கயவர் குணத்தை மாற்றவே முடியாது
39. கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது

குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்
     கொண்டுட் படுத்திவிடலாம்,
கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது
     கொடுத்துத் திருப்பிவிடலாம்,

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை
     உகந்துகூத் தாட்டிவிடலாம்,
உபாயத்தி னால்பெரும் பறவைக்கு நற்புத்தி
     உண்டாக்க லாம்,உயிர்பெறப்

பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்
     பெரும்புனல் எனச்செய்யலாம்,
பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்
     பின்புவரு கென்றுசொலலாம்,

மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்
     மட்டும் திருப்பவசமோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் --- நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.

     கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் --- கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம்.

     உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் --- நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து நீக்கிவிடலாம்.
    
     உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் --- தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பெரிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கலாம்.

     உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் --- பிணத்தையும் உயிர் பெற்று எழச் செய்து விடலாம்.

     அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் --- அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம்.

     பிணியையும் அகற்றலாம் --- நோயையும் அகற்றலாம்.

     கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் --- காலனுடைய தூதுவர்களையும் பிறகு வருக என்று கூறலாம்.    

     மணலையும் கயிறாத் திரிக்கலாம் ---  மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம்.

      கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ  -- கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

        விளக்கம் --- எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ் மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதைப் பின்வரும் பாடல்களின் கருத்தால் அறியலாம்.  கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் ஒரு அதிகாரத்தில் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.
                              
துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும், பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ? தோகையே! --- துர்ச்சனர்தாம்
எந்த விதத்தாலும் இணங்காரே, பாம்பு மணி
மந்திரத்தால் ஆமே வசம்.                --- நீதிவெண்பா.

கெட்ட குணம் உடையோரும், பாம்பும் ஓர் அளவில் ஒத்து இருந்தாலும், பாம்புகள் கெட்டவரோடு ஒக்குமோ? ஆகாது.  எவ்வாறு என்றால், பாம்புகள் மணிமந்திரங்களால் கொடுமை செய்யாமல் அடங்கி நிற்கும். ஆனால், கயவர்கள் எந்த விதத்தால் முயன்றாலும் நல்வழிக்கு இணங்கமாட்டார்கள்.

கெட்ட குணம் உடையோரையும் பாம்பையும் அளவிலே ஒத்துள்ளதாகக் கொண்டது ஏனெனில், கெட்ட குணம் உடையவருக்கு எத்தனை நன்மைகளைச் செய்தாலும், அவர்களால் பிறருக்குத் தீமையே விளையும். பாம்புக்கு என்னதான் பால் வார்த்து வளர்த்தாலும், விடத்தையே கொடுக்கும்.

அவ்விய நெஞ்சத்து அறிவு இலாத் துர்ச்சனரை
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? --- திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளி அது
கந்தம் கெடுமோ கரை.                   --- நீதிவெண்பா.

மேலான நல்ல மணப்பொருள்களைக் கலந்தாலும், உள்ளிப் பூண்டின் தீயநாற்றம் போகாது. அதுபோல, பொறாமைக் குணம் கொண்ட, அறிவு இல்லாத தீயோரை, நல்லவர் ஆக்க முடியாது.

கண்கூடாப் பட்டது கேடு எனினும், கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி, மற்று இல் ஆகும் --- மண்டுஎரி
தான் வாழ் மடுப்பினும் மாசுணம் கண்துயில்வ,
பேரா பெருமூச்சு எறிந்து.            --- நீதிநெறி விளக்கம்.

அடர்ந்த நெருப்பானது பக்கத்தில் சூழ்ந்து எரிந்தாலும், பாம்பு
பெருமூச்சு விட்டுக்கொண்டு தூங்குமே அல்லாது, அவ்விடத்தை விட்டு வேறிடம் செல்லாது. அதுபோல, தமக்குக் கெடுதி வருவது கண்கூடு என்றாலும், கீழ்மக்களுக்கு அதில் இருந்து தப்பிப் பிழைக்கும் அறிவு உண்டா என்றால் இல்லை எனலாம்.


No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...