திருவாரூர் அரனெறி





திருவாரூர் அரநெறி

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.

     மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் திருவாரூருக்கு நிரம்ப உள்ளன.


இறைவர்               : அகிலேசுவரர்.

இறைவியார்           : வண்டார் குழலி, புவனேசுவரி.

தல மரம்                : பாதிரி.

தேவாரப் பாடல்கள்    : அப்பர் -1. எத்தீ புகினும் எமக்கொரு,
                                                  2. பொருங்கைமதக் கரியுரிவைப்.


          இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையில் அன்றி மற்றத் திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது.

          ஆடகேசுவரம் - அப்புத் தலம்; இங்கொரு நாகபிலம் உள்ளது.

          ஆனந்தேசுவரம் என்பது மங்கண முனிவரால் தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம்.

          இதையடுத்துள்ள கோயில் விசுவகர்மேசம் - கருங்கற் கோயில்; அழகான கொடுங்கைகள், சிற்பக் கலைகள் நிறைந்தது.

          வன்மீகநாதர் சந்நிதியில் வலமாக வரும்போது 'ஐங்கலக்காசு விநாயகர் ' (ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவி வழிச் செய்தி) உள்ளார்.

          தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். முகம் மட்டுமே தெரியும்; மார்கழி ஆதிரையில் தியாகராசாவின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும் - அவை மிகவும் இரகசியமானவை.

          இங்கு நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன.

          வடக்குப் பிரகாரத்தில் உள்ள ருணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும்; கடன்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

          இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. 1. எமசண்டர் - எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான்; 2. ஆதி சண்டர் - (சண்டேஸ்வரர்).

          "பிறக்க முத்தி திருவாரூர் " என்று புகழப்படும் சிறப்பினது; மூலாதாரத் தலம்.

          'திருவாரூர்த் தேர் ' அழகு; இத்தேர் ஆழித் தேர் என்று பெயர்.

          தியாகேசர் சந்நிதியில் தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது.

         பஞ்சபூத தலங்களுள் பிருதிவித்தலம்.

         பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று சுவத்தி வடிவிலும், ஒன்று தாமரைப்பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமும் இல்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும்; மான் தோலால் கட்டப்பட்டது. இஃது ஒவ்வொரு முகத்திலும் தனித் தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்; ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது.

          எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்தியமும் அந்தி பூசை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

          சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.

          பரவையார் அவதரித்தப் பதி.

          'கமலை' என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம்.

          க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் என்பன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.

          தியாகராஜ லீலை - மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது.

          அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை, தியாகராஜபுர மான்மியம் முதலாக 16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சமஸ்கிருதத்தில் உள்ளன.

          செம்பியன்மாதேவி, ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது, ஆண்டொன்றுக்கு ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நீர் ஊர்ந்த கார் ஊர் பொழிலும் கனி தந்து இளைப்பு அகற்றும் ஆரூர் அறநெறி வேளாண்மையே" என்று போற்றி உள்ளார்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 227
நால்மறைநூல் பெருவாய்மை நமிநந்தி
         அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
         விருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன்மருவும் கொன்றையார் திருவாரூர்
         அரனெறியில் திகழும் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
         பணிசெய்துஅங்கு அமரும் நாளில்.

         பொழிப்புரை : நான்மறைகளிலும் மற்ற ஞானநூல்களிலும் பேசப்படும் பெருமை வாய்ந்த வாய்மையால் சிறந்த நமிநந்தி அடிகளின் தொண்டின் நன்மையமைந்த சிறப்பால், பரமரையே போற்றுகின்ற திருவிருத்தப் பதிகத்துள் அவரை வைத்துப் பாடி, தேன் பொருந்திய கொன்றை மலர்களுடைய சிவபெருமான், திருவாரூர் அரன் நெறியில் விளங்க வீற்றிருக்கும் சிறப்பையும் போற்றி, அழகிய திருவீதிப்பணியையும் செய்து அங்கு விரும்பித் தங்கியிருக்கும் காலத்தில்.

         `வேம்பினைப் பூசி` எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் வரும் இரண்டாவது பாடல்,

ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே.

-தி.4 ப.102 பா.2 என்பதாகும். இதன்கண் நமிநந்தியடிகள் போற்றப் பெறுவதையே ஆசிரியர் ஈண்டுக் குறித்தருளுகின்றார்.

         திருவாரூர் அரனெறித் திருப்பதிகங்கள்:
1. `எத்தீப் புகினும்` (தி.4 ப.17) - இந்தளம்.
2. `பொருங்கை` (தி.6 ப.33) - திருத்தாண்டகம்.

இவற்றுள் இரண்டாவது பதிகம் திருவாரூர் திருமூலட்டானத்துப் பெருமானையும் நினைவு கூர்ந்து அருளியதாகும்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்
 4. 017    திருவாரூர் அரநெறி                   பண் - இந்தளம்
                                        திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
எத்தீ புகினும் எமக்குஒரு தீதுஇலை
தெத்தே எனமுரன்று எம்உள் உழிதர்வர்
முத்தீ அனையதொர் மூவிலை வேல்பிடித்து
அத்தீ நிறத்தார் அரநெறி யாரே.

         பொழிப்புரை : உலகம் அறிந்த தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று , மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார் . ஆதலின் எமக்கு எந்தத் தீயினிடைப் புக நேரினும் , அத்தீயினால் தீங்கு யாதும் நிகழாது .


பாடல் எண் : 2
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயதொர்
தாரமும் பூண்பர், தமக்குஅன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்,நல் பைங்கண் மிளிர்அரவு
ஆரமும் பூண்பர் அரநெறி யாரே.

         பொழிப்புரை : அரநெறிப் பெருமான் நல்ல பசிய கண்கள் ஒளிவீசும் பாம்பினை மாலையாக அணிபவர் . தம்மிடம் அன்புடையவருடைய பொறுப்புக்களைத் தாமே ஏற்று அருளுபவர் . பார்வதியையும் உடன் அழைத்துச் சென்று அருச்சுனனோடு நிகழ்த்தப்பட்ட போரில் வீரச் செயல்களை நிகழ்த்துவர் .


பாடல் எண் : 3
தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமுமொர்
வஞ்ச வண்ணத்தர் வண்டுார்குழ லாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாதகண் ணார்தொழும்
அஞ்ச வண்ணத்தர் அரநெறி யாரே.

         பொழிப்புரை : அரநெறிப் பெருமானார் தம்மைத் தஞ்சம் என்று அடைந்தவருக்குத் தாம் அடைக்கலம் நல்கும் இயல்பினர் . சடை முடியை உடையவர் . அடியவர் அல்லாதாருக்கு வஞ்சனையான இயல்பினர் . வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதியோடும் பொருந்தும் இயல்பினர் . இமையாக் கண்களை உடைய மேலோர் தொழும் அம்சமந்திர ஜபயோகம் புரிபவர் .


பாடல் எண் : 4
விழித்தனர் காமனை வீழ்தர, விண்ணின்று
இழித்தனர் கங்கையை, ஏத்தினர் பாவம்
கழித்தனர், கல்சூழ் கடிஅரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.

         பொழிப்புரை : ஆரூர் அரநெறிப் பெருமானார் காமன் பொடியாய் விழுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவர். வானத்திலிருந்து கங்கையைத் தம் சடையில் இறங்கச் செய்தவர். தம்மை வழிபடுபவருடைய தீவினைகளைப் போக்குபவர் . கற்களால் சூழப்பட்ட காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவர் .

  
பாடல் எண் : 5
துற்றவர் வெண்தலை யில்,சுருள் கோவணம்
தற்றவர், தம்வினை ஆன எலாம்அற
அற்றவர் ஆரூ ரரநெறி கைதொழ
உற்றவர் தாம்ஒளி பெற்றனர் தாமே.

         பொழிப்புரை : மண்டையோட்டில் பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் .


பாடல் எண் : 6
கூடுஅர வத்தர் குரல்கிண் கிணி,அடி
நீடுஅர வத்தர்,முன் மாலை இடை இருள்
பாடுஅர வத்தர் பணம்அஞ்சு பைவிரித்து
ஆடுஅர வத்தர் அரநெறி யாரே.

         பொழிப்புரை : ஆரூர் அரநெறிப் பெருமானார் திருவடிகளிலே அரிபெய் சிலம்பினராய் ஒலிக்கும் , கிண்கிணியால் ஏற்படும் நீண்ட ஒலியினை உடையவராய் , மாலையின் முற்பட்ட பகுதியில் இருளிலே பாடும் ஒலியினராய், படம் விரித்து ஆடும் பாம்பை அணிந்தவராய் உள்ளார் .


பாடல் எண் : 7
கூடவல் லார்குறிப் பில்,உமை யாளொடும்
பாடவல் லார்,பயின்று அந்தியும் சந்தியும்
ஆடவல் லார்,திரு ஆரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீட வல்லாரே.

         பொழிப்புரை : உமாதேவியின் குறிப்பறிந்து அவளோடு இணைந்திருத்தலில் வல்லவராய் , நண்பகல் அந்தியிலும் காலை மாலைச் சந்திகளிலும் பலகாலும் பாடவல்லவராய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவராய் உள்ள பெருமானார் உறையும் திருவாரூர் அரநெறியை விரும்பித் தொழவல்லவர்கள் வினைகளைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராவர் .


பாடல் எண் : 8
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி,
காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம் ஆரூர் அரநெறி யார்க்கே.

         பொழிப்புரை : ஆரூர் அரநெறிப் பெருமானாருக்குப் பாலை ஒத்த வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறையும் பசிய கொன்றை மாலையும் முடிமாலைகள் ஆகும் . அவர் திருவடிகளைக் காலையும் மாலையும் கைதொழவல்ல அடியவர் உள்ளங்களே அவருக்கு உறைவிடமாகும் .


பாடல் எண் : 9
முடிவண்ணம் வானமின் வண்ணம்,தம் மார்பின்
பொடிவண்ணம் தம்புகழ் ஊர்தியின் வண்ணம்,
படிவண்ணம் பாற்கடல் வண்ணம்,செஞ் ஞாயிறு
அடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.

         பொழிப்புரை : திருவாரூர் அரநெறியார்க்கு முடியின் நிறம் மேகத்தின் மின்னலின் நிறமாகும் . அவர் மார்பில் அணிந்த திருநீற்றின் நிறம் அவர் வாகனமான காளையின் நிறமாகும் . அவருடைய திரு மேனியின் நிறம் பாற்கடல் நிறமாகும் . அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும் .


பாடல் எண் : 10
பொன்நவில் புன்சடை யான்அடி யின்நிழல்
இன்னருள் சூடிஎள் காதும் இராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாம்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.

         பொழிப்புரை : ஆரூர் அரநெறியார் பொன்போன்ற சிவந்த முறுக்கேறிய சடையை உடையவர் . அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் அத்தன்மையை உடையவர் .


பாடல் எண் : 11
பொருண்மன் னனைப்பற்றிப் புட்பகம்கொண்ட
மருண்மன் னனைஎற்றி வாளுடன் ஈந்து
கருள்மன்னு கண்டம் கறுக்கநஞ்சு உண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.

         பொழிப்புரை :ஆரூர் அரநெறியார் , குபேரனைப் பிடித்து அவனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிக்கொண்ட , உள்ள மயக்கம் கொண்ட அரசனாகிய இராவணனை முதலில் வருத்திப்பின் அவனுக்கு வாளும் உடனே அளித்து , கழுத்துக் கறுக்குமாறு கருமை பொருந்திய விடத்தை உண்ட அருள் வடிவான தலைவராவார் .
திருச்சிற்றம்பலம்


6. 033    திருவாரூர் அரநெறி     திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொருங்கைமத கரிஉரிவைப் போர்வை யானை,
         பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானை,
கரும்புதரு கட்டியை,இன் அமிர்தை, தேனை,
         காண்பரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை,
இருங்கனக மதில்ஆரூர் மூலட் டானத்து
         எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்
அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிடமாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய் , காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற் குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய் , தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று .


பாடல் எண் : 2
கற்பகமும் இருசுடரும் ஆயி னானை,
         காளத்தி கயிலாய மலை உளானை,
வில்பயிலும் மதன்அழிய விழித்தான் தன்னை,
         விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னை,
பொற்புஅமரும் பொழில்ஆரூர் மூலட் டானம்
         பொருந்தியஎம் பெருமானை, பொருந்தார் சிந்தை
அற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :கற்பகமும், சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து, விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணை விழித்து, அருச்சுனன் முன் வேடனாய்க் காட்சியளித்து, அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 3
பாதிஒரு பெண்,முடிமேல் கங்கை யானை,
         பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,
வேதியனைத் தன்அடியார்க்கு எளியான் தன்னை,
         மெய்ஞ்ஞான விளக்கானை, விரையே நாறும்
போதுஇயலும் பொழில்ஆரூர் மூலட் டானம்
         புற்றிடங்கொண்டு இருந்தானை, போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய் , வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய் , மெய்ஞ்ஞான விளக்காய் , நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 4
நந்திபணி கொண்டுஅருளும் நம்பன் தன்னை,
         நாகேச் சரம்இடமா நண்ணி னானை,
சந்திமலர் இட்டுஅணிந்து வானோர் ஏத்தும்
         தத்துவனை, சக்கரம்மாற்கு ஈந்தான் தன்னை,
இந்துநுழை பொழில்ஆரூர் மூலட் டானம்
         இடங்கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்
அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய் , நாகேச்சுரத்தில் உறைபவனாய் , காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய் , திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய் , தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 5
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானை,
         சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை,
விடக்குஇடுகாடு இடமாக உடையான் தன்னை,
         மிக்கஅரணம் எரிஊட்ட வல்லான் தன்னை,
மடல்குலவு பொழில்ஆரூர் மூலட் டானம்
         மன்னியஎம் பெருமானை, மதியார் வேள்வி
அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை , தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை , பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை , தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை அழித்தவனை , அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 6
தாயவனை எவ்வுயிர்க்கும், தன்ஒப்பு இல்லாத்
         தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை,
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த
         மறிகடல்நஞ்சு உண்டுகந்த மைந்தன் தன்னை,
மேயவனைப் பொழில்ஆரூர் மூலட் டானம்
         விரும்பியஎம் பெருமானை, எல்லாம் முன்னே
ஆயவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :எல்லா உயிர்களுக்கும் தாயாய், தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய், திருமாலும், பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய், எல்லா உயிர்களையும் விரும்பியவனாய், சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய், எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்திலேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 7
பொருள்இயல்நல் சொல்பதங்கள் ஆயி னானை,
         புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை,
மருள்இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை,
         மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை,
இருள்இயல்நல் பொழில்ஆரூர் மூலட் டானத்து
         இனிதுஅமரும் பெருமானை,  இமையோர் ஏத்த
அருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய் , புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய் , மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய் , மறைக்காட்டிலும் , சாய்க்காட்டிலும் உறைபவனாய் , மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 8
காலனைக்கா லால்காய்ந்த கடவுள் தன்னை,
         காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை,
பாலனுக்குப் பாற்கடல்அன்று ஈந்தான் தன்னை,
         பணிஉகந்த அடியார்கட்கு இனியான் தன்னை,
சேல்உகளும் வயல்ஆரூர் மூலட் டானம்
         சேர்ந்துஇருந்த பெருமானை, பவளம் ஈன்ற
ஆல்அவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய் , குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய் , உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய் , தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய் , சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய் , பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .


பாடல் எண் : 9
ஒப்புஒருவர் இல்லாத ஒருவன் தன்னை,
         ஓத்தூரும் உறையூரும் மேவி னானை,
வைப்புஅவனை, மாணிக்கச் சோதி யானை,
         மாருதமும் தீவெளிநீர் மண்ஆ னானை,
பொ * * * * * * *

         பொழிப்புரை :தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய் , ஓத்தூரையும் , உறையூரையும் விரும்பி உறைபவனாய் , நமக்குச் சேமநிதிபோல்வானாய் . மாணிக்கத்தின் ஒளியை உடையவனாய் , காற்றும் தீயும் , ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய் , ......


பாடல் எண் : 10
பகலவன்தன் பல்உகுத்த படிறன் தன்னை,
         பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை,
இகலவனை இராவணனை இடர்செய் தானை,
         ஏத்தாதார் மனத்துஅகத்துள் இருள் ஆனானை,
புகழ்நிலவு பொழில்ஆரூர் மூலட் டானம்
         பொருந்தியஎம் பெருமானை, போற்றார் சிந்தை
அகல்அவனை. அரநெறியில் அப்பன் தன்னை,
         அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

         பொழிப்புரை :சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய் , பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய் , மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...