சிதம்பரம் - 0650. பனிபோ லத்துளி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பனிபோ லத்துளி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
இறவாமல் பிறவாமல்,
திரமான பொருவாழ்வைத் தருவாய்.

தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான


பனிபோ லத்துளி சலவா யுட்கரு
     பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப்

படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
     பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த்

தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
     சதிகா ரச்சமன் ...... வருநாளிற்

றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
     தளர்மா யத்துய ...... ரொழியாதோ

வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
     விகடா ருக்கிட ...... விடும்வேலா

விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
     மிகவே குட்டிய ...... குருநாதா

நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
     நிழலாள் பத்தினி ...... மணவாளா

நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
     நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பனி போலத் துளி சலவாய் உள் கரு
     பதின் மாதத்திடை ...... தலைகீழாய்ப்

படி மேவிட்டு உடல் தவழ்வார், தத்துஅடி
     பயில்வார், த்தியில் ...... சிலநாள்போய்,

தன மாதர்க் குழி விழுவார், தத்துவர்,
     சதிகாரச் சமன் ...... வருநாளில்,

தறியார், ல் சடம் விடுவார், ப்படி
     தளர் மாயத் துயர் ...... ஒழியாதோ?

வினை மாய, கிரி பொடி ஆக, கடல்
     விகடார் உக்கிட ...... விடும்வேலா!

விதியோனைச் சதுமுடி நால் பொட்டு எழ
     மிகவே குட்டிய ...... குருநாதா!

நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு
     நிழலாள், பத்தினி ...... மணவாளா!

நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு
     நிறைவே! பத்தர்கள் ...... பெருமாளே.
  
பதவுரை

         வினை மாயக் கிரி பொடியாக --- மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக,

     கடல் விகடார் உக்கிட விடும் வேலா --- கடலில் செருக்கு வாய்ந்த அசுரனாகிய சூரபதுமன் அழிந்து போக, வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      விதியோனைச் சதுமுடி நால் பொட்டுஎழ மிகவே குட்டிய குருநாதா --- பிரமதேவனை  அவனது நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதரே!

      நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா --- நினைத்துத் தியானிப்பவர்களுடைய சித்தத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளிநாயகியின் கணவரே!

       நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே --- இந்தப் பூமிக்கு செல்வம் போன்றதான புலியூர் என்னும் சிதம்பரத்தில் இருக்கும் நிறைந்த செல்வமே!

     பத்தர்கள் பெருமாளே --- பத்தர்களுக்கு உரிய பெருமையில் மிக்கவரே!

      பனி போலத் துளி --- பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம்

     சலவாயுள் கரு --- நீர்த் துளை வழியாய்ச் சென்று கரு தரித்து,

     பதின்மாதத்து இடை தலைகீழாய்ப் படிமேவிட்டு --- பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து,

      உடல் தவழ்வார் --- உடல் கொண்டு தவழ்பவராய்,

     தத்து அடி பயில்வார் --- தத்தித் தத்தி தளர்நடை பயில்பவராய்,

     உத்தியில் சில நாள் போய் --- மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர்,

      தனமாதர்க் குழி வீழ்வார் தத்துவர் --- மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தை விரைவில் தாவிச் செலவிடுவார்.

       சதிகாரச் சமன் வருநாளில் --- வஞ்சனை கொண்டவனாகிய இயமன் வருகின்ற அந்த நாளில்,

      தறியார் --- நிலைத்திருக்க முடியாதவராய்

     இல் சடம் விடுவார் --- தமக்கு வீடாகிய உடலை விடுவார்.

     இப்படி தளர் --- இந்த விதமாக உடலோடு உள்ளமும் தளர்ந்து ஒழிகின்ற

     மாயத் துயர் ஒழியாதோ --- மாயமான துயரம் அடியேனை விட்டு நீங்காதோ?

பொழிப்புரை 

      மாயைத் தொழிலில் வல்ல கிரவுஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரனாகிய சூரபதுமன் அழிந்து போக, வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

     பிரமதேவனை  அவனது நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதரே!

       நினைத்துத் தியானிப்பவர்களுடைய சித்தத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளிநாயகியின் கணவரே!

     இந்தப் பூமிக்கு செல்வம் போன்றதான புலியூர் என்னும் சிதம்பரத்தில் இருக்கும் நிறைந்த செல்வமே!

     பத்தர்களுக்கு உரிய பெருமையில் மிக்கவரே!

      பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் நீர்த் துளை வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி தளர்நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், மார்பகங்கள் உடைய பெண்கள் தரும் இன்பம் கருதி, காமக் குழியில் வீழ்பவராய், காலத்தை விரைவில் தாவிச் செலவிடுவார். வஞ்சனை கொண்டவனாகிய இயமன் வருகின்ற அந்த நாளில், நிலைத்திருக்க முடியாதவராய், தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக உடலோடு உள்ளமும் தளர்ந்து ஒழிகின்ற மாயமான துயரம் அடியேனை விட்டு நீங்காதோ?

விரிவுரை

பனி போலத் துளி சலவாய் உள் கரு பதின் மாதத்திடை தலைகீழாய்ப் படி மேவிட்டு உடல் தவழ்வார், தத்து அடி பயில்வார் ---

உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைப் பயன்களாகிய புண்ணிய பாவங்களை ஒளி உலகிலும் இருள் உலகிலும் அனுபவிக்கின்றன. வினைப்பயன் நுகர்ந்தபின், கலப்பான வினைப்பயனை நுகர்தற் பொருட்டு இறையாணையால் அவ்வுயிர்கள் மழை வழியாக இந்த மண்ணுலகத்தைச் சேர்கின்றன. காய் கனி மலர் நீர் தானியம் இவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து, அறுபது நாள் கருவுற்றிருந்து, பெண்ணிடம் சேர்கின்றன. அப்படி அக்கரு ஆணிடம் இருந்து பெண்ணிடம் சேர்கின்றபோது அது புல்லின் மீதுள்ள பனித் துளிபோன்ற சிறிய அளவுடையதாக இருக்கின்றது என்பதை அறுகு நுனி பனியனைய சிறிய துளிஎன்கின்றார் அடிகளார் திருவிடைமருதூர்த் திருப்புகழில்.

இருவினை இன்பத் துன்பத்து
     இவ்வுயிர் பிறந்து இறந்து
வருவது போவது ஆகும்,
         மன்னிய வினைப்ப லன்கள்
தரும்அரன் தரணி யோடு
         தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம
         பலன்களும் மறுமைக் கண்ணே.         --- சிவஞானசித்தியார்.

உயிர்கள்  முற்பிறவியிற் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறவியில் வரும் இன்பத்துன்ப நுகர்ச்சியால் மேலும் வினை ஏறுதலின், அதனால் மீளமீளப் பிறந்து இறத்தலும், சுவர்க்க நரகங்களில் சென்று மீள்தலும் கூடும். உடம்பும் வினைப்பயனும் சடம். ஆதலால், உடம்பு வினைப்பயனை எடுத்துக் கொள்ளாது. வினைப்பயனும் உடம்பைப் பொருந்த முடியாது. ஆகவே, உடம்பையும், அந்த உடம்பிற்கு உரிய வினைப்பயன்களையும் இறைவனே தனது ஆற்றலால் அருளைக் கொண்டு உயிருக்கு ஊட்டுவான்.

உடல் செயல் கன்மம் இந்த
         உடல்வந்த வாறு ஏதுஎன்னின்,
விடப்படும் முன் உடம்பின்
         வினைஇந்த உடல் விளைக்கும்,
தொடர்ச்சியால் ஒன்றுக்கு ஒன்று
         தொன்றுதொட்டு அநாதி வித்தின்
இடத்தினின் மரம் மரத்தின்
         வித்தும்வந்து இயையு மாபோல். --- சிவஞானசித்தியார்.

உடலைக் கொண்டு செய்யும் முயற்சியால் வினை உண்டாகும். இந்த உடல் வருவதற்குக் காரணம் எது என்றால், முன் பிறவியில் நாம் இறந்தபோது விடப்பட்ட, முன் உடம்பினால் செய்யப்பட்ட வினையே ஆகும். அந்த வினையே இந்த உடம்பை உண்டு பண்ணும். வித்தும் மரமும் ஒன்றுக்கு ஒன்று காரண காரியமாய் இருப்பினும், இறைவன் இரண்டில் ஒன்றைத்தான் முதலாவதாக உருவாக்கி இருக்கவேண்டும். அது மரமாகவே இருக்க வேண்டும். இது பற்றியே மணிவாசகனாரும், "விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய், விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்" என்றார்.

மேலைக்கு வித்தும் ஆகி
         விளைந்தவை உணவும்ஆகி
ஞாலத்து வருமா போல
         நாம்செய்யும் வினைகள் எல்லாம்
ஏலத்தான் பலமாச் செய்யும்
         இதம்அகி தங்கட்கு எல்லாம்
மூலத்தது ஆகி என்றும்
         வந்திடும் முறைமை யோடே. --- சிவஞானசித்தியார்.

உலகத்தில் உணவின் பொருட்டு விளைந்த கனி முதலானவைகள் உணவுமாய், மேலும் வித்துமாழ் வருவது போல, நான் செய்தேன் என்னும்முனைப்பால் செய்யப்படும் முயற்சியும், எக்காலத்திலும் செயல் வகையால் வினைக்கு ஈடாய் வரும் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவத்தை வினையின் பயன் என்று கருதாது, நான் செய்தேன் என்னும் கருத்து வகையால் கருதிச் செய்கின்ற போது, நல்வினை தீவினை என்னும் ஆகாமியத்தை அது உண்டு பண்ணும்.

இதம்அகி தங்கள் என்பது
         இகல்மனம் வாக்குக் காயத்து,
இதம்உயிர்க்கு உறுதி செய்தல்,
         அகிதம்மற்று அதுசெய் யாமை,
இதம்அகி தங்கள் எல்லாம்
         இறைவனே ஏற்றுக் கொண்டுஇங்கு
இதம்அகி தத்தால் இன்பத்
         துன்பங்கள் ஈவன் அன்றே.  --- சிவஞானசித்தியார்.

இதம் அகிதம் ஆகிய நல்வினை தீவினைகளின் இயல்பு என்னவென்றால்,  மனத்தால் நினைத்தல், வாக்கால் சொல்லுதல், உடம்பால் செயல்களைச் செய்தல் ஆகும். நல்வினையானது உயிருக்கு நன்மையை விளைக்கும். தீவினையானது உயிருக்கு துன்பத்தை விளைக்கும்.  இதம் செய்பவன், தனது மனத்தில் இதம் என்று கருதிக்கொண்டு செய்யும் காலத்தில், அவனை அறியாமல் அகிதம் வருவதெம் உண்டு. அவ்வாறே, அகிதம் செய்யும்போது இதம் வருவதும் உண்டு. அகிதம் செய்பவன் அதனை அகிதம் என்று எண்ணமாட்டான். இதம் இகிதம் என்னும் இரண்டையும் அறிபவன் முற்றறிவு உடையவனாகிய இறைவனே ஆகும். இறைவனே, நல்வினை தீவினைக்கு ஏற்ற இன்ப துன்பம் ஆகிய பயனைத் தருபவன் என்று அறிக.
  
உலகுஉடல் கரணம் காலம்
         உறுபலம் நியதி செய்தி
பலஇவை கொண்டு கன்மம்
         பண்ணுவது உண்பது ஆனால்
நிலவிடாது இவைதாம் சென்று
         நினைந்துஉயிர் நிறுத்திக் கொள்ளாது
அலகுஇலா அறிவன் ஆணை
         அணைத்திடும் அருளினாலே.  --- சிவஞானசித்தியார்.

உயிர்கள் சிற்றறிவு உடையன. எனவே, முற்றறிவும் பெருங்கருணையும் உடைய முதல்வனுக்கு வினைப்பயனைக் கூட்டுவித்தல் கடமை ஆகின்றது. உயிர்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் உடம்பு. அந்த உடம்பில் பொருந்திய கருவிகள் என்பன, வினை செய்வதற்கு உரிய காலம், வினை செய்யப்படுகின்ற பொருள், அந்தப் பொருளைக் கூட்டுகின்ற நியதி, செய்யும் செயல், செய்யும் உடல், செய்வதால் உறுகின்ற பலன் ஆகும். இவை தாமே வந்து உயிரைக் கூடமாட்டா. கருவிகள் இன்றி, அறிவு தொழில்படாத உயிரானது இவைகளைத் தானே கருதி நிறுத்திக் கொள்ளாது.

எனவே செய்வான், செய்வினை, வினைப்பயன், அதனை ஊட்டுவான், என்ற நான்கினையும் நன்கு உரைப்பது சைவ நூல் ஒன்றேயாகும்.

செய்வினையும், செய்வானும், அதன்பயனும், கொடுப்பானும்,
மெய்வகையால் நான்குஆகும், விதித்த பொருள் எனக் கொண்டே,
இவ் இயல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை என,
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
                                                                                           --- பெரியபுராணம்.

ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும், இங்கு ஒன்றோடு ஒன்றை
மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்ற வினை
காட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும், ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே.   --- பட்டினத்தார்.

அங்ஙனம் எய்தும் போது அதன் வடிவம் அறுகம்புல்லின் மீதுள்ள பனித்துளி போன்ற சிறிய அளவே ஆகும். அத்துணைச் சிறிய அளவாக இருந்த ஒன்று இத்துணைப் பெரிய உடம்பாக ஆகின்றது.

பனியின் விந்துளி போலவே கருவின்உறும்
அளவில், அங்குஒரு சூசமாய், மிளகு துவர்
பனை தெனங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப்

பருவமும் தலை கீழதாய் நழுவி, நிலம்
மருவி, ஒன்பது வாசல் சேர் உருவம் உள
பதுமையின் செயல் போலவே, வளி கயிறின் ...... உடன்ஆடி

மனவிதம் தெரியாமலே மலசலமொடு,
உடல் நகர்ந்து, அழுது ஆறியே, அனைமுலையின்
மயம் அயின்று, ரு பாலனாய் இகம்உடைய ...... செயல்மேவி

வடிவம் முன் செய்த தீமையாலெயும், உனையும்
அற மறந்து, க மீதுபோய் தினதினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனிஉனது ...... கழல்தாராய்..    ---  திருப்புகழ்.

பனியின் துளி போல ஆணிடம் இருந்து வெளிப்படும் சுக்கிலமானது, பெண்ணின் குறி எனப்படும் சலவாயில் வழியாகச் சென்று, கருவில் உருவாகி, பத்து மாதங்கள் அங்கு இருந்து வளர்ந்து,  பின் தலைகீழாக, தாயின் வயிற்றில் இருந்து  வெளிப்பட்டு, இந்த உலகத்தில் வந்து பிறந்து, சிறிது சிறிதாக வளர்ந்து, தவழ்ந்து, பின் தளர்நடை பழகி வளர்ச்சி அடையும்.
  
உத்தியில் சில நாள் போய் ---

மழலைமொழி பேசிப் பயின்று, உண்ட உணவால் உடல் வளர்ந்து, குழந்தைப் பருவம் கழிந்து, வாலப் பருவத்தை அடைந்து, கல்வியையும், வித்தைகளையும் பயின்று, சில நாட்கள் கழிந்த பின்னர்,

தனமாதர்க் குழி வீழ்வார் தத்துவர் ---

காலம் தவறாமலும், விரதம் முதலியவைகளை அனுட்டிக்காமலும், கதவு அடைத்துக் கொண்டு சுவையுள்ளவைகளை வயிறு புடைக்க, விலாப் புடைக்கத் தின்று உடலை வளர்ப்பதனால், அவ் உடம்பு மினுமினு என்று விளக்கெண்ணெய் தடவப் பெற்றது போல் பளபளப்பு உடையதாகின்றது. அன்றியும் நல்லோர்கள் நட்பு கொள்ளாமல் வீணர்களுடன் கூடி மகிழ்வர். காம உணர்வு மேலிட்டு பெண்கள் என்னும் காமக் குழியில் விழுந்து, அவர்களோடு கூடி மகிழ்ந்து, ஈட்டிய பொருளை எல்லாம் இழந்து தவிப்பார்கள்.
"மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சி எனும் வெய்ய வினைக் குழியில் வீழ்ந்ததுண்டு" என்றும் "சீர்க்கரையின் ஏறாப் பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் ஆறாப் புண்ணுக்கே அடிமை நான்" என்றும் புகன்றார் வள்ளல் பெருமான்.

சதிகாரச் சமன் வருநாளில் தறியார் ---

இப்படியே வாழ்நாள் கழிந்து, வஞ்சனை கொண்டவனாகிய இயமன் வருகின்ற அந்த நாளில், உயிரை நிலைபெறச் செய்ய முடியாதவராய் தவிப்பார். அதுவரையில் சதம் என்று நம்பி இருந்த எல்லாரும் கைவிட்டு அகல்வார்கள்.

வெம்பும் உயிருக்கு ஓர்உறவாய்
    வேளை நமனும் வருவானேல்,
தம்பி தமையன் துணையாமோ?
    தனையர் மனைவி வருவாரோ?
உம்பர் பரவும் திருத்தணிகை
    உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல்,
   துக்க உடலை எடுத்தேனே.            ---  திருவருட்பா.

.....       .....       .....       .....       ஈன்றோர்கள்
நொந்தால் உடன்நின்று நோவார், வினைப்பகைதான்
வந்தால், அதுநீக்க வல்லாரோ? - வந்து ஆடல்

உற்றசிறார் நம்அடையாது ஓட்டுகிற்பார், தென்திசைவாழ்
மற்றவன் வந்தால் தடுக்க வல்லாரோ? - சிற்றுணவை

ஈங்குஎன்றால் வாங்கி இடுவார், அருள் அமுதம்
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ? - தீங்கு அகற்றத்

தூண்டா மனை ஆதிச் சுற்றமெலாம் சுற்றிஇட
நீண்டாய், அவர் நன்னெறித் துணையோ? - மாண்டார்பின்

கூடி அழத் துணையாய்க் கூடுவார், வன் நரகில்
வாடி அழும்போது வருவாரோ? - நீடிய நீ

இச்சீவர் தன் துணையோ? ஈங்கு இவர்கள் நின்துணையோ?
சீச்சீ இது என்ன திறம் கண்டாய், - இச்சீவர்

நின்னை வைத்து முன்சென்றால் நீ செய்வது என்?அவர்முன்
இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர்? - நின்இயல்பின்

எத்தனைதாய், எத்தனைபேர், எத்தனைஊர், எத்தனைவாழ்வு
எத்தனையோ தேகம் எடுத்தனையே, - அத்தனைக்கும்

அவ்வவ் இடங்கள்தொறும் அவ்வவரை ஆண்டாண்டுஇங்கு
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ? - அவ்விதத்தில்

ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல், வரை
இன்றே துறத்தற்கு இசையாயோ? - நின்று ஓரில்

தாய் யார், மனை யார், தனயர் ஆர், தம்மவர் ஆர்,
நீ யார், இதனை நினைந்திலையே, - சேய் ஏகில்

ஏங்குவரே என்றாய், இயமன் வரின் நின் உயிரை
வாங்கி முடி இட்டு, கத்தில் வைப்பாரோ? - நீங்கி இவண்

உன்தந்தை தன்தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன், நீ
என்தந்தை என்று உரைப்பது எவ்வாறே? - சென்று பின்னின்

தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவள் எனில்
என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்

நட்பு அமைந்த நன்னெறி நீ நாடா வகை தடுக்கும்
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே, - நட்புடையாய்

எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்தது நீ என் நினைந்தோ....     --- திருவருட்பா.

இல் சடம் விடுவார் ---

உயிர் இருப்பதற்கு வாய்த்த இடம் என்று கருதி இருந்த வீடாகிய இந்த உடலை இயமன் வந்த போது விட்டுவிடுவார்.

இப்படி தளர் மாயத் துயர் ஒழியாதோ ---

இந்த விதமாக உடலோடு உள்ளமும் தளர்ந்து ஒழிகின்ற
மாயமான துயரம் எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இது நீங்க வேண்டுமானால், உலகப் பற்றுக்களை அறவே ஓழித்து, இறைவன் திருவடி ஒன்றையே பற்ற வேண்டும் என்பதை உணர்ந்த பக்குவ ஆன்மாக்கள் கதறும் நிலை இது. இதனையே நமது சுவாமிகள் இங்கே காட்டினார்.

வினை, மாயக் கிரி பொடியாக, கடல் விகடார் உக்கிட விடும் வேலா ---

மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரனாகிய சூரபதுமன் அழிந்து போக, வேலாயுதத்தை விடுத்து அருளியவர் முருகப் பெருமான்.

இனி,  உயிர்களின் வினையானது மாயும்படியாகவும், மாயையிலே வல்ல கிரவுஞ்ச மலையும், கடலிலே நின்ற சூரபதுமன் அழிந்து போகவும் வேலாயுத்தத்தை விடுத்து அருளியவர் முருகப் பெருமான் என்றும் கொள்ளலாம். "வினை ஓட விடும் கதிர்வேல்" என்று கந்தர் அனுபூதியிலும், "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எல்லாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பிறிதொரு திருப்புகழிலும் சுவாமிகள் கூறியருளியதால், வினையைப் பொடியாக்கியது. மாயையிலே வல்ல கிரவுஞ்ச மலையையும் பொடியாக்கியது.

விதியோனைச் சதுமுடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா ---

பிரமதேவனை  அவனது நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டியவர் முருகப்பெருமான். சிவபரம்பொருளுக்கு குருவாக இருந்து அருள் உபதேசம் புரிந்தவரும் அவரே.

எவர்தமக்கு ஞானகுரு ஏகாம்பரேசர்,
அவர்தமக்கு ஞானகுரு யாரோ? - உவரியணை
கட்டினோன் பார்த்திருக்கக் காதலவன் தலையில்
குட்டினோன் தானே குரு.                ---  காளமேகம்.

வனஜ ஜாதனை அன்று முனிந்தற
வலியபார விலங்கிடு புங்கவன்           ---  பூதவேதாள வகுப்பு.

அயனைக் குட்டிச் சிறை புரிந்த வரலாறு

குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்து அருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கு இன்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறு அன்று. மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.

கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.

பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றனன்.

முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.

பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.

“நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.

சதுர்முகன் இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று உடைக் குமரவேள், நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,ன்று உரைத்தான். ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வதுஇத் தன்மை யதோ?னச் செவ்வேள்
 குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”           ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
  
அயனைக் குட்டிய பெருமாளே”       --- (பரவை) திருப்புகழ்.

ஆரணன் தனை வாதாடி ஓர்உரை
 ஓதுகின்றென, வாராது எனா, அவன்
 ஆணவம் கெடவே காவலாம் அதில்      இடும்வேலா--- (வாரணந்) திருப்புகழ்.

வேத நான்முக மறையோனொடும் விளை-
     யாடியே, குடுமியிலே கரமொடு
     வீற மோதின மறவா!...                        --- (காணொணாதது) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின் உண்மை -- புகன்றிலையால்,
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”           --- கந்தர் கலிவெண்பா.


நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா ---
  
நினைத்துத் தியானிப்பவர்களுடைய சித்தத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய அகிலாண்ட நாயகியாகிய வள்ளிபிராட்டியின் கணவர் முருகப் பெருமான். அவர் நினைத்தார் சித்தத்து உறைபவர். தன்னைப் பணிகின்ற அடியவர்களது சிந்தையே தனக்கு உரிய மெய்ப்பொருள் என்று கொண்டவர்.

நினைப்பவர் மனம்கோயிலாக் கொண்டவன்..  --- அப்பர்.

போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி... --- அப்பர்.
  
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்து இருந்தேன்,
வந்தாய், போய்அறியாய், மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே. --- சுந்தரர்.

மைஆர் கண்டத்தினாய்! மத மாவுரி போர்த்தவனே!
பொய்யாது என்உயிருள் புகுந்தாய், இன்னம் போந்து அறியாய்,
கையார் ஆடு அரவா! கடவூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயா! என்அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே. --- சுந்தரர்.

கடலின்திரை அதுபோல்வரு கலக்கம் மலம் அறுத்து, ன்
உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்,
சுடரும் சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்தான் செய்த படிறே.   --- திருவாசகம்.
  
நெற்றியில் கண்என் கண்ணின் நின்று அகலா,
    நெஞ்சினில் அம்சிலம்பு அலைக்கும்
பொன் திருவடி என் குடிமுழுது ஆளப்
    புகுந்தன, போந்தன இல்லை,
மற்று எனக்கு உறவுஎன்? மறிதிரை வடவாற்
    றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
    இராசரா சேச்சரத்து இவர்க்கே.            --- திருவிசைப்பா.

வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம் என்க, - ஞானத்தான்,
முன் நஞ்சத்தால் இருண்ட மெய் ஒளிசேர் கண்டத்தான்,
என் நெஞ்சத்தான் என்பன் யான்.     --- அற்புதத் திருவந்தாதி.
    
வந்தாய். என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை,
எந்தாய்! போய் அறியாய், இதுவே அமையாதோ?-
கொந்துஆர் பைம்பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா! உன்னை என்றும் மறவாமை பெற்றேனே.    --- பெரிய திருமொழி.   

அனவரதமும் அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி
செந்திலில் அதிபதி என ஒரு பொரு திறல் முருகனை
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே..---  தேவேந்திரசங்க வகுப்பு. 

கருத்துரை

முருகா! பிறந்து இறந்து உழலாமல், பிறவா நிலையருளி, பேரின்பத்தில் வைத்து அருள்வாய்.







No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...