திருமகள் வாழும் இடங்கள்




35. திருமகள் வாழ்வு

கடவா ரணத்திலும், கங்கா சலத்திலும்,
     கமலா சனந்தன்னிலும்,
காகுத்தன் மார்பிலும், கொற்றவ ரிடத்திலும்,
     காலியின் கூட்டத்திலும்,

நடமாடு பரியிலும், பொய்வார்த்தை சொல்லாத
     நல்லோ ரிடந்தன்னிலும்,
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்,
     ரணசுத்த வீரர்பாலும்,

அடர்கே தனத்திலும், சுயம்வரந் தன்னிலும்,
     அருந்துளசி வில்வத்திலும்,
அலர்தரு கடப்பமலர் தனிலும்,இர தத்திலும்,
     அதிககுண மானரூப

மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது
     மாறாது இருப்பள் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கட வாரணத்திலும் ---  மதயானையின் இடத்திலும்,

     கங்கா சலத்திலும் --- கங்கையின் தூய நீரிலும்,

     கமல ஆசனம் தன்னிலும் --- தாமரை மலராகிய ஆசனத்திலும்,

     காகுத்தன் மார்பிலும் --- திருமாலின் மார்பிலும்,

     கொற்றவர் இடத்திலும் --- அரசர் இடத்திலும்,

     காலியின் கூட்டத்திலும் --- பசுக்களின் கூட்டத்திலும்,

     நடம் ஆடு பரியிலும் --- நடையில் சிறந்த
குதிரையின் இடத்திலும்,

     பொய் வார்த்தை சொல்லாத நல்லோர் இடம் தன்னிலும் --- பொய் கூறாத நல்லவர்கள் இடத்திலும்,

     நல்ல சுப லக்கணம் மிகுந்த மனை தன்னிலும் --- சிறந்த சுப இலக்கணங்கள் பொருந்தி உள்ள வீட்டிலும்,

     இரணசுத்த வீரர் பாலும் --- போருக்கு உரிய உயர்ந்த வீரர் இடத்திலும்,

     அடர் கேதனத்திலும் --- மிகுந்த வெற்றிக் கொடியின் இடத்திலும்,

     சுயம்வரம் தன்னிலும் --- சுயம் வர திருமணத்திலும்,


     அருந்துளசி வில்வத்திலும் --- அரிய துளசி மற்றும் வில்வ பத்திரத்திலும்,

     அலர் தரு கடப்ப மலர் தனிலும் --- மலர்ந்த கடப்ப மலரிலும்,

     இரதத்திலும் --- தேரிலும்,

     அதிக குணமான ரூப மடவார் இடத்திலும் --- நற்குணம் மிகுந்த அழகிய பெண்கள் இடத்திலும்,

     திருமாது குடிகொண்டு மாறாது இருப்பள் அன்றோ - இலக்குமி குடிகொண்டு எப்போதும் நீங்காமல் இருப்பாள் அல்லவா?

        விளக்கம் --- கடம் - மதம். வாரணம் - யானை. காகுத்தன் என்பவன் மரபிலே திருமால் இராமனாகப் பிறந்தார். ஆகையால் காகுத்தன் எனப்பட்டார். காலி - பசு மந்தை. கேதனம். - கொடி. சுயம் வரம் - ஒருபெண் தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்தல். சுயம் - தானாவே. வரம் - வரித்தல். வரிக்கப்பட்டவன் வரன். துளசி - திருமாலுக்கும், வில்வம் - சிவபிரானுக்கும் உரியவை. கடம்பு - முருகனுக்கு உரியவை. மடம் - இளமை. மடவார் - இளம் பெண்கள்.

திருமகள் எப்போதும் நீங்காமல் குடி இருக்கும் இடங்கள் இன்னின்ன என்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...