சிதம்பரம் - 0651. மகரமொடு உறுகுழை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மகரமொடு உறுகுழை (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
உண்மைப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து,
ஈடேற அருள்.


தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
     தனதன தனதன தான தாத்தன ...... தனதான


மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும்

மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே

இகலிய பிரமக பால பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக

எழில்பட மழுவுடன் மானு மேற்றது
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே

ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி

தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு
மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே

அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

மகரமொடு உறு குழை ஓலை காட்டியும்,
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்,
வரவர வரஇதழ் ஊறல் ஊட்டியும், ...... வலைவீசும்

மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில்,
வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்,
வளமையில் இளமையில், மாடை வேட்கையில் ......மறுகாதே,

இகலிய பிரம கபால பாத்திரம்
எழில்பட இடு திருநீறு சேர்த்திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும், ...... விருதாக

எழில்பட மழுவுடன் மானும் ஏற்றதும்,
இசைபட இசை தரு ஆதி தோற்றமும்,
இவைஇவை என உபதேசம் ஏற்றுவது ...... ஒருநாளே.

ஜகதலம் அதில் அருள் ஞான வாள்கொடு
தலை பறி அமணர் சமூகம் மாற்றிய
தவமுனி சகம்உளர் பாடு பாட்டு என ...... மறைபாடி,

தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தா எனாச் சில
சபதமொடு எழுவன தாள வாச்சியம் ...... உடனே, நீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் ...... அகலாதே,

அரிதுயில் சயன வியாள மூர்த்தனும்,
அணிதிகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய ...... பெருமாளே.


பதவுரை

      ஜகதலம் அதில் --- இந்த மண்ணுலகத்தில்,

     அருள் ஞானவாள் கொடு --- அருள் ஞான வாளைக் கொண்டு, (கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது)

     தலைபறி அமணர் சமூகம் மாற்றிய தவமுனி --- மயிரைப் பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (திருஞானசம்பந்தப் பெருமானாகிய) தவமுதல்வரே!

     சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி --- உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற தேவாரத் திருப்பதிகங்களில் வேதசாரத்தை அமைத்துப் பாடியருளியவரே!

      தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா --- தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான

     சில சபதமொடு எழுவன தாள வாச்சியமுடனே --- மிகுந்த ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் (சப்தமொடு என்னும் சொல் சபதமொடு என வந்தது)

     நீள் அகு குகுகுகு என --- நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன்

     ஆளிவாய்ப் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் --- ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,

      அரன் அவனுடன் --- சிவபெருமான் ஆடும் போது

     எழு காளி கூட்டமும் அகலாதே --- அவருடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் தேவரீரைச் சூழந்திருக்க,

     அரி துயில் சயன வியாளமூர்த்தனும் --- திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேடன் என்னும் பதஞ்சலியும்,

     மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் --- அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிரபாதரும்,

         அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே --- அம்பலவாணப் பெருமான் புரிந்தருளும் திருநடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதவிதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமையில் மிக்கவரே!

         மகரமொடு உறுகுழை ஓலை காட்டியும் --- மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும்,

     மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் --- மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும்,

     வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் --- பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும்,

     வலை வீசும் மகர விழி மகளிர் ---  காம வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின்

     பாடல் வார்த்தையில் --- பாடலிலும் சொற்களிலும் ஈடுபட்டு

     வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் --- அந்த வழியே ஒழுகுகின்ற தந்திரமான வாழ்க்கையிலும்,

     வளமையில் --- அவர்களுடைய செல்வத்திலும்,

     இளமையில் --- இளமை அழகிலும் ஈடுபட்டு,

     மாடை வேட்கையில் மறுகாதே --- பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல்,

      இகலிய பிரமகபால பாத்திரம் எழில்பட --- மாறுபட்டுத் தேடி, பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்),

     இடு திருநீறு சேர்த் திறம் --- அழகு விளங்க இடப்படுகின்ற திருநீறு உடலில் சேர்ந்துள்ள திறமும்,

     இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் --- கொன்றை மலரை அழகுள்ள சடையில் சேர்த்துள்ள திறமும்,

     விருதாக --- வெற்றிக்கு அடையாளமாக

     எழில்பட --- அழகு விளங்க

     மழுவுடன் மானும் ஏற்றதும் --- மழுவாயுதத்தையும் மானையும் திருக்கையில் ஏற்ற தன்மையும்,

      இசைபட இசை தரு ஆதி தோற்றமும் --- புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதி பரம்பொருளாகத் தோன்றிய தோற்றமும்,

     இவை இவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே --- ஆகிஇவைகளின் உண்மைப் பொருள் இதுவாகும் என்று நீ உபதேசித்துப் புலப்படுத்துவதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமோ?


பொழிப்புரை


         இந்த மண்ணுலகத்தில், அருள்ஞான வாளைக் கொண்டு,
மயிரைப் பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த திருஞானசம்பந்தப் பெருமானாகிய தவமுதல்வரே!

     உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற தேவாரத் திருப்பதிகங்களில் வேத சாரத்தை அமைத்துப் பாடியருளியவரே!

     தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமாக மிகுந்த ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவபெருமான் ஆடும் போது  அவருடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் தேவரீரைச் சூழந்திருக்க, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேடன் வடிவான பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிரபாதரும், நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதவிதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமையில் மிக்கவரே!

      மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், காம வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு , அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமை அழகிலும் ஈடுபட்டு,  பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல்,

         மாறுபட்டுத் தேடிப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் சேர்த்துள்ள திறமும்,
வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் திருக்கையில் ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதி பரம்பொருளாகத் தோன்றிய தோற்றமும்,  ஆகிய இவைகளின் உண்மைப்பொருள் இது என்று நீ உபதேசித்துப் புலப்படுத்துவதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமோ?

விரிவுரை

மகரமொடு உறுகுழை ஓலை காட்டியும் ---

மகர மீன் வடிவில் ஆன குண்டலங்களையும் காதோலையையும் விலைமகளிர் அணிந்து அழகு காட்டுவார்கள்.

மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் ---

மழை என்றது மேகத்தைக் குறித்து நின்றது. மேகத்தைப் போலக் கருமையான கூந்தல். அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் சூடி உள்ள மாலையைக் காட்டி விலைமகளிர் ஆடவரை மயக்குவார்கள்.

வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் ---

அவரோடு பழகப் பழக வாயிதழில் ஊறும் எச்சலை இனிமையாகத் தந்து மயக்குவார்கள்.

வலை வீசும் மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் ---

இப்படி எல்லாம் ஆடவர்பால் காமவலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்களை உடைய பெண்கள் இனிமையாகப் பாடுவதிலும், மயக்குமாறு பேசுகின்ற சொற்களிலும் ஆடவர் மனம் மிகவும் ஈடுபடும்.

வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் ---

அவ்வாறு ஈடுபட்ட பின்னர் அவர் தரும் கலவி சுகத்தை மிகவும் விரும்பி, அந்த விலைமளிர் மனம் இசையும்படியான உபாயம் எவையோ அவற்றின் வழியே, காமாந்தகாரம் என்னும் இருளால் மனமானது மூடப்பட்டு ஒழுகுவார்கள் ஆடவர்கள்.


வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே ---

அவ்வாறு இன்பத்தைத் தரும் விலைமளிரின் இளமை அழகில் ஈடுபட்டு, அவர்க்கு வேண்டும் பொருளைத் தேடுவதில் மனமானது ஈடுபட்டு அதனால் மிகவும் கலக்கம் உறும்.

அறிவுஇலாப் பித்தர், ன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, ரிந்து,
     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.           --- திருப்புகழ்.

இகலிய பிரமகபால பாத்திரம் எழில்பட ---

ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்து இருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீங்கள் எங்களைப் படைத்துக் காக்கும் தலைவரானபடியால், அனைத்து உலகிற்கும் முதல்வனாய், உயிர்க்கு உயிராய் நிற்கும் முதல் கடவுள் யார் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர்.

அதுபொழுது பிரமனும், திருமாலும் தத்தமது அதிகாரச் செருக்கால் மயங்கி, தாங்களே முதற்கடவுள் என்று தனித்தனி கூறி வாது புரிந்தனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `உங்களில் ஒருவரும் முதல்வர் அல்லீர். சிவபெருமானே அனைத்து உயிர்க்கும் முதல்வன்` எனக் கூறியும் தெளிவு பெறாது வாது புரிந்தனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழையைப் பொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே மட்டுமல்லாமல் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர் தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார்.
திருமாலும் தம் உலகை அடைந்தார்.

வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான்.

அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலானவர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், தக்க முறையில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வு அடைந்தார்கள். பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப் பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விஷ்வக் சேனனைச் சூலத்தின்மேல் கோத்து எடுத்துக் கொண்டு செல்ல, திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, `எந்தையே நீ வேண்டுவது யாது` எனக் கேட்க, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியில் இருந்து ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காலமாக ஒழுகிந்து. திருமால் நினைவு இழந்து வீழ்ந்தார். ஆயினும், வைரவரது கையில் இருந்த கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள் மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விஷ்வக்சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெருமான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பலவற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுகின்றது.

 செல்வம், அதிகாரம் முதலியவற்றால் உண்டாகும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `நான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிபவரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன.

தக்கன் வரலாறு, என்றும் செருக்கு உடையராய் இருப்பவரை ஒறுத்தலைக் குறிக்கும்.  இது, ஓரோவழிச் செருக்கு உறுவாரை ஒறுத்தலைக் குறிக்கும்.

இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் தெளியப்படும்.

இதனைத் திருமூலர் கூறுமாறு காண்க...

எங்கும் பரந்தும், இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட்கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்து ஆகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுக வேண்டிய கடப்பாடு உடைய தேவர்கள், தமக்குள்ள அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து, அவரைத் தெளிவிப்பதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்கு உற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திருமாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கு ஒழித்து அருளினான்.


இடு திருநீறு சேர்த் திறம் ---

அழகு விளங்க இடப்படுகின்ற திருநீறு இறைவனது திருமேனியில் சேர்ந்துள்ள திறம். இதனைச் சற்று விரிவாகக் கணலாம்.

சிறுகுழந்தையின் குடல் மருந்தைச் சீரணிக்கும் சக்தி அற்றது என்று, குழந்தையின் நோய்க்கு உண்டான மருந்தைத் தான் உண்டு, மருந்தின் பயனைப் பாலின் வழியே அக் குழந்தை பெறும்படி செய்யும் தாயைப் போல, அம்பிகை நடராசமூர்த்தியின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகர வைப்பவள்.

குழந்தையின் பொருட்டுத் தாய் மருந்து உட்கொள்வது போலவே, உயிர்கள் படும் துன்பத்தை நீக்கிக் காத்து அருளவே, இறைவன் தனது திருமேனியில் திருநீற்றினை அணிந்துள்ளான்.  

நீற்றினை அணிந்தது என் நின் இறைவன் என்றே
சாற்றினை, உயிர்க்கு இடர் தணிப்பது என எண்ணாய்,
தோற்றி உள தம் புதல்வர் துன்பம் உறும் அந்நோய்,
மாற்றும் வகை அன்னையர் அருந்திய மருந்தாம்      --- திருவாதவூர்ப்புராணம்.

 இளங்குழவிப் பிணிக்கு, ன்ற தாய்மருந்து
     நுகர்வதுபோல், ருளின் மாண்ட,
களங்குலவு மலம் உயிர்கட்கு ஒழிய, ருள்
     நடம் காணும் கடன்மீக் கொண்டு,
வளங்குலவு தனது பெரும் கற்பும், ஒரு
     கணவர் இறை மாண்பும் தோன்ற,
விளங்கும் இரணிய மன்றில் நின்று அருளும்
     மணிவிளக்கை விளம்பி வாழ்வாம்                    --- திருவானைக்காப் புராணம்.

தினைவளம் காத்துச் சிலம்பு எதிர்
    கூஉய், சிற்றில் முற்று இழைத்து,
சுனைவளம் பாய்ந்து, துணைமலர்
    கொய்து, தொழுதெழுவார்
வினைவளம் நீறு எழ, நீறு அணி
    அம்பலவன் தன் வெற்பில்
புனைவளர் கொம்பர் அன்னாய் அன்ன
    காண்டும் புனமயிலே.                                       --- திருக்கோவையார்.

இதன் பொருள் ---
தன்னைத் தொழுது எழும் அடியார்களின் வினையினது பெருக்கமானது பொடியாகும்படியா, தன் திருமேனியில் திருநீற்றை அணியும் அம்பலவனது மலையில் உள்ள பூங்கொம்பை ஒத்த தலைவியே! தினையாகிய வளத்தைக் காத்து, மலைகளில் எதிரொலிகளை அழைத்து, சிறிய வீடுகளைக்கட்டி, அருவி நீரில் பாய்ந்து, நல்ல மலர்களைப் பறித்து, அங்குள்ள மயில்களையும் காண வருவாயாக.

திருநீறு அணிந்த கோலம் காண்பவருடைய நெஞ்சத்தைப் பிணிக்கும் என்பதால் "காண இனியது நீறு" என்றார் திருஞானசம்பந்தர். அக்கோலம் தொழுது எழுவார் எள்ளத்து நீங்காது நிற்பதால், அவ்வடியாரின் வினையானது நீறு ஆகும் என்னும் கருத்தால், தொழுது எழுவார் வினைவளம் நீறு எழ நீறு அணி அம்பலவன் என்றார்.

பவளமால் வரையைப் பனிபடர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும்,
குவளை மாமலர்க் கண்ணியும், கொன்றையும், துன்றுபொன் குழல் திருச்சடையும்,
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழுகு ஒக்கின்றதே. 
                                                                              --- திருவிசைப்பா.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே!          --- அப்பர்.

ஒண்மையனே! திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும்
வெண்மையனே! விட்டிடுதி கண்டாய், மெய்யடியவர்கட்கு
அண்மையனே! என்றும் சேயாய் பிறர்க்கு, அறிதற்கு அரிதாம்
பெண்மையனே! தொன்மை ஆண்மையனே! அலிப்பெற்றியனே. ---  திருவாசகம்.

அத்தகு சிறப்பு மிக்க திருநீற்றினை நாமும் அணிந்து நலம் பெறவேண்டும்.

திருநீற்றுக்காகவே இரண்டு நாயன்மார்கள்  தங்கள் உயிரைத் துறந்தவர்கள்.
ஒருவர் ஏனாதி நாயனார், மற்றொருவர் மெய்ப்பொருள் நாயனார்


திருநீறு செய்யும் விதி

முத்தி தருவது நீறு, முநிவர் அணிவது நீறு,
சத்தியம் ஆவது நீறு, தக்கோர் புகழ்வது நீறு,
பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு,
சித்தி தருவது நீறு, திரு ஆலவாயான் றிருநீறே.

திருநீறு, பசிதம், இரட்சை, விபூதியெனப் பல நாமங்கள் பெற்று விளங்கும்.

அறியாமையை அகற்றி சிவசோதியைத் தரலால் பசிதம். பேய் பழிபாவம் நோய் ஆகிய தீகைளின்றும் காப்பதனால் இரட்சை; அளவற்ற செல்வத்தைத் தருதலால் விபூதி; எனப் பெயர் பெறும்.

இரும்புக் கவசம் பூண்டவனுக்கு ஆயுதங்களின் துன்பம் நேராது. அதுபோல், திருநீறு என்ற வஜ்ரகவசம் பூண்டார்க்கு யாதோர் இடரும் எய்தாது. வினைநீங்கி வீடுபெறுவர்.

கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசிமகிழ்வரே யாமாகிற்
றங்கா வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே.          --- திருமூலர்.

திருநீறு கற்பம்,அநுகற்பம், உபகற்பம், என மூன்று வகைப்படும்.

கற்பம் ---

கன்று போடாதது, மலடு, இளங்கன்றுடையது, கருவுற்றது, முதிர்ந்த கன்றுடையது, அங்கப்பழுதுடையது. ஆகிய பசுக்களை நீக்கி, நல்ல அழகுடைய சிறந்த கன்றோடு கூடிய பசுவை பங்குனி மாதத்தில் நெல்லறுத்த வயலில் மேயவிட்டு, அப்பசு விடுகின்ற கோமய (சாண) த்தை அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில்,காலை நீராடி சிவபூஜை முதலியன செய்து, சாணம் கீழே விழாமற்படிக்கு, தாமரை, பலாசம், வாழை ஆகிய இலைகளில் ஏதாவதொன்றில், சத்யோஜாத மந்திரஞ் சொல்லி ஏற்கவேண்டும். மேல் வழும்பினை எடுத்துவிட்டு, வாமதேவ மந்திரஞ் சொல்லி, பஞ்ச கவ்வியம் விட்டு, அகோர மந்திரம், கொல்லிப் பிசைந்து, தற்புருட மந்திரஞ் சொல்லி உருண்டை செய்தல் வேண்டும். ஓமத்தீ மூட்டிபதடியுடன் சேர்த்துச் சுட்டு, நல்லபதத்தில் ஈசான மந்திரஞ் சொல்லி எடுத்து, புதிய ஆடையில் வடிகட்டி, பொன், வெள்ளி, தாமிரம், ஆகிய பாத்திரம் உத்தமம், மத்திமம், அதமம், இன்றேல் புதியமண் பித்தளை, சுரை ஆகிய பாத்திரங்களிலும் வைக்கலாம். அவ்வாறு்வைக்கும் போது அத்திருநீற்றை சிவபெருமானுடைய திருவுருமாக எண்ணி பஞ்சப் பிரமமந்திரமும், சடங்க மந்திரமும் சொல்லி, அவற்றுடன் சண்பகம், தாழை, பலாசம்புன்னாகம், தாமரை, துளசி, பாதிரி, தக்கோலம், நாயுருவி, தருப்பையின் நுனி முதலியவற்றை விபூதியிலிட்டு, மலர் சூட்டி வெண் துகிலால் வாய்கட்டு, காயத்திரி மந்திரஞ் சொல்லி தேனுமுத்திரைகாட்டி பத்திரப்டுத்துதல் வேண்டும். அதில் வேண்டியபோது சிவமந்திரஞ் சொல்லி எடுத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

அநுகற்பம் ---

சித்திரை மாதத்தில் காட்டிற்குச் சென்று அங்குள்ள பசுவின் உலர்ந்த கோமய(சாணத்)தைக் கொண்டு வந்து இடித்து பஞ்சகவ்வியம் விட்டு முன் கூறிய முறைப்படி நீற்றி எடுக்கவேண்டும்.

உபகற்பம் ---

காட்டுத்தீயால் வெந்நீற்றைக் கொணர்ந்து இடித்து கோ நீர் விட்டுப் பிசைந்து, முன் கூறிய முறைப்படி நீற்றி எடுத்து வைக்கவேண்டும். இனி கற்பம் என்றும் ஒருவகை உண்டு. அது உபகற்பத்தின் சிறு பிரிவாம்.

சர்வ சங்கார காலத்தில் சிவபெருமான் மூவரையும், தேவரையும், நெற்றிக் கண்ணால் எரித்து அம்மயானத்தில் நடித்தனர். அப்பொழுது அவருடைய அருள் திருமேனியில் அந்நீறு முழுவதும் படிந்தது. அதனைச் சிவபெருமான் திருக்கரத்தால் வழித்து எறிந்தனர். அதனை இடபதேவர் உண்டு தன் வீரியத்தைப் பசுக்கள் பால் விடுத்தனர். அதனாலும் தேவர்கள் யாவரும் பசுவின் உடம்பில் வசிப்பதாலும், பசுவின் சாணத்தை எரித்த நீறு மிகவும் புனிதம் பெற்றது.

அத் திருநீற்றை ஒரு கரத்தில் வாங்குதலும், தலை கவிழ்ந்து பூசுதலும் குற்றம். இனி, திரிபுண்டரமாக அணிகின்ற விதியை தத்தம் குருமூர்த்தியிடம் கேட்டுத் தெளிக. சென்னியில் அணிவதால் கழுத்து வரை செய்த பாவங்கள் தீரும். மார்பில் அணிவதால் உள்ளத்தால் செய்த பாவம் தீரும். கரத்தில் அணிவதால் கரத்தால் செய்யும் பாவங்கள் தீரும். முழங்தாளில் அணிவதால் கால்களால் செய்யும் பாவங்கள் தீரும். இங்ஙனம் திருநீறு எல்லாப் பாவங்களையும் போக்கவல்லது. மிகுந்த பாவம் செய்தவர்க்கு திருநீற்றில் வெறுப்பு உண்டாகும். திருநீறு இடாத வரைக் கண்டு பெரியவர்கள் அஞ்சுகின்றனர்.

பிணியெலாம் வரினும் அஞ்சேன், பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்,
துணிநிலா அணியினான் தன் தொழும்பராடு அழுந்தி, அம்மால்
திணிநிலம் பிளந்து காணாச் சேவடி பரவி, வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே.           --- மணிவாசகர்.

போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால்
         போக போகநீர் புலம் இழந்து அவமே,
நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
         நிற்க நிற்க, அந் நிமலரைக் காண்க,
சாற்றின் நன்னெறி ஈதுகாண், கண்காள்!
         தமனி யப்பெரும் தனுஎடுத்து எயிலைக்
காற்றி நின்ற, நம் கண்நுதல் கரும்பை,
         கைலை ஆளனைக் காணுதல் பொருட்டே.  --- திருவருட்பா

திருநீறு அணியாது செய்யும் தான தருமங்களாலும், விரதங்களாலும், தவங்களாலும், ஒருபோதும் பலன் அடையார். ஆதலால் திருநீற்றை ஒவ்வொருவரும் அன்புடன் அணிதல் வேண்டும்.

சிவநாமத்தைக் கூறி திருநீறு இட்டார், நிச்சயமாக சிவகதி பெறுவர். “திருவாய்ப் பொலிய சிவாயம வென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி” என்று அப்பமூர்த்திகள் கூறுகின்ற அருமையை உன்னுமின். “சுந்தரமாவது நீறு” “கவினைத் தருவது நீறு” என்ற திருவாக்குகளையும் உய்த்து உணர்மின்; மேல் நாட்டாரும் இன்று அழகு செய்ய வெண் பொடியை முகத்தில் பூசி உவக்கின்றனர். சிவப்பொடி பூசினால் பவம் பொடியாகும். சிவநாமயத்தை கூறி திருநீறிட்டார்க்கு பேய் பில்லி பூதங்களாலும், நோய்களாலும், துன்பம் நேராது என்பதை இன்றைக்கும் கண்கூடாகக் காண்கின்றோம். “நீறில்லா நெற்றி பாழ்” என்ற தமிழன்னையின் அமிழ்த உரையையும் நினைமின். அன்பர்கள் அனைவரும் அன்புடன் அரன் நாமங் கூறி திருநீறிட்டு வினைகளை வேரோடு களைந்து இருமை நலன்களை எளிதிற் பெறுவார்களாக.

திருநீறு வாங்கும் முறை, திருநீற்றைத் தரிக்கும் முறை குறித்து, குமரேச சதகம் கூறுவதைக் காண்க.

திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

          குதிரைமீது அமர்ந்தும், அழகிய பல்லக்கில் அமர்ந்தும், உயரமான மணைமீது அமர்ந்தும்,  அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பெரிய திண்ணைகளில் அமர்ந்தும்,  திருநீறு அளிப்போர்கள் கீழேயிருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து வாங்கி அணிந்தாலும், ஒரு கையாலும் மூன்று விரல்களாலும் ஏற்றாலும், (வாயில்) தரித்த தாம்பூலத்தோடும், அருமையான வழியொன்றிற் செல்லும்பொழுதும்,  அழுக்கு நிலத்திலும், (ஆகிய) அந்த இடங்களிலே அணிந்தாலும், அளித்தபோது மறுத்தாலும், அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று அறிஞர் கூறுவர்.

     
திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யும் திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     பேரன்புடன் சிவசிவா என்று துதித்து விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, நிலத்தில் சிந்தாதவாறு மேல்நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம், நெற்றியில் பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாளும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீண்ட நாளைய பழவினை நெருங்காது;   உடம்பு தூயது ஆகும். அவர்களிடமிருந்து பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்;  முகத்திலே திருமகள் நடம்புரிவாள்; மனக்கலக்கம் உண்டாகாது; மேலான வீடு தரும்;  இவர்களையே சத்தியும் சிவனும் என விளம்பலாம்.


இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் ---

இதழி - கொன்றை. பொன் இதழி என்றும் சொல்லப்படும். கடுக்கை என்றும் பெயர் உண்டு. "கடி அவிழ் கடுக்கை வேணி" எனத் திருவிளையாடல் புராணத்தில் வருவதும் காண்க.

வேணி - திருச்சடை. சிவபெருமான் அழகிய கொன்றை மலரைத் தனது அழகுள்ள சடையில் சேர்த்துள்ள திறம்.

கொன்நவின்ற மூஇலைவேல் கூர்மழுவாள் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பு என்னைகொலாம்
அன்னம்அன்ன மெல்நடையாள் பாகம் அமர்ந்து அரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே.   --- திருஞானசம்பந்தர்.

அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட்படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?
  
சித்திரை மாதத்தில் மட்டும் இந்த பூ பூக்கும். சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல திருக்கோயில்களில் தலமரமாக உள்ளது. மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடத்தும் பூஜையில் சரக்கொன்றை மலருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, இந்த பூவுக்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு.

இந்த பூக்கள் தான் பண்டைய காலத்தில் படை எடுத்து சென்று வென்று வரும் மன்னர்களுக்கு வெற்றிமாலையாக சூட்டப்பட்டன. போரில் எதிரியை கொன்று வந்த கோமகனை கொன்றை பூக்களால் மாலை சூடி வரவேற்பது அரண்மனை வழக்கமாக இருந்துள்ளது. கொன்றை மலரை கழுத்தில் சூடி, கொன்றை மரத்தின் பாலை நெற்றித் திலகமாக இட்டு வாழ்த்தினர்.

கொன்றை மலர் ஓங்கார வடிவமாக உள்ளது. தேன் நிறைந்தது.
சிவபெருமானுக்கு உகந்த மலர்.

கொன்றை மலர் ஞானத்தின் இருப்பிடமாக உள்ளது. அதில் உள்ள தேனை உண்ண வண்டுகள் நாடி வரும். ஞானத்தை நாடி மெய்யடியார்கள் வருவார்கள். வண்டுகள் அடியார்களைக் குறிக்கும். கோத்தும்பீ என்றும் அரச வண்டு என்றும் மணிவாசகப் பெருமான் பாடியது மெய்யடியார்களையே. சிவபெருமான் கொன்றை மலரை விரும்பிச் சூடியதன் உண்மை இதுவே ஆகும்.

திருக்கோவையாரில், "சுரும்பு உறு கொன்றையன்", "நறைக்கள் மலி கொன்றையோன்", "தார் உறு கொன்றையன்", "கள் இனம் ஆர்த்து உண்ணும் வண்கொன்றையோன்", "செந்தார் நறும் கொன்றைச் சிற்றம்பலவர்", "கமழ் கொன்றை துன்றும் அலங்கலைச் சூழ்ந்த சிற்றம்பலத்தான்" என்றும் மணிவாசகப் பெருமான் பாடி அருளிய உண்மையை உணர்க.

பாரதப் போரில், பதின்மூன்றாம் நாளில், மாவீரனான அபிமன்னனை, சூழ்ச்சியால் வெல்ல நினைத்தான் துரியோதனன். அபிமன்னனுடன் பீமசேனனும் சேர்ந்து கொண்டதால், போரில் அவர்களை வெல்வது மிகவும் அரிதாகும்.  இருவரையும் வெவ்வேறு இடத்திற்குச் செருத்த நினைத்தான். எனவே, அவர்கள் இருவரும் வரும் வழியில், சிவபெருமான் அளித்த கொன்றை மாலையை இட்டால், அந்த மாலையைச் சிவபெருமானாகவே கொண்டு, அதனைத் தாண்டிச் செல்லாமல் அபிமன்னனும், பீமசேனனும் வேறு திசைகளில் செல்வர். இதனை உள்ளத்தில் கொண்டு, சிவபெருமான் "உனக்கு அளித்த கொன்றை மாலையை அவர்கள் வரும் வழியில் இடவேண்டும்" என்று சயத்திரதனைப் பணிக்கின்றான். இதைக் கண்ட அபிமன்னன், இந்த மாலை சிஎபெருமானுடையது என்ற உணர்வுடன் அதனை வணங்கி, இது தலைமைக் கடவுளான சிவபெருமான் தனது திருச்சடையில் தாங்கிய மாலையாகும். இதைத் தாண்டுதல் தகாது. எனவே, இனி, போரில் ஈடுபட்டுப் பொருது இறப்போம் என்று எண்ணினான். அவ்வாறே போரிட்டு மாண்டான்.

சிஎபெருமான் விசாரசருமரை ஆட்கொண்டு, அவரைத் தமது திருக்கையால் எடுத்து, நம் பொருட்டு நீ உனது தந்தையைத் தடிந்தாய்.  இனி நாமே எனக்கு அடுத்த தந்தை என்று திருவாய் மலர்ந்து, அவரைத் தழுவி மகிழ்ந்தார். விசாரசருமருடைய மேனி சிவமயமாகி, பேரொளியாய் அவர் விளங்கினார். சிவபெருமான் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உண்பன, உடுப்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகும் பொருட்டு, உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருள் செய்து, தமது திருச்சடையில் உள்ள கொன்றை மாலையை எடுத்து, சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரின் திருமுடியில் சூட்டினார். சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார், இறைவனைத் தொழுது, சண்டீச பதத்தை அடைந்தார்.  இதனாலும், கொன்றை மாலையின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

அண்டர்பிரானும் தொண்ட ர்தமக்கு அதிபன் ஆக்கி, "அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கே ஆகச்
சண்டீசனுமாம் பதம் தந்தோம்" என்று, ங்குஅவர்பொன் தடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.
                                                                      --- பெரியபுராணம்.

சண்டீசர் என்பது ஒரு பதவி. சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகக்கடவுள், சூரியன் இவர்களுக்கெல்லாம் அவ்வம் மூர்த்திகளை நெருங்கி, அந்தந்த நிலையில் சண்டீசபதம் உண்டு. அவ்வவற்றில் வாழ்பவர்கள் அவ்வம் மூர்த்திகளை
வழிபடுவோர்க்கு அவ்வவ் வழிபாடுகளின் பயனை அளிப்பர். சிவபெருமானுடைய சண்டீசபதத்தில் இந்தக் கற்பத்தில் வாழ்பவர் இச் சரிதத்தில் கண்ட விசாரசருமர் ஆவர். இவர் இப்பதவியின் பெயரால் அழைக்கப்படுகின்றார். சூரியமூர்த்தியிடம் உள்ள சண்டி தேசச்சண்டர் எனப்படுவர். அவ்வாறே அம்பிகை விநாயகர் முருகக் கடவுள் இவர்களது சண்டபதத்து வாழ்வோர் முறையே நீலிச்சண்டன், ஆம்போச்சண்டன், மாத்ருச்சண்டன்என்று பெயர் பெறுவர். சிவபெருமானது சண்டபதத்தில் வாழ்வோர்
தொனிச்சண்டர் எனப்படுவார்.


விருதாக எழில்பட மழுவுடன் மானும் ஏற்றதும் ---

வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் திருக்கையில் ஏற்ற தன்மையைக் கூறுகின்றனர் அடிகளார்.

தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களின் பத்தினியர் கற்பே உயர்ந்தது என்றும், கர்மமே பலனைக் கொடுக்கும் என்றும் கருதி, கண்ணுதற் கடவுளை கருதாது, மமதை கொண்டு வாழ்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த நம்பன் திருவுளங்கொண்டு திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலங்கொண்டு, திருமாலை மோகினி வடிவு கொள்ளச் செய்து, அம்முனிவர் தவத்தையும் முனிபன்னியர் கற்பையும் அழித்தனர். அந்த காலத்தில், அரிவையர் முயக்கில் அவா உற்று தமது இருக்கையை நாடிய முனிவர்கள், தம்தம் வீதியில் கற்பழிந்து உலவும் தமது பத்தினிமார்களைக் கண்டு, “நம் தவத்தை அழித்து நமது பத்தினிகளின் கற்பை ஒழித்தவன் சிவனே. அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே” என்று ஞானத்தால் அறிந்து, விஷ விருட்சங்களைச் சமிதை ஆக்கி, வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து, அதனின்று எழுந்த பல பொருள்களையும் பரமபதியின் மீது செலுத்த, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர்.

கைஅடைந்த மானினோடு, கார்அரவு அன்றியும்போய்,
மெய்அடைந்த வேட்கையோடு மெல்இயல் வைத்தல்என்னே?
கைஅடைந்த களைகள்ஆகச் செங்கழு நீர்மலர்கள்
செய்அடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.

கண்ணுமூன்றும் உடையதுஅன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புஉடன் வைத்தல்என்னே?
எண்ணுமூன்று கனலும்ஓம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணம்மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.        --- திருஞானசம்பந்தர்.

உயிர்கள் மும்மலங்களால் ஆட்கொள்ளப்பட்டு உள்ளன. அவை ஆணவம், மாயை, கன்மம் எனப்படும்.

மலங்களுள் முதன்மையானது ஆணவமலம். இது மூலமலம் எனப்படுகின்றது. ஆணவத்தை இருள் என்று நூல்கள் வழங்குகின்றன. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முழுமையாக மறைத்தல். இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் நிலை இது.

மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது. உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான். இது ஒரு மலம் என்ற வகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் ஒளியை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள். "அணிமாயை விளக்கு" என்றார் வள்ளல் பெருமான்.

மாயை மிக நுண்ணியது. அது இறைவனடியிலேயே இருக்கிறது. ஒரு சிறு விதை எவ்வாறு பெரு மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது.
மாயையும்,  தூயமாயை எனப்படும் சுத்தமாயை, தூய்மையில்லாத மாயை என்னும் அசுத்தமாயை, பகுதிமாயை என்னும் பிரகிருதிமாயை என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆணவத்தால் அறிவு மறைக்கப்பட்டு, மாயையால் அறிவு கலங்கி உயிர்கள் மனத்தால் நினைப்பதும், வாக்கால் சொல்லுவதும், உடம்பால் செயல் புரிதலும் கன்மம் ஆகும். இதனை வினை என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே தீரும். இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான். வினைகளிலும் மூன்று வகை உண்டு. பழவினை எனப்படும் சஞ்சிதம்,  நுகர்வினை அல்லது ஏன்றவினை எனப்படும் பிராரத்தம், ஏறுவினை எனப்படும் ஆகாமியம் என்பனவாம். இவற்றுள், பழவினை என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும். நுகர்வினை, அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். ஏறுவினை என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும்.

மலம் என்பது அழுக்கு அல்லது தேவையற்றது, பயன்றறது என்று பொருள்படும். உடலில் உண்டாகும் மலத்தை நீராடிக் கழுவிக் கொள்ளலாம். உண்டதனால் வரும் மலத்தைக் கழித்துக் கொள்ளலாம். உயிருக்கு உண்டான மலத்தை இறையருள் வழி ஒழுகி, இறையருளைப் பெறுவதன் மூலமே கழித்துக் கொள்ள முடியும். உயிர்களுக்கு உள்ள மும்மலங்களையும் சிதைப்பதற்காகவே இறைவன் மூவிலைச் சூலத்தைத் தனது திருக்கையில் தாங்கி உள்ளான். இந்த உண்மையைப் பின்வரும் பெரியபுராணப் பாடலால் தெளியலாம்.

அருள் பொழியும் திருமுகத்தில்
     அணி முறுவல் நிலவு எறிப்ப,
மருள் பொழியும் மலம் சிதைக்கும்
     வடிச்சூலம் வெயில் எறிப்ப,
பொருள் பொழியும் பெருகு அன்பு
     தழைத்து ஓங்கிப் புவி ஏத்த,
தெருள் கொழி வண்தமிழ் நாட்டுச்
     செங்காட்டங்குடி சேர்ந்தார்.          ---  பெரியபுராணம்.

மான் மருண்ட பார்வையை உடையது. தாவித் தாவி ஓடும் இயல்பை உடையது. ஆணவம் என்னும் சிங்கம் புலி போன்ற விலங்குளால் அழியும். ஆணவம் காரணமாக, தெருண்ட அறிவு இல்லாமல், மருள் அறிவைக் கொண்டு, பிறவிகளில் மீண்டும் மீண்டும் விழுகின்ற உயிர்களைக் காப்பதைக் குறிக்கவே இறைவன் தனது திருக்கையில் மானை ஏந்தினான் என்ற உண்மையும் உணரப்படும்.

 
ஜகதலம் அதில் அருள் ஞானவாள் கொடு ---

கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது

இந்த மண்ணுலகத்தில், அருள்ஞான வாளைக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானாகத் திருவவதாரம் புரிந்தவர் முருகப் பெருமான்.

உயிர்களைச் சூழ்ந்து இருந்த அஞ்ஞான இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றும், தேவாரப் பாடல்களை அருளிச் செய்து, பலப்பல அற்புதங்களைத் திருவருளால் நிகழ்த்திக் காட்டியவர். திருவருள் கைகூடுமானால், அற்புதங்களை இயற்றலாம் என்பதைக் காட்டியவர்.

ஞானத்தை ஒளி பொருந்திய வாளாகச் சொல்லப்பட்டது.  உயிர்களுக்கு உள்ள அகப்பகையாகிய நான் என்னும் அகங்காரம், புறப்பகையாகிய எனது என்னும் மமகாரம் ஆகியவற்றை இருளாக உருவகப்படுத்தினர் நம் முன்னோர். அந்த இருளை அறுத்துப் போக்கும் வாளாக ஞானத்தைச் சொன்னார்கள்.

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்,
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்,
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்,
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே. ---  திருமூலர்.

ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்,
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவிமின்,
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்,
வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே.    --- திருவாசகம்.

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி, உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன், செந்தில் வேலனுக்குத்
தொண்டு ஆகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்'
கண்டாய், டா அந்தகா? வந்து பார் சற்று என் கைக்கு எட்டவே! --- கந்தர் அலங்காரம்.


தலைபறி அமணர் சமூகம் மாற்றிய தவமுனி ---

மயிரைப் பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (திருஞானசம்பந்தப் பெருமானாகிய) தவமுதல்வரே!

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பர் பெருமான். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுத்து, நன்மை இன்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர்.  "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?.  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கு எல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது திருமகளாய், பாண்டிமாதேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து, பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை வழிபட்டு, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை யனுப்பினார்கள். அவர்கள் தற்போது வேதாரணியம் என வழங்கப்படும் திருமறைக்காட்டிற்கு வந்து, பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண நிலை பரந்து இருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன், விடம் உண்ட கண்டன்,
         மிகநல்ல வீணை தடவி,
 மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
         உளமே புகுந்த அதனால்,
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
         சனி பாம்பு இரண்டும் உடனே
 ஆசறும், நல்லநல்ல, அவை நல்ல நல்ல,
         அடியார் அவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமான அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கை கூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டு இழிந்து, அவரை எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும், திருந்திய சிந்தையீர், மக்கும் நம் பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மை தான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,

சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும்,
     இனி யெதிர் காலத்தின் சிறப்பும்,
இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால்
     எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
     நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
     மேன்மையும் பெற்றனம்” என்றார்.

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்து இருந்த அம்மையார் ஓடிவந்து திருவடி மிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கி அருளினார்.

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரம் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றுப் போனது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவில் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

    செய்யனே! திரு ஆலவாய் மேவிய
  ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை,
  பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரம் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. நெருங்கி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச்சுரநோய் பிடித்தது என்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை, நான்மறையின் தனித்துணையை,
வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை,
தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தனர். திருஞானசம்பந்தர் அவர்களுக்கு அபயம் தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாய் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார். பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன பீடம் தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின்நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்,
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனை மாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுர நோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாம் என்றான்.  அமணர் இடப்புற நோயை நீக்குவோம் என்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல்வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பில் இட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின.  

புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவில் ஏறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, திருஞானசம்பந்தர் திருப்பாசுரம் பாடி, அந்த ஏட்டை வையை ஆற்றில் இட்டார். அது ஆற்று நீரை எதிர்த்து ஓடியது. வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். ஏடு ஆற்றில் ஓடாது நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து,  சமண சமூகத்தை மாற்றி, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
  
சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி ---

உலகத்தில் உள்ளவர்கள் பாடி ஈடேற, தேவாரத் திருப்பதிகங்களில் வேதசாரத்தை அமைத்துப் பாடியருளியவர் திருஞானசம்பந்தர். இருக்குமொழிப் பிள்ளையார் என்றும் வேதம் தமிழால் விரித்தார் என்றும் திருஞானசம்பந்தரைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் போற்றி இருப்பதும் காண்க.

அதுவும் அன்றி, அருணகிரிநாதப் பெருமான் தனது திருப்புகழ்ப் பாடல்களில் பல இடங்களில் இதனை உணர்த்தி உள்ளார்.

சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே..   --- (கவடுற்ற) திருப்புகழ்.

ஆரணாகீத கவிதை வாண..     --- (அயிலின்வாளி) திருப்புகழ்.

நெறி காவியச் சிவநூலை ஓதிய கதிர்வேலா...     --- (தாரணிக்கு) திருப்புகழ்.

காரண ஆகம, வேத, புராண நூல் பல ஓதிய காரணா..  --- (சீருலாவிய) திருப்புகழ்.

கன சமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க, நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெற, வேதக்
கவிதரு காந்த! பால! கழுமல! பூந்த ராய!
     கவுணியர் வேந்த! தேவர் ...... பெருமாளே.    --- (தினமணி) திருப்புகழ்.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே,
     தெற்கு நரபதி திருநீறு இடவே,
          புக்க அனல் வயம் மிக ஏடு உயவே, ...... உமையாள்தன்
புத்ரன் என இசை பகர்நூல், மறைநூல்,
     கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
          பொற்ப! கவுணியர் பெருமான் உருவாய் ...... வருவோனே!
                                                               --- (நெய்த்தசுரி) திருப்புகழ்.

        
அரி துயில் சயன வியாளமூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே ---

திருமால் அறிதுயில் கொள்ளும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேடன் என்னும் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவர் என்னும் வியாக்கிரபாதரும்  கண்டு வியந்து போற்றும்படியாக அம்பலவாணப் பெருமான் புரிந்தருளும் அனவரத ஆனந்தத் திருநடனம் அருமை வாய்ந்தது.

இந்த திருக்கூத்தினை இயற்றுபவர் முருகப் பெருமானே என்கின்றார் அடிகளார். ஐம்முகச் சிவமும் அறுமுகச் சிவமும் வேறு வேறு அல்ல, ஒன்றே என்னும் உண்மையைப் புலப்படுத்தினார்.

கருத்துரை

முருகா! உண்மைப் பொருளை அடியேனுக்கு உணர்த்தி, ஈடேற அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...