சிதம்பரம் - 0653. மதவெம் கரிக்கு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மதவெம் கரிக்கு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொய்யான இன்பங்களைத் துறந்து,
மெய்யறிவு பெற்று உய்யத் திருவடி அருள்வாய்.


தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
     வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம்

வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
     வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார்

விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
     மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே

விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
     மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
     நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
     நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ்

சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
     திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே

தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மதவெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு
     வளரும் தனத்து அணிந்த ...... மணிஆரம்,

வளை செங்கையில் சிறந்த ஒளி கண்டு, நித்து லங்கு
     வரரும் திகைத்து இரங்க ...... வருமானார்,

வித இங்கித ப்ரியங்கள், நகை கொஞ்சுதல், குணங்கள்
     மிகை கண்டுஉற உக் கலங்கி ...... மருளாதே,

விடு சங்கை அற்று உணர்ந்து, வலம் வந்து, னைப் புகழ்ந்து,
     மிக விஞ்சு பொற்ப தங்கள் ...... தருவாயே.

நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த
     நட நம்பர் உற்று இருந்த ...... கயிலாய

நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம்
     நவதுங்க ரத்நம் உந்து ...... திரள் தோளும்

சிதையும்படிக்கு ஒர்அம்பு தனை முன் தொடுத்த கொண்டல்
     திறல் செங்கண் அச்சுதன் தன் ...... மருகோனே!

தினமும் கருத்து உணர்ந்து, சுரர் வந்து உறப் பணிந்த
     திரு அம்பலத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

      நதியும் --- கங்கை நதியையும்,

     திருக் கரந்தை --- அழகிய கரந்தை என்னும் திருநீற்றுப் பச்சை மலரையும்,

     மதியும் --- பிறைச் சந்திரனையும்

     சடைக்கு அணிந்த --- திருச் சடையில் அணிந்து,

     நட நம்பர் --- திரு நடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான்

     உற்று இருந்த கயிலாய நகம் --- பொருந்தி வீற்றிருந்த திருக் கயிலாய மலையை,

     அங்கையில் பிடுங்கும் அசுரன் --- தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய இராவணனுடைய

      சிரத்தொடு அங்கம் -- பத்துத் தலைகளோடு உடலும்,

     நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் --- உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட இருபது தோள்களும்

     சிதையும் படிக்கு --- சிதைந்து போகும்படி

     ஒர் அம்பு தனை முன் தொடுத்த --- ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும்,

     கொண்டல் --- மேகம் போன்று கருநிறத் திருமேனி கொண்டவரும்,

     திறல் செம்கண் அச்சுதன் தன் மருகோனே --- ஒளி விளங்கும் செந்தாமரை போலும் திருக்கண்களை உடையவருமான ஸ்ரீராமபிரானின் திருமருகரே!

         தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த --- நாள்தோறும் தேவரீரை வழிபடுவதின் பயனை உணர்ந்து தேவர்கள் வந்து தேவரீரது திருவடிகளைத் தாழப் பணிந்த

     திருஅம்பலத்து அமர்ந்த பெருமாளே --- திரு அம்பலத்தே அமர்ந்த பெருமாளே.

      மத வெம் கரிக்கு --- மதம் கொண்ட கொடிய யானையின்

     இரண்டு வலுகொம்பு என --- வலிமையான இரண்டு தந்தங்கள் என்று சொல்லும்படி,

     திரண்டு வளரும் --- திரண்டு வளர்ந்துள்ள,

     தனத்து அணிந்த மணி ஆரம் --- மார்பகங்கள் மீது அணிந்துள்ள இரத்தின மாலை,

      செம்கையில் வளை --- சிவந்த கைகளில் சங்கு வளையல்கள்,

     சிறந்த ஒளி கண்டு -- இவைகள் அழகுற விளங்குவதைக் கண்டு,

     நித்து இலங்கு வரரும் --- உலகப் பற்றுக்கள் எல்லாவற்றையும் நீத்தவர்களாகிய பெருமைக்கு உரியவரும், (நீத்து என்னும் சொல் நித்து என வந்தது)

     திகைத்து இரங்க வரும் மானார் --- திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின்

      வித இங்கித ப்ரியங்கள் --- விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும்,

     நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உறக் --- சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த,

     கலங்கி மருளாதே --- உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல்,

      விடு சங்கை அற்று உணர்ந்து --- ஆசைகளை விட்டொழித்து,  ஐய உணர்வு இன்றி தெளிந்த அறிவுடன் தேவரீரை அடையும் நெறியை உணர்ந்து, (விட்டு என்னும் சொல் விடு என வந்தது)

     வலம் வந்து உனைப் புகழ்ந்து --- வலம் வந்து, தேவரீரைப் புகழ்ந்திட,

     மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே --- மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக.


பொழிப்புரை


         கங்கை நதியையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் திருச் சடையில் அணிந்து, திரு நடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த திருக் கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளோடு உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட இருபது தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கருநிறத் திருமேனி கொண்டவரும், வலிமை விளங்கும் செந்தாமரை போலும் கண்களை உடையவருமான ஸ்ரீராமபிரானின் திருமருகரே!

     நாள்தோறும் தேவரீரை வழிபடுவதின் பயனை உணர்ந்து தேவர்கள் வந்து தேவரீரது திருவடிகளைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே அமர்ந்த பெருமாளே!

         மதம் கொண்ட கொடிய யானையின் வலிமையான இரண்டு தந்தங்கள் என்று சொல்லும்படி, திரண்டு வளர்ந்துள்ள, மார்பகங்கள் மீது அணிந்துள்ள இரத்தின மாலை, சிவந்த கைகளில் சங்கு வளையல்கள், இவைகள் அழகுற விளங்குவதைக் கண்டு, உலகப் பற்றுக்கள் எல்லாவற்றையும் நீத்தவர்களாகிய பெருமைக்கு உரியவரும், திகைப்பு உற்று, மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்கள் தருகின்ற காமச் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், ஆசைகளை விட்டொழித்து, ஐய உணர்வு இன்றி தெளிந்த அறிவுடன் தேவரீரை அடையும் நெறியை உணர்ந்து, வலம் வந்து, தேவரீரைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக.

 
விரிவுரை

மத வெம் கரிக்கு இரண்டு வலுகொம்பு என திரண்டு வளரும் தனத்து ---

விலைமாதரின் மார்பகங்கள் மதம் பிடித்த வலிய யானைக்கு வளர்ந்துள்ள இரண்டு தந்தங்களைப் போன்று உள்ளன. யானையானது தனது தந்தங்களால் எதிர்ப்பட்டவற்றைக் குத்திப் பிளந்து அழிக்கும்.

விலைமாதர் தமக்கு மிகுந்து உள்ள காம உணர்வு பற்றியும், காம உணர்வு கொண்டோர் படைத்துள்ள பொருளின் மீதுகொண்ட ஆசை பற்றியும், தமது பெருத்த மார்பகங்களை, கச்சு அணிந்து, மேலாடையால் மூடியும், திறப்பது போல் காட்டியும், திறந்து காட்டியும், தம்மை எதிர்ப்பட்ட காமுகரின் உள்ளத்தை நெகிழச் செய்து அவரைத் தமது வசப்படுத்துவர். 

நித்து இலங்கு வரரும் திகைத்து இரங்க வரும் மானார் ---

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?           
                                                                                ---  கந்தர் அலங்காரம்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு, .....இளைஞோர்மார், 
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.    --- திருப்புகழ்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!       --- பட்டினத்தார்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                 --- திருப்போரூர்ச் சந்நிதி முறை.

வித இங்கித ப்ரியங்கள் .... கலங்கி மருளாதே ---

விலைமாதர் தருகின்ற விதவிதமான இன்பங்களாலும், மயக்கும் பேச்சுக்களாலும் அவர் வசப்பட்ட ஆடவரின் உள்ளமானது கலங்கி, தெளிந்த அறிவினை இழந்து, அதில் இருந்து மீளும் வழி தெரியாமல் துன்பத்தை அடைந்து வாடும்.

விடு சங்கை அற்று உணர்ந்து ---

விட்டு என்னும் சொல் விடு என வந்தது.

ஆசைகளை விட்டொழித்து,  அருள் நூல்களை ஓதி, ஒதித் தெளிந்த அறிவு உடையவர்பால் கேட்டுத் தெளிந்து, அவரோடு கூடி இருந்து, ஐயம் திரிபு அற்ற மெய்யறிவைப் பெற்று, மெய்யுணர்வினனாகிய இறைவன் திருவடி ஒன்றே, மாளாத இன்பத்தைத் தருவது என்று உணர்ந்து, அவனுக்கே மீளா அடிமை செய்து வாழ்வதே பொருள் என்று உணர்ந்து.
   
கயிலாய நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் ---

சிவபெருமான் வீற்றிருக்கும் திருக் கயிலாய மலையை, மையில் உள்ள நகத்தால் பிடுங்கி எறிவதைப் போன்று பெயர்த்து எடுக்க முனைந்த அரக்கனாகிய இராவணனைக் குறித்தது.

தசக்ரீவன் என்ற அரக்கன் புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றான். திருக்கயிலாய மலைக்கு நேரே விமானம் தடைபட்டு நின்றது. தசக்ரீவன் விமானத்தைப் பலமுறை செலுத்தினான். அது அசையவில்லை.

கயிலைமலைக் காவல் பூண்டுள்ள திரு நந்திதேவர், “அடே தசக்ரீவா! இது கண்ணுதற்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலாயமலை. இதனை நவகோள்களும் வலம் வருகின்றன. இதற்குமேல் செல்வது பாவம். ஆகவே நீ வலமாகப் போ” என்று கூறினார்.

இளமைச் செருக்குடைய அந்த அரக்கன், “குரங்கு போல் முகத்தினை உடைய மாடே! நீ எனக்குப் புத்தி புகல்கின்றனையா? உன்னையும் இம்மலையையும் பேர்த்து எறிவேன்” என்று கூறினான்.

திருநந்திதேவர், “மூடனே, உனக்கு அறிவுரை கூறினால் என்னைக் குரங்கு முகம் என்று இகழ்கின்றாய். குரங்கினால் உன் நாடு  நகரம் அழியக் கடவது” என்று சாபம் இட்டனர்.

இதனைக் கேட்ட தசக்ரீவன் வெகுண்டு, விமானத்தைவிட்டு இறங்கி, திருக்கைலாய மலையைப் பேர்த்துத் தோள் மிசை வைத்துக் குலுக்கினான்.

அது சமயம் மலைக்குமேல் அமர்ந்துள்ள சுவாமியை அம்பிகை நோக்கி, “சுவாமி! அகில உலகங்களும் சக்தியால் தானே நடைபெறுகின்றது?” என்று கேட்டார்கள். சுவாமி, “ஆம்” என்றார். அம்பிகை, “எம்பெருமானே! எல்லாம் சிவமயம் என்று வேதம் புகல்கின்றதே; நீர் இப்படி என்னை உயர்த்திக் கூறுகின்றீர்” என்று சிறிது பிணங்கினார்கள். பெண்கள் கணவனுடன் பிணங்குவதற்கு ஊடல் என்று பேர்.

இவ்வாறு உமாதேவியார் ஊடல் கொண்டிருக்கும் அதே சமயம் மலை குலுங்கியது. ஊடலால் சற்று விலகியிருந்த தேவி மலை குலுங்குவதால் மனம் கலங்கி இறைவனைத் தழுவிக்கொண்டார். இராவணன் மலையெடுத்த செயல் இறைவனுக்கு உமையவள் ஊடல் தீர்த்து நன்மை செய்தது.

தேவி! அஞ்சற்க” என்று கூறி இறைவர் ஊன்றிய திருவடியின் பெருவிரலின் நக நுனியை ஊன்றிச் சிறிது அழுத்தினார். கதவிடுக்கில் அகப்பட்டு உடம்பு நெரிந்து, தோள் முறிந்து, “ஓ” என்று கதறினான். ஆயிரம் ஆண்டுகள் கதறியழுதான். அதனால் இராவணன் என்ற பெயர் உண்டாயிற்று. இராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் புரிந்தவன் என்று பொருள்.

பின்னர் இராவணன் இறைவனை இன்னிசையால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து வாளும் வாழ்நாளும் வழங்கியனுப்பினார்.

வள்ளல் இருந்த மலை அதனை வலம்
         செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து, அன்று
         எடுத்தோன் உரம் நெரிய,
மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார்
         மேவும் இடம்போலும்,
துள்ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த
         தோணி புரந்தானே.                  --- திருஞானசம்பந்தர்.

தூசுஉடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்
     தொலையாத காலத்து,ஓர் சொற்பாடாய் வந்து
தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்து,
     திப்பியகீ தம்பாட, தேரோடுவாள் கொடுத்தீர்.
நேசமுடைய அடியவர்கள் வருந்தாமை அருந்த
     நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,
     கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.    --- சுந்தரர்

அரக்கன் சிரத்தொடு அங்கம்..... ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல்...... மருகோனே ---

அத்தகைய அரக்கனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதையுமாறு ஒப்பற்ற அம்பினைச் செலுத்தியவர் இராமபிரான்.

மலையே எடுத்து அருளும் ஒருவாள் அரக்கன் உடல்
     வடமேரு எனத் தரையில் ...... விழவேதான், 
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு
     மருகா! கடப்ப மலர் ...... அணிமார்பா!                  --- (பலகாதல்) திருப்புகழ்.


கருத்துரை

முருகா! பொய்யான இன்பங்களைத் துறந்து, மெய்யறிவு பெற்று உய்யத் திருவருள் புரிவாய். 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...