அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தாரணிக்கு அதி (காசி)
முருகா!
மாதர் மயலிலே அலையும் எனது
சிந்தையை மாற்றி,
என்னைத் திருநீறு பூச வைத்து,
அடியேன் ஞானத்தைப் பொருந்துமாறு
அருள்.
தான
தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன ...... தனதான
தார
ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக
தாப
மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய ......
நினைவாகிப்
பூர
ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு ......
வினையேனைப்
பூசி
மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் ......
புரிவாயே
வார
ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போதுமேவிய
மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே
வாழு
முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் ......
புதல்வோனே
கார
ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய ......
கதிர்வேலா
கான
கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தாரணிக்கு
அதி பாவியாய், வெகு
சூது மெத்திய மூடனாய், மன
சாதனைக் களவாணி ஆய்,உறும் ...... அதிமோக
தாபம்
மிக்குஉள வீணனாய், பொரு
வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள்
தாம் உயச்செயும் ஏது தேடிய ......
நினைவாகி,
பூரணச்
சிவ ஞான காவியம்
ஓது தற்புணர்வுஆன நேயர்கள்
பூசும் மெய்த்திரு நீறு இடா, இரு ...... வினையேனைப்
பூசி, மெய்ப்பதம் ஆன சேவடி
காண வைத்து, அருள் ஞானம் ஆகிய
போதகத்தினை ஏயுமாறு அருள் ......
புரிவாயே.
வாரணத்தினையே
கராவு மு-
னே வளைத்திடு போது மேவிய
மாயவற்கு இதமாக வீறிய ...... மருகோனே!
வாழும்
முப்புர வீறு அது ஆனது
நீறு எழப் புகை ஆகவே செய்த
மாமதிப் பிறை வேணியார் அருள் ......
புதல்வோனே!
காரணக்
குறியான நீதியர்
ஆனவர்க்கு முன் ஆகவே, நெறி
காவியச் சிவநூலை ஓதிய ...... கதிர்வேலா!
கானகக்
குற மாதை மேவிய
ஞான சொல் குமரா! பராபர
காசியில் பிரதாபமாய் உறை ......
பெருமாளே.
பதவுரை
வாரணத்தினையே கராவு முனே --- கஜேந்திரன்
என்ற யானையை முதலையானது முன் ஒருநாள்
வளைத்திடு போது மேவிய --- வளைத்து இழுத்த
போது அங்கு விரைந்து வந்து உதவிய
மாயவற்கு இதமாக வீறிய மருகோனே --- மாயவனான
திருமாலின் மனம் மகிழும் திருமருகரே!
வாழு முப்புர வீறு அது ஆனது --- விண்ணுலகிலே
வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவு எல்லாம்
நீறு எழப் புகையாகவே செய்த --- சாம்பலாகிப்
புகை எழச் செய்த,
மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே ---
சிறந்த பிறைச்சந்திரனை அணிந்த சடையை உடைய சிவபிரான் அருளிய திருப்புதல்வரே!
காரணக் குறியான நீதியர் ஆனவர்க்கு முன் ஆகவே
--- யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,
இலக்காகவும்
உள்ள நீதிப் பெருமான் சிவபரம்பொருளின் சந்நிதிகளில்
நெறி காவியச் சிவநூலை ஓதிய கதிர்வேலா ---
அறநெறியை ஓதும் சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளிதிகழும் வேலாயுதரே!
கானகக் குற மாதை மேவிய --- காட்டில் இருந்த
குறப்பெண்ணாகிய வள்ளிநாயகியை விரும்பி அடைந்த,
ஞான சொற்குமரா --- ஞானமொழி பேசும்
குமார சுவாமியே!
பராபர --- மேலோர்க்கும் மேலானவரே!
காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே ---
காசி என்னும் திருத்தலத்தில் புகழோடு
வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
தாரணிக்கு அதி பாவியாய் --- உலகிலேயே அதிக பாவம் புரிந்தவனாய்,
வெகு சூது மெத்திய மூடனாய் --- மிக்க
சூது நிறைந்த மூடனாய்,
மன சாதனைக் களவாணியாய் --- மனத்திலே
பொருந்திய திருட்டுப் புத்தியை உடையவனாய்,
உறும் அதிமோக தாபம் மிக்கு உள வீணனாய்
--- மிகுந்த காம இச்சையில் தாகம் மிக்க வீணனாய்,
பொரு வேல்விழிச்சியர் ஆகும் மாதர்கள் --- போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொதுமகளிர்
தாம் உயச்செயும் ஏது தேடிய நினைவாகி ---
பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை தேடும் நினைவையே கொண்டு,
பூரணச் சிவஞான காவியம் --- பரிபூரணமான
சிவஞான நூல்களை
ஓது தற்புணர்வு ஆன நேயர்கள் --- பரிபூரணமான
சிவஞான நூல்களை ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள்
பூசு மெய்த்திரு நீறிடா இரு வினையேனை ---
பூசுகின்ற பெருமை வாய்ந்த திருநீற்றை அணிந்து கொள்ளாத இருவினைகளை உடையவனாகிய அடியேனை,
பூசி --- அத் திருநீற்றைப் பூசவைத்து,
மெய்ப்பதமான சேவடி --- உண்மைப் பதவியாகிய
உன் திருவடிகளை
காண வைத்து --- அடியேன் தரிசிக்கச்
செய்து,
அருள் ஞானமாகிய போதகத்தினை ஏயுமாறு அருள் புரிவாயே
--- திருவருள் ஞானம் என்ற தூய அறிவும் எனக்குப் பொருந்துமாறு அருள் புரிவாயாக.
பொழிப்புரை
கஜேந்திரன் என்ற யானையை முதலையானது
முன் ஒருநாள் வளைத்து இழுத்த போது, அங்கு
விரைந்து வந்து உதவிய மாயவனான திருமாலின் மனம் மகிழும் திருமருகரே!
விண்ணுலகிலே வாழ்ந்த திரிபுரங்களின்
பொலிவெல்லாம் சாம்பலாகிப் புகை
எழச் செய்த, சிறந்த பிறைச்சந்திரனை
அணிந்த சடையை உடைய சிவபிரான் அருளிய திருப்புதல்வரே!
யாவற்றிற்கும் மூல காரணனாகவும், இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான் சிவபரம்பொருளின் சந்நிதியில், அறநெறியை ஓதும் சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளிதிகழும் வேலாயுதரே!
காட்டில் இருந்த குறப்பெண்ணாகிய வள்ளிநாயகியை
விரும்பி அடைந்த, ஞான மொழி பேசும் குமார
சுவாமியே!
மேலோர்க்கும் மேலானவரே!
காசி என்னும் திருத்தலத்தில் புகழோடு
வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
உலகிலேயே அதிக பாவம் புரிந்தவனாய், மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்திலே பொருந்திய திருட்டுப் புத்தியை
உடையவனாய், மிகுந்த காம இச்சையில்
தாகம் மிக்க வீணனாய், போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர் பிழைப்பதற்கு உதவும்
செல்வத்தை தேடும் நினைவையே கொண்டு, பரிபூரணமான சிவஞான நூல்களை ஓதுதலில்
விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் பூசுகின்ற பெருமை
வாய்ந்த திருநீற்றை அணிந்து கொள்ளாத இருவினைகளை உடையவனாகிய அடியேனை, அத் திருநீற்றைப் பூசவைத்து, உண்மைப் பதவியாகிய உன் திருவடிகளை
அடியேன் தரிசிக்கச் செய்து, திருவருள் ஞானம் என்ற
தூய அறிவும் எனக்குப் பொருந்துமாறு அருள் புரிவாயாக.
விரிவுரை
வாரணத்தினையே
கராவு முனே வளைத்திடு போது மேவிய மாயவற்கு ---
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்
உடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு
பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த
நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணல்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும்.
அவ்வழகிய
மலையில், வளமை தங்கிய ஒரு
பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ, அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன்
இருந்தது அத்தடாகம். அந்தத் திரிகூடமலையின் காடுகளில் தடையின்றி உலாவிக்
கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த்துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக்கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது.
அப்போது
ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய
வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித்
தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி
செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம்
நிகழ்ந்தது. கஜேந்திரம் உணவு இன்மையாலும்
முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும்
செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து, துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத்
தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர்.
சிவபெருமான்
தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை
நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர்.
ஒரு
தலைவன், நீ இந்த வேலையைச்
செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று
அப்பணியாளன் வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெளிவாகும்.
மாதர்கள் தாம் உயச்செயும் ஏது தேடிய நினைவாகி ---
பொதுமாதர்களின்
அழகிலே மயங்கி, அவர்களுக்குத்
தருவதற்காகப் பொருளைத் தேடி அலைவர்.
..... ...... ..... பொருள்தேடிச்
சிறிது
கூட்டிக் கொணர்ந்து, தெருவுலாத்தி, திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமேயான்
திரியும்
மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
தெளிய மோக்ஷத்தை என்று ...... அருள்வாயே.. ---
(அறிவிலாப்) திருப்புகழ்.
பூரணச்
சிவ ஞான காவியம் ஓது தற்புணர்வான
நேயர்கள்
பூசும்
மெய்த்திரு நீறு ---
அடியார்களுக்கு
உரிய சாதனங்களில் திருநீறு தலைசிறந்த ஒன்று.
சிவநெறி
--- நீற்றுநெறி. "தூய திருநீற்று நெறி எண்திசையும் தனி நடப்ப" என்றும், "எல்லை இல்லா நீற்று
நெறி" என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க. எல்லை இல்லாதது
என்றால்,
எக்காலத்தும்
அழியாத இயல்பு உடையது என்றும், இன்ன காலத்தில் தோன்றியது என்று அறிய முடியாத
இயல்பு உடையது என்றும் பொருள் கண்டனர் பெரியோர்.
நவநாகரீகம்
தாண்டவம் புரியும் இக்காலத்தில் “திருநீறு அணிவது அவசியமா? அணிவதனால் வரும் பயன் யாது?” என்றெல்லாம் வினவுகின்றனர். அதற்கு விடை
நாம் கூறவேண்டியதில்லை; அதன் பேரே விடை
தருகிறது. “திருநீறு” திரு - தெய்வத்தன்மை, நீறு - வினைகளை நீறாக்குவது என்பதாம்.
எனவே,
வினைகளை எரித்து நீறாக்கித் தெய்வத் தன்மையைக் கொடுக்க வல்லதனால் அதற்குத் "திருநீறு"
என்னும் அழகிய திருநாமம் அமைந்துள்ளது. மேலான ஐஸ்வரியத்தைத் தருந் தகைமையுடையதால்
“விபூதி” எனப்பெயர் பெற்றது. இம்மையில் பெருந்திருவைக் கொடுத்து மறுமையில்
முத்தியையும் கொடுக்கும் இத்திருநீறு.
முத்தி
தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியம்
ஆவது நீறு, தக்கோர் புகழ்வது
நீறு,
பத்தி
தருவது நீறு, பரவ இனியது நீறு,
சித்தி
தருவது நீறு, திரு ஆலவாயான்
திருநீறே. --- திருஞானசம்பந்தர்.
எல்லா
நிலையினரும் அவசியமாகத் திருநீறு தரித்தல் வேண்டும். திருநீற்றின் பெருமையை
விளக்குவதற்காகவே ஓர் உபநிடதம் எழுந்துள்ளது. அது “பஸ்மஜாபாலம்” என்பதாம். அதில்
அடியிற் கண்டவாறு ஒரு விஷயம் குறிக்கப்பட்டுள்ளது.
யதிர்
பஸ்மதாரணம் த்யக்த்வா ஏகதா உபோஷ்ய
த்வாதச
ஸஹஸ்ர ப்ரணவம் ஜப்த்வா கத்தோ பவதி !!
பொருள்:-
சந்யாசியும் ஒருவேளை பஸ்மதாரணம் (விபூதி தரிக்க) செய்து கொள்ளத் தவறுவானேல்
உபவாசமிருந்து பிரணவஜபம் பன்னீராயிரத்தால் அப்பாவம் நீங்கி பரிசுத்தனாகக் கடவன்.
சிவபெருமான்
எக்காலமும் நீங்காது நின்று நிருத்தம் புரியும் நடனசாலை எது என்றால், முப்போதும் திருநீறணிந்து நித்தியமான, பஞ்சாட்சர ஜெபம் புரியும் அன்பர்களுடைய
திருவுள்ளமேயாம்.
போதுவார்
நீறு அணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை
ஓதுவார்
உள்ளம் என உரைப்பாம்-நீதியார்
பெம்மான்
அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மான்
நின்(று) ஆடும் அரங்கு.
யாது
பாதகம் புரிந்தவர் ஆயினும், இகழும்
பாதகங்களில்
பஞ்சமா பாதகர் எனினும்,
பூதி
போற்றிடில், செல்வராய் உலகெலாம்
போற்றத்
தீது
தீர்ந்தனர் பவித்திரர் ஆகியே திகழ்வார். உபதேசகாண்டம்
ஆதலால், சைவப்பெருமக்களாகப் பிறக்கும்
பெருந்தவம் புரிந்த யாவரும் திருநீற்றை அன்புடன் தரித்து, அதனை ஒரு பையில் உடன் வைத்திருந்து, தமது மக்களையும் தரிக்கச் செய்து, எல்லா நலன்களையும் பெறுவார்களாக.
“திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்ற தமிழ் மறையாம் திருவாசகத்தின்
உண்மையையும் ஓர்க.
திருநீறு
வாங்கும் முறை குறித்தும், திருநீறு அணியும் முறை குறித்தும் குமரேச சதகம் என்னும்
நூலில் கூறியுள்ளது காண்க...
திருநீறு வாங்கும்
முறை
பரிதனில்
இருந்தும், இயல் சிவிகையில் இருந்தும், உயர்
பலகையில் இருந்தும்,மிகவே
பாங்கான
அம்பலந் தனிலே இருந்தும்,
பருத்ததிண் ணையிலிருந்தும்,
தெரிவொடு
கொடுப்பவர்கள் கீழ்நிற்க, மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்,
செங்கைஒன்றாலும்,விரல்
மூன்றாலும் வாங்கினும்,
திகழ்தம் பலத்தினோடும்,
அரியதொரு
பாதையில் நடக்கின்ற போதினும்,
அசுத்தநில மான அதினும்,
அங்கே
தரிக்கினும், தந்திடின் தள்ளினும்,
அவர்க்குநரகு என்பர்கண்டாய்,
வரிவிழி
மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே!
மயிலேறி
விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
திருநீறு அணியும்
முறை
பத்தியொடு
சிவசிவா என்று,திரு நீற்றைப்
பரிந்துகை யால்எடுத்தும்,
பாரினில்
விழாதபடி அண்ணாந்து, செவியொடு
பருத்தபுய மீதுஒழுக,
நித்தம்
மூவிரல்களால் நெற்றியில் அழுந்தல்உற
நினைவாய்த் தரிப்பவர்க்கு,
நீடுவினை
அணுகாது, தேகபரி சுத்தமாம்,
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு
நித்தம்விளை யாடுவன், முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு,
சஞ்சலம்
வராது,பர கதி உதவும், இவரையே
சத்தியும் சிவனும் என்னலாம்,
மத்துஇனிய
மேருஎன வைத்து அமுதினைக் கடையும்
மால்மருகன் ஆனமுருகா!
மயிலேறி
விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
திருநீற்றின்
பெருமை குறித்து வள்ளல் பெருமான் அருளி உள்ள திருப்பதிகங்களையும் அன்பர்கள் ஓதி
உணர்ந்து தெளிக.
திவசங்கள்
தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்,
பவசங்கடம்
அறும்,இவ்விக பரமும்புகழ் பரவும்,
கவசங்கள்
எனச் சூழ்ந்துஉறு கண்ணேறு அது தவிரும்,
சிவசண்முக
எனவே அருள் திருநீறு அணிந் திடிலே.
மால்ஏந்திய
சூழலார்தரு மயல்போம்,இடர் அயல்போம்,
கோல்ஏந்திய
அரசாட்சியும் கூடும்,புகழ் நீடும்,
மேல்ஏந்திய
வானாடர்கள் மெலியாவிதம், ஒருசெவ்
வேல்ஏந்திய
முருகா! என வெண்ணீறுஅணிந் திடிலே.
தவம்உண்மையொடு
உறும்,வஞ்சகர் தம்சார்வு அது
தவிரும்,
நவம்அண்மிய
அடியாரிடம் நல்கும்,திறன் மல்கும்,
பவனன்புனல்
கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக!
எனவேஅருள் திருநீறு அணிந் திடிலே.
துயில்ஏறிய
சோர்வும் கெடும், துயரம் கெடும், நடுவன்
கையில்
ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால்,
குயில்ஏறிய
பொழில்சூழ்திருக் குன்று ஏறி நடக்கும்
மயில்ஏறிய
மணியே! என வளர்நீறு அணிந் திடிலே.
தேறாப்பெரு
மனமானது தேறும், துயர் மாறும்,
மாறாப்பிணி
மாயும்,திரு மருவும்,கரு ஓருவும்,
வீறாப்பொடு
வருசூர்முடி வேறாக்கிட வரும் ஓர்
ஆறுஅக்கரப்
பொருளே! என அருள்நீறு அணிந் திடிலே.
அமராவதி
இறையோடுநல் அயனுந்திரு மாலும்
தமர்
ஆகுவர், சிவஞானமும் தழைக்கும், கதி சாரும்,
எமராஜனை
வெல்லுந்திறல் எய்தும், புகழ் எய்தும்,
குமரா!
சிவ குருவே! எனக் குளிர்நீறு அணிந் திடிலே.
மேலாகிய
உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய
இருள்நீங்கி, நல் வாழ்வைப்பெறு வார்காண்,
சீலா!
சிவ லீலா!பர தேவா!உமை யவள்தன்
பாலா!கதிர்
வேலா! எனப் பதிநீறுஅணிந் திடிலே.
அகமாறிய
நெறிசார்குவர், அறிவாம்உரு அடைவார்,
மிகமாறிய
பொறியின்வழி மேவாநலம் மிகுவார்,
சகமு
மாறினும் உயர்வானிலை தாம்மாறினும் அழியார்,
முகம்
ஆறுஉடை முதல்வா! என முதிர்நீறு அணிந் திடிலே.
சிந்தாமணி
நிதி, ஐந்தரு செழிக்கும் புவனமும், ஓர்
நந்தா
எழில் உருவும்,பெரு நலனும்,கதி நலனும்,
இந்தா
எனத் தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம்,
கந்தா!
சிவன் மைந்தா! எனக் கனநீறு அணிந் திடிலே.
எண்ணார்புரம்
எரித்தார்அருள் எய்தும்,திரு நெடுமால்
நண்ணாததோர்
அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்,
பண்ணார்மொழி
மலையாள்அருள் பாலா!பனி ரண்டு
கண்ணா!எமது
அண்ணா! எனக் கனநீறு அணிந் திடிலே.
திருச்சிற்றம்பலம்
பாடற்கு
இனிய வாக்கு அளிக்கும்,
பாலும் சோறும் பரிந்து அளிக்கும்.
கூடற்கு
இனிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும், குணம்அளிக்கும்,
ஆடற்கு
இனிய நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
தேடற்கு
இனிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன்று இடுநீறே.
கருமால்
அகற்றும், இறப்பதனைக்
களையும் நெறியும் காட்டுவிக்கும்,
பெருமால்
அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசைஅறுக்கும்,
அருமால்
உழந்த நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
திருமால்
அயனும் தொழுதேத்தும்
சிவாய நமஎன்று இடுநீறே.
வெய்ய
வினையின் வேர்அறுக்கும்,
மெய்ம்மை ஞான வீட்டில்அடைந்து
உய்ய
அமல நெறிகாட்டும்,
உன்னற்கு அரிய உணர்வுஅளிக்கும்,
ஐயம்
அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
செய்ய
மலர்க்கண் மால்போற்றும்
சிவாய நமஎன்று இடுநீறே.
கோல
மலர்த்தாள் துணைவழுத்தும்
குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்,
நீல
மணிகண் டப்பெருமான்
நிலையை அறிவித்து அருள்அளிக்கும்,
ஆல
வினையால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம்
அளிக்கும், திருஅளிக்கும்,
சிவாய நமஎன்று இடுநீறே.
வஞ்சப்
புலக்காடு எறியஅருள்
வாளும் அளிக்கும், மகிழ்வு அளிக்கும்,
கஞ்சத்
தவனும் கரியவனும்
காணற்கு அரிய கழல்அளிக்கும்,
அஞ்சில்
புகுந்த நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல்
புலவர் புகழ்ந்து ஏத்தும்
சிவாய நமஎன்று இடுநீறே.
கண்கொள்
மணியை, முக்கனியை,
கரும்பை, கரும்பின் கட்டிதனை,
விண்கொள்
அமுதை, நம்அரசை,
விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்,
அண்கொள்
வினையால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள்
முனிவர் சுரர்புகழும்
சிவாய நமஎன்று இடுநீறே.
நோயை
அறுக்கும் பெருமருந்தை,
நோக்கற்கு அரிய நுண்மைதனை,
தூய
விடைமேல் வரும்நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்,
ஆய
வினையால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய
அயன்மால் நாட அரிதாம்
சிவாய நமஎன்று இடுநீறே.
எண்ண
இனிய இன்அமுதை,
இன்பக் கருணைப் பெருங்கடலை,
உண்ண
முடியாச் செழுந்தேனை,
ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண
வினையால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ணம்
அளிக்கும், திறம்அளிக்கும்,
சிவாய நமஎன்று இடுநீறே.
சிந்தா
மணியை, நாம் பலநாள்
தேடி எடுத்த செல்வம் அதை,
இந்துஆர்
வேணி முடிக்கனியை,
இன்றே விடைமேல் வரச்செயும் காண்,
அந்தோ!
வினையால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா
மரையோன் தொழுதேத்தும்
சிவாய நமஎன்று இடுநீறே.
உள்ளத்து
எழுந்த மகிழ்வை, நமக்கு
உற்ற துணையை, உள்உறவை,
கொள்ளக்
கிடையா மாணிக்கக்
கொழுந்தை, விடைமேல் கூட்டுவிக்கும்,
அள்ளல்
துயரால் நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக்
கடலான் புகழ்ந்தேத்தும்
சிவாய நமஎன்று இடுநீறே.
உற்ற
இடத்தில் உதவ,நமக்கு
உடையோர் வைத்த வைப்புஅதனை,
கற்ற
மனத்தில் புகுங்கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம்
அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம்
அகற்றித் திறல் அளிக்கும்,
சிவாய நமஎன்று இடுநீறே.
முருகப்
பெருமானை வேண்டித் திருநீறு அணியவேண்டும் என்றும், சிவபெருமானை நினைந்து திருநீறு அணியவேண்டும் என்றும்
இருவிதமாகச் சொல்லப்பட்டு உள்ளதே என்று ஐயம் தோன்றலாம். ஐம்முகச் சிவம் வேறு, அறுமுகச் சிவம் வேறு
அல்ல. இரண்டும் ஒன்றே என்பதை உணர்தல் வேண்டும். "பீலியில் இவரும் சிவனே, என் பிழை பொறுத்து
ஆள்வது உன் கடனே" என்று பாம்பன் சுவாமிகள் பாடி இருக்கும் உண்மையைத் தெளிக. பீலி என்பது பீலியை உடைய
மயிலைக் குறிக்கும். மயில் மீது வரும் சிவனே என்று முருகப் பெருமானைக் குறித்தார்.
பூசி, மெய்ப்பதமான சேவடி காண வைத்து
அருள்
---
திருநீறு
பூசும் நெறியில் நம்மை இறைவன் வைத்து அருளவேண்டும். எத்தனையோ பிறவிகளில் செய்த நல்ல
தவத்தின் பயனாகவே, திருநீற்றினைப் பூசும் பெரும்பேற்றை இறைவன் நமக்கு அருளுகின்றான். திருவீழிமிழலையில், சலந்தரனைக் கொன்ற
சக்கர ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டி, திருமால் ஆனவர் திருநீற்றை
நிறையப் பூசி வழிபட்டார் என்றால், நாமும் அணிந்து நலம் பலவும் பெறலாமே.
நீற்றினை
நிறையப் பூசி,
நித்தல்
ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுழி, ஒருநாள் ஒன்று குறைய, கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு
ஆழி நல்கி,
அவன்
கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து
அளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. ---
அப்பர்.
திருநீற்றினைத்
தனக்குப் பூச வேண்டும் என்று அப்பர் பெருமான் இறைவனிடம் வேண்டிப் பெற்றார்.
ஆஆ, சிறுதொண்டன் என்
நினைந்தான் என்று அரும்பிணிநோய்
காவாது
ஒழியில் கலக்கும் உன் மேல் பழி, காதல்செய்வார்
தேவா!
திருவடி நீறு என்னைப் பூசு, செந்தாமரையின்
பூஆர்
கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே.
இதன்
பொருள் --- செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே!
`ஐயோ` இச்சிறு தொண்டன்
என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும்
தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும்.
ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது
பூசுவாயாக.
மாமதிப்பிறை
வேணியார் ---
மலர்மிசை வாழும் பிரமனது மானத புத்திரருள்
ஒருவனாகிய தட்சப் பிரசாபதி, தான் பெற்ற அசுவினி
முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தி ஏழு பெண்களையும், அநுசூயா தேவியின் அருந்தவப் புதல்வனாகிய
சந்திரன் அழகிற் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும்
பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச்
சந்திரனோடு அனுப்பினன்.
சந்திரன்
சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை
உரோகணி என்ற மாதர் இருவரும் பேரழகுடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேர் உவகையுடன்
கலந்து, ஏனையோரைக்
கண்ணெடுத்தும் பாரான் ஆயினன். மற்றைய மாதர்கள் மனம் கொதித்து தம் தந்தையிடம் வந்து
தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, குமுதபதியாகிய சந்திரனை விளித்து “நின்
அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத்
தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.
அவ்வாறே
சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின்
ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் ஏகித்
தனக்கு உற்ற இன்னல்களை எடுத்தோதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று
வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர் பால்
இதனைக் கூறுதியேல், அவர் தன் மகனாகிய
தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண் புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தை என்று
என் சொல்லைக் கேளான்; ஆதலால், நீ கயிலை அடைந்து கருணாமூர்த்தியாகியக்
கண்ணுதற்கடவுளைச் சரண் புகுவாயேல் அப்பரம பிதா நின் அல்லலை அகற்றுவார்” என்று
இன்னுரை பகர, அது மேற்கண்ட
சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று,
நந்தியெம்பெருமானிடம்
விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து,
அருட்பெருங்கடலாகியச்
சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த
சாபத்தை விண்ணப்பித்து, “பரமதயாளுவே! இவ்விடரை
நீக்கி இன்பமருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.
மலைமகள்
மகிணன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை
கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “நின் கலைகளில் ஒன்று நம் முடிமிசை இருத்தலால்
நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது”
என்று கருணைப் பாலித்தனர்.
எந்தை
அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்
சிந்தை
செய்திடேல், எம்முடிச் சேர்த்திய
சிறப்பால்,
அந்தம்
இல்லை, இக் கலைஇவண்
இருந்திடும் அதனால்
வந்து
தோன்றும்நின் கலையெலாம் நாடொறும் மரபால். --- கந்தபுராணம்.
காரணக்
குறியான நீதியர் ---
நமது
கண்ணுக்குப் புலப்படுகின்ற, புலப்படாத அத்துணைப் பொருள்களுக்கும் காரணமான
குறியாம நின்றவர் சிவபெருமான். அந்தக்
குறியே சிவலிங்கமாகும்.
காணாத
அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்,
நீள்நாகம்
அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்,
நாணாது
நேடிய மால் நான்முகனும் காண, நடுச்
சேண்ஆரும்
தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்.. --- பெரியபுராணம்.
தோற்றக்
குறிப்பையும் ஒடுக்கதையும் உணர்த்துவது சிவலிங்கம். உலகங்களும் உயிர்களும்
தோன்றுவதற்கு நிலைக்களமாக இருப்பது சிவலிங்கம்.
ஒன்றும்
புலப்படாத அருவில் இருந்து, புலப்படும் ஒரு
அண்டவடிவான பிழம்பு உருவமானது பற்றி உருவமும், கைகால் முகம் முதலிய அங்கம் எவையும்
புலப்படாமை பற்றி அருவமும் ஒரு சேரக் காணப்படுதலின் சிவலிங்கத்தை அருவுருவம் என்பார். அருவில் இருந்து அருவுருவம் தோன்ற, அம் முறையே அருவுருவில் இருந்து உருவம்
தோன்றும். சிவபெருமான் திருமால் பிரமன் காண இயலாத நிலையில், சோதிப் பிழம்பாக அருவுருவ நிலையிலே
நின்றது தான் சிவலிங்கம் எனப்படும் குறி.
சிவலிங்கத்தை, இக் கருத்தோடு கண்டு வழிபட வேண்டும்.
சிலர்,
கண், காது,மூக்கு, மீசை
முதலியவற்றை வரைந்து மயங்குவதோடு அல்லாமல், காண்போர் அறிவையும்
மயக்குகின்றார்கள். அறியாமையே ஆகும்.
முன்
ஆகவே,
நெறி
காவியச் சிவநூலை ஓதிய கதிர்வேலா ---
இது
திருஞானசம்பந்தரைக் குறிக்கும். சிவநூலாகிய தேவாரத்தை இறைவன் திருமுன்னே திருக்கோயில்கள்
தோறும் சென்று ஓதி, எல்லா இல்லா நீற்று நெறி நின்று ஓங்கச் செய்தவர் திருஞானசம்பந்தப்
பெருமான்.
கருத்துரை
முருகா!
மாதர் மயலிலே அலையும் எனது சிந்தையை மாற்றி, என்னைத் திருநீறு பூச வைத்து, ஞானத்தைப் பொருந்த
அருள்.
No comments:
Post a Comment