திருவாரூர் - 4





சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுவாமிகள், தில்லையில் கூத்தப்பெருமானை வணங்கியபின் "ஆரூரில் நம்பால் வருக" என்று இறைவன் அருளியது கேட்டுப் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருவாரூர் சென்று அங்கு, ஆரூர்ப்பெருமான் ஆணையின்படி அன்பர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்லும்பொழுது அவர்களை நோக்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. தடுத். புரா. 123)

தடுத்தாட்கொண்ட புராணப் பாடல் எண் : 268/122
மங்கல கீதம்பாட மழை நிகர் தூரியம் முழங்கச்
செங்கயல் கண் முற்று இழையார்  தெற்றி தொறும் நடம்பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம் உற வந்து எதிர்கொண்டார்.

         பொழிப்புரை : மங்கலம் பொருந்திய இசைப்பாடல்கள் பாடவும், மேக முழக்கை ஒத்த பேரிகை முதலிய இயங்கள் முழங்கவும், சிவந்த கயல்மீன் போலும் கண்களையுடைய செய்தொழில் முற்றிய அணிகளை அணிந்த மகளிர்கள் நடனம் செய்தற்குரிய மேடைகள் தோறும் நடனம் செய்யவும், நம் தலைவனாகிய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவாரூரில் வாழும் அடியவர்கள் நம்பியாரூரரை முற்பட்டு விளங்கும் நகர்ப்புறத்துள்ள நீண்ட மதிலின் வாயில் புறத்தே வந்து எதிர்கொண்டார்கள்.


பாடல் எண் : 269/123
வந்துஎதிர் கொண்டு வணங்கு வார்முன்
         வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து,
சிந்தை களிப்புற வீதி யூடு
         செல்வார், திருத்தொண்டர் தம்மை நோக்கி,
"எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
         எம்மையும் ஆள்வரோ? கேளீர்" என்னும்
சந்த இசைப்பதி கங்கள் பாடித்
         தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.

         பொழிப்புரை : தம்மை எதிர்கொண்டு வணங்கும் அடியவர்களுக்கு முன், நம்பியாரூரரும் கரங்குவித்து வணங்கி, அவர் எதிர் வந்து மனமகிழ்வோடு திருவீதியினிடத்துச் செல்லுகின்றவர்,  அவ்வடியவர்களைப் பார்த்து, `எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்` (தி.7 ப.73 பா.7)என்னும் வினாவுரையாக அமைந்த சந்தம் நிறைந்த இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளி, தம் முதல்வராகிய புற்றிடங் கொண்டார் திருக்கோயிலின் திருவாயிலை அடைந்தார்.

         இதுபொழுது பாடியருளிய திருப்பதிகம் `கரையும் கடலும்` எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த (தி.7 ப.73) பதிகமாகும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவனைப் பல பெயர்களால் குறித்து, `அவர் இருப்பதும் ஆருர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்` எனும் நிறைவுடையதாகப் பாடியுள்ளார். இப்பதிகத்தின் பதினோராவது பாடல், (தி.7 ப.73 பா 11),

"எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல்ஆ ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர் தாமே."

என்பதாகும். இத்திருப்பாடலின் முதல் அடியையே சேக்கிழார் எடுத்து மொழிந்துள்ளார். இப்பாடலின் நான்காவது அடியில் `சந்தம் இசையொடு வல்லார்` எனவரும் தொடரே `சந்த இசைப் பதிகங்கள் பாடி` என ஆசிரியர் அருளுவதற்கும் காரணமாயிற்று. இவ்வாறே, `திருவாரூரான் வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ?` (தி.3 ப.45 பா.5) என ஞானசம்பந்தரும், `நமக் குண்டுகொலோ... தொண் டர்க்குத் தொண்டராம் புண்ணியமே` (தி.4 ப.101 பா.1) என அப்பர் அடிகளும் இத்திருப்பதிக்கு எழுந்தருளியபொழுது வினாவுரைப் பதிகம் பாடியிருப்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 073    திருவாரூர்                   பண் - காந்தாரம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான், ஒருவன், உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன், வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.

         பொழிப்புரை : தொண்டீர் , நிலம் , கடல் , மலை முதலாய எவ்விடத்திலும் , காலை , மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும் , ஒப்பற்றவனும் , உருத்திர லோகத்தை உடையவனும், மலையின் இளமையான மகளுக்குக் கணவனும், தேவர், அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 2
தனியன்என்று எள்கி அறியேன், தன்னைப் பெரிதும் உகப்பன்,
முனிபவர் தம்மை முனிவன், முகம்பல பேசி மொழியேன்,
கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.

         பொழிப்புரை : தொண்டீர் , இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை, யான், `தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன்` என்று இகழ்ந்தறியேன்; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன்; அவனை வெறுப்பவரை வெறுப்பேன்; மனத்தோடு அன்றி முகத்தால் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன்; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 3
சொல்லில் குலாஅன்றிச் சொல்லேன், தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன், கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் யாதேனும் ஒன்று சொல்வதாயின் , எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி , உறவினர்க்கும் உதவுவேனல்லேன் ; அத் துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன் . கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும் , அரிய வேதங்களும் , ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளி இருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 4
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , ஒழுகும் நெறியிலும் , பொருள் களை அறிகின்ற அறிவிலும் , பிறரோடு இணங்குகின்ற இணக்கத் திலும் , சொல்லுகின்ற நீதியிலும் ; மிக்க பொல்லாங்குடையேன் ; பிறரை வருத்துதலையும் , பிரித்தலையும் விரும்புவேன் ; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன் ; பிறையையும் , பாம்பையும் , நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 5
நீதியில் ஒன்றும் வழுவேன், நிர்க்கண் டகம் செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன், வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்
சோதியில் சோதிஎம் மானை, சுண்ணவெண் நீறு அணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , நீதியினின்றும் சிறிதும் வழு வேன் ; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன் ; அந்தணர்களை வெறுக்கமாட்டேன் ; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன் . ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும் , எங்கட்கு யானை போல்பவனும் , பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 6
அருத்தம் பெரிதும் உகப்பன், அலவு அலையேன், அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன், உற்றவர்க்கும் துணை அல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன், புற்றுஎடுத் திட்டு இடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , பொருளையே பெரிதும் விரும்புவேன் ; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன் ; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன் ; உறவாயினார்க்கும் துணைவனல்லேன் ; இன்ன பலவாற்றால் , பொருந்துவதாய பண்பு எனிலோ, ஒன்றேனும் இல்லாதேன் ஆயினேன். புற்றைப் படைத்து , அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 7
சந்தம் பல அறுக்கில்லேன், சார்ந்தவர் தம் அடிச் சாரேன்
முந்திப் பொருவிடை ஏறி, மூவுலகும் திரிவானே,
கந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன் ; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன் ; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும் , கண்ணியையும் அணிந்தவனும் , தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை , போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும் , அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது , திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 8
நெண்டிக் கொண்டேயும் கலாய்ப்பேன், நிச்சயமே இது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டுஅலால் பேசேன், மெய்ப்பொருள் அன்றி உணரேன்
பண்டுஅங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன் ; அதனால் , அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களையன்றிச் சொல்லமாட்டேன் ; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன்; இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு, இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 9
நமர்பிறர் என்பது அறியேன், நான்கண்ட தேகண்டு வாழ்வேன்,
தமரம் பெரிதும் உகப்பேன், தக்கவாறு ஒன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , யான் , இவர் நம்மவர் என்பதும் , அயலவர் என்பதும் அறியமாட்டேன் ; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன்; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன் ; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன் . முருகனும் , திருமாலும் , பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 10
ஆசை பல அறுக்கில்லேன், ஆரையும் அன்றி உரைப்பேன்,
பேசில் சழக்குஅலால் பேசேன், பிழைப்பு உடையேன்மனம் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன், ஒலிகடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

         பொழிப்புரை : தொண்டீர் , எனக்கு உள்ள அவாவோ பல; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன்; அவ்வவாவினால் யாவரிடத்தும் வெகுளி தோன்றுதலின், எவரிடத்தும் பகைத்தே பேசுவேன்; ஒன்று சொல்லின், பொய்யல்லது சொல்லேன்; எனினும் புகழை மிக விரும்புவேன்; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன். ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .


பாடல் எண் : 11
எந்தை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயும்திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளன்,
மந்தம் முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம், இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர் தாமே

         பொழிப்புரை: வெற்றித்திருப் பொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழங்குவதும், வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன் ` எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ` என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை , அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர் .

திருச்சிற்றம்பலம்

------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு

         திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து வீற்றிருக்கும் திருநாவலூரர் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் செல்லும் பொழுது தேவாசிரிய மண்டபத்துள்ள "அடியவர்களுக்கு அடியேனாகப் பண்ணும் நாள் எந்நாள்" என்று பெருமான் திருவடிமலர்களைப் பரவிச்சென்றார். பெருமான் அடியவர்கள் வழித்தொண்டை உணர நல்கி, அவர் தம் பெருமையையும் கூறி அவர் தம்மைப் பாடுக, என அருளியபொழுது, 'யான் எவ்வாறு பாடுவேன்' என்றுகேட்டு, இறைவன், ''தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' என்று அடியெடுத்துக் கொடுக்க, ஒவ்வொரு நாயனாருக்கும் தனித்தனியே ''அடியேன்'' என்று சொல்லிப் பாடியருளியது இத்திருப்பதிகம். நாயன்மார் வரலாறுகளனைத்தும் இதில் தொகையாக அமைந்துள்ளன.


தடுத்தாட் கொண்ட புராணப் பாடல் எண் : 335/189
கண்ணுதல் கோயில் தேவா சிரியனாம் காவ ணத்துள்
விண்ணவர் ஒழிய மண்மேன் மிக்கசீர் அடியார் கூடி
எண்இலார் இருந்த போதில் "இவர்க்கு யான் அடியான்ஆகப்
பண்ணுநாள் எந்நாள்" என்று பரமர்தாள் பரவிச் சென்றார்.

         பொழிப்புரை : (திருக்கோயிலை அடைந்த நம்பியாரூரர்) நெற்றிக்கண்ணையுடைய இறைவனின் பூங்கோயிலின் முன் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் வாயிலில் கூடியிருக்கும் விண்ணவர்கள் ஒருபுறம் நிற்க, இந்நிலவுலகில் தோன்றிச் சீர்மை மிக விளங்கும் அடியவர்கள் எண்ணற்றவர்களாய்க் குழுமி இருந்தபொழுது, இவர்கட்கெல்லாம் என்னை அடியவன் ஆகுமாறு செய்கின்றநாள் எந்நாளோ எனும் கருத்துடன், இறைவனின் திருவடிகளை வழிபட்ட வண்ணம் செல்வாராயினார்.


பெ. பு. பாடல் எண் : 336/190
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர,
கொடிநெடுங் கொற்ற வாயில் பணிந்து, கை குவித்துப் புக்கார்,
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்குஎதிர் காணக் காட்டும்-
படி, எதிர் தோன்றி நிற்க, பாதங்கள் பணிந்து பூண்டு.

         பொழிப்புரை : இவ்வடியவர்களுக்கு அடியனாவேன் என்னும் அன்பு மீதூரக் கொடிகளையுடைய நெடிய வெற்றி பொருந்திய உள்வாயிலிலே பணிந்து, கைகளைத் தலைமேல் வைத்துக் கூப்பிய வண்ணம், திருக்கோயிலின் உள்ளே நம்பியாரூரர் புகுந்தார். அது பொழுது நறுமணம் மிக்க அழகிய கொன்றையை அணிந்தவராய தியாகேசுவரரும், அவர் முன் வணங்கி மகிழுமாறு எதிர்காட்சி கொடுத்து நிற்க, அப்பெருவடிவைக் கண்டு வணங்கியவராய்.

பெ. பு. பாடல் எண் : 337/191
மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்தும் அளித்து எதிர் நின்றன.

         பொழிப்புரை : நிலையான பெருந்திருவாம் பரம்பொருளைத் தம் உட்கொண்டு நிற்கும் நான்மறைகளாகிய வண்டுகள் நெருங்கி ஒலிக்க, அன்பால் நினைவார்தம் உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற நல்ல, பெரிய, மேலாய ஆனந்தம் என்னும் நல்ல தேனைப் பெறத் தகுதியில்லாத அடியவனிடத்தும் பெறுமாறு வழங்கி எதிர் நிற்கின்றன.


பெ. பு. பாடல் எண் : 338/192
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின,
காலன் ஆருயிர் மாளக் கறுத்தன,
மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை
சீல மாக வருடச் சிவந்தன.

         பொழிப்புரை : (இவ்வாறு எதிர்நின்று காட்சிஅளிக்கும் திருவடிகளே) உலகுயிர்கள் உய்யுமாறு ஐந்தொழில் பெருங்கூத்தைத் திருஅம்பலத்தில் ஆடின. இயமனின் உயிர்செலச் சினந்தன. மாலை அணிந்த கூந்தலையுடைய இமயப் பெருமலையின் தலைவியான உமையம்மையார் தம் சிவந்த கைகள் மனம் குளிர வருடச் சிவந்தன.


பெ. பு. பாடல் எண் : 339/193
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன,
வேதி யாதவர் தம்மைவே திப்பன,
சோதி யாய்எழும் சோதியுட் சோதிய,
ஆதி மால்அயன் காணா அளவின.

         பொழிப்புரை : (இத் திருவடிமலர்களே) நெறிதவறாது நிற்கும் அருந்தவம் உடையவர்களின் நெஞ்சில் பொலிவு பெற்று விளங்குவன. உலகியலினின்றும் வேறுபட்டு அருளியலைத் தலைப்படாத அறியாமை உடையவர்களையும் அறிவு விளங்கச் செய்வன. உலகிற்கு ஒளிதரும் பொருள்களுக்கெல்லாம் ஒளிதந்து நிற்பன. ஒரு கால எல்லையுள் பட்டு நிற்கும் திருமாலும் அயனும் காணமுடியாத அமைவினையுடையன.


பெ. பு. பாடல் எண் : 340/194
வேத வாரணம் மேற்கொண்டு இருந்தன,
பேதை யேன்செய் பிழைபொறுத்து ஆண்டன,
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன,
பூத நாதநின் புண்டரீ கப்பதம்.

         பொழிப்புரை : உயிர்கட்குத் தலைவராக விளங்கும் பெருமானின் திருவடித் தாமரைகளே, நான்மறைகளாகிய யானையின் மீது நின்று இலங்குவன. அறியாமையுடைய அடியவனின் செய்த பிழைகளைப் பொறுத்து ஆண்டன. இனி வரக்கடவனவாகிய பிழைகளையும் வாராமல் தடுத்தற்கு முன்நிற்பன.


பெ. பு. பாடல் எண் : 341/195
இன்னவாறு ஏத்து நம்பிக்கு, ஏறு சேவகனார் தாமும்
அந்நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி,
மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கி,
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.

         பொழிப்புரை : இவ்வாறு போற்றுகின்ற நம்பியாரூரருக்கு ஆனேற்றின் மீது எழுந்தருளியிருக்கும் இறைவனும், அந்நிலையில் அவர் வேண்டும் பொருளை அவர்க்கு அருள் செய்வதற்காக, நிலைபெற்ற சிறப்பமைந்த அடியவர்கள் வழிவழியாகச் செய்துவரும் திருத்தொண்டின் திறன்களை உணரும் உணர்வை அறியச் செய்து, மேலும் அவர்களின் பெருமைகளைத் தாமே அருளிச் செய்வாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 342/196
"பெருமையால் தம்மை ஒப்பார், பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார், ஊனமேல் ஒன்றும் இல்லார்,
அருமையாம் நிலையில் நின்றார், அன்பினால் இன்பம் ஆர்வார்,
இருமையும் கடந்து நின்றார், இவரை நீ அடைவாய்" என்று.

         பொழிப்புரை : அடியவர்கள் தம் பெருமையினால் தமக்குத் தாமே ஒப்பாவர். இடைவிடாது எம்மை நினைந்து உருகுதலால் எம்மைப் பெற்றவர். எம்மோடு ஒருமைப்பட நிற்றலால் உலகை வெல்வர். அதனால் மேல் வரக்கடவ துன்பங்கள் எவையும் இல்லார். பிறர் எவரும் நிற்றற்கரிய நிலையில் நிற்பவர்கள். அன்பின் நிறைவால் இன்பத்தையே நிறையத் துய்த்து வருபவர்கள். இம்மை மறுமைகளைக் கடந்து இனிய நிலையைப் பெற்றவர்கள். இவ்வியல்பினராய இவ் வடியவர்களை நீ அடைவாயாக.


பெ. பு. பாடல் எண் : 343/197
நாதனார் அருளிச் செய்ய, நம்பியாரூரர் "நான்இங்கு
ஏதம் தீர் நெறியைப் பெற்றேன்" என்று, எதிர் வணங்கிப் போற்ற,
"நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து, நீ நிறைசொன் மாலை
கோதிலா வாய்மையாலே பாடு"என அண்ணல் கூற.

         பொழிப்புரை : எவ்வுயிர்க்கும் தலைவராய பெருமான் இவ்வாறு அருளிச் செய்ய, நம்பியாரூரரும் நான் இங்குக் குற்றத்தினின்றும் நீங்கும் நெறியை அடையப் பெற்றேன், என்று எதிர் வணங்கிப் போற்றி நின்றார். அதுபொழுது `நீ முறைமையாக இவர்களை வணங்கி நிறைந்த சொல்மாலையைக் குற்றம் இல்லாத உண்மைத் தன்மையால் பாடுவாயாக` என்று பெருமானும் அருளிய அளவில்.


பெ. பு. பாடல் எண் : 344/198
தன்னைஆள் உடைய நாதன் தான்அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர்,
"இன்னவாறு இன்ன பண்புஎன்று ஏத்துகேன்? அதற்கு யான்ஆர்?
பன்னு பாமாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்" என்ன.

         பொழிப்புரை : தம்மை அடிமையாகக் கொண்ட பெருமான் இங்ஙனம் அருளிச்செய்த ஆணையைக் கேட்டவராய் அப் பெருமானைத் தலையால் வணங்கி நின்ற நம்பிகள், அவ்வடியவர்களை இவ்வாறு தான் பாட வேண்டும் என்பதையோ இத்தகைய பண்புகளை அறிந்துதான் பாடவேண்டும் என்பதையோ அறியாத நிலையில் எவ்வாறு பாடுவேன்? அதற்கு யான் என்ன தகுதி உடையேன்? ஏதும் அறியாத எனக்கு அவ்வடியவர்களைப் பாடும் பாங்கினை அருளிச் செய்ய வேண்டும் என வேண்ட.


பெ. பு. பாடல் எண் : 345/199
தொல்லை மால் வரை பயந்த தூயாள் தன் திருப்பாகன்,
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறைஅளித்த திருவாக்கால்,
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என்று"
எல்லையில்வண் புகழாரை, "எடுத்து இசைப்பா மொழி" என்றார்.

         பொழிப்புரை : பழமையும், பெருமையும் வாய்ந்த இமைய மலையில் தோன்றிய தூய உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட இறைவரும், இவ்வுயிர்கள் துன்பம் நீங்க நான்மறைகளை வழங்கியருளிய திருவாக்கால், `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` என்று தொடங்கி எல்லையற்ற பெரும் புகழையுடைய அடியவர்களை எடுத்துப் போற்றிப் புகழ்மாலை பாடுவாயாக என அருள் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 346/200
மன்னுசீர் வயல் ஆரூர் மன்னவரை, வன்தொண்டர்
சென்னிஉற அடிவணங்கி, திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னம் மால் அயன்அறியா முதல்வர்தாம் எழுந்துஅருள,
அந்நிலை கண்டு, அடியவர்பால் சார்வதனுக்கு அணைகின்றார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற சிறப்பினைப் பொருந்திய வயல்கள் நிறைந்த திருவாரூர்ப் பெருமானின் திருவடிகளை நம்பியாரூரர் தம் தலையுற வணங்கி, இறைவனின் திருவருளை உளம் கொண்ட நிலையில், முன்பு ஒருமுறை மாலும், அயனும் அறியவாராத இறைவன் மறைந்தருள, அதைக் கண்ட நாவலூரர் தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருக்கும் அடியவர்களிடத்துச் சென்று சேர்வாராய்.


பெ. பு. பாடல் எண் : 347/201
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுது, அன்பு
சேரத் தாழ்ந்து எழுந்து, அருகு சென்று, எய்தி நின்று, அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப் பதிகம் அருள்செய்தார்.

         பொழிப்புரை : சென்ற ஆரூரர் தொலைவில் நின்றே அவ்வடியவர் திருக்கூட்டத்தைப் பலமுறை வணங்கியும், அன்பு மீதூரத் தாழ்ந்து எழுந்தும் நின்று, பின்பு அவ்வடியவர் அருகில் சென்று நின்று, எஞ்ஞான்றும் அழியாத வீரமுடைய அவ்வடியவர்கள் ஒவ்வொரு வரையும் தனித்தனியாக அவரவர்தம் திருப்பெயரையும் சொல்லி, இவருக்கு அடியேன், இவருக்கு அடியேன் என்றும், பின் அவர்க்கு வேறாகப் பல அடியவர்களைத் தொகுதியாய்க் குறித்து, அவ்வடியவர்களுக்கும் அடியேன் என்றும் போற்றியும், மேன்மேலும் பெருகி எழுகின்ற அன்பினால் `திருத்தொண்டத் தொகை` எனும் பெயருடைய திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 348/202
தம்பெருமான் கொடுத்தமொழி முதலாக, தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகம்
உம்பர்பிரான் தான்அருளும் உணர்வுபெற, உலகுஏத்த
எம்பெருமான் வன்தொண்டர் பாடிஅவர் எதிர்பணிந்தார்.

         பொழிப்புரை : தம் இறைவன் எடுத்துக்கொடுத்த தொடர் மொழியையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய், அதன் பொருள்வகையால் திருத்தொண்டத் தொகை எனப் பெயர் பெற்றிருக்கும் அத் திருப்பதிகத்தை, தேவர்களுக்கும் தலைவனாய இறைவன் அருளும் அருள் உந்த, இவ்வுலகுயிர்கள் அனைத்தும் ஏற்றுப் போற்றுமாறு எம் தலைவராகிய ஆரூரர் அருளிச் செய்து அத் திருக்கூட்டத்தின் திருமுன்னிலையில் வணங்கினார்.

         இதன் எல்லாத் திருப்பாடல்களிலும், இறுதிக்கண் உள்ள, 'ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆள்' என்றதனை முதலில் வைத்து, 'திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு ஆளாய் உள்ள நம்பியாரூரனாகிய யான், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றாற்போல இயைத்துப் பொருள் கொள்க.

         நாயன்மாருள் சிலருக்கு நேரே 'அடியேன்' என்றும், சிலருக்கு, 'அவர்தம் அடியார்க்கு அடியேனாகும் முகத்தால் அடியேன்' என்றும் அருளினாராயினும், 'எல்லார்க்கும் நேரேயும், அடியார்க்கு அடியனாம் முகத்தானும் அடியேன்' என்று இருவகையாலும் அடிமையாதலைக் கூறுதல் திருவுள்ளமன்றி வேறுபாடு இன்று எனக் கொள்க.

         இனி, 'ஆரூரில் அம்மானுக்கு ஆள், அடியவர்கட்கெல்லாம் அடிமை' என்றதனால், இறைவனுக்கு ஆட்பட்ட பின்பே அடியவர்கட்கு ஆட்படுதல் கூடும் என்பதும், அடியவர்கட்கு ஆட்பட்ட பின்பே அடிமை நிரம்புவதென்பதும் பெறப்படும். ''ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார்'' (சிவஞானசித்தி, சூ. 12-2) என்ற இடத்தில், ''ஈசனுக்கன் பில்லார்'' என்றதும், நிரம்பிய அன்பில்லாமையையே குறித்தல் அறிக. இதனானே, இத்திருப்பதிகம் சிவனடியாரால் நாள் தோறும் இன்றியமையாது பொருளுணர்ந்து ஓதற்பாலதாயிற்று. இக் கருத்தே பற்றி இதனைச் சேக்கிழார் நாயனார், ''மெய்யடியார் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை'' (தி.12 பெருமிழலை, பு.4) என்று அருளிச் செய்தார். இன்னும்,

''தீதி லாத்திருத் தொண்டத்தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிட''

(தி.12 பெரியபுராணம், திருமலைச்சிறப்பு-25) என்று அவர் அருளினமையின், நம்பியாரூரது திருவவதாரத்தின் சிறப்புப் பயன், இத்திருப் பதிகமே என்பதுணர்க.

         ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பரசமயம் நிராகரித்து, சைவசமயத்தை நிலைநிறுத்திச் சென்ற பின்பு, நம்பியாரூரர் திருவவதாரம் செய்து அருளிச்செய்த இத்திருப்பதிகத்தாலே, சைவ சமயம் தன்னிகரின்றித் தழைத்தோங்கியதென்க.

         இதன்கண் தனியடியாரை, 'தொகையடியாரோ' என்று ஐயுறாமைப் பொருட்டு ஒருமைச் சொல்லாலே குறித்தருளினார். ''திருநீலகண்டத்துக் குயவனார், திருநீலகண்டத்துப் பாணனார்' என்றாற்போலும் இடங்களிலும் உயர்வு பற்றி வந்த பன்மையே என்பது இனிது விளங்க அருளினார். காரைக்காலம்மையார் பெண்பாலராகலானும். அவர் தம்மை ''பேய்'' என்றே குறித்தமை யானும், 'பேய்' எனின், இனிது விளங்காமை பற்றி அவர் ஒருவரையே ''பேயார்'' என்று பன்மையாற் குறித்தருளினார். இவ்வாறாகலின், ''பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்'' என்பதில் உள்ள, 'புலவர்' என்பதைப் பொருட்பன்மையாகக் கொள்ளாது, உயர்வுப் பன்மையாக வைத்து, அது திருவாத வூரடிகளைக் குறித்தது என உரைத்து, நம்பியாண்டார் நம்பிகள் முதலிய பிற்காலத்தார் அதனை அறியாது போயினாரென, பேரருட் பெருஞ்செல்வராய் அறிவே வடிவமாய் நின்ற அருளாசிரியர்க்கெல்லாம் ஓர் அறியாமை ஏற்றிப் பெருங் குற்றத்தில் வீழ்ந்து உரைப்பார் உரைப்பனவெல்லாம் பொருந்தாமை அறிந்துகொள்க. இதனானே, சிலவிடங்களில் நாயன்மாரது பெயர்களைப் பன்மையாக ஓதும் பாடங்கள், பாடத்தினை நன்கு போற்றாது, தாம் வேண்டி யவாறே ஓதுவனவென்பதும் பெறப்பட்டது. இதனை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் கொண்ட உண்மைப் பாடம் நோக்கி அறிந்து கொள்க.

சுந்தரர் திருப்பதிகம்

7. 039   திருத்தொண்டத் தொகை பண் - கொல்லிக்கௌவாணம்.
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையானதன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லைஅம்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க. `திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.

`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று. `மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.

`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.

குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.

அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.


பாடல் எண் : 2
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்
ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்
கடவூரில் கலயன்தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாள்தாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது. கலை மலிந்த சீர், நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ், `திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி, கண்ணப்பதேவர் திருமறம்` முதலாக பல நூல்களினும் கண்ணப்பர் வரலாறு சிறந்தெடுத்துக் கூறப்படுதல் அறிக. மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. `மங்கை` என்பது `மங்கலம்` என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர்.


பாடல் எண் : 3
மும்மையால் உலகுஆண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டுஎழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : ``மும்மை`` என்றது ``இருமை வகை தெரிந்து`` (குறள்-23) என்றாற்போல, `மூன்று` எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன. செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான். மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ``திருமேனி`` என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து, அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ``அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்`` (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.


பாடல் எண் : 4
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : திரு - இன்பம். `அது நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம்` எனக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்க. பிறப்பில் பெருமானாதலின், அத்தகைய செம்மையை யுடைய செம்பொருளாவான் சிவபெருமானே என்பது கருத்து. இஃது அவனது திருமேனிக் குறிப்பாலும், `சிவன்` என்னும் பெயராலுமே நன்கறியப்படும் என்பார், ``சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்`` (தி.4 ப. 112 பா.9) என அவர் ஓர் இடத்தில் அருளிச்செய்தார். ``திருநின்ற செம்மை`` என்பது, இந் நாயனார் அருளிச்செய்த தொடராதலை யறிக. (தி. 4 ப.8 பா.1) பெருநம்பி - நம்பிகளுட் சிறந்தவர். அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவர்; சைவப் பயிர்க்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவர். ஒருநம்பி - ஒப்பற்ற நம்பி; இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவர். சாத்த மங்கை, ஊர்ப்பெயர். அருநம்பி - அரிய செயலைச் செய்த நம்பி; நீரால் திரு விளக்கை ஒருநாள் ஒருபொழுதன்றி, எந்நாளும் எப்பொழுதும் இட்டவர்.


பாடல் எண் : 5
வம்புஅறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நல் கொன்றையான் அடியலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


         குறிப்புரை : வம்பு அறா வரிவண்டு - நறுமணத்தை விட்டுப் போகாத, வரிகளையுடைய வண்டுகள். `வண்டிற்கு` என நான்காவது விரிக்க. `நாறுமாறு மலரும் மலர்` என இயையும். `மலர்க்கொன்றை` என்றதனை, `கொன்றை மலர்` என மாற்றியுரைக்க. சிவபிரான் ஒருவனுக்கே உரிய சிறப்பு மாலையாகலின், ``நற்கொன்றை`` என்று அருளினார். ``கைச்சிறு மறியவன் கழலலாற்பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன்`` (தி.1 ப.77 பா.11) என அவர் ஓதியதனையே எடுத்தோதியருளினார் என்க. சிவபிரானால் ஆகமத்தைத் தமிழாற் செய்யத் தமிழகத்தில் வருவிக்கப்பெற்று அங்ஙனமே செய்தருளிய ஆசிரியராகலின், ``நம்பிரான்`` என்று அருளிச்செய்தார். நாட்டம் மிகு - பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து, சமணர் முன்னே சிவபிரானது திருவருளாற் கண்பெற்று விளங்கியவர். அம்பர், ஊர்ப்பெயர்.


பாடல் எண் : 6
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்எறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற்கு அடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற்று அறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேல்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : வார் - கச்சு. வனம் - அழகு. சீர் - சிறப்பு. கார்கொண்ட - மேகம் போன்ற. ஆர் - கூர்மை. களந்தை, ஊர்ப் பெயர்.


பாடல் எண் : 7
பொய்அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
மெய்அடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : பொய்யடிமை யில்லாத புலவர், தொகையடியார். துஞ்சிய - இறைவன் திருவடியிற் சென்று தங்கிய. நாகை - நாகப்பட்டினம். வரிசிலை - கட்டப்பட்டு அமைந்த வில். கழல் - காலில் அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். `வரிஞ்சையர்கோன் கழற் சத்தி` என மாற்றி உரைக்க.


பாடல் எண் : 8
கறைக்கண்டன் கழல்அடியே காப்புக்கொண்டு இருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ``நிறைக்கொண்ட`` முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று.


பாடல் எண் : 9
கடல்சூழ்ந்த உலகுஎலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்அடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ``ஆடி`` என்றது பெயர். அடல் - வெற்றி.


பாடல் எண் : 10
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

         குறிப்புரை : இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள்.


பாடல் எண் : 11
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்
என்னவனாம் அரன்அடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுஉவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

         குறிப்புரை : என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். `சடையன், இசைஞானி இவர்க்கு மகன்` என்க. `காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடையவனாம் நம்பியாரூரன்` என்க. உவப்பார் - அன்பால் மனம் உருகுகின்றவர்கள்.
                                             திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------
  
சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில், தமிழ்ப் பொதியமலைப் பிறந்த கொழுந் தென்றல் அணைய, திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானது வசந்த விழாவை நினைவு கூர்ந்து "புற்றிடகொண்டிருந்தாரை ஈங்கு நான் மறந்தேன்" என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 272
பூங்கோயில் அமர்ந்தாரை, புற்றிடங்கொண்டு இருந்தாரை,
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை,
பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயன்உணர்வார்,
"ஈங்குநான் மறந்தேன்'என்று ஏசறவால் மிகஅழிவார்.

         பொழிப்புரை : பூங்கோயிலில் வீற்றிருக்கும் புற்றிடங் கொண்ட பெருமானாரை, நீங்காத காதலினால் தம்மை நினைத்திருப்பவரை தாமும் நினைந்து அருளுவாரைத் தாம் முன்னைய நாள்களில் பணிய, அதனால் வருகின்ற இன்பப் பயனை உணர்வாராகிய அவர், இங்கே நான் மறந்தேனே என எண்ணிப் பதைப்பால் மிகவும் மனம் அயர்வாராய்,

         தம்மை நினைத்திருப்பவர்களை, இறைவர் தாமும் நினைந்தருளுவார். `தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி' எனவரும் மணிவாசகர் திருவாக்கும் காண்க.


பெ. பு. பாடல் எண் : 273
மின்ஒளிர்செஞ் சடையானை, வேதமுதல் ஆனானை,
மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை, மிகநினைந்து
பன்னியசொல் "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்"
என்னும்இசைத் திருப்பதிகம் எடுத்துஇயம்பி இரங்கினார்.

         பொழிப்புரை : மின்போல் ஒளிரும் செஞ்சடையையுடைய பெருமானை, மறைகட்கெல்லாம் முதற்பொருளாயினானை, சீர் மன்னிய புகழுடைய திருவாரூரில் மகிழ்ந்திருப்பவனை, மிகவும் நீள நினைந்து, பலபடப் புகழ்ந்த சொற்களாலாய `பத்திமையும் அடிமை யையும் கைவிடுவான்\' எனத் தொடங்கும் இசையுடைய பதிகத்தால் பாடி, மிகவும் இரங்கினார்.

     `பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்' எனத் தொடங்கும் திருப்பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.51).

சுந்தரர் திருப்பதிகம்

7. 051    திருவாரூர்                   பண் - பழம்பஞ்சுரம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பத்திமையும் அடிமையையும்
         கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோய் அதுஇதனைப்
         பொருள்அறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
         வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்து இருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 2
ஐவணமாம் பகழிஉடை அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாம் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மைஅணவும் கண்டத்து வளர்சடைஎம் ஆர்அமுதை
எவ்வணம்நான் பிரிந்துஇருக்கேன் என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன்; விரையச்சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 3
சங்கு அலக்கும் தடம்கடல்வாய் விடம் சுட, வந்து அமரர்தொழ
அங்கு அலக்கண் தீர்த்து, விடம் உண்டு உகந்த அம்மானை,
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவு இலியேன், செறிவு இன்றி
எங்கு உலக்கப் பிரிந்து இருக்கேன் என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான் , தேவர் , சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகை யினாலே அடைக்கலமாக வந்து வணங்க , அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி , அவ்விடத்தை உண்டு , அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து , எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

பாடல் எண் : 4
இங்ஙனம்வந்து இடர்ப்பிறவிப் பிறந்து அயர்வேன், அயராமே
அங்ஙனம் வந்து எனைஆண்ட அருமருந்து, என் ஆர்அமுதை,
வெங்கனல்மா மேனியனை, மான்மருவும் கையானை,
எங்ஙனம் நான் பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : இவ்வுலகில் வந்து , துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான் , அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும் , அமுதும் போல்பவனும் , வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும் , மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 5
செப்பஅரிய அயனொடுமால் சிந்தித்தும் தெரிவு அரிய
அப்பெரிய திருவினையே அறியாதே, அருவினையேன்,
ஒப்பரிய குணத்தானை, இணைஇலியை அணைவு இன்றி,
எப்பரிசு பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான் , சொல்லுதற்கரிய பெருமையையுடைய , ` பிரமதேவனும் , திருமாலும் ` என்னும் அவர்தாமும் நினைத்தற்கும் , காண்பதற்கும் அரிய அத் தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும் , பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும் , பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் , அடைதலும் இன்றிப் பிரிந்து , எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 6
வன்னாக நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி
தன்ஆகம் உறவாங்கிப் புரம்எரித்த தன்மையனை,
முன்னாக நினையாத மூர்க்கனேன், ஆக்கைசுமந்து
என்ஆகப் பிரிந்துஇருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : வலிய பாம்பு நாணியும் , மலை வில்லும் , திருமால் அம்பும் , அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான் , அவனைப் பிரிந்து , என்னாவதற்கு இவ் வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

 
பாடல் எண் : 7
வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரம்கிழிய
முன்சயம்ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்திதனை,
மின்செயும்வார் சடையானை, விடையானை, அடைவுஇன்றி
என்செயநான் பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து , பின்பு எழுப்பிய மூர்த்தியும் , மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும் , விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து , நான் , என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

பாடல் எண் : 8
முன்நெறிவா னவர்கூடித் தொழுது ஏத்தும் முழுமுதலை,
அந்நெறியை, அமரர்தொழும் நாயகனை, அடியார்கள்
செந்நெறியை, தேவர்குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான்
என்அறிவான் பிரிந்துஇருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும் , மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும் , அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும் , ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் , எல்லாத் தேவருள்ளும் சிறந்த தேவனும் , தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து , நான் , எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 9
கற்றுஉளவான் கனியாய கண்ணுதலை, கருத்துஆர
உற்று உளன்ஆம் ஒருவனை,முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்
பெற்று உளன்ஆம் பெருமையனை, பெரிதுஅடியே கை அகன்றிட்டு
எற்று உளனாய்ப் பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற , கண்ணையுடைய நெற்றியையுடையவனும் , என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும் , முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை , அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து, எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய் , இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 10
ஏழ்இசையாய், இசைப்பயனாய், இன்அமுதாய், என்னுடைய
தோழனுமாய், யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி,
மாழைஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதியில்லா
ஏழையேன் பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : ஏழிசைகளைப் போன்றும் , அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் , இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து , அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி , யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு , மாவடுவின் வகிர்போலும் , ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை , அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 11
வங்கம்மலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய
நுங்கி,அமுது அவர்க்குஅருளி, நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன்
எங்கு உலக்கப் பிரிந்து இருக்கேன்? என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : தேவர்கள் பிழைத்தற்பொருட்டு , மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு , அமுதத்தை அவர்கட்கு அருளினவனும் , சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி , என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 12
பேர்ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர்தம்
சீர்ஊரும் திருவாரூர்ச் சிவன்அடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்
ஊர்ஊரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே

         பொழிப்புரை : செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி , புகழ்மிகுந்த மதயானையின் தோலையுடைய அவனை , அவன் அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர் , உலகர் எல்லார்க்கும் மேலானவராவர் .
திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------------------------- 

சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுவாமிகள், திருக்கச்சியில் இடக்கண் பெற்று, திருஏகம்பத்து இறைவர் திருக்காட்சி கொடுத்தருளக் கண்டு, திருப்பதிகம் பாடிச் சிலநாள் தங்கியிருந்து, பின் திருவாரூருக்குச் செல்ல விரும்பிக் காஞ்சித் திருநகரைக் கடந்து, 'எந்தைபிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது' என்றுபாடிச் சென்றருளியது இத் திருப்பதிகம்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 290
மாமலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப் போற்றி,அருள் அதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித் திருநகரம் கடந்துஅகல்வார்,
பாமலர்மா லைப்பதிகம் திருவாரூர் மேற்பரவி.

         பொழிப்புரை : உயர்ந்த இமயமலையில் தோன்றிய உமை அம்மையாரின் முலைச்சுவடும் வளையல்களின் தழும்பும் அணிந்த, இளம்பிறை சூடிய, கொன்றைப் பூவணிந்த சடையையுடைய பெருமானைப் போற்றி செய்து, தமக்கு இடக் கண் பெற்ற அருள் அதுவேயாகக் கொண்டு தேன் பொருந்திய மலர்கள் பெருகிய சோலைகளையுடைய காஞ்சித் திருநகரத்தைக் கடந்து, மேற்செல்லும் நம்பிகள், பாடல்கள் மலரும் திருப்பதிகத்தைத் திருவாரூர் மேலாகப் பாடிப் போற்றி செய்து,


ப. பு. பாடல் எண் : 291
"அந்தியும்நண் பகலும்"என எடுத்துஆர்வத் துடன்நசையால்
"எந்தைபிரான் திருவாரூர் என்றுகொல்எய் துவது"என்று
சந்தஇசை பாடிப்போய்த் தாங்கஅரிய ஆதரவு
வந்துஅணைய அன்பருடன் மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.

         பொழிப்புரை : `அந்தியும் நண்பகலும்' எனப் பாட எடுத்து, உள்ளத்துத் திருவாரூருக்குச் செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிக, அப்பெரும்பதிக்கு என்று சேருவது எனும் குறிப்புடைய சந்தம் உடைய இசையினைப் பாடி அன்பர்களுடன் மகிழ்ந்து வழிக்கொள்ளும் ஆரூரர்,

         `அந்தியும் நண்பகலும்' எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 83). பதிகப் பாடல்தொறும் `திருவாரூர்புக்கு .... என்று கொல் எய்துவதோ' என நிறைவுறுவதை உளங்கொண்டு ஆசிரியர் இப்பாடலையும் அக்குறிப்பையும் எடுத்து மொழிவாராயினர்.
   
சுந்தரர்  திருப்பதிகம்

7. 083    திருவாரூர்                   பண் - புறநீர்மை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு ஆரூர்புக்கு
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே , என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை , அடியேன் , இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு , அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 2
நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்றும் மலர்இட்டுச் சூழும் வலம்செய்து
தென்றல் மணம்கமழுந் தென்திரு ஆரூர்புக்கு
என்தன் மனம்குளிர என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு , காலை மாலை இருபொழுதினும் , நெருங்கிய மலர்களைத் தூவி , சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு , தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந் நாளோ !


பாடல் எண் : 3
முன்னை முதல்பிறவி மூது அறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழியச்
செந்நெல் வயல்கழனித் தென்திரு ஆரூர்புக்கு
என்உயிர்க்கு இன்அமுதை என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில் , பெரிய அறியாமை காரணமாக , வருங்காலத்திற் பெற நினைத்த நினைவு களும் , அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு , செந்நெற் களை விளைவிக்கின்ற , நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய , அழகிய திருவாரூரினுட் சென்று , எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை , யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 4
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றுஒழியச்
செல்வ வயல்கழனித் தென்திரு ஆரூர்புக்கு
எல்லை மிதித்துஅடியேன் என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : நல்ல எண்ணம் நீங்குதலால் , அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும் , மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன் றொழியுமாறு , உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து , அந்நகரினுட் சென்று , எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 5
கடுவரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்குஅணிந்த சோதியை வன்தலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்கு
இடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும் , எல்லா வற்றினும் முன்னதாக , சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும் , கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும் , உலகிற்கு முதல்வனும் , வலிய தலை ஓட்டின் கண் , மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 6
சூழ்ஒளி நீர்நிலம் தீத் தாழ்வளி ஆகாசம்
வாழ்உயர் வெங்கதிரோன் வண்தமிழ் வல்லவர்கள்
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்கு
ஏழ்உலகு ஆளியைநான் என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும் , தாழ வீழும் நீரும், ஒளியையுடைய தீயும் , யாண்டும் இயங்கும் காற்றும் , உயர்ந்துள்ள ஆகாயமும் , வெவ்விய கதிர்களை யுடையோனாகிய பகலவனும் , வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம்பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும் , ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெருமானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 7
கொம்புஅன நுண்இடையாள் கூறனை, நீறுஅணிந்த
வம்பனை, எவ்வுயிர்க்கும் வைப்பினை, ஒப்புஅமரர்
செம்பொனை, நல்மணியை, தென்திரு ஆரூர்புக்கு
என்பொனை, என்மணியை என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : இளங்கொம்பு போலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது கூற்றினை யுடையவனும் , திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும் , எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும் , நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 8
ஆறுஅணி நீள்முடிமேல் ஆடுஅர வம்சூடி,
பாறுஅணி வெண்தலையில் பிச்சைகொள் நச்சுஅரவன்,
சேறுஅணி தண்கழனித் தென்திரு ஆரூர்புக்கு,
ஏறுஅணி எம்இறையை, என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின் மேல் , பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும் , நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெருமானை , சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 9
மண்ணினை உண்டுஉமிழ்ந்த மாயனும், மாமலர்மேல்
அண்ணலும் நண்அரிய ஆதியை, மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு ஆரூர்புக்கு,
எண்ணிய கண்குளிர, என்றுகொல் எய்துவதே

         பொழிப்புரை : மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும் , சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை , இறைவியோடும் மறவாது நினைக்குமாறும் கண்டு கண் குளிருமாறும், திண்ணிய, பெரிய மதில் சூழ்ந்த, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !


பாடல் எண் : 10
மின்நெடும் செம்சடையான் மேவிய ஆரூரை,
நல்நெடும் காதன்மையால், நாவலர் கோன்ஊரன்,
பன்நெடும் சொன்மலர்கொண்டு இட்டன பத்தும்வல்லார்,
பொன்உடை விண்உலகம் நண்ணுவர் புண்ணியரே

         பொழிப்புரை : மின்னல்போலும் , நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை , திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் , நல்ல , நெடிய பேரன்பினால் , பல , சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய் , பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள் .

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுவாமிகள், திருத்துருத்தியிலிருந்து திருவாரூருக்கு எழுந்தருளி, பரவையுள்மண்தளிப் பெருமானைப் பணிந்து, "தூவாயா" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, பின்னர், திரு மூலட்டானரை வழிபட அர்த்தயாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது, அன்பர்கள் எதிர் அணையக்கண்டு அயலார் வினவுவது போல, "குருகுபாய" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருத்தேவாசிரியன் முன் வணங்கி, கோபுரத்தைக் கைதொழுது, உள்புகுந்து, பூங்கோயிலை வணங்கி, அவனியில் வீழ்ந்து எழுந்து தொழுது, "ஆழ்ந்த துயர்க்கடலிடை நின்றடியேனை எடுத்தருளிக் கண்தாரும்" எனத் தாழ்ந்து, திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைக் கண்களாற் பருகுதற்கு, 'மற்றைக்கண் தாரீர்' என வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.  இதில் பாடல் தோறும் 'வாழ்ந்து போதீர்' என்று கூறியுள்ள தோழமை கருதத்தக்கது.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 302
அன்றுதிரு நோக்குஒன்றால் ஆரக்கண்டு இன்புறார்,
நின்றுநில மிசைவீழ்ந்து, நெடிதுயிர்த்து, நேர்இறைஞ்சி,
வன்தொண்டர் திருவாரூர் மயங்குமா லையில்புகுந்து
துன்றுசடைத் தூவாயார் தமைமுன்னம் தொழஅணைந்தார்.

         பொழிப்புரை : அன்று தமது ஒரு கண்ணால் கொள்ளும் திருப் பார்வையால், திருவாரூரின் அற்புதம் முழுவதும் ஆரக்கண்டு இன்புற இயலாதவராய் நின்று, நிலத்தின் மீது வீழ்ந்து, நெடிதே மூச்செறிந்து, நேராக வணங்கி, எழுந்து, நம்பிகள், பொழுது மயங்கும் மாலைக் காலத்தில் திருவாரூர் சென்று, அங்குப் பரந்த சடையை உடைய தூவாயராகிய பெருமானை முன்னாகப் பணிதற்கு அணைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 303
பொங்குதிருத் தொண்டருடன் உள்அணைந்து புக்குஇறைஞ்சி
துங்கஇசைத் திருப்பதிகம் "தூவாயா" என்றுஎடுத்தே
இங்குஎமது துயர்களைந்து கண்காணக் காட்டாய்என்று
அங்கணர்தம் முன்நின்று பாடி,அரும் தமிழ்புனைந்தார்.

         பொழிப்புரை : அன்புமிகும் அடியவர்களுடன் உள்ளே சென்று வணங்கி, மேலான இசையையுடைய திருப்பதிகமாய, `தூவாயா' எனப் பாட எடுத்தே, ` இங்கு எனது துயர்களைந்து கண்காணக் காட்டாய்' என்னும் பொருளியையப் போற்றி மகிழ்ந்து, கண்ணுதற் பெருமான் திருமுன்பு நின்று, அரிய தமிழ்மாலையைச் சூட்டினார்.


பாடல் எண் : 304
ஆறுஅணியும் சடையாரைத் தொழுது,புறம் போந்து,அங்கண்
வேறுஇருந்து, திருத்தொண்டர் விரவுவார் உடன்கூடி,
ஏறுஉயர்த்தார் திருமூலட் டானத்துள் இடைதெரிந்து
மாறுஇல்திரு அத்தயா மத்துஇறைஞ்ச வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : கங்கை அணிந்த திருச்சடையையுடைய இறைவரை வணங்கி, அருள்பெற்று, வெளிப்போந்து, அவ்விடத்தே வேறாக இருந்து வந்த சிவனடியார்கள் பலருடன் கூடி விடைக் கொடியை உயர்த்திய பெருமானது பெருங்கோயிலாய திருமூலட்டானத்தைச் சேர்வதற்கு தக்க அருளுடைய காலத்தை உணர்ந்து, மாறிலாத திருவருள் நிறைந்த நடுயாமத்து வணங்கிட அங்கு வந்தணைந்தார்.


பாடல் எண் : 305
ஆதிதிரு அன்பர்எதிர் அணையஅவர் முகநோக்கிக்
கோதில்இசை யால் "குருகு பாய"எனக் கோத்துஎடுத்தே
ஏதிலார் போல்வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையால் பாடியே கலந்துஅணைவார்.

         பொழிப்புரை : ஆதியாய பெருமானின் அன்பர்கள், இவர் எதிரில் வரக்கண்டு, அவர்கள் முகம் நோக்கிக் கோதிலாத இசையையுடைய பதிகத்தால், `குருகு பாய' எனத் தொடங்கி எடுத்து, அவர்களை வினவுமுகமாகத் தாம் அயலவர்போல அவர்களைக் கேட்டுத் தமது கவலை மிகுதியினால் பாடிய பதிகம், எம்பிரான்பால் காதல் புரியும், கைக்கிளை என்னும் திணையில் அமைய, அத்தொண்டர்களுடன் கலந்து வந்தருளுவார்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 037  திருவாரூர்                   பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
குருகுபா யக்கொழும் கரும்புகள் நெரிந்தசாறு
அருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப்
பருகும் ஆறும்,பணிந்து, ஏத்தும் ஆறும்,நினைந்து
உருகும் ஆறும் இவை உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : குருகுகளே , நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு , அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை , யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும், திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும் , நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 2
பறக்கும்எம் கிள்ளைகாள், பாடும்எம் பூவைகாள்,
அறக்கண் என் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும், வளைகள்நில் லாமையும்,
உறக்கம் இல் லாமையும், உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே , பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே , அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை , யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும் , அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும் , கண்கள் உறங்குதல் இல்லாமையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 3
சூழும் ஓடிச்சுழன்று உழலும்வெண் நாரைகாள்,
ஆளும்அம் பொன்கழல் அடிகள்ஆ ரூரர்க்கு
வாழும் ஆறும்,வளை கழலும் ஆறும்,எனக்கு
ஊழும் ஆறும்இவை உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன் போலும் திருவடிகளை யுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் இவ்வுடம்பின் நீங்காது வாழுமாறும் , என்வளைகள் கழலுமாறும் , மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 4
சக்கிரவா கத்துஇளம் பேடைகாள், சேவல்காள்,
அக்கிரமங் கள்செயும் அடிகள்ஆ ரூரர்க்கு,
வக்கிரம்இல் லாமையும், வளைகள்நில் லாமையும்,
உக்கிரம்இல் லாமையும், உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : ` சக்கிரவாகம் ` என்னும் இனத்து , இளைய பேடைகளே , சேவல்களே , முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் மனம் மாறுபடாமையையும், எனது வளைகள் நில்லாது கழலுதலையும், அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 5
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் நாரைகாள்,
அலைகொள்சூ லப்படை அடிகள்ஆ ரூரர்க்கு,
கலைகள்சோர் கின்றதும், கனவளை கழன்றதும்,
முலைகள்பீர் கொண்டதும், மொழியவல் லீர்களே.

         பொழிப்புரை : இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே , அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப் படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது உடை நெகிழ்கின்றதையும் , உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும் , கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லீர்களோ ?


பாடல் எண் : 6
வண்டுகாள், கொண்டல்காள், வார்மணல் குருகுகாள்,
அண்டவா ணர்தொழும் அடிகள்ஆ ரூரரை,
கண்ட ஆறும், காமத் தீக்கனன்று எரிந்து,மெய்
உண்ட ஆறும், இவை உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : வண்டுகளே , மேகங்களே , நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே , வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும் , அன்றுமுதல் காமத் தீ , கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 7
தேன்நலம் கொண்டதேன் வண்டுகாள், கொண்டல்காள்,
ஆன்நலம் கொண்ட எம் அடிகள்ஆ ரூரர்க்கு,
பால்நலம் கொண்டஎம் பணைமுலை பயந்து,பொன்
ஊன்நலம் கொண்டதும், உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே , வண்டுகளே, மேகங்களே, பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப் பெய்தி , பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை . என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ ?


பாடல் எண் : 8
சுற்றுமுற் றும்சுழன் று உழலும்வெண் நாரைகாள்,
அற்றம் முற் றப்பகர்ந்து அடிகள்ஆ ரூரர்க்கு,
பற்றுமற்று இன்மையும், பாடுமற்று இன்மையும்,
உற்றுமற்று இன்மையும், உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது துன்பத்தை முடியச் சொல்லி , எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும் , யான் பலராலும் அலர் தூற்றப்படுதலையும் , எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 9
குரவம்நா றக்குயில் வண்டுஇனம் பாட,நின்று
அரவம் ஆடும்பொழில் அந்தண்ஆ ரூரரை,
பரவிநா டும்அதும், பாடிநா டும் அதும்,
உருகிநா டும் அதும், உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச , குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட , பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும், துதித்துத் தேடுகின்ற வகையையும் , நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 10
கூடும்அன் னப்பெடை காள்,குயில், வண்டுகாள்,
ஆடும்அம் பொன்கழல் அடிகள்ஆ ரூரரை,
பாடுமா றும், பணிந்து ஏத்துமா றும்,கூடி
ஊடுமா றும்,இவை உணர்த்தவல் லீர்களே.

         பொழிப்புரை : நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே , குயில்களே , வண்டுகளே , நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப் பாடும் முறையையும் , பணிந்து புகழும் முறையையும் , அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?


பாடல் எண் : 11
நித்தமா கந்நினைந்து உள்ளம் ஏத் தித்தொழும்
அத்தன்,அம் பொன்கழல் அடிகள்ஆ ரூரரை,
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி அப்பன்மெய்ப்
பத்தன்ஊ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.

         பொழிப்புரை : அடியவராய் உள்ளவர்களே . மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து , வாயால் துதித்து , கையால் தொழுகின்ற தந்தையாரும் , அழகிய பொன்போலும் திருவடிகளை யுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை , அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும் , சிங்கடிக்குத் தந்தையும் , உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 306
சீர்பெருகும் திருத்தேவா சிரியன்முன் சென்றுஇறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில் தனைவணங்கிச் சார்ந்துஅணைவார்
ஆர்வமிகு பெருங்காத லால்அவனி மேல்வீழ்ந்தார்.

         பொழிப்புரை : சீர்மை மிகுந்த தேவாசிரியத் திருமண்டபத்தை முன்சென்று வணங்கி, மேகங்கள் படிந்த பெருங்கோபுரத்தைக் கை தொழுது, உள்ளே சென்று, மாலைகள் மிக விளங்குகின்ற பூங்கோயில் என்னும் பெயர் பூண்ட பெருமானது திருமாளிகையினை வணங்கிச் சேருகின்ற நம்பிகள், இறைவன் திருமுன்பு வருபவராய், ஆர்வம் மிகுந்த பெருங்காதலால் நிலத்தின்மேல் தம் வயமிழந்து வீழ்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 307
வீழ்ந்துஎழுந்து கைதொழுது முன்நின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ஒன்றால் ஆராமல் மனம்அழிவார்,
"ஆழ்ந்ததுயர்க் கடல்இடைநின்று அடியேனை எடுத்துஅருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக் கண்தாரும்" எனத்தாழ்ந்தார்.

         பொழிப்புரை : வீழ்ந்து எழுந்து கைதொழுது முன்னின்று விம்மி வாழ்வுடைய கண் ஒன்றால் கண்டு நிறைவு கொள்ளாது மனம் அயர்வார், ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளி, தாழ்ந்து வேண்டிக் குறையிரக்கும் எனது கருத்தை நிரப்பிக் கண்ணினைத் தாரீர் என வேண்டினார்.


பெ. பு. பாடல் எண் : 308
திருநாவ லூர்மன்னர் திருவாரூர் வீற்றிருந்த
பெருமானை, திருமூலட் டானஞ்சேர் பிஞ்ஞகனை,
பருகாஇன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்கு
மருவுஆர்வத் துடன்"மற்றைக் கண்தாரீர்" எனவணங்கி.

         பொழிப்புரை : திருநாவலூர் அரசரான நம்பிகள், திருவாரூரில் வீற்றிருந்த பெருமானை, திருமூலட்டானத்தே கோயில் கொண் டிருக்கும் பரம்பொருளை, உண்ணற்கரிய அமுதத்தைக் கண்களால் கண்டு மகிழ்தற்கு உள்ளத்துக் கொண்ட ஆர்வத்துடன், மற்றைக் கண்தாரீர் என வேண்டி வணங்கி,


பெ. பு. பாடல் எண் : 309
"மீளா அடிமை" எனஎடுத்து
         மிக்க தேவர் குலம்எல்லாம்
மாளா மேநஞ்சு உண்டுஅருளி
         மன்னி இருந்த பெருமானைத்
"தாள் ஆதரிக்கும் மெய்அடியார்
         தமக்குஆம் இடர்நீர் தரியீர்"என
ஆளாம் திருத்தோ ழமைத்திறத்தால்
         அஞ்சொல் பதிகம் பாடினார்.

         பொழிப்புரை : `மீளா அடிமை\' எனத் தொடங்கி, மிக்க மேலான தேவர்குலம் எல்லாம் மாளாதவாறு அன்றெழுந்த நஞ்சுண்டருளித் திருவாரூரில் இருந்தருளும் பெருமானை, நின் திருவடிகளை விரும்பி வணங்கி வரும் மெய்யடியார்களுக்கு வருகின்ற இடரை நீர் பார்த்திருந்து தரிக்க மாட்டீரே! எனும் குறிப்புடன் தோழமையும் ஆகிய திறத்தால் அழகிய சொற்களையுடைய அத்திருப்பதிகத்தைப் பாடினார்.

         ஆளாதல் - அடிமையாதல். `மீளா அடிமை' எனத் தொடங்கும் பதிகம், செந்துருத்திப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.95). அல்லல் சொன்னக்கால் வாளா அங்கிருப்பீர் என்பதை வினவு முகமாகக் கொண்டு காணில், வறிதே அங்கு இருப்பீர்? இருக்க மாட்டீரே! என்ற பொருளைச் சொற்குறிப்பால் அறியுமாற்றான், ஆசிரியர் இவ்வகையில் அமைப்பார் ஆயினார். அங்ஙனம் வாளா இருக்க மாட்டாதீர், இதுபொழுது மறுதலையாகிய இருப்பின் வாழ்ந்து போதீரே எனும் கருத்துடையதாக அருளுகின்றார் ஆசிரியர்.


பெ. பு. பாடல் எண் : 310
பூத முதல்வர் புற்றிடங்கொண்டு
         இருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்குஇரங்கிக்
         கருணைத் திருநோக்கு அளித்துஅருளிக்
சீத மலர்க்கண் கொடுத்துஅருளச்
         செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
         வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.

         பொழிப்புரை : உயிர்கட்கெல்லாம் முதல்வராய புற்றிடங் கொண்ட பெருமானார், நம்பிகள் அன்பினால் எடுத்து மொழியும் இத்துன்பங்களுக்கு இரங்கிக் கருணையால் குளிர்ந்த மலர்க்கண்ணைக் கொடுத்தருளலும், உடன் செப்பமாகப் பார்த்து, முக மலர்ந்து, தம்வயமிழந்தவராய், இறைவரின் திருவடிமலர்களில் பணிந்து வீழ்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 311
விழுந்தும் எழுந்தும் பலமுறையால்
         மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப்
         பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும்
         அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின்
         அருளைப் பருகித் திளைக்கின்றார்.

         பொழிப்புரை : விழுந்தும் எழுந்தும் பலமுறையால் பணிந்து மிகவும் போற்றி, மனத்தில் எழுந்த மகிழ்வால் ஆடிப்பாடி இன்பவெள்ளத்தில் அழுந்தி, இரு கண்களாலும் அழகிய பொன் புற்றின் இடனாக முளைத்தெழுந்த செழுமையாய தண்ணளியையுடைய பவள ஒளி பரந்த சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைத்து இன்புறுமவர்.


பெ. பு. பாடல் எண் : 312
காலம் நிரம்பத் தொழுதேத்திக்
         கனக மணிமா ளிகைக்கோயில்
ஞாலம் உய்ய வரும்நம்பி
         நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறைஇருக்கும்
         வாயில் கழியப் புறம்போந்து
சீலம் உடைய அன்பருடன்
         தேவா சிரியன் மருங்குஅணைந்தார்.

         பொழிப்புரை : அவ்வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரையிலும் தொழுது போற்றிப் பொன்மயமாய் மிளிர்கின்ற அழகிய மாளிகை களை உடைய கோயிலினை, இவ்வுலகு உய்ந்திட வரும் நம்பிகள், நலம்கொள்ளும் விருப்பால் வலம் கொண்டு வந்து திருமாலும் நான்முகனும் முறையே வழிபாட்டிற்காகக் காத்திருக்கும் திருவாயிலைக் கடந்து, சீலமுடைய அன்பர்களுடன் தேவாசிரிய மண்டபம் அருகாக வந்து சேர்ந்தார்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 095    திருவாரூர்                       பண் - செந்துருத்தி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
         பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
         முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
         அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருஆ
         ரூரீர் வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே , உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே , உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி , அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள் , தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது , மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல , மனத்தினுள்ளே வெதும்பி , தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று . பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது , அதனை , உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின் , நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !


பாடல் எண் : 2
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்
         விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை
         கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர்
         நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : அடிகளே , நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் , யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர்; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !


பாடல் எண் : 3
அன்றில் முட்டாது அடையும் சோலை
         ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
         காலி அவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
         தம்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற , சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல , நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது , குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !


பாடல் எண் : 4
துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
         சோற்றுத் துறைஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
         மனமே எனவேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள்
         அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை :இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே , நீர் இன்னும் , ` திருத்துருத்தி , திருப்பழனம் ` என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர் ; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர் ; ஆதலின் , உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா ; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள் , தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால் , நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து , மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !


பாடல் எண் : 5
செந்தண் பவளம் திகழுஞ் சோலை
         இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமாறு
         உமக்குஆட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
         தம்கண் காணாது
வந்துஎம் பெருமான் முறையோ என்றால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : எங்கள் தலைவரே , இது , செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன் ; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் , இதுதானோ ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள் , தங்கள் கண் காணப்பெறாது , உம்பால் வந்து , ` எம் பெருமானே , முறையோ ` என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால் , நீரே இனிது வாழ்ந்து போமின் !


பாடல் எண் : 6
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
         சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
         புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றித் தாம்தாம் மெலிந்து
         தம்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற , முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த , திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே , உம் அடியவர் , தாம் பொருளில்லாமையால் இன்றி , தங்கள் கண் காணப்பெறாது வருந்தி , மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால் , நீரே இனிது வாழ்ந்து போமின் !


பாடல் எண் : 7
ஆயம் பேடை அடையும் சோலை
         ஆரூர் அகத்தீரே
ஏஎம் பெருமான் இதுவே ஆமாறு
         உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டிப் பிறவி காட்டி
         மறவா மனம்காட்டிக்
காயம் காட்டிக் கண்ணீர் கொண்டால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : ஆண் பறவைக் கூட்டம் , பெண்பறவைக் கூட்டத் துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளி யிருக்கின்றவரே , எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே , உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து , பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி , அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி , உடம்பைக் கொடுத்து , இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !


பாடல் எண் : 8
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
         கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
         இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள்
         பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : அடிகளே , யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம் ; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி , நீர் , கழியும் , கடலும் , மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம் ; அவ்வாறாகலின் , எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர் ; அதனால் , உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள் , வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !


பாடல் எண் : 9
பேயோடு ஏனும் பிரிவுஒன்று இன்னாது
         என்பர் பிறர் எல்லாம்
காய்தான் வேண்டில் கனிதான் நன்றோ
         கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
         உமக்குஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , விரும்பப்பட்டது காயே எனினும் , விரும்பிக் கைக் கொண்டால் , அது கனியோடொப்பதேயன்றோ ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம் , பேயோடு நட்புச்செய்யினும் , பிரிவு ` என்ப தொன்று துன்பந்தருவதே என்று சொல்லி , அதனைப்பிரிய ஒருப் படார் , ஆனால் , நீரோ , உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும் , உமக்கு ஆட்பட்டவர்கட்கு , வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர் ; இதுவே உமது நட்புத் தன்மையாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !


பாடல் எண் : 10
செருந்தி செம்பொன் மலரும் சோலை
         இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
         இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை
         இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே , இது , செருந்தி மரங்கள் , தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ ? இருத்தல் , நிற்றல் , கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் ` உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம் , உம்பால் வருத்தமுற்று வந்து , ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும் , நீர் வாய்திறவாது இருப்பிராயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !


பாடல் எண் : 11
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண்
         கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
         அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
         நீரே பழிப்பட்டீர்
வார்ஊர் முலையாள் பாகம் கொண்டீர்
         வாழ்ந்து போதீரே

         பொழிப்புரை : பல நூல்களும் ஆகி , கருமை மிக்க கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய , திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களை யுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்ட வரே , இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய , நீர் , உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர் ; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; இனி நீர் இனிது வாழ்ந்து போமின் !
திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------
     

சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுந்தரர் சேரர்பெருமானுடன் பாம்பணி மாநகரில் திருப்பாதாளீச்சுரரை வணங்கி அருகில் உள்ள பல பதிகளையும் தொழுது திருவாரூர் வந்தணைந்தார். திருவாரூரில் வாழ்வார்கள் எதிர்கொள்ளத் திருக்கோயில் சென்று பாடியருளியதாகலாம் இத் திருப்பதிகம்.

கழறிற்றறிவார் நாயனார் புராணப் பாடல் எண் : 122
வாசமலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசம்உற முன்இறைஞ்சி நெடும்பொழுது எலாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்துஏத்தி எழுந்து அருளால்
பாசவினைத் தொடக்கு அறுப்பார் பயில்கோயில் பணிந்துஅணைவார்.

         பொழிப்புரை : மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்திருக்கும் கோயிலை வலமாக வந்து, அன்பு பொருந்தத் திருமுன்பு வணங்கி, நெடிது நேரமாக நின்று, போற்றி, நீண்டகாலம் பிரிந்திருந்த வருத்தத்தால் திருப்பதிகத்தைப் பாடி வணங்கி, அருள் விடைபெற்று, வெளியே வந்து, பாசவினைப்பற்றை அறுப்பவரான இறைவர் வீற்றிருக்கின்ற கோயிலைப் பணிந்து வருவார்,

         குறிப்புரை : நெடும்பொழுதெலாம் - நீண்ட வழிபாட்டுக் காலங்களில் எல்லாம் என உரைகாண்பர் சிவக்கவிமணியார். இதுபோது அருளிய பதிகம் `இறைகளோடிசைந்த இன்பம்' (தி.7 ப.8) என்னும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாம்.



சுந்தரர் திருப்பதிகம்

7. 008    திருவாரூர்                   பண் - இந்தளம்
                          
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு,
பறைகிழித்து அனைய போர்வை பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந்து ஈண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : தேவர்கள் , செம்பொன்னையும் , மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து , நினது ஒலிக்கும் கழலை யணிந்த திருவடிகளை , மலர் தூவி வணங்குகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு , அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும் , அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன் .


பாடல் எண் : 2
ஊன்மிசை உதிரக் குப்பை, ஒருபொருள் இலாத மாயம்,
மான்மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதுஓர் வாழ்வு வேண்டேன்,
ஆன்நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே , திருவாரூரில் உள்ள தந்தையே , இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன் ; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 3
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சும் நான்கும்
துறுபறித்து அனைய நோக்கிச் சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும் நாள்தொறும் வணங்கு வாருக்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : மணம் கமழும் பூவும் , நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பூதங்கள் ஐந்தும் , ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும், தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும் , தாத்துவிகங்கள் அறுபதும் , ` காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் ` என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும் , ` சுத்தவித்தை , ஈசுரம் , சாதாக்கியம் , சத்தி ` என்னும் ஆகிய எல்லாம் புதராக , வேறாகக் கண்டு சொல்லின் . அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார் ; ஆதலின் , தம்மை , யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன் .


பாடல் எண் : 4
சொல்லிடில் எல்லை இல்லை, சுவைஇலாப் பேதை வாழ்வு,
நல்லதுஓர் கூரை புக்கு நலமிக அறிந்தேன் அல்லேன்,
மல்லிகை மாட நீடு மருங்கொடு நெருங்கி, எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம் , வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, யான், ஓட்டைக் குடில்களுள் துச்சிலிருந்து வாழ்ந்த, பேதைக்குரித்தாய, துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் , அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும், நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 5
நரம்பினோடு எலும்பு கட்டி, நசையினோடு இசைவுஒன்று இல்லாக்
குரம்பைவாய்க் குடி இருந்து, குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண் . யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , அடியேன் , எலும்புகளை நரம்பாற் கட்டின , விருப்பத்தோடு சிறிதும் இசை வில்லாத ( அருவருப்பைத் தருவதான ) குடிசைக்கண் குடியிருத்தலால் , நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 6
மணம்என மகிழ்வர் முன்னே, மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணம்எனச் சுடுவர் பேர்த்தே, பிறவியை வேண்டேன் நாயேன்,
பணைஇடைச் சோலைதோறும் பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம் , பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில் , மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகில் தாய் , தந்தை , சுற்றத்தார் என்போர் முன்பு ( இளமையில் ) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள் . பின்பு அவர்தாமே அவர்ளை , ` பிணம் ` என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங் காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ; ஆதலின் , இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன் : அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 7
தாழ்வுஎனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்,
ஆழ்குழிப் பட்ட போது அலக்கணில் ஒருவர்க்கு ஆவார்,
யாழ்முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு , அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி , பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு , மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர் ; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது , துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர் . அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 8
உதிர நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது, மலக் குகைம்மேல்
வருவது ஓர் மாயக் கூரை, வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடிக் கழல்இணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : கருமை நிறத்தையுடைய திருமாலும் , பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுத லுடையனாயினேன் .


பாடல் எண் : 9
பொய்த் தன்மைத்து ஆய மாயப் போர்வையை மெய்என்று எண்ணும்
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்கு வாருக்கு
அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.

         பொழிப்புரை : முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மைய தாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் ; அதற்கு , அஞ்சுதலுடையனாயினேன் .


பாடல் எண் : 10
தம்சொலார் அருள்ப யக்கும் தமியனேன், தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நணுகு வாரே.

         பொழிப்புரை : பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன் , அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய் , அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர் , நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள் .

                                    திருச்சிற்றம்பலம்.

                                          -----தொடரும் -----


 















No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...