எண்ணெய் முழுக்கு நாள்




50. முழுக்கு நாள்

வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது,
     வடிவமிகும் அழகு போகும்;
  வளர்திங் ளுக்குஅதிக பொருள்சேரும்; அங்கார
     வாரம் தனக்கு  இடர்வரும்;

திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;
     செம்பொனுக்கு உயர் அறிவுபோம்;
  தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனிஎண்ணெய்
     செல்வம்உண்டு, யுள் உண்டாம்;

பரிகாரம் உளது, தி வாரம் தனக்குஅலரி;
     பௌமனுக்கு ஆன செழுமண்,
  பச்சறுகு பொன்னவற்கு ஆம்; எருத் தூள், ளிப்
     பார்க்கவற்கு ஆகும்; எனவே

அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்கு
     ஆடுவார்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வரும் ஆதிவாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது --- ஆதிவாரம் என்று சொல்லப்படும் ஞாயிற்றுக்கிழமை அன்று தலைக்கு எண்ணெய் கூடாது,

     (அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகினால்)

     வடிவம் மிகும் அழகுபோகும் --- ஒளி மிகுந்த அழகு நீங்கும்,

     வளர் திங்களுக்கு அதிக பொருள் சேரும் --- திங்கட்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் மிகுந்த பொருள் சேரும்,

     அங்கார வாரம் தனக்கு இடர் வரும் --- செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் துன்பம் உண்டாகும்,

     திருமேவு புதனுக்கு மிகு புத்தி வந்திடும் --- அழகு மிகுந்த புதன்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் சிறந்த அறிவு வளரும்,

     செம்பொனுக்கு உயர் அறிவு போம் --- நல்ல வியாழக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் மேலான அறிவு கெடும்,

     வெள்ளி தேடிய பொருள் சேதம் ஆம் ---  வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் அழியும்,

     சனி எண்ணெய் செல்வம் உண்டு ஆயுள் உண்டாம் --- சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் செல்வமும் வாழ்நாள் வளர்ச்சியும் உண்டாகும்,

     பரிகாரம் உளது --- தகாத நாட்களில் எண்ணெய் தேய்த்து முழுக நேர்ந்தால், மாற்று உண்டு,

     ஆதிவாரம் தனக்கு அலரி --- முதல் வாரமான ஞாயிற்றுக்கிழமையில் அலரி மலர் மாற்று ஆகும்,

     பௌமனுக்கு ஆன செழு மண் --- செவ்வாய்க் கிழமைக்கு நல்ல மண் மாற்று ஆகும்,

     பொன்னவற்குப் பசு அறுகு ஆம் --- வியாழனுக்குப் பசிய அறுகம்புல் மாற்று ஆகும்,

     ஒளி பார்க்கவற்கு எருத்தூள் ஆகும் --- ஒளியுடைய வெள்ளிக்கு எருப்பொடி மாற்று ஆகும்.

     அரிதா அறிந்த பேர் எண்ணெய் சேர்த்து முழுக்கு ஆடுவார் --- அருமையாக உணர்ந்தவர்கள் எண்ணெயுடன் இவற்றைச் சேர்த்து முழுக்கு ஆடுவர்.

        விளக்கம் ---  எள் + நெய் : எண்ணெய். நெய்ப்புத் தன்மை உடையது நெய் எனப்பட்டது. எள்ளில் இருந்து எடுப்பது தான் நெய். என்பதால், எள்+நெய்=எண்ணெய் என்று ஆனது. நல்லெண்ணெய் என்றால் இதையே குறிக்கும். மற்றவையும், இதைப் போலவே, கடலை நெய், தேங்காய் நெய் என்று சொல்லப்படும்.  ஆனால், வழக்கில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்கின்றோம்.

திங்கள், புதன், சனி தவிர மற்றக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க நேர்ந்தால், அதற்கு மாற்று சொல்லப்பட்டது.

பூமி, பூமன், பௌமன் என்று ஆனது. புதனைக் குறிக்கும்.

பொன்னவன் என்பது குருவைக் குறிக்கும்.

பிருகு முனிவரின் வழித் தோன்றல், வெள்ளி எனப்படும் சுக்கிரன் என்பதால், அவன் பார்க்கவன் எனப்பட்டான்.

இன்று எண்ணெய்க் குளியல் என்பதே அருகிப் போய்விட்டது. "வைத்தியனுக்குக் கொடுப்பதை, வாணியனுக்குக் கொடு" என்னும் பழமொழியும் உண்டு. எல்லாவற்றையும் வசதியாக மறந்தோம்.  

நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் ஆகக் கிடைப்பதும் அருகி, எங்கும், எதிலும் கலப்படம் என்று ஆகி விட்டது. யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம். பூமியிலே யாவும் வஞ்சம்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...