சிதம்பரம் - 0647. நீலக் குழலார்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நீலக் குழலார் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் பால் வைத்த அன்பினை நீக்கி,
உனது திருவடியில் அன்பு வைத்து,
மெய்ஞ்ஞானத்தை அடியேன் பெற அருள்.
 

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான

நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
     நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர்

நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
     நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள்

ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
     யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ

ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
     மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே

மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
     மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார

வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
     மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர்

சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
     சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே

சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
     சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நீலக் குழலார், முத்து அணி வாய் சர்க்கரையார், தைப் பிறை
     நீளச் சசியார், பொட்டு அணி ...... நுதல் மாதர்,

நீலக் கயலார், பத்திர வேல் ஒப்பிடுவார், நற்கணி
     நேமித்து எழுதா சித்திர ...... வடிவார், தோள்

ஆலைக் கழையார், துத்தி கொள் ஆரக் குவடார், கட்டளை
     ஆகத் தமியேன் நித்தமும் ...... உழல்வேனோ?

ஆசைப் பத மேல் புத்தி மெய் ஞானத்துடனே, பத்திர
     மாகக் கொளவே முத்தியை ...... அருள்வாயே.

மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள் அக்கினி
     மார்பில் பிரகாசக் கிரி ...... தனபார,

வாசக் குயிலாள், நல் சிவகாமச் செயலாள், பத்தினி
     மாணிக்க மினாள், நிஷ்கள ...... உமைபாகர்

சூலக் கையினார், க்கினி மேனிப் பரனாருக்கு ஒரு
     சோதிப் பொருள் கேள்விக்கு இடு ...... முருகோனே!

சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர்
     சோதிப் புலியூர் நத்திய ...... பெருமாளே.


பதவுரை

            மாலைக் குழலாள் --- மலர் மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள்,

          அற்புத வேதச் சொருபாள் --- அற்புதமான வேதங்களின் சொரூபமாக இருப்பவள்,

            அக்கினி மார்பில் --- நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில்

          பிரகாசக் கிரிதன பார --- ஒளி பொருந்திய மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவள்,

          வாசக் குயிலாள் --- இனிமையான குயில் போன்றவள்,

            நல் சிவகாமச் செயலாள் --- சிவபெருமானிடத்தில் காதல் கொண்டவள்,

         பத்தினி ---  பத்தினி,

          மாணிக்க மி(ன்)னாள் --- மாணிக்கம் போன்று ஒளி பொருந்தியவள், (மின்னாள் என்னும் சொல் மினாள் எனக் குறுகியது)

          நிஷ்கள உமைபாகர் --- மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர்,

            சூலக் கையினார் --- முத்தலைச் சூலத்தை ஏந்திய திருக்கையினர்,

         அக்கினி மேனிப் பரனாருக்கு --- நெருப்புப் பிழம்பு போலும் திருமேனியை உடைய சிவபரம்பொருளுக்கு

            ஒரு சோதிப் பொருள் கேள்விக்கு இடு முருகோனே --- ஒப்பற்ற அருள் ஒளிப் பொருளான பிரணவத்தை அவர் திருச்செவியில் ஏற்றிய முருகக் பெருமானே!

            சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர் --- பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து,

            சோதிப் புலியூர் நத்திய பெருமாளே --- அருள் ஒளி விளங்கும் புலியூர் என்னும் சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமையில் மிக்கவரே!

            நீலக் குழலார் --- கரிய கூந்தலை உடையவர்கள்,

          முத்து அணி வாய் சர்க்கரையார் --- முத்துப் போன்ற பற்களைக் கொண்ட வாயால் சர்க்கரையைப் போன்று இனிமையாகப் பேசுபவர்கள்,

            தைப்பிறை நீளச் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் --- பூரண சந்திரன் போன்ற பொட்டை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள்,

            நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் --- கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள்,

            நற் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் --- ஓவிய நூல் வல்லோனாலும் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள்,

            தோள் ஆலைக் கழையார் --- ஆலையில் உள்ள கரும்பு போல் தோள்களை உடையவர்கள்,

           துத்தி கொள் ஆரக் குவடார் --- தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள்

            கட்டளையாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ --- இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேன் தினமும் திரிந்து உழலலாமா?

            ஆசைப் பதம் மேல் புத்தி மெய்ஞானத்துடனே பத்திரமாகக் கொளவே முத்தியை அருள்வாயே --- ஆசையுடன் தேவரீரது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனை அடியேன் பெறவே முத்தியை அளித்தருளுக.


பொழிப்புரை
  
       மலர் மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள். அற்புதமான வேதங்களின் சொரூபமாக இருப்பவள். நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவள். இனிமையான குயில் போன்றவள். சிவபெருமானிடத்தில் காதல் கொண்டவள். பத்தினி. மாணிக்கம் போன்று ஒளி பொருந்தியவள். மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர்,

       முத்தலைச் சூலத்தை ஏந்திய திருக்கையினர். நெருப்புப் பிழம்பு போலும் திருமேனியை உடைய சிவபரம்பொருளுக்கு ஒப்பற்ற அருள் ஒளிப் பொருளான பிரணவத்தை அவர் திருச்செவியில் ஏற்றிய முருகக் பெருமானே!

     பிரகாசமான வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, அருள் ஒளி விளங்கும் புலியூர் என்னும் சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமையில் மிக்கவரே!

       கரிய கூந்தலை உடையவர்கள். முத்துப்போன்ற பற்களைக் கொண்ட வாயால் சர்க்கரையைப் போன்று இனிமையாகப் பேசுபவர்கள். பூரண சந்திரன் போன்ற பொட்டை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள். கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள். ஓவிய நூல் வல்லோனாலும் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள். ஆலையில் உள்ள கரும்பு போல் தோள்களை உடையவர்கள். தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள்.

       இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேன் தினமும் திரிந்து உழலலாமா?

     ஆசையுடன் தேவரீரது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ்ஞானத்துடன் நற்பலனை அடியேன் பெறவே முத்தியை அளித்தருளுக.

விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதரின் அவயவங்களைக் குறித்து, அவைகளின் வழி நிகழும் அவரது செயல்பாட்டை விளக்கினார் சுவாமிகள்.

நீலக் குழலார் ---

கரிய கூந்தலை உடையவர்கள் பெண்கள். விலைமாதர் பொருள் பொருட்டு, ஆடவரைக் கவர, தமது கூந்தலை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வர். அந்த அழகிலே ஆடவர் சிந்தை மயங்கும்.

முத்து அணி வாய் சர்க்கரையார் ---

முத்து - நவமணிகளில் இயற்கையாகவே ஓளி விடுவது. வெண்மையாக இருப்பது. முத்துக்கு இயல்பாக வெண்மை நிறம் சொல்லப்படும்.  ஆனால் வெண்மை நிறம் தவிர்த்த முத்துக்களும் உண்டு. விலைமாதர் தமது வெண்மையான பறிகள் தெரியக் காட்டி, இனிமையாகப் பேசி ஆணவரை மயக்குவர்.
  
தைப்பிறை நீளச் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் ---

தை என்னும் சொல்லுக்கு, தை மாதம் என்றும், பூச நாள் என்றும், என்றும் பொருள் உண்டு. தைப் பூசம் சிறப்பு என்பதால், தை மாதத்து முழுநிலவினைக் காட்டினார் என்று கொள்ளலாம்.

சசி என்னும் சொல் முயல்கறையினை உடைய சந்திரன் என்று பொருள்.

முழுநிலவினைப் போலும் அழகிய முகத்தில், நிலவில் உள்ள கறை போன்று பொட்டு அணிந்தவர்.

தை என்னும் சொல்லுக்கு அலங்காரம் என்று ஒரு பொருளும் உண்டு.

பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியில், முழுநிலவினைப் போன்று அழகாகப் பொட்டு வைத்து அலங்கரித்து உள்ளவர் என்றும் கொள்ளலாம்.

நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் ---

பத்திரம் - வாள். பெண்களின் கண்களை மீன் போன்றது என்றும், வாளைப் போன்றது என்றும், வேலைப் போன்றது என்றம் கூறுவர்.

கயல் என்பது மீன் இனத்தில் ஒன்று. அது நடுவில் பருத்தும், இரு நினிகள் சிறுத்தும் இருக்கும். தண்ணீரில் பிறழ்ந்து பிறழ்ந்து ஓடும். பெண்களின் கண்களும், நடுவில் பருத்தும், இருபுறங்களில் சிறுத்தும் இருக்கும். அவர்தம் கண்கள் பிறழ்ந்து பிறழ்ந்து சுழலும்.

மீன் நீரிலே உள்ள அழுக்கை உண்டு, நீர் நிலையைத் தூய்மையாக வைத்திருக்கும், தனது பார்வையால், உயிரின் உள்ளத்து அழுக்கை நீக்கி, ஆன்மாவைத் தூய்மை செய்யும் இயல்பு உடையவை பெண்களின் கண்கள்.

வாள் கூர்மையானது. பொருளை எளிதில் அறுக்கத் துணை செய்யும். பெண்களின் கண்களும் கூர்மையான பார்வையினால், உள்ளத்தில் உள்ள அழுக்கினை அறுத்துத் தூய்மைப்படுத்தும்.

வேல் - வெல்லும் தன்மை உடையது. ஞானத்தின் வடிவமானது. பெண்கள் தங்களின் பார்வையால் உயிரின் இயல்பான அணவத் தன்மையை வென்று, ஞானத்தைப் பரப்புவது.

ஆனால், விலைமாதரின் கண்கள் இதற்கு நேர் மாறாக நின்று, ஆடவரைக் கவர்ந்து, மயல் கொள்ளச் செய்து, அவரது உள்ளத்தைத் துளைத்து, தீமைகள் பலவற்றையும் தரும்.

நற் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் ---

கணி - கணித்தல், கணக்கிடுதல். நேமித்தல் - நியமித்தல், சிந்தித்தல்.

கணித்து, அளவிட்டு, நன்கு சிந்தித்து, நிச்சயம் செய்து எழுதப்படுவது சித்திரம். அப்படி எழுதப்படாத சித்திரம் போன்றவர்கள் பெண்கள்.

சித்திர நூலில் வல்லவராலும் கற்பனை செய்து எழுத முடியாத அழகு. அதை மேலும் புனைந்து கொள்வர். அது காமுகர் உள்ளத்தை மயக்கும். மயக்கும் தொழில் உடையோர் மயக்குவர்.

தோள் ஆலைக் கழையார் ---

ஆலையில் உள்ள கரும்பு போல் தோள்களை உடையவர்கள். தோளுக்குக் கரும்பு உவமை.

துத்தி கொள் ஆரக் குவடார் ---

தேமல் படர்ந்த மார்பகங்களின் மீது, அழகு பொருந்த முத்து மாலை அணிந்து இருப்பவர்கள்.

கட்டளையாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ ---

இத்தகைய விலைமாதர்கள் அழகில் மயங்கிய காமுகர்கள் அவர்கள் தரும் இன்பத்தைப் பெரிதாகக் கருதி, அவர் இட்ட தொழிலை எல்லாம் செய்து உழல்பவர்கள் காமுகர்கள்.

குமர! குருபர! முருக! குகனே! குறச்சிறுமி
     கணவ! சரவண! நிருதர் கலகா! பிறைச்சடையர்
     குரு என நல் உரை உதவு மயிலா! எனத் தினமும்......உருகாதே,

குயில்மொழி நன் மடவியர்கள், விழியால் உருக்குபவர்,
     தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர், நகை
     கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் ......அனைவோரும்

தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
     முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்,
     தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர், கண் ...... வலையாலே

சதிசெய்து, வர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்,
     வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்டதொழில்
     தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள் ......தருவாயே.

ஆசைப் பதம் மேல் புத்தி மெய்ஞானத்துடனே பத்திரமாகக் கொளவே முத்தியை அருள்வாயே ---

முத்தி - பாச நீக்கம்.  மெய்ஞ்ஞானம் - உண்மை அறிவு. உண்மைப்பொருளாகிய இறைவனை அறிகின்ற அறிவு.

மாதர் மேல் வைத்த, துன்பத்தை விளைவிக்கும் ஆசையை மாற்றி, மாறாத இன்பத்தையே தரும் இறைவன் திருவடியில் அன்பு கொண்டு, சிந்தையை இறைவன் திருவடியிலேயே நிறுத்தி, மெய்ஞ்ஞானத்தை மிகவும் பத்திரமாக அடியேன் பெறுமாறு, தனக்குப் பாச நீக்கம் என்னும் முத்தியை அருள முருகப் பெருமானிடம் அடிகளார் வேண்டுகின்றார். நாமும் அவ்வாறே வேண்டுவோமாக.

அற்புத வேதச் சொருபாள் ---

அற்புதமான வேதங்களின் சொரூபமாக இருப்பவள் எம்பிராட்டி.

வேதம் வாழ்வியல் நூல். வாழ்வு அறத்தின் வழி நிகழவேண்டியது.
வேதத்தில் சொல்லப்படாத அறம் எதுவும் இல்லை. உணர வேண்டிய அறநெறிகள் யாவும் வேதங்களில் உள்ளது. அந்த அறத்தின் வடிவமாக உள்ளவர் சிவபெருமான். அவருடைய திருமேனியில் பாதியைக் கொண்டதால் அம்பிகை அறவடிவினை உடையவள். சிவபெருமான் அருளிய இருநாழி நெல்லைக் கொண்டு, உயிர்கள் உய்யும்பொருட்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றிக் கொண்டு இருப்பவள்.

வேதத்தை விட்ட அறம் இல்லை, வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள, தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.           --- திருமந்திரம்.
  
வேதத்தில் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடு பேற்றை அடையும் நெறியைப் பெற்றார்கள் என்கின்றார் திருமூல நாயனார்.

வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுள் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியன. அன்றி, எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல. அவ்வாற்றால், ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வி அன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்புகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திப் கூறப் பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபு. ஆகலின், ``வேதத்தை விட்ட அறமில்லை`` என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

என்றார்.

பின்வரும் பெரியபுராணப் பாடல்களால், வேதவடிவான அம்மை, அந்த வேதத்தின் சிறப்பை உணர்த்த, அறம் வளர்த்தாள் என்பது புலன் ஆகும்.

மாறு இலாத இப் பூசனை என்றும்
            மன்ன, எம்பிரான், மகிழ்ந்துகொண்டு அருளி,
ஈறு இலாத இப் பதியினுள் எல்லா
            அறமும் யான்செய அருள்செய வேண்டும்,
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
            ஒழிய, இங்குஉளார் வேண்டின செயினும்,
பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப்
            பெறவும் வேண்டும்என் றனள்பிறப்பு ஒழிப்பாள்.

விடையின் மேலவர், மலைமகள் வேண்ட,
            விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே,
இடையறா அறம் வளர்க்கும் வித்து ஆக
            இகபரத்து இரு நாழிநெல் அளித்து,
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆயும்
            காஞ்சி வாழ்பவர் தாம்செய் தீவினையும்
தடைபடாது மெய்ந்நெறி அடைவதற்கு ஆம்
            தவங்கள் ஆகவும் உவந்து அருள் செய்தார்.

எண் அரும்பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
            எம்பிராட்டி தம் பிரான் மகிழ்ந்து அருள,
மண்ணின் மேல்வழி பாடுசெய்து அருளி
            மனைஅறம் பெருக்கும் கருணையினால்,
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க,
            நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத் திருக் காமக்கோட்டத்துப்
            பொலிய, முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும்.

அக்கினி மார்பில் பிரகாசக் கிரிதன பார ---

சிவபெருமான் நெருப்பு மேனியர். அவரது திருமேனியில் பாதியை உடைய இறைவியும் நெருப்பு மேனியள்.

நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவள்.
     
அக்கினி மேனிப் பரனாருக்கு ஒரு சோதிப் பொருள் கேள்விக்கு இடு முருகோனே ---

நெருப்புப் பிழம்பு போலும் திருமேனியை உடைய சிவபரம்பொருளுக்கு ஒப்பற்ற அருள் ஒளிப் பொருளான பிரணவத்தை அவர் திருச்செவியில் ஏற்றியவர் முருகக் பெருமான்.

கயிலைமலையின் கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த காலத்தில், சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் குகக் கடவுளை வணங்கிச் சென்றனர். தன்னை வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை, அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக்கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்துஆதல், நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் என்னும் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழற வல்லேம்” என்றனர்.

அரனார் கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றியதால் அத்தணிகைமலை, "கணிகவெற்பு" எனப் பெயர் பெற்றதென்பர்.

கண்ணுதல் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேல் அண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட அண்ணல் எழுந்து, குமரனை வணங்கி வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று, வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.       --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”                --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனர்
 ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”    --- (கொடியனைய) திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின்முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர, ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே.  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா....        ---- திருப்புகழ்.

அவ்வாறு கூறிய அமுதமொழி இரண்டு செவிகளிலும் நிரம்பியது என்பது பொருள்.

தேவதேவன் ஆகிய சிவபெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலேயே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகன் ஆகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.     ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.              --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.    --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.   --- சிவஞான சித்தியார்.


சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர் ---

பிரகாசமான சோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்றவள் வள்ளிநாயகி.

முத்தமிழ் தெய்வம் முருகப் பெருமான். எனவே, அவன் முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன். அவனுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியும் தமிழ்க் கடவுளே. எனவே, முத்தமிழ் மான் எனப்பட்டார்.

சோதிப் புலியூர் நத்திய பெருமாளே ---

அருள் ஒளி விளங்கும் புலியூர் என்னும் சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

சிதம்பரம் என்பது அருள்வெளியைக் குறிக்கும். அருளை ஒளியாகக் குறித்தனர் நம் முன்னோர்.

ஓளிக்கு மாறானது இருள். எனவே, அஞ்ஞானத்தை மிகுக்கும் ஆணவத்தை இருள் என்றனர்.

"அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு மிகுந்தால் அருள் பிளக்கும்.

உயிர் அனுபவமாகிய அன்பு இருந்தால், அருள் அனுபவம் வாய்க்கும். அந்த அனுபவத்திலே சுத்தசிவ அனுபவம் விளங்கும்.

இந்த அற்புத வாய்மையை வள்ளல் பெருமான் பின் வரும் பாடல்களால் இனிதே விளக்குமாறு தெளிந்து இன்புறுக...

உயிர் அனுபவம் உற்றிடில், அதன்இடத்தே
     ஓங்கு அருள் அனுபவம் உறும்,அச்
செயிர் இல்நல் அனுபவத்திலே, சுத்த
     சிவ அனுபவம் உறும் என்றாய்,
பயிலும் மூவாண்டில், சிவை தரு ஞானப்
     பால் மகிழ்ந்து உண்டு,மெய்ந் நெறியாம்
பயிர் தழைந்து உற வைத்து அருளிய ஞான
     பந்தன் என்று ஓங்கு சற்குருவே.

தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி,
     தனிப் பர நாதமாம் தலத்தே,
ஒத்து அதன் மயமாம் நின்னை நீ இன்றி
     உற்றிடல் உயிர்அனுபவம் என்று
இத்துணை வெளியின் என்னை என் இடத்தே
     இருந்தவாறு அளித்தனை அன்றோ?
சித்தநல் காழி ஞானசம்பந்தச்
     செல்வமே எனது சற் குருவே.

தனிப்பர நாத வெளியின் மேல் நினது
     தன்மயம் தன்மயம் ஆக்கி,
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி,
     பரம்பரத்து உட்புறம் ஆகி,
இனிப்பு உற ஒன்றும் இயம்புறா இயல்பாய்
     இருந்ததே அருள் அனுபவம் என்று
எனக்கு அருள் புரிந்தாய், ஞான சம்பந்தன்
     என்னும் என் சற்குரு மணியே.

உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்
     உள்ளதாய், முற்றும் உள்ளதுவாய்,
நள்அதாய், எனதுஆய், நான்அதுஆய், தனதாய்,
     நவிற்ற அரும் தான் அதுஆய், இன்ன
விள் ஒணா அப்பால், அப்படிக்கு அப்பால்
     வெறுவெளி சிவ அனுபவம் என்று
உள்ளுற அளித்த ஞானசம் பந்த
     உத்தம சுத்த சற்குருவே.

பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
     பொருள் அருள் அனுபவம், அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம், இதனைப்
     பற்று அறப் பற்றுதி, இதுவே
சத்தியம் என, என் தனக்கு அருள் புரிந்த
     தனிப்பெருங் கருணை என் புகல்வேன்
முத்து இயற் சிவிகை இவர்ந்து, ருள் நெறியின்
     முதல் அரசு இயற்றிய துரையே.

உயிரைப் பொத்தி உள்ள மூலமலப் பிணி ஆகிய ஆணவம் நீங்க வேண்டுமானால் அருள் அனுபவம் வேண்டும். அந்த அருள் அனுபவம் எளிதில் வாய்க்காது. அதற்குப் பத்தியம் இருத்தல் வேண்டும். அந்தப் பத்தியம் என்பது உயிர் அனுபவமே என்று வள்ளல் பெருமான் காட்டித் தெளிவித்து இருப்பது எண்ணி எண்ணி,  இன்புற்று, அனுபவித்துத் தெளிய வேண்டியதாகும்.

இதன் பொருளை மேலும் இங்கே விரிக்கில், பல்கிப் பெருகும். வேறு ஒரு தலைப்பில் இதனை விரிவாகச் சிந்திக்கத் திருவருள் கூட்டுவதாக.

கருத்துரை

முருகா! விலைமாதர் பால் வைத்த அன்பினை நீக்கி, உனது திருவடியில் அன்பு வைத்து, மெய்ஞ்ஞானத்தை அடியேன் பெற அருள்.














No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...