மருத்துவர் இலக்கணம்




51.  மருத்துவர் இலக்கணம்

தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு
     சரீரலட் சணம்அ றிந்து,
  தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்
     தமதுவா கடம்அ றிந்து

பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்
     பிரயோக மோடு பஸ்மம்
  பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
     பேர்பெறுங் குணவா கடம்

சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு
     தூயதை லம்லே கியம்
  சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்
     தோற்றியே அமிர்த கரனாய்,

ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆயுர்வேதன்
     ஆகும்; எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     எமது அருமை மதவேள் --- எமது அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

      தாதுப் பரீட்சை வரு கால தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து --- நாடித் துடிப்பையும், காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,

     தன்வந்திரி கும்பமுனி கொங்கணர் சித்தர் தமது வாகடம் அறிந்து --- தன்வந்திரியும் அகத்தியரும் கொங்கணரும் சித்தர்களும் அருளிய மருத்துவ நூலைக் கற்று உணர்ந்து,
     பேதம் பெருங் குளிகை சுத்திவகை மாத்திரை பஸ்மம்
பிரயோகமோடு பிழையாது --- பலவகைப்பட்ட பெருமை மிக்க
குளிகைகளையும், மருந்து செய்ய உண்டான  சரக்குகளைத் தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும் பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று,

     மண்டூர செந்தூர லட்சணம் பேர் பெறும் குணவாகடம் சோதித்து --- மண்டூரம் செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து,

     மூலிகா வித நிகண்டும் கண்டு --- பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து,

     தூய தைலம் லேகியம் சொல் பக்குவம் கண்டு --- தூய தைலத்தையும் இலேகியமும் செய்யும் முறையைச் சொல்லியுள்ள பக்குவத்தை அறிந்து,

     வருரோக நிண்ணயம் தோற்றி --- வரும் நோய்களின் முடிவை நிச்சயித்து உணர்ந்து,

     அமிர்த கரனாய் --- கை நலம் உடையவனாய்,

     ஆதிப் பெருங்கேள்வி உடையன் --- காலகாலமாய் வழிவழியாக வரும் கேள்வி அறிவையும் உடையவனே,

     ஆயுர்வேதன் ஆகும் ---  மருத்துவன் ஆவான்.

     விளக்கம் --- இங்குக் கூறப்படும் மருத்துவர் இலக்கணம் பொதுவானது.  நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம் என இருவகைப்படும். ‘தேரர் கொங்கணச் சித்தர் தமது வாகடம் அறிந்து, என்பதனால் பொது என உணரலாம். வாகடம், மருத்துவ நூல் - வளி பித்தம் கபம் (வாத பித்த சிலேத்துமம்) என்னும் மூன்று நரம்புகளின் இயலை அறிவதுதான் தாதுப் பரீட்சை. "மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று" என்பது திருக்குறள்.

     எவருக்கும் கோடை பனி மாரி எனும் காலங்களில் ஒரே வகையாக உடல் நிலை இராது. நாடுதோறும் தட்ப வெப்ப நிலை வேறுபடுவதால் மக்களின் உடல்நிலை ஒருவகையாக இராது. ஒரே நாட்டினும் மக்களின் உடல்நிலை வேறுவேறு வகையாக இருக்கும். ஆகையால், ‘காலத் தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து' என்றார்.

     சுத்தி செய்யாத மருந்துச் சரக்குகள் கெடுதியை விளைவிக்கும். மண்டூரம் என்பது செங்கல்லில் சிட்டம் பிடித்த கல்லைக் கொண்டு பிற மருந்துச் சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி; செந்தூரம் என்பது இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர் நன்கு தேர்ந்து இருக்கவேண்டும்.

     மூலம், மூலிகை - வேர்.

     நிகண்டு - அகராதி போன்ற ஒரு நூல்.

     ஏட்டுப் படிப்பை விடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க, ‘ஆதிப் பெருங்கேள்வி உடையன்' ஆக வேண்டும் என்றார். எந்நலம் இருப்பினும் கைந்நலம் என்னும் கைராசி ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத் தெரிவிக்க ‘அமிர்த கரனாய்' என்றார்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...