சிதம்பரம் - 0644. நாடா பிறப்பு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாடா பிறப்பு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
என்னுடைய முறையீட்டைத் திருச்செவி சாத்தி,
எனது மனக்கவலை தீரும்படியாக
அடியேன் முன் எழுந்தருளி வர வேண்டும்.

 
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான


நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
     நாயே னரற்றுமொழி ...... வினையாயின்

நாதா திருச்சபையி னேறாது சித்தமென
     நாலா வகைக்குமுன ...... தருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
     தோலா சனத்தியுமை ...... யருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
     தோழா கடப்பமல ...... ரணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
     மேராள் குறத்திதிரு ...... மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நாடா பிறப்பு முடியாதோ எனக் கருதி
     நாயேன் அரற்றும் மொழி ...... வினைஆயின்,

நாதா! திருச்சபையின் ஏறாது சித்தம் என,
     நாலா வகைக்கும் உனது ...... அருள்பேசி

வாடா மலர்ப் பதவி தாதா எனக் குழறி
     வாய் பாறி நிற்கும் எனை, ...... அருள்கூர

வாராய், மனக்கவலை தீராய், நினைத் தொழுது
     வாரேன், னக்கு எதிர் முன் ...... வரவேணும்.

சூடாமணிப் பிரபை ரூபா! கனத்த அரி
     தோல் ஆசனத்தி உமை ...... அருள்பாலா!

தூயா! துதித்தவர்கள் நேயா! எமக்கு அமிர்த
     தோழா! கடப்பமலர் ...... அணிவோனே!

ஏடார் குழல் சுருபி! ஞான ஆதனத்தி, மிகும்
     ஏராள் குறத்தி, திரு ...... மணவாளா!

ஈசா! தனிப்புலிசை வாழ்வே! சுரர்த்திரளை
     ஈடேற வைத்த புகழ் ...... பெருமாளே.
   
பதவுரை

         சூடாமணிப் பிரபை ரூபா --- சூடாமணியின் ஒளி விளங்கும் திருமேனியை உடையவளும்,

         கனத்த அரி தோல் ஆசனத்தி --- பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை இருக்கையாகக் கொண்டவளும் ஆகிய

         உமை அருள்பாலா --- உமாதேவியார் அருளிய குழந்தையே!

          தூயா --- தூய உடம்பினரே!

        துதித்தவர்கள் நேயா --- துதித்து வணங்குபவர்களின் அன்பரே!

         எமக்கு அமிர்த தோழா --- அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த தோழரே!

          கடப்ப மலர் அணிவோனே --- கடப்ப மலர் மாலையை அணிபவரே!

         ஏடு ஆர் குழல் சுருபி --- மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும்,

         ஞான ஆதனத்தி --- ஞானத்தையே தனது ஆதனமாக உடையவளும்,

       மிகும் ஏராள் --- மிக்க அழகானவளும் ஆன

         குறத்தி திரு மணவாளா --- குறமகளாகிய வள்ளிபிராட்டியின் அழகிய கணவரே!

         ஈசா --- ஐசுவரியத்தை அருள்பவரே!

        தனிப் புலிசை வாழ்வே --- ஒப்பற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வாழ்கின்ற செல்வமே!

        சுரர்த் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே --- தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமையில் மிக்கவரே!

         நாடா ---- ஆராய்ந்து பார்த்து நாட விரும்பாததான

         பிறப்பு முடியாதோ எனக் கருதி --- இந்தப் பிறவித் தொழிலானது முடியாதோ என்று எண்ணி,

         நாயேன் அரற்று மொழி --- அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழியானது,

       வினையாயின் --- அடியேனது ஊழ்வினையின் பயனானது ஆயினும்,

         நாதா --- என் உயிர்த் தலைவரே!

        திருச்சபையின் ஏறாது சித்தம் என --- தேவரீரது திருச் சந்நிதியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து,

         நாலா வகைக்கும் உனது அருள் பேசி --- பலபட தேவரீருடைய திருவருளின் பெருமையையே பேசி,

         வாடா மலர்ப் பதவி தா தா என --- என்றும் வாடாத உனது திருவடி மலர் என்னும் முத்தியைக் கொடுத்தருள்க கொடுத்தருள்க என்று,

         குழறி வாய் பாறி நிற்கும் எனை --- அன்பினால் குழறி, வாய் கிழிபட்டு நிற்கும் அடியேனுக்கு

         அருள்கூர வாராய் --- திருவருள் புரிய வந்து

        மனக்கவலை தீராய் --- அடியேனது மனக் கவலைகளை எல்லாம் தீர்த்து அருள்க.

         நினைத் தொழுது வாரேன் --- தேவரீரைத் தொழுது அடியேன் வருகின்றேன்.

         எனக்கு எதிர் முன் வரவேணும் ... அடியேன் முன் தேவரீர் எழுந்தருள வேண்டுகிறேன்.


பொழிப்புரை


         சூடாமணியின் ஒளி விளங்கும் திருமேனியை உடையவளும், பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை இருக்கையாகக் கொண்டவளும் ஆகிய உமாதேவியார் அருளிய குழந்தையே!

         தூய உடம்பினரே!

       துதித்து வணங்குபவர்களின் அன்பரே!

         அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த தோழரே!

         கடப்ப மலர் மாலையை அணிபவரே!

         மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும், ஞானத்தையே தனது ஆதனமாக உடையவளும், மிக்க அழகானவளும் ஆன குறமகளாகிய வள்ளிபிராட்டியின் அழகிய கணவரே!

          ஐசுவரியத்தை அருள்பவரே!

        ஒப்பற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வாழ்கின்ற செல்வமே!

        தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமையில் மிக்கவரே!

         ஆராய்ந்து பார்த்து,  நாட விரும்பாததான இந்தப் பிறவித் தொழிலானது முடியாதோ என்று எண்ணி, அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழியானது,  அடியேனது ஊழ்வினையின் பயனானது ஆயினும், என் உயிர்த் தலைவரே! தேவரீரது திருச் சந்நிதியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து, பலபட தேவரீருடைய திருவருளின் பெருமையையே பேசி, என்றும் வாடாத உமது திருவடி மலர் என்னும் முத்தியைக் கொடுத்தருள்க கொடுத்தருள்க என்று, அன்பினால் குழறி, வாய் கிழிபட்டு நிற்கும் அடியேனுக்குத் திருவருள் புரிய வந்து, அடியேனது மனக் கவலைகளை எல்லாம் தீர்த்து அருள்க. தேவரீரைத் தொழுது அடியேன் வருகின்றேன். அடியேன் முன் தேவரீர் எழுந்தருள வேண்டுகிறேன்.

விரிவுரை

சூடாமணிப் பிரபை ரூபா ---

சூடாமணி - முடியில் சூடிக்கொள்ளும் மணி. மகுடத்தில் இருப்பது. நினைத்ததை அருளும் தெய்வமணி. வள்ளல் பெருமான் ஆறுமுகத்து அண்ணலை, "சண்முகத் தெய்வமணியே" என்று போற்றினார்.

இறைவனை மணியே என்று போற்றினர் அருளாளர்கள் பலரும்.

"பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்" என்றார் அப்பர் பெருமான். "மணிவண்ணர்" என்பது சிவபெருமானுக்கு உரிய பெயர். "மணிகண்டன்" என்பதும் அவரது திருநாமமே.

"மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே, மந்திரமே, ஒளிர் மணியே" என்பார் வள்ளல் பெருமான்.  மேலும்,

அண்டமும், அதன்மேல் அண்டமும், அவற்றுஉள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே!

 பிண்டமும், அதில்உறு பிண்டமும், அவற்றுஉள
 பண்டமும் காட்டிய பராபர மணியே!

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே!

 விண்பதம் அனைத்தும் மேல்பதம் முழுவதும்
 கண்பெற நடத்தும் ககனமா மணியே!

பார்பதம் அனைத்தும், பகர்அடி முழுவதும்
சார்புஉற நடத்தும் சரஒளி மணியே!          
   
அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே!

சராசர உயிர்தொறும், சாற்றிய பொருள்தொறும்
விராவி, உள் விளங்கும் வித்தக மணியே!

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே!

 தாழ்வு எலாம் தவிர்த்து, சகமிசை அழியா
 வாழ்வு எனக்கு அளித்த வளர்ஒளி மணியே!

 நவமணி முதலிய நலம் எலாம் தரும்ஒரு
 சிவமணி எனும் அருட்செல்வ மா மணியே!

என்று வள்ளல்பெருமான் அருட்பெருஞ்சோதி அகவலில் இறைவனைப் போற்றினார்.

மணி, மந்திரம், மருந்து என்று மூன்றையும் ஒரு தொகுதியாகக் கொள்வர் பெரியோர். மந்திரம், தந்திரம், இயந்திரம் என்றும் சொல்லப்படும். இறைவன் மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி இருந்து, அடியார்களுக்கு வாராத செல்வத்தை வருவிப்பவன். வருவிக்கும் செல்வம் அல்ல. நாம் தேடினாலும் வாராத செல்வம் அது. தீராத நோயைத் தீர்த்து அருளுவான். சாதாரண நோய் அல்ல. தீராத நோய் என்னும் பிறவிநோய்.

பரம்பர மணியானது, அண்டங்களையும், அண்டங்களில் உள்ள பொருள்களையும் காட்டும் வல்லமை உள்ளது. பராபரமணி, பிண்டங்களையும், பிண்டங்களில் உள்ள பொருள்களையும் காட்டும் வல்லமை உடையது. அரும்பெறல் மணி என்பது நினைத்தவற்றை நினைத்தபடி அருளக் கூடியது. ககனமாமணி என்பது விண்ணுலகப் பொருள்களை ஆட்டி வைக்கும். சரஒளி மணி எனப்படுவது, மண்ணுலகையும், மண்ணுலகத்தில் உள்ள பொருள்களையும் ஆட்டி வைக்கும். கலைநிறைமணி எல்லா உலகத்திலும் நின்று உலவி வருவது. வித்தகமணி என்பது அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் அனைத்திலும் விளங்குவது. சித்திசெய்மணி என்பது அட்டமா சித்திகளை அருளக் கூடியது. வளர்ஒளிமணி என்பது அழியாப் பெருவாழ்வை அருளக் கூடியது.

மாணிக்கத்து உள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி,
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்.    --- பட்டினத்தார்.

பிரபை - ஒளி.

மணி என்பது ஒளியை உடையது. ஒலியையும் தருவது. நவமணிகளும் அவற்றின் ஒளியை வைத்தே சிறப்புப் பெறுகின்றன.

சிந்தாமணி, சூளாமணி, சியமந்தகமணி, சூடாமணி, கௌத்துவமணி என்பவை தெய்வமணிகள். அவை ஒளி மிகுந்தவை. விந்து வடிவம் ஆனவை.

இறை வழிபாட்டின் போது ஒலிக்கப் பெறுவன, சிறுமணி, பெருமணி, கண்டாமணி, எனப் பலவகைப்படும். இது நாத வகையைச் சேர்ந்தது.

அரண்மனை வாயிலில் கட்டி வைக்கப்பட்டு இருப்பது ஆராய்ச்சி மணி.

சிறந்தவைகளை மணி என்று சொல்லுவது வழக்கு. மணி என்று பட்டம் அளிப்பதும் உண்டு. கவிமணி, தேவாரமணி, திருவாசகமணி, அருட்பாமணி, திருமந்திரமணி, வேதசிரோமணி, வைத்திய சிகாமணி, என்று வழங்குவது கண்கூடு.

அழகு மிக்கவைகளை மணிமண்டபம், மணிமாளிகை, மணிமேடை என்று வழங்கக் காண்கின்றோம்.

இறைவன் எழுந்தருளி உள்ள சபைக்கு மணிமன்றம் என்றே பெயர்.

தங்கமணி, வைரமணி, பொன்மணி என்றும் வழங்குவதை அறியலாம். தங்கத்தை எடைபார்க்கும் பொருளுக்கு, குன்றிமணி என்று பெயர்.  அது குப்பையிலே கிடந்தாலும் தனது ஒளியில் குன்றாது விளங்கும்.

தானியங்களுக்கும் நெல்மணி, கோதுமை மணி என்று பெழர் வழங்குவது உண்டு.

மனிதனின் கண்ணுக்கு ஒளியை வழங்குவது கண்ணில் உள்ள மணியே. அதனால்தான், மக்களைக் கண்மணி என்று கொஞ்சுகின்றோம்.

சூடாமணியின் ஒளிவிளங்கும் திருமேனியை உடையவள் அம்பிகை.

கனத்த அரி தோல் ஆசனத்தி ---

அரி - சிங்கம். சிங்கத்தின் தோலைத் தனது இருக்கையாகக் கொண்டவள் அம்பிகை.
  
துதித்தவர்கள் நேயா ---

நெய், நேயம் - நெய்ப்புத் தன்மை. ஒட்டிக் கொள்வது.

துதித்து வணங்கும் அன்பர்களுக்கு அன்பு உடையவனாக விளங்குபவன் இறைவன்.  

எமக்கு அமிர்த தோழா ---

உற்ற இடத்து உதவுபவன் தோழன். "உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்றார் திருவள்ளுவ நாயனார்.

சுந்தரமூர்த்தி நாயனார் தம்பிரான் தோழர் எனப்பட்டார். "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று இறைவனே அருளிச் செய்தார்.

திருவாரூரில் கோயில் கொண்டருளிய இறைவர் ஆரூரில் வாழும் அடியார்கள் கனவில் தோன்றி ``நம் ஆரூரனாகிய வன்தொண்டன் நாம் அழைக்க, இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டு அழைத்து வருக`` எனக் கட்டளை இட்டார். தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கல வாத்தியங்களுடன் சென்று வன்தொண்டரை எதிர்கொண்டு அழைத்தார்கள்.

நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டு அழைத்த அடியார்களைத் தொழுது, ``எந்தை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்`` என்ற கருத்துக் கொண்ட ``கரையும் கடலும்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார். சிவன் அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயில் அமர்ந்த பெருமானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே ``நம்பியாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப் பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக` என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அந்த வானொலி கேட்ட சுந்தரர், பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார்.

அன்று முதல் அடியார்கள் எல்லாம் அவரைத் `தம்பிரான் தோழர்` என்று அழைத்தனர். இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவவேந்தராய்ப் பூங்கோயில் அமர்ந்த பிரானை நாள்தோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.

தோழர் என்பதால், சுந்தரருக்கு வேண்டியதை எல்லாம் அவர் கேட்டபோது தந்தருள் புரிந்தார் இறைவர். திருநாகைக் காரோணத் திருப்பதிகத்தின் வாயிலாக இதனை அறியலாம். பரவையாரின் ஊடலை மாற்றத் தூதனாகவும் எழுந்தருளினார்.

அருணகிரிநாதருக்கும் உற்ற துணைவனாக இருந்து முருகப் பெருமான் பேரருள் புரிந்தார் என்பதால், இறைவனைத் தனக்கு அழியாத தோழன் என்னும் முகமாக, எமக்கு அமிர்த தோழா என்றனர்.

தருஞ்சரதம் தந்துஅருள் என்று அடிநினைந்து
         தழல் அணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடுஆர் தோ-
         ழமை அளித்த பெருமான்கோயில்,
அரிந்த வயல் அரவிந்தம் மதுவுகுப்ப
         அது குடித்துக் களித்து, வாளை
கருஞ்சகடம் இளக, வளர் கரும்புஇரிய
         அகம்பாயும் கழுமலமே.                              --- திருஞானசம்பந்தர்.

         மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில். நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப் பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
          னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும்
          இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள் ஓமம்
          வளர் தூமம் ஓடி அணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
           நிறைகின்ற கொச்சை வயமே.                            --- திருஞானசம்பந்தர்.

நதிஆரும் சடையானை, நல்லூ ரானை,
         நள்ளாற்றின் மேயானை, நல்லத் தானை,
மதுஆரும் பொழில்புடைசூழ் வாய்மூரானை,
         மறைக்காடு மேயானை, ஆக்கூ ரானை,
நிதியாளன் தோழனை, நீடூ ரானை,
         நெய்த்தான மேயானை. ஆரூர் என்னும்
பதியானை, பள்ளியின்முக் கூடலானைப்
         பயிலாதே, பாழேநான் உழன்ற வாறே.                       --- அப்பர்..

நாதனை, நாதமிகுத்து ஓசைஅது ஆனவனை,
         ஞான விளக்குஒளியாம் ஊன்உயிரைப், பயிரை,
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும்
         பற்றுவி டாதவனை, குற்றம்இல் கொள்கையனை,
தூதனை, என்தனைஆள் தோழனை, நாயகனைத்
         தாழ்மக ரக்குழையும் தோடும் அணிந்த திருக்
காதனை நாய்அடியேன் எய்துவது என்றுகொலோ
         கார்வயல் சூழ்கானப் பேர்உறை காளையையே.             --- சுந்தரர்.

ஏழ்இசையாய், இசைப்பயனாய், இன்அமுதாய், என்னுடைய
தோழனுமாய், யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்துஇருக்கேன் என்ஆரூர் இறைவனையே.       ---  சுந்தரர்.

அயர்வற எனக்கே அருள்துணை ஆகி, என்
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே!

அன்பினில் கலந்து, எனது அறிவினில் பயின்றே,
இன்பினில் அளைந்த என் இன்னுயிர் நட்பே!      

நான் புரிவன எலாம் தான் புரிந்து, எனக்கே
வான்பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே!

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு,
ள்உறு நெய்யில்என் உள்உறு நட்பே!

செற்றமும் தீமையும் தீர்த்து, நான் செய்த
குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே!

குணம் குறி முதலிய குறித்திடாது, னையே
அணங்கு அறக் கலந்த அன்புடை நட்பே!

பிணக்கும், பேதமும், பேய்உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து, னைக் கலந்த நல் நட்பே!  
         
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்து, னைக் கலந்த நல் நட்பே.      ---  திருவருட்பா.

எனவே, இறைவன் அடியார்களுக்கு நல்ல நட்பாக அமைந்துள்ளான் என்பதைக் காட்டும் அருட்பாடல்களைச் சிந்திக்கவும். சிந்தித்து இறைவனைத் தோழனாகக் கொண்டு, துயர் தீர்ந்து வாழவும்.
  
நாடா பிறப்பு முடியாதோ எனக் கருதி, நாயேன் அரற்று மொழி வினையாயின் ----

பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம், அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்து, உண்மைப் பொருளை உணராமல், உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும், அதை உணரும் பக்குவம் இன்மையால், தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

உணர்த்தும் உனை உணராமல், உணர்ந்தவையே நாடி
இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.     --- தாயுமானார்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்து, பிறவி பொய் எனவும், வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருக, பிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும்.

ஆராய்ந்து பார்த்து, நாட விரும்பாததான இந்தப் பிறவித் தொழிலானது முடியாதோ என்று எண்ணி, இறைவன்பால்  முறையிட்டு ஓலமிட்டு அலறும் ஆன்மாவின் அலறலை இறைவன் திருச்செவி சாத்தி அருளுவான். பிறவி எப்போது அறும் என்றால், அனுபவத்துக்கு எடுத்து வந்த வினையின் போகம் முடிந்த பிறகே. அதுவரையில் பிறவி அறவேண்டும் என்று ஆன்மா அலறுவதும் அதன் வினையின் பயனே ஆகும்.

நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் ---

நாம் அலறுவது இறைவன் திருமுன் ஏறவில்லையோ என நினைந்து ஆன்மா மேலும் மேலும் அலறித் துடிக்கும்.
  
நாலா வகைக்கும் உனது அருள் பேசி ---

இறைவன் அருள் வேண்டி, மேலும் மேலும் பல வகையாக இறைவனுடைய திருவருள் எல்லமையைப் பேசிப் புகழ்ந்து கொண்டு இருக்கும்.

வாடா மலர்ப் பதவி தா தா என வாய் பாறி நிற்கும் ---

முத்தி நலத்தைத் தந்து, அழியாத பதத்தில் வைத்து அருள வேண்டும் என்று அன்பினால் நாக்கு குழறும்படியாகப் பலபடியாக வாய் ஓயாது அவனது அருளைக் கூவி நிற்கும்.

என்னை அருள் கூர வாராய், மனக் கவலை தீராய் ---

பெருமானே! அடியேனுக்கு அருள் புரிந்து, அடியேனுடைய மனக் கவலையை மாற்றி அருள வேண்டும் என்று உயிர் இறைவனிடம் குறையிரந்து நிற்கும்.

நினைத் தொழுது வாரேன், எனக்கு எதிர் முன் வரவேணும் ---

நாம் இறைவனைத் தொழுது அவன் அருளை வேண்டி நின்றால், அவன் நம்மைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிவான்.

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்,
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்,
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.     --- அப்பர்.

பாடிமால் புகழும் பாதமே அல்லால்
    பற்றுநான் மற்று இலேன் கண்டாய்,
தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே!
    திருப் பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு, உவப்பதும் உன்னை,
    உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி,
வாடினேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்,
    வருகஎன்று அருள் புரியாயே.        --- மணிவாசகர்.

கருத்துரை

முருகா! எனது பிறவி நோய் தீரவேண்டும். என்னுடைய முறையீட்டைத் திருச்செவி சாத்தி அருளவேண்டும். எனது மனக்கவலை தீரும்படியாக அடியேன் முன் எழுந்தருள் வர வேண்டும்.











No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...