அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வேழம் உண்ட (காசி)
முருகா!
ஆனை நோய் கண்ட விளாம்பழம்
போல நொந்து வாடும்,
வாடாமல் அருள் புரிவாய்.
தான
தந்தன தானன ...... தனதான
தான தந்தன தானன ...... தனதான
வேழ
முண்ட விளாகனி ...... யதுபோல
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி
நாளு
மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
மாள
அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா
காள
கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வேழம்
உண்ட விளாகனி ...... அது போல
மேனி கொண்டு, வியாபக ...... மயல்ஊறி,
நாளும்
மிண்டர்கள் போல்மிக ...... அயர்வு ஆகி,
நானும் நைந்து விடாது, அருள் ...... புரிவாயே,
மாள
அன்றுஅமண் நீசர்கள் ...... கழு ஏற,
வாதில் வென்ற சிகாமணி! ...... மயில்வீரா!
காள
கண்டன் உமாபதி ...... தருபாலா!
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே!
பதவுரை
மாள அன்று அமண் நீசர்கள் கழு ஏற ---
மாண்டு போவோம் என்று துணிந்து சமணர்களாகிய அசுத்தர்கள் கழுவில் ஏறுமாறு
வாதில் வென்ற சிகாமணி ---
திருஞானசம்பந்தரை அதிட்டித்து அனல்வாது புனல்வாது புரிந்து வெற்றி பெற்ற ஞானமணியே,
மயில் வீரா --- மயில் மீது எழுந்தருளி வரும்
வீரரே!
காள கண்டன் உமாபதி தருபாலா --- ஆலகால
விடத்தை உண்ட கரிய கண்டத்தை உடையவரும், உமையம்மையாரது
கணவரும் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரரே!
காசி கங்கையில் மேவிய பெருமாளே --- காசித்
திருத்தலத்தில் கங்கை நதிக் கரையில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!
வேழம் உண்ட விளாகனி அது போல மேனி கொண்டு --- யானை என்ற நோயினால் கேடு அடைந்ச ஓடுமாத்திரமாய் உள்ள விளாம்பழம் போலே உடல்
உள்ளீடு இன்றி,
வியாபக மயல் ஊறி --- விரிந்து வளர்ந்த
மயக்கத்தில் அடியேன் மூழ்கி,
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி ---
எந்நாளும் கொடியவர்களைப் போல மிகவும் வாட்டம் உற்று,
நானும் நைந்து விடாது அருள் புரிவாயே ---
அடியேன் அழிந்து போகாவண்ணம் திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
தோற்றால் மாண்டு போவோம் என்று அந்நாளில்
துணிந்து சமணர்களாகிய நீசர்கள் கழுவில் ஏறுமாறு, திருஞானசம்பந்தரை அதிட்டித்து அனல்வாது
புனல்வாது புரிந்து வெற்றி பெற்ற ஞானமணியே!
மயில் மீது எழுந்தருளி வரும் வீரரே!
ஆலகால விடத்தை உண்ட கரிய கண்டத்தை
உடையவரும், உமையம்மையாரது
கணவரும் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரரே!
காசித் திருத்தலத்தில் கங்கை நதிக்
கரையில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!
யானை என்ற நோயினால் கேடு அடைந்து
ஓடுமாத்திரமாய் உள்ள விளாம்பழம் போலே, உடல்
உள்ளீடு இன்றி, விரிந்து வளர்ந்த
மயக்கத்தில் அடியேன் மூழ்கி, எந்நாளும்
கொடியவர்களைப் போல மிகவும் வாட்டம் உற்று, அடியேன் அழிந்து போகாவண்ணம் திருவருள்
புரிவீர்.
விரிவுரை
வேழமுண்ட
விளாங்கனி ---
ஆனை
என்பது ஒரு நோய். அது விளாம்பழத்தைப் பற்றும்.
அதனால் அப் பழத்திற்குள் உள்ள சத்து முழுவதும் நீங்கி வெறும் ஓடு
மாத்திரமாக ஆகி விடும்.
இதே
போல், தேங்காய்க்கும் தேரை
என்ற ஒரு நோய் உண்டு. அந் நோய் கொண்ட
தேங்காயும் ஓடு மாத்திரமாகி விடும்.
"தேரையார்
தெங்கிளநீர் உண்ணார் பழிசுமப்பர்" என்றார் பொய்யாமொழிப் புலவர்.
அதுபோல், உடல் மெலிந்து, தவம் தியானம் முதலிய உள்ளீடு இன்றி, வெற்று மனிதனாக இருக்கின்றேன் என்று
சுவாமிகள் கூறுகின்றனர்.
மாள
அன்று அமண் ….. சிகாமணி ---
மதுரையில்
ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் மலிந்து அரசனைத் தம் வசமாக்கிக் கொண்டு சைவத்தை
அழித்து பலப்பல நியாயமற்ற செயல்களைச் செய்தனர்.
இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. எனினும் எளியாரை வலியார் ஒறுத்தால், வலியாரைத் தெய்வம் ஒறுக்கும். "பிறப்பு
ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர். மனிதனை மனிதன் தீண்டக்
கூடாது என்பதும், தீண்டினால்
நீராடவேண்டும் என்பதும் அறிவியலுக்குச் சிறிதும் பொருந்தாதவையாம். அங்ஙனம் இருக்க, சமணர்கள் திருநீறு பூசும் சைவர்களைக்
கண்டால் "கண்டு முட்டு" என்று நீராடுவதும், நீராடுகின்ற ஒருவனை மற்றொருவன் "ஏன்
குளிக்கின்றனை" என்று வினவுவானாயின், "பூச்சாண்டியைக் கண்டேன்"
என்று அவன் கூறியவுடன், கேட்டவன் உடனே "கேட்டு
முட்டு" என்று நீராடுவதும் ஆகிய இத்தகைய அநீதிகளை சமணர்கள்
மேற்கொண்டார்கள். கண்டால் குளிப்பதும், கேட்டால் குளிப்பதும் என்றால், இவை எத்துணைப் பெரிய கொடுமைகள்.
அதனால், திருவருள் சமணர்கட்குத் துணை புரியவில்லை.
தவிர பதினாறாயிரம் அடியார்கள் ஒருங்கே துயிலும் மடத்தில் தீ வைப்பது எத்துணைப்
பெரிய தீச் செயல்.
திருஞானசம்பந்தரும் சமணரும் அனல்
வாதம் புனல் வாதம் புரிந்தனர். தோற்றவர் கழு ஏறுவது என்பது அவ் வாதத்தின் முடிவு. சமணர்கள்
தோற்று, அரச நீதிப்படி கழு
ஏறினர்.
முருகப்
பெருமானுடைய சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யர்களில் ஒருவர் முருகனருள் பதிந்து
திருஞானசம்பந்தராகத் திருவவதாரம் புரிந்தனர்.ஸ்ரீகண்ட ருத்திரர் புரிந்த செயல்கள்
அனைத்தும் பரசிவத்தின் செயல்களாகத் தேவார திருவாசகம் கூறுவது போல், அபரசுப்ரமண்யத்தின் அவதாரங்களாகிய
உக்கிரப் பெருவழுதி, திருஞானசம்பந்தர்
ஆகியவர்களின் செயல்களை முருகவேளுடைய செயல்களாகக் கூறுகின்றனர்.
காளகண்டன் ---
காளம்
- விடம். தேவர்கள் இறவாமையைப் பெற விரும்பி பாற்கடல் கடைந்தனர். அதில், அவர்கள் விரும்பியதற்கு நேர் மாறாக, ஆலாலவிடம் தோன்றியது. அது உலகங்களை
எல்லாம் வெதுப்பித் துன்புறுத்தியது. அதனால் மிகவும் அஞ்சிய தேவர்கள் திருக்கயிலாய
மலையை அடைந்து, சிவபெருமானைத் தொழுது, "எம்பெருமானே, எங்கள் இடர் தீர்க்கும் எந்தை பிரானே
அடியேங்களுக்கு தலைவர் நீரே. நாங்கள் பாற்கடல் கடைந்ததில் முதல் விளைந்த விளைவு
தேவரீரூடையதே" என்று முறையிட்டனர். சிவபெருமான் அவ் விடத்தைக் கண்டத்தில் தரித்து
மணிகண்டராக விளங்கினார். அக் கண்டமே எல்லாருடைய கண்டங்களையும் நீக்கியது.
மால்எங்கே, வேதன்உயர் வாழ்வுஎங்கே, இந்திரன்செங்
கோல்எங்கே, வானோர் குடிஎங்கே, --- கோலம்சேர்
அண்டம்
எங்கே, அவ்வவ் அரும்பொருள் எங்கே, நினது
கண்டம்
அங்கே நீலம்உறாக் கால். --- திருவருட்பா.
காசி
கங்கையில் மேவிய பெருமாளே ---
தலங்களுக்கு
எல்லாம் தலையாயது காசி. மிகவும் புராதனமானது. என்றும் நின்று தன்னிடம்
அடைந்தார்க்கு அருள வல்லது. கங்கா நதி சூழப்பெற்றது. கங்கை நதிக்கரையில்
எழுந்தருளி உள்ள முருகவேளைக் குறித்து இப்பாடல் பாடப் பெற்றது.
கருத்துரை
திருஞானசம்பந்தராக
வந்து சைவம் வளர்த்த மயில் வீரரே,
சிவகுமாரரே, காசி மேவிய கந்தப் பெருமானே, ஆனை உண்ட விளாம்பழம் போலே நொந்து வாடும்
அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்.
No comments:
Post a Comment