சிதம்பரம் - 0656. மருவு கடல்முகில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருவு கடல்முகில் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
ஊன உடம்பை எடுத்து உழலாமல்,
ஞான நிலையை அருள்.


தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.

மருவு கடல்முகி லனைய குழல்மதி
வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
      மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
      ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
தரள மெனுநகை மிடறு கமுகென
      வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
      டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
மெனவு மிகலிய குவடு மிணையென
      வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
      வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் .....முலைமேவும்

வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
      ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
      அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மமிர்த கழைரச
      மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
      துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
      வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
      ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே

தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
      தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
      பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
      தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
      கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
பலவில் சுளையென வுருக வுயர்மயல்
      சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
      வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச்

செவியொ டொளிர்விழி மறைய மலசல
மொழுக பலவுரை குழற தடிகொடு
      தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
      லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
      செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
      ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
      சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
      நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ

குருவி னுருவென அருள்செய் துறையினில்
குதிரை கொளவரு நிறைத வசிதலை
      கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
      மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
அருண வுழைமழு மருவு திருபுயர்
      கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
      விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
      கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
      லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக்

குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
      கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
      எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர எனவொ தமரர்கள்
      கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
      ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
      கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
      னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா

சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
      சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
      வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
கடைய நெடியவர் திருவு மழகியர்
      தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
      முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகர
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
      திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு
      பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே

திலத மதிமுக அழகி மரகத
வடிவி பரிபுர நடனி மலர்பத
      சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன
      முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
      செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
      சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
னரிய மகனென புகழ்பு லிநகரில்
      செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
      தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மருவு கடல்முகில் அனைய குழல், மதி
வதன, நுதல்சிலை பிறையது, ணும்விழி
      மச்சப் பொன்கணை, முக்குப் பொன்குமிழ்
      ஒப்ப, கத்தரி ஒத்திட்டச் செவி,
குமுத மலர் இதழ் அமுத மொழி, நிரை
தரளம் எனும் நகை, மிடறு கமுகு என
      வைத்து, பொன் புய பச்சைத் தட்டையொடு
      ஒப்பிட்டுக் கமலக் கைப் பொன்துகிர்
வகைய விரலொடு, கிளிகள் முக நகம்
எனவும், கலிய குவடும் இணை என
      வட்டத் துத்தி முகிழ்ப்பச் சக்கிரம்
      வைத்தப் பொன்குடம் ஒத்திட்டு, திகழ் ..... முலைமேவும்

வடமும் நிரைநிரை தரள பவளமொடு
அசைய, பழுமர இலை வயிறுமயிர்
      அல்பத்திக்கு இணை, பொற்புத் தொப்புளும்
      அப்புக்குள் சுழி ஒத்து, பொன்கொடி
மதனன் உரு,துடி இடையும் மினல்என,
அரிய கடிதடம் அமிர்த கழை ரசம்
     மட்டுப் பொன் கமலத்தில் சக்கிரி
     துத்திப் பைக்கு ஒருமித்து, பட்டு உடை
மருவு தொடை இணை கதலி, பரடுகொள்
கணையும் உழவு என கமடம் எழுதிய
      வட்டப் புத்தகம் ஒத்து, பொன்சர
      ணத்தில் பின்புறம் எத்துத் தத்தைகள் ...... மயில்போலே

தெருவில் முலைவிலை உரை செய்து, வரவர்
மயல்கொடு அணைவர, மருள்செய் தொழில்கொடு,
      தெட்டிப் பற்பல சொக்கிட்டு, பொருள்
      பற்றிக் கட்டில் அணைக்கு ஒப்பிப் புணர்
திலதம் அழிபட, விழிகள் சுழலிட,
மலர்கள் அணைகுழல் இடைகொள் துகில்பட,
      தித்தித் துப்பிதழ் வைத்து, கைக்கொடு
      கட்டி, குத்து முலைக்குள் கைப்பட,
திரையில் அமுது என, கழையில் ரசம் என
பலவில் சுளை என உருக உயர்மயல்
      சிக்குப் பட்டு, டல் கெட்டு, சித்தமும்
      வெட்கி, துக்கமும் உற்றுக் கொக்குஎன ...... நரைமேவிச்

செவியொடு ஒளிர்விழி மறைய, மலசலம்
ஒழுக, பலஉரை குழற, தடிடு
      தெத்தி, பித்தமும் முற்றி, தற்செயல்
      அற்று, சிச்சி எனத் துக்கப்பட,
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினில்
உவரி நிறம்உடை நமனும் உயிர்கொள
      செப்புஅற்று, பிணம் ஒப்பித்து, பெயர்
      இட்டு, பொன்பறை கொட்ட, செப்பிடு
செனனம் இது என அழுது, முகமிசை
அறைய, அணைபவர் டு என, சுடலையில்
      சில் திக்குக்கு இரை இட்டிட்டு, ப்படி
      நித்தத் துக்கம் எடுத்திட்டுச் சடம் ...... உழல்வேனோ?

குருவின் உரு என அருள்செய் துறையினில்
குதிரை கொள வரு நிறை தவசி தலை
      கொற்றப் பொன் பதம் வைத்திட்டு, ற்புதம்
      எற்றிப் பொன்பொருள் இட்டுக் கைக்கொளும்
முதல்வர், ளகலை மதியம் அடைசடை,
அருண உழை மழு மருவு திருபுயர்,
      கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டுஎழ
      விட்ட அத்திக் கணை நக்கர்க்கு அற்புத
குமரன் என விருது ஒலியும் முரசொடு
வளையும் எழுகடல் அதிர, முழவொடு
      கொட்டத் துட்டரை வெட்டித் தட்கடல்
      ஒப்பத் திக்கு மடுத்துத் தத்திட ...... அமர்மேவிக்

குருகு கொடிசிலை குடைகள் மிடைபட,
மலைகள் பொடிபட, உடுகள் உதிரிட,
      கொத்திச் சக்கிரி பற்ற,பொன் பரி
      எட்டுத் திக்கும் எடுத்திட்டு, குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர என ஒது அமரர்கள்
      கொட்பப் புட்பம் இறைத்து, பொன் சர-
      ணத்தில் கைச் சிரம் வைத்துக் குப்பிட,
குலவு நரி சிறை கழுகு கொடி பல
கருடன் நடம்இட, குருதி பருகிட,
      கொற்றப் பத்திரம் இட்டு, பொன் கக-
      னத்தைச் சித்தம் இரட்சித் துக்கொளு ...... மயில்வீரா!

சிரமொடு இரணியன் உடல் கிழிய, ஒரு
பொழுதின் உகிர்கொடு அரி என் நடமிடு
      சிற்பர், திட்பதம் வைத்து, சக்கிர-
      வர்த்திக்குச் சிறை இட்டு, சுக்கிரன்
அரிய விழிகெட, இருபதமும் உலகு
அடைய நெடியவர், திருவும் அழகியர்,
      தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம்
      உற்று, பொன் தசர்தற்குப் புத்திர
செயமும் மனவலி சிலை கைகொடு, கரம்
இருபது உடை கிரி சிரமொர் பதும்விழ,
      திக்கு எட்டைக் ககனத்தர்க்குக் கொடு
      பச்சைப் பொன் புயலுக்குச் சித்திர ...... மருகோனே!

திலத மதிமுக அழகி, மரகத
வடிவி, பரிபுர நடனி, மலர்பத
      சித்தர்க்குக் குறி வைத்திட்டத் தன
      முத்தப் பொன்கிரி ஒத்தச் சித்திர
சிவை, கொள் திரு, சரசுவதி, வெகுவித
சொருபி, முதுவிய கிழவி, இயல்கொடு
      செட்டிக்குச் சுகம் உற்றத் தத்துவ
      சித்தில் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையில் அமுது என மொழி செய் கவுரியின்
அரிய மகன்என புகழ் புலிநகரில்
      செப்புப் பொன்தனம் உற்றப் பொன்குற
      தத்தைக்குப் புளகித்திட்டு ஒப்பிய ...... பெருமாளே.


பதவுரை

      குருவின் உரு என அருள்செய் துறையினில் --- குருநாராய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில்,

     குதிரை கொளவரு நிறை தவசி தலை கொற்றப் பொன்பதம் வைத்திட்டு --- பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி,

     அற்புதம் எற்றிப் பொன்பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும் முதல்வர் --- அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, மெய்ஞ்ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டு அருளிய முதன்மையரான சிவபெருமான்.

      இளகலை மதியம் அடைசடை --- இளம் பிறை நிலவைத் தரித்துள்ள சடையினை உடையவர்.

     அருண உழைமழு மருவு திருபுயர் --- சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த அழகிய திருத்தோள்களை உடையவர்.

     கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு அணை நக்கர்க்கு அற்புத குமரன் என --- இறுமாப்பும் சேட்டையும் கொண்ட முப்புரத்தவர்கள் கெட்டு அழியும்படிச் செய்து, திக்குக்களை ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவரே என்று,

         விருது ஒலியும் முரசொடு வளையும் எழுகடல் அதிர --- உமது பெருமையை எடுத்து ஒலிக்கும் முரசு வாத்தியத்துடன், சங்குகளும் எழுகடல் போலப் பேரொலி செய்ய,
    
     முழவொடு கொட்ட --- முழவு வாத்தியமும் சேர்ந்து முழக்கம் செய்ய,

     துட்டரை வெட்டி --- துஷ்டர்களாகிய அசுரர்களை வெட்டி அழித்து,

     தண்கடல் ஒப்பத் திக்கும் மடுத்துத் தத்திட அமர் மேவி ---குளிர்ந்த கடல் போல பல திக்குகளிலும் நிறைந்து பரக்கும்படி போருக்கு எழுந்து,

      குருகு கொடி சிலை குடைகள் மிடைபட --- கோழிக் கொடிகளும், ஒளி பொருந்திய குடைகளும் போர்க்களத்தில் நெருங்கி இருக்கவும்,

     மலைகள் பொடிபட --- மலைகள் பொடிபடவும்,

     உடுகள் உதிரிட --- நட்சத்திரங்கள் உதிர்ந்து விழவும்,

     கொத்திச் சக்கிரி பற்றப் பொன் பரி எட்டுத் திக்கும் எடுத்திட்டுக் குரல் --- தேவரீரது குதிரையாகிய மயிலானது எட்டுப் பாம்புகளையும் அலகால் கொத்திப் பிடிக்க, எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும் குரல் எடுத்திட்டு ஓலமிட்டு,

      குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் --- குமர குருபர குமர குருபர குமர குருபர என பல முறை துதித்து நிற்கும் தேவர்கள்

     கொட்பப் புட்பம் இறைத்துப் பொன் சரணத்தில் கைச்சிரம் வைத்துக் குப்பிட --- தேவரீரைச் சூழ்ந்து, மலர்களை அழகிய திருவடிகளில் தூவி, தலை மேல் கைகளை வைத்துக் கும்பிட, (கும்பிட என்னும் சொல் குப்பிட என வந்தது)

         குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட --- மகிழ்ந்து ஓடிவரும் நரிகளும், சிறகுள்ள கழுகுகளும், காக்கை பலவும், கருடன்களும் கூத்தாடவும்,

     குருதி பருகிட கொற்றப் பத்திரம் இட்டுப் பபொன் ககனத்தைச் சித்தம் இரட்சித்துக் கொளும் மயில் வீரா --- இரத்தத்தைக் குடிக்க, உன் வீர வாளைச் செலுத்தி அழகிய தேவலோகத்தை மனத்தில் கருணையுடன் காப்பாற்றித் தந்த மயில் வீரரே!

      சிரமொடு இரணியன் உடல் கிழிய --- இரணியனுடைய தலையும் உடலும் கிழிய

     ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என நடமிடு சிற்பர் --- ஒப்பற்ற அந்தப் பொழுதில் தமது விரல் நகத்தைக் கொண்டு அறுத்து, அந்தி வேளையில் நடனத்தைப் புரிந்த தொழில் திறம் வாய்ந்தவரும், (கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது)

      திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டு --- வலிய தமது திருவடியை வைத்து மாவலிச் சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து,

     சுக்கிரன் அரிய விழிகெட --- சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப் போக

     இருபதமும் உலகு அடைய நெடியவர் --- இரு திருவடிகளால் உலகம் முழுமையும் அளக்கும்படி உயர்ந்தவரும்,

     திருவும் அழகியர் --- அழகிய திருமகளைத் தனது வலமார்பில் உடையவரும்,

      தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம் உற்றுப் பொன் தசர்தற்குப் புத்திர --- தெற்குத் திசையில் இருந்த இராவணன் முதலிய அரக்கர்கள் மீது கோபம் கொண்டு, சிறந்த தசரதச் சக்கிரவர்த்திக்கு புத்திரராய் அவரித்து,

     செயமும் மனவலி சிலை கைகொடு --- வெற்றியும் மனோதிடத்தையும், கோதண்டம் என்னும் வில்லையும் கையில் ஏந்தி, (கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது)

       கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ --- இருபது கைகளைக் கொண்ட இராவணனுடைய பத்து தலைகளும் அறுந்து விழ, (பத்தும் என்னும்சொல் பதும் எனக் குறுகி வந்தது)

     திக்கு எட்டைக் ககனத்தர்க்குக் கொடு --- எட்டுத் திக்குகளையும் தேவர்களுக்குக் கொடுத்த

     பச்சைப் பொன் புயலுக்குச் சித்திர மருகோனே --- பச்சை நிறம் கொண்ட அழகிய மேக வண்ணருமாகிய திருமாலுக்கு அமைந்த அழகிய மருகரே!

      திலத மதிமுக அழகி --- பொட்டு அணிந்து, சந்திரனுக்கு ஒப்பான முகத்தை உடைய அழகி,

     மரகத வடிவி --- பச்சை நிறத்தை உடையவளும்,

     பரிபுர நடனி --- சிலம்பணிந்து நடனம் புரிபவளும்,

     மலர் பத சித்தர்க்கு --- அடியார்கள் உள்ளத்தில் மலர்கின்ற திருவடியை உடைய சித்தராகிய சிவபெருமானுக்கு

     குறி வைத்திட்டத் தனம் முத்துப் பொன்கிரி ஒத்தச் சித்திர சிவை --- சுவட்டுக் குறி வைத்தவையும், முத்து மாலை அணிந்த பொன் மலை போன்றவையுமான மார்பகங்கள் இணைந்துள்ள அழகிய அம்பிகையும்,

      கொள் திரு சரசுவதி --- திருமகளையும், கலைமகளையும் தனது இரு கண்களாகக் கொண்டவளும்,

     வெகுவித சொருபி --- பல விதமான உருவத்தைக் கொண்டவளும்,

     முதுவிய கிழவி --- மிகப் பழையவளும்,

     இயல்கொடு செட்டிக்கு --- முறைமையாக வளையல் விற்ற செட்டியாகிய சொக்கநாதருக்கு

     சுகம் உற்றத் தத்துவ சித்தில் --- சுகம் நிரம்ப தத்துவ அறிவு முறையில்

     சில்பதம் வைத்தக் கற்புறு திரையில் அமுது என மொழி செய் கவுரியின் --- தனது ஞான பாதத்தைத் வைத்துச் சூட்டியவளும், கற்பு உள்ளவளும், கடலில் எழுந்த அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசுபவளுமான உமாதேவியின்

     அரிய மகன் என --- அருமையான புதல்வன் என வந்து

     புகழ் புலி நகரில் --- புகழ் நிறைந்த புலியூர் என்னும் சிதம்பரத் திருத்தலத்தில்

     செப்புப் பொன் தனம் உற்று --- செப்புப் போன்று அழகுடன் விளங்குகின்ற திரண்டுள்ள மார்பகங்களைக் கொண்,

     பொன் குற தத்தைக்குப் புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே --- அழகிய குறக்கிளி ஆகிய வள்ளியின் பொருட்டு புளகாங்கிதம் கொண்டு அவளுக்கு ஒப்புக் கொடுத்து வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      மருவு கடல் முகில் அனைய குழல் --- கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து (கரு நிறம் கொண்ட) கூந்தல்.

     மதி வதன --- சந்திரனைப் போன்ற முகம்.

     நுதல் சிலை பிறை அது --- வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி.

     எணும் விழி மச்ச பொன் கணை --- மதிக்கத் தக்க கண்ணானது மீன், அழகிய அம்பு போன்றது. (எண்ணும் என்னும் சொல் எனக் குறுகி வந்தது)

         முக்குப் பொன் குமிழ் ஒப்ப --- மூக்கு அழகிய குமிழம் பூவை ஒத்து நிற்கும். (மூக்கு என்னும் சொல் முக்கு என வந்தது)

     கத்தரி ஒத்திட்டச் செவி --- கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள காதுகள்.

     குமுதமலர் இதழ் --- குமுத மலர் போன்ற வாயிதழ்.

     அமுத மொழி --- அமுதம் போன்ற சொற்கள்.

     நிரை தரளம் எனும் நகை --- வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள்.

     மிடறு கமுகு என வைத்து --- கழுத்து பாக்கு மரத்தை நிகர்க்கும் என வைக்கப்படும்.

      பொன் புயம் பச்சைத் தட்டையொடு ஒப்பிட்டு --- அழகிய தோள்கள் பச்சை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும்.

     கமலக் கை --- தாமரை போன்ற கை.

     பொன் துகிர் வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் --- அழகிய நகங்களைக் கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகும்.

      இகலிய குவடும் இணை என வட்டத் துத்தி முகிழ்ப்ப --- ஒத்து நிற்கும் மலை இரண்டு போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு குவிந்து விளங்குவதாய்,

     சக்கிரம் வைத்துப் பொன்குடம் ஒத்திட்டுத் திகழ் முலை மேவும் வடமும் நிரைநிரை தரளம் பவளம் ஒடு அசைய --- சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம் போன்று விளங்கும் மார்பகங்கள் தம்மேல் உள்ள மாலைகள் வரிசை வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய,

      பழுமர இலை வயிறு மயிர் அல் பத்திக்கு இணை --- ஆலிலை போன்ற வயிற்று முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும்.

     பொற்புத் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து --- அழகிய கொப்பூழ் நீரில் உள்ள சுழிக்கு ஒப்பாகும்.

     பொன்கொடி மதனன் உரு துடி இடையும் மினல் என --- அழகிய கொடி போன்றதும், மன்மதனின் உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாத, உடுக்கை ஒத்த இடுப்பு மின்னலைப் போன்றது. (மின்னல் என்னும் சொல் மினல் என வந்தது)

         அரிய கடி தடம் அமிர்த கழை ரசம் மட்டுப் பொன் கமலத்தில் சக்கிரி துத்திப் பைக்கு ஒருமித்து --- அருமை வாய்ந்த பெண்குறி கரும்பின் ரசம், தேன் கொண்ட கூடு, அழகிய கமலத்தில் பாம்பின் பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும்.

         பட்டு உடை மருவு தொடை இணை கதலி --- பட்டாடை பூண்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைக்கு ஒப்பாகும்.

     பரடுகொள் கணையும் முழவு என --- பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும்.

     கமடம் எழுதிய வட்டப் புத்தகம் ஒத்து சரணத்தில் பின்புறம் --- ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று அழகிய புறங்கால் இருக்கும்.

     மெத்துத் தத்தைகள் மயில் போலே --- (இத்தகைய அவயவங்கள் பொருந்திய) பொது மகளிர் கிளிகள் போலவும், மயில்கள் போலவும் இருந்தனர்.

      தெருவில் முலைவிலை உரைசெய்து --- தெருவில் நின்று (தமது) மார்பகங்களை விலை பேசி,

     அவரவர் மயல்கொண்டு அணைவர மருள் செய்தொழில் கொடு தெட்டி --- கண்டவர் யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து வஞ்சித்து, (கொண்டு என்னும் சொல் கொடு என வந்தது)

     பற்பல சொக்கு இட்டுப் பொருள் பற்றி --- பலவிதமான மயக்க மருந்துகளை உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து,

     கட்டில் அணைக்க ஒப்பிப் புணர் --- கட்டிலில் அணைப்பதற்கு சம்மதித்து, பின்பு கலவியில் ஈடுபட்டு,

      திலதம் அழிபட --- நெற்றிப் பொட்டு அழிந்து போக,

     விழிகள் சுழலிட --- கண்கள் சுழல,

     அணை குழல் இடை கொள் துகில் பட தித்தி --- மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்துபோக அனுபவித்து,

     துப்பு இதழ் வைத்துக் கை கொடு கட்டிக் குத்து முலைக்குள் கைப்பட --- பவளம் போன்ற வாயிதழ் தந்து, கையால் அணைத்து, திரண்ட மார்பகங்களைக் கையில் பற்றி, (கொண்டு என்னும் சொல் கொடு வட வந்தது)

      திரையில் அமுது என ---  கடலினின்றும் அமுதத்தைக் கடைந்து எடுத்தது போலவும்,

     கழையில் ரசம் என --- கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சாறு போலவும்,

     பலவில் சுளை என உருக --- பலாப் பழத்தின் சுளை போலவும் மனம் உருக,

     உயர் மயல் சிக்குப்பட்டு --- மிகுந்த காம மயக்கில் சிக்கி,

     உடல் கெட்டு --- உடல் கெட்டு,

     சித்தமும் வெட்கித் துக்கமும் உற்று --- உள்ளமும் நாணம் உற்று, துயரம் அடைந்து,

      கொக்கு என நரை மேவி --- தலைமயிர் கொக்கைப் போல வெளுத்து,

     செவியொடு ஒளிர் விழி மறைய --- காதும், ஒளிபொருந்திய கண்களும் தத்தம் தொழிலில் இருந்து மறைவு பட (செவிடும், குருடுமாகி),

     மலசலம் ஒழுக --- மலமும் சலமும் ஒழுக,

     பல உரை குழற --- பல பேச்சுகளும் குழற,

     தடிகொடு தெத்தி --- கைத்தடி கொண்டு தடுமாறி, (கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது)

     பித்தமும் முற்றி --- பித்தமும் அதிகரித்து,

     தன் செயல் அற்று --- தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து,

     சிச்சி எனத் துக்கப்பட --- கண்டவர்கள் சீ சீ என்று இகழ, அதனால் வருந்தி,

      சிலர்கள் முதுஉடல் வினவு பொழுதினில் --- (காண வந்தவர்களில்) சிலர் முதுமை அடைந்த உடல் நிலையைப் பற்றி விசாரிக்கும் போது,

     நிறம் உடை நமனும் உயிர்கொள --- (கடல் போன்ற) கரிய நிறம் உடைய யமனும் உயிரைக் கொண்டு போக,

     செப்பு அற்றுப் பிணம் ஒப்பித்துப் பெயர் இட்டு --- பேச்சு அடங்க பிணம் என்று தீர்மானித்து, பிணம் என்று பெயர் வைத்து,

      பொன்பறை கொட்ட --- பொலிவுள்ள கணப் பறைகள் கொட்ட,

     செப்பிடு செனனம் இது என அழுது முகம் மிசை அறைய --- சொல்லப்படும் பிறப்பு இது தான் என்று கூறி அழுது, முகத்தில் அறைந்து கொண்டு,

     அணைபவர் எடு என --- அங்கு கூடியவர்கள் பிணத்தை எடுங்கள் என்று கூற,

     சில் திக்குக்கு இரை இட்டிட்டு --- சுடு காட்டில் சில பந்தங்களுள்ள நெருப்புக்கு இரையாக உடலைப் போட்டு,

     இப்படி நித்தத் துக்கம் எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ ---இவ்வண்ணம் அழியாத துக்க நிலையைப் பூண்டு, உடல் எடுத்து அடியேன் உழலுவது ஆகுமோ?


பொழிப்புரை

     குருநாராய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில், பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி,
அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, மெய்ஞ்ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டு அருளிய முதன்மையரான சிவபெருமான். இளம் பிறை நிலவைத் தரித்துள்ள சடையினை உடையவர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த அழகிய திருத்தோள்களை உடையவர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட முப்புரத்தவர்கள் கொட்டு அழியும்படிச் செய்து, திக்குக்களை ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவரே என்று, உமது பெருமையை எடுத்து ஒலிக்கும் முரசு வாத்தியத்துடன், சங்குகளும் எழுகடல் போலப் பேரொலி செய்ய, முழவு வாத்தியமும் சேர்ந்து முழக்கம் செய்ய, துட்டர்களாகிய அசுரர்களை வெட்டி அழித்து, குளிர்ந்த கடல் போல பல திக்குகளிலும் நிறைந்து பரக்கும்படி போருக்கு எழுந்து, கோழிக் கொடிகளும், ஒளி பொருந்திய குடைகளும் போர்க்களத்தில் நெருங்கி இருக்கவும், மலைகள் பொடிபடவும்,  நட்சத்திரங்கள் உதிர்ந்து விழவும், தேவரீரது குதிரையாகிய மயிலானது எட்டுப் பாம்புகளையும் அலகால் கொத்திப் பிடிக்க, எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும் குரல் எடுத்திட்டு ஓலமிட்டு, குமர குருபர குமர குருபர குமர குருபர என பல முறை துதித்து நிற்கும் தேவர்கள் தேவரீரைச் சூழ்ந்து, மலர்களை அழகிய திருவடிகளில் தூவி, தலை மேல் கைகளை வைத்துக் கும்பிட, மகிழ்ந்து ஓடிவரும் நரிகளும், சிறகுள்ள கழுகுகளும், காக்கை பலவும், கருடன்களும் கூத்தாடவும், இரத்தத்தைக் குடிக்க, உன் வீர வாளைச் செலுத்தி அழகிய தேவலோகத்தை மனத்தில் கருணையுடன் காப்பாற்றித் தந்த மயில் வீரரே!

         இரணியனுடைய தலையும் உடலும் கிழிய ஒப்பற்ற அந்தப் பொழுதில் தமது விரல் நகத்தைக் கொண்டு அறுத்து, அந்தி வேளையில் நடனத்தைப் புரிந்த தொழில் திறம் வாய்ந்தவரும், வலிய தமது திருவடியை வைத்து மாவலிச் சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து, சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப் போக இரு திருவடிகளால் உலகம் முழுமையும் அளக்கும்படி உயர்ந்தவரும், அழகிய திருமகளைத் தனது வலமார்பில் உடையவரும், தெற்குத் திசையில் இருந்த இராவணன் முதலிய அரக்கர்கள் மீது கோபம் கொண்டு, சிறந்த தசரதச் சக்கிரவர்த்திக்கு புத்திரராய் அவரித்து, வெற்றியும் மனோதிடத்தையும், கோதண்டம் என்னும் வில்லையும் கையில் ஏந்தி, இருபது கைகளைக் கொண்ட இராவணனுடைய பத்து தலைகளும் அறுந்து விழ, எட்டுத் திக்குகளையும் தேவர்களுக்குக் கொடுத்த பச்சை நிறம் கொண்ட அழகிய மேக வண்ணருமாகிய திருமாலுக்கு அமைந்த அழகிய மருகரே!

         பொட்டு அணிந்து, சந்திரனுக்கு ஒப்பான முகத்தை உடைய அழகியும், பச்சை நிறத்தை உடையவளும், சிலம்பணிந்து நடனம் புரிபவளும், அடியார்கள் உள்ளத்தில் மலர்கின்ற திருவடியை உடைய சித்தராகிய சிவபெருமானுக்கு சுவட்டுக் குறி வைத்தவளும், முத்து மாலை அணிந்த பொன் மலை போன்றவையுமான மார்பகங்கள் இணைந்துள்ள அழகிய அம்பிகையும், திருமகளையும், கலைமகளையும் தனது இரு கண்களாகக் கொண்டவளும், பல விதமான உருவத்தைக் கொண்டவளும், மிகப் பழையவளும், முறைமையாக வளையல் விற்ற செட்டியாகிய சொக்கநாதருக்கு சுகம் நிரம்ப தத்துவ அறிவு முறையில் தனது ஞான பாதத்தைத் வைத்துச் சூட்டியவளும், கற்பு உள்ளவளும், கடலில் எழுந்த அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசுபவளுமான உமாதேவியின் அருமையான புதல்வன் என வந்து, புகழ் நிறைந்த புலியூர் என்னும் சிதம்பரத் திருத்தலத்தில், செப்புப் போன்று அழகுடன் விளங்குகின்ற திரண்டுள்ள மார்பகங்களைக் கொண், அழகிய குறக்கிளி ஆகிய வள்ளியின் பொருட்டு புளகாங்கிதம் கொண்டு அவளுக்கு ஒப்புக் கொடுத்து வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து (கரு நிறம் கொண்ட) கூந்தல். சந்திரனைப் போன்ற முகம். வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி. மதிக்கத் தக்க கண்ணானது மீன், அழகிய அம்பு போன்றது. மூக்கு அழகிய குமிழம் பூவை ஒத்து நிற்கும். கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள காதுகள். குமுத மலர் போன்ற வாயிதழ். அமுதம் போன்ற சொற்கள். வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள். கழுத்து பாக்கு மரத்தை நிகர்க்கும் என வைக்கப்படும். அழகிய தோள்கள் பச்சை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும். தாமரை போன்ற கை. அழகிய நகங்களைக் கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகும். ஒத்து நிற்கும் மலை இரண்டு போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு குவிந்து விளங்குவதாய், சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம் போன்று விளங்கும் மார்பகங்கள் தம்மேல் உள்ள மாலைகள் வரிசை வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய, ஆலிலை போன்ற வயிற்று முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும். அழகிய கொப்பூழ் நீரில் உள்ள சுழிக்கு ஒப்பாகும். அழகிய கொடி போன்றதும், மன்மதனின் உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாத, உடுக்கை ஒத்த இடுப்பு மின்னலைப் போன்றது. (மின்னல் என்னும் சொல் மினல் என வந்தது) அருமை வாய்ந்த பெண்குறி கரும்பின் ரசம், தேன் கொண்ட கூடு, அழகிய கமலத்தில் பாம்பின் பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும். பட்டாடை பூண்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைக்கு ஒப்பாகும். பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும். ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று அழகிய புறங்கால் இருக்கும். (இத்தகைய அவயவங்கள் பொருந்திய) பொது மகளிர் கிளிகள் போலவும், மயில்கள் போலவும் இருந்தனர். தெருவில் நின்று (தமது) மார்பகங்களை விலை பேசி, கண்டவர் யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து வஞ்சித்து, பலவிதமான மயக்க மருந்துகளை உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து, கட்டிலில் அணைப்பதற்கு சம்மதித்து, பின்பு கலவியில் ஈடுபட்டு, நெற்றிப் பொட்டு அழிந்து போக, கண்கள் சுழல, மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்துபோக அனுபவித்து, பவளம் போன்ற வாயிதழ் தந்து, கையால் அணைத்து, திரண்ட மார்பகங்களைக் கையில் பற்றி, கடலினின்றும் அமுதத்தைக் கடைந்து எடுத்தது போலவும், கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சாறு போலவும், பலாப் பழத்தின் சுளை போலவும் மனம் உருக, மிகுந்த காம மயக்கில் சிக்கி, உடல் கெட்டு, உள்ளமும் நாணம் உற்று, துயரம் அடைந்து, தலைமயிர் கொக்கைப் போல வெளுத்து, காதும், ஒளிபொருந்திய கண்களும் தத்தம் தொழிலில் இருந்து மறைவு பட, மலமும் சலமும் ஒழுக, பல பேச்சுகளும் குழற, கைத்தடி கொண்டு தடுமாறி, பித்தமும் அதிகரித்து, தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து, கண்டவர்கள் சீ சீ என்று இகழ, அதனால் வருந்தி, காண வந்தவர்களில் சிலர் முதுமை அடைந்த உடல் நிலையைப் பற்றி விசாரிக்கும் போது, கரிய நிறம் உடைய இயமனும் உயிரைக் கொண்டு போக,  பேச்சு அடங்க பிணம் என்று தீர்மானித்து, பிணம் என்று பெயர் வைத்து, பொலிவுள்ள கணப் பறைகள் கொட்ட, சொல்லப்படும் பிறப்பு இது தான் என்று கூறி அழுது, முகத்தில் அறைந்து கொண்டு, அங்கு கூடியவர்கள் பிணத்தை எடுங்கள் என்று கூற, சுடு காட்டில் சில பந்தங்களுள்ள நெருப்புக்கு இரையாக உடலைப் போட்டு, இவ்வண்ணம் அழியாத துக்க நிலையைப் பூண்டு, உடல் எடுத்து அடியேன் உழலுவது ஆகுமோ?


விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார் காம வயப்பட்ட ஆடவர் தமது அறிவு மயக்கம் கொண்ட நிலையில், ஆடவரை மயக்கிப்பொருள் பறிக்க என்றே உள்ள பொதுமாதரின் அழகில் மனம் மயங்கி, அவரிடத்தே சேர்ந்து, உள்ள பொருளை எல்லாம் இழந்து, காம சுகத்தை அனுபவித்து, பின்னர் நோய்க்கு இடமாகி, வயது முதிர்ந்து, இறுதியில் எல்லோரும் இகழும்படி மரணத்தைத் தழுவும் இழிநிலையை அறிவுறுத்தினார்கள்.

இவர்களை வேடிக்கை மனிதர்கள் என்கின்றார் அமரகவி பாரதியார். மேலான மனிதப் பிறவியை அடைந்தும், மேலான வாழ்வை வாழ்ந்து, மேலான பொருளாகிய இறை உணர்வைப் பெற்று, இறைவன் திருவடியே கதி எனக் கிடந்து, திருவடி இன்பத்தை இம்மையிலேயே பெற்று, திருவடியில் கலந்துக் கொள்வதை அறியாத மனிதர்கள் வேடிக்கை மனிதர்களே.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனி அரசு ஆணை,
பொழுது எலாம் நினது பேரருளின்
     நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்று இவை அருளாய்!
     குறி குணம் ஏதும் இல்லதாய், அனைத்தாய்
குலவிடும் தனிப் பரம் பொருளே!

தேடிச் சோறு நிதம் தின்று - பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
     கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
     வீழ்வேன் என்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
     நேரே இன்று எனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
     மூளாது அழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயிர் ஆக்கி - எனக்கு
     ஏதும் கவலை அறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
     சந்தோஷம் கொண்டு இருக்கச் செய்வாய்.

இவ்வாறு பாரதியார் இறைவனிடம் வேண்டினார்.

மருவு கடல் முகில் அனைய குழல் ---

காமகர்க்குப் பெண்களின் கூந்தல் கடல் போலவும், மேகம் போலவும் கரு நிறம் கொண்டதாக இருக்கும். "நெறிதரு குழலை அறல் என்பர்கள்" என்றார் பட்டினத்தடிகள். அறல் என்பது கருமையான நுண்ணிய மணலைக் குறிக்கும்.

"கையும் எண்ணெயும் கலவாது ஒழியில், வெய்ய வதரும் பேனும் விளையத் தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள் முகில்" என்பதாக நினைத்து வாழும் மாந்தர்களைக் காட்டினார் பட்டினத்து அடிகள்.

"அல்அளகம் மையோ கருமென் மணலோ என்பாய், மாறி, ஐயோ! நரைப்பது அறிந்திலையோ?" என்கின்றார் வள்ளல்பெருமான்.
  
மதி வதனம் ---

முழுநிலவைப் போன்ற முகம் என்று கெண்களின் முகத்தைக் கூறுவார்கள். "அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய், ஏழ்துளைகள் எந்த மதிக்கு உண்டு? தனை எண்ணிலையே?" என்று அறிவுறுத்துகின்றார் வள்ளல் பெருமான்.
  
நுதல் சிலை பிறை அது ---

வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி. "நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்" என்றார் பட்டினத்தடிகள். "பொய் ஓதி, ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய், உள் எலும்பு ஆம் வெண்பிறை என்றே அதனை விண்டிலையே, கண் புருவம்
வில் என்றாய், வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால் சொல் என்றால் சொல்லத் துணியாயே" என்கின்றார் வள்ளல் பெருமான்.

எணும் விழி மச்ச பொன் கணை ---

எண்ணும் என்னும் சொல் எனக் குறுகி வந்தது

பெண்களின் கண்ணானது மீன் போன்றும், அம்பு போன்றும் உள்ளது என வருணிக்கப்படும். 

"தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று காமுகர் சொல்வதாகப் பட்டினத்தடிகள் பாடினார்.

"வல் அம்பில் கண் குவளை என்றாய், கண்ணீர் உலர்ந்துமிக
உள்குழியும் போதில் உரைப்பாயே?" என்கின்றார் வள்ளல்பெருமான்.

முக்குப் பொன் குமிழ் ஒப்ப ---

மூக்கு என்னும் சொல் முக்கு என வந்தது.

மூக்கு அழகிய குமிழம் பூவை ஒத்தது என எண்ணி மயங்குவார்கள் காமுகர்கள்.

"நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும் கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்" காமுகர் இருப்பதாக அறிவுறுத்துகின்றார் பட்டினத்தடிகள்.

"கள் குலவு மெய்க் குமிழே நாசி என வெஃகினையால், வெண்மலத்தால் உய்க்குமிழும் சீந்தல் உளதேயோ?" என்கின்றார் வள்ளல்பெருமான்.

கத்தரி ஒத்திட்டச் செவி ---

கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள காதுகள் என்று இந்தப்பாடலில் தான் அடிகளார் சற்று வித்தியாசமாக வருணிக்கின்றார். "உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்" என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"எய்த்தல் இலா வள்ளை என்றாய் வார் காது, வள்ளை தனக்கு உள் புழையோடு உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?" என வினவுகின்றார் வள்ளல் பெருமான்.

குமுத மலர் இதழ் ---

பெண்களின் வாயிதழானது குமுத மலர் போன்று இருக்கும் என்பர் காமுகர்.

"வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்" காமுகர் எண்ணுவதாகப் பட்டினத்தடிகள் பாடுகின்றார்.

"நல்லதொரு கொவ்வை என இதழைக் கொள்கின்றாய், மேல் குழம்பும் செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே?" என வினவுகின்றார் வள்ளல்பெருமான்.
  
அமுத மொழி ---

அமுதம் போன்ற சொற்கள். "கண்டு உண்ட சொல்லியர்" என்பார் நமது அடிகளார். "அமுதம் ஊறு சொல்" என்றார் அருணைத் திருப்புகழில்.

நிரை தரளம் எனும் நகை ---

வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள். "அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்" என்கின்றார் பட்டினத்து அடிகள். "வெள்ளை நகை முல்லை என்றாய், முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?" என்கின்றார் வள்ளல்பெருமான்.
  
மிடறு கமுகு என வைத்து --- 

கழுத்து பாக்கு மரத்தை நிகர்க்கும் எனக் காமுகர் பேசுவர். "வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்" என்று இகழ்கின்றார் பட்டினத்து அடிகள்.


பொன் புயம் பச்சைத் தட்டையொடு ஒப்பிட்டு ---

அழகிய தோள்கள் பச்சை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும். "விண்ட வற்றைத் தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய், அவ்வேய்க்கு மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே?" என்கின்றார் வள்ளல்பெருமான்.

கமலக் கை ---

தாமரை போன்ற கை. "நீட்டவும், முடங்கவும், நெடும் பொருள் வாங்கவும், ஊட்டவும், பிசையவும் உதவி, இங்கு இயற்றும் அம் கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்" என்கின்றார் பட்டினத்து அடிகள். "நாள் ஒன்றும் செங்காந்தள் அம் கை எனச் செப்புகின்றாய், அம்மலர்க்குப் பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே?" என்று வினவுகின்றார் வள்ளல்பெருமான்.

துகிர் வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் ---

அழகிய நகங்களைக் கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகச் சொல்லப்படும்.

இகலிய குவடும் இணை என வட்டத் துத்தி முகிழ்ப்ப ---

இணையாக நிற்கும் இரண்டு மலைகள் போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு குவிந்து விளங்குவதாய் முலைகள் அமைந்து இருக்கும் என்கின்றனர் காமுகர்.

"சிலந்தி போலக் கிளைத்து, முன் எழுந்து, திரண்டு, விம்மி, சீ பாய்ந்து ஏறி, உகிரால் கீற உலர்ந்து உள் உருகி, நகுவார்க்கு இடமாய் நான்று, வற்றும் முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும் குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்", என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"மண்வாழும் ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய், மாதர்முலை ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே? சீரான வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய், மாதர்முலை வெற்பு என்றால் ஏற விரைந்தனையே" என்றும், "மங்காத  செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்பு இங்கு எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே? செவ்வை பெறும் செப்பு என்றனை முலையை, சீசீ சிலந்தி அது துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? வப்பு இறுகச் சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த் துவண்டு வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே? தாழ்ந்த அவை மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப் புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே?  திண்கட்டும் அந் நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும் செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே?" என்கின்றார் வள்ளல் பெருமான்.


பழுமர இலை வயிறு மயிர் அல் பத்திக்கு இணை ---

பெண்களின் வயிறு ஆலிலை போன்று இருக்கும். ஆலிலை பொன்ற வயிற்றிலே இருக்கும் முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும்.

"மலமும், சலமும், வழும்பும், திரையும் அலையும் வயிற்றை ஆல் இலை என்றும்" காமுகர் கூறித் திரிகின்றார்களே என்று வருந்துகின்றார் பட்டினத்து அடிகள்.

"மேடு அதனை ஆல் இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும் தோல் இலையே ஆல் இலைக்கு, ன் சொல்லுதியே?" என்று வினவுகின்றார் வள்ளல்பெருமான்.


பொற்புத் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து ---

அழகிய தொப்புளானது பாய்ந்தோடும் நீரில் உள்ள சுழி போல் இருக்கும்.


பொன்கொடி மதனன் உரு துடி இடையும் மினல் ---

மின்னல் என்னும் சொல் மினல் என வந்தது.

பெண்களின் இடையானது, அழகிய கொடி போன்றும், மன்மதனின் உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாததாகவும், உடுக்கையை  ஒத்தும், மின்னலைப் போன்றும் விளங்கும்.

"நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடி பிடி என்று சொல்லித் துதிப்பதாக" இரங்குகின்றார் பட்டினத்து அடிகள்.

"பொற்பு ஒன்றும் சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச் சிங்கம் எனில் காணத் திரும்பினையே"  "நூல் இடைதான் உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக் கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே? என்கின்றார் வள்ளல்பெருமான்.

அரிய கடி தடம் அமிர்த கழை ரசம் மட்டுப் பொன் கமலத்தில் சக்கிரி துத்திப் பைக்கு ஒருமித்து ---

அருமை வாய்ந்த பெண்குறியானது கரும்பின் ரசம் போல் இனிக்கும். தேன் கூடு போன்று இருக்கும். அழகிய தாமரை மலர் போன்ற வயிற்றில், பாம்பின் படம் போன்று உள்ள நிதம்பத் தலம்.

"தூமைக் கட வழி, தொளை பெறு வாயில்,
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால் காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடை கழி வாயில்,
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா"

என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"சிறு பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய், மாதர் அல்குல்
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே, - ஆம்பண்டைக்
கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ, மாதர் அல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே"

என்றும்,

.....       .....       .....       .....       "விண்டுஓங்கும்
ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை, சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே, தாழ்ங்கொடிஞ்சித்

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை, அன்றுசிறு
நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே,- ஆராப்புன்

நீர் வீழியை ஆசை நிலை என்றாய், வன்மலம்தான்
சோர் வழியை என்என்று சொல்லுதியே, - சார்முடைதான்

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப் புண் என்று விடுத்திலையே, - ஊறு ஆக்கி          

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி, மற்று அதன்மேல்
சீலை இடக் கண்டும் தெரிந்திலையே, - மேலையுறு

மேநரகம் என்றால் விதிர்ப்புறு நீ, மாதர் அல்குல்
கோ நரகம் என்றால் குலைந்திலையே, - ஊனம் இதைக்

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே, - அண்டாது

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய், மற்று அதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே"

என்றும் அறிவுறுத்துகின்றார் வள்ளல்பெருமான்.


பட்டு உடை மருவு தொடை இணை கதலி ---

பட்டாடை பூண்டு மறைக்கப்பட்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைத் தண்டுக்கு ஒப்பாகும்.  ஆனால், பட்டினத்து அடிகள், "தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை இசையும் கதலித் தண்டு என இயம்பியும்" என்கின்றார்.

"மாதர் அவர்தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய், தண்டு ஊன்றி வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே?" என்று ஐயுற்றுக் கேட்கின்றார் வள்ளல்பெருமான்.


பரடுகொள் கணையும் முழவு என ---

பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும்.

"வெள் எலும்பாலே மேவிய கணைக்கால் துள்ளும் வரால் எனச் சொல்லித் திரிந்தும்" என்கின்றார் பட்டினத்து அடிகள்.

கமடம் எழுதிய வட்டப் புத்தகம் ஒத்து சரணத்தில் பின்புறம் ---

ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று அழகிய புறங்கால் இருக்கும்.

மெத்துத் தத்தைகள் மயில் போலே ---

இத்தகைய அவயவங்கள் பொருந்திய பொதுமகளிர் கிளிகள் போலக் கொஞ்சிப் பேசுவர். மயிலைப் போல ஒயிலாக நடப்பர்.

தெருவில் முலைவிலை உரைசெய்து..... பொருள் பற்றி ---

தெருவில் நின்று தமது மார்பகங்களை விலை பேசித் திரிபவர்கள். கண்டவர்கள் யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து வஞ்சித்து,
அவரைத் தமது இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து, பலவிதமான சொக்கு மருந்துகளை உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து கொள்வது பொதுமகளிரின் இயல்பு.

கட்டில் அணைக்க ஒப்பிப் புணர்.... கைப்பட  ---

மயக்கிப் பேசிப் பொருளைக் கவர்ந்த பின்னர், கட்டிலில் அணைப்பதற்கு சம்மதித்து, பின்பு கலவியில் ஈடுபட்டு, உடம்பு வியர்த்து, அந்த விழர்வையினால் நெற்றியிலை இட்டுள்ள பொட்டு அழிந்து போக, காம இனபத்தால் கண்கள் சுழல,

அணை குழல் இடை கொள் துகில் பட தித்தி ---

மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்து போக அனுபவித்து,

துப்பு இதழ் வைத்துக் கை கொடு கட்டிக் குத்து முலைக்குள் ---

கொண்டு என்னும் சொல் கொடு என வந்தது.  
   
பவளம் போன்ற வாயிதழைச் சுவைக்கத் தந்து, இரு கையால் அணைத்து, திரண்ட மார்பகங்களைக் கையில் பற்றி,

திரையில் அமுது என ---  

திரை - அலை. அலை என்பது இங்கே கடலைக் குறித்து நின்றது. கடலினின்று கடைந்து எடுத்த அமுதம் போல காமசுகம் இருக்கும்.

கழையில் ரசம் என ---

கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சாறு போலவும் இனிக்கும்.

பலவில் சுளை என உருக ---

பலாப் பழத்தின் சுளை போலவும் இனிமைதருவதாக இருப்பதால், மனமானது உருகி தன்வசம் அழியும்.

உயர் மயல் சிக்குப்பட்டு உடல் கெட்டு ---

மிகுந்த காம மயக்கில் சிக்கி, உடல் கெட்டு அழியும்.

சித்தமும் வெட்கித் துக்கமும் உற்று ---

இப்படி சிறிது சிறிதாக அழிவதை எண்ணி உள்ளமும் நாணத்தை அடையும். துயரம் மிகும்.

கொக்கு என நரை மேவி.... இப்படி நித்தத் துக்கம் எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ ---

முதுமை வந்தால், தலைமயிர் கொக்கைப் போல வெளுத்துவிடும். காது கேட்கும் தன்மையை இழக்கும். கண் ஒளி குன்றும். மலமும் சலமும் கட்டுப்படுத்த முடியாமல் ஒழுகும். பேச்சுக் குழறும். துன்பத்தைத் தரும் பித்தம் மிகுந்து, அதனால் உடம்பு வருத்தமுறும். பிறர் உதவியின்றி எந்தச் செயலும் நடவாது. கண்டவர்கள் சீ சீ என்று இகழ்வார்கள். அதனால் மனமானது வருத்தமுறும். இறுதியில் இயமன் வந்து உடம்பில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு போவான். உறவினரும், ஊராரும் அழுது, பிணத்தைக் கொண்டுபோய்ச் சுடலையில் இட்டு எரிப்பார்கள். இப்படியே பல பிறவிகள் கழிந்தன. இனியும் இப்படியே துக்க உடலைச் சுமந்து அலைவது தகாது என்று முருகப் பெருமானின் அருளைவேண்டுகின்றார் அடிகளார்.


மூப்பு உற்று, செவி கேட்பு அற்று, பெரு
     மூச்சு உற்று, செயல் ...... தடுமாறி,
மூர்க்கச் சொல் குரல் காட்டி, கக்கிட
     மூக்குக்கு உள் சளி ...... இளையோடும்

கோப்புக் கட்டி, இனாப் பிச்சு எற்றிடு
     கூட்டில் புக்கு, உயிர் ...... அலையாமுன்,
கூற்றத் தத்துவம் நீக்கி, பொற்கழல்
     கூட்டி, சற்று அருள் ...... புரிவாயே!              --- திருப்புகழ்.

முனைஅழிந்தது, மேட்டி குலைந்தது,
     வயது சென்றது, வாய்ப்பல் உதிர்ந்தது,         
     முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது,      ப்ரபையான
முகம்இழிந்தது, நோக்கும் இருண்டது,
     இருமல் வந்தது, தூக்கம் ஒழிந்தது,
     மொழி தளர்ந்தது, நாக்கு விழுந்தது, அறிவேபோய்

நினைவு அயர்ந்தது, நீட்டல் முடங்கலும்
     அவச மும்பல ஏக்கமும் உந்தின,
     நெறிமறந்தது, மூப்பு முதிர்ந்தது,        பலநோயும்
நிலுவை கொண்டது, பாய்க்கிடை கண்டது,
     சல மலங்களின் நாற்றம் எழுந்தது
     நிமிஷம் இங்குஇனி ஆச்சுதுஎன் முன்புஇனிது ....அருள்வாயே.  --- திருப்புகழ்.


குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை கொற்றப் பொன்பதம் வைத்திட்டு, அற்புதம் எற்றிப் பொன்பொருள் இட்டுக் கைகொளும் முதல்வர் ---

பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்கப் பெரும்பொருளோடு வந், திருவாதவூரரை, திருப்பெருந்துறையிலே குருநாதராக எழுந்தருளி ஆட்கொண்டு, அவருடைய தலையில் திருவடியை வைத்து, கணக்கிலாத் திருக்கோலத்தை அவருக்குக் காட்டி அருளிய அருட்செயலை இந்தப்பாடலில் விளக்குகின்றார் அடிகளார்.

பாண்டிவள நாட்டின்கண் வாயு தேவன் வழிபட்ட தன்மையால் திருவாதவூர் என்னும் பெயர் பெற்ற திருத்தலத்தில் மானமங்கலத்தார் மரபிலே அமாத்தியர் குலத்து சிவகணத் தலைவர் ஒருவர் வந்து உதித்தனர். அவர் பெயர் “வாதவூரர்”
என்பர். அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதி உணர்ந்தார். அவர் வெற்றியைப் பாண்டியன் கேட்டு, அவரை வரவழைத்து, அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப் பட்டப் பெயர் சூட்டி மந்திரித் தொழிலில் இருத்தினன். அவர் கலை வன்மையாலும் சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர் தலைவனாயிருந்து பாவக்கடலினின்றும் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை நாடி இருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதிகளை அளித்து அனுப்பினன். பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலவாய் சென்று மீனாட்சியம்மையையும் சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு, பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய வேண்டுமென்று வணங்கி, வேதியர் ஒருவர் எதிர்ப்பட்டு அளித்த திருநீற்றை அணிந்துகொண்டு, நற்குறி என்று வந்து, சேனைகள் சூழப்புறப்பட்டு திருப்பெருந்துறையை அடைந்தார். அத்தலத்தைச் சாரும் முன்னரே உடம்பும் நாவும் நெஞ்சும் ஒரு வழிப்பட்டு பேரன்பு மிகுதலால் கண்ணீர் மல்கிக் கசிந்துருகி சிரமிசைக் கரங்குவித்து மயிர் சிலிர்த்து அனலில் பட்ட மெழுகென உருகினார்.

பண்டைத் தவப்பயன் கைகூடப்பெற்ற வாதவூரர் அதிசயமுற்று, “இத்தலத்தை அணுகுமுன்னரே பேரன்பு முதிர்ந்தது. சிவக்ஷேத்திரங்களில் இதனை ஒத்தது வேறு இல்லை; இங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவஞ் செய்தோமோ?" என்று தம்முள் நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்; நானே அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக விடுத்தார்.

பின்னர் திருவாதவூரர் பொய்கையில் நீராடித் திருநீறு தரித்து சிவபெருமானை வணங்குதற்குத் தனியே ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்தமரத்தின் நிழலில் தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்ன மாணவர் குழாம் சூழ குருவடிவம் தாங்கி சிவபெருமான் வீற்றிருந்தனர். அத் தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர் செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை தோயப் பன்முறை வணங்கி விண்மாரி என்ன கண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர். தன்வசமிழந்து நின்ற மெய்யடியாரைக் கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கம் செய்து அருகில் அழைத்து முறைப்படி தீட்சை முதலியன செய்து ஐந்தெழுத்தை உபதேசித்து நல்லருள் பாலித்தனர். திருவாதவூரர் மணிவாசகர் ஆனார்.

                                                      சீரார் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்ணரிய இன்னருளால்
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்’

என்றும்,

 உய்யுநெறி காட்டுவித்திட்டு, ங்காரத்து உட்பொருளை
ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே,

என்றும் கூறியவாற்றால் இதனை அறியலாம். அடிகளை ஆட்கொண்ட பின்பு இறைவன், ‘நீ தில்லைக்கு வருக’ என்று சொல்லி அடியார்களுடன் மறைந்தருளினான். இனி, இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் தம்மை மறந்து அவனையே நினைக்கும் இயல்பினராயினார்; தமக்கென ஒரு செயலின்றி எல்லாம் அவன் செயலே என்று இருந்தார்; குதிரை வாங்குவதற்கென்று கொண்டுவந்த பொருள் எல்லாவற்றையும் இறைவன் திருப்பணிக்கும், இறைவன் அடியார்க்கும் செலவிட்டார்.

         அன்றே யென்றன் ஆவியும்
         உடலும் உடைமை யெல்லாமும்,
         குன்றே யனையாய் எனையாட்
         கொண்ட போதே கொண்டிலையோ!’

என்பதனால், எல்லாம் இறைவனது பொருளே. ஆதலால், அவனது திருப்பணிக்குச் செலவு செய்தல் பொருத்தம் உடையதே!

அன்னவர் ஒல்கி மெல்ல அஞ்சி, அஞ்சலியில் செல்லப்
பன்முறை முறுவல் கூர்ந்து, பாவனை செய்து, பண்பில்
தன்அடி சூட்டி, நாமம் சாத்தி, ஆசாரம் பூட்டிச்
சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்.
                                                      --- திருவிளையாடல் புராணம் (புலியூர் நம்பி)

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர், வழிவழி அடியவர்,
     திருக் குருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக் குழந்தையும், என அவர் வழிபடு
     குருக்களின் திறம் என வரு பெரியவ!
     திருப்பரங்கிரி தனில்உறை சரவண ...... பெருமாளே.
                                                         --- (அருக்கு மங்கையர்) திருப்புகழ்.

கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு அணை நக்கர்க்கு அற்புத குமரன் என ---

இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள் கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவர் முருகப் பெருமான்.

திரிபுரம் எரித்த வரலாறு

தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அன்னர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில், கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயர வேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறு ஒருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரமீந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளி மதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையினைக் காலம் தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்று உன்னி தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தியண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

நந்தியெம்பெருமான் சந்நிதியுட் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதிற் காலூன்ற, அதன் அச்சு முறிந்தது. 
 
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாக்கும் சக்தியற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போலாக சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியமிசைக்கவும், கறைமிடற்றண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.

அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லிற் பணியரசாகிய நாணையேற்றினர். (அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கனுப்பி வெள்ளிமாமலைக் கெழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்கு,அரி கோல்,வாசுகி நாண்,கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.    ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
                                         ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.  ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---  சுந்தரர்.

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.             --- மணிவாசகர்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.                 --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.


சிரமொடு இரணியன் உடல் கிழிய, ஒருபொழுதில் உகிர் கொடு அரி என நடமிடு சிற்பர் ---

கொண்டு என்னும் சொல் கொடு எனக் குறுகி வந்தது.

இரணியனுடைய தலையும் உடலும் கிழிய ஒப்பற்ற அந்தப் பொழுதில் தமது நகத்தைக் கொண்டு அறுத்து, அந்தி வேளையில் நரசிம்ம அவதாரம் புரிந்த தொழில் திறம் வாய்ந்தவர்.


கனகன் ஆகம் கீண்ட வரலாறு

பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர்.  காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்.  இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவ வலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டனன். மனம் வெருண்டனன்.  பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டனன். அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.

தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன்.  இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன் சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன். இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கருவளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன்.  நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர்.  பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள்.  மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.

பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினன். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண்கிலேம்" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.  எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன். கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன். காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.  திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சியிருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்க்குதும்" என்று அருளிச் செய்தனர்.

பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியானபரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும் தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்திய போது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன்.  சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே, பிழைபடக் கூறலுற்றனை. இன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.

ஓதப் புக்கவன் உந்தைபேர் உரைஎன லோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
மூதக்கோய், இது நல்தவம் அன்று என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே, அந்தோ இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.

கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ என்றான்.

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐய, இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்.

ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள்.  இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம்.  இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர்.  பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது.  எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.

ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே, உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.

இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே, நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார்.  இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.

காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய.

"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய இரணியாய நம என்றே கூறுகின்றனர்".

"யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன்.  அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து.  நெஞ்சார நினை" என்றார்.

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர்.  பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.

நிருதன் வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் என்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான்.  அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர்.  பாம்புகளின் பற்கள் ஒடிந்து. ணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதா' என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன்.  அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின.  வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.

ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, "அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்" என்றான்.  பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் 'ஓம் நமோ நாராயணாய' என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார்.  பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள்.  ஞானக்குருந்தர், "அம்மா இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், "சாகர சயனா" என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி ஓம் நமோ நாராயணாய என்ரு சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். மதிநலம் படைத்த அமைச்சர்களே, என் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன்.  இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன்.  நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.  அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் கொட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான் என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல் என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா! என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உளனோ? உரை" என்று கேட்டான்.

சாணிலும் உளன், ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார், நன்றுஎனக் கனகன் சொன்னான்.

பிரகலாதர், "தாதாய், அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதி" என்று அருளிச் செய்தார்.

இரணியன் சீற்றமிக்கு, "பேதாய், நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான்.  பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.

என்உயிர் நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன், பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்.

கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான்.  அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.

அதுகண்ட கனகன் அஞ்சாது வாலினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே, இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய், உன் கண் காண இந்த நரசிங்கத்தையும் உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்" என்றான்.

கேள்இது நீயும்காணக் கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால் வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்.

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்க மூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய் உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன்.  என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர். பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார். நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.


உரியதவ நெறியில் நம நாராயணாய என,
     ஒருமதலை மொழி அளவில் ஓராத கோபமுடன்,
     உனது இறைவன் எதனில்உளன் ஓதாய்,  அடா, எனுமுன் ...... உறுதூணில்
உரம் உடைய அரி வடிவதாய், மோதி வீழ, விரல்
     உகிர்புதைய, இரணியனை மார் பீறி, வாகைபுனை
     உவணபதி, நெடியவனும், வேதாவும், நான்மறையும் ...... உயர்வாக

வரி அளிகள் இசைமுரல, வாகான தோகை இள
     மயில் இடையில் நடனம்இட, ஆகாசம் ஊடுஉருவ
     வளர் கமுகின் விரிகுலைகள் பூண்ஆரம் ஆகியிட ......மதில்சூழும்
மருது அரசர் படைவிடுதி வீடாக நாடி,மிக
     மழவிடையின் மிசை இவரும் சோமீசர் கோயில்தனில்
     மகிழ்வுபெற உறை முருகனே! பேணு வானவர்கள்   ......பெருமாளே.
                                                               --- (கரியகுழல்) திருப்புகழ்.

கனகன் அங்கையினால் அறை தூண் இடை
     மனித சிங்கம்அது ஆய், வரை பார் திசை
          கடல் கலங்கிடவே பொருதே, கிர் ...... முனையாலே
கதற வென்று, உடல் கீணவன் ஆருயிர்
     உதிரமும் சிதறாத அமுதாய் உணு,
          கமல உந்தியன் ஆகிய மால் திரு ...... மருகோனே!
                                                                   --- (மனமெனும்) திருப்புகழ்.

அருமறை நூல் ஓதும் வேதியன்,
     இரணிய ரூபா நமோ என,
          அரிஅரி நாராயணா என ...... ஒருபாலன்,
அவன் எவன் ஆதாரம் ஏது என,
     இதன் உளனோ ஓது நீ என,
          அகிலமும் வாழ்வான நாயகன் ...... என, ஏகி

ஒருகணை தூணோடு மோதிட,
     விசைகொடு தோள் போறு, வாள் அரி,
          உகிர்கொடு வாரா நிசாசரன் ...... உடல்பீறும்
உலகு ஒரு தாள் ஆன மாமனும்,
     உமை ஒரு கூறு ஆன தாதையும்,
          உரைதரு தேவா! சுர அதிபர் ...... பெருமாளே.
                                                          --- (இருகுழை மீதோடி) திருப்புகழ்.


திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டு, இருபதமும் உலகு அடைய நெடியவர் ---

வலிய தமது திருவடியை வைத்து (மகாபலிச்) சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து, சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப் போக, இரு திருவடிகளால் உலகம் முழுமையும் (அளக்கும்படி) உயர்ந்தவர்.

திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது? ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

ஒருவனுக்கு இரத்தலினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.  தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.  இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார்.  மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

அகில புவனமும் அளவிடு குறியவன்,
    அளவு நெடியவன், ளவிட அரியவன் ...... மருகோனே!
                                                        --- (குமரகுருபர குணதர) திருப்புகழ்.

துகைத்து இ உலகை ஒர் அடிக்குள் அளவிடு
     துலக்க அரி திரு ...... மருகோனே!      --- (முடித்த குழலினர்) திருப்புகழ்.

கருத்துரை

முருகா! ஊன உடம்பை எடுத்து உழலாமல், ஞான நிலையை அருள்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...