அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தாது மாமலர்
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
விலைமாதர் உறவை
விட்டு,
அடியார்களின் உறவை அருள்.
தான
தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன ...... தனதான
தாது
மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி ......
பிடியாலே
சாடை
பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன ......
நடையாலே
மோதி
மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல் ......
தருமானார்
மோக
வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு ......
மருள்வாயே
காத
லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன் ......
மருகோனே
காதல்
மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி ......
சையில்வாழ்வே
வேத
நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை ......
புரிகோவே
வீறு
சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தாது
மாமலர் முடியாலே, பத-
றாத நூபுர அடியாலே, கர
தாளம் ஆகிய நொடியாலே, மடி ...... பிடியாலே,
சாடை
பேசிய வகையாலே, மிகு
வாடை பூசிய நகையாலே, பல
தாறு மாறு சொல் மிகையாலே, அன ...... நடையாலே,
மோதி
மீறிய முலையாலே, முலை
மீதில் ஏறிய கலையாலே, வெகு
மோடி நாணய விலையாலே, மயல் ...... தருமானார்
மோக
வாரிதி தனிலே நாள்தொறும்
மூழ்குவேன், உனது அடியார் ஆகிய
மோன ஞானிகள் உடனே சேரவும் ...... அருள்வாயே.
காதலாய்
அருள் புரிவாய், நான்மறை
மூலமே என, உடனே மா கரி
காண நேர்வரு திருமால் நாரணன் ......
மருகோனே!
காதல்
மாதவர் வலமே சூழ், சபை
நாதனார் தமது இடமே வாழ் சிவ-
காம நாயகி தரு பாலா! புலி ......
சையில்வாழ்வே!
வேத
நூன்முறை வழுவாமே, தினம்
வேள்வியால் எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை ......
புரிகோவே!
வீறு
சேர் வரை அரசாய் மேவிய
மேரு மால்வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய ......
பெருமாளே.
பதவுரை
நான் மறை மூலமே காதலாய்
அருள் புரிவாய் என --- "நான்கு வேதங்களுக்கும் மூலப்பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக" என்று
கூவி அழைக்க,
உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன்
மருகோனே --- அந்த கயேந்திரன் என்னும் யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே
வந்து உதவிய திருமால் நாராயணனுடைய திருமருகரே!
காதல் மாதவர் வலமே
சூழ் சபை நாதனார் தமது --- பத்தியும் பெரும் தவமும் உடைய
பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானுடைய
இடமே வாழ் சிவகாம நாயகி தரு பாலா --- இடதுபாகத்தில்
வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே!
புலிசையில் வாழ்வே --- புலிசை என்னும்
சிதம்பரத்தில் வாழும் செல்வமே!
வேத நூன் முறை
வழுவாமே ---
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே,
தவறாமல்
தினம் வேள்வியால் --- நாள் தோறும்
செய்யும் வேள்விகளால்
எழில் புனை மூவாயிர மேன்மை வேதியர் மிகவே
பூசனை புரி கோவே --- அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக
நன்றாகப் பூஜை செய்யும் தலைவரே!
வீறு சேர் வரை அரசாய்
மேவிய மேரு மால் வரை என --- பொலிவு பொருந்திய மலை அரசாக
விளங்கும் மேரு மலை போல
நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீது
ஏறிய பெருமாளே --- உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின்
மேல் விளங்கும் பெருமையில் மிக்கவரே!
தாது மா மலர்
முடியாலே
--- மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்களைச் சூடிய கூந்தலாலும்,
பதறாத நூபுர அடியாலே --- பதறாமல்
நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும்,
கர தாளமாகிய நொடியாலே --- கைக்கொண்டு
இடுகின்ற தாள ஒலியாலும்,
மடி பிடியாலே --- (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம்
வசப்படுத்துவதாலும்,
சாடை பேசிய வகையாலே --- ஜாடையாகப்
பேசும் வழக்க வகையாலும்,
மிகு வாடை பூசிய நகையாலே --- மிக்க
வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும்,
பல தாறுமாறு சொல் மிகையாலே --- பல
விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செருக்காலும்,
அ(ன்)ன நடையாலே --- அன்னம் போன்ற
நடையாலும்,
மோதி மீறிய முலையாலே --- முன்னே தாக்கி
மேலெழுந்த முலைகளாலும்,
முலை மீதில் ஏறிய கலையாலே ---
முலைகளின் மீது அணிந்த ஆடையாலும்,
வெகு மோடி நாணய விலையாலே மயல் தரு மானார்
--- பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும்
(வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின்
மோக வாரிதி தனிலே
நாள்தொறும் மூழ்குவேன் --- காமக் கடலில் தினமும் முழுகுகின்ற
நான்
உனது அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே
சேரவும் அருள்வாயே --- உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து இருப்பதற்கு
அருள் புரிவாயாக.
பொழிப்புரை
"நான்கு வேதங்களுக்கும் மூலப்பொருளே, அன்பு வைத்து அருள்
புரிவாயாக" என்று கூவி அழைக்க,
அந்த
கயேந்திரன் என்னும் யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால்
நாராயணனுடைய திருமருகரே!
பத்தியும் பெரும் தவமும் உடைய
பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானுடைய
இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமவல்லி
பெற்ற குழந்தையே!
புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே!
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள்தோறும் செய்யும் வேளிவிகளால் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை
மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவரே!
பொலிவு மிக்க மலை அரசாக விளங்கும்
மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின்
மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமையில் மிக்கவரே!
மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்களைச்
சூடிய கூந்தலாலும், பதறாமல் நடக்கும்
சிலம்புகள் அணிந்த பாதத்தாலும்,
கைக்கொண்டு
இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்)
மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைப் பொருள்களைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும்,
பல
விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செருக்காலும், அன்னம் போன்ற
நடையாலும், முன்னே தாக்கி
மேலெழுந்த முலைகளாலும், முலைகளின் மீது
அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும்
சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத்
தருகின்ற விலைமாதர்களின் காமக் கடலில் தினமும்
முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து இருப்பதற்கு
அருள் புரிவாயாக.
விரிவுரை
இத்
திருப்புகழின் முதல் பகுதியில் விலைமாதரின் லீலைகளை எடுத்து இயம்பி, நம்மை நல்வழிப் படுத்துகின்றார் சுவாமிகள்.
மோக
வாரிதி தனிலே நாடொறும் மூழ்குவேன், உனது அடியார் ஆகிய மோன ஞானிகள் உடனே சேரவும் அருள்வாயே ---
மோகம்
- ஆசை, காமமயக்கம், மாயையால்
நிகழும் மயக்க உணர்ச்சி, மன மயக்கம்.
ஐம்புலன்களின்
வழியே சென்று இன்பத்தை அனுபவிக்க ஆசை கொண்டு, அதிலேயே மனம் மயக்கம்
கொள்ளுவது. ஐம்புலன்கள் உயிரில்லாத அஃறிணைப் பொருள்கள். என்றாலும், உயிர் அவைகளுடன்
தொடர்பு கொண்டு,
அவை
தம்மினும் வேறு என்று உணராது, அவைகளைத் தன்னுடன் கூட்டி மயங்கி, அவைகட்கு
உட்பட்டு இருக்கும் நிலையை மிகவும் விரும்பும். புலன்களின் வழியே செல்வதால், உயிருக்கு
மண்ணாசை,
பொன்னாசை, பெண்ணாசை என்னும்
மூவாசைகளும் உண்டாகின்றன. பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றும்,, நிலையில்லாதவற்றை
நிலையின என்றும் உணர்ந்து ஆன்ம அறிவு மயங்கி அழிகின்றது. மோகக் கடலில் முழுகிக்
கிடப்பதால் துன்பக் கடலிலே அது கிடந்து துடிக்கின்றது. அதை விட்டுக் கரை ஏறும் வழி
தெரியாமல் தவிக்கின்றது.
ஆசை
உள்ளம் படைத்தவன் விலங்கு.
அன்பு
உள்ளம் படைத்தவன் மனிதன்.
அருள் உள்ளம் படைத்தவன் தேவன்.
ஆசைக்
கடலில் அகப்பட்டு, விலங்குத் தன்மையை அடைந்து, மனிதன் கேட்டினை
அடைகின்றான்.
மூவாசைகளில், மண்ணாசை,பொன்னாசை
என்னும் இரண்டும் மனிதப் பிறவி வந்த பின் உண்டாகின்றது. ஆனால், பெண்ணாசையானது
பிறவிகள்தோறும் தொடர்ந்து வருவது. அதை எளிதில் ஒழிக்க முடியாது. அதனால் திருமால், பிரமன், இந்திரன்
முதலியோரும் பட்டபாடு யாவரும் அறிந்ததே.
இதை
மாற்ற வேண்டுமானால் இறைவன் திருவருள் துணை புரிய வேண்டும். திருவருளைப் பெற
முயலவேண்டும். திருவருள் என்பது அடியார் கூட்டுறவால் அடையக் கூடியது.
அடியார்
உறவும்,
அரன்
பூசை நேசமும்,
அன்பும்
அன்றி
படிமீதில்
வேறு பயன் உளதோ?
பங்கயன்
வகுத்த
குடியான
சுற்றமும்,
தாரமும், வாழ்வும், குயக்கலங்கள்
தடியால்
அடியுண்டவாறு ஒக்கும் என்று இனம் சார்ந்திலரே
என்கின்றார்
பட்டினத்து அடிகள். அடியார் உறவை முன்வைத்தே அவ்வாறு கூறினார் என்பது அறிக.
"யாதேனும்
அறியா வெறும் துரும்பனேன் என்னினும் கை விடுதல் நீதியோ, தொண்டரொடு கூட்டு
கண்டாய்" என்று தாயுமானப் பெருந்தகை அடியார் உறவையே வேண்டினார்.
அடியார்கள்
புலன்களை வென்றவர். "வென்ற ஐம்புலனால் மிக்கீர்" என்றார் தெய்வச்
சேக்கிழார் பெருமான்.
வென்றிலேன்
புலன்கள் ஐந்தும், வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே செந்நெறி
அதற்கும் சேயேன்,
நின்று
உள்ளே துளும்புகின்றேன், நீதனேன், ஈசனே ஓ,
இன்று
உளேன்,
நாளை
இல்லேன், என்செய்வான் தோன்றினேனே.
என்றார்
அப்பர் பெருமான்.
வைப்பு, மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று
மனத்திடை உருகாதே,
செப்பு
நேர்முலை மடவரலியர் தங்கள்
திறத்திடை நைவேனை,
ஒப்பு
இலாதன, உவமனில் இறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
நீதி
யாவன யாவையும் நினைக்கிலேன்,
நினைப்பவரொடும் கூடேன்,
ஏதமே
பிறந்து இறந்து உழல்வேன் தனை
என் அடியான் என்று
பாதி
மாதொடுங் கூடிய பரம்பரன்,
நிரந்தரமாய் நின்ற
ஆதி
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
பரவுவார்
அவர் பாடுசென்று அணைகிலேன், பன்மலர் பறித்து ஏத்தேன்,
குரவு
வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை,
இரவு
நின்று எரி ஆடிய எம்இறை, எரிசடை மிளிர்கின்ற
அரவன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே. --- மணிவாசகம்.
பூமுடி
விண்ணவர் வழ்வும், பூதல மன்னவர் வாழ்வும்,
தூமுடி
நாகர்கள் வாழ்வும், சுந்தர நின் அடியார்கள்
தாம்உறு
வாழ்வினுக்கே ஓர் சற்றும் நேர் ஆகுமோ? நாகர்
கோ,முனிவோர் தொழும்
கோவே,
குன்றக்குடி
உறை தேவே. --- பாம்பன்
சுவாமிகள்.
பெரிதினுக்கு
எல்லாம் பெரிய சிவன் அடியார்
உள் அடக்கம் பெறுவான் என்னா
அரிய
ஔவை சொன்னபடி,
நின்
அடியர்
உள் அடக்கம் ஆவாய், அன்னோர்
திருவடியை
அடிமை முடி பொருந்தும் எனில்,
பிரம லிபி சிதைவு ஆகாதோ?
சரவண!
சண்மய! துரிய அமல சிவனே!
கருணை தாராய் மன்னோ. --- பாம்பன் சுவாமிகள்.
இனித்த
அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருள்
குரு என உற்று இருந்தாய், அன்றி,
உனக்கு
ஒருவர் இருக்க இருந்திலை, ஆத
லால், உன் அடி உளமே கொண்ட
கனத்த
அடியவருடைய கழல் கமலம்
உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும்
மறிப்பதுவும் ஒழிந்திடுமே,
குறக் கொடியைச் சேர்ந்திட்டோனே. --- பாம்பன்
சுவாமிகள்.
நான்
மறை மூலமே காதலாய் அருள் புரிவாய் என உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன்
மருகோனே
---
"நான்கு
வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள்
புரிவாயாக" என்று கூவி அழைத்த கயேந்திரன் என்னும் யானை காணும் வண்ணம் அதன்
முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய திருமருகரே என்று முருகப் பெருமானைப்
போற்றுகின்றார்.
திருப்பாற் கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது.
சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து, எப்போதும் குளிர்ந்த
காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும், நவரத்தின மயமான மணல் குன்றுகளும், தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக் கொண்டிருக்கும்.
அவ்வழகிய
மலையில், வளமைத் தங்கிய ஒரு
பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன்
இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக்
கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது.
அப்போது
ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய
வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித்
தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி
செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம்
நிகழ்ந்தது. கஜேந்திரம் உணவு இன்மையாலும்
முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்ய முடியாமல்
அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட
நாராயணர் காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து
கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக அழைத்த போது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர்.
ஒரு
தலைவன் நீ இந்த வேலையைச் செய் என்று ஒருவனுக்குக் கொடுத்துள்ள போது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமை அல்லவா? தலைவனைத் தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டும் என்று
அப்பணியாளன் வாளா இருந்தால், தலைவனால் தண்டிக்கப்படுவான் அல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
வாரண
மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,
வாவியின்
மாடு இடங்கர் பாழ்படவே, எறிந்த
மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் ...... மருகோனே!
--- (பூரணவார) திருப்புகழ்.
வேத
நூன் முறை வழுவாமே, தினம் வேள்வியால், எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரி கோவே ---
வேத
நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்
செய்யும் வேள்விகளால் அழகைக் கொண்ட, சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள்
மிக நன்றாக வழிபாடு செய்யும் தலைவரே என்று முருகப் பெருமானைத் துதிக்கின்றார்.
எனவே, தில்லையம்பலவாணர் முருகப் பெருமானே என்பது
தெளிவாகும்.
தில்லைவாழ்
அந்தணர்கள் வரலாறு
தில்லைவாழ்
அந்தணர்கள் தில்லைக் கூத்தனின் திருவடித் தொண்டர்கள். அதுவே அவர்களுடைய
பெருந்தவம். வேதங்களைத் தாம் கற்ற வழியிலே நின்று முறைப்படி எரி மூன்று ஓம்பி, உலகுக்கு நலம் செய்வதில் அவர்கள்
கண்ணும் கருத்தும் படிந்து கிடக்கும். அறத்தைப் பொருளாக் கொண்டு வேதங்களையும்
வேதாங்கங்களையும் பயில்வதில் அவர்கள் பொழுது போகும். அவர்களின் மரபும் ஒழுக்கமும்
மாசு இல்லாதது. அவர்களது, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் ஆட்சியால்
அருங்கலி நீங்கும். "கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே செற்றார்" என்று
திருஞானசம்பந்தப் பெருமான் இவர்களைச் சிறப்பித்துள்ளார். திருநீறு அவர்களது
செல்வம். ஞானம் முதலிய நான்கு பாதங்களில் அவர்களுடைய உழைப்புச் செல்லும். அவர்கள் மானமும் பொறையும் தாங்கும் இல்லறம்
பூண்டு, இப்பிறவியிலேயே
இறைவனை வணங்கும் பேறு பெற்றமையால்,
இனிப்
பெறவேண்டிய பேறு ஒன்று இல்லாதவர்கள். அவர்கள் பெருமையில் சிறந்தவர்கள். தங்களுக்குத் தாங்களே ஒப்பானவர்கள். தியாகேசப்
பெருமானே, சுந்தரமூர்த்தி
சுவாமிகட்குத் "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று
அடி எடுத்துக் கொடுத்துச் சிறப்பித்த முதன்மை வாய்ந்தவர்கள்.
கருத்துரை
முருகா!
காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் காமக்
கடலில் நாளும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து இருக்க
அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment