33. சிறிதும் பயன்
அற்றவர் உலோபர்
பதரா கிலும்கன விபூதிவிளை விக்கும்,
பழைமைபெறு
சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடுரிஞ் சிடும்,மலம்
பன்றிகட்
குபயோகம்ஆம்,
கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும், வன்
கழுதையும்
பொதிசுமக்கும்,
கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்,பெருங்
கான்புற்ற
ரவமனை ஆம்,
இதமிலாச் சவமாகி லும்சிலர்க் குதவிசெய்யும்,
இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும், வாருகோல்
ஏற்றமா
ளிகைவிளக்கும்,
மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்
மற்றொருவ
ருக்குமுண்டோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
பதர் ஆகிலும் கன விபூதி விளைவிக்கும் --- பதராக இருந்தாலும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப் பயன்படும்;
பழைமை பெறு சுவராகிலும்
பலருக்கு மறைவாகும், மாடு உரிஞ்சிடும் --- பழைமையான குட்டிச்சுவராக இருந்தாலும் அமர்வோருக்கு மறைவைத் தருவதோடு, மாடு தன் உடல் தினவைத் தீர்க்க, உடம்பைத் தேய்த்துக் கொள்ளவும்
பயன்படும்;
மலம் பன்றிகட்கு
உபயோகம் ஆம் --- மலமானது பன்றிகளுக்கு
உணவாகப் பயன்படும்;
கதம் மிகு கடா
என்னில் உழுது புவிகாக்கும் --- சீற்றம் மிகுந்த எருமைக்கடாவானது உழுது உலகை உண்பிக்கும்;
வன் கழுதையும்
பொதி சுமக்கும் --- வலிய கழுதையும் பொதியைச் சுமக்கும்;
கல் எனில்
தேவர்களும் ஆலயமும் ஆம் --- கல்லானது தெய்வச் சிலைகளை வடிக்கப் பயன்படும், திருக்கோயில்களை அமைக்க உதவும்;
பெருங்கான் புற்று
அரவ மனையாம் --- பெரிய காட்டிலுள்ள
புற்றுக்கள் பாம்பிற்கு இருப்பிடம் ஆகும்;
இதம் இலாச்
சவமாகிலும் சிலர்க்கு உதவி செய்யும் --- நலம் இல்லாத பிணமானாலும் அதை அடக்கஞ் செய்யும் சில தொழிலாளிகட்கு வருவாயைக் கொடுக்கும்;
இழிவுறு குரங்கு ஆயினும் பிடித்தவர்க்கு இரக்க உதவி செயும் --- இழிவான குரங்காக இருந்தாலும், தன்னைப் பிடித்தவர்களுக்குப்
பிச்சை எடுக்கத் துணை புரியும்;
வாருகோல் ஏற்ற
மாளிகை விளக்கும் --- துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை செய்ய உதவும்;
மதமது மிகும் பரம
லோபரால் மற்றொருவருக்கு உபகாரம் உண்டோ --- செல்வத்தால்
செருக்குப் பிடித்து, மிகுந்த கஞ்சத்தனத்தை உடையவர்களால் பிறருக்கு நன்மை உண்டோ? இல்லை.
விளக்கம்
--- தாழ்ந்த பொருட்கள், உயிர்கள்
என்று கருதப்படுபவை யாவும், ஒரு
வகையில் பிறருக்கு உதவியாக அமையும். ஆனால், உயர்ந்த மனிதப் பிறவியை எடுத்தும், முன்னை நல்வினையின் பயனாகப் பெரும் செல்வத்தைப் படைத்து இருந்தும், அதன் பயனைப் பெறுவதற்குப் பிறருக்கு உபகாரமாக வாழாமல், வைத்து இழக்கும் வன்கண்ணர்களால் யாருக்கும் நன்மை இல்லை.
No comments:
Post a Comment