திருச் சிக்கல்
திருச் சிக்கல்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் திருத்தலம் உள்ளது.

         நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் என்னும் தேவார வைப்புத் திருத்தலம் உள்ளது. இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.


இறைவர்          : நவநீதேசுவரர், வெண்ணெய்ப்பிரான்

இறைவியார்      : வேல்நெடுங்கண்ணி, சத்தியதாட்சி

தல மரம்           : மல்லிகை

தீர்த்தம்           : க்ஷீர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - வானுலாவுமதி வந்துலவும்.

         புராண காலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

          திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்

          முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

          ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

     கோச்செங்கட்சோழ நாயனார் அமைத்தருளிய மாடக் கோயில்களில் ஒன்றாகும். இராஜகோபுரத்திறகு முன்னால் இரும்புத் தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் இருக்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபாணியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் இலிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப்பிரான் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலையின் கீழ்பக்கம் இறைவி வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

         காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓகை அற விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து, உலகிடை நீ சிக்கல் எனும் சிக்கல் திறலோனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 467
கழிக்கானல் மருங்குஅணையும் கடல்நாகை
         அதுநீங்கி, கங்கை ஆற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
         பரவிப்போய், தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
         விமலர்கழல் வணங்கி ஏத்தி,
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்துஅருளி
         அங்குஅகன்றார் மூதூர் நின்றும்.

         பொழிப்புரை : உப்பங்கழிகள் நிறைந்த சோலைகளின் பக்கங்களில் உள்ள நாகப்பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற சாயலை உடைய மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளை மலர்கள் மலர்வதற்கு இடனான வயல்கள் சூழந்த திருக்கீழ்வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்களான மாலைகளைப் பாடி, அப்பழைய பதியினின்றும் புறப்பட்டார்.

         குறிப்புரை : பதிகள் பலவும் என்றது திருச்சிக்கல், திருக்கண்ணங்குடி, திருவாழியூர் முதலாயினவாகலாம்.

இப்பதிகளுள் திருச்சிக்கலுக்கு மட்டும் ஒருபதிகம் கிடைத்துள்ளது. அப்பதிகம் `வானுலாவும் மதி' (தி.2 ப.8) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         திருக்கீழ்வேளூரில் அருளிய பதிகம் `மின்னுலாவிய' (தி.2 ப.105) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.008 திருச்சிக்கல்                        பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வான் உலாவுமதி வந்துஉல வும்மதில் மாளிகை
தேன் உலாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மான்அடி
ஞான மாகநினை வார்வினை ஆயின நையுமே.

         பொழிப்புரை :வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும் நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற்காலத்துக்குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே நினைபவர் வினைகள் நைந்துஅறும்.


பாடல் எண் : 2
மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோர்அவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மான்அடி மேவியே
அடைந்து வாழும்அடி யார்அவர் அல்லல் அறுப்பரே.

         பொழிப்புரை :இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம்தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.


பாடல் எண் : 3
நீல நெய்தல் நிலவிம்மலரும் சுனை நீடிய
சேலும் ஆலுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேல்ஒண் கண்ணியி னாளையொர் பாகன்வெண்ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழல் ஏத்தநம் பாவம் பறையுமே.

         பொழிப்புரை :நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஓரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

பாடல் எண் : 4
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்துவண்டு இன்னிசைப் பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றுஅண்ணல் வெண்ணைய்ப் பிரான்விரை ஆர்கழல்
சிந்தைசெய் வார்வினை ஆயின தேய்வது திண்ணமே.

         பொழிப்புரை :மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும் பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும் பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம் செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர் வினைகள் தேய்வது திண்ணம்.


பாடல் எண் : 5
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்துஅய லேமிகு
தெங்குதுங் கப்பொழில் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ஏறுஉடை வெண்ணெய்ப்பி ரான்அடி மேவவே
தங்கும் மேல்சர தம்,திரு நாளுந் தகையுமே.

         பொழிப்புரை :மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.


பாடல் எண் : 6
வண்டு இரைத்துமது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்தி ரைக்கொள்புனல் வந்துஒழு கும்வயல் சிக்கலுள்
விண்டு இரைத்தமல ரால்திகழ் வெண்ணெய்ப் பிரான்அடி
கண்டு இரைத்துமன மே,மதி யாய்கதி ஆகவே.

         பொழிப்புரை :வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச் சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும் தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற்பதியில், திருமால் பூசித்த மலர்களால் திகழும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதிபெற `மனமே மதித்துப் போற்றுவாயாக`.


பாடல் எண் : 7
முன்னுமா டம்மதில் மூன்றுஉட னேஎரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும்வயல் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்அடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.

         பொழிப்புரை :மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும் பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும் எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக.

 
பாடல் எண் : 8
தெற்றல் ஆகிய தென்இலங் கைக்குஇறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நம் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்அடி
உற்று நீநினை யாய், வினை ஆயின ஓயவே.

         பொழிப்புரை :தெளிந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள்யாவும் தேய்ந்தொழிய நீ உற்று நினைவாயாக.


பாடல் எண் : 9
மாலி னோடுஅரு மாமறை வல்ல முனிவனும்
கோலி னார்குறுகு, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம்அறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையுநம் பாவமே.

         பொழிப்புரை :திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும் சிவ பிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும்.

பாடல் எண் : 10
பட்டை நல்துவர் ஆடையி னாரொடும் பாங்குஇலாக்
கட்டு அமண்கழுக் கள்சொல் லினைக்கரு தாது,நீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்,பிணி போகவே.

         பொழிப்புரை :நல்ல மருதந்துவர்ப் பட்டையின் சாறு ஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும் பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும் சிக்கலில் வெண்ணெய்ப் பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில் வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப் பணிவீர்களாக.


பாடல் எண் : 11
கந்தம் ஆர்பொழில் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழில் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்அடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ் வல்லவர் வான்இடை
வெந்த நீறுஅணியும்பெரு மான்அடி மேவரே.

         பொழிப்புரை :மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...