6. 029 திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
தீங்கரும்பின்
இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல்,மொந்தை, தாளம், வீணை,
கொக்கரையின்
சச்சரியின் பாணி யானை,
பருமணியைப்
பவளத்தை, பசும்பொன், முத்தை,
பருப்பதத்தில்
அருங்கலத்தைப் பாவம் தீர்க்கும்
அருமணியை
ஆரூரில் அம்மான் தன்னை,
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :செல்வம் தரும்
சிந்தாமணியாய், இனிக்கும் தேன், பால், கருப்பஞ்சாறு, தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த
ஆசிரியனாய், குழல் மொந்தை தாளம்
வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய
இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க
அணிகலனாய், பாவத்தைப் போக்கும்
அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாது நாய் போன்ற, அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது.
பாடல்
எண் : 2
பொன்னேபோல்
திருமேனி உடையான் தன்னை,
பொங்குவெண் நூலானைப்
புனிதன் தன்னை,
மின்னானை
மின்இடையாள் பாகன் தன்னை,
வேழத்தின்
உரிவிரும்பிப் போர்த்தான் தன்னை,
தன்ஆனை, தன்ஒப்பார் இல்லா
தானை,
தத்துவனை, உத்தமனை, தழல்போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்
தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :பொன்னார் மேனியனை , வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை
, பார்வதிபாகனை , யானைத்தோல் போர்வையனைத் , தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர்
இல்லாதவனை , மெய்ப்பயனை , மேம்பட்டவனை , தழல்போன்ற செந்நிற மேனியனை -
இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது
அடிநாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 3
ஏற்றானை
ஏழ்உலகும் ஆனான் தன்னை,
ஏழ்கடலும் ஏழ்மலையும்
ஆனான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்
தன்னை,
கொடுமழுவாள்
கொண்டதுஏர் கையான் தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகிக்
கடிகமழும்
புன்சடைமேல் கங்கை வெள்ள
ஆற்றானை
ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :இடபவாகனனாய் , ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப்
பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய் , மழுப்படை ஏந்திய கையனாய் , காற்றும் தீயும் நீருமாகி நறுமணம்
கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள , ஆரூரிலுள்ள , அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
.
பாடல்
எண் : 4
முந்திய
வல்வினைகள் தீர்ப்பான் தன்னை,
மூவாத மேனிமுக் கண்ணி
னானை,
சந்திரனும்
வெங்கதிரும் ஆயி னானை,
சங்கரனை, சங்கக் குழையான்
தன்னை,
மந்திரமும்
மறைப்பொருளும் ஆனான் தன்னை,
மறுமையும் இம்மையும்
ஆனான் தன்னை,
அந்திரனை
ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :முற்பிறப்புக்களில்
செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய் , மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள்
உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சங்கினாலாகிய காதணியை உடையவனாய் , மந்திரமும் வேதத்தின் பொருளும்
மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது
அடிநாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 5
பிறநெறியாய், பீடுஆகி, பிஞ்ஞ கனுமாய்,
பித்தனாய், பத்தர் மனத்தின்
உள்ளே
உறநெறியாய், ஓமம்ஆய், ஈமக் காட்டில்
ஓரிபல விட,நட்டம் ஆடி னானை,
துறநெறியாய், தூபம்ஆய், தோற்றம் ஆகி,
நாற்றம்ஆய், நன்மலர்மேல் உறையா
நின்ற
அறநெறியை, ஆரூரில் அம்மான்
தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :பிறக்கும்
வழிகளாகவும் , பெருமையாகவும் , தலைக்கோலம் அணிந்தவனாகவும் , பித்தனாகவும் , அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும்
வழியாகவும் , வேள்வியாகவும்
அமைந்து , சுடுகாட்டிலுள்ள
நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி
வழங்கிப் பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த
ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 6
பழகியவல்
வினைகள் பாற்று வானை,
பசுபதியை, பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள்அரவுஒன்று ஆட்டு
வானை,
கொடுகொட்டி
கொண்டதுஓர் கையான் தன்னை,
விழவனை, வீரட்டம் மேவி னானை,
விண்ணவர்கள் ஏத்தி
விரும்பு வானை,
அழகனை, ஆரூரில் அம்மான்
தன்னை,
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :பழக்கத்தினால்
ஏற்படும் வருவினையை அழிப்பவனாய் ,
ஆன்மாக்களுக்குத்
தலைவனாய் , அக்கினித் தேவனாய்ப்
பாவங்கள் போக்கும் இளையவனாய் , பாம்பினை
ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய் , விழாக்களில் மேவி இருப்பவனாய் , வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள்
துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 7
சூளா
மணிசேர் முடியான் தன்னை,
சுண்ணவெண் நீறுஅணிந்த
சோதி யானை,
கோள்வாய்
அரவம் அசைத்தான் தன்னை,
கொல்புலித்தோல் ஆடைக்
குழகன் தன்னை,
நாள்வாயும்
பத்தர் மனத்து உளானை,
நம்பனை, நக்கனை, முக்க ணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்
தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :சூளாமணியை அணிந்த
முடியை உடையவனாய் , திருநீறு தரித்த
ஒளியினனாய் , கொடிய பாம்பினை , இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப்
புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய் , எப்பொழுதும்
அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய் , ஆடை அற்றவனாய் , முக்கண்ணனாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர்
அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 8
முத்தினை, மணிதன்னை, மாணிக் கத்தை,
மூவாத கற்பகத்தின்
கொழுந்து தன்னை,
கொத்தினை, வயிரத்தை, கொல்ஏறு ஊர்ந்து
கோள்அரவுஒன்று
ஆட்டும் குழகன் தன்னை,
பத்தனைப்
பத்தர் மனத்து உளானை,
பரிதிபோல் திருமேனி
உடையான் தன்னை,
அத்தனை
ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த
வாறே.
பொழிப்புரை :முத்து , மணி , மாணிக்கம் , என்றும் மூப்படையாத கற்பகத்தின்
கொழுந்து , வயிரம் இவற்றை
வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய் , எல்லோரிடத்தும் அன்புடையவனாய் , பக்தர்கள் மனத்தில் நிலைத்து
இருப்பவனாய் , சூரியனைப் போல ஒளி
வீசும் திருமேனியை உடையவனாய் , எல்லோருக்கும்
தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .
பாடல்
எண் : 9
பைஆடு
அரவம்கை ஏந்தி னானை,
பரிதிபோல் திருமேனிப்
பால்நீற் றானை,
நெய்ஆடு
திருமேனி நிமலன் தன்னை,
நெற்றிமேல்
மற்றொருகண் நிறைவித் தானை,
செய்யானை, செழும்பவளத் திரள்ஒப்
பானை,
செஞ்சடைமேல்
வெண்திங்கள் சேர்த்தி னானை,
ஐயாறு
மேயானை, ஆரூ ரானை,
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :படமெடுத்தாடும்
பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப்
பூசியவனாய் , நெய் அபிடேகம் செய்த
திருமேனியை உடைய தூயவனாய் , நெற்றியில் மூன்றாவது
கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை
சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப்பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன்
அயர்த்தவாறே .
பாடல்
எண் : 10
சீர்ஆர்
முடிபத்து உடையான் தன்னைத்
தேசுஅழியத்
திருவிரலால் சிதைய நூக்கி,
பேர்ஆர்
பெருமை கொடுத்தான் தன்னை,
பெண்இரண்டும்
ஆணும்ஆய் நின்றான் தன்னை,
போர்ஆர்
புரங்கள் புரள நூறும்
புண்ணியனை, வெண்ணீறு அணிந்தான்
தன்னை,
ஆரானை
ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன்
அயர்த்த வாறே.
பொழிப்புரை :அழகிய பத்துத் தலைகளை
உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு
அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக்
கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப்
போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய் , வெண்ணீறு அணிந்தானாய் , அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள
ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .
திருச்சிற்றம்பலம்
6. 030
திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
எம்பந்த
வல்வினை நோய் தீர்த்திட்டான் காண்,
ஏழ்கடலும் ஏழ்உலகும்
ஆயினான் காண்,
வம்புஉந்து
கொன்றைஅம்தார் மாலையான் காண்,
வளர்மதிசேர் கண்ணியன்
காண், வானோர் வேண்ட
அம்பு
ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண்,
அனல்ஆடி ஆன்அஞ்சும்
ஆடினான் காண்
செம்பொன்செய்
மணிமாடத் திருவாரூரில்
திருமூலட்டானத்து எம்
செல்வன் தானே.
பொழிப்புரை :செம்பொன்னால் செய்த
மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம்
செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன். ஏழ்கடலும்
ஏழ்உலகும் ஆயவன். நறுமணம் கமழும் கொன்றை மாலையன். பிறையோடு சூடிய முடிமாலையை
உடையவன். தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன். தீயில்
கூத்தாடுபவன். பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன்.
பாடல்
எண் : 2
அக்குஉலாம்
அரையினன்காண், அடியார்க்கு என்றும்
ஆர்அமுதாய்
அண்ணிக்கும் ஐயாற் றான்காண்,
கொக்குஉலாம்
பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியும்
கூர்அரவும் நீரும் சென்னித்
தொக்குஉலாம்
சடையினன்காண், தொண்டர் செல்லும்
தூநெறிகாண், வானவர்கள் துதிசெய்து
ஏத்தும்,
திக்குஎலாம்
நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :இடையில் எலும்புகளை
அணிந்தவன். அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும்
திருவையாற்றில் உறையும் இறைவன். கொக்கிறகு, கொன்றை மாலை, குளிர்ந்த பிறை, கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத்
தங்கி யிருக்கும் சடையினன். தொண்டர்கள் செல்லும் தூய வழியைக் காட்டுபவன் ஆகிய
சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய
திருவாரூரில் திருமூலத் தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான் .
பாடல்
எண் : 3
நீர்ஏறு
சடைமுடிஎம் நிமலன் தான்காண்,
நெற்றிமேல்
ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்,
வார்ஏறு
வனமுலையாள் பாகத் தான்காண்,
வளர்மதிசேர்
சடையான்காண், மாதே வன்காண்,
கார்ஏறு
முகில்அனைய கண்டத் தான்காண்,
கல்ஆலின் கீழ்அறங்கள்
சொல்லி னான்காண்,
சீர்ஏறு
மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :சடைமுடியில்
கங்கையைத் தரித்த தூயவன் . நெற்றிக்கண்ணன். கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன்.
பிறைசேர் சடையன். பெருந்தேவன். கார்முகில் போன்ற நீலகண்டன். கல்லாலின் கீழ்
இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன். சிறப்பு
மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக
அப்பெருமான் உறைகின்றான் .
பாடல்
எண் : 4
கான்ஏறு
களிற்றுஉரிவைப் போர்வை யான்காண்,
கற்பகம்காண், காலனைஅன்று உதைசெய்
தான்காண்,
ஊன்ஏறு
முடைதலையில் பலிகொள் வான்காண்,
உத்தமன்காண், ஒற்றியூர் மேவி
னான்காண்,
ஆன்ஏறுஒன்று
அதுஏறும் அண்ணல் தான்காண்,
ஆதித்தன் பல்இறுத்த
ஆதி தான்காண்,
தேன்ஏறு
மலர்ச்சோலைத் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :தேன்மிக்க மலர்கள்
நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன்
காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன். கற்பகம் போன்ற கொடையாளி .
கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன் . புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை
எடுப்பவன் . உத்தமன் . ஒற்றியூரில் விரும்பி உறைபவன் . காளையை இவரும் தலைவன் .
சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான் .
பாடல்
எண் : 5
பிறப்போடு
இறப்புஎன்றும் இல்லா தான்காண்,
பெண்உருவோடு
ஆண்உருவம் ஆயி னான்காண்,
மறப்படும்என்
சிந்தைமருள் நீக்கி னான்காண்,
வானவரும் அறியாத
நெறிதந் தான்காண்,
நறப்படுபூ
மலர்தூபம் தீபம் நல்ல
நறுஞ்சாந்தம் கொண்டுஏத்தி, நாளும் வானோர்
சிறப்போடு
பூசிக்கும் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :தேன் பொருந்திய
பூக்கும் நிலையிலுள்ள மலர்கள் ,
தூபம்
, தீபம் , நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து
நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத் தானத்தில்
உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப்
பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத
வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன் .
பாடல்
எண் : 6
சங்கரன்காண், சக்கரம்மாற்கு
அருள்செய் தான்காண்,
தருணேந்து சேகரன்காண், தலைவன் தான்காண்,
அம்கமலத்து
அயன்சிரங்கள் ஐந்தில் ஒன்றை
அறுத்தவன்காண், அணிபொழில்சூழ் ஐயாற்
றான்காண்,
எங்கள்பெரு
மான்காண்,என் இடர்கள் போக
அருள்செய்யும்
இறைவன்காண், இமையோர் ஏத்தும்
செங்கமல
வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :தாமரை களையாக
முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில்
திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன் .
திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன் . பிறை சூடிய தலைவன் . தாமரையிலுள்ள பிரமன்
தலைகளுள் ஒன்றனை அறுத்தவன் . அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன் .
எங்கள் தலைவன் . எங்கள் துன்பங்கள் நீங்குமாறு அருள் செய்யும் இறைவன் .
பாடல்
எண் : 7
நன்றுஅருளித்
தீதுஅகற்றும் நம்பி ரான்காண்,
நான்மறையோடு
ஆறுஅங்கம் ஆயி னான்காண்,
மின்திகழும்
சோதியன்காண், ஆதி தான்காண்,
வெள்ஏறு நின்றுஉலவு
கொடியி னான்காண்,
துன்றுபொழில்
கச்சி ஏகம்பன் தான்காண்,
சோற்றுத்
துறையான்காண், சோலை சூழ்ந்த
தென்றலார்
மணங்கமழும் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :தென்றல் ஊரைச்
சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன்
நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன் . நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன் .
மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன் . காளை எழுதிய கொடியை உடையவன் . பொழில்
சூழ்ந்த கச்சி ஏகம்பன் . சோற்றுத்துறையிலும் உறைபவன் .
பாடல்
எண் : 8
பொன்நலத்த
நறும்கொன்றைச் சடையி னான்காண்,
புகலூரும் பூவணமும்
பொருந்தி னான்காண்,
மின்நலத்த
நுண்இடையாள் பாகத் தான்காண்,
வேதியன்காண், வெண்புரிநூல் மார்பி
னான்காண்,
கொல்நலத்த
மூவிலைவேல் ஏந்தி னான்காண்,
கோலமா நீறுஅணிந்த
மேனி யான்காண்,
செந்நலத்த
வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :சிறந்த வளத்தை உடைய
வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன்
நிறக்கொன்றை சூடிய சடையினன் . புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன் . மின்னலை ஒத்த
நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன் . வேதியன் , பூணூல் அணிந்த மார்பினன் . பகைவருக்கு
அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற , முத்தலைச் சூலத்தை ஏந்தியவன் .
திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன் .
பாடல்
எண் : 9
விண்டவர்தம்
புரமூன்றும் எரிசெய் தான்காண்,
வேலைவிடம்
உண்டுஇருண்ட கண்டத் தான்காண்,
மண்டலத்தில்
ஒளிவளர விளங்கி னான்காண்,
வாய்மூரும்
மறைக்காடும் மருவி னான்காண்,
புண்டரிகக்
கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளும் காண்பரிய
புராணன் தான்காண்,
தெண்திரைநீர்
வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :தெளிந்த அலைகளை உடைய
நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும்
எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன் . கடலில் தோன்றிய விடத்தை உண்டு
கறுத்த கழுத்தினன் . வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன்
. வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன் . செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும்
தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன் .
பாடல்
எண் : 10
செருவளரும்
செங்கண்மால் ஏற்றி னான்காண்,
தென்னானைக் காவன்காண், தீயில் வீழ
மருவலர்தம்
புரமூன்றும் எரிசெய் தான்காண்,
வஞ்சகர்பால் அணுகாத
மைந்தன் தான்காண்,
அருவரையை
எடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு
தோளும்நெரிந்து அலற, அன்று
திருவிரலால்
அடர்த்தவன்காண், திருவா ரூரில்
திருமூலட் டானத்துஎம்
செல்வன் தானே.
பொழிப்புரை :திருவாரூர்
திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன்
. அழகிய திருவானைக்காவில் உறைபவன் . பகைவர் முப்புரத்தை எரித்தவன் . வஞ்சகர்
உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன் . கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும்
இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன்
.
திருச்சிற்றம்பலம்
6. 031 திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இடர்கெடுமாறு
எண்ணுதியேல் நெஞ்சே, நீவா,
ஈண்டு ஒளிசேர்
கங்கைச் சடையாய் என்றும்,
சுடர்ஒளியாய்
உள்விளங்கு சோதீ என்றும்,
தூநீறு சேர்ந்து இலங்கு
தோளா என்றும்,
கடல்விடம்
அதுஉண்டுஇருண்ட கண்டா என்றும்,
கலைமான் மறிஏந்து
கையா என்றும்,
அடல்விடையாய், ஆர்அமுதே, ஆதீ என்றும்,
ஆரூரா என்றுஎன்றே
அலறா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சே ! நீ
துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள் .
செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே ! ஞானஒளியாய் உள்ளத்தில்
விளங்குபவனே ! திருநீறணிந்த தோளனே ! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே ! மான்
குட்டியை ஏந்திய கையனே ! ஆற்றலுடைய காளை வாகனனே ! கிட்டுதற்கரிய அமுதே !
எல்லோருக்கும் முற்பட்டவனே ! ஆரூரனே ! எனப்பலகாலும் அழைப்பாயாக .
பாடல்
எண் : 2
செடிஏறு
தீவினைகள் தீரும் வண்ணம்
சிந்தித்தே நெஞ்சமே, திண்ணம் ஆக,
பொடிஏறு
திருமேனி உடையாய் என்றும்,
புரந்தரன்தன்
தோள்துணித்த புனிதா என்றும்,
அடியேனை
ஆளாகக் கொண்டாய் என்றும்,
அம்மானே, ஆருர்எம் அரசே
என்றும்,
கடிநாறு
பொழிற்கச்சிக் கம்பா என்றும்,
கற்பகமே என்றுஎன்றே
கதறா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சமே ! துன்பம்
மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி
உடையவனே ! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே ! அடியேனை அடிமையாகக் கொண்டவனே !
தலைவனே ! ஆரூரில் உள்ள எம் அரசனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில்
உள்ள ஏகம்பனே ! கற்பகமே ! என்று பலகாலும் அழைப்பாயாக .
பாடல்
எண் : 3
நிலைபெறுமாறு
எண்ணுதியேல், நெஞ்சே, நீவா,
நித்தலும்எம் பிரானுடைய
கோயில் புக்கு,
புலர்வதன்முன்
அலகுஇட்டு, மெழுக்கும் இட்டு,
பூமாலை புனைந்துஏத்தி, புகழ்ந்து பாடி,
தலைஆரக்
கும்பிட்டு, கூத்தும் ஆடி,
சங்கரா சயபோற்றி
போற்றி என்றும்,
அலைபுனல்சேர்
செஞ்சடைஎம் ஆதீ என்றும்,
ஆரூரா என்றுஎன்றே
அலறா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சே ! நீ
தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய
கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக்
கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால்
முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் ` சங்கரா நீ வெல்க வாழ்க !` என்றும் ` கங்கையைச் சிவந்த சடையில் வைத்த
ஆதிப்பொருளே !` என்றும் ` ஆரூரா !` என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக .
பாடல்
எண் : 4
புண்ணியமும்
நல்நெறியும் ஆவது எல்லாம்
நெஞ்சமே, இதுகண்டாய், பொருந்தக் கேள்நீ,
நுண்ணியவெண்
நூல்கிடந்த மார்பா என்றும்,
நுந்தாத ஒண்சுடரே
என்றும், நாளும்
விண்இயங்கு
தேவர்களும், வேதம் நான்கும்,
விரைமலர்மேல்
நான்முகனும், மாலும் கூடி
எண்அரிய
திருநாமம் உடையாய் என்றும்,
எழில்ஆரூ ராஎன்றே
ஏத்தா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சமே !
புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து
கேள் . பூணூல் அணிந்த மார்பனே ! தூண்ட வேண்டாத விளக்கே ! தேவர்களும்
நால்வேதங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும்
கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே ! அழகிய ஆரூரனே ! என்று பலகாலும் துதிப்பாயாக
.
பாடல்
எண் : 5
இழைத்தநாள்
எல்லை கடப்பது என்றால்
இரவினொடு நண்பகலும்
ஏத்தி வாழ்த்தி,
பிழைத்ததுஎலாம்
பொறுத்துஅருள்செய் பெரியோய் என்றும்,
பிஞ்ஞகனே, மைஞ்ஞவிலும் கண்டா
என்றும்,
அழைத்து,அலறி, அடியேன்உன் அரணம்
கண்டாய்,
அணிஆரூர் இடங்கொண்ட
அழகா என்றும்,
குழற்சடைஎம்
கோன்என்றும் கூறு, நெஞ்சே,
குற்றம்இல்லை என்மேல்,நான் கூறி னேனே.
பொழிப்புரை :நெஞ்சே !
இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு
வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால் இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்து
வாழ்த்தித் தவறு செய்தனவற்றை யெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே !
தலைக்கோலம் உடையவனே ! நீலகண்டனே ! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத்
தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன் . ஆரூர் உறையும் அழகா !
என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே ! என்றும் கூப்பிடு . உனக்கு இவ்வாறு உப
தேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம்
ஏற்படாது . செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே .
பாடல்
எண் : 6
நீப்பஅரிய
பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்துஇருந்தேன், காண்நெஞ்சே, நித்தம் ஆக,
சேப்பிரியா
வெல்கொடியி னானே என்றும்,
சிவலோக நெறிதந்த
சிவனே என்றும்,
பூப்பிரியா
நான்முகனும், புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும்
போற்றி என்ன,
தீப்பிழம்பாய்
நின்றவனே செல்வம் மல்கும்
திருவாரூ ராஎன்றே
சிந்தி நெஞ்சே.
பொழிப்புரை :நெஞ்சே !
அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக்
கண்டுள்ளேன் . நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே ! சிவலோகம் அடையும் வழியைக்
காட்டிய சிவனே ! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக்
கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கு பவனே !
செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் ` நெஞ்சே நீ நினை `.
பாடல்
எண் : 7
பற்றிநின்ற
பாவங்கள் பாற்ற வேண்டில்,
பரகதிக்குச்
செல்வதுஒரு பரிசு வேண்டில்,
சுற்றிநின்ற
சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்,
சொல்லுகேன் கேள்,நெஞ்சே, துஞ்சா வண்ணம்,
உற்றவரும்
உறுதுணையும் நீயே என்றும்,
உன்னைஅல்லால்
ஒருதெய்வம் உள்கேன் என்றும்,
புற்றுஅரவக்
கச்சுஆர்த்த புனிதா என்றும்,
பொழில்ஆரூ ராஎன்றே
போற்றா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சே ! நான்
சொல்வதனைக் கேட்பாயாக. நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும்
தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி
நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால் , செயலற்று இராமல் நான் சொல்வதைக் கேள் , எனக்கு உறவினரும் துணையும் நீயே , உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும்
நான் பரம்பொருளாக நினையேன் . புற்றில் வாழத்தக்க பாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே
! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே ! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக .
பாடல்
எண் : 8
மதி
தருவன், நெஞ்சமே, உஞ்சு போக
வழி ஆவது இது கண்டாய், வானோர்க்கு எல்லாம்
அதிபதியே, ஆர்அமுதே, ஆதீ என்றும்,
அம்மானே, ஆரூர்எம் ஐயா என்றும்,
துதிசெய்து, துன்றுமலர் கொண்டு
தூவி,
சூழும் வலஞ்செய்து, தொண்டு பாடி,
கதிர்மதிசேர்
சென்னியனே, கால காலா,
கற்பகமே என்றுஎன்றே
கதறா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சமே ! உனக்கு
நான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன் . பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே .
தேவர்கள் தலைவனே ! அரிய அமுதமே ! ஆதியே ! என்றும் , தலைவனே ! ஆரூரில் உள்ள எம் குரிசிலே
என்றும் , அவனைப் போற்றிக்
கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி , அவன் கோயிலை வலம் செய்து , தொண்டர்களையும் துதித்து , ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே !
காலனுக்கும் காலனே ! கற்பகமே ! என்றும் பலகாலும் கதறுவாயாக .
பாடல்
எண் : 9
பாசத்தைப்
பற்றுஅறுக்கல் ஆகும், நெஞ்சே,
பரஞ்சோதி, பண்டரங்கா, பாவ நாசா,
தேசத்து
ஒளிவிளக்கே, தேவ தேவே,
திருவாரூர்த்
திருமூலட் டானா என்றும்,
நேசத்தை
நீபெருக்கி, நேர்நின்று உள்கி,
நித்தலும் சென்று,அடிமேல் வீழ்ந்து
நின்று,
ஏசற்று
நின்று,இமையோர் ஏறே என்றும்,
எம்பெருமான்
என்றுஎன்றே ஏத்தா நில்லே.
பொழிப்புரை :நெஞ்சே ! மேம்பட்ட
சோதியே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! பாவத்தைப் போக்குபவனே ! உலகுக்கே ஒளிதரும்
விளக்கே ! தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே ! தேவர்கள்
தலைவனே ! எம்பெருமானே ! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து
நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப்
பாடுவாயாக . இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம் .
பாடல்
எண் : 10
புலன்கள்
ஐந்தால் ஆட்டு உண்டு, போது போக்கி,
புறம்புறமே திரியாதே
போது, நெஞ்சே,
சலங்கொள்சடை
முடிஉடைய தலைவா என்றும்,
தக்கன்செய்
பெருவேள்வி தகர்த்தாய் என்றும்,
இலங்கையர்கோன்
சிரம்நெரித்த இறைவா என்றும்,
எழில்ஆரூர் இடம்கொண்ட
எந்தாய் என்றும்,
நலங்கொள்அடி
என்தலைமேல் வைத்தாய் என்றும்,
நாள்தோறும்
நவின்றுஏத்தாய் நன்மை ஆமே.
பொழிப்புரை :நெஞ்சே!
ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து , மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல் , என்பக்கம் வந்து யான் சொல்வதனைக் கேள் .
கங்கையைச் சடையில் சூடிய தலைவா ! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! இராவணன்
தலைகளை நெரித்த தலைவனே ! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே ! உன் பல நலன்களும்
கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே ! என்று நாள்தோறும் கூறி அவனைத்
துதிப்பாயாக . அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும் .
திருச்சிற்றம்பலம்
6. 034
திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஒருவனாய்
உலகு ஏத்த நின்ற நாளோ,
ஓர்உருவே மூஉருவம் ஆன
நாளோ,
கருவனாய்க்
காலனைமுன் காய்ந்த நாளோ,
காமனையும் கண்அழலால்
விழித்த நாளோ,
மருவனாய்
மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ,
மான்மறிகை ஏந்திஓர்
மாதுஓர் பாகம்,
திருவினாள்
சேர்வதற்கு முன்னோ பின்னோ,
திருவாரூர் கோயிலாக்
கொண்டநாளே.
பொழிப்புரை :ஒப்பற்ற தலைவனாய், உலகங்கள் துதிக்க நின்றவனே! ஒரே உருவம்
அரி, அயன், அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே!
கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால்
சாம்பலாக்கியவனே! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும், தேவர் உலகையும் படைத்தவனே!
மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில்
கொண்டவனே! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ, செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும்
திருத்தலமாகக் கொண்டுள்ளாய் ?
பாடல்
எண் : 2
மலைஆர்பொற்
பாவையொடு மகிழ்ந்த நாளோ,
வானவரை வலிஅமுதம்
உட்டி அந்நாள்
நிலைபேறு
பெறுவித்து நின்ற நாளோ,
நினைப்புஅரிய
தழல்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ,
அலைசாமே
அலைகடல்நஞ்சு உண்ட நாளோ,
அமரர்கணம் புடைசூழ
இருந்த நாளோ,
சிலையால்முப்
புரம்எரித்த முன்னோ பின்னோ,
திருவாரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :அழகிய மலை மங்கையாகிய
பார்வதியோடு மகிழ்ந்தவனே ! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே ! தேவர்கணம்
புடைசூழ இருந்தவனே ! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை
அருளியவனே ! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே ! வில்லால்
மும்மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ
செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?.
பாடல்
எண் : 3
பாடகம்சேர்
மெல்அடிநல் பாவை யாளும்
நீயும்போய், பார்த்தனது பலத்தைக்
காண்பான்
வேடனாய்
வில்வாங்கி எய்த நாளோ,
விண்ணவர்க்கும்
கண்ணவனாய் நின்ற நாளோ,
மாடமொடு
மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே
மன்னிக் கூத்தை
ஆடுவான்
புகுவதற்கு முன்னோ பின்னோ,
அணிஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :பாடகம் என்ற அணியினை
அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு
வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே ! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய்
நின்றவனே ! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும்
பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன்
முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?
பாடல்
எண் : 4
ஓங்கி
உயர்ந்துஎழுந்து நின்ற நாளோ,
ஓர்உகம்போல்
ஏழ்உகமாய் நின்ற நாளோ,
தாங்கியசீர்த்
தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி
தகர்த்த நாளோ,
நீங்கியநீர்த்
தாமரையான் நெடுமா லோடு
நில்லாய்எம் பெருமானே
என்றுஅங்குஏத்தி,
வாங்கிமதி
வைப்பதற்கு முன்னோ பின்னோ,
வளர்ஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :ஓங்கி உயர்ந்து
எழுந்து நின்றவனே ! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே ! மிகச்
சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய
வேள்வியை அழித்தவனே ! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில்
தோன்றிய பிரமனும் , திருமாலும் , ` பெருமானே ! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக
` என்று துதித்து , தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து
வைக்கப்பட்டிருப்பவனே ! இச்செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட
பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
பாடல்
எண் : 5
பாலனாய்
வளர்ந்து இலாப் பான்மை யானே,
பணிவார்கட்கு
அங்குஅங்கே பற்று ஆனானே,
நீலமா
மணிகண்டத்து எண் தோளானே,
நெருநலையாய், இன்றுஆகி, நாளை ஆகும்
சீலமே, சிவலோக நெறியே ஆகும்
சீர்மையே, கூர்மையே, குணமே, நல்ல
கோலம்நீ
கொள்வதற்கு முன்னோ பின்னோ,
குளிர்ஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :பாலர் முதலிய
பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே ! வழிபடும்
அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே ! நீலகண்டனே !
பெருந்தோள்களை உடையவனே ! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே ! சிவலோகம் சேரும்
நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே ! நுண்ணறிவு உடையவனே !
நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே ! அருளுருவம் கொண்டவனே ! இச் செயல்கள்
நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக்
கொண்டாய் ?.
பாடல்
எண் : 6
திறம்பலவும்
வழிகாட்டி, செய்கை காட்டி,
சிறியையாய்
பெரியையாய் நின்ற நாளோ,
மறம்பலவும்
உடையாரை மயக்கம் தீர்த்து,
மாமுனிவர்க்கு
அருள்செய்துஅங்கு இருந்த நாளோ,
பிறங்கியசீர்ப்
பிரமன்தன் தலைகை ஏந்திப்
பிச்சையேற்று
உண்டுஉழன்று நின்ற நாளோ,
அறம்பலவும்
உரைப்பதற்கு முன்னோ பின்னோ,
அணிஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :உயிர்களுக்கு மனித
வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக்
காட்டியவனே ! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும்
உள்ளவனே ! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத்
தீர்த்து அருள் செய்து இருந்தவனே ! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக்
கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே ! அறம்பலவும் உரைத்தவனே ! இச்
செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?
பாடல்
எண் : 7
நிலந்தரத்து
நீண்டுஉருவம் ஆன நாளோ,
நிற்பனவும்
நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்துஉரைக்கக்
கற்பகமாய் நின்ற நாளோ,
காரணத்தால் நாரணனைக்
கற்பித்து அன்று
வலம்சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ,
வாசுகியை வாய்மடுத்து
வானோர் உய்யச்
சலந்தரனைக்
கொல்வதற்கு முன்னோ பின்னோ,
தண்ஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :மண்ணும் விண்ணும்
ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே ! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே !
எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே ! வானோருக்கு அசுரர்கள்
தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி
அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே ! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே !
சலந்தரனை அழித்தவனே ! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த
ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
பாடல்
எண் : 8
பாதத்தால்
முயலகனைப் பாது காத்துப்
பார்அகத்தே
பரஞ்சுடராய் நின்ற நாளோ,
கீதத்தை
மிகப்பாடும் அடியார்க்கு என்றும்
கேடுஇலா வான்உலகம்
கொடுத்த நாளோ,
பூதத்தான்
பொருநீலி புனிதன் மேவிப்
பொய்உரையா மறைநால்வர்
விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை
விரிப்பதற்கு முன்னோ பின்னோ,
விழவுஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :அழுத்திய திருவடியால்
முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட
சுடராய்த் திகழ்பவனே ! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா
வீட்டுலகம் நல்கியவனே ! பூத கணங்களை உடைய நந்தி தேவர் , தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி , புனிதனாகிய பிரமன் , பொய் யுரையாத வேதத்தில் வல்ல நால்வர்
மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! நீ இச் செயல்களைச்
செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?
பாடல்
எண் : 9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள் எட்டும்,
பூதலங்கள் அவைஎட்டும்.
பொழில்கள் எட்டும்,
கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சி எட்டும்,
கழல்சே வடிஅடைந்தார்
களைகண் எட்டும்,
நகைஎட்டும்.
நாள்எட்டும், நன்மை எட்டும்,
நலம்சிறந்தார்
மனத்தகத்து மலர்கள் எட்டும்,
திகைஎட்டும்
தெரிப்பதற்கு முன்னோ பின்னோ,
திருஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :சென்று சேரத்தக்க எண்
வகைப் பிறப்புக்கள் , எண்வகைக் குற்றங்கள் , எண்புலன்கள் , எண்வகை உலகங்கள் , எண்வகைத் தீவுகள், எண்வகைக் கடல்கள், எண்வகை அரண்கள் , தீவுகள் எட்டின் எண்வகைப்பட்ட இயல்புகள்
, உன் திருவடிகளை
அடைந்தவர்களுக்குக் கிட்டும் பயன்கள் எட்டு , எண்வகை ஒளிகள் , ஒன்றும் பலவும் ஆகிய பகுதிகளை உடைய
எட்டு நாள்கள் , எட்டு நன்மைகள் , ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின்
மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள் , எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச்
செய்வதன் முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?
பாடல்
எண் : 10
ஈசனாய்
உலகுஏழும், மலையும் ஆகி,
இராவணனை
ஈடுஅழித்திட்டு இருந்த நாளோ,
வாசமலர்
மகிழ்தென்றல் ஆன நாளோ,
மதயானை உரிபோர்த்து
மகிழ்ந்த நாளோ,
தாதுமலர்
சண்டிக்குக் கொடுத்த நாளோ,
சகரர்களை
மறித்திட்டுஆட் கொண்ட நாளோ,
தேசம்உமை
அறிவதற்கு முன்னோ பின்னோ,
திருஆரூர் கோயிலாக்
கொண்ட நாளே.
பொழிப்புரை :உலகம் ஏழையும் மலைகள்
ஏழையும் அடக்கி ஆள்பவனே ! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே ! பொதிய மலையில்
அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே ! மதயானையின்
தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே ! சூடிய மலர் மாலையைச் சண்டிகேசுவரருக்குக்
கொடுத்தவனே ! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே ! இச்
செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ
திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 227
நால்மறைநூல்
பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத்
தொண்டின் நன்மைப்
பான்மை
நிலையால், அவரைப் பரமர்திரு
விருத்தத்துள்
வைத்துப் பாடி,
தேன்மருவும்
கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழும்
தன்மை
ஆனதிற
மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்துஅங்கு
அமரும் நாளில்.
பொழிப்புரை : நான்மறைகளிலும் மற்ற
ஞானநூல்களிலும் பேசப்படும் பெருமை வாய்ந்த வாய்மையால் சிறந்த நமிநந்தி அடிகளின்
தொண்டின் நன்மையமைந்த சிறப்பால்,
பரமரையே
போற்றுகின்ற திருவிருத்தப் பதிகத்துள் அவரை வைத்துப் பாடி, தேன் பொருந்திய கொன்றை மலர்களுடைய
சிவபெருமான், திருவாரூர் அரன்
நெறியில் விளங்க வீற்றிருக்கும் சிறப்பையும் போற்றி, அழகிய திருவீதிப்பணியையும் செய்து அங்கு
விரும்பித் தங்கியிருக்கும் காலத்தில்.
`வேம்பினைப் பூசி` எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் வரும்
இரண்டாவது பாடல்,
ஆராய்ந்து
அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர்
பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நாரூர்
நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால்
திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே.
-தி.4 ப.102 பா.2 என்பதாகும். இதன்கண் நமிநந்தியடிகள்
போற்றப் பெறுவதையே ஆசிரியர் ஈண்டுக் குறித்தருளுகின்றார்.
திருவாரூர் அரனெறித் திருப்பதிகங்கள்: 1. `எத்தீப் புகினும்` (தி.4 ப.17) - இந்தளம். 2. `பொருங்கை` (தி.6 ப.33) - திருத்தாண்டகம். இவற்றுள் இரண்டாவது
பதிகம் திருவாரூர் திருமூலட்டானத்துப் பெருமானையும் நினைவு கூர்ந்து அருளியதாகும்.
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
4. 102 திருவாரூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வேம்பினைப்
பேசி, விடக்கினை ஓம்பி, வினைபெருக்கி,
தூம்பினைத்
தூர்த்து, அங்குஓர் சுற்றம்
துணைஎன்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பலம்
பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப்
பூசிச் சலம்இன்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே.
பொழிப்புரை : தொண்டர்களே! வேம்பு
போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப்
பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத்
தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள்
என்றிருக்கின்றீர்களே! ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும்
பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து
கடைத்தேறுங்கள்.
பாடல்
எண் : 2
ஆராய்ந்து
அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கிப்
பாரூர்
பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நார்ஊர்
நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால்
திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும்அன்றே.
பொழிப்புரை : அடியார்களின்
அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித்
தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர்
எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி
நடத்தினனாய், நீரை வார்த்துத்
திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.
பாடல்
எண் : 3
பூம்படி
மக்கலம், பொற்படி மக்கலம், என்றுஇவற்றால்
ஆம்படி
மக்கலம் ஆகிலும் ஆரூர் இனிதுஅமர்ந்தார்
தாம்படி
மக்கலம் வேண்டுவ ரேல்,தமிழ் மாலைகளால்
நாம்படி
மக்கலம் செய்து தொழுதும் மடநெஞ்சமே.
பொழிப்புரை : மடநெஞ்சமே!
எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது
இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப்
பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது
அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப்
பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்து அணிவித்து அவரை வணங்குவோம்.
பாடல்
எண் : 4
துடிக்கின்ற
பாம்புஅரை ஆர்த்து, துளங்கா மதிஅணிந்து,
முடித்தொண்டர்
ஆகிமுனிவர் பணிசெய்வ தேயும்அன்றிப்
பொடிக்கொண்டு
பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன்
நந்திஎன் பான்உளன் ஆரூர் அமுதினுக்கே.
பொழிப்புரை : துள்ளுகின்ற பாம்பினை
இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள்
திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி,
திருநீற்றைப்பூசி
வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான
தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள
பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.
பாடல்
எண் : 5
கரும்பு
பிடித்தவர் காயப்பட் டார்,அங்கொர் கோடலியால்
இரும்பு
பிடித்தவர் இன்புறப் பட்டார், இவர்கள்
நிற்க
அரும்புஅவிழ்
தண்பொழில் சூழ்அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு
மனத்தினை யாதுஎன்று நான்உன்னை வேண்டுவதே.
பொழிப்புரை : அரும்புகள் மலரும்
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பி உறையும் பெருமானே! கரும்பினை
வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய
இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால்
சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை
விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா? நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று
அடியேன் உன்பால் வேண்டுவேன்?
பாடல்
எண் : 6
கொடிகொள்
விதானம் கவரி பறைசங்கம் கைவிளக்கோடு
இடிவுஇல்
பெருஞ்செல்வம் எய்துவர்,
எய்தியும்
ஊனம்இல்லா
அடிகளும்
ஆரூர் அகத்தினர் ஆயினும் அம்தவளப்
பொடிகொண்டு
அணிவார்க்கு இருள்ஒக்கும் நந்தி புறப்படிலே.
பொழிப்புரை : கொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற
செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத
திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய
வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு,
நம்பி
நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல்,
ஊருக்கு
வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.
பாடல்
எண் : 7, 8, 9
* * * * * * * * * *
பாடல்
எண் : 10
சங்குஒலிப்
பித்திடு மின்சிறு காலை,
தடஅழலில்
குங்குலி
யப்புகைக் கூட்டுஎன்றும் காட்டி, இருபதுதோள்
அங்குலம்
வைத்தவன் செங்குரு திப்புனல் ஓடஅஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தா மரைஎன்னை
ஆண்டனவே.
பொழிப்புரை : தொண்டர்களே!
விடியற்காலையில் தூப மூட்டி யில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக்
குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன்
இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய
இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே
அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
அப்பர்
பெருமான், திருவாரூரில்
எழுந்தருளி இருந்த காலத்தில், அருகில் உள்ள திருத்தலங்களான திருவலிவலம், திர்க்
கீழ்வேளூர்,
திருக்
கன்றாப்பூர் முதலிய திருத்தலங்களை வழிபட்டு, உள்ளத்தில் நிரம்பாத
காதலால் உந்தப்பட்டு, மீளவும் திருவாரூருக்கு எழுந்தருளினார்.
பெரிய
புராணப் பாடல் எண் : 228
நீர்ஆரும்
சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து
சென்று
வார்ஆரும்
முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து
மகிழ்ந்து பாடிக்
கார்ஆரும்
கறைக்கண்டர் கீழ்வேளூர்
கன்றாப்பூர் கலந்து
பாடி
ஆராத
காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும்
அணைந்தார் அன்றே.
பொழிப்புரை : கங்கையாறு தங்கிய
சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான
உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும்
சென்று, மனம் கலந்த
ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை
மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதிகளில்
அருளிய பதிகங்கள்:
1. திருவலிவலம்: `நல்லான்காண்` (தி.6 ப.48) - திருத்தாண்டகம்.
2. திருக்கீழ் வேளூர்: `ஆளான` (தி.6 ப.67) - திருத்தாண்டகம்.
3. திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6 ப.61) - திருத்தாண்டகம்.
இத்திருப்பதிகளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று
பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும்
திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது.
அவை
திருக்கோளிலி: (அ). `மைக்கொள்` (தி.5 ப.56) - திருக்குறுந்தொகை. (ஆ) `முன்னமே` (தி.5 ப.57) - திருக்குறுந்தொகை.
திருப்பேரெயில்: `மறையும்` (தி.5 ப.16) - திருக்குறுந்தொகை.
மீண்டும் திருவாரூரை அணைந்து, ஐம்பொறிகளோடு வாழ இயலாமையை நினைந்து
அருளிய திருப்பதிகம். `படுகுழிப் பவ்வத்தன்ன` (தி.4 ப.52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
4. 052 திருவாரூர் திருநேரிசை
திருச்சிற்றமபலம்
பாடல்
எண் : 1
படுகுழிப்
பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த
ஆற்றால்,
கெடுவதுஇம்
மனிதர் வாழ்க்கை, காண்தொறும் கேதுகின்றேன்,
முடுகுவர்
இருந்து உள் ஐவர் மூர்க்கரேல், இவர்களோடும்
அடியனேன்
வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.
பொழிப்புரை : பெரிய பள்ளமான
கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு
பாழாகிறது. ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை
அழைக்கின்றேன். இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம்
விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன. ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே !
அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன் .
பாடல்
எண் : 2
புழுப்பெய்த
பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி,
ஒழுக்குஅறா
ஒன்பது வாய், ஒற்றுமை ஒன்றும் இல்லை,
சழக்கு
உடை இதன் உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய்
வாழ மாட்டேன், ஆரூர்மூ லட்ட னீரே.
பொழிப்புரை : ஆரூர் மூலட்டனீரே !
புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து , திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள்
ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய , இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும்
பல துயரங்களை விளைக்க , அவற்றால் கலக்கமுற்று
வாழ இயலாதேனாய் உள்ளேன் .
பாடல்
எண் : 3
பஞ்சின்மெல்
அடியினார்கள் பாங்கராய், அவர்கள் நின்று
நெஞ்சில்நோய்
பலவும் செய்து நினையினும் நினைய
ஒட்டார்,
நஞ்சு
அணி மிடற்றினானே, நாதனே, நம்பனே, நான்
அஞ்சினேற்கு
அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே.
பொழிப்புரை : விடத்தை அணிந்த
கண்டரே ! தலைவரே ! அடியவ ரால் விரும்பப்படுகின்றவரே ! பஞ்சினைப் போன்ற மெல்லிய
பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை
உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு
அஞ்சுகின்ற எனக்கு , ஆரூர்ப் பெருமானாகிய
நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர் .
பாடல்
எண் : 4
கெண்டைஅம்
தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த்
திரிதந்து ஐவர் குலைத்து, இடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான்
தரிக்க கில்லேன் காத்துக்கொள்,கறை சேர்கண்டா,
அண்டவா
னவர் போற்றும் ஆரூர்மூ லட்ட னீரே.
பொழிப்புரை : நீலகண்டரே ! எல்லா
உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே ! கெண்டைமீன்போன்ற அழகிய
பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என்
ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பக் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின்
செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக்
கொள்வீராக .
பாடல்
எண் : 5
தாழ்குழல்
இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்சம்
என்று
ஏழையேன்
ஆகி நாளும் என்செய்கேன் எந்தை
பெம்மான்
வாழ்வதேல்
அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப்
படுக்க ஆற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே.
பொழிப்புரை : என் தந்தையாகிய
பெருமானே ! ஆரூர் மூலத் தானத்தில் உறைபவரே ! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும்
உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன் ? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த
குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன் . இவ்வுலகில்
ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும் .
பாடல்
எண் : 6
மாற்றம்ஒன்று
அருள கில்லீர் மதி இலேன், விதி இலாமை
சீற்றமும்
தீர்த்தல் செய்யீர், சிக்கனவு உடையர்
ஆகிக்
கூற்றம்போல்
ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு
செய்ய
ஆற்றவும்
கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே.
பொழிப்புரை : ஆரூர் மூலத்தானத்துப்
பெருமானே ! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத்
தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர் .
தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப்
போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும்
துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் . யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர்
அருளுகின்றீரில்லை .
பாடல்
எண் : 7
உயிர்நிலை
உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக,
துயரமே
ஏற்றம் ஆக, துன்பக்கோல் அதனைப்
பற்றி,
பயிர்தனைச்
சுழிய விட்டு, பாழ்க்கு நீர்
இறைத்து, மிக்க
அயர்வினால்
ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.
பொழிப்புரை : ஆரூர்ப் பெருமானே !
உயிர் நிற்றற்குரிய இவ் வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்ற மரமாக அமைத்து, உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு
துன்பமாகிய, ஏற்றத்தோடு கட்டித்
தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப் பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை
விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய
வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்;
பாடல்
எண் : 8
கற்றதேல்
ஒன்றும் இல்லை, காரிகையாரோடு ஆடிப்
பெற்றதேல்
பெரிதும் துன்பம், பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால்
ஐவர் வந்து முறைமுறை துயரம்
செய்ய
அற்றுநான்
அலந்து போனேன், ஆரூர் மூலட்டனாரே.
பொழிப்புரை : ஆரூர்ப் பெருமானே !
அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை . மகளிர் பின்னே
அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன் . என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம்
ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த
அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன் .
பாடல்
எண் : 9
பத்தனாய்
வாழ மாட்டேன், பாவியேன் பரவி வந்து
சித்தத்து
உள்ஐவர் தீய செய்வினை பலவும்
செய்ய,
மத்துஉறு
தயிரே போல மறுகும்என் உள்ளம்
தானும்,
அத்தனே!
அமரர் கோவே! ஆரூர்மூ லட்ட னாரே.
பொழிப்புரை : தலைவரே ! தேவருக்கு
அரசரே ! ஆரூர் மூலத்தானத்தாரே ! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக , என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள்
தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட
தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது .
பாடல்
எண் : 10
தடக்கைநால்
ஐந்தும் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன்
பேர்க்க ஓடி, இரிந்தன பூதம்
எல்லாம்,
முடித்தலை
பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி
அடர்த்து,அருள் செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே.
பொழிப்புரை : ஆரூர் மூலட்டானத்தாரே
! நீண்ட இருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப் பிடித்துப் பெயர்த்து
எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட , அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது
கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு
அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே !
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 229
மேவுதிரு
ஆதிரைநாள் வீதிவிடங்
கப்பெருமாள் பவனி
தன்னில்,
தேவருடன்
முனிவர்கள்முன் சேவிக்கும்
அடியார்க ளுடன்சே
வித்து,
மூவுலகும்
களிகூர வரும்பெருமை
முறைமை எலாங் கண்டு
போற்றி,
நாவினுக்குத்
தனிஅரசர் நயக்கும் நாள்,
நம்பர்திரு அருளி
னாலே.
பொழிப்புரை : பொருந்தும்
திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் எழுந்தருளிவரும் திருவுலாவில், தேவர்களுடனே முனிவர்களுமாகிய
கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் முன் நின்று வணங்கும் அடியார்களுடனே கூடி வணங்கி, மூன்று உலகங்களும் மகிழ்ச்சி அடைந்திட
வருகின்ற அவ்விழாவின் நெறிமுறைகளை எல்லாம் கண்டு போற்றி, ஒப்பில்லாத நாவுக்கரசர் விரும்பித்
தங்கியிருக்கும் நாள்களில், இறைவரின்
திருவருளால்.
பெ.
பு. பாடல் எண் : 230
திருப்புகலூர்
அமர்ந்து அருளும் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட்டு
ஏத்தும்
விருப்பு
உடைய உள்ளத்து மேவி எழும்
காதல்புரி வேட்கை கூர,
ஒருப்படுவார், திருவாரூர் ஒருவாறு
தொழுது அகன்று, அங்கு உள்ளம்
வைத்துப்
பொருப்பு
அரையன் மடப்பாவை இடப்பாகர்
பதி பிறவும் பணிந்து
போந்தார்.
பொழிப்புரை : திருப்புகலூரில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுதற்குரிய விருப்பம்
வரப்பெற்ற திருவுள்ளத்தில் பொருந்தி எழுகின்ற காதல் மிக, அங்ஙனமே செல்வதற்கு எண்ணியவராய்த், திருவாரூரை ஒருவாறாகத் தொழுது, நீங்கித், தம் கருத்தைத் திருவாரூரில் வைத்து, மலையரசன் பாவையாரான உமையம்மையாரை ஒரு
கூற்றில் வைத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் இடைப்பட்ட பிற பதிகளையும் வணங்கிச்
சென்றார்.
திருவாரூரில் தம்
கருத்தை வைத்தமைக்கு அடையாளமாகப் பாடப்பெற்ற திருப்பதிகம்: `கைம்மான` (தி.6 ப.24) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.
பிறபதிகளாவன: திருப்பள்ளியின் முக்கூடல், திருவிற்குடி, திருப்பனையூர் முதலாயினவாகலாம்.
இவற்றுள் முன்னுள்ள பதியொன்றற்கே திருப்பதிகம் உள்ளது. திருப்பள்ளியின் முக்கூடல்
: `ஆராத` (தி. 6 ப.69) - திருத்தாண்டகம்.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
6. 024 திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கைம்மான
மதகளிற்றின் உரிவை யான்காண்,
கறைக்கண்டன் காண்,கண்ஆர் நெற்றி
யான்காண்,
அம்மான்காண், ஆடுஅரவுஒன்று ஆட்டி
னான்காண்,
அனல்ஆடி காண்,அயில்வாய்ச் சூலத்
தான்காண்,
எம்மான்காண், ஏழ்உலகும் ஆயி
னான்காண்,
எரிசுடரோன் காண்,இலங்கு மழுவா ளன்காண்,
செம்மானத்து
ஒளிஅன்ன மேனியான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :துதிக்கையையும் , பெருமையையும் மதத்தையும் உடைய யானைத்
தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய் , கண்
பொருந்திய நெற்றியை உடையவனாய் ,
எல்லாருக்கும்
தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து
நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய் , எங்களுக்குத் தலைவனாய் , ஏழுலகும் பரந்தவனாய் , எரிகின்ற விளக்குப் போல்பவனாய் , விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச்
செந்நிற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய் , என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான்
காட்சி வழங்குகின்றான் .
பாடல்
எண் : 2
ஊன்ஏறு
படுதலையில் உண்டி யான்காண்,
ஓங்காரன் காண்,ஊழி முதல் ஆனான்காண்,
ஆன்ஏறுஒன்று
ஊர்ந்துஉழலும் ஐயா றன்காண்,
அண்டன்காண், அண்டத்துக்கு அப்பா
லான்காண்,
மான்ஏறு
கரதலத்துஎம் மணிகண் டன்காண்,
மாதவன்காண், மாதவத்தின் விளைவு
ஆனான்காண்,
தேன்ஏறும்
மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :புலால் மணம் தங்கிய
மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய் , ஓங்கார
வடிவினனாய் , ஊழிகளுக்குத்
தலைவனாய்க் காளையை இவர்பவனாய் ,
திருவையாற்றில்
உறைபவனாய் , எல்லா உலகங்களும்
பரவினவனாய் , அண்டங்களுக்கு
அப்பாலும் பரவியவனாய் , கையில் மானை ஏந்திய
நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக்
காட்சி வழங்குகின்றான் .
பாடல்
எண் : 3
ஏவணத்த
சிலையால்முப் புரம்எய் தான்காண்,
இறையவன்காண், மறையவன்காண், ஈசன் தான்காண்,
தூவணத்த
சுடர்ச்சூலப் படையி னான்காண்,
சுடர்மூன்றும்
கண்மூன்றாக் கொண்டான் தான்காண்,
ஆவணத்தால்
என்தன்னை ஆட்கொண் டான்காண்,
அனல்ஆடிகாண், அடியார்க்கு அமிர்து
ஆனான்காண்,
தீவணத்த
திருவுருவில் கரிஉரு வன்காண்,
திருவாரூ ரான்காண், என்சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூரில் உள்ள
பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன் . அவன் இறைவனாய் , மறை ஓதுபவனாய் , நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும்
தூய ஒளியுடைய சூலப்படையினனாய் ,
சூரியன்
சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய் , ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த்
தீயில் கூத்து நிகழ்த்துபவனாய் ,
அடியார்க்கு
அமுதமாயினவன் . தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை
உடையவனாவான் . அவன் என் சிந்தையான் .
பாடல்
எண் : 4
கொங்குவார்
மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்,
கொடுமழுவன் காண்,கொல்லை வெள்ஏற்
றான்காண்,
எங்கள்பால்
துயர்கெடுக்கும் எம்பி ரான்காண்,
ஏழ்கடலும் ஏழ்மலையும்
ஆயி னான்காண்,
பொங்குமா
கருங்கடல்நஞ்சு உண்டான் தான்காண்,
பொன்தூண்காண், செம்பவளத் திரள்போல்
வான்காண்,
செங்கண்வாள்
அராமதியோடு உடன்வைத் தான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூரில் உள்ள
பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன் . கொடிய
மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன் . எங்கள் துயரைப் போக்கும் தலைவன் .
ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன் . அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில்
தோன்றிய நஞ்சினை உண்டவன் . பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன் .
பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன் . அவன் என்
சிந்தையான் .
பாடல்
எண் : 5
கார்ஏறு
நெடுங்குடுமிக் கயிலா யன்காண்,
கறைக்கண்டன் காண்,கண்ஆர் நெற்றி
யான்காண்,
போர்ஏறு
நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்,
புண்ணியன்காண், எண்ணரும்பல் குணத்தி
னான்காண்,
நீர்ஏறு
சுடர்ச்சூலப் படையி னான்காண்,
நின்மலன்காண், நிகர்ஏதும் இல்லா
தான்காண்,
சீர்ஏறு
திருமால்ஓர் பாகத் தான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன் . நீல
கண்டன் . நெற்றிக்கண்ணன் . காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன் .
புண்ணியன் , குணபூரணன் . நீர்
சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன் . மாசற்றவன் . தன் நிகர்
இல்லாதவன் . சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன். அவன் என்
சிந்தையான் .
பாடல்
எண் : 6
பிறைஅரவக்
குறுங்கண்ணிச் சடையி னான்காண்,
பிறப்புஇலிகாண், பெண்ணோடு ஆண்ஆயி
னான்காண்,
கறைஉருவ
மணிமிடற்று வெண்ணீற் றான்காண்,
கழல்தொழுவார்
பிறப்புஅறுக்கும் காபாலி காண்,
இறைஉருவக்
கனவளையாள் இடப்பா கன்காண்,
இருநிலன்காண்
இருநிலத்துக்கு இயல்பு ஆனான்காண்,
சிறைஉருவக்
களிவண்டுஆர் செம்மை யான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன் . பிறப்பற்றவன் .
ஆண் , பெண் என்ற
இருபகுப்பினை உடைய உருவத்தன் . நீலகண்டன் . வெண்ணீற்றன் . தன் திருவடிகளை
வழிபடுபவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன் . கைகளில் பெரிய
வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன் . பெரிய நிலமாகவும் அதனைத்
தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன் . சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள்
பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன் . அவன் என் சிந்தையுளான் .
பாடல்
எண் : 7
தலைஉருவச்
சிரமாலை சூடி னான்காண்,
தமருலகம் தலைகலனாப்
பலிகொள் வான்காண்,
அலைஉருவச்
சுடர்ஆழி ஆக்கி னான்காண்,
அவ்ஆழி நெடுமாலுக்கு
அருளி னான்காண்,
கொலைஉருவக்
கூற்றுஉதைத்த கொள்கை யான்காண்,
கூர்ஏரிநீர்
மண்ணொடுகாற்று ஆயி னான்காண்,
சிலைஊருவச்
சரம்துரந்த திறத்தி னான்காண்,
திருவாரூ ரான்காண்,என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன் . மக்களும் தேவரும் உள்ள
உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன் .
பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன் .
சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன் . கொலைத் தொழிலைச் செய்யும்
அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன் . ஐம்பூதங்களும் ஆகியவன் . வில்லிலிருந்து
புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன் . அவன் என் சிந்தையானே .
பாடல்
எண் : 8
ஐயன்காண், குமரன்காண், ஆதி யான்காண்,
அடல்மழுவாள்
தான்ஒன்று பியல்மேல் ஏந்து
கையன்காண், கடற்பூதப் படையி
னான்காண்,
கண்எரியால்
ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண்,
வெய்யன்காண், தண்புனல்சூழ் செஞ்சடை
யான்காண்,
வெண்ணீற்றான் காண்,விசயற்கு அருள்செய்
தான்காண்,
செய்யன்காண், கரியன்காண், வெளியோன் தான்காண்,
திருவாரூ ரான்காண், என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் தலைவனாய் , என்றும் இளையவனாய் , எல்லோருக்கும் ஆதியாய் , மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க்
கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய் , வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த
செஞ்சடையனாய் , வெண்ணீறு அணிந்தவனாய்
, அருச்சுனனுக்கு அருள்
செய்தவனாய் , வெண்மை , செம்மை , கருமை என்ற எல்லா நிறங்களையும்
உடையவனாய் என் சிந்தையில் உள்ளான் .
பாடல்
எண் : 9
மலைவளர்த்த
மடமங்கை பாகத் தான்காண்,
மயானத்தான் காண்,மதியம் சூடி னான்காண்,
இலைவளர்த்த
மலர்க்கொன்றை மாலை யான்காண்,
இறையவன்காண், எறிதிரைநீர் நஞ்சுஉண்
டான்காண்,
கொலைவளர்த்த
மூவிலைய சூலத் தான்காண்,
கொடுங்குன்றன் காண்,கொல்லை ஏற்றி
னான்காண்,
சிலைவளர்த்த
சரம்துரந்த திறத்தி னான்காண்,
திருவாரூ ரான்காண், என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய் , இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர்
மாலையைச் சூடியவனாய் , எல்லோருக்கும்
தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . முல்லை நிலத் தலைவனான திருமாலை
இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன் . கொல்லும் முத்தலைச் சூலத்தை
உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன் . அவன் என்
சிந்தையான் .
பாடல்
எண் : 10
பொன்தாது
மலர்க்கொன்றை சூடி னான்காண்,
புரிநூலன் காண்,பொடிஆர் மேனி
யான்காண்,
மற்றுஆரும்
தன்ஒப்பார் இல்லா தான்காண்,
மறைஓதி காண்,எறிநீர் நஞ்சுஉண்
டான்காண்,
எற்றாலும்
குறைவுஒன்றும் இல்லா தான்காண்,
இறையவன்காண், மறையவன்காண், ஈசன் தான்காண்,
செற்றார்கள்
புரமூன்றும் செற்றான் தான்காண்,
திருவாரூ ரான்காண், என் சிந்தை யானே.
பொழிப்புரை :திருவாரூர்ப்
பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன் . பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி , பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப்
பூச்சூடி , ஒன்றாலும்
குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும்
நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . அவன் என் சிந்தையான் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 231
அந்நாளில்
ஆள் உடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண்
நின்றும்
பல்நாகப்
பூண்அணிவார் பயின்ற திருப்
பதிபலவும் பணிந்து
செல்வார்,
புன்னாகம்
மணம் கமழும் பூம்புகலூர்
வந்து இறைஞ்சி, பொரு இல் சீர்த்தி
மின்ஆரும்
புரி முந்நூல் முருகனார்
திருமடத்தில்
மேவும் காலை.
பொழிப்புரை : அதுபொழுது
ஞானசம்பந்தர் சீகாழியினின்றும் புறப்பட்டுப் பாம்புகளை அணிந்த சிவபெருமான்
வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து பணிந்து செல்வார், சுரபுன்னை மலர்களின் மணம் கமழும்
பூம்புகலூரில் சென்று இறைவனைக் கண்டு ஒப்பற்ற சிறப்புடைய முப்புரிநூல் அணிந்த
முருகநாயனாரின் திருமடத்தில் வீற்றிருக்கும் காலத்தில்.
பெ.
பு. பாடல் எண் : 232
ஆண்டஅரசு
எழுந்தருளி அணிஆரூர்
மணிப்புற்றில்
அமர்ந்து வாழும்
நீண்டசுடர்
மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர்
நோக்கி
மீண்டு
அருளி னார், என்று கேட்டு அருளி
எதிர்கொள்ளும்
விருப்பினோடும்
ஈண்டுபெரும்
தொண்டர்குழாம் புடைசூழ
எழுந்துஅருளி எதிரே
சென்றார்.
பொழிப்புரை : சிவபெருமானால்
ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர் எழுந்தருளிப் போந்து, அழகு பொருந்திய திருவாரூரில்
மணிப்புற்றில் விரும்பி வீற்றிருக்கும் நீண்ட ஒளி பொருந்திய மாமணியினை வணங்கிப்
பூம்புகலூருக்கு வந்தருளும் இனிய செய்தியை, ஞானசம்பந்தர் கேட்டறிந்து, அவரை எதிர்கொண்டு வரவேற்கும்
விருப்பத்தால், நெருங்கிய தொண்டர்
கூட்டம் தம்மைச் சூழ்ந்து வர, எழுந்தருளி எதிரே
சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 233
கரண்டம்
மலி தடம் பொய்கைக் காழியர்கோன்
எதிர் அணையும் காதல்
கேட்டு,
வரன்று
மணிப் புனல் புகலூர் நோக்கி வரும்
வாகீசர் மகிழ்ந்து
வந்தார்,
திரண்டு
வரும் திருநீற்றுத் தொண்டர் குழாம்
இருதிறமும் சேர்ந்த
போதில்
இரண்டு
நிலவின் கடல்கள் ஒன்று ஆகி
அணைந்தன போல் இசைந்த
அன்றே.
பொழிப்புரை : நீர்க் காக்கைகள்
நிறைந்த பெரிய நீர்நிலைகளையுடைய சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், அங்ஙனம் தம்மை எதிர்கொண்டு அணைகின்ற
அன்புச் செயலைக் கேட்டு, மணிகளைக் கொழித்து
வரும் நீர்வளம் கொண்ட திருப்புகலூரை நோக்கி வருகின்ற நாவரசரும், மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளி வந்தனர்.
கூடிப் பெருகி வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம் இருமருங்கும் திரண்ட போதில், நிலவுக்கடல்கள் இரண்டு, ஒன்று கூடி அணைந்தன போல், பொருந்தின. அப்பொழுது.
பெ.
பு. பாடல் எண் : 234
திருநாவுக்கரசர்
எதிர் சென்று இறைஞ்ச,
சிரபுரத்துத் தெய்வ
வாய்மைப்
பெருஞான
சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி, "அப்பரே! நீர்
வருநாளில்
திருஆரூர் நிகழ்பெருமை
வகுத்து
உரைப்பீர்" என்று கூற
அருநாமத்து
அஞ்செழுத்தும் பயில்வாய்மை
அவரும் எதிர் அருளிச்
செய்வார்.
பொழிப்புரை : எதிர் சென்ற
நாவுக்கரசர் வணங்க, சீகாழியில் வந்தருளிய
கடவுள்தன்மை பொருந்திய பெருமையுடைய திருஞானசம்பந்தப் பெருமானும் எதிர் வணங்கி, `அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூரில்
நிகழும் பெருமையை வகுத்துக் கூறுவீராக!` எனக்
கூறச் சிவபெருமானின் திருப்பெயரான திருவைந்தெழுத்தை மிகவும் பயில்கின்ற வாய்மை
கொண்ட நாவுக்கரசரும் அருளுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 235
"சித்தம் நிலாவும்
தென்திரு ஆரூர் நகர்ஆளும்
மைத்தழை
கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம்
இத்
தகைமைத்து என்று என்மொழி கேன் "என்று உரைசெய்தார்
"முத்து விதானம்
மணிப்பொன் கவரி" மொழிமாலை.
பொழிப்புரை : உள்ளத்தில் நிலவும்
திருவாரூர் நகரத்தை ஆளுகின்ற நீலகண்டரான சிவபெருமானின் திருவாதிரைத் திருநாளில்
நிகழும் மகிழ்ச்சிப் பெருக்குடைய செய்திச் செல்வத்தை, இத்தகைய தன்மை கொண்டது என எவ்வாறு
கூறுவேன்! என்று, `முத்து விதான மணிப்
பொற்கவரி` (தி.4 ப.21) எனத் தொடங்கும் பதிகமான சொல்மாலையைப்
பாடினார்.
குறிப்புரை : `முத்து விதானம்` (தி.4 ப.21) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணாலாய
பதிகம் திருவாரூரில் நிகழ்ந்து வரும் திருவாதிரைச் சிறப்பை மிக அழகாக விளக்கி
நிற்பதாகும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
4. 021திருவாரூர் -
திருவாதிரைத்திருப்பதிகம் பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முத்துவிதானம்
மணிப்பொன்கவரி முறையாலே
பத்தர்களோடு
பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல
வெண்தலைமாலை விரதிகள்
அத்தன்ஆரூர்
ஆதிரைநாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : எம்பெருமானுக்குவிழாக்காலத்திற்
கொண்டு செல்லப்படும் நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும்
மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர,
வெள்ளிய
தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின்
நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெறச் சிறப்பான செயற்கையழகோடு
திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி அது. அது என்று எப்பொழுதும் அடியவர்
மனக்கண் முன் நிற்பதாகும்.
பாடல்
எண் : 2
நணியார்
சேயார் நல்லார் தீயார் நாள்தோறும்
பிணிதான்
தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே
பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான்
ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : திருவாரூருக்கு
அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும்
என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் `மணியே பொன்னே வலியவனே தலைவனே` என்று வாய்விட்டு அழைப்ப, அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும்
ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது. அது என்று அடியவர்
மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.
பாடல்
எண் : 3
வீதிகள்தோறும்
வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச்
சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகள்ஆய
பவளமும்,முத்துத் தாமங்கள்
ஆதிஆரூர்
ஆதிரைநாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : வீதிகள் தோறும் வெண்
கொடிகளும் மேற் கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும் புனையப்பட்ட
மாலைகளும் தம்மிடையே பதிக்கப்பட்ட மணிகளால் பேரொளியை வெளிப்படுத்த, எல்லாப் பொருள்களுக்கும் முதல்வனாகிய
ஆரூரனுடைய திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும் அது அது என்று
அடியவர்கள் நினைக்குமாறு உள்ளது.
பாடல்
எண் : 4
குணங்கள்பேசிக்
கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மில்
பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று
வானவர்வந்து வைகலும்
அணங்கன்ஆரூர்
ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : நாள்தோறும் தேவர்கள்
வந்து வணங்கி நிற்க, தெய்வத் தலைவனாகிய
எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி
அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப்
பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசும் ஆரூர் ஆதிரைத் திருநாள் அழகு என்றும்
அவர்கள் உள்ளத்தில் நிலை நிற்பதாகும்.
பாடல்
எண் : 5
நிலவெண்சங்கும்
பறையும்ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட
கல்லவடங்கள் பரந்துஎங்கும்
கலவமஞ்ஞை
கார்என்றுஎண்ணிக் களித்துவந்து
அலமருஆரூர்
ஆதிரைநாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : நிலாப் போன்று
வெள்ளிய சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல்
கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும்
அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு
வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு என்றும்
உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.
பாடல்
எண் : 6
விம்மாவெருவா
விழியாத்தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு
இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
எம்மான்ஈசன்
எந்தை என்அப்பன் என்பார்கட்கு
அம்மான்ஆரூர்
ஆதிரைநாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : பொருமி, வாய்வெருவி விழித்து உரத்துக்கூறி
மற்றவர்களை அஞ்சி ஒதுங்கச் செய்பவராய்த் தமக்கு என்று எந்த நற்செயல்களையும்
பண்பையும் கொள்ளாமல் எல்லாம் ஈசன் செயல் என்று மகிழ்ச்சியால் தலையை மோதிக்கொண்டு `எம்மான் எம்மை அடக்கி ஆள்பவன்; எம் தலைவன்` என்று பெருமான் புகழ் ஓதும் அடியவர்
தலைவனாகிய ஆரூர்ப் பெருமானின் திருவாதிரைத் திருநாளின் அழகு என்றும் உள்ளத்தில்
நிலைபெறுவதாகும்.
பாடல்
எண் : 7
செந்துவர்
வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு
மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன்
ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன்
ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : இந்திரன் முதலிய
தேவர்களும் சித்தர்களும் பலவாறு துதிக்கும் தனியனாகிய ஆரூர்ப் பெருமானுடைய
திருவாதிரைத் திருவிழாவில் செம்பவளம் போன்ற வாயை உடைய ஆடவரோடு மகளிரும் கூடி அவன்
திருவடிகளைச் சிந்தித்து ஈடுபடுபவருடைய அழகிய காட்சி என்றும் உள்ளத்தில் நிலை
பெறுவதாகும்.
பாடல்
எண் : 8
முடிகள்
வணங்கி மூவாதார்கள் முன்செல்ல,
வடிகொள்
வேய்த்தோள் வானர மங்கையர் பின்செல்ல,
பொடிகள்
பூசிப் பாடும் தொண்டர் புடைசூழ,
அடிகள்
ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : தலையால் வணங்கித்
தேவர்கள் முன்னே செல்லவும் செப்பமான மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள்
பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும்
எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து
நிலை பெறுவதாகும்.
பாடல்
எண் : 9
துன்பம்
நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்,
இன்பம்
நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்,
நும்பின்
எம்மை நுழையப் பணியே என்பாரும்,
அன்பன்
ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : எல்லோருக்கும்
அன்பனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் அடியார்கள் பெருமானாரே!
உம்மை அடியேங்கள் வழிபடாத நாள்கள் துன்பம் தரும் நாள்கள், உம்மை வழிபடும் நாள்கள் அடியேங்களுக்கு
இன்பம் தரும் நாள்கள்; ஆதலின் நும்
திருவடித் தொண்டில் ஈடுபட்டு அடியேங்கள் நும்பின் எப்பொழுதும் வருமாறு எங்களைச்
செயற்படுத்துவீர் என்று வேண்டும் காட்சி என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.
பாடல்
எண் : 10
பாரூர்
பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்தச்
சீர்
ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓர்
ஊர் ஒழியாது, உலகம் எங்கும்
எடுத்து ஏத்தும்
ஆரூரன்
தன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
பொழிப்புரை : உலகைச் சூழ்ந்து
நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால்
சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு
அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான்
புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின்
வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
பெரிய
புராணப் பாடல் எண் : 236
அம்மொழி
மாலைச் செந்தமிழ் கேளா, அணிசண்பை
மைம்மலி
கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்,
"கொய்ம்மலர்
வாவித் தென்திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன்
வந்துஇங்கு உடன் அமர்வேன்" என்று உரை செய்தார்.
பொழிப்புரை : அந்தச் சொல்மாலையான
தமிழ்ப் பதிகத்தைக் கேட்ட அழகிய சீகாழியில் தோன்றிய, கருமை பொருந்திய கழுத்தினையுடைய தேவர்
தலைவரின் மகனாரான ஞானசம்பந்தரும்,
`அரும்புகள்
மலரும் பொய்கைகளையுடைய தென் திருவாரூருக்குச் சென்று வணங்கி, அதன்பின்பு மீண்டு வந்து, உம்முடன் கூடி உடன் அமர்வேன்` என இயம்பினார்.
மேற்கூறப்பட்ட `முத்து விதானம்` (தி.4 ப.21) எனத் தொடங்கும் திருப்பதிகத்தைக் கேட்ட
அளவிலேயே திருஞானசம்பந்தர் திருவாரூருக்குச் சென்று வருவதை மேற்கொண்டார், இதனால், அப்பதிகச் சிறப்பும் அதன்வழி அவருக்கு
ஏற்பட்ட ஆர்வச் சிறப்பும் ஒருங்கு விளங்குகின்றன.
பாடல்
எண் : 237
மாமதில்
ஆரூர் மன்னரை அங்கு வணங்கச்செந்
தாமரை
ஒடைச் சண்பையர் நாதன் தான் ஏக,
நாமரு
சொல்லின் நாதரும் ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர்
வாசத் தண்பணை சூழும் புகலூரில்.
பொழிப்புரை : பெரிய மதில் சூழ்ந்த
திருவாரூர்த் தியாகராசரை அங்குச் சென்று வணங்குதற்குச் செந்தாமரை மலர்கள் நிறைந்த
குளங்களையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் செல்ல, நாவில் பொருந்தும் வாக்கின் தலைவரான
நாவுக்கரசரும் மலர்களின் நறுமணம் கமழும் குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட
புகலூருக்கு, மீதூர்ந்த
விருப்பத்துடன் சென்றார்.
----- தொடரும் -----
No comments:
Post a Comment