திருவாரூர் - 2





திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 217
பெருவாச மலர்ச்சோலைப்
         பெருவேளூர் பணிந்துஏத்தி,
முருகுஆரும் மலர்க்கொன்றை
         முதல்வனார் பதிபிறவும்
திருஆரும் விளமருடன்
         சென்று இறைஞ்சி, வாகீசர்
மருவார் ஊர் எரித்தவர் தம்
         திருஆரூர் வந்து அடைந்தார்.

         பொழிப்புரை : நாவரசர் நறுமணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பெருவேளூரைப் போற்றி, வாசனையுடைய கொன்றை மலர்களை அணிந்த இறைவரின் பிற பதிகளையும், திருவிளமரையும் சென்று வணங்கிப், பகைவரின் முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 218
ஆண்டஅரசு எழுந்து அருள,
         ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்டசடை முடியார்பால்
         நிறைந்த அருள் பெற்று உடையார்,
காண்தகு மாளிகை மாடம்
         கவின் சிறந்து ஓங்கிட, எங்கும்
சேண் திகழ் வீதிகள்பொலியத்
         திருமலி மங்கலம் செய்தார்.

         பொழிப்புரை : நாவரசர் எழுந்தருள, அதனை அறிந்த திருவாரூரில் இருந்த அடியவர்கள் பலரும் நீண்ட சடையையுடைய இறைவரின் நிறைந்த திருவருளைப் பெற்றவர்களாதலால், காண்பதற்கு இனிய மாளிகைகளையும் மாடங்களையும் முன்னைவிட அழகு சிறக்க அணிசெய்து, அவ்வழகு தொலைவிலும் விளங்குமாறு வீதிகளை விளக்கமுறச் செய்து திருவுடைய மங்கல அணிகளைச் செய்தனர்.


பெ. பு. பாடல் எண் : 219
"வல் அமண் குண்டர் தம்
         மாயை கடந்து, மறிகடலில்
கல்லே மிதப்பு ஆகப் போந்த
         அவர் வந்தார்", எனும் களிப்பால்,
எல்லைஇல் தொண்டர் எயில்
         புறம் சென்று எதிர் கொண்டபோது,
சொல்லின் அரசர் வணங்கித்
         தொழுதுஉரை செய்து அணைவார்.

         பொழிப்புரை : கொடிய மனவன்மையுடைய சமணர்கள் செய்த மாயையைக் கடந்து, அலைமறிக்கும் கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு கரை ஏறி வந்தவரான பெரியவர் வந்தார் என்ற மகிழ்ச்சியால், அளவற்ற தொண்டர்கள், நகரமதிலின் வெளியே வந்து எதிர்கொண்டபோது, நாவுக்கரசர் அத்தொண்டர்களைத் தொழுது, போற்றி அணைபவராய்,


பெ. பு. பாடல் எண் : 220
"பற்றுஒன்று இலாஅரும் பாதகர்
         ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப்போந்
         தேன் பெறல் ஆவது ஒன்றே,
புற்று இடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்
         தொண்டர் ஆம் புண்ணியம்" என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த்
         திருவீதி உள் அணைந்தார்.

         பொழிப்புரை : புற்றைத் தமக்கு இடனாகக் கொண்டு வீற்றிருக்கும் வன்மீகநாதரின் தொண்டர்களுக்குத் தொண்டராகும் புண்ணியமாவது, ஒன்றாலும் பற்றத் தகாதவர்களாய்ப் பெரும் பாதகர்களான அமணர்களிடத்திலிருந்துப் பொருந்தியதான நோய் நீங்கி உய்யும் பொருட்டாக வந்து புகுந்தயானும், பெறத்தக்கது ஒன்று ஆகுமோ? என்று சொல்லித் தம் செயல் அற்றவராய்த் திருவாரூர்த் திருவீதியைச் சேர்ந்தார்.

         இக்கருத்து அமைவு உடையது `குலம்பலம்பா` (தி.4 ப.101 பா.1) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும், இத் திருப்பதிகத்து அமைந்த பாடல்கள் பத்திலும் சிறுமையுடைய தமக்கு இவ் அருமையுடைய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் பெறத்தகுமோ? எனக் கனிந்து பாடுகின்றார் நாவுக்கரசர்.  பிணி - பிணிப்பு; தொடர்பு. அதுவே பெருநோயானது.

திருநாவுக்கரசர்  திருப்பதிகம்

4. 101    திருவாரூர்                                திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டுகொலோ?
அலம்பு அலம்பு ஆ வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும் தண்ணிய நீர்வளம் மிக்க திருவாரூரில் , விளங்குகின்ற சடைமுடியையும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையும் உடைய சிவபெருமானுடைய திருமூலத்தானத்தே , அப்பெருமானுடைய பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணி உருகுதலால் கண்ணீர் வடித்து வரும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப்பேறு , கூட்டமும் வலிமையும் பரவிய மூர்க்கர்களாகிய சமணர் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்டுமோ ?
  
பாடல் எண் : 2
மற்றுஇடம் இன்றி மனை துறந்து, அல்உணா வல்அமணர்
சொல்திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ?
வில்திடம் வாங்கி விசயனொடு அன்றுஒரு வேடுவனாய்ப்
புற்றுஇடம் கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : அருச்சுனனுடைய வில்லின் வலிமையைக் கவர்ந்து அக்காலத்தில் வேடுவனாய்க் காட்சி வழங்கிய திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவராகும் நல் வினைப் பேறு , வீட்டினையும் துறந்து வேறு இடமும் இல்லாமல் இரவில் உண்ணுதல் இல்லாத உடல் வலிய சமணர்கள் கூறும் செய்திகளே உறுதியானவை என்று கருதிக் குற்றம் செய்த அடியேனுக்கும் கிட்டுமோ ?


பாடல் எண் : 3
ஒருவடிவு இன்றிநின்று உண்குண்டர் முன்நமக்கு உண்டுகொலோ?
செருவடி வெஞ்சிலை யால்புரம் அட்டவன், சென்றுஅடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : போருக்காக வளைத்துக் கொண்ட மேருமலையாகிய வில்லினாலே மும்மதில்களையும் அழித்தவனாய் , தான் போய்த் தேடாமல் இயல்பாகவே மேம்பட்ட செல்வத்தை உடையனாய்த் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறைபவனான , திருமாலாகிய , சிவந்த கண்களை உடைய போரிடும் காளையை உடைய பெருமானுடைய அடியார்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , ஆடைகளால் பொலிவு செய்யப்படும் வடிவழகின்றி நின்றபடியே உணவினை வாங்கி உண்ணும் மூர்க்கர்களாகிய சமணர் , தம் கண்களால் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?


பாடல் எண் : 4
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரைவிட்டு
ஈசனை யேநினைந்து ஏசறு வேனுக்கும் உண்டுகொலோ?
தேசனை ஆரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து
பூசனைப்பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : ஞான ஒளி வடிவினனாகிய திருவாரூர் மூலத் தானப் பெருமானைப் பூசனை செய்யும் நில உலகத்தேவர்களின் அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப் பேறு , அழுக்கு ஏறிய உடம்பினராய் , அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணினராய் வழுக்கைத் தலையரான சமணர்களுடைய தொடர்பை விடுத்து , எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமானையே நினைத்து வருந்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?


பாடல் எண் : 5
அருந்தும் பொழுதுஉரை ஆடா அமணர் திறம்அகன்று,
வருந்தி நினைந்து, அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ?
திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொருந்தும் தவம்உடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : திருத்தமாக அமைந்த பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானனுக்கு உகப்பான தவத்தில் ஈடுபட்ட அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , உண்ணும் போது யாரிடமும் பேசாதிருத்தலை விரதமாகக் கொண்ட அமணர் கூட்டத்தை விடுத்து , பழைய செயலுக்கு வருந்தி நின்று ` தீவினையை அழிப்பவனே ` என்று , அவனை வாழ்த்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?


பாடல் எண் : 6
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று, வெற்றுஅரையே
மூங்கைகள் போல்உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டுகொலோ?
தேங்கமழ் சோலைத்தென் ஆரூர்த் திருமூலட் டானன்,செய்ய
பூங்கழ லான்அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : மணம் கமழும் சோலைகளை உடைய அழகிய ஆரூரில் திருமூலத்தானத்து உறையும் சிவந்த மலர்போன்ற திருவடிகளை உடைய பெருமான் திருவடிகளில் தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு , பருத்த தோள்களையும் கால்களையும் கொண்டு ஆடை உடுக்காதவராய் ஊமைகள் போல யாரிடமும் பேசாமல் உண்ணும் மூடர்களாகிய சமணர்கள் காணுமாறு நமக்குக் கிட்டும் வாய்ப்பு உளதோ ?


பாடல் எண் : 7
பண்ணிய சாத்திரப் பேய்கள், பறிதலைக் குண்டரைவிட்டு,
எண்ணில் புகழ்ஈசன் தன்அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ?
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன் தன்அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : உறுதியான பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எங்கள் நல்வினை வடிவினனாகிய பெருமானுடைய அடித்தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம் , தாமாகவே புனைந்துரைத்த சாத்திரங்களை உபதேசிப்பவராய் , வலிய தலைமயிரை நீக்கிக் கொள்பவராய் உள்ள சமண மூர்க்கர்களை விடுத்துக் கணக்கிட முடியாத புகழை உடைய ஈசன் அருளைப் பெற்ற அடியேனுக்கும் உண்டோ ?


பாடல் எண் : 8
கரப்பர்கள் மெய்யை, தலைபறிக் கச்சுகம் என்னும்குண்டர்
உரைப்பன கேளாது இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ?
திருப்பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்
பொருப்பன், விருப்புஅமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : செல்வத்தால் பொலிவு பெற்ற திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் கயிலாயபதியிடம் விருப்பம் பொருந்திய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , ஒரோவழித் தம் உடம்பைப் பாயால் மறைப்பவராய்த் தலைமயிரை வலிய நீக்குவதே சுகம் என்று கூறும் சமண சமய மூர்க்கர்கள் உரைத்தன வற்றைக் கேளாமல் சிவபெருமான் பக்கல் கடைத்தேறுவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் உண்டோ ?


பாடல் எண் : 9
கையில்இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ?
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய்அன்பு இலாஅடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : நம் தலைவனாய் அழகிய வயல்களை உடைய திருவாரூரின் திருமூலத்தானப் பெருமான் பக்கல் உண்மையான அன்புடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , கையில் வழங்கப்படும் சோற்றை நின்றபடியே உண்ணும் செயலில் விருப்பம் கொள்ளும் சமணரைவிடுத்து , பிழைத்தற்குரிய வழியைக் கண்டு சிவபெருமான் பக்கல் பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்காக வந்து சேர்ந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?


பாடல் எண் : 10
குற்றம் உடைய அமணர் திறம்அது கை அகன்றிட்டு,
உற்ற கருமஞ்செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ?
மல்பொலி தோளான் இராவணன் தன்வலி வாட்டுவித்த
பொன் கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

         பொழிப்புரை : வலிமை பொருந்திய தோள்களை உடைய இராவணனுடைய வலிமையை அழியச் செய்த பொன்னாலாகிய கழலை அணிந்த சிவபெருமானுடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , குற்றமுடைய சமணர்கள் சமயத்தின் கூறுபாடுகளை விடுத்து நீங்கி , சைவ சமயத்தில் அடியேனுக்குச் செய்வதற்காக வகுக்கப்பட்ட செயல்களைச் செய்து பிறவிப் பிணியினின்றும் பிழைத்துப் போவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிகம் வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 221
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி,
ஆழி வரைத் திருமாளிகை வாயில் அவை புகுந்து,
நீள்சுடர் மாமணிப் புற்றுஉகந்தாரை நேர் கண்டுகொண்டார்.

         பொழிப்புரை : தம்மைச் சூழ்ந்து வந்த அத்தொண்டர்களுடன் தோரணங்கள் தொங்கவிடப்பட்ட வாயிலை அடைந்து, வாழ்வையுடைய திருவினால் மிக்க தேவாசிரிய மண்டபத்தின் முன்வந்து வணங்கிச், சக்கரவாள மலைபோன்ற திருமாளிகையின் வாயிலுள் புகுந்து, ஒளிவீசும் பெரிய அழகான புற்றில் வீற்றிருக்கும் இறைவரை நேரே கண்டு மகிழ்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 222
கண்டு தொழுது, விழுந்து, கரசர ணாதிஅங்கம்
கொண்ட புளகங்கள் ஆக எழுந்து, அன்பு கூரக்கண்கள்
தண்துளி மாரி பொழிய, திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.

         பொழிப்புரை : கண்டு, தொழுது, நிலம் பொருத்த விழுந்து வணங்கிக் கைகால் முதலிய உறுப்புக்கள் எல்லாம் மயிர்க்கூச்சல் ஏற்பட எழுந்து, அன்பு மிகுதலால் கண்களினின்றும் நீர் மழைபோலப் பொழியத், திருமூலட்டான இறைவரின் தாமரை போன்ற திருவடிகளை வழுத்திப் போற்றித் திருத்தாண்டகப் பதிகத்தையும் பாடி,

         இது பொழுது அருளிய திருப்பதிகம் `கற்றவர்கள்` (தி.6 ப.32) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். இப்பதிகம் முழுதும் போற்றி போற்றி என வருதலின் போற்றித் திருத்தாண்டகமாயிற்று. இதில் போற்றி என்ற தொடர் 108 முறை வருகின்றது.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்

6.    032   திருவாரூர்
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கற்றவர்கள் உண்ணும்  கனியே போற்றி
         கழல்அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆர்அமுதம் ஆனாய் போற்றி
         அல்லல்அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றுஒருவர் ஒப்புஇல்லா மைந்தா போற்றி
         வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம்எரித்த சிவனே போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : அநுபவப் பொருளை ஞானதேசிகன் பால் உணர்ந்தவர்கள் உண்ணும் கனியே! திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் நற்பேறே! உன்னையன்றிப் பிறிதொரு பற்றற்றவர்களுக்குக் கிட்டும் அமுதமே! துயர் துடைத்து அடியேனை ஆட்கொண்டவனே! பிறர் ஒப்பாகமாட்டாத வலியவனே! தேவர்கள் போற்றும் அமுதமே! பகைவர்களின் மும்மதில்களை அழித்த சிவனே! திருவாரூர் திருமூலட்டானனே! நீ வாழ்க.


பாடல் எண் : 2
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
         மதயானை ஈர்உரிவை போர்த்தாய் போற்றி
கொங்குஅலரும் நறும்கொன்றைத் தாராய் போற்றி
         கொல்புலித் தோல்ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
         ஆலமர நீழல்அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : கப்பல்கள் செல்லும் கடலின் நஞ்சை உண்டவனே! மத யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தியவனே! தேனொடு மலரும் நறுங்கொன்றை மாலையை அணிந்தவனே! உன்னால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்த இளையவனே! அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே! தேவர் தலைவனே! ஆல நிழலில் அமர்ந்து அறத்தை மௌன நிலையில் சனகர் முதலியோருக்கு அருளியவனே! ஒப்பற்ற பொற்குன்றே! சிவனே! திருமூலட்டானத்து உறைபவனே! நீ வாழ்க.


பாடல் எண் : 3
மலையான் மடந்தை மணாளா போற்றி
         மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி
         நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலைஆர்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
         ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால்அன்று எயில்எரித்த சிவனே போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : பார்வதி மணவாளனே! இளைய காளையை உடையவனே! என் நெஞ்சில் நிலையாக நிற்பவனே! நெற்றிக் கண்ணனே! இலைவடிவாய் அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே! ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆகியவனே! வில்லால் மும்மதில்களை எரித்த சிவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! உன் திருவடி வாழ்க.


பாடல் எண் : 4
பொன்இயலும் மேனியனே போற்றி போற்றி
         பூதப் படைஉடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
         மறிஏந்து கையானே போற்றி போற்றி
உன்னும்அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
         உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.
        
         பொழிப்புரை :பொன்னார் மேனியனே! பூதப்படையனே! சிறப்பு நிலைபெற்ற நான்கு வேதங்களும் ஆனவனே! மான் குட்டியை ஏந்திய கையினனே! உன்னையே தியானிப்பவருக்கு உள் பொருளாய் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றவனே! உலகுக்கு ஒப்பற்ற தலைவனே! சென்னியில் வெண்பிறை சூடியவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.


பாடல் எண் : 5
நஞ்சுஉடைய கண்டனே போற்றி போற்றி
         நல்தவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி
         வெண்மதிஅம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சுஇருளில் ஆடல் உகந்தாய் போற்றி
         தூநீறு மெய்க்குஅணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : விடம் தங்கிய கழுத்தினனே! ஞானயோக வடிவினனே! சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வேந்தனே! வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனே! எல்லாம் ஒடுங்கிய இருளில் கூத்தாடுதலை உகந்தவனே! திருநீறு பூசிய சோதியே! சிவந்த சடையை உடையவனே! திருமூலட்டானனே! உன் திருவடி வாழ்க.


பாடல் எண் : 6
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
         சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்குஅரவா நின்பாதம் போற்றி போற்றி
         புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அம்கமலத்து அயனோடு மாலும் காணா
         அனல்உருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : சங்கரனே! சதாசிவனே! படம் எடுக்கும் பாம்பை அணிந்தவனே! புண்ணியனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தீப்பிழம்பின் வடிவானவனே! திருமூலட்டானத்து உறைபவனே! உன் திருப்பாதங்கள் வாழ்க.


பாடல் எண் : 7
வம்புஉலவு கொன்றைச் சடையாய் போற்றி
         வான்பிறையும் வாள்அரவும் வைத்தாய் போற்றி
கொம்புஅனைய நுண்இடையாள் கூறா போற்றி
         குரைகழலால் கூற்றுஉதைத்த கோவே போற்றி
நம்பும்அவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
         நால்வேதம் ஆறுஅங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை :நறுமணம் கமழும் கொன்றைப் பூ அணிந்த சடையனே! சடையில் வானில் உலவும் பிறையையும் ஒளிவீசும் பாம்பினையும் சூடியவனே! பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனே! கழலணிந்த திருவடிகளால் கூற்றுவனை உதைத்த தலைவனே! விரும்பும் அடியார்க்குக் கிட்டுதற்கு இனிய செல்வமே! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே! செம்பொன், மரகதம், மாணிக்கம் போன்றவனே! திருமூலட்டானத்தில் உறைகின்றவனே! நீ வாழ்க.


பாடல் எண் : 8
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
         உகப்பார் மனத்துஎன்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
         வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறுஏறும் விகிர்தா போற்றி
         மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : என் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே! உன்னை விரும்புவார் உள்ளத்தை என்றும் நீங்காது இருப்பவனே! வள்ளலே! மணவாளனே! இந்திரனுடைய தோளை நீக்கிய வலிமையுடையவனே! வெண்ணிறக் காளையை ஏறும் உலகியலிலிருந்து வேறு பட்டவனே! எல்லாருக்கும் மேம்பட்டவனே! தெளிந்த நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்றவனே! திருமூலட்டானத்தில் உள்ளவனே! நீ வாழ்க.


பாடல் எண் : 9
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
         புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
         திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்துஎன்னை ஆண்டாய் போற்றி
         சங்குஒத்த நீற்றுஎம் சதுரா போற்றி
சேஆர்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : பூக்கள் நிறைந்த சடைமுடியை உடையவனே! தூயவனே! தேவர்கள் துதிக்கும் பரம்பொருளே! தெய்வத்தன்மை நிரம்பிய தேவர்களுக்கும் தேவனே! திருமாலுக்குச் சக்கரம் அளித்தவனே! இம்மனிதப் பிறப்பெடுத்தும் வீணாகச் சாகாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றி என்னை ஆண்டவனே! சங்கினை ஒத்த வெள்ளிய நீற்றினை அணிந்த பெருந்திறமை உடையவனே! காளை வடிவம் எழுதிய கொடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.


பாடல் எண் : 10
பிரமன்தன் சிரம்அரிந்த பெரியோய் போற்றி
         பெண்உருவோடு ஆண்உருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
         காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
         அன்றுஅரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

         பொழிப்புரை : பிரமனுடைய ஐந்தாம் தலையை நீக்கிய பெரியோனே! பெண்ணுருவும், ஆணுருவுமாய் இருப்பவனே! நான்கு கைகளும் முக்கண்களும் உடையவனே! அமுதத்தை உண்ணும் தேவர்களுக்கு அரசே! ஒரு காலத்தில் இராவணனுடைய இருபது தோள்களையும் கால்களையும் தலைகளையும் நெரித்த திருவடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------
     
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 223
"காண்டலே கருத்தாய் நினைந்து" என்னும் கலைப்பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதிமுன் நின்று, துதித்து, உருகி,
ஈண்டு மணிக்கோயில் சூழ வலம்செய்து இறைஞ்சி, அன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு வாயில் புறத்து அணைந்தார்.

         பொழிப்புரை : அதன்பின்னர்க் `காண்டலே கருத்தாய் நினைந்து` (தி.4 ப.20) எனும் தொடக்கமுடைய மெய்யுணர்வைத் தரும் பதிகத்தைத் தூண்டா விளக்கைப் போன்ற தன்வயத்தாய ஒளிமிக்க புற்றிடம் கொண்ட பெருமானின் திருமுன்பு நின்று, போற்றி, உள்ளம் உருக அழகிய கோயிலை வலமாகச் சுற்றி வந்து, இறைஞ்சி, அன்பு கொண்ட உள்ளத்துடன் நீண்ட திருவாயிலின் பக்கத்தை அடைந்தார்.

         இதுபொழுது அருளிய `காண்டலே கருத்தாய்` (தி.4 ப.20) எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும். கலைப் பதிகம் - மெய்யுணர்வை வழங்கும் பதிகம்.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்


4. 020    திருவாரூர்                           பண் - சீகாமரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன், மனம் புகுந்தாய்,கழல்அடி
பூண்டு கொண்டு ஒழிந்தேன், புறம் போயினால் அறையோ,
ஈண்டுமாடங்கள் நீண்டமா ளிகை மேல் எழுகொடி வான் இளம்மதி
தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : நெருங்கிய மாடங்கள் நீண்ட மாளிகைகள் இவற்றின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் . உன்மேல் ஆணை .


பாடல் எண் : 2
கடம்படந்நடம் ஆடினாய்,களைகண், நினக்கு ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன், ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்,
முடங்கு இறால் முதுநீர் மலங்கு இளவாளை செங்கயல் சேல் வரால் களிறு
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே.

         பொழிப்புரை : வளைந்த இறால் மீன் , பழைய நீர்ப்பள்ளத்தில் உறையும் மலங்கு , இளைய வாளைமீன் , சிவந்த கயல்மீன்கள் , சேல்மீன்கள் , வரால் மீன்கள் , களிறு என்ற மீன்கள் வந்து சேரும் குளிர்ந்த வயல்களை உடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே ! அடைக்கலம் நல்குபவனாயுள்ள நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளில் உலகப் பற்றுக்கள் ஒடுங்க , வந்து அடைந்தேன் . அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக .


பாடல் எண் : 3
அருமணித் தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு , கோயில் பணி செய்பவர்கள் . ஆதி சைவர்கள் , சிவகணத்தார் , விரிந்த சடையை உடைய , விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள் , அந்தணர் , சைவர் , பாசுபதர் , கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !


பாடல் எண் : 4
பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா! புனிதா! உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன், என்ன குறை உடையேன்?
ஓங்கு தெங்குஇலை ஆர் கமுகு இள வாழைமாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவு உயர்ந்த பாக்கு மரம் , இளவாழை , மா , மாதுளம் , பலா என்பன இனிய பழங்களை உதிர்க்கும் திருவாரூர்த் தலைவனே ! உன்னுடைய பொலிவை உடைய திருவடிகளைத் தொழுதும் முன் நின்று துதித்தும் , புண்ணியனாய்ப் புனிதனாயுள்ள உன்னுடைய அழகிய திருவடிகள் என்னிடத்துத் தங்கப் பெற்றதனால் அடியேன் இனிவேறு யாது தேவையை உடையேன் ? ஈங்கு - என்னிடம் .


பாடல் எண் : 5
நீறு சேர் செழு மார்பினாய்! நிரம்பா மதியொடு நீள் சடை இடை
ஆறுபாய வைத்தாய்! அடியே அடைந்து ஒழிந்தேன்,
ஏறி வண்டொடு தும்பி அஞ்சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ்வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து , அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால், மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே ! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய் , பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய் . அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன் .


பாடல் எண் : 6
அளித்து வந்து அடி கைதொழும் அவர் மேல்வினை கெடும் என்று, இவ்வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆட, காதலராய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : உலகிலுள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்புக் கொண்டு வந்து ஒரு சேரக்கூடி ஆட , அதனைக் கண்டு தாமும் விருப்பமுற்றவராய்கக் கழுத்துவரை குளித்தும் தலை நனைய மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர்மேல் மற்றவர் வாரி இறைத்தும் , நீரில் உட்புக்கு நீராடும் மகளிர் மயிர் முடிமீது அபிடேக நீர் தெளிக்கப்படும் திருவாரூர்த் தலைவனே ! அன்பு முதிரப் பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற அடியார்களுடைய வரக்கடவ வினைகளும் அழிந்து விடும் என்று நீ தெரிவிக்கின்றாய் ஆதலின் அடியவர் உன்னடிகளைத் தவறாது வணங்குகின்றனர் .


பாடல் எண் : 7
திரியும் மூஎயில் தீ  எழச்சிலை வாங்கி நின்றவனே,என் சிந்தையுள்
பிரியுமாறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன்,
பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்த சாலி, திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண்கழனி அணிஆரூர் அம்மானே.

         பொழிப்புரை : உயர்வாகக் கூறப்படும் செந்நெல் , பிரம்புரி , கெந்தசாலி , திப்பியம் என்ற பெயருடைய நெல்வகைகள் தம்மகத்து அறுவடை செய்யப்படும் குளிர்ந்த வயல்வளமுடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! வானத்தில் உலவும் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு வில்லை வளைத்து நின்றவனே ! என் உள்ளத்திலிருந்து நீ யாங்ஙனம் பிரிவாய் ? மறந்தும் கூட நீ என்னை விடுத்து நீங்க உன்னை விடமாட்டேன்.


பாடல் எண் : 8
பிறத்தலும், பிறந்தால் பிணிப்பட வாய்ந்து, அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்குமாறு உளதே, இழித்தேன் பிறப்பினை நான்,
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச் செற்றக் குரோதம் நீக்கி, உன்
திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூர் அம்மானே.

         பொழிப்புரை : திருவாரூர் அம்மானே ! இறந்தால் பிறத்தலும் பிறந்தால் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற நுணுகி வருந்தி இறக்குமாறும் உள்ளவே . அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய் , அறத்தையே விரும்பிய மனத்தினேனாய் , ஆசை , பகை , வெகுளி இவற்றை நீக்கி உன் அடிமைத் திறத்தில் ஈடுபட்டேனாய் உலகியற் செயல்களிலிருந்து நீங்கினேன் .


பாடல் எண் : 9
முளைத்த வெண்பிறை மொய்சடை உடையாய்! எப்போதும் 
                                               என் நெஞ்சுஇடம் கொள்ள
வளைத்துக் கொண்டு இருந்தேன், வலிசெய்து போகல் ஒட்டேன்,
அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகுதந்த காலமும் கண்டு தன்பெடை
திளைக்கும் தண்கழனித் திருஆரூர் அம்மானே.

         பொழிப்புரை : வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் வளையில் புகுந்த காலத்தை நோக்கிப் பெடை நண்டு அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூர் அம்மானே ! பிறையை அணிந்த செறிந்த சடையனே ! எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும் சுற்றிக்கொண்டிருந்த அடியேன் இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப்போக ஒருப்படேன் .


பாடல் எண் : 10
நாடினார் கமலம் மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானைப்
பாடுவார், பணிவார், பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருஆரூர் அம்மானே.

         பொழிப்புரை : திருவாரூர் அம்மானே ! தாமரை மலரில் உள்ள பிரமனோடு , இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய் , நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன் .

                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 224
செய்யமா மணி ஒளிசூழ் திருமுன்றின்
         முன் தேவாசிரியன் சார்ந்து,
"கொய்உலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ,
         மயில்ஆலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாது ஒழிந்து, கனிஇருக்கக்
         காய்கவர்ந்த கள்வ னேன்" என்று
எய்த அரிய கையறவாம் திருப்பதிகம்
         அருள்செய்து, அங்கு இருந்தார் அன்றே.

         பொழிப்புரை : பின்னர் அவர், சிவந்த மணிகளின் பேரொளி விளங்கும் திருமுற்றத்தின் முன் உள்ள தேவாசிரிய மண்டபத்தைச் சேர்ந்து, அரும்புகள் நிறைந்த பூஞ்சோலைகளில் குயில்கள் கூவவும், மயில்கள் அகவவும் உள்ள திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமானைக் கைகளைக் கூப்பி வணங்காததால், நான் கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன் ஆனேன் எனும் கருத்தால், அடைதற்கு அரிய மிக்க துன்பத்தின் மிகுதியால் திருப்பதிகத்தைப் பாடி, அங்குத் தங்கியிருந்தார்.

         கொய் - மலர் அரும்புகள். இத் திருப்பதிகத்தில் காணப்படும் பாடல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழி அருளப் பெற்றிருப்பதால் இதனைப் பழமொழித் திருப்பதிகம் என அழைப்பர். இவற்றுள் முதல் பாடலில் வரும் பழமொழியே `கனியிருப்பக் காய் கவர்ந்த கள்வனேன்` என்பதாகும். இப்பாடலின் பின்னிரண்டடிகளை அப்படியே சேக்கிழார் முகந்து எடுத்து மொழிந்துள்ளார். `மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த` (தி.4 ப.5) எனும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும்.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 005    திருவாரூர்                            பண் - காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மெய்எலாம் வெண்ணீறு சண்ணித்த
         மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி, உறி தூக்கி
         உழிதந்து, என் உள்ளம் விட்டுக்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ,
         மயில்ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது ஒழிந்து, கனிஇருக்கக்
         காய் கவர்ந்த கள்வனேனே.

         பொழிப்புரை :உடம்பெல்லாம் வெண்ணீறு பூசிய பெருமானுடைய திருவடிகளை வழிபடாமல், கடைத்தேறலாம் என்று நினைத்துச் சமணசமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்து மனத்தை அச்சமயத்தில் பறி கொடுத்து, கொய்தற்காக அடியவர்கள் உலவும் பூக்களை உடைய சோலைகளில் குயில்கள் கூவவும் மயில்கள் ஆடவும் அமைந்திருக்கும் திருவாரூரில் உகந்தருளியிருக்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கிச் சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே.

இனிய உள ஆ, இன்னாத கூறல், கனி இருப்ப,
காய் கவர்ந்து அற்று.

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். இனிய சுவை உடைய
கனிகள் பல இருப்பினும், இனிமையைத் தராத காய்களை உண்ணுவது அறியாமை. கனிகள் அனைத்தும் இனிய சுவை உடையன அல்ல. காய்கள் அனைத்தும் உண்ணத் தகுந்தன அல்ல. இனிமை தருவனவற்றைத் தேருதல் என்னும் அறிவு இன்மையைக் குறித்து இது நின்றது.


பாடல் எண் : 2
என்பு இருத்தி நரம்பு தோல் புகப்பெய்திட்டு,
         என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,
         என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி அடியேனைக் கூழ்ஆட்கொண்டு
         அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி, முயல்விட்டுக்
         காக்கைப் பின் போன வாறே.

         பொழிப்புரை :எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக் கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

         முயலின் பின் போதல் எளிது. காக்கையின் பின் போதல், பறத்தல் ஆகிய இயல்பில்லாத உயிர்க்கு அரிது. முயல் சைவ சமயத்துக்கு உவமை. காக்கை - சமண் சமயத்துக்கு ஒப்பு. அருள் வழிச் செல்லாது மருள் வழிச் செலவுக்கு உவமையும் ஆம்.


பாடல் எண் : 3
பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம்
         குண்டர்கள்தம் சொல்லே கேட்டு,
உருகுவித்து என் உள்ளத்தின் உள் இருந்த
         கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்துப் பிணிகாட்டி, ஆட்கொண்டு
         பிணிதீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி, அறம் இருக்க
         மறம் விலைக்குக் கொண்டவாறே.

         பொழிப்புரை :முன்பெல்லாம் உடல்பருத்த சமணத்துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்த கள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச் செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.


பாடல் எண் : 4
குண்டனாய்த் தலைபறித்து, குவிமுலையார் 
         நகைநாணாது உழிதர் வேனை,
பண்டமாப் படுத்து, என்னைப் பால்தலையில்
         தெளித்து, தன் பாதம் காட்டி,
தொண்டு எலாம் இசை பாடத் தூமுறுவல்
         அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டுஎலாம் அறியாதே, பனிநீரால்
         பாவைசெயப் பாவித்தேனே.

         பொழிப்புரை : உடல் பருத்தவனாய்த் தலை மயிரை வலியப் பறித்துத் தலையை மொட்டையாக்கிக்கொண்டு, இள மகளிருடைய ஏளனச் சிரிப்பிற்கும் வெட்கப்படாமல் திரிந்த அடியேனை ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு, பால் முதலிய பஞ்சகவ்வியத்தால் தூய்மை பெறச் செய்து தன் திருவடிகளைத் தரிசிப்பதற்குத் தொண்டர்கள் எல்லோரும் தம்புகழைப் பாட அதனைச் செவிமடுத்துப் புன்முறுவலோடு அருள் செய்யும் அப்பெருமானை என் வாழ்க்கையின் முற்பகுதியில் அறியாமல் திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போல, உண்மையறிவுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன் ஆனேனே.


பாடல் எண் : 5
துன் நாகத் தேன்ஆகி, துர்ச்சனவர்
         சொல்கேட்டு, துவர்வாய்க் கொண்டு
என்ஆகத் திரிதந்து ஈங்கு இருகை ஏற்று
         இட உண்ட ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப்பெய்து
         பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே, ஏதன் போர்க்கு
         ஆதனாய் அகப்பட்டேனே.

         பொழிப்புரை :கொடிய பாம்பினை ஒத்தேனாகித் தீயவர் சொற்களைக் கேட்டு, கடுக்காயை உண்பதால் அதன் கறை படிந்த பற்களை உடையேனாய், என்விருப்பம்போலத் திரிந்து இரு கைகளையும் இணைத்து அவற்றில் பிச்சை ஏற்ற உணவினை உண்ட அறிவிலியாகிய அடியேன், பொன்போன்ற செவ்விய உடலிலே அடியேனை இருத்திக் குறிப்பிடத்தக்க பொருளாக அடியேனை ஆக்கிய ஆரூர்ப் பெருமானை என் உள்ளத்தில் நிலையாக இருக்கச் செய்யாமல், ஒருவன், விளைத்த சண்டையில் அதனோடு யாதும் தொடர்பில்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவதுபோலப் நவீனரான சமணர்கள் செய்த செயல்களில் பரம்பரைச் சைவனாகிய அடியேன் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றேனே.


பாடல் எண் : 6
பப்பு ஓதி, பவணனாய்ப் பறித்தது, ஒரு
         தலையோடே திரி தர்வேனை,
ஒப்புஓட ஓதுவித்து, என் உள்ளத்தின்
         உள் இருந்து, அங்கு உறுதி காட்டி,
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு
         ஆர் அமுதாம் ஆரூரரை
எப்போதும் நினையாதே, இருட்டுஅறையில்
         மலடுகறந்து எய்த்தவாறே.

         பொழிப்புரை : உலகில் பிறக்கும் பிறவிகளையே நல்கும் நூல்களை ஓதிச் சமணனாய் வலிய மயிர் நீக்கப்பட்ட மொட்டைத் தலையோடு திரியும் அடியேனை நிகரில்லாத வகையில் உவமையிலாக் கலை ஞானத்தை உபதேசித்து என் உள்ளத்தினுள்ளே தங்கி உயிருக்கு உறுதியானவற்றைத் தெரிவித்து ஒவ்வொரு கணமும் அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமாக உள்ள ஆரூர்ப் பெருமானை எப்பொழுதும் நினையாமல், கறப்பவனொருவன், பயனின்மை மட்டிலன்றிக் காலுதையும் பட்டினைப்பவனாய் இருட்டறையில் மலட்டுப் பசுவை பால் வேண்டிக் கறந்து இளைப்பது போலப் பயனின்றித் துன்புறுதலோடு வாழ்நாளின் முற்பகுதியைக் கழித்தேனே.


பாடல் எண் : 7
கதி ஒன்றும் அறியாதே, கண்அழலத்
         தலைபறித்து, கையில் உண்டு,
பதிஒன்று நெடுவீதிப் பலர்காண
         நகைநாணாது உழிதர்வேற்கு,
மதி தந்த ஆரூரில் வார் தேனை,
         வாய் மடுத்துப் பருகி உய்யும்
விதிஇன்றி, மதியிலியேன், விளக்கு இருக்க
         மின்மினித் தீக் காய்ந்த வாறே.

         பொழிப்புரை : இனிச்சென்று சேரும் வழியை அறியாமல், கண் எரியுமாறு தலைமயிரை வலியப்பறித்து, கைகளிலேயே உணவை வாங்கியவாறே உண்டு ஊர்களிலுள்ள பெருந்தெருக்களில் பலரும் காண அவருடைய ஏளனச் சிரிப்புக்கு வெட்காமல் திரியும் அடியேனுக்கு நல்லறிவை வழங்கி ஆரூரில் நிறைந்த தேனாகிய பெருமானை நுகர்ந்து கடைத்தேறும் வாய்ப்பினைப் பெறாத நல்லறிவு இல்லாத அடியேன், விளக்கு இருக்கவும் மின்மினியினுடைய தீயைக் குளிர்காயக் கொள்வாரைப் போலப் பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தேனே.


பாடல் எண் : 8
பூவையாய்த் தலைபறித்து, பொறிஅற்ற
         சமண்நீசர் சொல்லே கேட்டு,
காவிசேர் கண்மடவார்க் கண்டு ஓடிக்
         கதவு அடைக்கும் கள்வனேன் தன்,
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை
         ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே, பாழ்ஊரில்
         பயிக்கம் புக்கு எய்த்தவாறே.

         பொழிப்புரை : தலைமயிரை வலியப் பறித்து, நல்வினையில்லாத கீழோராகிய சமணத் துறவியரின் உபதேசத்தைச் செவிமடுத்து, நாகணவாய்ப் பறவை போன்ற இனிய குரலை உடையவர்களாய், குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பெண்களைக் காண்டலே தீவினை என்று அவர்களை ஒரோவழிக் கண்டவழி ஓடிச் சென்று இருப்பிடத்தின் கதவினை மூடிக்கொள்ளும் கள்ளத்தன்மை உடைய அடியேனுடைய உயிர் சூலைநோயால் நீங்காதபடி காத்து, என்னை அடிமை கொண்ட ஆரூர்ப் பெருமானை அடியேன் உள்ளவாறு அறியாதே, மக்கள் குடி இல்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்தவர் போல் ஆகிவிட்டேனே.


பாடல் எண் : 9
ஒட்டாத வாள் அவுணர் புரமூன்றும்
         ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும்
         கண்ணினெடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை,
         ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானைச் சாராதே, தவம் இருக்க
         அவம் செய்து தருக்கினேனே.

         பொழிப்புரை : தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.


பாடல் எண் : 10
மறுத்தானொர் வல் அரக்கன் ஈர் ஐந்து
         முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழின் முளரித் தவிசின்மிசை
         இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை,
         ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கருதாதே, கரும்பு இருக்க
         இரும்பு கடித்து எய்த்தவாறே.

         பொழிப்புரை : தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவ னாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.
                                             திருச்சிற்றம்பலம்


----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 225
மார்பு ஆரப் பொழிகண்ணீர் மழைவாரும்
         திருவடிவும், மதுர வாக்கில்
சேர்வு ஆகும் திருவாயில் தீந்தமிழின்
         மாலைகளும், செம்பொன் தாளே
சார்வு ஆன திருமனமும், உழவாரத்
         தனிப்படையும், தாமும் ஆகி,
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து,
         பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.

         பொழிப்புரை : மார்பு நிறைய வடியும் கண்ணீர் மழையென ஒழுகுகின்ற திருவடிவமும், இனிமையான சொற்களைக் கொண்ட தீந்தமிழ்ப் பதிகம் சேரும் திருவாயும், இறைவரின் சிவந்த பொன் போன்ற திருவடிகளையே சார்பாகக் கொண்ட திருமனமும், திரு உழவாரமான ஒப்பற்ற படையும் ஆகிய இவற்றைக் கொண்டு தாமும் இவையுமேயாய், உலகம் எல்லாம் வாழும் பொருட்டுத் திருவீதிப் பணிகளைச் செய்து வணங்கிப் போற்றிப் பரவி வருவாராய்,


பெ. பு. பாடல் எண் : 226
நீடு புகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
         புற்று இடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து,
         கும்பிட்டு, கோது இல் வாய்மைப்
"பாடு இளம் பூதத்தினான்" எனும் பதிகம்
         முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து, மனம்
         கரைந்து உருகி நயந்து செல்வார்.

         பொழிப்புரை : புகழ்மிக்க திருவாரூரின்கண் மணிப்புற்றினை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் கூத்தரைப், பொருந்திய அன்புடன் எல்லாக் காலங்களிலும் சென்று வணங்கி, குற்றம் இல்லாத வாய்மையுடைய `பாடிளம் பூதத்தினான்` எனத் தொடங்கும் பதிகத்தையும், மற்றும் பல பதிகங்களையும் பாடி, உள்ளத்தால் நாடிய ஆசையில் மனங்குழைந்து கரைந்து உருகுபவாராய்,

         இது பொழுது அருளிய பதிகங்கள் பன்னிரண்டு.

     1. பாடிளம் பூதத்தினானும் (தி.4 ப.4) - காந்தாரம்.
2.    சூலப்படையானை (தி.4 ப.19) - சீகாமரம்.
3.    `குழல் வலம்` (தி.4 ப.53) - திருநேரிசை.
4.    `எப்போதும்` (தி.5 ப.6) - திருக்குறுந்தொகை.
5.    `கொக்கரை` (தி.5 ப.7) - திருக்குறுந்தொகை.
6.    `உயிராவணம்` (தி.6 ப.25) - திருத்தாண்டகம்.
7.    `பாதித்தன்` (தி.6 ப.26) - திருத்தாண்டகம்.
8.    `நீற்றினையும்` (தி.6 ப.28) - திருத்தாண்டகம்.
9.    `திருமணியை` (தி.6 ப.29) - திருத்தாண்டகம்.
10.`எம்பந்த` (தி.6 ப.30) - திருத்தாண்டகம்.
11.`இடர்கெடுமாறு` (தி.6 ப.31) - திருத்தாண்டகம்.
12. ஒருவனாய் (தி.6 ப.34) - திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4.    004   திருவாரூர்                    பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாடுஇளம் பூதத்தினானும்,  பவளச் செவ்வாய் வண்ணத்தானும்,
கூடுஇள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்,
ஓடுஇள வெண்பிறை யானும், ஒளிதிகழ் சூலத்தி னானும்,
ஆடுஇளம் பாம்புஅசைத் தானும், ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்த வாயினை உடையவனும், பவளம் போன்ற உடல் நிறத்தினாலும், தன் உடம்பின் பாதியாக இணைந்த பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும், வானில் உலவக்கூடிய வெண்பிறையைச் சூடியவனும், ஒளிவிளங்கும், சூலப்படையை உடையவனும் ஆடுகின்ற இளைய பாம்பினைக் கட்டிக் கொண்டவனும் ஆவான்.


பாடல் எண் : 2
நரியைக் குதிரைசெய் வானும், நரகரைத் தேவுசெய் வானும்,
விரதம் கொண்டாட வல்லானும், விச்சுஇன்றி நாறு செய்வானும்,
முரசுஅதிர்ந்து ஆனைமுன் ஓட, முன்பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவுஅரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.

         பொழிப்புரை :நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.


பாடல் எண் : 3
நீறுமெய் பூசவல் லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்
ஏறுஉகந்து ஏறவல் லானும், எரிபுரை மேனியி னானும்,
நாறு கரந்தையி னானும், நான்மறைக் கண்டத்தி னானும்,
ஆறு சடைக்கரந் தானும், ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : திருமேனியில் திருநீற்றைப் பூசுதலில் மேம்பட்டவனும், தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் உள்ளத்து இருப்பவனும், காளையை விரும்பி இவர வல்லவனும், தீயின் நிறத்தை ஒத்த திருமேனி நிறத்தினனும், நறுமணம் கமழும் கரந்தைப் பூச்சூடியவனும், வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும் கங்கையைச் சடையில் மறைத்தவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.


பாடல் எண் : 4
கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்,
செம்புநல் கொண்டுஎயில் மூன்றும் தீஎழக் கண்சிவந் தானும்,
வம்புநல் கொன்றையி னானும், வாள்கண்ணி வாட்டம் அதுஎய்த
அம்பர ஈர்உரி யானும், ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழி மாற்றுப் பொருள்கோள்.


பாடல் எண் : 5
ஊழி அளக்கவல் லானும், உகப்பவர் உச்சிஉள் ளானும்,
தாழ்இளம் செஞ்சடை யானும், தண்அமர் திண்கொடி யானும்,
தோழியர் தூதுஇடை ஆட, தொழுதுஅடி யார்கள் வணங்க,
ஆழி வளைக்கையி னானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : ஊழிக்காலங்களைத் தான் அளக்கவல்ல, காலங்களுக்கு அப்பாற்பட்டவனும், தன்னை விரும்பும் அடியவர்கள் தலையின்மேல் உள்ளவனும், தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும், குளிர்ச்சிபொருந்திய வலிய கொடியை உடையவனும், தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையிற் காட்சியளிப்பவனும் திருவாரூர் அமர்ந்த அம்மானாவான். தண்ணம்ஆர் என்று பாடம் ஓதி மழுப்படையின் வடிவம் எழுதிய என்றும் பொருள் கொள்க. தண்ணம் - மழு.


பாடல் எண் : 6
ஊர்திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண்பொருளானும்,
சீர்தரு பாடல்உள் ளானும், செங்கண் விடைக்கொடி யானும்,
வார்தரு பூங்குழ லாளை மருவி உடன்வைத் தவனும்,
ஆர்திரை நாள்உகந் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை :பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.


பாடல் எண் : 7
தொழற்குஅங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி அருளவல் லானும்,
கழற்குஅங்கை பன்மலர் கொண்ட காதல் கனற்றநின் றானும்,
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடைக் கரந்தானும்,
அழற்கு அங்கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : தொழுவதற்கு உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் மனக்கண்முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும், தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளிற் பல பூக்களையும் கொண்ட அடியார்களுக்கு அன்புமிகுமாறு நிற்பவனும், கூந்தலை உடைய கங்கையை அழகிய சடையில் வைத்து மறைத்தவனும், தீயினைத் தாங்கத் தன் உள்ளங்கையை நீட்டி ஏற்று ஏந்தும் ஆற்றல் உடையவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.


பாடல் எண் : 8
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும்,
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோள்உடை யானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும்,
ஆயிரம் பேர்உகந் தானும், ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை :ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.


பாடல் எண் : 9
வீடுஅரங் காநிறுப் பானும், விசும்பினை வேதி தொடர
ஓடுஅரங் காகவைத் தானும், ஓங்கியொர் ஊழிஉள் ளானும்,
காடுஅரங் காமகிழ்ந் தானும், காரிகை யார்கள் மனத்துள்
ஆடுஅரங் கத்துஇடை யானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை :முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.


பாடல் எண் : 10
பையம் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கைஅஞ்சு நான்குஉடை யானைக் கால் விரலால் அடர்த்தானும்,
பொய்அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐஅஞ்சின் அப்புறத் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.

         பொழிப்புரை : படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.
                                             திருச்சிற்றம்பலம்


4. 019    திருவாரூர்                           பண் - சீகாமரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சூலப் படையானைச் சூழாக வீழ்அருவிக்
கோலத்தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை,
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை, பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.


பாடல் எண் : 2
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கஊர்ப் பிச்சைஏற்று உண்டு பொலிவுஉடைத்தாய்க்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே.

         பொழிப்புரை :இருபுறமும் பூதங்கள் சூழத்தாம் சென்ற ஊர்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்டு, நல்ல விளக்கம் பொருந்து வனவாகக் கொக்கிறகின் தொகுதி, ஒழுங்காக அமைக்கப்பட்ட கோவணம், சங்குமணி இவற்றை அணிந்த தலைவனை அடியேன் கண்டவிடம் ஆரூராகும்.

 
பாடல் எண் : 3
சேய உலகமும் செல்சார்வும் ஆனானை,
மாயப்போர் வல்லானை, மாலைதாழ் மார்பானை,
வேய்ஒத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத்து இடையானை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை :சேய்மையதாகிய வீட்டுலகமாகிய பேறும் அதனை அடைவதற்குரிய வழியாகிய ஆறும் ஆகின்றவனாய், அழிக்கின்ற போரில் வல்லவனாய், மாலை தொங்கும் மார்பினனாய், தம் மென்முலைமேல் குளிர்ந்த சந்தனம் பூசிய, மூங்கிலை ஒத்த தோள்களை உடைய, தன்னை வழிபடும் மகளிர் கூட்டத்திடையே இருக்கும் பெருமானை நான் கண்ட இடம் ஆரூர் ஆகும்.


பாடல் எண் : 4
ஏறுஏற்ற மாஏறி எண்கணமும் பின்படர
மாறுஏற்றார் வல்அரணம் சீறி, மயானத்தில்
நீறுஏற்ற மேனியனாய், நீள்சடைமேல் நீர்ததும்ப,
ஆறுஏற்ற அந்தணனை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : வாகனமாக ஏறுதற்குரியவற்றில் மேம்பட்டதான காளையை இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 5
தாம் கோல வெள் எலும்பு பூண்டு,தம் ஏறுஏறிப்
பாங்கான ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்,
தேங்காவி நாறும் திருவாரூர்த் தொல்நகரில்
பூங்கோயில் உள்மகிழ்ந்து போகாது இருந்தாரே.

         பொழிப்புரை : அழகாக வெண்ணிற எலும்புகளைச் சூடித் தம் காளை மீது இவர்ந்து, பக்கலிலுள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லும் மேம்பட்டவராய் இனிய குவளைமலர்கள் மணம்வீசும் திருவாரூர் ஆகிய பழைய ஊரில் உள்ள பூங்கோயில் என்ற பெயரை உடைய கோயிலை உகந்து கொண்டு அதனை ஒரு பொழுதும் நீங்காமல் எம்பெருமான் இருந்துள்ளார்.

 
பாடல் எண் : 6
எம்பட்டம் பட்டம் உடையானை, ஏர்மதியின்
நும்பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறுமான் உரிஆடை
அம்பட்டு அசைத்தானை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : எமது பட்டத்தைத் தனது பட்டமாகக் கொண்டு இருப்பவனாய், அழகான பிறையாகிய குறுகலான பட்டம் சேர்ந்த நெற்றியனாய், மாலை நேர வானம் போன்ற சிவந்த பட்டினை உடுத்து, சிறிய மான் தோல் ஆடையாகிய அழகிய பட்டினையும் கட்டிய பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 7
போழ்ஒத்த வெண்மதியம் சூடி, பொலிந்துஇலங்கு
வேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ,
ஊழித்தீ அன்னானை, ஒங்கொலிமாப் பூண்டதுஓர்
ஆழித்தேர் வித்தகனை, நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை :மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண்பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும். ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்.

 
பாடல் எண் : 8
வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன்தொண்டர்
நெஞ்சு இருள் கூரும் பொழுது நிலாப் பாரித்து
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : வஞ்சனையுடையவர் யார் மாட்டும் அணுகாத திறமையுடையவனாய், எல்லோரும் உறங்கும் இருள் நேரத்தில் கூத்தாடுதலை விரும்பியவனாய், தன் அடியவர்களுடைய உள்ளத்தில் துயரமாகிய இருள் மிகும்போது ஞானமாகிய ஒளியைப் பரப்பி அழகிய ஞானப் பிரகாசனாய் நின்ற பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 9
கார் அமுது கொன்றை கடிநாறு தண்என்ன
நீர்அமுத கோதையோடு ஆடிய நீள்மார்பன்
பேர்அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்சு
ஆர்அமுதா உண்டானை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : நன்கு முதிர்ந்த கொன்றை மரத்தில் பூக்கும் பூவின் நறுமணம் கமழும் குளிர்ந்த நீர் மயமான கங்கையைப் பார்வதியோடு மகிழ்ந்த, நீண்ட மார்பினனாய், பெரிய அமுதத்தை உண்டார்களாய்த் தேவர்கள் உயிர்பிழைப்பதற்காகப் பெரிய கடலின் விடத்தை அமுதமாக உண்ட பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 10
தாள்தழுவு கையன், தாமரைப்பூஞ் சேவடியன்,
கோடலா வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடரவக் கிண்கிணிக் கால் அன்னான், ஓர் சேடனை,
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : முழந்தாள் அளவும் நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் கொள்ள முடியாத வேடத்தினனாய், வீணையைக் கையில் கொண்டவனாய், அசைகின்றவாய் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய அத்தகைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.


பாடல் எண் : 11
மஞ்சுஆடு குன்றுஅடர ஊன்றி, மணிவிரலால்
துஞ்சாப்போர் வாள்அரக்கன் தோள்நெரிய, கண்குருதிச்
செஞ்சாந்து அணிவித்து, தன்மார்பில் பால்வெண்ணீற்று
அம்சாந்து அணிந்தானை நான்கண்டது ஆரூரே.

         பொழிப்புரை : மேகங்கள் அசைந்து செல்லும் கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.

திருச்சிற்றம்பலம்


4. 053  திருவாரூர்                            திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
குழல்வலம் கொண்ட சொல்லாள்
         கோலவேல் கண்ணி தன்னைக்
கழல்வலம் கொண்டுநீங்காக்
         கணங்கள்அக் கணங்கள் ஆர
அழல்வலம் கொண்ட கையான்
         அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலம் கொண்டல் செய்வான்
         தோன்றினார் தோன்றி னாரே.

         பொழிப்புரை : வேய்ங்குழல் ஓசையை வென்ற இனியசொல்லை யுடையவளாய் அழகிய வேல்போன்ற கண்களையுடைய பார்வதியின் திருவடிகளை வலம் வந்து நீங்காத அடியவர்களுடைய கண்கள் நிறைவுறும்படியாகத் தீயினை வலக்கையில் கொண்ட பெருமான் அருளாகிய ஒளியைவீசும் திருவாரூரைத் தொழுவதற்கும் வலம் வருவதற்கும் வாய்ப்புடையவராகப் பிறப்பெடுத்தவரே பயனுடைய பிறப்பினைப் பெற்றவராவார் .


பாடல் எண் : 2
நாகத்தை நங்கை அஞ்ச, நங்கையை மஞ்ஞை என்று,
வேகத்தைத் தவிர, நாகம் வேழத்தின் உரிவை போர்த்து,
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்என்றுஅஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே.

         பொழிப்புரை : ஆரூரனிடத்தில் பாம்பைப் பார்த்துப் பார்வதி அஞ்ச , அப்பார்வதியை மயில் என்று கருதிப் பாம்பு தான் சீறிச் செயற்படும் உற்சாகத்தை நீக்கிச் சோர்வடைய , அப்பாம்பு தன்னை விழுங்கும் என்று அஞ்சிப்பிறை யானைத்தோலுள் மறைய ஒரு பகுதியும் நிமிர்ந்து பார்த்தலைச் செய்யாத சந்திரனை மின்னல் என்று கருதி அஞ்சி மார்பில் கிடந்த நாகம் சோர்ந்து கிடக்கிறது .


பாடல் எண் : 3
தொழுதுஅகம் குழைய மேவித் தோட்டிமை உடைய தொண்டர்
அழுத அகம் புகுந்து நின்றார், அவர் அவர் போலும், ஆரூர்
எழில்அக நடுவெண் முத்தம் அன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழில்அகம் விளங்கு திங்கள் புதுமுகிழ் சூடி னாரே.

         பொழிப்புரை : தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக, ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால் , தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார் .

 
பாடல் எண் : 4
நஞ்சு இருள் மணிகொள் கண்டர், நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி, விளங்கினார் போலும், மூவா
வெஞ்சுடர் முகடுதீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அஞ்சுடர் அணி வெண்திங்கள் அணியும் ஆரூரனாரே.

         பொழிப்புரை : அழியாத சூரியமண்டலத்தின் உச்சியைத் தொட்டுக் கொண்டுள்ள சடைமுடியில் வெள்ளிக் கம்பி இருந்தாற்போன்ற அழகிய ஒளி வீசும் பிறையை அணிந்த ஆரூர்ப் பெருமான் நஞ்சினால் இருண்ட நீலகண்டராய் , இருள்மிக்க சுடுகாட்டில் இரவிலே வெளிப் படுகின்ற சுடுகாட்டுத் தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே கூத்தாடி விளங்குபவராவார் .


பாடல் எண் : 5
எம்தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்தப்
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தம்சடைத் தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும்
அந்தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூர னாரே.

         பொழிப்புரை : எம்முடைய கற்பக மரத் தளிரின் தன்மையான அழகிய மேனியை உடைய ஆரூரன் என்று தேவர்கள் போற்றுமாறு , பசிய தளிரை உடைய காமவல்லி போன்று , தம் மேனிமீது படரும் கொடிபோன்ற பார்வதியால் தழுவப்பட்டு , தம்முடைய சடைத் தொகுதியினாலும் தம்முடைய தனிப்பண்பினாலும் அழகிய தளிரினது வடிவம் போன்றவர் ஆவார் ஆரூரனார் .


பாடல் எண் : 6
வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்
தான்அகம் அழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்,
ஊன்அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆன்அகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூர னாரே.

         பொழிப்புரை : புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து , ஒளி பொருந்திய விடத்தை உண்டு , பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி , பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும் .


பாடல் எண் : 7
அஞ்சுஅணை கணையி னானை அழல்உற அன்று நோக்கி,
அஞ்சுஅணை குழலி னாளை அமுதமா அணைந்து நக்கு,
அஞ்சுஅணை அஞ்சும் ஆடி ஆடுஅரவு ஆட்டுவார் தாம்
அஞ்சுஅணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : ஐந்து வேலிப் பரப்புடைய திருவாரூர்க்கோயிலை விரும்பி உறையும் பெருமான் ஐங்கணைகளை உடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் நோக்கி , ஐந்து விதமாக முடிக்கப்படும் ( ஐம்பால் ) கூந்தலையுடைய பார்வதியை அமுதமாகக் கருதி அவளோடு பொருந்தி , சிரித்து , பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் கொண்டு , ஐந்து தலைகளை உடையதாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பினை ஆட்டுபவராக உள்ளார் .


பாடல் எண் : 8
வணங்கிமுன் அமரர் ஏத்த, வல்வினை யான தீர,
பிணங்குஉடைச் சடையில் வைத்த பிறைஉடைப் பெருமை அண்ணல்
மணங்கமழ் ஏதி பாகர், மதிநிலா வட்டத்து ஆடி
அணங்கொடி மாட வீதி ஆரூர்எம் அடிக ளாரே.

         பொழிப்புரை : சந்திர மண்டலம் வரையில் உயர்ந்து அந்த வட்டமான பகுதியில் அடைந்து சந்திரனை அணுகுகின்ற அழகிய கொடிகள் உயர்த்தப்பட்ட மாடங்களை உடைய வீதிகளைக் கொண்ட ஆரூரில் உள்ள எம்பெருமான் தேவர்கள் தம்முடைய வலிய வினைப் பயன்கள் தீருமாறு முன் நின்று வணங்கித் துதிக்க ஒன்றோடொன்று கலந்து பின்னி முறுகிய சடைகளிடையே பிறையைச் சூடிய பெருமையை உடைய தலைவராவார் .


பாடல் எண் : 9
நகல்இடம் பிறர்கட்கு ஆக, நான்மறை யோர்கள் தங்கள்
புகலிடம் ஆகி வாழும் புகல்இலி இருவர் கூடி
இகலிடம் ஆக நீண்டுஅங்கு ஈண்டுஎழில் அழல தாகி
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூர னாரே.

         பொழிப்புரை : வீண் பேச்சிற் பொழுதுபோக்கி நல்லோர் இகழ்ச்சிக்கிடமாகும் நிலை ( அடியாரல்லாத ) பிறர்க்காக நான்கு வேதங்களையும் ஓதும் பக்தர்களுக்கு அடைக்கலமாகி வாழ்பவராய் , தமக்கு அடைக்கலம் தருபவர் பிறர் யாரும் இல்லாதவகையில் அனைவருக்கும் தாமே அடைக்கலமாகும் பெருமானாய் , திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து தமக்குள் மாறுபட்டு அடியும் முடியும் தேடும் தீப்பிழம்பாக நீண்டு , உலகத்தார் முன் நின்று துதித்துப் புகழுமாறு ஆரூர்த் தலைவர் விளங்குகிறார் .


பாடல் எண் : 10
ஆயிரம் நதிகள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ,
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூர னாரே.

         பொழிப்புரை : நதிகள் பலவாக வந்து கலக்கும் அலைகளை யுடைய கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி , அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் கொண்டுள்ளவர் ஆரூரனாகிய பெருமான் .

                                             திருச்சிற்றம்பலம்



5.    006  திருஆரூர்
      திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்போதும் பொனின் மேனிச் சிவன் அவன்
அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே.

         பொழிப்புரை :மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும் , புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும் , உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. ( சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும் )


பாடல் எண் : 2
சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர்தடம் கண்உமை பாகமா
அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே.

         பொழிப்புரை : மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும் , அரவை அரையிற் கட்டியவரும் , இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர் .


பாடல் எண் : 3
விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம்பலி தேரும் குழகனார்,
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்,
அண்ட வாணர்க்கு அருளும் ஆரூரரே.

         பொழிப்புரை : வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும் , துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும் , தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .


பாடல் எண் : 4
விடையும் ஏறுவர் வெண்தலை யில்பலி
கடைகள் தோறும் திரியும்எம் கண்ணுதல்,
உடையும் சீரை, உறைவது காட்டு இடை,
அடைவர் போல் அரங்காக ஆரூரரே.

         பொழிப்புரை : திருவாரூர்ப் பெருமான் , விடையும் ஏறுவர் ; வெண் தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார் ; உடையாகச் சீரையைக் கொண்டவர் . உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர் .


பாடல் எண் : 5
துளைக்கை வேழத்து உரிஉடல் போர்த்தவர்,
வளைக்கை யாளையொர் பாகம் மகிழ்வுஎய்தித்
திளைக்கும் திங்கள் சடையில், திசை முழுது
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே.

         பொழிப்புரை : திருவாரூர்ப் பெருமான் , துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர் ; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர்; அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்; உலகமே உருவமா ( விச்சுவரூபியா ) க நின்றாடுவார் என்பது கருத்து .

பாடல் எண் : 6
பண்ணின் இன் மொழியாளையொர் பாகமா
விண்ணினார் விளங்கும் மதி சூடியே,
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே.

         பொழிப்புரை : பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி , திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர் .


பாடல் எண் : 7
மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்,
கட்டுவாங்கம் கனல் மழு மான் தனோடு
அட்டமாம் புயம் ஆகும் ஆரூரரே.

         பொழிப்புரை : தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய ( திருமாலாகிய ) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார் , கட்டுவாங்கம் , சுடர்ந்தெரியும் கனல் , மழு , மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர் .


பாடல் எண் : 8
தேய்ந்த திங்கள் கமழ் சடையன், கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்,
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்,
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே.

         பொழிப்புரை : பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும் , கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும் , காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும் , ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .


பாடல் எண் : 9
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்,
கொண்ட கோவண ஆடையன், கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

         பொழிப்புரை : நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும் , இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும் , கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும் , மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும் , தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .


பாடல் எண் : 10
மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்,
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு ஏந்திய கையினார்,
ஆலம் உண்டு அழகாய ஆரூரரே.

         பொழிப்புரை : திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும் , காலனைக் கடந்திட்டுச் சூலமும் , மானும் , மழுவும் ஏந்திய கையினரும் , ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

                                             திருச்சிற்றம்பலம்


                                    5. 007    திருஆரூர்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
பக்கமே பகு வாய் அன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்துஉடன் கூத்தராய்
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே.

         பொழிப்புரை : கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைத்து மருங்கிலே நின்று பிளந்தவாயை உடைய பல பூதங்கள் ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர் .


பாடல் எண் : 2
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! பந்தமும் , வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும் , சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை ? ( திருவாரூர் , அரநெறியை உள்ளத்திற் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி ).


பாடல் எண் : 3
வண்டு உலாமலர் கொண்டு, வளர்சடைக்கு
இண்டை மாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகித் தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே.

         பொழிப்புரை : வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும் , இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர் . ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு எனக்கொள்க .


பாடல் எண் : 4
துன்பு எலாம் அற நீங்கி, சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடையறா
அன்பர் ஆம் அவர்க்கு அன்பர் ஆரூரரே.

         பொழிப்புரை : துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும்பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான். ( இவ்வியல்புடையார்க்கே முதல்வனும், அன்பனாய், அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி .)

பாடல் எண் : 5
முருட்டு மெத்தையில் முன்கிடத்தா முனம்
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்
முரட்டு அடித்த அத் தக்கன்தன் வேள்வியை
அரட்டு அடக்கி தன் ஆரூர் அடைமினே.

         பொழிப்புரை : ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு , அடங்காத ஐந்து புலன்களைக் குற்றமறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக .


பாடல் எண் : 6
எம்மை யார் இலை, யானும் உளேன் அலேன்
எம்மை யாரும் இது செய வல்லரே,
அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு
அம்மை யாரைத் தந்தார் ஆரூர் ஐயரே.

         பொழிப்புரை : எம்மைக்காத்தற்குரிய இருமுதுகுரவரும் இலர் ; யானும் ( இளம் பருவத்தினன் ஆகலின் ) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன் ; எனது அன்னையை ஒத்த உடன்பிறந்தாரும் ( திலகவதியாரும் ) இதனைச் செய்ய ( எனக்குத் துணையாய் நின்றருள ) வல்லரே ! ( ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின் ) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் ஆர் ? என்று இங்ஙனம் பன் முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே ( ஐயரே ) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை ( உயிர்தாங்கச் செய்து ) எனக்கு இருமுதுகுரவரும் , ஆசானும் , கேளும் , உறவுமாக வைத்தருளினார் .


பாடல் எண் : 7
தண்ட ஆளியை, தக்கன்தன் வேள்வியைச்
செண்டு அது ஆடிய தேவர் அகண்டனைக்
கண்டு கண்டு இவள் காதலித்து, அன்பதாய்க்
கொண்டி ஆயினவாறு என்தன் கோதையே.

         பொழிப்புரை : என்றன் கோதையாகிய இவள் தண்டத்தை
(ஒறுப்பு முறை) க் கையாள்பவனும் , தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல்போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை ( அவன் உலாப்போதரும்போது ) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி ( பட்டி ) ஆயினவாறு என்னே !


பாடல் எண் : 8
இவள்ந மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண் நம் அன்று எனில் ஆரூர் அரனெனும்
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்
தவனி ஆயினவாறு என்தன் தையலே.

         பொழிப்புரை : இவள் நம்பால் ஒருநெறிப்படாத பல பேச்சுக்களைப் பேசத் தொடங்கி விட்டாள் . இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் ( அதாவது , இவள் தனித்துள்ளபோது ) ஆரூர் அரன் என மொழிவாள் . என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதிவிடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது !


பாடல் எண் : 9
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்,
கார் ஒத்த மிடற்றர், கனல் வாய் அரா
ஆரத்தர் உறையும் அணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

         பொழிப்புரை : கங்கைச் சடையரும் , திருநீலகண்டரும் , அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும் .


பாடல் எண் : 10
உள்ளமே யொர் உறுதி உரைப்பன் நான்,
வெள்ளம் தாங்கு விரிசடை வேதியன்,
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தஎம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

         பொழிப்புரை : உள்ளமே ! நான் ஓர் உறுதி உரைப்பன் ; கேள்; கங்கைவெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு , நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து ; வணங்கு .


பாடல் எண் : 11
விண்ட மாமலர் மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்ட வாணன் தன் ஆரூர் அடிதொழ,
பண்டை வல்வினை நில்லா, பறையுமே.

         பொழிப்புரை : விரிந்த மலர்மேலுறை பிரமனும் , மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும் .


பாடல் எண் : 12
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன்
கை உலாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யலாம், அல்லல் ஒன்றுஇலை, காண்மினே.

         பொழிப்புரை : கரிய கண்டம் உடையானும் , அண்டத்திலுள்ளானும் , கையிற் சூலம் உடையானும் , கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த்தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம் ; துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை ; காண்பீராக .
                                             திருச்சிற்றம்பலம்

                                             6. 025    திருவாரூர்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
உயிரா வணம்இருந்து, உற்று நோக்கி,
         உள்ளக் கிழியின் உருவுஎழுதி,
உயிர் ஆவணம்செய்துஇட்டு, உன்கைத் தந்தால்,
         உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி,
அயிராவணம் ஏறாது, ஆன் ஏறுஏறி,
         அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட
அயிராவணமே! என் அம்மானே! நின்
         அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.

         பொழிப்புரை :அயிராவணம் என்ற யானையை இவராது காளை மீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே ! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி . என் தலைவனே ! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர் .


பாடல் எண் : 2
எழுது கொடிஇடையார் ஏழை மென்தோள்
         இளையார்கள் நம்மை இகழா முன்னம்,
பழுது படநினையேல், பாவி நெஞ்சே,
         பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ,
முழுது உலகில் வானவர்கள் முற்றும் கூடி,
         முடியால் உற வணங்கி, முற்றம் பற்றி,
அழுது, திருவடிக்கே பூசை செய்ய
         இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

         பொழிப்புரை :தீ வினையை உடைய மனமே ! உனக்கும் எனக்கும் முற்பட்ட பகை ஏதேனும் உண்டோ ? கொடி போன்ற இடையையும் மெல்லிய தோள்களையும் மடப்பத்தையும் உடைய இளைய மகளிர் நம் மூப்பினை நோக்கி இகழ்வதன்முன் பயன்பட நினைவாயாக . உலகிலுள்ள தேவர்கள் எல்லோரும் எஞ்சாது கூடித் தலையால் முழுமையாக வணங்கி முன்னிடத்தை அடைந்து அழுது அவன் திருவடிக்கண் பூசனை புரியுமாறு அவன் உகந்தருளியிருக்கின்ற ஆரூரை நினையாது பிறிதொன்றனைப் பழுதுபட நினையாதே !


பாடல் எண் : 3
தேரூரார், மாவூரார், திங்க ளூரார்,
         திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
கார்ஊரா நின்ற கழனிச் சாயல்
         கண்ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர்ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி,
         உமையாள் மணவாளா என்று வாழ்த்தி,
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
         அமரர்கள்தம் பெருமானே எங்குஉற் றாயே.

         பொழிப்புரை :தேரூர் , மாவூர் , திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி , நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய் ?


பாடல் எண் : 4
கோவணமோ தோலோ உடை ஆவது,
         கொல்ஏறோ வேழமோ ஊர்வது தான்,
பூவணமோ புறம்பயமோ அன்று ஆயில்தான்
         பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ,
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
         திசைநான்கும் வைத்துஉகந்த செந்தீ வண்ணர்,
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
         அறியேன்மற்று ஊர்ஆமாறு ஆரூர் தானே.

         பொழிப்புரை :தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ ? ஊர்வது காளையோ , யானையோ ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ ?


பாடல் எண் : 5
ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்,
         எரிபவள வண்ணர் குடமூக் கிலார்,
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக
         வார்சடையார், வந்து வலஞ்சு ழியார்,
போந்தார் அடிகள் புறம்ப யத்தே,
         புகலூர்க்கே போயினார், போர் ஏறுரேறி
ஆய்ந்தே இருப்பார்போய் ஆரூர் புக்கார்
         அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

         பொழிப்புரை :மழுப்படையை ஏந்திய பெருமான் இன்னம்பரில் இருந்தார் . ஒளி வீசும் பவள நிறத்தை உடைய அவர் குடமூக்கில் இருந்தார் . நீண்ட சடையை உடைய அப்பெருமானார் வளையல் அணிந்த கைகளை உடைய பார்வதி பாகராக வலஞ்சுழிக்கு வந்தார் . அங்கிருந்து புறம்பயத்துக்கும் அடுத்துப் புகலூருக்கும் போயினார் . போரிடும் காளை மீது இவர்ந்து தம் இருப்பிடத்தை முடிவு செய்தவர் போலத் திருவாரூரிலே குடிபுகுந்துவிட்டார் . அப்பெருமானார் செய்வன யாவும் கண்கட்டுவித்தை போல உள்ளன .


பாடல் எண் : 6
கருஆகிக் குழம்பி இருந்து, கலித்து மூளை
         கருநரம்பும் வெள்எலும்பும் சேர்ந்து ஒன்றாகி,
உருவாகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால்
         வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்,
மருஆகி நின் அடியே மறவேன் அம்மான்,
         மறித்து ஒருகால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய்
         செம்பொன் ஏகம்பனே திகைத்திட் டேனே.

         பொழிப்புரை :கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம் . ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன் . மீண்டும் அடியேனுக்கு ஒரு பிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா ! திருத்தெங்கூராய் ! செம்பொன் ஏகம்பனே ! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன் .


பாடல் எண் : 7
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,
         மூர்த்தி அவன்இருக்கும் வண்ணம் கேட்டாள்,
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்,
         பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்,
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்,
         அகன்றாள் அகல்இடத்தார் ஆசாரத்தை,
தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்,
         தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

         பொழிப்புரை :முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு , அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு , அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள் . தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள் . உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள் . தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள் . கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள் . அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள் .


பாடல் எண் : 8
ஆடுவாய் நீநட்டம் அளவில் குன்றா,
         அவிஅடுவார் அருமறையோர், அறிந்தேன் உன்னை,
பாடுவார் தும்புருவும் நார தாதி,
         பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்,
தேடுவார் திருமாலும் நான்மு கனும்,
         தீண்டுவார் மலைமகளும் கங்கை யாளும்,
கூடுமே நாய்அடியேன் செய்குற் றேவல்,
         குறைஉண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

         பொழிப்புரை :திருவாரூர்ப் பெருமானே ! நீ கூத்தாடுவாய் , வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள். தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர். தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள். திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள் . மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள் . இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன் . ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ ? ஏலாவோ ? அறியேன் .

 
பாடல் எண் : 9
நீர்ஊரும் செஞ்சடையாய், நெற்றிக் கண்ணாய்,
         நிலாத்திங்கள் துண்டத்தாய், நின்னைத் தேடி
ஓர்ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும்
         உலகம்எலாம் திரிதந்து நின்னைக் காண்பான்,
தேர்ஊரும் நெடுவீதி பற்றி நின்று,
         திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது,
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
         அமரர்கள்தம் பெருமானே ஆரூராயே.

         பொழிப்புரை :ஆரூர்ப் பெருமானே ! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே ! நெற்றியில் கண்ணுடையவனே ! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே ! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே , ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து , உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளிலே காத்திருந்து , திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய், ` தேவர்கள் தலைவனே ` ஆரூரா ! ஆரூரா ! என்று அழைக்கின்றார்கள் .


பாடல் எண் : 10
நல்லூரே நன்றாக நட்டம் இட்டு,
         நரைஏற்றைப் பழையாறே பாய ஏறி,
பல்ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே
         பலர்காணத் தலையாலங் காட்டின் ஊடே,
இல்ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி,
         இராப் பட்டீச்சரம் கடந்து, மணற்கால் புக்கு,
எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண,
         இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

         பொழிப்புரை :நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து , பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து , சேற்றூரில் பலர் காண நின்று , தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று , பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி , பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற் காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார் .


பாடல் எண் : 11
கருத் துத்திக் கதநாகம் கையில் ஏந்தி,
         கருவரைபோல் களியானை கதற, கையால்
உரித்து எடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி,
         உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனி,
திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த் தானம்,
         திருவையாறு இடங்கொண்ட செல்வர், இந்நாள்
அரிப்பெருத்த வெள்ஏற்றை அடரஏறி,
         அப்பனார் இப்பருவம் ஆரூ ராரே.

         பொழிப்புரை :கரிய படப்புள்ளிகளை உடைய , கோபிக்கும் பாம்பினைக் கையில் கொண்டு , பார்வதியை அச்சுறுத்திய பெரிய மலையைப் போன்ற மத யானை பிளிறும்படியாக அதன் தோலை உரித்துச் சிவந்த தம் மேனி மீது பொருந்தப் போர்த்து ஒளி பொருந்திய திருமேனியை உடைய செல்வராம் சிவபெருமானார் திருத்துருத்தி , திருப்பழனம் , திருநெய்த்தானம் , திருவையாறு என்ற திருத்தலங்களை உறைவிடமாகக் கொண்டு இந்நாளில் தசை மடிப்பால் கீற்றுக்கள் அமைந்த பிடரியை உடைய வெண்ணிறக் காளையை அது சுமக்குமாறு இவர்ந்து , இப்பொழுது திருவாரூரை உகந்தருளியிருக்கிறார்                                     திருச்சிற்றம்பலம்

                                    6. 026    திருவாரூர்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாதித்தன் திருவுருவில் பெண்கொண் டானை,
         பண்டுஒருகால் தசமுகனை அழுவித் தானை,
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை,
         வன்கருப்புச் சிலைக்காமன் உடல் அட்டானை,
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானை,
         சுடர்அங்கி தேவனைஓர் கைக்கொண் டானை,
ஆதித்தன் பல்கொண்ட அம்மான் தன்னை,
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :பார்வதி பாகனாய்ப் பண்டு இராவணனை வருத்தியவனாய், வருத்திப் பிரமன் தலை ஒன்றை நீக்கியவனாய், வலிய கரும்பு வில்லை உடைய மன்மதன் உடலை எரித்தவனாய், ஒளி பொருந்திய சந்திரனுடைய உடலில் களங்கத்தை உண்டாக்கியவனாய், ஒளி வீசும் அக்கினி தேவனுடைய கை ஒன்றனைப் போக்கிச் சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய அப்பெருமானைத் திருவாரூரில் அடியேன் தரிசித்து அவனைத் தவிர ஏனையவற்றை எல்லாம் மறந்தேன்.


பாடல் எண் : 2
வெற்புஉறுத்த திருவடியால் கூற்றுஅட் டானை,
         விளக்கின்ஒளி, மின்னின்ஒளி, முத்தின் சோதி,
ஒப்புஉறுத்த திருவுருவத்து ஒருவன் தன்னை,
         ஓதாதே வேதம் உணர்ந்தான் தன்னை,
அப்புஉறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
         அமுதுஉண்டார் உலந்தாலும் உலவா தானை,
அப்புஉறுத்த நீர்அகத்தே அழல் ஆனானை,
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய், விளக்கு மின்னல் முத்து இவற்றை ஒத்த திருமேனி ஒளியினனாய், வேதங்களை ஓதாது உணர்ந்தவனாய், நீரை மிகுதியாக நிறைத்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதமுண்ட தேவர் இறந்த போதும் தான் இறவாதவனாய், கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 3
ஒருகாலத்து ஒருதேவர் கண்கொண் டானை,
         ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயி னானை,
         வன்கருப்புச் சிலைக்காமன் உடல்அட் டானை,
பொருவேழக் களிற்றுஉரிவைப் போர்வை யானை,
         புள்அரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை,
அருவேள்வி தகர்த்துஎச்சன் தலைகொண் டானை,
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய், ஊழிகள் தோறும் மேம் பட்டுத் தோன்றுபவனாய், எதிர் காலமும் இறந்த காலமும் ஆயினவனாய், வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய், தன்னோடு பொரவந்த யானையை உரித்துப் போர்த்தவனாய், செருக்கொடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய், அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 4
மெய்ப்பால்வெண் நீறுஅணிந்த மேனி யானை,
         வெண்பளிங்கின் உள்பதித்த சோதி யானை,
ஒப்பானை ஒப்புஇலா ஒருவன் தன்னை,
         உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்
வைப்பானை, களைவானை, வருவிப் பானை,
         வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை,
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பா லானை,
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :திருநீறணிந்த மேனியனாய்ப் பளிங்கினுள் பதித்தாற் போன்ற செஞ்சோதியனாய்த் தன்னொப்பார் பிறர் இல்லாதானாய், உத்தமனாய், முத்துப் போன்று இயற்கை ஒளி உடையவனாய், உலகங்களை எல்லாம் காத்து அழித்துப் படைப்பவனாய்த் தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய், மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவனை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 5
பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை, மற்றைப்
         பிண்டத்தைப் படைத்ததனை, பெரிய வேதத்
துண்டத்தில் துணிபொருளை, சுடுதீ ஆகி
         சுழல்கால்ஆய் நீர்ஆகிப் பார் ஆயிற்றைக்
கண்டத்தில் தீதுஇல்நஞ்சு அமுது செய்து
         கண்மூன்று படைத்ததுஒரு கரும்பை, பாலை,
அண்டத்துக்கு அப்புறத்தார் தமக்கு வித்தை,
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :மனித உடலில் பிறந்த உயிர் கொண்டு உணரும் உணர்விற்குத் தோன்றுபவனாய், அவ்வுடலையும் படைத்தவனாய்ப் பெரிய வேதங்களின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடு தீயாகியும் சுழன்றடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த் தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய், முக் கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய், முத்தர்களுக்குப் பயன் தரும் பொருளாய் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 6
நீதியாய், நிலன்ஆகி, நெருப்பாய், நீராய்,
         நிறைகாலாய், இவையிற்றின் நியமம் ஆகி,
பாதியாய் ஒன்றுஆகி, இரண்டாய் மூன்றாய்,
         பரமஅணு வாய், பழுத்த பண்கள் ஆகி,
சோதிஆய், இருள்ஆகி, சுவைகள் ஆகி,
         சுவைகலந்த அப்பாலாய், வீடாய், வீட்டின்
ஆதியாய், அந்தமாய், நின்றான் தன்னை
         ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த வாறே.

         பொழிப்புரை :ஒழுங்குக்கு ஓர் உறைவிடமாய், நிலம் நெருப்பு நீர் எங்கும் நிறைந்த காற்று என்ற இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிருவகிப்பவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய்ப் பரசிவமாகிய ஒன்றாய்ச் சிவமும் சத்தியும் என இரண்டாய், அயன் மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய், அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய், செவ்வனம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச் சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் சுவைகளாகியும் அடியார்களுக்கு எத்திறத்தினும் சுவைக்கும் திறம் கலந்த பகுதியனாய், வீட்டுலகம் அருளுபவனாய், வீட்டிற்கு வாயிலாகிய ஞானமும் அந்த ஞானத்தால் அடையத்தக்க பயனுமாய், அடியார்க்குத் தன்னை அடையத்தானே ஆறும் பேறுமாக (உபாயமும் உபமேயமும்) இருக்கும் பெருமானைத் திருவாரூரில் அடியேன் கண்டு அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்.

பாடல் எண் : 7 முதல் 10 வரை கிடைக்கவில்லை.
                       திருச்சிற்றம்பலம்


                                    6. 028    திருவாரூர்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீற்றினையும் நெற்றிமேல் இட்டார் போலும்,
         நீங்காமே வெள்எலும்பு பூண்டார் போலும்,
காற்றினையும் கடிதாக நடந்தார் போலும்,
         கண்ணின்மேல் கண்ஒன்று உடையார் போலும்,
கூற்றினையும் குரைகழலால் உதைத்தார் போலும்,
         கொல்புலித்தோல் ஆடைக் குழகர் போலும்,
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய் , நெற்றியில் திருநீறு அணிந்தவராய் , வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய் , ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய் , அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார் .


பாடல் எண் : 2
பரியதுஓர் பாம்புஅரைமேல் ஆர்த்தார் போலும்,
         பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும்,
கரியதுஓர் களிற்றுஉரிவை போர்த்தார் போலும்,
         கபாலம்,கட் டங்கக் கொடியார் போலும்,
பெரியதுஓர் மலைவில்லா எய்தார் போலும்,
         பேர்நந்தி என்னும் பெயரார் போலும்,
அரியதுஓர் அரணங்கள் அட்டார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய் , மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய் , நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய் , நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார் .


பாடல் எண் : 3
துணிஉடையர் தோல்உடையர் என்பார் போலும்,
         தூய திருமேனிச் செல்வர் போலும்,
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்,
         பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும்,
மணிஉடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்,
         வாசுகிமா நாண்ஆக வைத்தார் போலும்,
அணிஉடைய நெடுவீதி நடப்பார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய் , அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய் , மொழியைக் கடந்த பெரும்புகழாளராய் , இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய் , வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய் , அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய் , அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 4
ஓட்டுஅகத்தே ஊண்ஆக உகந்தார் போலும்,
         ஓர்உருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்,
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்,
         ஞானப் பெருங்கடற்குஓர் நாதர் போலும்,
காட்டுஅகத்தே ஆடல் உடையார் போலும்,
         காமரங்கள் பாடித் திரிவார் போலும்,
ஆட்டகத்தில் ஆன்ஐந்து உகந்தார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டை யோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய் , அனற் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய் , நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய் , ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 5
ஏனத்து இளமருப்புப் பூண்டார் போலும்,
         இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும்,
கானக்கல் ஆல்கீழ் நிழலார் போலும்,
         கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர் போலும்,
வானத்து இளமதிசேர் சடையார் போலும்,
         வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்,
ஆன்அத்து முன்எழுத்தாய் நின்றார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய் , உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய் , அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய் , காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 6
காமனையும் கரியாகக் காய்ந்தார் போலும்,
         கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர் போலும்,
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்,
         சொல்ஆகிச் சொல்பொருளாய் நின்றார் போலும்,
நாமனையும் வேதத்தார் தாமே போலும்,
         நங்கைஓர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்,
ஆம்அனையும் திருமுடியார் தாமே போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக் கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல் , சொற்பொருள் , நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 7
முடிஆர் மதிஅரவம் வைத்தார் போலும்,
         மூவுலகும் தாமேஆய் நின்றார் போலும்,
செடிஆர் தலைப்பலிகொண்டு உழல்வார் போலும்,
         செல்கதிதான் கண்ட சிவனார் போலும்,
கடிஆர்நஞ்டு உண்டுஇருண்ட கண்டர் போலும்,
         கங்காள வேடக் கருத்தர் போலும்,
அடியார் அடிமை உகப்பார் போலும்
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி , மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய் , எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய் , அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார் .
   
பாடல் எண் : 8
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்,
         இமையவர்கள் வந்துஇறைஞ்சும் இறைவர் போலும்,
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலும்,
         தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்,
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்,
         மாநாகம் நாணாக வளைத்தார் போலும்,
அம்திரத்தே அணியாநஞ்சு உண்டார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து , தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகிய நீறு பூசி , மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய் , அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந்தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து , அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார் .


பாடல் எண் : 9
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்,
         பிறவி இறவி இலாதார் போலும்,
முண்டத்து முக்கண் உடையார் போலும்,
         முழுநீறு பூசும் முதல்வர் போலும்,
கண்டத்து இறையே கறுத்தார் போலும்,
         காளத்தி காரோணம் மேயார் போலும்,
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய் , நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய் , உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி , குடந்தை , நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 10
ஒருகாலத்து ஒன்றுஆகி நின்றார் போலும்,
         ஊழி பலகண்டு இருந்தார் போலும்,
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும்,
         பிறப்புஇடும்பை சாக்காடுஒன்று இல்லார் போலும்,
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்,
         உகப்பார் மனத்துஎன்றும் நீங்கார் போலும்,
அருகுஆக வந்துஎன்னை அஞ்சேல் என்பார்
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு , கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து , பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய் , உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய் , தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர் .
  
 
பாடல் எண் : 11
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்,
         ஞானப் பெருங்கடற்குஓர் நாதர் போலும்,
கொன்றாகிக் கொன்றதுஒன்று உண்டார் போலும்,
         கோள்அரக்கர் கோன்தலைகள் குறைத்தார் போலும்,
சென்றார் திரிபுரங்கள் எய்தார் போலும்,
         திசைஅனைத்தும் ஆய்,அனைத்தும் ஆனார் போலும்,
அன்றுஆகில் ஆயிரம் பேரார் போலும்,
         அணிஆரூர்த் திருமூலட் டான னாரே.

         பொழிப்புரை :அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய் , வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய் , இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய் , ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய் , அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார் . சென்றார் - மெலித்தல் விகாரம் .

                                    திருச்சிற்றம்பலம்
                                                                        ----- தொடரும் -----

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...