பொய் சொல்லி வாழ்வது இல்லை.




31. பொய் சொல்லி வாழ்வது இல்லை

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்
     தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
     கிடையாது! பொருள்நில் லாது!
மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்
     பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!

          இதன் பொருள் ---

     சொல்லும் பனைகாட்டும் கை களிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல --- கூறப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைக் கண்டு வழிபடாதவருக்கு, உணவு கிடைக்காததைப் போல,

     பொய் சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது--- பொய் கூறும் வாயார்க்கு உணவும் கிடைக்காது,  

     பொருள்  நில்லாது --- அவரிடத்திலே உள்ள பொருளும் அழியும், பொருள் அவரிடத்தில் வந்து சேராது,

     மை சொல்லும் கார் அளி சூழ் தாழை மலர் பொய் சொல்லி வாழ்ந்தது உண்டோ --- மேகம் சூழ்ந்ததைப் போலக் கரிய வண்டினத்தால் சூழுப்பட்ட தாழை மலர் பொய் சொல்லி வாழ்வு  பெற்றதா?  (இல்லை. ஆகையால்)

     மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வது  இல்லை --- உண்மையைப் பேசி வாழாதவன் பொய் சொல்லி வாழப் போவது இல்லை,

     மெய்ம்மை தான் --- இது உண்மையே ஆகும்.

          விளக்கம் --- தாருகாவனத்து முனிவர்கள் வேள்வி செய்து விடுத்த, பனைமரத்தைப் போலும் துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துப் போர்வையாக அணிந்தவர் சிவபெருமான்.

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான்,
போழ்இள வெண்மதியும் புனலும் அணி புன்சடையான்,
யாழின் மொழி உமையாள் வெருவ, எழில் வெண்மருப்பின்
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே. --- திருஞானசம்பந்தர்.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தினை
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.    --- அப்பர்.

திருமாலும் பிரமனும் தம்முள் பிணங்கித் தாமை பரம்பொருள் என்று செருக்குக் கொண்ட போது, சிவபெருமான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும் முடியை  நான்முகனும் காணச் சென்றனர்.  தான் கொண்ட அன்னப் பறவை வடிவத்தைக் கொண்டு மேலும் பறந்து செல்ல முடியாமல் சோர்வுற்று நின்ற பிரமன், சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற தாழை மலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச் சான்று கூறியது.
பொய் சென்னதால், மணம் நிறைந்த தாழம்பூவானது சிவபெருமானுக்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படவில்லை. தாழம் பூவானது பொய் சொல்லி, வாழ்வு இழந்தது.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.     --- திருமந்திரம்.

மனிதனுக்கு வாய் வாய்த்தது இறைவனை வாழ்த்தவும், உண்மையே பேசவுமே. "வாயே வாழ்த்து கண்டாய், மதயானை உரி போர்த்துப் பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். "எந்தை நினை வாழ்த்தத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றார் வள்ளல் பெருமான்.

அரியானை, அந்தணர்தம் சிந்தையானை,
     அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை,
     திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
     கனைகடலை, குலவரையைக் கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.     ---  அப்பர்.

மாறாத வெம்கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாஎல்லாம் கூறாத நாக்களே.     --- திருஞானசம்பந்தர்.

"பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிட்டாது" என்பது பழமொழி.


மெய்அதைச் சொல்வார் ஆகில் விளங்கிடும் மேலாம் நன்மை,
வையகம் அதனைக் கொள்ளும், மனிதரில் தேவர் ஆவார்,
பொய்அதைச் சொல்வார் ஆகில், போசனம் அற்பம் ஆகும்,
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவு உள்ளோரே.

என வரும் விவேக சிந்தாமணிப் பாடல் கருத்தையும் நோக்குக. 



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...