திரு விளமர்





திரு விளமர்
(விளமல்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "விளமல்" என்று வழங்குகின்றனர்.

     திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது.


இறைவர்                   : பதஞ்சலி மனோகரர்.

இறைவியார்               : மதுரபாஷினி.

தீர்த்தம்                     : அக்கினி தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - மத்தக மணிபெற.

         சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். அதுமட்டுமன்றி இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாதத் தலம் என்றும் போற்றப்படுகிறது.

         ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம்.கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்னு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

         பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் வித்யாபீடமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இங்குள்ள அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் இறைவி மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். மேலும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து, விளம்பல் பதஞ்சலி, மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

         காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "திண்மைக் களமர் மகிழக் கடைசியர் பாடும் விளமர் கொளும் எம் விருப்பே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 573
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
         நீலமிடற்று அருமணியை வணங்கிப் போற்றி,
பாடுஒலிநீர்த் தலையாலங்காடு மாடு
         பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி,
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி,
         நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடி,
தேடுமறைக்கு அரியார்தம் விளமர் போற்றி,
         திருஆரூர் தொழநினைந்து சென்று புக்கார்.

         பொழிப்புரை : நிலைபெறும் `திருவாஞ்சியத்தில்\' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந்திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைகளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருவாஞ்சியம் - வன்னிகொன்றை (தி.2 ப.7) - இந்தளம்.

திருப்பெருவேளூர் - அண்ணாவும் (தி.3 ப.64) - பஞ்சமம்.

திருக்கரவீரம் - அரியும் நம்வினை (தி.1 ப.58)- பழந்தக்கராகம்.

திருவிளமர் - மத்தகம் அணிபெற (தி.3 ப.88) - சாதாரி.

திருத்தலையாலங்காட்டிலும் திருச்சாத்தங்குடியிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.


3. 088   திருவிளமர்     திருவிராகம்    பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மத்தகம் அணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்துஅக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக அடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

         பொழிப்புரை : சிவபெருமான் , தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர் . கரத்தில் விளங்கும் நகங்களைப் போலத் தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர் . இத்தகைய சிவ பெருமானின் திருவடிகளைத் தொழுதுயாம் உய்யும்பொருட்டு, அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 2
பட்டுஇல கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டுஇலகு இணைமர வடியினர், உமையுறு வடிவினர்
சிட்டுஇலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வதோர்
விட்டுஇலகு அழகுஒளி பெயரவர் உறைவது விளமரே.

         பொழிப்புரை : சிவபெருமான் , உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க, இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர். தூய்மையையும், ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 3
அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதொர் அரவொடு
செங்கதிர் எனநிறம் அனையதொர் செழுமணி மார்பினர்
சங்குஅதிர் பறைகுழன் முழவினொடு இசைதரு சரிதையர்
வெங்கதிர் உறுமழு உடையவர் இடம்எனில் விளமரே.

         பொழிப்புரை : சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர் . இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர் . அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர். சங்குகள் ஒலிக்க, பறை, குழல், முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர் . வெண்ணிற ஒளிவீசும் மழுப் படையை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
மாடம் அதுஎனவளர் மதில்அவை எரிசெய்வர், விரவுசீர்ப்
பீடுஎன அருமறை உரைசெய்வர், பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடம்உற நடநவில்
வேடம் அதுஉடையவர் வியன்நகர் அதுசொலில் விளமரே.

         பொழிப்புரை : மாடம் போன்று உயர்ந்து விளங்கிய , தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர் . தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச்செய்தவர் . தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர் . சுடுகாட்டை அரங்க மாகக் கொண்டு திருநடனம் செய்யும் கோலத்தர் . இத்தகைய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
பண்தலை மழலைசெய் யாழ்என
         மொழிஉமை பாகமாக்
கொண்டுஅலை குரைகழல் அடிதொழும்
         அவர்வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதிசெய
         அருள்புரி விறலினர்
வெண்தலை பலிகொளும் விமலர்தம்
         வளநகர் விளமரே.

         பொழிப்புரை : பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . அவருடைய , அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது . விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர் . பிரமனு டைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
மனைகள்தொறு இடுபலி அதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறைஅணி மிடறினர்
முனைகெட அருமதிள் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

         பொழிப்புரை : சிவபெருமான் தாருகாவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையை உடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உயன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர்.  தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினை கெடும்படி அருள் புரியும் தொழில் உடையவர்.  இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 7
நெறிகமழ் தரும்உரை உணர்வினர், புணர்வுறு மடவரல்
செறிகமழ் தரும்உரு உடையவர், படைபல பயில்பவர்,
பொறிகமழ் தருபட அரவினர், விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர், இடம்எனில் விளமரே.

         பொழிப்புரை : சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும் , ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர் . தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப் பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர் . திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர் . புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . கங்கை , பிறைச்சந்திரன் , பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
தெண்கடல் புடைஅணி நெடுமதில்
         இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த
         பைங்கழல் வடிவினர்
திண்கடல் அடைபுனல் திகழ்சடை
         புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி அடிகள்தம்
         வளநகர் விளமரே.

         பொழிப்புரை : தெளிவான நீரையுடைய கடல்சூழ்ந்த , அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி , கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான் . கடலையடையும் கங்கையை , சடையில் தாங்கியவர் . விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
தொண்டுஅசை உறவரு துயர்உறு காலனை மாள்வுற
அண்டல்செய்து, இருவரை வெருவுற ஆர்அழல் ஆயினார்,
கொண்டல்செய் தருதிரு மிடறினர் இடம்எனில் அளியினம்
விண்டுஇசை உறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

         பொழிப்புரை : சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும்படி செய்து, பின்னர்த்தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவபெருமான். பிரமன், திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர். மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 10
ஒள்ளியர் தொழுதுஎழ உலகினில் உரைசெயும் மொழிபல
கொள்ளிய களவினர், குண்டிகை அவர்தவம் அறிகிலார்,
பள்ளியை மெய்யெனக் கருதன்மின், பரிவொடு பேணுவீர்,
வெள்ளிய பிறைஅணி சடையினர் வளநகர் விளமரே.

         பொழிப்புரை : உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . வடமொழி , தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும் , தவம் அறிகிலாதவருமான சமண , புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க . வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய , வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள் .


பாடல் எண் : 11
வெந்தவெண் பொடிஅணி அடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ்இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகுஅமர் அருமறை ஞானசம்
பந்தன மொழிஇவை உரைசெயும் அவர்வினை பறையுமே.

         பொழிப்புரை : பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை , திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி , அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...