திரு நாகைக் காரோணம்





திரு நாகைக் காரோணம்
(நாகப்பட்டினம்)

சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         நாகப்பட்டினம் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. காயாரோகணேசுவரர் ஆலயத்தின் மிக அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.

நாகப்பட்டினத்திற்கு அருகில் வடக்கு பொய்கைநல்லூர் என்னும் தேவார வைப்புத் தலம் உள்ளது. நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி சாலையில் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் ஒரு தேவார வைப்புத் தலம். இத்தலத்தின் மூலவர் நந்தி நாதேசுவரர் ஒரு சுயம்பு லிங்கம். அம்பாள் பெயர் செளந்தரநாயகி.


இறைவர்          : காயாரோகணேசுவரர், ஆதிபுராணர்.

இறைவியார்      : நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.

தல மரம்          : மாமரம்.

தீர்த்தம்           : தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் -1. புனையும் விரிகொன்றை,
                                                               2. கூனல்திங்கட் குறுங்கண்ணி.

                                        2. அப்பர்   - 1. மனைவி தாய் தந்தை,
                                                               2. வடிவுடை மாமலை,
                                                               3. பாணத்தால் மதில்,
                                                               4. பாரார் பரவும்.

                                        3. சுந்தரர்  - 1. பத்தூர்புக் கிரந்துண்டு.

         கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்கள் பட்டினம் என்ற பெயரால் வழங்கப் பெறும். நாகர்கள் என்ற ஒரு வகுப்பினர் இந்த இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்ததால் இவ்வூர் நாகப்பட்டினம் எனப் பெயர் பெற்றது. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் என்ற நாகம் பூசித்த தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது என்று தலபுராணம் கூறுகிறது. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலம் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலும், அதையடுத்து ஒரு 3 நிலை கோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் கூடிய மிகப் பெரிய ஆலயமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அம்பாள் நீலாயதாட்சி அருளாட்சி செய்கிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற வரிசையில் இத்தலத்து அம்பிகை நாகை நீலாயதாட்சி என்று வழங்கப் பெறுகிறாள்.

         இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே உடலோடு (காயம்) ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது.

         அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக் காட்டாக நந்தி ஆகியவை கண்டு களிக்க வேண்டியவையாகும். சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.

         நாகாபரண பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். இத்தலத்திலுள்ள சனி பகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம் சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனிபகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு மேற்கில் புண்டரீக தீர்த்தமும், முத்தி மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன.

         இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் 12 கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர். திருப்புகழில் மூன்று பாடல்கள் உள்ளன.

         நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர். அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

அதிபத்த நாயனார் வரலாறு

          அவதாரத் தலம்   : நாகப்பட்டினத் திருநகர் - நுளைபாடி (நம்பியார் நகர்)
          வழிபாடு             : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்      : நாகைக்காரோணம்.
          குருபூசை நாள்    : ஆவணி - ஆயில்யம்.

         சோழ நாட்டிலே, நாகப்பட்டினத்திலே, நுளைப் பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபத்த நாயனார்.  அவர் பரதவர்களுக்குத் தலைவர்.  சிவபத்தியில் சிறந்தவர்.  வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச் சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம்.  வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விடுவார்.

         சிவபெருமான் திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று.  வழக்கம்போல் அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார்.  நாயனார் செல்வம் சுருங்கிற்று.  சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின.  உணவு இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது.  அது குறித்து அவர் வருந்தவதில்லை.  சிவபத்தியில் மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.

         ஒரு நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது.  அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு வந்தார்கள்.  நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன.  இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே விடுத்தார்.

         அப்பொழுது சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார்.  சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.

          அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது.

          அ/மி. அமுதீசர் திருக்கோயில்,
          (அதிபத்தர் திருக்கோயில்),
          நம்பியார் நகர்,
          நாகப்பட்டினம் - 611 001.

          சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார் நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டினம் நகரின் ஒரு பதியாகும்.

          ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர்; நடனம் - பாராவாரதரங்க நடனம்).

          கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.

          மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம்.

          இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.

          சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.

          குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.

          நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

          வைகாசியில் பிரமோற்சவமும், ஆடி, தை அமாவாசை, மாசி மகம், அதிபத்தர் திருவிழா ஆகிய நாட்களில் சுவாமி கடலில் தீர்த்தவாரி அருளுகின்றார்.

          நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.

          கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கி 'சோறு எங்கு விக்கும்?' என்று கேட்டார். அச்சிறுவர்கள் 'தொண்டையில் விக்கும்' என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் 'பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு...' என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாம் அடி 'நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை' என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தூத்தகைய பாகை கார் என்னும் பணிமொழியார் வாழ்த்து ஓவா நாகைக் காரோணம் நயந்தோனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 463
நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
         விருந்துஅமுது செய்து, நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாணரும் தங்க
         அங்குஇரவு பள்ளி மேவி,
ஆடும்அவர் அயவந்தி பணிவதனுக்கு
         அன்பருடன் அணைந்து சென்று,
நாடியநண் புஉடைநீல நக்கடிகள்
         உடன்நாதர் கழலில்தாழ்ந்து.

         பொழிப்புரை : அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் `அயவந்தியினைப்\' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 464
கோதுஇலா ஆர்அமுதைக் கோமளக்கொம்
         புடன்கூடக் கும்பிட்டு ஏத்தி,
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
         திருப்பதிகம் அருளிச் செய்வார்,
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
         தம்பெருஞ்சீர் நிகழ வைத்து,
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
         இசைப்பதிகம் போற்றி செய்தார்.

         பொழிப்புரை : குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம்கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 465
பரவியகா தலில்பணிந்து பாலறா
         வாயர்புறத்து அணைந்து, பண்பு
விரவியநண்பு உடைஅடிகள் விருப்புஉறு
         காதலில் தங்கி மேவும் நாளில்,
அரவுஅணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
         ஆதரவால் அணைந்து செல்வார்,
உரவுமனக் கருத்துஒன்றாம் உள்ளம்உடை
         யவர்க்கு விடை உவந்து நல்கி.

         பொழிப்புரை : பாலறா வாயரான திருஞானசம்பந்தர், பெருகிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந்திய நட்புக்கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையினால் அங்குத் தங்கியிருந்த நாள்களில், பாம்பை அணிந்த இறைவரின் மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அவ்வப் பதிகளுக்கும் செல்வாராய், அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தையுடைய திருநீலநக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.


பெ. பு. பாடல் எண் : 466
மற்றுஅவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு,
         மால்அயனுக்கு அரியபிரான் மருவு தானம்
பல்பலவும் சென்றுபணிந்து ஏத்திப் பாடி,
         பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்த,
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
         கண்ணுதலைக் கைதொழுது, கலந்த ஓசைச்
சொல்தமிழ்மா லைகள் பாடி, சிலநாள் வைகித்
         தொழுதுஅகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.

         பொழிப்புரை : பிள்ளையார், அந்நீலநக்கரின் பெருநட்பை மகிழ்ந்து மனத்துட்கொண்டு, நான்முகன், திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று வணங்கிப் போற்றி, இறைவரின் தொண்டர் கூட்டமானது உடன் சூழ்ந்து வரச்சென்று கற்றவர் வாழும் `திருநாகைக் காரோணம்\' என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலைகளைப் பாடிச் சிலநாள்கள் அங்குத் தங்கி, வணங்கி விடைபெற்று நீங்கினார்.

         குறிப்புரை : மருவுதானம் பற்பலவும் என்றது இறையான்சேரி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் தெளிவாக எவையும் தெரிந்தில. திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:

1.    `புனையும் விரி' : (தி.1 ப.84) - குறிஞ்சி
2.    `கூனல் திங்கள்' : (தி.2 ப.116) - செவ்வழி.

         இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்தத்திற்கும் இப்பாடல் சந்தத்திற்கும் இடையறவு இருத்தல் கண்டு இதனை இடைச் செருகல் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பாடலில் கடல்நாகைக் காரோணப் பெருமானை வணங்கினார் எனக் கூறி, அடுத்து வரும் பாடலில் `அந்நாகைக் காரோணத்தினின்றும் நீங்கி' என வருதலின் பொருளியைபு காணத்தகும் இப்பாடலை இடைச் செருகலாகக் கொள்ள வேண்டுவது இல்லை என்றே தெரிகிறது.

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

1.084     திருநாகைக்காரோணம்           பண் - குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்பாய
நனையும் சடைமேல்ஓர் நகுவெண் தலைசூடி,
வினைஇல் அடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி, வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 2
பெண்ஆண் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னி,
அண்ணா மலைநாடன், ஆரூர் உறை அம்மான்,
மண்ஆர் முழவுஓவா மாடந் நெடுவீதிக்
கண்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 3
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆர்ஆர் அழல்ஊட்டி, அடியார்க்கு அருள்செய்தான்,
தேர்ஆர் விழவுஓவாச் செல்வன், திரைசூழ்ந்த
கார்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 4
மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்
அழிசூழ் புனல்ஏற்ற அண்ணல், அணிஆய
பழிசூழ்வு இலர்ஆய பத்தர் பணிந்து ஏத்த,
கழிசூழ் கடல் நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 5
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி,
சேண் நின் றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்,
பேணி வழிபாடு பிரியாது எழுந்தொண்டர்
காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான், அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 6
ஏனத்து எயிறோடும் அரவம் மெய்பூண்டு
வானத்து இளந்திங்கள் வளரும் சடைஅண்ணல்
ஞானத்து உரைவல்லார் நாளும் பணிந்துஏத்தக்
கானல் கடல் நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 7
அரைஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு
விரைஆர் வரைமார்பின் வெண்நீறு அணிஅண்ணல்,
வரைஆர் வனபோல வளரும் வங்கங்கள்
கரைஆர் கடல் நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 8
வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண்தோள்
இலங்கைக்கு இறைவாட அடர்த்து,அங்கு அருள்செய்தான்,
பலங்கொள் புகழ்மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

 
பாடல் எண் : 9
திருமால் அடிவீழ, திசைநான் முகன்ஏத்தப்
பெருமான் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னிச்
செருமால் விடைஊரும் செல்வன், திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 10
நல்லார் அறம்சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர்தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்,
பல்ஆர் தலைமாலை அணிவான், பணிந்துஏத்தக்
கல்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.

         பொழிப்புரை :நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 11
கரைஆர் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரைஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரைஆர் தமிழ்மாலை பாடும் அவர்எல்லாம்
கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே.

         பொழிப்புரை :இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்



2.116 திருநாகைக்காரோணம்         பண் - செவ்வழி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கூனல்திங்கள் குறுங்கண்ணி கான்ற அந்நெடு வெண்ணிலா
ஏனல்பூத்தஅம் மராங்கோதை யோடும்விரா வும்சடை
வானநாடன் அமரர்பெரு மாற்கு இட மாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை , ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும் , அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையது மாகிய கடல்நாகைக்காரோணமாகும் .


பாடல் எண் : 2
விலங்கல்ஒன்று சிலையாமதில் மூன்றுஉடன் வீட்டினான்,
இலங்கு கண்டத்து எழில்ஆமை பூண்டாற்கு இடம்ஆவது,
மலங்கி ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும் மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்ட வனும் ஆகிய இறைவனுக்கு இடம் , கலங்கி ஓங்கி வரும் வெண் திரை களை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப் பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .


பாடல் எண் : 3
வெறிகொள் ஆரும் கடல்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள் ஞாழல் முடப்புன்னை முல்லைமுகை வெண்மலர்
நறைகொள்கொன்றை நயந்துஓங்கு நாதற்கு இடமாவது
கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :தளிர்களோடு கூடிய ஞாழல் மலர் , வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள் , வெள்ளிய முல்லையரும்புகள் , தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம் , மணம் கமழும் தாழைமலர் , நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட , கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும் .


பாடல் எண் : 4
வண்டுபாட வளர்கொன்றை மாலைமதி யோடு உடன்
கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் எனவைத்து உகந்த ஒரு வற்குஇடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து , சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து மகிழ்ந்த இறைவனுக்கு இடம் , தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்


பாடல் எண் : 5
வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந்து ஏத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வுஎய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க்கு இடமாவது
கார்கொள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :நல்லவர் மகிழ்ந்தேத்த , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு , தண்மையான அழகிய சடையில் நீண்ட நிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டு விளங்கும் சிவ பிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .


பாடல் எண் : 6
விடை அதுஏறி  விடஅரவு அசைத்தவ் விகிர்தர்அவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மர்அவர்
உடைகொள்வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது
கடைகொள்செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :விடைமீது ஏறி வருபவனும் , விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும் , பூதப்படைகள் பாட ஆடும் பரமனும் , புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெரு மானுக்குரிய இடம் , மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும் .


பாடல் எண் : 7
பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே செலும் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கு இடமாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும் , சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்த வாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம் , தாழை வேலியையும் உப்பங் கழிகளையும் உடைய கடல் நாகைக் காரோணமாகும் .


பாடல் எண் : 8
பத்துஇரட்டி திரள் தோள் உடையான் முடிபத்துஇற
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்
கத்திஉரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம் , கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப் பும் கடல் நாகைக்காரோணமாகும் .


பாடல் எண் : 9
நல்லபோதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்
அல்லர் ஆவர் எனநின்ற பெம்மாற்கு இடமாவது
மல்லல் ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும் , திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம் , வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களை யுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .


பாடல் எண் : 10
உயர்ந்தபோதின் உருவத்து உடைவிட்டு உழல்வார்களும்
பெயர்ந்தமண்டை இடுபிண்ட மாவுண்டு உழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடமாவது
கயங்கொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

         பொழிப்புரை :தாமரை மலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாத வாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும் .


பாடல் எண் : 11
மல்குதண்பூம் புனல்வாய்ந்து ஒழுகும்வயல் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன்நல் லார்கள்முன்
வல்லவாறே புனைந்துஏத்துங் காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்கும்துயர் இல்லையே.

         பொழிப்புரை :நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள் முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர் கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை .

                                             திருச்சிற்றம்பலம்
  

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பாடல் எண் : 291
சோலை மறைக்காட்டு அமர்ந்துஅருளும்
         சோதி அருள்பெற்று அகன்றுபோய்,
"வேலை விடம்உண் டவர்வீழி
         மிழலை மீண்டும் செல்வன்" என,
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
         ரோணம் பிறவும் தாம்பணிந்து,
சாலும் மொழிவண் தமிழ்பாடி,
         தலைவர் மிழலை வந்துஅடைந்தார்.

         பொழிப்புரை : சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச் சென்று, கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய நிலையில், உலகில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும், அப்பதி முதலாய பிற பதிகளையும் வணங்கிச் சால்புடைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின் திருவீழிமிழலையை அடைந்தார்.

         குறிப்புரை : திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:

     1.  `மனைவிதாய்` (தி.4 ப.71) - திருநேரிசை.
2.    `வடிவுடை மாமலை` (தி.4 ப.103) - திருவிருத்தம்.
3.    `பாணத்தான்` (தி.5 ப.83) - திருக்குறுந்தொகை.
4.    `பாரார் பரவும்` (தி.6 ப.22) - திருத்தாண்டகம்.

          பிற பதிகளாவன:

1. திருப்பயற்றூர் - `உரித்திட்டார்` (தி.4 ப.32) - திருநேரிசை.
2. திருக்கொண்டீச்சரம்: `வரைகிலேன்` (தி.4 ப.67) - திருநேரிசை. `கண்ட பேச்சினில்` (தி.5 ப.70) – திருக்குறுந்தொகை..


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 071    திருநாகைக்காரோணம்              திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மனைவிதாய் தந்தை மக்கள்
         மற்றுஉள சுற்றம் என்னும்
வினைஉளே விழுந்து அழுந்தி,
         வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையுமா கடல்சூழ் நாகை
         மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீர் ஆகில்
         உய்யலாம் நெஞ்சி னீரே.

         பொழிப்புரை : மனமே ! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம் .

பாடல் எண் : 2
வையனை, வையம் உண்ட
         மால்அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனை, செய்ய போதில்
         திசைமுகன் சிரம்ஒன்று ஏந்தும்
கையனை, கடல்சூழ் நாகைக்
         காரோணம் கோயில் கொண்ட
ஐயனை, நினைந்த நெஞ்சே
         அம்மநாம் உய்ந்த வாறே.

         பொழிப்புரை : எருதை ஊர்பவனாய் , ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய் , செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே ! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும் .


பாடல் எண் : 3
நிருத்தனை, நிமலன் தன்னை,
         நீள்நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேத வித்தை,
         விளைபொருள் மூலம்ஆன
கருத்தனை, கடல்சூழ் நாகைக்
         காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்தலால், நாம்
         உய்ந்தவா நெஞ்சி னீரே.

         பொழிப்புரை : மனமே ! கூத்தனாய் , தூயனாய் , நீண்ட இவ்வுலகம் , தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய் , வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய் , தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே .



பாடல் எண் : 4
மண்தனை இரந்து கொண்ட
         மாயனோடு, அசுரர், வானோர்,
தெள்திரை கடைய வந்த
         தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல்சூழ் நாகைக்
         காரோணம் கோயில் கொண்ட
அண்டனை நினைந்து, நெஞ்சே
         அம்மநாம் உய்ந்த வாறே.

         பொழிப்புரை : உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தெளிந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும் .


பாடல் எண் : 5
நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம் சூடி
மறைஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை, நாளும் ஏத்த இடும்பைபோய் இன்பம் ஆமே.

         பொழிப்புரை : கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி , வேதங்களைப் பாடிக்கொண்டு , சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய் , கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும் .

பாடல் எண் : 6
வெம்பனைக் கருங்கை யானை
         வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை, காலன் காய்ந்த
         காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை,
         நாகைக்கா ரோணம் மேய
செம்பொனை, நினைந்த நெஞ்சே
         திண்ணம் நாம் உய்ந்த வாறே.

         பொழிப்புரை : கொடிய , பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய் , கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய் , உலகங்கள் துதிக்கும் தேவனாய் , தேவர்கள் தலைவனாய் , நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த நெஞ்சே ! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று .


பாடல் எண் : 7
வெங்கடும் கானத்து ஏழை
         தன்னொடும் வேட னாய்ச்சென்று
அங்குஅமர் மலைந்து, பார்த்தற்கு
         அடுசரம் அருளி னானை,
மங்கைமார் ஆடல் ஓவா
         மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலும் காணப்
         பெற்றுநாம் களித்த வாறே.

         பொழிப்புரை : வெப்பம் மிக்ககொடிய காட்டிலே , பார்வதியோடு வேடன் வடிவில் சென்று , அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய் , பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே !.


பாடல் எண் : 8
தெற்றினர் புரங்கள் மூன்றும்
         தீயினில் விழ,ஓர் அம்பால்
செற்றவெம் சிலையர், வஞ்சர்
         சிந்தையுள் சேர்வுஇ லாதார்,
கற்றவர் பயிலும் நாகைக்
         காரோணம் கருதி ஏத்தப்
பெற்றவர் பிறந்தார், மற்றுப்
         பிறந்தவர் பிறந்துஇ லாரே.

         பொழிப்புரை : மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .

பாடல் எண் : 9
கருமலி கடல்சூழ் நாகைக்
         காரோணர் கமல பாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது
         ஒண்திறல் அரக்கன் உக்கான்,
இருதிற மங்கை மாரோடு
         எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்கத்
         திண்ணம்நாம் உய்ந்த வாறே.

         பொழிப்புரை : மனமே ! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான் . கங்கை , பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று .

                                             திருச்சிற்றம்பலம்


4. 103   திருநாகைக்காரோணம்            திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வடிவுஉடை மாமலை மங்கை பங்கா,
         கங்கை வார்சடையாய்,
கடிகமழ் சோலை சுலவு கடல்
         நாகைக் காரோணனே,
பிடிமதவாரணம் பேணும் துரகம்
         நிற்கப் பெரிய
இடிகுரல் வெள்எருது ஏறும்
         இதுஎன்னைகொல், எம்இறையே.

         பொழிப்புரை : அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர்வதன் காரணம் என்ன ?


பாடல் எண் : 2
கற்றார் பயில்கடல் நாகைக்கா
         ரோணத்துஎம் கண்ணுதலே,
வில் தாங்கிய கரம் வேல்நெடுங்
         கண்ணி வியன்கரமே,
நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த
         கரம் நின்கரமே,
செற்றார் புரம்செற்ற சேவகம்
         என்னைகொல், செப்புமினே.

         பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .


பாடல் எண் : 3
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
         வேள்வி தொழில்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல்
         நாகைக் காரோண,நின்
நாமம் பரவி நமச்சிவாய
         என்னும் அஞ்செழுத்தும்
சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய்,
         எங்கள் சங்கரனே.

         பொழிப்புரை : தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .


பாடல் எண் : 4
பழிவழி ஓடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன், முடியாமைக் காத்துக் கொண்டாய்
கழிவழி ஓதம்உலவு கடல் நாகைக் காரோண! என்
வழிவழி ஆள்ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே.

         பொழிப்புரை : உப்பங்கழி வழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .


பாடல் எண் : 5
செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்
வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.

         பொழிப்புரை : சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .


பாடல் எண் : 6
பனைபுரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே,
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே,
மனைதுறந்து அல்உணா வல்அமண் குண்டர் மயக்கம் நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான்செயும் இச்சைகளே.

         பொழிப்புரை : பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?


பாடல் எண் : 7
சீர்மலி செல்வம் பெரிது உடையசெம்பொன் மாமலையே,
கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே,
வார்மலி மென்முலை யார்பலி வந்துஇடச் சென்றுஇரந்து
ஊர்மலி பிச்சைகொடு உண்பது மாதிமையோ உரையே.

         பொழிப்புரை : சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .


பாடல் எண் : 8
வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்து எம் வானவனே,
எங்கள் பெருமான்ஒர் விண்ணப்பம் உண்டு,அது கேட்டுஅருளீர்
கங்கை சடையுள் கரந்தாய், அக் கள்ளத்தை மெள்ள உமை
நங்கை அறியில் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே.

         பொழிப்புரை : கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .


பாடல் எண் : 9
கரும்தடங் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்று இறைஞ்சாது, அன்று எடுக்கல் உற்றான்,
பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து, அலற,
இருந்து அருளிச் செய்ததே, மற்றுச் செய்திலன் எம்இறையே.

         பொழிப்புரை : கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .

                                             திருச்சிற்றம்பலம்


                           5. 083   திருநாகைக்காரோணம்
                                        திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாணத் தால்மதின் மூன்றும் எரித்தவன்
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்
காணத் தான்இனி யான்கடல் நாகைக்கா
ரோணத் தான்என நம்வினை ஓயுமே.

         பொழிப்புரை : ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் !


பாடல் எண் : 2
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை
விண்த லம்பணிந்து ஏத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை ஆன கழலுமே.

         பொழிப்புரை : வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் .


பாடல் எண் : 3
புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வே,வினை ஆயின நீங்குமே.

         பொழிப்புரை : மாமலர்களைக் கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் .


பாடல் எண் : 4
கொல்லை மால்விடை ஏறிய கோவினை
எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வே,வினை ஆனவை சோருமே.

         பொழிப்புரை : முல்லை நிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் .


பாடல் எண் : 5
மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைஅ னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்குஅல்லல் இல்லையே.

         பொழிப்புரை : உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .


பாடல் எண் : 6
அலங்கல் சேர்சடை ஆதிபு ராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்,வினை ஆயின மாயுமே.

         பொழிப்புரை : மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் .


பாடல் எண் : 7
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்
கனம்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனம்கொள் வார்,வினை ஆயின மாயுமே.

         பொழிப்புரை : சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் .


பாடல் எண் : 8
அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்து
எந்தை ஈசன்என்று ஏத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடும்துயர், திண்ணமே.

         பொழிப்புரை : ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் .


பாடல் எண் : 9
கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்குஅறி ஒண்ணா இறைவனை
ஒருவ னைஉண ரார்புரம் மூன்றுஎய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.

         பொழிப்புரை : உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் .


பாடல் எண் : 10
கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்தன்
வடவ ரைஎடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய பாதம் அணைதரத்
தொடர அஞ்சும் துயக்குஅறும் காலனே.

         பொழிப்புரை : கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் .
                                             திருச்சிற்றம்பலம்


                           6. 022    திருநாகைக் காரோணம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாரார் பரவும் பழனத் தானை,
         பருப்பதத் தானை, பைஞ்ஞீலி யானை,
சீர்ஆர் செழும்பவளக் குன்றுஒப் பானை,
         திகழும் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேர்ஆ யிரம்உடைய பெம்மான் தன்னை,
         பிறர்தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,
கார்ஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :உலகத்தார் போற்றும் திருப்பழனம் , சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய் , எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரிய கடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான் .


பாடல் எண் : 2
விண்ணோர் பெருமானை, வீரட் டனை,
         வெண்ணீறு மெய்க்குஅணிந்த மேனி யானை,
பெண்ணானை, ஆணானை, பேடி யானை,
         பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை,
அண்ணா மலையானை, ஆன்ஐந்து ஆடும்
         அணிஆரூர் வீற்றுஇருந்த அம்மான் தன்னை,
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் , வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண் ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம் .


பாடல் எண் : 3
சிறையார் வரிவண்டு தேனே பாடும்
         திருமறைக் காட்டு எந்தை சிவலோகனை,
மறைஆன்ற வாய்மூரும் கீழ்வே ளூரும்
         வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே
உறைவானை, உத்தமனை, ஒற்றி யூரில்
         பற்றிஆள் கின்ற பரமன் தன்னை,
கறைஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு , வேதம் முழங்கும் திருவாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய் , எந்தையாகிய சிவலோகனாய் , ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

 
பாடல் எண் : 4
அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை,
         ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை,
         மூவுலகும் தானாய மூர்த்தி தன்னை,
சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்
         செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானை,
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் , பாச்சிலாச்சிராமம் , ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் , மூவுலகும் தான் பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 5
நடைஉடைய நல்எருது ஒன்று ஊர்வான் தன்னை,
         ஞானப் பெருங்கடலை, நல்லூர் மேய
படையுடைய மழுவாள் ஒன்று ஏந்தி னானை,
         பன்மையே பேசும் படிறன் தன்னை,
மடையிடையே வாளை உகளும் பொய்கை
         மருகல்வாய்ச் சோதி மணிகண் டனை,
கடைஉடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நல்லூரை விரும்பியவனாய் , மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய் , மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 6
புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனை,
         பூம்புகார்க் கற்பகத்தை, புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை
         அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை,
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
         ஏகாசம் இட்டுஇயங்கும் ஈசன் தன்னை,
கலங்கல் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய் , பூம்புகாரில் உள்ள கற்பகமாய் , அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய் , தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 7
பொன்மணிஅம் பூங்கொன்றை மாலை யானை,
         புண்ணியனை, வெண்ணீறு பூசி னானை,
சின்மணிய மூவிலைய சூலத் தானை,
         தென்சிராப் பள்ளிச் சிவலோகனை,
மன்மணியை, வான்சுடலை ஊராப் பேணி
         வல்எருதுஒன்று ஏறும் மறைவல் லானை,
கல்மணிகள் வெண்திரைசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய் , வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் , அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 8
வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தி னானை,
         விரிகோ வணம்அசைத்த வெண்ணீற் றானை,
புண்தலைய மால்யானை உரிபோர்த் தானை,
         புண்ணியனை, வெண்ணீறு அணிந்தான் தன்னை,
எண்திசையும் எரிஆட வல்லான் தன்னை,
         ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,
கண்டல்அம் கழனிசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய் , வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய் , ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 9
சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னை,
         தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை,
வில்லானை, மீயச்சூர் மேவி னானை,
         வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்
         பொறியரவம் மார்புஆரப் பூண்டான் தன்னை,
கல்ஆலின் கீழானை, கழிசூழ் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை , மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய் , ஒளியுடையவனாய் , வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


பாடல் எண் : 10
மனைதுறந்த வல்அமணர் தங்கள் பொய்யும்
         மாண்புஉரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
         மெய்என்று கருதாதே, போத நெஞ்சே,
பனைஉரியைத் தன்உடலிற் போர்த்த எந்தை
         அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்,
கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :நெஞ்சே ! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல் , யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா ? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது .


பாடல் எண் : 11
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே
         நேர்உருவங் காணாமே சென்று நின்ற
படியானை, பாம்புரமே காத லானை,
         பாம்புஅரையோடு ஆர்த்த படிறன் தன்னை,
செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக்கு என்று
         சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.

         பொழிப்புரை :திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய் , பாம்புரத்தை விரும்பியவனாய் , பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய் , முடை நாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய் , நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், திருவாரூரிலிருந்து திருநாகைக் காரோணத் திறைவரைத் தொழுது பொற்பூணும், மணிப்பூணும், நவமணிகளும், ஆடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியனவும் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 63)

பெரிய புராணப் பாடல் எண் : 84
சேவித்து அணையும் பரிசனங்கள்
         சூழத் திருவா ரூர்இறைஞ்சி,
காவில் பயிலும் புறம்பணையைக்
         கடந்து போந்து, கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
         போந்து, வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
         புகுந்து காரோ ணம்பணிந்தார்.

         பொழிப்புரை : தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திருவாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், `திருக்கீழ்வேளூரைச்\' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடிகளை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.


பெ. பு. பாடல் எண் : 85
திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
         சென்று பணிந்து, சிந்தையினை
உருக்குஆர் வச்செந் தமிழ்மாலை
         சாத்தி, சிலநாள் உறைந்துபோய்,
பெருக்கு ஆறுஉலவு சடைமுடியார்
         இடங்கள் பலவும் பணிந்துஏத்தி,
அருட்கா ரணர்தம் திருமறைக்காடு
         அணைந்தார் சேரர் ஆரூரர்.

         பொழிப்புரை : திருநாகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தாய இறைவரைப் பணிந்து, சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால், பரந்த செந்தமிழ் மாலையான திருப்பதிககத்தை அருளிச் செய்து சாத்தி, சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து, மேற்சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையையுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, அருளுடைய மூல முதல்வரான இறைவரின் திருமறைக்காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர்.

         குறிப்புரை : திருநாகைக் காரோணத்தில் அருளிய பதிகம் `பத்தூர்புக் கிரந்துண்டு' (தி.7 ப.46) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பதிகமாகும். இடங்கள் பலவும் என்பன பொய்கைநல்லூர், திருவரிஞ்சையூர், திருக்கள்ளிக்குடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத்தலை முதலாயினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.



சுந்தரர் திருப்பதிகம்
7. 046  திருநாகைக்காரோணம்    பண் - கொல்லிக்கௌவாணம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பத்துஊர் புக்கு இரந்து உண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறுஆடித் திரிவீர்,
செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித் திரிவீர்,
செல்வத்தை மறைத்துவைத்தீர், எனக்குஒருநாள் இரங்கீர்,
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்து அருள வேண்டும்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,


பாடல் எண் : 2
வேம்பினொடு தீங்கரும்பு விரவிஎனைத் தீற்றி,
விருத்திநான் உமைவேண்ட, துருத்திபுக்குஅங்கு இருந்தீர்,
பாம்பினொடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப்
பகட்ட,நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்,
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கில் திகழும்
திருவாரூர் புக்குஇருந்த தீவண்ணர், நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்துஅருள வேண்டும்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .


பாடல் எண் : 3
பூண்பதுஓர் இளஆமை பொருவிடைஒன்று ஏறிப்
பொல்லாத வேடம்கொண்டு எல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையில் பலிகொள்கை தவிரீர்,
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்,
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்புஅரையன் மடப்பாவை பொறுக்குமோ, சொல்லீர்,
காண்புஇனிய மணிமாடம் நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது, வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .


பாடல் எண் : 4
விட்டதுஓர் சடைதாழ, வீணைவிடங் காக,
வீதிவிடை ஏறுவீர், வீண்அடிமை உகந்தீர்,
துட்டர் ஆயினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே,
வட்டவார் குழல்மடவார் தம்மை மயல் செய்தல்
மாதவமோ, மாதிமையோ, வாட்டம் எலாம் தீரக்
கட்டிஎமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .


பாடல் எண் : 5
மிண்டுஆடித் திரிதந்து, வெறுப்பனவே செய்து,
வினைக்கேடு பலபேசி, வேண்டியவா திரிவீர்,
தொண்டுஆடித் திரிவேனைத் தொழும்புதலைக்கு ஏற்றும்
சுந்தரனே, கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்துஅருள வேண்டும்,
பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே, நும்மைக்
கண்டார்க்கும் காண்புஅரிதாய்க் கனல்ஆகி நிமிர்ந்தீர்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது, வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .


பாடல் எண் : 6
இலவஇதழ் வாய் உமையோடு எருதுஏறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக்கு எச்சு உச்சம் போது
பலஅகம்புக்கு உழிதர்வீர், பட்டோடு சாந்தம்
பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ,
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றுஅமரர் வேண்ட
உண்டுஅருளிச் செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது, இடவே
கலவமயில் இயலவர்கள் நடமாடும் செல்வக்
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !


பாடல் எண் : 7
தூசு உடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்துஓர் சொல்பாடாய் வந்து
தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்,
நேசம்உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .


பாடல் எண் : 8
மாற்றமேல் ஒன்றுஉரையீர், வாளாநீர் இருந்தீர்,
வாழ்விப்பன் எனஆண்டீர், வழிஅடியேன் உமக்கு,
ஆற்றஏல் திருஉடையீர், நல்கூர்ந்தீர் அல்லீர்,
அணிஆரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டும்,
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்,
காற்றுஅனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .


பாடல் எண் : 9
மண்உலகும் விண்உலகும் உம்மதே ஆட்சி,
மலைஅரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்,
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன்று அறியான்,
எம்பெருமான், இதுதகவோ, இயம்பிஅருள் செய்யீர்,
திண்எனஎன் உடல்விருத்தி தாரீரே ஆகில்,
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன், நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லியருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன்; பின்பு, `இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .


பாடல் எண் : 10
மறிஏறு கரதலத்தீர், மாதிமையேல் உடையீர்,
மாநிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்,
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கு இருந்தீர், அடிகேள்,
கிறி உம்மால் படுவேனோ, திருஆணை உண்டேல்,
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேல்ஓர்
பொன்பூவும் பட்டிகையும் புரிந்துஅருள வேண்டும்,
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்,
கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

         பொழிப்புரை : மான் கன்று பொருந்திய கையை உடையவரே.  தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடைவாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும், மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .


பாடல் எண் : 11
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றுஆய பெருமானே, மற்றுஆரை உடையேன்,
உண்மயத்த உமக்குஅடியேன் குறைதீர்க்க வேண்டும்,
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்.
கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீர், என்று
அண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார், அமர் உலகுஆள் பவரே.

         பொழிப்புரை : அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...