திருக் கீழ்வேளூர்

 திருக் கீழ்வேளுர்
(கீவளூர்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "கீவளூர்" என்று அழைக்கப்படுகிறது.

         திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன . நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிக்கல் திருத்தலத்தை அடுத்து உள்ளது.

     கீழ்வேளூருக்கு அருகில் உள்ள தேவார வைப்புத் தலங்கள் -

         இறையான்சேரி: நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கு வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள இறையான்சேரி (எரவாஞ்சேரி) ஒரு தேவார வைப்புத் தலம். இத்தலத்தின் மூலவர் விசுவநாதர். அம்பாள் பெயர் விசாலாட்சி.

         ஆழியூர்: நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது.

         ஆழியூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் உள்ளது. வைணவத் திருத்தலம்.  

இறைவர்              : அட்சயலிங்கேசுவரர், கேடிலியப்பர்

இறைவியார்         : வனமுலைநாயகி, சுந்தரகுஜாம்பாள்

தல மரம்              : இலந்தை

தீர்த்தம்               : சரவண தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - மின்னுலாவிய சடையினர்.
                                               2. அப்பர்   -  ஆளான அடியவர்.

     முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து "வட பத்ரிகாரண்யம்" ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி "தென் பத்ரிகாரண்யம்" ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல மரமாயிற்று.

         முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், "பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்" என்று கூறி அருளினார். அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோயில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.

     கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று. ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோயிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் இலிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.

         கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

         இங்குள்ள முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.

         தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளவாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் திருத்தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மிக்க மினார் வாள் ஊர் தடம் கண் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் செங்கண் விடையானே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 467
கழிக்கானல் மருங்குஅணையும் கடல்நாகை
         அதுநீங்கி, கங்கை ஆற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
         பரவிப்போய், தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
         விமலர்கழல் வணங்கி ஏத்தி,
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்துஅருளி,
         அங்குஅகன்றார் மூதூர் நின்றும்.

         பொழிப்புரை : உப்பங்கழிகள் நிறைந்த சோலைகளின் பக்கங்களில் உள்ள நாகப்பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற சாயலை உடைய மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளை மலர்கள் மலர்வதற்கு இடனான வயல்கள் சூழந்த திருக்கீழ்வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்களான மாலைகளைப் பாடி, அப்பழைய பதியினின்றும் புறப்பட்டார்.

         பதிகள் பலவும் என்றது திருச்சிக்கல், திருக்கண்ணங்குடி, திருவாழியூர் முதலாயினவாகலாம். இப்பதிகளுள் திருச்சிக்கலுக்கு மட்டும் ஒருபதிகம் கிடைத்துள்ளது. அப்பதிகம் `வானுலாவும் மதி' (தி.2 ப.8) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         திருக்கீழ்வேளூரில் அருளிய பதிகம் `மின்னுலாவிய' (தி.2 ப.105) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.105 கீழ்வேளூர்                     பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மின் உலாவிய சடையினர், விடையினர்,
         மிளிர்தரும் அரவோடும்,
பன் உலாவிய மறைஒலி நாவினர்,
         கறைஅணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றைஅம் தாரினர்,
         புகழ்மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல்வினை
         ஓடிட வீடுஆமே.

         பொழிப்புரை :மின்னலைப்போல ஒளிவிடும் சடையினரும் , விடைஊர்தியரும் , அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும் , நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும் .


பாடல் எண் : 2
நீர் உலாவிய சடையிடை அரவொடு
         மதிசிர நிரைமாலை,
வார் உலாவிய வனமுலை யவளொடு
         மணிசிலம்பு அவைஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம்
         எழில்திகழ் கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர்
         பிணியொடு வினைபோமே.

         பொழிப்புரை :கங்கை சூடிய சடையின்கண் , அரவு , மதி , தலைமாலை ஆகியவற்றை அணிந்து , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும் . இத்தலத்தைச் சிந்திப்பவர் கட்குப் பிணிகளும் வினைகளும் போகும் .


பாடல் எண் : 3
வெண்ணி லாமிகு விரிசடை அரவொடு
         வெள்எருக் கலர்மத்தம்
பண் நிலாவிய பாடலோடு ஆடலர்
         பயில்வுறு கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்
         கோயில்எம் பெருமானை,
உள் நிலாவிநின்று உள்கிய சிந்தையார்
         உலகினில் உள்ளாரே.

         பொழிப்புரை :வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரி சடையில் அரவு , வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து , இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண் ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலை பெற்றிருப்பர் .


பாடல் எண் : 4
சேடு உலாவிய கங்கையைச் சடைஇடைத்
         தொங்கவைத்து, அழகாக
நாடு உலாவிய பலிகொளு நாதனார்,
         நலமிகு கீழ்வேளூர்,
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்
         கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர்
         நிலைமிகப் பெறுவாரே.

         பொழிப்புரை :பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி , மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமை யோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர் .


பாடல் எண் : 5
துன்று வார்சடைச் சுடர்மதி, நகுதலை,
         வடமணி சிரமாலை,
மன்று உலாவிய மாதவர் இனிதுஇயல்
         மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
         நிமலனை, நினைவோடும்
சென்று உலாவிநின்று ஏத்தவல் லார்வினை
         தேய்வது திணமாமே.

         பொழிப்புரை :நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள் , பிரம கபாலம் , கயிறு , மணிகள் , தலைமாலை முதலியவற்றை அணிந்து , மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ் வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம் .


பாடல் எண் : 6
கொத்து உலாவிய குழல்திகழ் சடையனை,
         கூத்தனை மகிழ்ந்துஉள்கித்
தொத்து உலாவிய நூல்அணி மார்பினர்
         தொழுதுஎழு கீழ்வேளூர்ப்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய
         பெருந்திருக் கோயில்மன்னு
முத்து உலாவிய வித்தினை ஏத்துமின்,
         முடுகிய இடர்போமே.

         பொழிப்புரை :பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும் , கூத்தனும் , நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும் , முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின் . வலிந்துவரும் இடர்போகும் .


பாடல் எண் : 7
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
         வன்னியும், துன்ஆரும்
கறைநி லாவிய கண்டர்,எண் தோளினர்
         காதல்செய் கீழ்வேளூர்,
மறைநி லாவிய அந்தணர்மலிதரு
         பெருந்திருக் கோயில்மன்னு
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
         நினைபவர் வினைபோமே.

         பொழிப்புரை :பிறையணிந்த சடைமுடியில் கங்கை , வன்னி ஆகியவற்றை அணிந்தவனும் , கறைக் கண்டனும் , எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும் .


பாடல் எண் : 8
மலைநி லாவிய மைந்தன்,அம் மலையினை
         எடுத்தலும் அரக்கன்தன்
தலை எலாம்நெரிந்து அலறிட ஊன்றினான்
         உறைதரு கீழ்வேளூர்,
கலைநி லாவிய நாவினர்கா தல்செய்
         பெருந்திருக் கோயில்உள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
         நினையவல் வினைபோமே.

         பொழிப்புரை :திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும் , அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் , கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந் திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினை போகும் .


பாடல் எண் : 9
மஞ்சு உலாவிய கடல்கிடந் தவனொடு
         மலரவன் காண்புஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல்அடிப் பார்ப்பதி
         பாகனைப் பரிவொடும்,
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ்
         மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை நணுகுமின்
         நடலைகள் நணுகாவே.

         பொழிப்புரை :மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும் , பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும் , செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள் . துன்பங்கள் நம்மை அடையா .


பாடல் எண் : 10
சீறு உலாவிய தலையினர், நிலையிலா
         அமணர்கள், சீவரார்,
வீறு அலாதவெம் சொற்பல விரும்பன்மின்,
         சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை, ஏதம்இல்
         பெருந்திருக் கோயில்மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி
         பேணுமின் தவமாமே.

         பொழிப்புரை :மழித்த தலையினரும் , நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர் ; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடி யனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள் . அதுவே சிறந்த தவமாகும்.


பாடல் எண் : 11
குருண்ட வார்குழல் சடையுடைக் குழகனை
         அழகுஅமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
         கோயில்எம் பெருமானை,
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
         புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லார்அவர் சிவகதி
         பெறுவது திடமாமே.

         பொழிப்புரை :கடைசுருண்ட சடையினனும் , இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும் , வயல்கள் நிறைந்தது மாகிய புகலியின் மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தெளிந்த பாடல்களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 228
நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு
         வலிவலமும் நினைந்து சென்று,
வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்
         கழல்பணிந்து, மகிழ்ந்து பாடி,
கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,
         கன்றாப்பூர் கலந்து பாடி,
ஆராத காதலினால் திருவாரூர்
         தனில், மீண்டும் அணைந்தார் அன்றே.

         பொழிப்புரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்று, மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.

         இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருவலிவலம்: `நல்லான்காண்` (தி.6 ப.48) - திருத்தாண்டகம்.
2.    திருக்கீழ் வேளூர்: `ஆளான` (தி.6 ப.67) - திருத்தாண்டகம்.
3.    திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6 ப.61) - திருத்தாண்டகம்.

         இத்திருப்பதிகளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது.

         அவை  
1. திருக்கோளிலி: (அ). `மைக்கொள்` (தி.5 ப.56) - திருக்குறுந்தொகை. 
                        (ஆ) `முன்னமே` (தி.5 ப.57) - திருக்குறுந்தொகை.  

2. திருப்பேரெயில்: `மறையும்` (தி.5 ப.16) - திருக்குறுந்தொகை. 

மீண்டும் திருவாரூரை அணைந்து, ஐம்பொறிகளோடு வாழ இயலாமையை நினைந்து அருளிய திருப்பதிகம். `படுகுழிப் பவ்வத்தன்ன` (தி.4 ப.52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.


6. 067     திருக்கீழ்வேளூர்      திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆள்ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
         ஆன்அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன்ஒப்பார் இல்லா தானை,
         சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்துஒப் பானை,
         தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய் , பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய் , நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய் , ஒப்பற்றவனாய் , சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய் , துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய் , தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர் .


பாடல் எண் : 2
சொல்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
         தூங்காதார் மனத்துஇருளை வாங்கா தானை,
நற்பான்மை அறியாத நாயி னேனை
         நல்நெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானை,
பல்பாவும் வாயாரப் பாடி ஆடிப்
         பணிந்துஎழுந்து குறைந்துஅடைந்தார் பாவம் போக்க
கிற்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின் பொருளை நன்றாக உணர்ந்து, மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி, அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய், உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும் வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய், பற்கள் வரிசையாக அமைந்த வாயினால், உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும், குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார் .


பாடல் எண் : 3
அளைவாயில் அரவுஅசைத்த அழகன் தன்னை,
         ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை,
         வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை, அல்லாதார்க்கு உளையா தானை,
         உலப்புஇலியை, உள்புக்குஎன் மனத்து மாசு
கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய், தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய், மெய்ஞ்ஞானப் பொருளாய், பெருந்திறல் உடையவனாய், பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய், பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய், என்றும் அழிவில்லாதவனாய், என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 4
தாள்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
         தலைஅறுத்து மாவிரதம் தரித்தான் தன்னை,
கோள்பாவு நாள்எல்லாம் ஆனான் தன்னை,
         கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை, வித்துஉருவின் கொத்துஒப் பானை,
         வேதியனை, வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவைக்
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய், மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய், கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய், தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக் குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய் , பவளக் கொத்தினை ஒத்த நிறத்தினனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 5
நல்லானை, நரைவிடைஒன்று ஊர்தி யானை,
         நால்வேதத்து ஆறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானை, சுடர்மூன்றும் ஆனான் தன்னை,
         தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,
வில்லானை, மெல்லியல்ஓர் பங்கன் தன்னை,
         மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவைக்
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :பெரியவனாய் , வெண்ணிறக் காளை வாகனனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய் , மூன்று சுடர்களும் ஆனவனாய் , தொண்டர்களாகித் தன்னைப் பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய் , சுயம்பிரகாசனாய் , பார்வதி பாகனாய் , உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப் போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 6
சுழித்தானைக் கங்கை,மலர் வன்னி கொன்றை
         தூமத்தம் வாள்அரவம் சூடி னானை,
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ,
         ஆலால நஞ்சுஅதனை உண்டான் தன்னை,
விழித்தானைக் காமன்உடல் பொடியாய் வீழ,
         மெல்லியலோர் பங்கனை,முன் வேனல் ஆனை
கிழித்தானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய் , அச்சடையில் வன்னி , கொன்றை , ஊமத்தை மலர்கள் , ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய் , மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய் , ஆலகால விடத்தை உண்டவனாய் , மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால் விழித்தானாய் , பார்வதி பாகனாய் , முன்னொரு காலத்தில் வேல் போன்ற கூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 7
உளர்ஒளியை, உள்ளத்தின் உள்ளே நின்ற
         ஓங்காரத்துஉட் பொருள்தான் ஆயி னானை,
விளர்ஒளியை, விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
         விண்ணொடுமண் ஆகாசம் ஆயி னானை,
வளர்ஒளியை, மரகதத்தின் உருவி னானை,
         வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர்ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :அசைகின்ற ஒளிவிளக்காய் , உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய் , வெள்ளொளி உடைய சூரியன் , சந்திரன் , செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி , தேவருலகும் , நிலவுலகும் , தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி , மாணிக்கத்தின் ஒளியும் மரகதத்தின் ஒளியுமாகி , தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .
   
பாடல் எண் : 8
தடுத்தானைக் காலனைக் காலால் பொன்ற,
         தன்அடைந்த மாணிக்குஅன்று அருள்செய் தானை,
உடுத்தானைப் புலியதளோடு அக்கும் பாம்பும்,
         உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை,
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க,
         வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து , தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய் , புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய் , தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய் , கொடிய நஞ்சினைத் தன் கழுத்தில் தங்குமாறு உண்டவனாய், தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய் , உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 9
மாண்டார் எலும்புஅணிந்த வாழ்க்கை யானை,
         மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு
பூண்டானை, புறங்காட்டில் ஆட லானை,
         போகாதுஎன் உள்புகுந்து இடங்கொண்டு என்னை
ஆண்டானை, அறிவரிய சிந்தை யானை,
         அசங்கையனை, அமரர்கள்தஞ் சங்கை எல்லாம்
கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய் , கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய் , ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய் , சுடுகாட்டில் ஆடுபவனாய் , என் உள்ளத்தில் இடம் பெற்று , அதனை விடுத்து நீங்காது , என்னை அடிமை கொண்டானாய் , தன் உள்ளத் திருப்பதனைப் பிறர் அறிய இயலாதவனாய் , அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .


பாடல் எண் : 10
முறிப்பான பேசிமலை எடுத்தான் தானும்
         முதுகுஇறமுன் கைந்நரம்பை எடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றுஅரிவாள் நீட்டி னானை,
         பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானை, புரமூன்றும் எரிசெய் தானை,
         பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே.

         பொழிப்புரை :தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன் கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய் , அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய் , மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய் , அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டி வஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .
                                             திருச்சிற்றம்பலம்No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...