தாழ்வும் உயர்வு ஆகும்.





45. தாழ்வும் உயர்வு ஆகும்.

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓர்ஊனம் மானம்எது ஆகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும்அது ஓர ழகதாம்!
  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அகம் ஆயும் நல் தவர்க்கு அருள் புரியும் ஐயனே --- உள்ளத்திலே ஆராய்ந்து நாடும் நல்ல தவசீலர்க்கு அருள்செய்யும் தலைவனே!

     ஆதியே --- முதல்வனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும் மேன்மையோர் செய்யில் அழகு ஆம் --- பெருமதிப்பு ஆனாலும், இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால் அது அழகு தரும்.

     விரகமே ஆகிலும் சரசமே அகிலும் விழைமங்கை செய்யில் அழகு ஆம் --- காம நோயானாலும் காம விளையாட்டு ஆனாலும் விரும்பத்தக்க மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும்,

     வெகு தருமங்களைச் செய்து தகு தாழ்வு வாழ்வு சாரில் பேரழகு ஆம் --- மிக்க அறச்செயல்களைப் புரிந்து, அதனால் வரும் தாழ்வாக இருந்தாலும், வாழ்வாக இருந்தாலும், அதுவே மிகுந்த அழகு ஆகும்,

     சமர் செய்து சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும் வரில் அழகது ஆம் --- போர் புரிந்ததனால் உடம்பில் விழுப்புண் உண்டானாலும், வெற்றி உண்டானாலும், அது அழகு ஆகும்.

     நகம் மேவு மதகரியில் ஏறினும் தவறினும் அதுநாளும் ஓர் அழகது ஆம் --- மலை போன்றிருக்கும் மதயானையின்மேல் ஏறி அமர்ந்தாலும், தவறி வீழ்ந்தாலும் அது எப்போதும் ஓர் அழகாக இருக்கும்,

     நாய் மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர் நகைசெய்து அழகு அன்று என்பர் --- நாயின் மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தவர்கள் நகைத்து, இது அழகு ஆகாது என்று கூறுவர்.

          விளக்கம் --- புறப்பூசை புரிவது பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு சாதனம் ஆகும். புறப்பூசையானது அகப்பூசையிலே முடிதல் வேண்டும். புறத்திலே இறைவனைக் காணும் நிலை விட்டு, அகத்திலே காண வேண்டும். "முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூல நாயனார். "திருமாலொடு நான்முகனும் தேடி, தேட ஒணாத் தேவனை என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்" என்றார் அப்பர் பெருமான். எனவே, "அகம் ஆயும் நல் தவருக்கு அருள் புரியும் ஐயனே" என்றார்.

     பெருமதிப்பு ஆனாலும், பெரும் இழிவு ஆனாலும், அது பெரியோரிடம் இருந்து வருமாகில், நன்மையாகக் கொள்ளலாம். நன்மை கருதியே பெரியோர் அவ்வாறு செய்வர்.

     காமத்தை உண்டு பண்ணுவதும், காம விளையாட்டில் ஈடுபடுவதும், மங்கைப் பருவம் உள்ள ஒரு பெண் வழி நிகழுமானால், அது இனிமையைத் தருவதாக அமையும்.

"ஒப்புரவினால் வரும் கேடு எனின், அஃது ஒருவன் விற்றுக் கோள் தக்கது உடைத்து" என்றார் திருவள்ளுவ நாயனார்.

எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத் தற்சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுஆவர்,
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்று எனத் தெண்ணீர் படும்.           -- நாலடியார்.

உறைப்பரும் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்து உணினும் ஊர்ஆற்றும் என்பர், கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.                --- நாலடியார்.

உறுபுனல் தந்து உலகு ஊட்டி, அறும் இடத்தும்
கல்ஊற்று உழி உறும் ஆறேபோல் --- செல்வம்
பலர்க்கு ஆற்றிக்கெட்டு உலந்தக் கண்ணும், சிலர்க்கு ஆற்றிச்
செய்வர் செயற் பாலவை.                --- நாலடியார்.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.        --- நல்வழி.

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.                    --- நல்வழி.

     எனவே, அறச் செயல்களைச் செய்து ஒருவன் தாழ்வு அடையமாட்டான்.  தாழ்வு வந்தாலும், அவனுக்குப் பெரும் சிறப்பாகவே அது அமையும்.

     நகம் - மலை. மலைபோன்றுள்ள யானை. ‘கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது' என்றார் திருவள்ளுவ நாயனார். முயலானது உருவத்தில் சிறியது. வேகமாக ஓடினாலும், குறி தவறாமல் அம்பினை எய்தால் கொன்று விடலாம். யானை உருவத்தால் பெரியது. எளிதில் கொல்ல முடியாது. முயலினைக் கொல்லும் அம்பினை எய்வதை விடவும், யானையைக் கொல்ல முயன்று வீசி எறிந்து, குறி தவறிய வேலினை ஏந்துவது பெருமைக்கு உரியது என்றார்.

     ஆனால், நாய் மீது ஏறினாலும் விழுந்தாலும் அது அழகு ஆகாது. உலகோர் நகைப்பர். கீழோரோடு கூட்டுறவு ஆகாது என்பது பொருள்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...