல மரங்கள்.

     நாய் யாரைப் பார்த்தாரும் குரைக்கும். நல்லது கெட்டது அறியாது. போகவிட்டுப் பின்னால் குரைக்கும். கல் எடுத்தால் அடங்கும். வேண்டுமென்றே தற்புகழ்ச்சிக்காகத் தன்னை விடவும் எளியவர்களை எதிர்த்து நிற்பவர்கள் நாயைப் போன்றவர்கள்.

மிக உயரமான பாறைகளிலும் மலைபாதைகளிலும் பொருள்களை சுமந்து கொண்டு கழுதைகள் நடப்பதை பார்த்தவர்கள் நிச்சயம் அதை குறை சொல்ல மாட்டார்கள்.

     கழுதை ஒரு நாளில் முப்பது நிமிடங்கள் தான் உறங்கும். ஓய்வெடுத்து கொள்ளும். எதைத் தன்மீது வைத்தாலும் சுமந்து செல்லும். ஓய்வு ஒழிவு இல்லாமல், எந்த வழியிலாவது பொருளைத் தேடி, யாருக்கும் உதவாத உலுத்தர்கள் கழுதையைப் போன்றவர்கள்.

     பெரியோர்கள் கூடி இருக்கும் சபையானது தூங்கி வழிவதற்கு உரியது அல்ல. விழிப்புணர்வுடன் இருந்து நல்லறிவைத் தேக்கிக் கொள்வதற்கு உரிய இடம். அங்கே தூங்குபவனைச் சண்டிமாடு என்றார்.

தேள் அது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை
மீளவே கொடுக்கினாலே மெய்யுறக் கொட்டும், பல்லோர்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

எனவரும் விவேக சிந்தாமணிப் பாடலின் கருத்தை அதற்குரிய இடுகையில் காணலாம். நன்மை செய்தாருக்கும் தீங்கையே செய்பவன் கொட்டுகின்ற தேளைப் போன்றவன் என்பது இதனால் விளங்கும்.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...