வயிரவி வனம் - 0666. அருவரை எடுத்த

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருவரை எடுத்த (வயிரவிவனம்)

முருகா!
உமது அடியாரிடம் மாறாத பத்தி உண்டாகுமாறு
அடியேனுக்கு ஞானத்தை அருள் புரிவீர்.


தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான


அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
     மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
     மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
     னிருகர மிகுத்த பார ...... முருகாநின்

பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
     பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
     சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
     துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊணும்
     அரனிடம் இருக்கும் ஆயி ...... அருள்வோனே!

அலைகடல் அடைத்த ராமன் மிக மனமகிழ்ச்சி கூரும்,
     அணிமயில் நடத்தும் ஆசை ...... மருகோனே!

பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக! நிரைத்த தோள்,
     பனிருகரம் மிகுத்த பார! ...... முருகா! நின்

பதமலர் உளத்தில் நாளும் நினைவு உறு கருத்தர் தாள்கள்
     பணியவும் எனக்கு ஞானம் ...... அருள்வாயே!

சுருதிகள் உரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி
     சொலு என உரைத்த ஞான ...... குருநாதா!

சுரர்பதி தழைத்து வாழ, அமர்சிறை அனைத்தும் மீள
     துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா!

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்,
     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி,

வளம்உறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

பதவுரை

          அருவரை எடுத்த வீரன் --- அருமையான திருக்கயிலாய மலையை அசைத்து எடுத்த வீரனாகிய இராவணன்

        நெரிபட --- உடல் நெரிபட்டு வருந்த

        விரற்கள் ஊணும் --- திருவிரல்களைச் சிறிது ஊன்றிய

         அரன் இடம் இருக்கும் --- சிவபெருமானுடைய இடப்புறத்தில் உள்ள

        ஆயி அருள்வோனே --- அன்னையாகிய பார்வதிதேவி பெற்றருளிய திருக்குமாரரே!

         அலைகடல் அடைத்த ராமன் --- அலைகள் நீறைந்த கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமச்சந்திரர்

        மிகமன மகிழ்ச்சி கூரும் --- மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும்,

         அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே --- அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், அன்பு நிறைந்த திருமருமகரே!

         பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக --- கதிரவனைப் போல் ஒளி செய்து பெருமை மிகுந்த ஆறுதிருமுகங்களை உடையவரே!

         நிரைத்த தோள் பனிருகர --- வரிசையாக உள்ள தோள்களுடன் கூடிய பன்னிரண்டு திருக்கரங்களை உடையவரே!

         மிகுத்த பார --- ஆன்ம கோடிகளைக் காப்பாற்றுவதில் மிகுந்த பொறுப்பை உடையவரே!
        
        முருகா --- முருகப் பெருமானே!

         சுருதிகள் உரைத்த வேதன் --- வேதங்களை ஓதும் பிரமதேவர்

     உரைமொழி தனக்குள் --- உரைக்கத் தொடங்கிய சொற்களுக்குள்ளே

     ஆதி சொலு என --- முதல் எழுத்தாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கடவாய் என்று கேட்டு

         உரைத்த ஞான குருநாதா --- அம் மந்திரத்தின் உட்பொருள் உரைத்த ஞானகுரு நாதரே!

         சுரர் பதி தழைத்து வாழ --- தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்  பொன்னுலகத்தில் செழிப்புடன் வாழவும்,

         அமர் சிறை அனைத்தும் மீள --- இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீண்டு உய்யவும்,

         துணிபட அரக்கர் மாள விடும்வேலா --- வெட்டுண்டு அசுரர்கள் இறந்து ஒழியவும், செலுத்திய வேலாயுதத்தை உடையவரே!

         மருமலர் மணக்கும் --- நல்ல பரிமள மிக்க பூக்கள் நிறைந்து கமழ்கின்ற

        வாசம் நிறைதரு தருக்கள் சூழும் வயல் --- வாசனை நிறைந்த மரங்கள் சூழ்ந்த வயல்களுக்கு

         புடை கிடக்கு --- அருகில் கிடக்கின்ற

        நீல மலர் வாவி --- நீலோற்பல மலர்கள் நிறைந்த குளங்களும்,

        வளம் உறு தடத்தினோடு --- வளம் மிக்க தடாகங்களும் சூழ

         சரஸ்வதி நதிக்கண் வீறு --- சரஸ்வதி நதியின் அருகில் பெருமை தங்கிய

         வயிரவி வனத்தில் மேவு பெருமாளே --- வயிரவிவனம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

         நின் பதமலர் --- தேவரீருடைய திருவடிக் கமலங்களை

       உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் --- உள்ளக் கமலத்தில் இடையறாது சிந்திக்கின்ற மெய்யடியார்களுடைய

         தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே --- திருவடிகளை அவர்களை உள்ளத்தால் மதிப்பதோடு, உடம்பினால் பணியுமாறும் அடியேனுக்கு நல்லறிவை அருள் புரிவீர்.

பொழிப்புரை

         அருமையான திருக்கயிலாய மலையை அசைத்து எடுத்த வீரனாகிய இராவணன் உடல் நெரிபட்டு வருந்த திருவிரல்களைச் சிறிது ஊன்றிய சிவபெருமானுடைய இடப்புறத்தில் உள்ள அன்னையாகிய பார்வதிதேவி பெற்றருளிய திருக்குமாரரே!

         அலைகள் நீறைந்த கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமச்சந்திரர் மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும்,  அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், அன்பு நிறைந்த திருமருமகரே!

         கதிரவனைப் போல் ஒளி செய்து பெருமை மிகுந்த ஆறுதிருமுகங்களை உடையவரே!

         வரிசையாக உள்ள தோள்களுடன் கூடிய பன்னிரண்டு திருக்கரங்களை உடையவரே!

         ஆன்ம கோடிகளைக் காப்பாற்றுவதில் மிகுந்த பொறுப்பை உடையவரே!

         முருகப் பெருமானே!

         வேதங்களை ஓதும் பிரமதேவர் உரைக்கத் தொடங்கிய சொற்களுக்குள்ளே முதல் எழுத்தாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கடவாய் என்று கேட்டு, அம் மந்திரத்தின் உட்பொருள் உரைத்த ஞானகுரு நாதரே!

         தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்  பொன்னுலகத்தில் செழிப்புடன் வாழவும், இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீண்டு உய்யவும், வெட்டுண்டு அசுரர்கள் இறந்து ஓழியவும், செலுத்திய வேலாயுதத்தை உடையவரே!

         நல்ல பரிமள மிக்க பூக்கள் நிறைந்து கமழ்கின்ற வாசனை நிறைந்த மரங்கள் சூழ்ந்த வயல்களுக்கு அருகில் கிடக்கின்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த குளங்களும், வளம் மிக்க தடாகங்களும் சூழ சரஸ்வதி நதியின் அருகில் பெருமை தங்கிய
வயிரவிவனம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

         தேவரீருடைய திருவடிக் கமலங்களை உள்ளக் கமலத்தில் இடையறாது சிந்திக்கின்ற மெய்யடியார்களுடைய திருவடிகளை, அவர்களை உள்ளத்தால் மதிப்பதோடு, உடம்பினால் பணியுமாறும் அடியேனுக்கு நல்லறிவை அருள் புரிவீர்.

 
விரிவுரை

அருவரை எடுத்த வீரன்.............. அரன் ---

இராவணன் கயிலைமலை எடுத்தது

புலத்தியருடைய புதல்வர் விச்ரவசு. விச்ரவசுவுக்கு கேகசி என்பாளிடம் பிறந்தவன் தசக்ரீவன். இவன் இலங்கையைக் குபேரனிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டனன். ஒரு சமயம் தசக்ரீவன் குபேரனிடம் இருந்து கவர்ந்து கொண்ட புஷ்பகவிமானத்தில் ஊர்ந்து விண்வழியே வடதிசை நோக்கிச் சென்றனன். ஆங்கு திருக்கயிலாய மலை எதிர்ப்பட்டது.  அதற்குமேல் விமானம் செல்லாது தடைபட்டது. பலகாலும் செல்லுமாறு விமானத்தைத் தசக்ரீவன் ஏவினான். ஆங்கு திருக்கயிலாய மலையைக் காவல் புரிந்துகொண்டு இருந்த திருநந்திதேவர், "தசக்ரீவா! இது முழுமுதல் கடவுளாகிய முக்கண்பெருமான் எழுந்தருளிய திருமலை. இதன்மேல் விமானம் பறந்து செல்லாது. வலமாகச் செல்லுதி" என்று கூறினார். அதுகேட்ட தசக்ரீவன் நகைத்து, "மாட்டு முகம் உடைய நீ எனக்கு அறிவு கூற வந்தனையோ? குரங்கு போன்ற உன்னை யார் கேட்டது?” என்று பரிகசித்தனன். திருநந்திதேவர் சினம் எய்தி, "முடனே! ஆணவ மலத்தால் மூடப்பட்ட உனக்கும் நல்லோர்கள் கூறும் அறவுரை ஏறாது. என்னைக் குரங்கு என்று இகழ்ந்ததனால், குரங்கினால் உனது இலங்கையும் அசுரர்களும் அழியக் கடவது" என்று சபித்தனர். 

தசக்ரீவன் சினந்து, "இந்த மலையையும் உன்னையும் உனது தலைவராக இம்மலை மேல் உறையும் சிவமூர்த்தியையும் எடுத்துக் கடலில் எறிவேன்" என்று கூறி, விமானத்தினின்றும் இறங்கி, வெள்ளியங்கிரியை வேருடன் பறித்து தோள்மட்டம் அளவு எடுத்து ஆர்த்தனன். 

மலை அசைவதைக் கண்டு மலையரையன் ஈன்ற மரகதவல்லி, "பெருமானே, ஏன் மலை அசைகின்றது?” என்று வினவினார்.  எம்பெருமான் புன்முறுவல் செய்து, "தேவீ! தசக்ரீவன் என்பான் மலையை எடுக்கின்றனன்" என்று கூறி, ஊன்றி இருந்த இடத் திருவடி மலரின் மெல்விரலால் சீறிதே ஊன்றி அருளினார்.  தசக்ரீவன் மலையின் கீழ் நெருக்குண்டு, அதினின்றும் வெளிப்பட மாட்டாமல் நெடிது புலம்பி அழுதான்.  ஆயிரம் ஆண்டு அஹ்ஙனம் அழுதபடியால் அவனுக்கு இராவணன் என்ற பேர் உண்டாயிற்று.

யாழ் வல்லோர் ஆகிய நாரதர் அவ்வழி செல்லும் போது, வாய்விட்டுக் கதறி அழுகின்ற இராவணனைக் கண்ணுற்று இரக்கம் உற்றனர். "தசக்ரீவனே! வீணே அழாதே. கருணைக் கடலாகிய சிவபெருமானை இன்னிசையால் பாடித் துதி செய்வாய்.  இசைக்கு இறைவன் உருகித் தண்ணருளி புரிவார்" என்று கூறிச் சென்றனர்.  இராவணன் அதுகேட்டு, இசைக்குரிய கருவி இன்மையால், தனது தலைகளில் ஒன்றைத் திருகி எடுத்து, தனது கரங்களில் ஒன்றைப் பறித்து அதில் மாட்டி, நரம்புகளைக் கட்டி, தம்பூராவாக மீட்டி இனிய கீதங்களால் எம்பெருமானை உள்ளம் உருகிப் பாடினான். அந்த இன்னிசையைக் கேட்ட இறைவர் கால் விரலைச் சிறிது தளர்த்தி, அவனை வெளிப்படுமாறு அருள் புரிந்தனர்.  இராவணன் வெளிப்பட்டு, திருநந்திதேவரைத் தொழுது, அவர் விடைதர, திருக்கோயிலுக்குள் சென்று உமையம்மையாரையும் சிவபெருமானையும் தொழுது துதித்து நின்றனன்.  பரமன் மகிழ்ந்து இராவணனுக்கு நிறைந்த நாளும், சிறந்த வாளும் வழங்கி அருள் புரிந்தனர்.

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்தமா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்டனாரே.

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர்கடாவிச் சென்று எடுத்தான் மலையை,
முன்கைமா நரம்பு வெட்டி, முன்இருக்கு இசைகள் பாட
அங்கைவாள் அருளினான்ஊர் அணிமறைக் காடுதானே.     ---  அப்பர்.

நின் பதமலர் உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் ---

எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை இடையறூது சிந்திப்பதுவே சிறந்த தவமும் ஆகும். முத்திக்கு எளிய நல்வழியும் அதுவே ஆகும். எல்லாப் பெரியோர்களும் இதனையே இனிது விளக்கிக் கூறியருளினார்கள்.

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதன் தாள் வாழ்க..  ---  மணிவாசகர்.

அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்த உய்வனோ. ---  அப்பரடிகள்.

சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்..   ---  திருப்புகழ்.


கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் ---

அடியார்கள் அடிமலரைச் சிந்திப்பதும் வந்திப்பதும் இறைவன் திருவருளை அடைதற்குச் சாதனமாகும். பசுவின் பாலமுதைப் பெறுதற்கு, அதன் கன்று துணை செய்வது கண்கூடு. பசுவைப் போல் இறைவன். கன்று போல் அடியவர். அடியவர் பெருமையை அயனாலும் அளக்கலாகாது.  நேரே இரைவனை அடுத்தவர்க்கு முத்திநலம் சிறிதுகாலம் தாழ்த்துக் கிடைக்கும். பட்டினத்தடிகள் பரமேஸ்வரனை அடுத்தார். பத்திரகிரியார் பட்டினத்தடிகளை அடுத்தார். பரமனை அடுத்த பட்டினத்தாருக்கு முன், அவரை அடுத்த பத்திரகிரியாருக்கு முத்தி கிடைத்து விட்டது. திருநாவுக்கரசரை அடுத்த அப்பூதி அடிகளும், சந்தரமூர்த்தி நாயனாரை அடுத்த பெருமிழலைக்குறும்பனாரும் முத்திநலம் பெற்றது சிந்தித்தற்குரியது.

பணியவும் என்ற எச்ச உம்மையால், சிந்திக்கவும் என்று பொருள் செய்யப்பட்டது.  ஞானம் இருந்தால் அன்றி, அடியார் பத்தி வராது.  ஆதலினால், பணியவும் எனக்கு ஞானம் என்றனர்.

சுருதிகள் உரைத்த வேதன் ---

சுருதி - வேதம். செவியினால் கேட்டுக் கேட்டு அத்யயனம் செய்வதால் வேதத்திற்கு சுருதி என்ற பெயர் உண்டாயிற்று.  அச் சுருதியை பிரமதேவன் கூறத் தொடங்கிய போது, முருகவேள் முதல் எழுத்தாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை வினாவியருளி, அதனைக் கூறமாட்டாத பிரமதேவனைக் குட்டி நெட்டிச் சிறை செய்தனர்.

…..             …..             …..             படைப்போன்
அகந்தை உரைப்பமறை ஆதிஎழுத்து என்று
உகந்த பிரணவத்தின் உண்மை --- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வது எங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே...     ---  கந்தர் கலிவெண்பா.

சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனம் ---

சரஸ்வதி நதி ஏழு நதிகளுள் ஒன்று.  மிகவும் புனிதமானது.  அது வடக்கே உள்ளது.  அந் நதியின் கரையில் வயிரவிவனம் மிகவும் செழிப்பாக விளங்கும்.  அவ் வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவனை அருணகிரிநாதர் பாடுகின்றனர்.  இதனால், அருணகிரிநாதர் வடநாடு முழுவதும் சுற்றியுள்ளார் என்பது தெரிகின்றது.

இந்த திருத்தலம் பஞ்சாப் மாநிலத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. திட்டமாக இடம் விளங்கவில்லை.

கருத்துரை

உமாதேவியாரது புதல்வரே, திருமால் மருகரே, ஞானகுரு நாதரே, வேலாயுதரே, வயிரவி வனம் வாழ் முருகக் கடவுளே, உமது திருவடியைச் சிந்திக்கும் அடியாரிடம் மாறாத பத்தி உண்டாகுமாறு அடியேனுக்கு ஞானத்தை அருள் புரிவீர்.No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...