34. ஈயாதவர் இயல்பு
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்
தேடிப்
புதைத்துவைப்பார்,
சீலைநல மாகவும் கட்டார்கள், நல்அமுது
செய்து உணார், அறமும்செயார்,
புரவலர்செய் தண்டம் தனக்கும் வலு வாகப்
புகுந் திருடருக்கும்
ஈவார்,
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,
புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,
விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்
வெகுபணம்
செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என
மிகுசெட்டி
சொன்னகதைபோல்,
வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
மற்றொருவருக்கு
ஈவரோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்
பணம் தேடிப் புதைத்து வைப்பார் --- பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச்
சேர்த்துப் புதைத்து வைப்பார்.
சீலை நலமாகவும்
கட்டார்கள் --- நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.
நல் அமுது செய்து
உணார் --- நல்ல உணவு
சமைத்துச் சாப்பிடமாட்டார்.
அறமும் செயார் --- அறவழியிலும் செலவிடார்.
புரவலர் செய்
தண்டம் தனக்கும் வலுவாகப் புகும் திருடருக்கும் ஈவார் --- அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும்
கொடுப்பார்.
புலவரைக்
கண்டவுடன் ஓடிப் பதுங்குவார் --- புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார்.
புராணிகர்க்கு
ஒன்றும் உதவார் --- புராணங்களை எடுத்துக்
கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.
பிள்ளை விரகு அறிந்து சோறு கறி தினும் அளவில் --- குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்,
வெகுபணம் செலவு
ஆதலால் --- மிக்க பொருள்
செலவழிவதனாலே,
கிழவனாம் பிள்ளையே
விளையாடு பிள்ளை என --- கிழவனாகிய குழந்தையே
விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று,
மிகு செட்டி சொன்ன கதைபோல் --- மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல,
வரவு
பார்க்கின்றதே அல்லாது உலோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ --- உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?
விளக்கம் --- புரவலர் - அரசர். புரத்தல் - காத்தல். செட்டு - செட்டாக வாழ்பவர். சிக்கனமாக வாழ்பவர். விரகு - அறிவு.
ஒருவன் தன் குழந்தை உண்டு விளையாடுவதைக் கண்டு வருந்தி உணவும் பதார்த்தமும் உண்ணும் நிலை கடந்த முதியவனே
குழந்தை என்று கூறினானாக ஒரு கதை இருந்து இருக்கலாம் போலும். இதை வைத்துக் கொண்டு செட்டி
என்னும் வணிகன் அவ்வாறு கூறியதாகக் கொள்ளுதல் பொருந்தாது. சிக்கனமாக வாழ எண்ணும் சிலர்
இக் காலத்திலும் தனது குடும்பத்தாருக்கு அளவாக
உணவு அளிப்பதில்லை. நல்ல ஆடையையும் அளிக்க மாட்டார்கள். தானும் நன்றாக உண்ண மாட்டார்கள்.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்னும் ஐம்புலத்து
ஆறு ஓம்பாத இவர்களது செல்வம் அரச தண்டத்துக்கும் திருடருக்குமே பயன்படும். "ஈயார்
தேட்டை தீயார் கொள்வர்".
பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்
உற்றார், உகந்தார்
எனவேண்டார் --- மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.
என்பது ஔவையார் அருளிய நல்வழி.
பரந்துள்ள இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்தவர், இவர்
எம்முடைய நாட்டவர், இவர்
எம்முடைய உறவினர், இவர்
எமக்கு நேயம் உடையவர் என்று யாரையும் விரும்பாத உலோபிகள், பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணாக்குபவர்க்கு எல்லாவற்றையும் கொடுப்பர். முன்னே
கூறப்பட்டவர் தன்னிடத்தில் வந்து அடைக்கலமாகப் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்.
No comments:
Post a Comment