சிதம்பரம் - 0641. துத்தி பொன்தன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

துத்தி பொன்தன (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலை மாதர் உறவும், அதனால் வரும் நோய்களும் நீங்க அருள்


தத்த தத்தன தான தானன
     தத்த தத்தன தான தானன
          தத்த தத்தன தான தானன ...... தனதான


துத்தி பொற்றன மேரு வாமென
     வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
          துப்பு முத்தொடு மார்பி னாடிட ......      மயில்போலே

சுக்கை மைக்குழ லாட நூலிடை
     பட்டு விட்டவிர் காம னாரல்குல்
          சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்

தத்தை பட்குர லோசை நூபுர
     மொத்த நட்டமொ டாடி மார்முலை
          சற்ற சைத்துகு லாவும் வேசியர் ......     அவரோடே

தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
     கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
          சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ......      உழல்வேனோ

தித்தி மித்திமி தீத தோதக
     தத்த னத்தன தான தீதிமி
          திக்கு முக்கிட மூரி பேரிகை ......         தவில்போடச்

சித்ர வித்தைய ராட வானவர்
     பொற்பு விட்டிடு சேசெ சேயென
          செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா

செத்தி டச்சம னார்க டாபட
     அற்று தைத்தசு வாமி யாரிட
          சித்தி ரச்சிவ காமி யாரருள் ......          முருகோனே

தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
     விட்ட அச்சுத ரீன மானொடு
          சித்தி ரப்புலி யூரில் மேவிய ......         பெருமாளே.


பதம் பிரித்தல்


துத்தி பொன் தனம் மேரு ஆம் என
     ஒத்து, பத் திரள் வாகுவாய், விர்
          துப்பு முத்தொடு மார்பின் ஆடிட, ......மயில்போலே

சுக்கை மைக்குழல் ஆட, நூல்இடை
     பட்டு விட்டு அவிர் காமனார் அல்குல்
          சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை ......விலைமாதர்,

தத்தை புள் குரல் ஓசை, நூபுரம்
     ஒத்த நட்டமொடு ஆடி, மார்முலை
          சற்று அசைத்து குலாவும் வேசியர், ...... அவரோடே

தர்க்கம் இட்டு, றவாடி, ஈளை நொய்
     கக்கல் விக்கல் கொள் ஊளை நாய்என
          சிச்சி சிச்சி என் நால்வர் கூறிட ...... உழல்வேனோ?

தித்திமி திமி தீத தொதக
     தத்தன தன தான தீதிமி
          திக்கு முக்கிட மூரி பேரிகை ......         தவில்போடச்

சித்ர வித்தையர் ஆட, வானவர்
     பொற்பு விட்டிடு சேசெ சே என
          செக்கு விட்டு அசுரோர்கள் தூள்பட ......  விடும்வேலா!
  
செத்திடச் சமனார் கடாபட
     அற்று உதைத்த சுவாமியார் இட
          சித்திரச் சிவகாமியார் அருள் ......         முருகோனே!

தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட
     விட்ட அச்சுதர் ஈன மானொடு
          சித்திரப் புலியூரில் மேவிய ......      பெருமாளே.


பதவுரை

      தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி திக்கு முக்கிட --- தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற,

     மூரி பேரிகை தவில் போட --- வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப,

     சித்ர வித்தையர் ஆட --- அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட,

     வானவர் பொன் பு இட்டு இ(ட்)டு சே செ சே என --- தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று பேரொலி எழுப்ப, (பொற்பூ என்னும் சொல் பொற்பு என வந்தது. பொன் பூ.)

     செக்கு விட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா --- செக்கில் இட்டது போல் அசுரர்கள் பொடியாகும்படி விடுத்து அருளிய வேலாயுதரே!

     அச் சமனார் செத்திட --- அந்த இயமன் இறக்கவும்,

     கடா பட --- அவனுடைய எருமைக் கடா வீழ்ந்து அழியவும்,

     அற்று உதைத்த சுவாமியார் இட --- அன்று காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும்

     சித்திரச் சிவகாமியார் அருள் முருகோனே --- அழகிய சிவகாமி அம்மையார் ஈன்றருளிய முருகப் பெருமானே!

      தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட ---  ஸ்ரீராம பிரானாக அவதரித்து தெற்கே உள்ள இராவணாதி அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த

     அச்சுதர் ஈன மானோடு --- திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு

     சித்திரப் புலியூரில் மேவிய பெருமாளே --- அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து --- தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி,

     இபத் திரள் வாகுவாய் --- யானைக் கூட்டங்களின் வலிமை கொண்டதாகி விளங்கும்

     அவிர் துப்பு முத்தோடு மார்பின் ஆடிட --- பவள மாலை முத்து மாலை மார்பிலே ஆட,

      மயில் போலே --- மயிலைப் போலும் சாயலுடன்,,

     சுக்கை மைக்குழல் ஆட --- பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய,

     நூல் இடை பட்டுவிட்டு அவிர் --- நூலைப் போன்ற நுண்ணிய இடையில் பட்டாடை அணிந்து ஒளி விட,

     காமனார் அல்குல் சுற்றுவித்து --- காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து,

     உறு வாழை சேர் தொடை விலைமாதர் --- விளங்கும் வாழைத் தண்டு போன்ற தொடைகளை உடைய விலைமாதர்கள்,

      தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி --- கிளியின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி,

     மார் முலை சற்று அசைத்து --- மார்பில் உள்ள முலையைக் கொஞ்சம் அசைத்து

     குலாவும் வேசியர் அவரோடே --- குலவிப் பேசும் வேசியருடன்,

      தர்க்கம் இட்டு உறவாடி --- தர்க்கம் செய்து, உறவு பூண்டு (சில காலம் சென்ற பின்)

     ஈளை நொய் கக்கல் விக்கல் கொள் --- கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று (நோய் என்னும் சொல் பாடல் சந்த்ததை நோக்கி நொய் என வந்தது)

     ஊளை நாய் என --- ஊளை நாய் போன்று வீணிலே உழன்று,

     சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ --- சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரியலாகுமா?


பொழிப்புரை


     தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப, அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட, தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று பேரொலி எழுப்ப, செக்கில் இட்டது போல் அசுரர்கள் பொடியாகும்படி விடுத்து அருளிய வேலாயுதரே!

         அந்த இயமன் இறக்கவும், அவனுடைய எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று தமது திருவடியால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்றருளிய முருகப் பெருமானே!

     ஸ்ரீராம பிரானாக அவதரித்து தெற்கே உள்ள இராவணாதி அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக் கூட்டங்களின் வலிமை கொண்டதாகி விளங்குகின்ற மார்பகங்களின் மீது பவள மாலை முத்து மாலை ஆட, மயிலைப் போலும் சாயலுடன், பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில் ஒளிவிடும் பட்டாடையை,  காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து,  விளங்கும் வாழைத் தண்டு போன்ற தொடைகளை உடைய விலைமாதர்கள், தொண்டையில் எழும்பும் கிளியின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி, மார்பில் உள்ள முலையைக் கொஞ்சம் அசைத்து  குலவிப் பேசும் வேசியருடன், தர்க்கம் செய்து, உறவுபூண்டு, சில காலம் சென்ற பின், ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று  ஊளை நாய் போன்று வீணிலே உழன்று, சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரியலாகுமா?

விரிவுரை

இத் திருப்புகழின் முதல் பகுதியில் விலைமாதரைப் பொருந்துவதால் வரும் கேட்டினை அடிகாளார் எடுத்து உரைக்கின்றார்.

அசுரோர்கள் தூள்பட விடும் வேலா ---

மாயையின் மகனாகிய சூரபன்மன் சிவ மூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளத்திலே செருக்கு கொண்டு, அறநெறிப் பிறழ்ந்து, அமரர்க்குப் பெரும் துன்பத்தை விளைத்து வருகையில், குமாரக்கடவுள் தேவர் சிறை மீட்கப் போர் புரிந்தனர். அசுரர் அனைவரையும் அழிந்தனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலக் கொண்டு ஆயிரத்தெட்டு
அண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் வந்தான். அப் பெருந் தானையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள நடுங்கினர். தேவர்கள் அளக்கவொணா துன்பத்தை அடைந்தனர். குகப் பெருமானார் அப்பெருஞ் சேனைகளை எல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபன்மனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. அவுணர்கோன் முடிவில் “இக் குமரனைக் கொணர்ந்து யுத்தத்தை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று, சிறிது எனது சினம் தணிந்தபின் இக்குமரனோடு போர் புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து உலகம் முழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளை ஏந்தித் தேவர்களைக் கொல்லுதல் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பால் உணர்ந்த அரி அயன் ஆதி அமரர்கள்,

தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”

என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிரு முகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேய் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் இருக்கும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதிலழித்தது.

அரியு மயனோ டபய மெனவே
  அயிலை யிருள் மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.

சூரபன்மன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை யாது செய்ய வல்லது? இதன் திறத்தைக் காண்கின்றனன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்று, கடல் நடுவில், நெருப்புப் போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர் வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத் தூரம் அளவும் விசாலித்த, தலை கீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.

வன்னியின் அலங்கல் கான்று, வான்தழை புகையின் நல்கி,
பொன்என இணர்கள் ஈன்று, மரகதம் புரையக் காய்த்து,
செந்நிற மணிகள் என்னத் தீம்பழம் கொண்டு, கார்போல்
துன்னுபல் கவடு போக்கி, சூதமாய் அவுணன் நின்றான்.

அஷ்ட நாகங்களும் திக்கு கஜங்களும் சந்திர சூரியரும் எல்லா உயிர்களும் அஞ்சி ஓலமிட்டன.அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன; குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாந் தகர்ந்தன. நாரணனுலகும் நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவி கயிலையை நாடி இரிந்தனர். அக்கால் அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி யண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பேரனல் வடிவு தாங்கிச் சென்று,

தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும், பிறங்கு ஞாலத்து
ஆயிர கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன,
மீ உயர்ந்து ஒழுகி, ஆன்றோர் வெருவருந் தோற்றம் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.

விடம்பிடித்து அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம் பிடித்திட்ட தீயில் தோய்த்து, முன் இயற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே.
 
மூதண்ட முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை உசைத்து உலகங்களை யெல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது.

அச் சமனார் செத்திட, கடா பட, அற்று உதைத்த சுவாமியார் இட  சித்திரச் சிவகாமியார் அருள் முருகோனே ---

அந்த இயமன் இறக்கவும், அவனுடைய எருமைக் கடா வீழ்ந்து அழியவும்,அன்று காலால் உதைத்தருளிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்று அருளிய முருகப் பெருமானே என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார்.

இயமனை உதைத்த வரலாறு

அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசி க்ஷேத்திரத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.

வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர்.

முனிவர் பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றிசெய்து புத்திர வரம் வேண்டும் என்றனர்.

அதுகேட்ட ஆலமுண்ட அண்ணல் புன்னகை பூத்து “தீங்குறுகுணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர். முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.

"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிதும் மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ? மா தவத்தோய்".   
     
"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம் எண்ணிரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என், பகர்தி" என்றான்.
  
மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு அவை குறுகினாலும், அறிவுளன் ஆகி, யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன் புரிக" என்றான்.
   
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவமுனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிக ளார்த்தன. விண்ணவர் மலர்மழைச் சிந்தினர். முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரம்மதேவன் வந்து "மார்க்கண்டன்" என்று பேர் சூட்டினன்.

ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து, பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.

மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன் நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்று, காசி க்ஷேத்திரத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவரும் காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

ஐயனே அமலனே அனைத்தும் ஆகிய
 மெய்யனே பரமனே விமலனே அழல்
 கையனே கையனேன் காலன் கைஉறாது
 உய்யநேர் வந்து நீ உதவுஎன்று ஓதலும்’      ---கந்தபுராணம்.

சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல், “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக்கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராஞ் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகு அடைவதற்கு நியாயம் இல்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர்.

இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன்; உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன்; வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,
 ஆதலால், நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்
 போதிபோதி என்று உரைத்தலும் நன்றுஎனப் போனான்.”
                                    

அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன்.

அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்க வல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும் மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.

மார்க்கண்டேயர் “அந்தக! அரன் அடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு முடிவு இல்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி நின்புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்.  தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய எனது ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

தீது ஆகின்ற வாசகம் என் தன் செவி கேட்க
ஓதா நின்றாய், மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீஇவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.    --- கந்தபுராணம்

இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துட் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான்.

பக்தரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர்வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தை இன்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

சிதைத்தான் வாமச் சேவடி தன்னாற் சிறிதுந்தி யுதைத்தான்கூற்றன்விண் முகில்போல்மண் ணுறவீழ்ந்தான்”
                                                                                       --- கந்தபுராணம்.

அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத
         அவனைக்காப்பது காரணமாக
வந்தகாலன் தன்ஆருயிர் அதனை
         வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,டியேன்
எந்தை!நீ எனைநமன் தமர்நலியில்
         இவன்மற்றுஎன்அடி யான்எனவிலக்கும்
சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தேன்
         செழும்பொழில் திருப்புன் கூர்உளானே          ---சுந்தரர்.

தூமொழி நகைத்துக் கூற்றை 
மாளிட உதைத்துக் கோத்த 
தோள்உடை என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே.    ----(வார்குழல்) திருப்புகழ்.

அந்தகன் ஆர்உயிர் போக, பொன்
     திண் புரமோடு எரி பாய, பண்டு
          அங்கசன் ஆர்உடல் வேக, கண் ...... தழல்மேவி
அண்டர்கள் ஓட, டல் ஆர் தக்கன்
     சந்திர சூரியர் வீழச்சென்று,
          அம்பல மீதினில் ஆடுஅத்தன் ...... குருநாதா!     --- (கொந்தள ஒலை) திருப்புகழ்.

நலமலி தருமறை மொழியொடு
         நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,
மலர்அவை கொடுவழி படுதிறல்
         மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி தரு மறலி தன்உயிர்
         கெட உதை செய்தவன் உறைபதி
திலகம் இது என உலகுகள் புகழ்
         தருபொழில் அணிதிரு மிழலையே.     ---  திருஞானசம்பந்தர்.

நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலிஎம் பெருமானே. ---  திருஞானசம்பந்தர்.

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,
சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.   --- அப்பர்.
       
மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.               --- அப்பர்.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவு கொண்டு, அதனால் வரும் நோய்களோடு பலரும் இகழும்படியான வாழும் நிலை கூடாது.













No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...