சிதம்பரம் - 0654. மதியம் மண்குணம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மதிய மண்குண (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
திருவடி நிலையை அடியேனுக்கு அருள்வாய்


தனன தந்தன தந்த தானன
     தனன தந்தன தந்த தானன
          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான


மதிய மண்குண மஞ்சு நால்முக
     நகர முன்கலை கங்கை நால்குண
          மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண

மதன முன்தரி சண்ட மாருத
     மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
          வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேருங்

கதிர டங்கிய அண்ட கோளகை
     யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
          ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங்

கருணை யிந்திரி யங்கள் சோதிய
     அருண சந்திர மண்ட லீகரர்
          கதிகொள் யந்திர விந்து நாதமொ ......டென்றுசேர்வேன்

அதிர பம்பைகள் டங்கு டாடிக
     முதிர அண்டமொ டைந்து பேரிகை
          டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
     டிதவி தம்பெறு சிந்து பாடிட
          அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு

உதிர மண்டல மெங்கு மாயொளி
     யெழகு மண்டியெ ழுந்து சூரரை
          உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ

உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
     மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
          வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மதியம் மண்குணம் அஞ்சு நால்முக
     நகர முன்கலை கங்கை நால்குண
          மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண

மதன முன்தரி சண்ட மாருதம்
     இருகு ணம்பெறில் அஞ்செல் ஓர்தெரு
          வகர மிஞ்சிஅகன் படாகம்ஒர்...... என்றுசேரும்

கதிர் அடங்கிய அண்ட கோளகை
     யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
          ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயும்

கருணை இந்திரி யங்கள் சோதிய
     அருண சந்திர மண்ட லீகரர்
          கதிகொள் யந்திர விந்து நாதமொடு ......என்றுசேர்வேன்?

அதிர பம்பைகள் டங்கு டாடிக
     முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
          டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு
     இதவி தம்பெறு சிந்து பாடிட,
          அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி
     எழ குமண்டி எழுந்து சூரரை
          உயர்ந ரம்பொடு எலும்பு மாமுடி ...... சிந்தி வீழ

உறு சினம் கொடு எதிர்ந்த சேவக!
     மழைபுகுந்து உயர் அண்டம் வாழ்வுற
          உரக னும்புலி கண்ட ஊர்மகிழ் ...... தம்பிரானே.


பதவுரை

         அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர --- ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப,

     அண்டமொடு ஐந்து பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம் அதிக --- அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோல்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,

         விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இதவிதம் பெறு சிந்து பாடிட --- பதினெண் கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட,

         அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு --- தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க,

         உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ --- இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லா இடத்தும் பரவ, தீயின் ஒளி வீச,

         குமண்டி எழுந்து சூரரை உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ --- குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக

         உறு சினம் கொண்டு எதிர்த்த சேவக --- கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

         மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற --- மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி,

         உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே --- பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!

         மதியம் மண் குணம் அஞ்சு, நால் முகம், நகரம், முன்கலை --- சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும். (அந்த மண்ணுலகம்) நாற்கோண வடிவைக் கொண்டது. திருவைந்தெழுத்தில் "ந" என்னும் எழுத்தையும், பஞ்ச கலைகளில் முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது.

         கங்கை நால் குணம், மகரம் --- நீரின் குணம் நான்கு.
இது திருவைந்தெழுத்தில் "ம" என்னும் எழுத்தைக் குறிக்கும்.

         முன் சிகரம் அங்கி மூணிடை தங்கு கோணம் --- அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் திருவைந்தெழுத்தில் "சி" என்னும் எழுத்தைக் குறிக்கும். மூன்று குணமும் முக்கோணமும் கொண்டது.

         மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு வகரம் --- அழித்தல் தன்மையை தன்னிடத்தே கொண்டுள்ள பெருங்காற்று  இரண்டு குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண வடிவானது). திருவைந்தெழுத்தில் உள்ள "வ" என்னும் எழுத்தைக் குறிக்கும்.

         மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய அண்ட கோளகை யகரம் நின்றிடும் --- விரிந்துள்ள ஆகாயம் ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (ஒலியைக்) கொண்டதாகும். இந்த ஆகாய மண்டலம் சூரியசந்திரர் அடங்கி விளங்குவதான உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை திருவைந்தெழுத்தில் "ய" என்னும் எழுத்து நின்று விளக்கும்.

         இரண்டு கால் மிசை ககனம் மின்சுழி இ)ரண்டு கால் பரி கந்து பாயும் --- ரேசகம், பூரகம் என்னும் இரண்டு வழி கொண்டு அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் கபாலத்தில் இடை கலை, பிங்கலை என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.

         கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் கதிகொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் --- அவைகளை வசப்படுத்த இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர சத்தியால் விந்து நாத வடிவமான இலிங்காகார வடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?

விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார் சைவசித்தாந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள தத்துவங்களை விளக்கி அருளுகின்றார். இதனைச் சற்றே விரிவாகக் காண்போம்.

எல்லாப் பொருள்களும் மாயையின் துணையைக் கொண்டே இறைவன் படைத்து அருளுகின்றான்.

ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருளெல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு. நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை முதலியன எல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். ஆராய்ந்து நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தாம் என்பது புலனாகும் நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகம் ஆனது, மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது. எனவே, இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.


உலகில் எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன. அப்பகுதிகள் எல்லாம் சேர்ந்த காரியப் பொருள்தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த சடப்பொருள்கள் அனைத்தும் இரண்டு வகையுள் அடங்கும். பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் எனபன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப் பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கிவிடும். முதல் வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இரு வகைப்படுத்திக் கூறலாம். எனவே முன்னே சொன்ன இருவகையை இப்படி மூவகைப் படுத்திக் கூறலாம். அஃதாவது ஆண் உடம்பு, பெண் உடம்பு, அவையல்லாத பிற சடப் பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி விடும். மெய்கண்டதேவ நாயனார், ஆண் உடம்பை அவன் என்ற சொல்லாலும், பெண் உடம்பை அவள் என்ற சொல்லாலும், பிறவற்றை அது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இம்மூன்றின் கூட்டம்தான் உலகம் என்பதைக் காட்ட, அவன் அவள் அது எனும் அவை என்று கூறி, உலகம் இவ்வாறு பகுதிகளை உடையதாகக் காணப்படுவதால் அது காரியப் பொருளே என அருளிச் செய்தார்.


காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருள் முதற்காரணம் எனப்படும். மற்றவை எல்லாம் நிரம்ப இருப்பினும், எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற்காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள். எனவே காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டும். அம்முதற் காரணமாகிய மூலப்பொருளே மாயை என்பது.


மாயையானது கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாயையிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப் பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறதே. அவ்வாறாயின் அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட நுண்ணியவாக இருக்கும். அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை என்பது மிகமிக நுண்ணியதாக இருக்கும்.


இத்தகைய மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும், அசுத்தமாய் உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவ மலத்தோடு கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது. எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும் அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும் இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு பகுதிப்பட்டதாய் விளங்குவது இதற்கு உவமை.


இன்னொரு வகையாகவும் அறியலாம். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது. இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும். சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில் வியாப்பியமும் ஆகும்.

வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள்.
வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.


"மாமாயை", "குடிலை",  "விந்து" என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள். "மோகினி" என்பது அசுத்த மாயையின் மறுபெயர். ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது. அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அசுத்த மாயையைத்தான் குறிக்கும்.


இவ்விரண்டு மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மாயைகள் மூன்று என வழங்கப்படும். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயை அல்ல. அது அசுத்த மாயையினின்றும் தோன்றிய காரியமே ஆகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும் எனப் பார்த்தோம். அம் மயக்கம் சிறிதே ஆகும். ஆனால், அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது. அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும்.


எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது. அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும்.


உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். எனவே பிரகிருதி மாயை நம்மோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை முதலில் சிந்திப்போம். பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்பு நிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.


பிரகிருதி மாயையிலிருந்து ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும், அந்தக் கரணங்கள் நான்கும் தோன்றும்.


இத்தகைய பிரகிருதியில் இருந்து, உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அவ்வகக்கருவிகள். அவை தோன்றும் முறையைப் பார்ப்போம்.

முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி, பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது "குண தத்துவம்" எனப்படும். வெளிப்பட்டது "வியத்தம்" எனப்படும் வெளிப்படாது நிற்பது "அவ்வியத்தம்" எனப்படும். பிரகிருதிக்கு "அவ்வியத்தம்" என்ற ஒரு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.


முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் "புத்தி" என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பரிணாமமாவது ஒன்று பிறிது ஒன்றாக மாற்றம் பெறுவது. ஒன்று அதன் இயல்கில் இருந்து திரிந்து தோன்றுதல். இந்த வகையில், குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும். இப்பொழுது கூறியபடி குணதத்துவம் புத்தியாய்ப் பரிணமிக்கும் என்றால் அவ்வாறு புத்தியாய்ப் பரிணமித்த பின்பு அக்குணதத்துவம் தன்நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்யும்.


எவ்வாறு எனில், பரிணாமத்தில் இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராவது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத்தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் "ஏகதேச பரிணாமம்" எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது, பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அல்ல. வெண்ணெயில் புழுத் தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே. ஆகையால், ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடை இல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.


முக்குணங்களும் அறவே தோன்றாத நிலையே பிரகிருதி. முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலையே குண தத்துவம். அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை குறைந்தும் உள்ள நிலையே புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களில் எல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும். ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.

இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.

தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும்.

சாத்துவிக குணம் இன்பத்திற்கும், இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும்.

குண தத்துவத்தில் புத்தி தோன்றும். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் து இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடைய தாயிருத்தல் நோக்குதற்குரியது.


புத்தி தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக் கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனை இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். நான் இதனை அறிவேன். நான் இதனைச் செய்வேன். நான் இதனை நுகர்வேன் என்பது போல, எச்செயலிலும் ஆன்மா முனைப்புடன் எழுவதற்கு இந்த அகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்கு உடையதாய் இருக்கும். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருப்பதால், இனித் தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது.  


அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன. சாத்துவிக குணக் கூறு தைசத அகங்காரம் என்றும், இராசத குணக்கூறு வைகாரிக அகங்காரம் என்றும், தாமத குணக்கூறு பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும்.


அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும் முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தே உள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றோடு, இம்மனமும் சேர, அந்தக்கரணம் நான்கு ஆயிற்று.


அகக் கருவிகளாகிய இவைகளின் பின்னர்ப் புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும். தைசத அகங்காரத்தில் இருந்து மனம் தோன்றுவது போலவே, அவ்வகங்காரத்தில் இருந்தே மனத்தின் பின் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் இவை புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் புலன்களை ஆன்மா அறிதற்குக் கருவிகளாக நிற்பதால் "ஞானேந்திரியங்கள்" எனப்பட்டன. தமிழில் "அறிகருவிகள்" என்றும், "ஐம்பொறிகள்" என்றும் கூறப்படும்.

        
செவி முதலிய அறிகருவிகளை வாயிலாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவது மனமே ஆகும். அகக் கருவியாகிய மனம் இவ்வாறு புறத்தேயும் சென்று, புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கவர்ந்த வெளிப் புலன்களை மனமானது பற்றி அகத்தே உள்ள புத்திக்குத் தருகிறது. இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் தொழிற்கருவிகளாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று அகம் புறம் ஆகிய இரண்டிடத்தும் விரைந்து செல்வதாய் உள்ளது. இதனால், ஏனைய அகக் கருவிகளைப் போல் அல்லாமல் மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் இயைந்து நிற்கும். இவ்வியைபு பற்றியே, மனமும் ஞானேந்திரியங்களும் ஆகிய இவை இரண்டும் தைசத அகங்காரத்தில் இருந்து தோன்றின.


சாத்துவிக குணம் பிரகாசம் உடையது ஆதலால் குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்தபோது நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்யும் புத்தி தோன்றிற்று. அது போலவே இங்கும் பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றியுள்ளமை காணலாம்.

         ஞானேந்திரியங்களாவன செவி, தோல், கண், நாக்கு, மூக்கு எனப் பார்த்தோம். இப்பெயர்கள் உறுப்புக்களின் பெயர்களாய் இருந்தாலும், அந்த உறுப்புக்கள் ஞானேந்திரியங்கள் அல்ல. அந்தந்த உறுப்புக்களில் நின்று அவ்வப்புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன. எனவே, செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவி இந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண் இந்திரியம் ஆகும். இவ்வாறே பிற இந்திரியங்களையும் கொள்ள வேண்டும். செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது, கேட்டல் நிகழ்வதில்லை. இவ்வாறே பிற உறுப்புக்களிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அவ்வவ்வறிவு நிகழாமை கண்கூடு, இதனால் உறுப்பு என்பது வேறு. இந்திரியம் என்பது வேறு என்பதும். இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு உறுப்பு இடமாகவுள்ளது என்பதும் தெளிவாகும்.


இனி, கன்மேந்திரியங்கள் தோன்றும் முறையினைக் காண்போம். தைசத அகங்காரத்தில் இருந்து மனமும், ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகாரிக அகங்காரத்தில் இருந்து "கன்மேந்திரியங்கள்" ஐந்தும் தோன்றும். அவை வாய், பாதம், கை, எருவாய், கருவாய் என்பன. இவை இம்முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவை பேசுதல், நடத்தல் முதலிய தொழில்களைச் செய்தற்குக் கருவியாக அமைந்து இருப்பதால், "கன்மேந்திரியங்கள்" (கன்மம் + இந்திரியம்) எனப் பெயர் பெற்றன. தமிழில் "தொழிற்கருவிகள்" எனவும், "செயற்பொறிகள்" எனவும் வழங்கப்படும். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன. கை இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும் உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும். அதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் முதலியவையெல்லாம் கை இந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும். எருவாய் என மலக்கழிவு வாயினையே கூறினாலும் அது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும். எனவே மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப்படுத்தல் முதலியவையெல்லாம் எருவாயின் தொழில்களாகவே கொள்ளப்படும். கருவாயும் கழித்தல் ஆகிய தொழிலைத் தானே செய்கிறது.


எருவாயின் செயலிலும் கருவாயின் செயலிலும் வேறுபாடு உண்டு. எருவாயின் செயலை அடக்குவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆனால் கருவாயின் செயலை அடக்குவது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும். மேலும் கருவாயின் செயலால் இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும் குறிப்பிடத்தக்கது. ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறும்போது உறுப்புக்கள் இந்திரியம் அல்ல. அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் குறிப்பிட்டோம். கன்மேந்திரியங்களுக்கும் இது பொருந்தும். வாய், கால் முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும். கன்மேந்திரியங்கள் தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின்றும் அவை தோன்றின என்றது பொருத்தம் உடையதாகும்.


இனி, கன்மேந்திரியங்களுக்குப் பின்னர், மூன்றாவது கூறாகிய பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. ஆயின் இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம், மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.

       
தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோமே அன்றி, அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.

ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும் அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முதலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.
  
தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் முறையை இனிக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால், எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ, அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும்.

இந்த முறையில் ----

ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும்.
ஊறு காற்றின் குணமாய் நிற்கும்.
ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்.
சுவை நீரின் குணமாய் நிற்கும்.
நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும்.

சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும்.

பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும்.

உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும்.

இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும்.

கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம். ஆதலின், அவற்றில் இருந்து தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையனவாய் இருக்கும்.

அதாவது,
ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும்.

காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும்.

நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும்.

ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும்.

நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும்.

இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல்வேண்டும்.
  
மண்அதனில் ஐந்தை, மா நீரில் நான்கை,
         வயங்குஎரியில் மூன்றை, மாருதத்து இரண்டை,
விண்அதனில் ஒன்றை, விரி கதிரை,
         தண்மதியை, தாரகைகள் தம்மின் மிக்க
எண்அதனில் எழுத்தை, ஏழ் இசையை, காமன்
         எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனை, கற்குடியில் விழுமியானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே. ---  அப்பர்.

மின்உருவை விண்அகத்தில் ஒன்றாய், மிக்கு
         வீசுங்கால் தன்அகத்தில் இரண்டாய், செந்தீத்
தன்உருவின் மூன்றாய், தாழ் புனலின் நான்காய்,
         தரணிதலத்து அஞ்சுஆகி, எஞ்சாத் தஞ்ச
மன்உருவை, வான்பவளக் கொழுந்தை, முத்தை,
         வளர்ஒளியை, வயிரத்தை, மாசுஒன்று இல்லாப்
பொன்உருவை, புள்ளிருக்கு வேளூரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.       --- அப்பர்.
  
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.   --- திருவாசகம்.
                                              
பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவில் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவமாகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு எவ்வாறு கருவியாய் நின்று உதவுகின்றன எனப் பார்க்கலாம். தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன. இது பற்றி விரிவாக சித்தாந்த சாத்திரங்களில் காணலாம்.


இனி தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.

பிருதிவியின் கூறு, எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு என ஐந்தாகும்.

அப்புவின் கூறு, சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சுரோணிதம் என ஐந்தாகும்.

தேயுவின் கூறு, இருதயத்தில் வெப்பம், பசித் தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம் என ஐந்தாகும்.

வாயுவின் கூறு, உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள் பத்தாகும்.

ஆகாயத்தின் கூறு, அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள் பத்து ஆகும்.

ஞானேந்திரியங்களின் விடயங்கள் ஆகிய சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் அல்லது நாற்றம் எனப்படும் ஐந்து ஆகும்.
                                                              
கன்மேந்திரியங்களின் விடயங்கள், வசனம் (பேச்சு), கமனம் (நடை), தானம் (கொடை), விசர்க்கம் (போக்கு), ஆனந்தம் (இன்பம்) என்னும் ஐந்தாகும்.

அகங்காரத்தின் கூறு, தைசத அகங்காரம், வைகாரி அகங்காரம், பூதாதி அகங்காரம் என்று மூன்று ஆகும்.

குற்றங்கள் எனப்படுபவை, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் என்னும் ஐந்து ஆகும். (மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்)

குணத்தின் கூறுகள், சாத்துவிகம், இராசதம், தாமதம் என மூன்று ஆகும்.

வாக்கு ஆனது சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நான்கு ஆகும்.

இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலகப் பொருள்களின் நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும் எனப் பார்த்தோம். முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாயிருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குணவயப்பட்டு இன்ப துன்ப மயக்க உணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டால் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண்மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன ஆதலின் அவை போக்கிய காண்டம் என்று சொல்லப்படும்.

போக்கியம் --- நுகரப்படுவது. காண்டம் --- தொகுதி.

இத்தத்துவங்கள் இருபத்து நான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன. இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்டவுருத்திரர். அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத் தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்ம தத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக் குறித்தது. அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப் பெயர் பெற்றன. அல்லாமலும், சகலராகிய ஆன்மாக்களுக்குச் சிறப்பாக உரியனவாய் நிற்றல் பற்றி இத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் பொருந்தும்.

புறப்பூதங்களுக்கு உரிய வடிவு, நிறம் முதலியவைகளைக் காண்போம்....

பிருதிவி எனப்படும் மண் நாற்கோண வடிவமாய் இருக்கும். அதன் நிறம் பொன்மை. அதற்கு உரிய வித்து எழுத்து லகர மெய் ஆகும். குறி வச்சிராயுதம். அதி தெய்வமாக பிரமதேவர் இருந்து படைத்தல் தொழிலைப் புரிவார். மண், திண்மைக் குணம் உடையதாய் பொருள்களைத் தாங்கும்.

அப்பு எனப்படும் நீரின் வடிவம் அரைவட்டம். நிறம் வெண்மை. குறி தாமரைப்பூ எழுத்து வகர மெய். அதி தெய்வமாகத் திருமால் இருந்து காத்தல் தொழிலைப் புரிவார்.


தேயு எனப்படும் தீயின் வடிவம் முக்கோணம். நிறம் செம்மை.
குறி சுவத்திகம்.  எழுத்து ரகர மெய்.
அதி தெய்வமாக உருத்திரன் இருந்து அழித்தல் தொழிலைப் புரிவார்.

வாயு எனப்படும் காற்றுக்கு வடிவம் அறுகோணம். நிறம் கருமை.
குறி ஆறு புள்ளி. எழுத்து யகர மெய். அதி தெய்வமாக மகேசுரன் இருந்து மறைத்தல் தொழிலைப் புரிவார்.

ஆகாயம் அல்லது வெளி எனப்படும் வானின் வடிவம் வட்டம்.
நிறம் புகைமை. குறி அமுதவிந்து. எழுத்து ஹ. அதி தெய்வமாக சதாசிவன் இருந்து அருளல் தொழிலைப் புரிவார்.

பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது

ஞானேந்திரியங்கள் எனப்படும் அறிகருவிகளில், செவியானது, வானுக்கு உரிய சத்த தன்மாத்திரை எனப்படும் ஓசைப்புலனை இடமாகக் கொண்டு, காது என்னும் உறுப்பின் வாயிலாக ஒலி ஆகிய புலனை அறிந்து வரும்.

தோல் என்னும் அறிகருவி, காற்றுக்கு ஊறு எனப்படும் தன்மாத்திரையை இடமாக் கொண்டு, தோல் என்னும் உறுப்பின் வாயிலாக, உணர்வுப் புலனை அறிந்து வரும்.

கண் என்னும் அறிகருவி, நெருப்பிற்கு உரிய ஒளிப் புலனை இடமாக் கொண்டு, கண் என்னும் உறுப்பின் வாயிலாக உருவத்தை அறிந்து கொள்ளும்.

நாக்கு என்னும் அறிகருவி, நீருக்கு உரிய சுவை என்னும் புலனின் இடமாக நின்று, நாக்கு ஆகிய உறுப்பினைக் கொண்டு, சுவையை அறிந்து கொள்ளும்.

மூக்கு என்னும் அறிகருவி, மண்ணுக்கு உரிய மணம் என்னும் புலனின் இடமாக நின்று, மூக்கு என்னும் உறுப்பின் வாயிலாக மணத்தை நுகர்ந்து அறியும்.

இந்த ஐந்து பொறிகளையும் புலன் வழிச் செல்ல ஒட்டாமல் தடுத்து, திருவருள் துணைக் கொண்டு நல்வழிப் படுத்துபவர்கள் பேரின்ப வீட்டினை அடைவார்கள்.

இதனைத் திருவள்ளுவ நாயனார், "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு" என்று காட்டினார்.

கன்ம இந்திரியங்களில், வாக்கு என்னும் இந்திரியம், வானுக்கு உரிய ஓசைத் தன்மாத்திரையை இடமாக் கொண்டு, வாய் என்னும் உறுப்பின் வாயிலாகப் பேசும் தொழிலைப் புரியும்..

பாதம் என்னும் இந்திரியம், காற்றுக்கு உரிய ஊறு என்னும் தன்மாத்திரையை இடமாக் கொண்டு, கால் என்னும் உறுப்பின் வாயிலாக, போவதும் வருவதும் ஆகிய செயலைச் செய்யும்.

பாணி என்னும் இந்திரியம், நெருப்புக்கு உரிய ஒளி என்னும் தன்மாத்திரையை இடமாக் கொண்டு கை என்னும் உறுப்பின் வாயிலாக கொடுப்பதும் கொள்வதும் ஆகிய தொழிலைச் செய்யும்.

குதம் அல்லது பாயுறு என்னும் இந்திரியம், நீருக்கு உரிய சுவை என்னும் தன்மாத்திரையை இடமாக வந்து, எருவாய் வாயிலாக மலம் நீர் முதலியவற்றை வெளிப்படுத்தும் தொழிலைப் புரியும்.

உபத்தம் என்னும் இந்திரியம், மண்ணுக்கு உரிய நாற்றத் தன்மாத்திரையை இடமாக வந்து, பிறப்பு உறுப்புக்களின் வாயிலாக, சுக்கிலம் சுரோணிதம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொழிலைப் புரியும்.

பூதங்கள் தொடங்கி அந்தக்கரணங்கள் இறுதியாக உள்ள ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு மட்டுமே ஆன்மாவிற்குப் போதியன அல்ல. இவற்றுக்கு மேலும் வேறு கருவிகள் தேவைப்படுகின்றன.


ஒன்றினை அறிதல், அதனை விரும்புதல், அதற்காக முயலுதல் என்னும் முத்திறனும் உயிருக்கு இயல்பாக உள்ளது. உயிருக்கு அமைந்த இம்மூன்றனுள் அறியும் திறன் "ஞானசத்தி" எனப்படும் விழையும் திறன் "இச்சாசத்தி" எனப்படும். செயல் திறன் "கிரியாசத்தி" எனப்படும். இந்த ஞானம், இச்சை, கிரியை என்னும் மூன்றும் செயல்படும் போதுதான் உயிருக்கு உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்களிடத்தில் நாட்டம் உண்டாகும். அவற்றை அனுபவிக்கப்புகும் முயற்சி உண்டாகும். ஆயின், இவை செயல்பட முடியாதபடி ஆணவ மலமாகிய கட்டு உயிரைப் பிணித்திருக்கின்றது. ஆணவ மலப்பிணிப்பில் இருந்து விடுபட்டால் அன்றி உயிரின் ஞானம், இச்சை, கிரியைகள் செயற்பட இயலாது. அவை செயற்படாத போது உலக போகத்தில் நாட்டமும் நோக்கமும் நோக்கமும் உண்டாகாவிடில் உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்கள் பயனற்றவை ஆகும். இந்திரியங்கள், அந்தக்கரணங்கள் முதலிய கருவிகள் எல்லாமே பயனற்றவை ஆகிவிடும்.  ஆணவ மலத்திலிருந்து நீங்கி உயிரின் அறிவு, விழைவு, செயல்கள் நன்கு செயற்படும் நிலை வரும்பொழுதுதான் உயிரானது மேற்கூறிய ஆன்மதத்துவங்களாகிய அகக் கருவிகள் புறக் கருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்க முடியும்.

         ஆகவே உயிரினது அறிவு இச்சை செயல்களை ஆணவ மலப்பிணிப்பிலிருந்து விடுவித்து உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்துவதாகிய உதவியைச் செய்வதற்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. மேலும் உயிர் பெறும் இன்பதுன்ப நுகர்ச்சி காலத்திற்கு உட்பட்டது. உரிய கால அளவிற்கு மேல் நாம் நுகரும் இன்பத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியாது. உரிய கால அளவு முடிவதற்குள்ளே நாம் வெறுக்கும் துன்பத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது. ஆகவே காலம் என்ற கருவியும் வேண்டும்.

எனவே, ஆன்ம தத்துவங்களுக்கு அப்பால், வேறு கருவிகளும் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகும். முன்பு கூறிய இருபத்துநான்கு தத்துவங்களுக்கு மேல் உயிருக்கு உதவும் கருவிகளாக ஏழு தத்துவங்கள் கொள்ளப்படுகின்றன. அவை பிரகிருதியிலிருந்து தோன்றுவன அல்ல. பிரகிருதிக்கு மேலேயுள்ள அசுத்தமாயையிலிருந்து தோன்றுவன ஆகும். அவை மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன் என்பன. இவை அசுத்த மாயை தத்துவங்கள் எனப்படும்.

 
மாயை

விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே மாயை என்னும் முதல் தத்துவமாகும். இந்த மாயை தத்துவத்திலிருந்தே காலம் முதலிய பிற தத்துவங்கள் தோன்றும். எனவே பிற அசுத்த தத்துவங்கள் தோன்றுவதற்கு ஏற்புடையதாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு பகுதியே மாயை எனக் கூறலாம். இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம். இம்மண்ணுலகம் மிகப் பெரியது. இதன் ஒரு சிறு பகுதியே மண் எடுத்துக் குடம் முதலியன செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே பிற தத்துவங்கள் தோன்றுவதற்குரிய தகுதி உடையதாய், மாயை அல்லது மாயா தத்துவம் எனப்படுகிறது.
  
இந்த மாயா தத்துவத்திலிருந்து முதலில் காலம் என்னும் தத்துவம் தோன்றும். காலம் என்பது இன்றி எச்செயலும் நடவாது என்பதை அனுபவத்தில் நாம் அறியலாம். எதற்கும் காலம் நேரம் வரவேண்டும். ஒரு பெற்றோருக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறாள். அக்குடும்பத்தில் செல்வத்துக்குக் குறைவில்லை. அப்பெண்ணின் அழகுக்குக் குறைவில்லை. அப்பெற்றோரின் முயற்சிக்கும் குறைவில்லை. ஆயினும் அப்பெண்ணுக்குத் திருமணம் கூடாமலே நாட்கள் செல்லுகின்றன. எல்லாருக்கும் ஒரே கவலை. ஒருநாள் எதிர்பாராத நிலையில் எதிர்பாராத இடத்திலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே திருமணம் இனிதாக நடந்து முடிகிறது. இப்படி நடப்பதை வைத்துத்தான் காலம் வந்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று சொல்லுகிறார்கள். இதனால் எல்லாம் இருப்பினும் செயல் நிகழ்தற்குக் காலம் வேண்டும் என்பது தெளிவாகிறது. மூதுரை என்னும் நீதி நூலில் ஔவையார், இக்கருத்தைப் பின்வருமாறு சொல்லுகிறது. பழ மரங்கள் எல்லாக்காலத்திலும் பூத்துக் காய்த்துக் கனிகளைத் தருவதில்லை. அவ்வக்காலம் வந்தால் மட்டுமே காய்த்துப் பழுத்துப் பயன் தருவதைக் காண்கிறோம். அதுபோல ஒருவர் எவ்வளவு தான் முயன்றாலும் அவர் ஈடுபடுகிற செயல் அவர் நினைத்த வண்ணமே நிறைவேறிவிடுவதில்லை. அதற்குரிய காலம் வரும்போது தான் அக்காரியம் நிறைவேறும்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா --- தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

        
காலம் இறந்தகாலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் மூன்று பகுதிப்பட்டு நிற்கும். இறந்த காலம் செயலை முடிக்கும். நிகழ்காலம் செயலை நிகழ்விக்கும் எதிர்காலம் செயலைத் தோற்றுவிக்கும். காலம் ஒவ்வொரு பொருளிலும் வேறுவேறாக உள்ளது. மேலும் அளவால் பெரிதும் சிறிதுமாய் உள்ளது. ஒருவர் உடம்பில் காலம் நெடியதாய் இருக்குமாயின் அவர் நீண்ட ஆயுளை உடையவராகிறார். அவ்வாறின்றி அவர் உடம்பில் உள்ள காலம் அளவால் சிறியதாய் இருக்குமாயின் அதற்கேற்ப அவர் குறுகிய ஆயுளை உடையவராகிறார். இவ்வாறு பொருள் தோறும் காலம் வெவ்வேறு அளவினதாய் அமைந்து செயலை நிகழ்விக்கின்றது. காலம் சடப்பொருளே. எனவே,அது தானே செயற்படாது என்பதையும், இறைவனது சத்தி செலுத்தவே அது தன் காரியத்தைச் செய்யும் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.


காலத்தின் பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி என்னும் தத்துவம் தோன்றும். நமது வாழ்வில் நாம் நினைத்தபடி எல்லாம் நடந்து விடுவதில்லை. ஒருவர் படிக்கின்ற காலத்தில் மருத்துவத் துறையில் எப்படியாவது சேர வேண்டும் என்று முயல்கிறார். ஆனால் அது முடியாமலே போய் விடுகிறது மற்றொருவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தும் வேறொரு பெண்ணைக் கைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இன்னொருவர் பதவி உயர்வு பெறுதற்குரிய தகுதி எல்லாம் பெற்றிருந்தும் அவருக்குக் கிட்டாமல் அவர்க்குக் கீழ்நிலையில் உள்ள மற்றொருவருக்கு அது கிடைத்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமாய் இதனையே நுகர்க, ஏனையவற்றை நுகரற்க என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும். இறைவனது சத்தியே இவ்வாறு நியமித்து நடத்தும் என்று கொள்ளலாம். நியதி என்ற ஒரு கருவி எதற்கு எனத் தோன்றும். கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது, ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும். ஆதலால் இறைவனது சத்தி வினைகளை வரையறுக்கும் செயலுக்கு இந்நியதி தத்துவம் கருவியாய் நிற்கிறது எனலாம். நியதி தானே சுதந்திரமாகச் செயற்படாது என்பதையும், இறைவனது சத்தியின் வழி நின்றே செயற்படும் என்பதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். நியதி வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகரும் படி செய்யும் எனவும், காலம் அந்நுகர்ச்சியின் அளவை வரையறுத்து நிற்கும் எனவும் அறிந்தோம். இனி உயிர்கள் நுகர்ச்சியில் ஈடுபட வேண்டுமாயின் அவற்றின் அறிவு இச்சை செயல்கள் ஆணவ மல மறைப்பிலிருந்து விடுபட்டுத் தொழிற்பட வேண்டும் எனச் சற்று முன்னே கூறினோம். அங்ஙனம் அவை தொழிற்படுவதற்கு உதவும் கருவிகள் கலை, வித்தை, அராகம் என்பனவாகும். அக்கருவிகள் தோன்றும் முறையை இனிப் பார்ப்போம்.

மாயா தத்துவத்தினின்றும் நியதி தத்துவம் தோன்றிய பின்னர், கலை என்ற தத்துவம் தோன்றும். இக்கருவி ஆணவ மலமறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை முதலில் எழுப்பித் தொழிற்படச்செய்யும். இங்கு ஓர் ஐயம் எழலாம். அறிவுப் பொருளாகிய ஆன்மா ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு, அறியுந்திறனை இழந்து அறிவற்ற சடப்பொருள் போலக் கிடக்கும் நிலையில் முதலில் அதன் அறிவாகிய ஞான சத்தியையல்லவா எழுப்புதல் வேண்டும். அதனை விடுத்துக் கிரியா சத்தியை முதலில் எழுப்புவது எதற்கு? என்பதே அவ்ஐயம். ஞானசத்தியை முதலில் எழுப்புவதாக வைத்துக் கொள்வோம். ஞானசக்தி ஆணவ மலப் பிணிப்பிலிருந்து சற்று விடுபட்டு எழுந்தாலும் அது தானே செயற்படாது. ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் ஞானசத்தி தொழிற்படும். ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டுமானால் அதற்குக் கிரியா சத்தி வேண்டும். கிரியா சத்தியின்றி எச்செயலும் நிகழாது. கிரியா சத்தி விளங்கப் பெற்ற போதே ஆன்மா எச்செயலையும் செய்வோன் என்ற நிலையை அடைகிறது. ஆதலால் ஞான சத்தி தொழிற்படுவதற்கும் கிரியா சத்தி வேண்டப்படுகிறது. அது பற்றியே கிரியா சத்தியை முதலில் எழுப்பும் கலை என்ற கருவி தோன்றுவதாயிற்று. கலித்தல் என்ற சொல்லிலிருந்து கலை என்பது வந்தது. கலித்தல் என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்ற பொருள்கள் உண்டு. எனவே ஆணவ மலத்தை நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்பிச் செலுத்துகிற கருவிக்குக் கலை என்று பெயரிட்டது பொருத்தமாகும்.


கலை தோன்றிய பின்னர் அக் கலையிலிருந்தே வித்தை என்னும் தத்துவம் தோன்றும். வித்தை என்ற அக்கருவி ஆணவ மல சத்தியைச் சிறிது அடக்கி ஆன்மாவின் ஞான சத்தியை எழுப்பும். வித்தை தோன்றி பின்னர் அதிலிருந்தே அராகம் என்னும் தத்துவம் தோன்றும். அராகம் என்ற அக்கருவி ஆன்மாவின் இச்சா சத்தியை எழுப்பும். முன்னே சொன்ன காலம், நியதி, கலை என்னும் மூன்றும் மாயையிலிருந்து நேரே தோன்ற, வித்தையும் அராகமும் ஆகிய இரண்டும் அங்ஙனம் மாயையிலிருந்து நேரே தோன்றாமல் கலையிலிருந்து வித்தையும் அவ்வித்தையிலிருந்து அராகமும் தோன்றுவது நோக்குதற்குரியது. இதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறலாம்.

ஆன்மாவினது அறிவு ஒன்றே அறிதல் விழைதல் செய்தல் என்னும் செயல் பற்றி ஞான சத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி என மூன்றாக வழங்கப்படுகிறது. எனவே இம் மூன்றும் தம்முள் வேறல்ல என்பதும். அறிவாகிய ஒன்றன் நிலை வேறபாடே என்பதும் விளங்கும். கிரியா சத்தியும் ஞான சத்தியும் தம்முள் மாறுபட்டனவல்ல ஆகையால் கிரியையை எழுப்புவதாகிய கலையிலிருந்தே ஞானத்தை எழுப்புவதாகிய வித்தை தோன்றுவதாயிற்று. இச்சா ஞானத்தின் நிலை வேறுபாடேயாகையால் ஞானத்தை எழுப்புவதாகிய வித்தையினின்றும் இச்சையை எழுப்புவதாகிய அராகம் தோன்றுவதாயிற்று.

கிரியையும் ஞானமும் இச்சையும் வேறுவேறல்லவாயின் கலையாகிய ஒரு கருவியே இம்மூன்றையும் எழுப்புதல் இயலாதோ? கலை, வித்தை, அராகம் என வேறு வேறு கருவிகள் எதற்கு? எனக் கேட்கலாம். இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருவி ஒரு நேரத்தில் ஒரு தொழிலைச் செய்யுமேயன்றிப் பல தொழில்களை ஒருங்கு செய்யமாட்டாது. ஆதலால் கிரியை, ஞானம், இச்சை ஆகிய மூன்றும் ஒருங்கே வேண்டப்படும்போது கலை என்ற கருவி கிரியையை எழுப்புதலாகிய ஒரு தொழிலை மட்டும் செய்யும் என்பதும், ஞானத்தையும் இச்சையையும் எழுப்புதலாகிய தொழிலைச் செய்வதற்கு வித்தையும் அராகமும் ஆகிய வேறு கருவிகள் வேண்டியுள்ளன என்பதும் தெளிவாகும்.

வித்தை என்னும் சொல் அறிவு எனப் பொருள்படும். ராகம் என்னும் வடசொல்லுக்கு விருப்பம் என்பது பொருள். அச்சொல்லே தமிழில் அராகம் என வந்துள்ளது.

இதுகாறும் வந்தவற்றுள் அராகம் ஆன்மாவின் இச்சா சத்தியையும் வித்தை ஞான சத்தியையும், கலை கிரியா சத்தியையும் விளக்கி ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனைக் காலம் நுகர்க என எல்லைப்படுத்தும். இவ்வைந்து கருவிகளும் ஆன்மாவுக்கு இன்றியமையாதனவாய். ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒன்றாய் ஒட்டியேயிருக்கும். அதனால் அவை பஞ்சகஞ்சுகம் என்னும் பெயர் பெறும். கஞ்சுகம்சட்டை.


இந்த ஐந்து சட்டைகளையும் அணிந்து நிற்கும் நிலையில் ஆன்மாபுருடன் எனப் பெயர் பெறும். போகத்தை நுகரும் தகுதியுடைமை பற்றி ஆன்மா புருடன் எனப்படுகிறது. இந்நிலையே புருடதத்துவம் எனச் சொல்லப்படுகின்றது. தத்துவம் என்று கூறப்படினும் இஃது ஏனையவை போல ஒரு தனித் தத்துவம் அன்று என்பது அறிதற்குரியது. பஞ்சகஞ்சுகத்துடன் கூடிப் புருடன் என நின்ற ஆன்மா பொதுவகையில் போகத்தை நுகரும் தகுதியைப் பெறும் பின்னர் பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போதே அத்தகுதியைச் சிறப்பு வகையாற்பெறும். பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது ஆதலால் அதனோடு பொருந்தும் போதே ஆன்மா புருடனாம் நிலையைச் சிறப்பாகப் பெறுகிறது. இதனால் காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்பதும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.

         பிரகிருதியைப் பற்றி முன்னே குறிப்பிட்டபோது அஃது அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியம் எனச் சொன்னோம். அது பொதுவாகச் சொன்ன கூற்றேயாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அது அசுத்த மாயையின் காரியங்களில் ஒன்றாகிய கலையிலிருந்து தோன்றுவதாகும். தோசை என்ற உணவுப் பண்டத்திற்கு மூலப் பொருள் எது என்று கேட்டால் மாவு என்றும் சொல்லலாம்; அரிசி என்றும் சொல்லலாம். மாவு நேரான மூலப்பொருள். அரிசி முடிவான மூலப்பொருள். அதுபோல, பிரகிருதிக்குக் கலை நேரான முதற்காரணம்; அசுத்த மாயை முடிந்த முதற்காரணம் என அறிதல் வேண்டும்.

         கலை என்னும் தத்துவத்தினின்றும் வித்தை என்னும் தத்துவமும் அவ்வித்தையினின்றும் அராகம் என்னும் தத்துவமும் தோன்றும் எனக் கூறினோம். அவற்றின் பின்னர்க் கலையினின்றும் நேரே பிரகிருதி தோன்றும். ஆன்மா பிரகிருதியைப் பொருந்திய நிலையில் நுகர்வோன் என்னும் சிறப்புத் தகுதியைப் பெற்றுப் புருடனாய் நிற்கும் எனக் கண்டோம். காலம் முதலிய ஐந்தோடு புருடன் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஆறாகும். அவற்றோடு முதலிற் சொன்ன மாயா தத்துவம் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஏழாகும். இவ்வாறு காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை (மாயா தத்துவம்) ஆகிய இவ் ஏழும் அசுத்த மாயா தத்துவங்கள் ஆயின.


இவற்றுள் மாயையும் புருடனும் நீங்கலாக மற்றையவை பரிணாம முறையில் தோன்றுவனவாகும். மாயையின் ஒரு கூறு காலமாகப் பரிணமிக்கும். மற்றொரு கூறு நியதியாகப் பரிணமிக்கும். மற்றுமொரு கூறு கலையாகப் பரிணமிக்கும். கலையின் ஒரு கூறு வித்தையாகவும். வித்தையின் ஒரு கூறு அராகமாகவும் பரிணமிக்கும். கலையின் மற்றொரு கூறே பிரகிருதியாகப் பரிணாமம் அடையும் என்பது அறிதற்குரியது.


ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றுவிக்கும் கருவிகளாதல் பற்றி இவை வித்தியா தத்துவம் எனப்பட்டன.  இவ்வித்தியா தத்துவங்களுக்கு போசயித்திரு காண்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவை ஆன்மாவிடத்தில் நுகர்வோனாம் தன்மையை உண்டாக்குதலால் இப்பெயர் பெற்றன.

போசயித்திரு --- நுகர்வோன். காண்டம் --- தொகுதி.
  
இறைவனது சத்தியானது, சுத்த மாயையில் பொருந்தி ஐந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கும். அவை சிவம், சத்தி, சதாசிவம், (அல்லது சாதாக்கியம்), ஈசுரம், சுத்தவித்தை என்பன. இவ்வைந்துமே இறைவனது சத்திக்கு நிலைக்களமாய் அமைவன. பிரகிருதியிலும், அசுத்த மாயையிலும் தோன்றும் காரியங்கள் எல்லாம் பரிணாமமாய்த் தோன்றுவன என அறிந்தோம். சுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் அவ்வாறு பரிணமித்துத் தோன்றுவன அல்ல. அவை விருத்திப்பட்டுத் தோன்றுவனவாகும். சுருங்கி நிற்பது விரிவடைதல் விருத்தி எனப்படும்.

1. சிவதத்துவம்

         முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.
  
2. சத்திதத்துவம்

         இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில் அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

3. சதாசிவ தத்துவம்

         இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.

4. ஈசுர தத்துவம்

         ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.

5. சுத்த வித்தியா தத்துவம்

         கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றின. இவற்றைச் சுத்த மாயையிலிருந்து சிவபெருமானே நேரே தோற்றி ஒடுக்குவதால், இவை சிவதத்துவங்கள் எனப்படுகின்றன. சுத்த மாயையினின்றும் தோன்றிச் சுத்தமாய் இருத்தல் பற்றி இவை சுத்த தத்துவங்கள் என்றும் சொல்லப்படும். முன்னே சொன்னபடி இறைவனது சத்தி, சுத்த தத்துவங்களாகிய இவற்றை நிலைக்களமாகப் பற்றி நின்று இவற்றின் வழியாகக் கீழேயுள்ள ஏனைத் தத்துவங்களைச் செலுத்தி நிற்கும். செலுத்தும் கருவியாதல் பற்றி இத்தத்துவத் தொகுதி பிரேரக காண்டம் எனற்றடும். பிரேரகம் --- செலுத்துவது.

இவ்வாறு ஆன்மதத்துவங்கள், வித்தியா தத்துவங்கள், சிவதத்துவம் ஆகியவைகளை அறிந்து தெளிந்து, தத்துவங்கள் அனைத்தையும் கடந்து, சுத்தசிவ நிலையை ஆன்மா அடைதல் வேண்டும். ஆறு ஆதாரங்களையும் கடந்த நிலையில், நிராதார நிலையையும் கடந்து, மீதானம் என்னும் நிலையை ஆன்மா அடைதல் வேண்டும். அது தலை உச்சியில் பன்னிரண்டு அங்குலத்திற்கு உள்ளது. திருவருள் வடிவான இந்த இடத்தில் சிவபரம்பொருள் விளங்கித் தோன்றும். ஆன்மா சிவயோக நிலையில் சிவபரம்பொருளுடன் ஒன்றுதற்கு உரிய உயர்ந்த நிலை இதுவே ஆகும்.

இதனை "எமது உச்சியாரே" என்று திருஞானசம்பந்தரும், "மனத்தகத்தான் தலை மேலான்" என்று அப்பர் பெருமானும் காட்டினார்கள். இந்த உண்மையை, திருவுந்தியார் என்னும் நூல் பின்வருமாறு விளக்கும்.

ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று,
மீதானத்தே செல்க உந்தீபற,
விமலற்கு இடம் அது என்று உந்தீபற.

ஆதாரம் என்பது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் குறிக்கும்.  இந்த ஆதாரங்கள் உள்ள இடம் இது என்று தனித்தனியே குறித்து அறியலாம். நிராதாரம் (நிர்+ஆதாரம்) என்பது ஆதாரமாக எதுவும் இல்லாத நிலை. இது ஆக்ஞை நிலைக்கு அப்பால், ஆயிர இதழ்த் தாமரைவடிவில் சிவபெருமான் அம்மையுடன் கூடி நிற்கும் இடம். அதற்கும் மேலே, மீதானம் என்பது தலை உச்சிக்கு மேலே பன்னிரண்டு அங்குலம் உயர்ந்த இடம். இதுவே விமலன் ஆகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம். இதுவே பேரின்பம் விளையும் இடம். வழிபாட்டின்போது இரு கைகளையும் உயர்த்தி வழிபடுவதன் நோக்கம் இது ஆகும்.

ஆதாரம் என்பது உடலில் உள்ள நிலை. உயிர்கள் மலநீக்கம் பெறுகின்ற பொது நிலை இது ஆகும். அந்தந்த ஆதாரத்திற்கு உரிய தெய்வ வடிவில் மனம் ஒன்றித் தியானிக்கும் "அந்தரியோகம்" எனவும் "அகப்பூசை" எனவும் சொல்லப்படும்.

நிர் ஆதாரம் என்பது உடலைக் கடந்த நிலை. சமாதி நிலையும் இதுவே. திருவருள் உணர்வு பெறும் நிலை. கற்பனை கடந்த சோதியாகிய சிவத்தை உருவம் இன்றித் தியானிக்கும் நிலை.

மீதானம் என்பது அதற்கும் மேலான நிலை. உயிர்கள் சிவப்பேற்றினைப் பெறுவது இந்த நிலையில் தான். திருவடி நிலை என்பதும்இதுவே.

ஆதார யோகத்தின் மூலமாக நிராதார நிலையை அடைந்து, அந்த நிலையையும் கடந்து மீதானம் என்னும் நிலையை உயிரானது அடைதல் வேண்டும்.

"அந்த நிலையை அடியேன் என்ற அடைவேன்" என்று முருகப் பெருமானிடம் வேண்டிப் பாடுகின்றார் அடிகளார் இந்தத் திருப்புகழில்.

இதனை வள்ளல்பெருமான் அனுபவித்து அறிவுறுத்திய பாடல்கள் காண்க.

தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்
     தனிப்பர நாதமாம் தலத்தே
ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி
     உற்றிடல் உயிர் அனுபவம் என்று,
இத்துணை வெளியின் என்னைஎன் இடத்தே
     இருந்தவாறு அளித்தனை அன்றோ?
சித்தநல் காழி ஞானசம் பந்தச்
     செல்வமே! எனதுசற் குருவே.

தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
தத்துவம் அன்றித் துடங்காண்டி
சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
சண்முக நாதனைப் பாடுங்கடி.

தத்துவ அதீத தனிப்பொருள் வெளி எனும்
    அத்திரு அம்பலத்து அருட்பெருஞ் ஜோதி

தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
    அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
    அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

தத்துவ பதமே தற்பத பதமே
    சித்துஉறு பதமே சிற்சுக பதமே

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
    இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்,
    தத்துவ அதீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம், அவைமேல்
    சிவநிலை தெரிந்திடச் சென்றேம்,
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
    ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின்று ஓங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்,
    சாகாத கல்விகற்கும் தரம் சிறிதும் அறியேன்,
அத்தநிலை சத்தநிலை அறியேன், மெய் அறிவை
    அறியேன், மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன்,
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவின் இடத்தே
    தூயநடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ?
எத்துணையும் குணம் அறியேன், எங்ஙனம்நான் புகுவேன்?
    யார்க்கு உரைப்பேன்? என்னசெய்வேன்? ஏதும்அறிந் திலனே.

தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
    சாகாவ ரத்தையும் தந்து, எனைத் தேற்றி
ஒத்துவந்து உள்ளே கலந்துகொண்டு, எல்லா
    உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றி,
சித்திஎ லாம்செயச் செய்வித்து, சத்தும்
    சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே!
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

தத்துவம் அனைத்தும் தவிர்த்து, நான் தனித்த
    தருணத்தில் கிடைத்தது ஒன்று என்கோ?
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
    தனில்உறும் அனுபவம் என்கோ?
ஒத்துவந்து எனைத்தான் கலந்துகொண்டு, எனக்குள்
    ஓங்கிய ஒருமையே என்கோ?
சித்து உவந்து ஆடும் சித்தனே என்கோ?
    திருச்சிற்றம் பலத்தவ நினையே.

தத்துவ பதியே! தத்துவம் கடந்த
    தனித்தது ஓர் சத்திய பதியே!
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
    தமக்குளே சார்ந்த நல் சார்பே!
பித்துஉறு சமயப் பிணக்குஉறும் அவர்க்குப்
    பெறல்அரிது ஆகிய பேறே!
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து
    பொதுநடம் புரிகின்ற பொருளே.

தத்துவரும், தத்துவம்செய் தலைவர்களும், பிறரும்,
    தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர் நிற்கின்றார்;
எத்துணையும் மற்று அவரை ஏறெடுத்துப் பாராள்,
    இருவிழிகள் நீர்சொரிவாள், என் உயிர் நாயகனே!
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய்! என்று உமையே
    ஓதுகின்றாள், இவள் அளவில், உத்தமரே! உமது
சித்தம்எது? தேவர்திரு வாய்மலர வேண்டும்
    சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.

தத்துவ அதீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவம் உன்னுவது ஏன்? - நெஞ்சே!
தத்துவம் உன்னுவது ஏன்.

தத்துவம் எல்லாம்ஆம் ஜோதி, - அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி,
அத்துவி தப்பெருஞ் ஜோதி, - எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.

கருத்துரை

முருகா! உனது திருவடியில் கலக்கும் நிலையை அடியேன் என்று அடைவேன்.

                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...