சிதம்பரம் - 0658. முகசந்திர புருவம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகசந்திர புருவம் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
தேவரீரது திருமுக மண்டலத்தைத் தரிசித்து,  
திருவடிப்பேற்றை அடைய அருள்.


தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான


முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ......குழையாட

முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கோடிபோலத்

துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித்

தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே

அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே

அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர ஒளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே

மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ......   கதிர்வேலா

வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகசந்திர, புருவம் சிலை, விழியும் கயல், நீல
முகில் அம்குழல், ளிர் தொங்கலொடு இசைவண்டுகள் பாட,
மொழியும்கிளி, இதழ்பங்கயம், நகை சங்குஒளி, காதில் ......குழையாட,

முழவ அம்கர சமுகம், பரிமள குங்கும வாச
முலை இன்ப ரச குடம், குவடு இணைகொண்டு நல் மார்பில்
முரணும் சிறு பவளம் தரளவடம் தொடை ஆட, ......கொடிபோலத்

துகிரின்கொடி ஒடியும்படி நடனம், தொடை வாழை
மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சணை மிசை, அங்கசன் ரதி இன்பம் அதாகச் ......செயல்மேவித்

தொடைசிந்திட, மொழிகொஞ்சிட, அளகம் சுழல்ஆட,
விழி துஞ்சிட, இடை தொய்ஞ்சிட, மயல்கொண்டு அணைகீனும்
சுகசந்திர முகமும்,பத அழகும், தமியேனுக்கு .....அருள்வாயே

அகர அம் திரு உயிர் பண்பு உற, அரி என்பதும் ஆகி
உறையும் சுடர் ஒளி, என் கணில் வளரும் சிவகாமி,
அமுதம் பொழி பரை, அந்தரி, உமை பங்கு அரனாருக்கு ...... ஒருசேயே!

அசுரன் சிரம், ரதம் பரி சிலையும் கெட, கோடு
சரமும் பல படையும் பொடி, கடலும் கிரி சாய,
அமர்கொண்டு அயில் விடுசெங்கர! ஒளிசெங்கதிர் போலத் ... திகழ்வோனே!

மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை
மருக என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் ...... கதிர்வேலா!

வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு, மோக
சரசம் குறமகள் பங்கொடு, வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திருவம்பலம் மருவும் குமரேசப் ...பெருமாளே!

பதவுரை

       அகர அம் திரு உயிர் பண்பு உற --- அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும், ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும்

     அரி என்பதும் ஆகி --- திருமால் ஆகி,

     உறையும் சுடர்ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி --- என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய,

     அமுதம் பொழி பரை --- அமுதத்தைப் பொழியும் பராசக்தி

     அந்தரி --- பராகாயத்தில் விளங்குவள்,

     உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே --- உமாதேவியை தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே,

       அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட --- அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட,

     கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய --- (அவனுக்குக் காவலாயிருந்த) எழுமலைகளும், அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ,

     அமர் கொண்டு அயில் விடு செம்கர --- போரை மேற்கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய திருக்கரத்தினரே!

     ஒளி செம்கதிர் போலத் திகழ்வோனே --- ஒளி வீசும் செங்கதிரவனைப் போல விளங்குபவரே!

         மகரம் கொடி நிலவின் குடை மதனன் திருதாதை மருகன் என்று --- மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று

     அணி விருதும் பல முரசம் கலை ஓத --- அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாத்திரங்களும் புகழ்ந்து நிற்க,

     மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் கதிர்வேலா --- பிரமனின் தலை உடையும்படி அவனைக் குட்டி திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலவரே!

      வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு --- அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு,

     மோக சரசம் குறமகள் பங்கொடு --- பின்பு காம லீலைகளை குறமகள் ஆகிய வள்ளியம்மையோடு விளையாடி,

     வளர் தென்புலியூரில் மகிழும் புகழ் திருஅம்பலம் மருவும் குமர ஈச --- திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமாரக் கடவுளே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      முக(ம்) சந்திரன் --- முகம், சந்திரன்.

     புருவம் சிலை --- புருவம், வில்.

     விழியும் கயல் --- கண், கயல்மீன்.

     நீல முகில் அம் குழல் --- கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல்.

     ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட --- ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட,

     மொழியும் கிளி --- பேச்சும் கிளி போன்றது.

     இதழ் பங்கயம் --- வாயிதழ், தாமரை.

     நகை சங்கு ஒளி --- பற்கள் சங்கின் ஒளி கொண்டவை.

     காதில் குழை ஆட --- காதில் குண்டலங்கள் அசைகின்றன.

      அம்கர சமுகம் முழவ --- அழகிய கை இணைகளில் வளையல்கள் ஒலி செய்ய,

     பரிமள குங்கும வாச முலை இன்பரச குடம் குவடு இணை கொண்டு --- வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி,

     நல் மார்பில் முரணும் சிறு பவளம் தரளவடம் தொடை ஆட --- பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட,

       கொடி போலத் துகிரின் கொடி ஒடியும்படி நடனம் --- கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து,

     தொடை வாழை மறையும்படி துயல் --- வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற,

     சுந்தர சுக மங்கையரோடு துதை பஞ்சு அணை மிசை --- அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில்

     அங்கசன் ரதி இன்பம் அதாகிச் செயல் மேவி --- மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து,

      தொடை சிந்திட --- மாலை சிதறவும்,

     மொழி கொஞ்சிட --- பேச்சு கொஞ்சவும்,

     அளகம் சுழல் ஆட --- கூந்தல் சுழன்று அசையவும்,

     விழி துஞ்சிட --- கண்கள் சோர்வு அடையவும்,

     இடை தொய்ஞ்சிட --- இடை தளரவும்,

     மயல் கொண்டு அணைகீனும் --- காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும்,

     சுக சந்திர முகமும் --- அழகிய சந்திரன் போன்ற தேவரீரது திருமுக தரிசனத்தையும்,

     பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே --- திருவடி இன்பத்தையும் அடியேனுக்கு அருள் புரிவீராக.

பொழிப்புரை

      அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும், ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால் ஆகிய புருஷ சத்தியாகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தியும் பராகாயத்தில் விளங்குவளும் ஆகிய, உமாதேவியை தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே!

      அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, அவனுக்குக் காவலாயிருந்த எழுமலைகளும், அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற்கொண்டு வேலாயுதத்தை விடுத்து அருளிய செவ்விய திருக்கரத்தினரே!

     ஒளி வீசும் செங்கதிரவனைப் போல விளங்குபவரே!

       மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாத்திரங்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி அவனைக் குட்டி திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலவரே!

       அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, பின்பு குறமகள் ஆகிய வள்ளியம்மையோடு காம லீலைகளைப் புரிந்து, திருவளரும் தென்புலியூரில் என்னும் சிதம்பர திருத்தலத்தில் யாவரும் கண்டு களிக்கும் திரு அம்பலத்தில் விளங்கும் குமாரக் கடவுளே!

     பெருமையில் மிக்கவரே!

      பொதுமாதரின் முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல்மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல்.ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட,  பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டவை. காதில் குண்டலங்கள் அசைகின்றன. அழகிய கை இணைகளில் வளையல்கள் ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற தேவரீரது திருமுக தரிசனத்தையும், திருவடி இன்பத்தையும் அடியேனுக்கு அருள் புரிவீராக.

விரிவுரை

இத் திருப்புகழில் காமுகர்க்கு பெண்களின் அங்கங்கள் எப்படியெல்லாம் தோன்றும் என்பதையும், அவரோடு புரியும் காம லீலைகளைப் பற்றியும் எடுத்து உரைத்து உள்ளார் அடிகளார்.

இறைவனுடைய படைப்பில் எல்லாமே அழகுதான். அது உடையவர்களின் மனநிலையையும், காண்பவர்களின் மனப்பக்குவத்தையும் பொறுத்தது. இந்த உண்மையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான், திருமயிலையில் திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பெண்ணாக்கிய நிகழ்வைக் குறித்துப் பெரியபுராணத்தில் பாடிக் காட்டி உள்ளார்.

திருஞானசம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு எழுந்தருளியபோது, தம்மோடு திருவொற்றியூரில் இருந்து வந்த அடியவராகிய சிவநேசச் செட்டியாருக்கு உற்றதை அறிந்தவர். திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனை வணங்கிப் புறத்தே வந்தார். பிள்ளையார் தம்முடன் இருந்து சிவநேசரை நோக்கி, என்புக் குடத்தைக் கொண்டு வாரும் எனப் பணித்தார். சிவநேசர் என்புக் குடத்தைச் சிறப்போடு கொண்டு வந்து, கோபுரத்திற்கு எதிரே, திருமுன்னர் வைத்தார். அந்த ஊரில் உள்ளாரும், பிற ஊராரும், சமணர்களும், மற்றவரும் அங்கே வந்து சூழ்ந்து நின்றார்கள். பிள்ளையார் திருவருளைச் சிந்தித்து, மட்டிட்ட என்று தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்து, போதியோ பூம்பாவாய் என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார்.  உரிஞ்சாய வாழ்க்கை என்னும் பத்தாவது திருப்பாட்டைப் பிள்ளையார் பாடினதும் குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயது உடையவராய் வெளித் தோன்றினார். பிள்ளையார் திருக்கடைக்காப்புச் சாத்தினார்.

பூம்பாவையின் அழகு எப்படி இருந்தது. பெரியபுராணத்தின் வழியே திருவருளை அனுபவிப்போம்.

ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்,
"ஈங்கிது காணீர்" என்னா அற்புதம் எய்தும் வேலை,
பாங்குசூழ் தொண்டர் ஆனோர் "அரகர" என்ன, பார்மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.

அவ்வாறு தோன்றிய தெய்வ நலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்த்தவர் எல்லாம் `இங்கு இதனைப் பாரீர்' என்று எடுத்துச் சொல்லி அற்புதத்தை அடைந்த போது, அருகில் சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் `அரகர' என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வானுலகத்தை அடைந்தது.


தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கிப்
பூஅரு விரைகொள் மாரி பொழிந்தனர், ஒழிந்த மண்ணோர்
யாவரும், "இருந்த வண்ணம் எம்பிரான் கருணை" என்றே
மேவிய கைகள் உச்சிமேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.

தேவர்கள் முனிவர்கள் முதலானவர்கள் சிவபெருமானின் திருவருள் சிறப்பை நோக்கி, தெய்வ மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய மலர் மழையைப் பெய்தனர். மற்றவர்கள் எல்லோரும் `இங்ஙனம் நிகழ்ந்த இவ்விளைவின் வண்ணம் எம் தலைவரான சிவபெருமானின் திருவருட்கருணையே ஆகும்' எனச் சொல்லிப் பொருந்திய கைகளை உச்சிமீது குவித்து வணங்கி, நிலத்தில் விழுந்து தொழுதனர்.


அங்குஅவள் உருவம் காண்பார், அதிசயம் மிகவும் எய்தி,
பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர்,
எங்குஉள செய்கைதான், மற்று என் செய்தவாறு இது? என்று,
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.

பூம்பாவையின் வடிவத்தைக் கண்ணுற்ற மற்ற சமயத்தில் உள்ளவர்கள், மிக்க அதிசயம் அடைந்து, இச் செய்தியால் தம்தம் சமயங்களும் மறுத்து ஒதுக்கப்பட, அவ்வவரும் தோல்வி அடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத் தான் உள்ளது? எவ்வாறு செயல்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர், தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.


கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்,
முன்உறக் கண்டார்க்கு எல்லாம் மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தாமரையின் மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல்போல் இருண்டு தோன்ற.

பூம்பாவையாரின் அழகு முழுமையும், தம் கண்களால் முற்றும் காணாதவராகி அவ்வளவில் அமைந்தார்க்கு எல்லாம், தோன்றிய நிலையாவது, செறிந்து வளர்ந்த கருமையான கூந்தலான பளுவைப் பொருந்திய முகமான செந்தாமரையில், கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழந்திருந்தாற் போன்று கரிய நிறம் அடைந்து காணப்படவும்,


பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி,
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்,
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட, புயல் கீழ் இட்ட
வாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப.

பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் ஒழுங்கின் கீழ், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப் பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான பூங்கொடிக்கு அழகின்மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்தவும்,


புருவமென் கொடிகள், பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறாய் அருள்பெற உளனாம் காமன்
செருஎழும் தனு அது ஒன்றும், சேமவில் ஒன்றும் ஆக
இருபெரும் சிலைகள் முன்கொண்டு எழுந்தன போல ஏற்ப.

புருவம் என்ற இரண்டு கொடிகள், முற்காலத்தில் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக்கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப் பின், அருள் பெற உள்ளவனான காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும், சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக இருபெரு வில்களின் தன்மையை முன்னே கொண்டு தோன்றி எழுந்தால்போல் அழகு செய்ய,


மண்ணிய மணியின் செய்ய வளர்ஒளி மேனியாள் தன்
கண்இணை வனப்புக் காணில், காமரு வதனத் திங்கள்
தண்அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒள்நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.

கடைந்தெடுத்த மாணிக்கத்தினும் மேம்பட்ட செம்மையாய ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பூம்பாவையாரின் இரண்டு கண்களின் அழகானது, அழகுமிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த ஒரு நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவ,


பணிவளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேரொளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு,
மணிநிறக் கோபம் கண்டு மற்று அது வவ்வத் தாழும்
அணிநிறக் காமரூபி அனையதாம் அழகு காட்ட.

வாய் இந்திர கோபப் பூச்சியையும், மூக்குப் பச்சோந்தி யையும் ஒத்தன. நீண்டிருக்கும் மூக்கின் கீழ் வாய் இருப்பது கவரவரும் பச்சோந்தியின் கீழ்க் கோபப் பூச்சி இருப்பதைப் போன்றது. வடிவும் நிறமும் பற்றி வந்த உவமை.


இளமயில் அனைய சாயல் ஏந்திழை குழைகொள் காது,
வளமிகு வனப்பினாலும், வடிந்த தாள் உடைமையாலும்,
கிளர்ஒளி மகர ஏறு கெழுமிய தன்மையாலும்,
அளவில்சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனைய ஆக.

இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய அணிகலன்களை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத் தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க,


விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பு அமை வதனம் ஆகும் பதுமநல் நிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி,
அல்பொலி கண்டர் தந்த அருட்கு அடையாளம் காட்ட.

ஒளி திகழும் முத்துக் கோவைகள் விளங்கும் கழுத்து, நல்ல பெரிய சங்கம் என்னும் நிதியைப் போன்றும், அதன்மீது விளங்கும் அழகு அமைந்த முகம் பதும நிதியைப் போன்றும் தோன்றி விளங்குவது, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய திருநீலகண்டரான இறைவர் தந்த பெரும் கருணைக்கு அடையாளத்தைக் காட்ட,

தாமரை முகத்திற்கும், சங்கு கழுத்திற்கும் உவமையாம். ஆசிரியர் சேக்கிழார் இவ்விரண்டையும் முறையே பதுமநிதி, சங்கநிதி என உருவகித்து, அவை இரண்டும் அழகுபெற அமைந்தால் போலப் பாவையாரின் முகமும் கழுத்தும் விளங்கின என்றார். இவ்விரு நிதியினையும் வழங்கத் தக்கவன் இறைவனே. இச்செல்வியாரும் அப்பெருமானின் அருளால் தோன்றியவராதலின், அதற்கு உரிய அடையாளங்களைக் காட்டி விளங்குபவராயினார் எனச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.


எரியவிழ் காந்தள் மென்பூத் தலைதொடுத்து இசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்கும் செச்சை மாலையோ, தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.

கரிய நீண்ட கயல்மீன் போன்ற கண்களை உடைய பாவையாரின் கைகளைக் காணும்போது, தீயைப் போல் மலர்ந்த மெல்லிய செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து, அதன் திரட்சி வரவரச் சுருங்கி வருமாறு அமைந்த வெட்சிப் பூ மாலையோ? அதுவும் அன்றி வேறொரு வகையால் ஆராயுமிடத்து, உடலில் உள்ள மேனியின் ஒளி மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ எனும் அதிசயம் தோன்ற கைகள் அமைய,

தோளின் இடமாகத் தோன்றிய இருகைகளும் மேலே பருத்தும், வரவரச் சிறுத்தும் இருக்கும். அதற்குக் காந்தள் பூக்களைத் தலையில் கொண்டு, கீழ் வரவர வெட்சிப் பூவைத் தொடுத்துக் கட்டிய மாலையை உவமை கூறினார். அக்கைகளின் ஒளிக்கு உடலின் ஒளி இரு மருங்கும் வழிந்து ஒழுகியது போல்வது என்றார். இவ்வுவமை அழகுகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தன.


ஏர்கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளங் கொங்கை, நாகக்
கார்கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்,
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.

அழகு பொருந்திய மார்பில் பெருகி எழுகின்ற இளமை வாய்ந்த மார்பகங்கள், பாம்பின் கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான திருஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால் பொருந்திய திருவருள் என்னும் அமுதத்தால் நிறையப் பெற்று, அமைந்த கும்பத்தினை மேல் மூடிய முகிழ் போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற,


காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து, கொங்கை
நேமியம் புட்கள் தம்மை அகப்பட, நேரிது ஆய
தாமநீள் கண்ணி சேர்த்த சலாகை தூக்கியதே போலும்,
வாம மேகலை சூழ் வல்லி மருங்கின்மேல் உரோமவல்லி.

அழகிய மேகலை என்ற அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையாரின் இடையை அடுத்த கொப்பூழில் இருந்து தொடங்கி மேல் எழும் மயிர் ஒழுங்கானது, காமன் என்ற வேடன் கொப்பூழுக்குள் மறைந்திருந்து, மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாளப் பறவைகளைப் பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஓர் அம்பினை உயர்த்தியது போல விளங்கிட,


பிணி அவிழ் மலர்மென் கூந்தல் பெண்ணமுது அனையாள், செம்பொன்
அணிவளர் அல்குல், தங்கள் அரவுசெய் பிழையால் அஞ்சி,
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து ,வனப்பு உடை அல்குல் ஆகி,
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.

கட்டு அவிழ்ந்த மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலை உடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த பூம்பாவையாரது செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது, நாக உலகத்தை ஆளும் ஆதிசேடன் உறவு ஆகிய ஒரு பாம்பு, பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு, அச்சம் கொண்டு, செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும் எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குல் ஆகிப் படத்தை விரித்துச் சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட,


வரிமயில் அனைய சாயல் மங்கைபொன் குறங்கின் மாமை,
கரி இளம் பிடிக் கை வென்று, கதலிமென் தண்டு காட்ட,
தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின் செவ்வி,
புரிவுறு பொற்பந்து என்னப் பொலிந்து ஒளிவிளங்கிப் பொங்க.

வரி பொருந்திய மயில் போன்ற சாயலைக் கொண்ட பூம்பாவையாரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது, இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை வெற்றி கொண்டு, வாழையின் மெல்லிய தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்ட, காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி பொருந்திப் பெருக,


பூஅலர் நறுமென் கூந்தல் பொன்கொடி கணைக்கால், காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த,
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர்வுற்று ஓங்க.

மலர்கள் மலர்வதற்கு இடமான மென்மையான கூந்தலை உடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால், காமனின் அம்பறாத் துணியே போன்ற அழகால், மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத் தட்டின் அழகை வெற்றி கொண்டு, எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத கணைக்காலின் ஒளி விளங்கித் தோன்ற,


கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொன்திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ,ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி, அழகினுக்கு அணியாய் நின்றாள்.

கற்பக மரம் தந்த சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க் கொத்துகள் மலர்ந்தவை போன்ற அழகை நல்ல அடிகள் புலப்படுத்த, இம் மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றார்.

இவ்வாறு முடி தொடங்கி அடி வரை, சிவபெருமானின் கருணை வெள்ளத்தால் தோன்றிய பூம்பாவையாரின அழகினைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டினார்.   


எண்ணில்ஆண்டு எய்தும் வேதாப்
     படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
     அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறு ஆண்டு
         பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
         ஆயிர முகத்தால் கண்டார்.

அளவற்ற ஆண்டுகள் கழிந்த நான்முகன், தான் படைத்த திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான்.

அவளை விட மேலான நலங்கள் பலவும் அமைந்த பூம்பாவையாரிடம், பதினாறு ஆண்டு எனக் கணக்கிடத் தகும் சீகாழித் தலைவராம் திருஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானின் திருவருள் பெருக்கையே ஆயிரம் முகங்களால் காண்பார் ஆயினார்.

நான்முகன், எண்ணில் ஆண்டு எய்தியவன். வயது முதிர்ந்தவன். அவனால் படைக்கப்பட்ட திலோத்தமையானவள் மகள் புறையை உடையவள். அத்திலோத்தமையின் அழகைத் தன் நான்முகங்களாலும் கண்டு, அவளை விரும்பினன்.

 நமது பிள்ளையார், பதினாறு ஆண்டு வயதை நெருங்கும் மிக இளைஞர். அவர் தம் திருவருள் திறத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் பூம்பாவையார். சிவநேசர் மகளாய் இருந்த நிலையில் இவருக்கு என உரிமையாக்கப் பெற்றவர். திருவருள் வயத்தால் தம்மால் தோற்றுவிக்கப்பட்டதால், மகள் முறையையும், திருவருள் திறத்தையுமே நினைந்து தம் ஆயிரம் திருமுகங்களானும் அத்திருவருள் பொலிவாகவே கண்டார். இதற்குக் காரணம், நான்முகன் படைப்புத் தொழிற்கு உரியவனாயினும், கலை அறிவையே (வேதா) பெற்றவன். காழிப் பிள்ளையாரோ எம்பிராட்டியின் பால் அமுதத்தோடு சிவஞானமும் குழைத்து ஊட்டப் பெற்றவர். ஆதலின் அந் நான்முகன் பார்வையில் இருந்து, இவர் பார்வை வேறுபட்டும் உயர்ந்தும் இருப்பதாயிற்று.

திருவருள் பெற்றோர் காம வயப்படார். காம வயப்பட்டார் திருவருள் வாய்க்கப் பெறார் என்கின்றார் பட்டினத்து அடிகள். அருளாளர் காம வயப்படார் என்பதற்கு அப்பர் பெருமான் சான்று. துறவிகள் காம வயப்படுதலும் கூடும்.

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணைஅடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.

அகர அம் திரு, உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி ---
  
எழுத்து உயிரும் ஒற்றும் என இருவகையாய் மருவி உள்ளது. உலகம் உயிருடைப் பொருள்களும், உயிர்களும் என இரு பிரிவு உடையது. அகரம் எல்லா எழுத்துக்களையும் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்கும். இறைவனும் எல்லாப் பொருள்களையும் இனமாகக் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்குவான். அகரம் இயங்காவழி அனைத்து எழுத்தும் எனைத்தும் இயங்கா. அவன் அசையாவழி அணுவும் அசையாது.

அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. இறைவனால் அகிலமும் சலித்து வருகின்றன. ஒலி உலகமும், உயிர் உலகமும் ஒளிபெற்று உலாவி வருநிலை ஒருங்கே தெளிவுற வந்தது.

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் ----  தொல்காப்பியம்.

அகரத்தோடு பொருந்தியே மெய்கள் நடக்கும் என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு கூறியிருக்கிறார். மெய் எழுத்துகளே என்றி, ஆ இ முதலிய உயிர் எழுத்துக்களும் அகரத்தாலேயே உயிர்த்து வருகின்றன. சரம் அசரம் என்னும் இருவகை நிலைகளும் இறைவனால் இயங்கி வருதல் போல், உயிர்களும் மெய்களும்(உயிர்களும் உலகப் பொருள்களும்) அகரத்தால் முறையோடு இயங்கி வருகின்றன. 

இறைவன் அடங்கினால் எல்லாம் அடங்கும். அவன் அசைந்தால் அகிலமும் அசையும் என்னும் இத் தலைமைத் தன்மை அகரத்திற்கும் தகைமையாய் அமைந்து இருத்தலால், அஃது இங்கு ஆதிபகவனோடு நேர் உரிமையா நேர்ந்து நிலையா உணர வந்தது. 

வாயைத் திறந்த உடனே அ என்பது இயல்பாக எழுகின்றது.  ஆகவே, ஓசை உருவங்களாய் மருவி உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் அது உறுதி புரிந்து நின்றது. தலைமைத் தன்மை பலவகையிலும் நிலைபெற்று உள்ளமையால், முதல் எழுத்து முதல்வன் என வந்தது. அகரம் என அகிலமும் நின்ற பரன் அறிய நின்றான்.

அகரஉயிர் எழுத்துஅனைத்தும் ஆகி வேறாய்
     அமர்ந்ததுஎன அகிலாண்டம் அனைத்தும்ஆகி,
பகர்வனஎல் லாம்ஆகி, அல்லது ஆகி,
         பரம்ஆகி, சொல்லஅரிய பான்மை ஆகி,
துகள்அறுசங் கற்பவிகற் பங்கள்எல்லாம்
         தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர்இல்பசு பதியான பொருளை நாடி
         நெட்டுஉயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்.
                                                                        ----  தாயுமானவர்.

அகர உயிர்போல் பரமன் அகிலாண்ட கோடி எங்கும் பரவி நிலவி உள்ளான் எனத் தாயுமானவர் இங்ஙனம் நேயமாப் பாடியுள்ளார். ஆதிபகவன் நிலையைக் குறித்து விரித்து, திருக்குறளுக்கு விருத்தியுரை போல் இது வந்து உள்ளது.

அக்ஷராணாம் அகாரோஸ்மி            ---  கீதை. 10.33

எழுத்துகளுள் நான் அகரமாய் இருக்கின்றேன் என்று கண்ணபிரான் இவ்வாறு ஆதிமூலத்தின் தலைமை நிலையை அருச்சுனனிடம் உரிமையோடு கூறி இருக்கிறார்.

அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும்     ---  திருமந்திரம்.

அகரமும் ஆகி அதிபனும் ஆகி            ---   திருப்புகழ்.

அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
         அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறும் ஆகி
         பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்த்து எய்தப்
         போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து அல்லார்க்கு
நிகரில்மறக் கருணைபுரிந்து ஆண்டுகொண்ட
         நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்.   ---  விநாயக புராணம்.

உலகுஎலாம் ஆகி, வேறுஆய்,
         உடனும்ஆய், ஒளிஆய், ஓங்கி,
அலகுஇலா உயிர்கள் கன்மத்து
         ஆணையின் அமர்ந்து  செல்லத்
தலைவனாய், இவற்றின் தன்மை
         தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலன் ஆகி,
         நின்றனன், நீங்காது எங்கும்,

ஒன்று என மறைகள் எல்லாம்
         உரைத்திட, உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை
         நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை பதிதான் ஒன்றுஎன்று
         அறையும்; அக்கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல
         நின்றனன், சிவனும் சேர்ந்தே.   ---  சிவஞான சித்தியார்.

அகரஉயிர் போல் அறிவாகி எங்கும்
நிகர்இல் இறை நிற்கும் நிறைந்து.       ---  திருவருட்பயன்.

இறைவனும் இறைவியும் வேறு அல்ல. ஒன்றே. திருமாரையும் ஒரு பாகத்தில் உடையவர் சிவபெருமான். திருமால் சிவபெருமானுக்கு புருஷ சத்தி ஆவார்.


நாக அணியார், நக்கர்எனும்
     நாமம்உடையார், நாரணன் ஓர்
பாகம் உடையார், மலைமகள் ஓர்
     பாங்கர் உடையார், பசுபதியார்,
யோகம் உடையார், ஒற்றி உளார்,
     உற்றார் அல்லர், உறுமோக
தாகம் ஒழியாது என்செய்கேன்,
     சகியே இனிநான் சகியேனே.  

என வரும் திருவருட்பாப் பாடலாலும்,

மால்அன மாயன் தன்னை மகிழ்ந்தனர், விருத்தர் ஆகும்
பாலனார், பசுபதியார், பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலால் செற்றார், காஞ்சிமா நகர்தன் உள்ளால்
ஏலநல் கடம்பன் தந்தை இலங்குமேற் றளிய னாரே.

மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்,
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்,
கண்ணினை மூன்றுங் கொண்டார், காஞ்சிமா நகர்தன் உள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார், இலங்குமேற் றளிய னாரே.

பைஅரவு அசைத்த அல்குல், பனிநிலா எறிக்குஞ் சென்னி,
மைஅரிக் கண்ணி யாளும்,  மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய் அரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்ப லத்தே
கைஎரி வீசி நின்று கனல் எரி ஆடு மாறே.

எரி அலால் உருவம் இல்லை, ஏறு அலால் ஏறல் இல்லை,
கரி அலால் போர்வை இல்லை, காண்தகு சோதி யார்க்குப்
பிரிவு இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்
அரி அலால் தேவி இல்லை,  ஐயன் ஐயாற னார்க்கே.

என வரும் அப்பர் தேவாரப் பாடல்களாலும் இது விளங்கும்.

கருத்துரை

முருகா! தேவரீரது திருமுக மண்டலத்தைத் தரிசித்து, திருவடிப்பேற்றை அடைய அருள்.
                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...