பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நீரும்நிலம் அண்டாத (பொது)


முருகா! 

சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.



தானதன தந்தான தானதன தந்தான

     தானதன தந்தான ...... தனதான


நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி

     நீளமக லஞ்சோதி ...... வடிவான


நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல

     நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்


சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத

     சோதிமரு வும்பூமி ...... யவையூடே


தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட

     சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே


வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்

     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல


வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட

     மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே


ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு

     மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா


ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத

     லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி,

     நீளம் அகலம் சோதி ...... வடிவான


நேசம் மலரும் பூவை, மாது இன் மணமும் போல,

     நேர்மருவி, உண்காதல் ...... உடன்மேவி,


சூரியன் உடன் சோமன் நீழல் இவை அண்டாத,

     சோதி மருவும் பூமி ...... அவை ஊடே,


தோகை மயிலின் பாகன் ஆம் என மகிழ்ந்து ஆட,

     சோதி அயிலும் தாரும் ...... அருள்வாயே.


வாரி அகிலம் கூச, ஆயிர பணம் சேடன்

     வாய்விட ஒட, எண் பாலும் ...... உடுபோல,


வார் மணி உதிர்ந்து ஓடவே, கவின் நிறைந்து ஆட,

     மாமயில் விடும் சேவல் ...... கொடியோனே!


ஆரியன், அவன் தாதை, தேடி இனமும் பாடும்

     ஆடல் அருணஞ் சோதி ...... அருள்பாலா!


ஆனை முகவன் தேடி ஓடியெ, அணங்கு ஆதல்

     ஆசை மருவும் சோதி ...... பெருமாளே.

பதவுரை

வாரி அகிலம் கூச --- கடல்கள் எல்லாம் அஞ்சவும்,

ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒட --- ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும்,

எண்பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே … அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், (ஏ – அசை)

கவின் நிறைந்து ஆட ---  அழகு நிறைந்த நடனம் செய்யும்படி,

மாமயில் விடும் --- பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற,

சேவல் கொடியோனே ---  சேவலங்கொடியை உடையவரே!

ஆரியன், அவன் தாதை தேடி இனமும் பாடும் --- பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற

ஆடல் அருணம் சோதி அருள்பாலா --- ஆடலையுடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனை முகவன் தேடி ஓடியே --- ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும்,

அணங்கு ஆதல் ஆசை மருவும் சோதி பெருமாளே --- வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி ... மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல,

நீளம் அகலம் சோதி வடிவான ... நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும்,

நேச மலரும் பூவை ---  அன்பு விரிகின்ற இதயமலரை

மாது இன் மணமும் போல நேர் மருவி --- அழகும் இனிய வாசனையும் போல கலந்து

உண் காதலுடன் மேவி --- உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து,

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத --- சூரியனுடைய வெயில், சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும்,

சோதி மருவும் பூமி அவை ஊடே --- ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே,

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட --- தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய

சோதி அயிலும் தாரும் அருள்வாயே --- ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை

கடல்கள் எல்லாம் அஞ்சவும், ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும், அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், அழகு நிறைந்த நடனம் செய்யும்படி, பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற, சேவலங்கொடியை உடையவரே!

பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற ஆடலை உடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும், வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல, நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும், அன்பு விரிகின்ற இதயமலரை, அழகும் இனிய வாசனையும் போல கலந்து, உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து, சூரியனுடைய வெயில் சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும், ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே, தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய, ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.


விரிவுரை

நீரும் நிலம் அண்டாத தாமரை ---

தாமரை மண்ணில் தண்ணீரில் தொடர்புடன் முளைப்பது. இங்கே தண்ணீரும் மண்ணும் சம்பந்தப்படாத தாமரைக் கொடி என்பது மூலாதாரத்தில் இருந்து முளைத்து எழுகின்ற சுழுமுனையைக் குறிக்கின்றது. அது தாமரைக் கொடிபோல் வளைந்து வளைந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

“பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்று உண்டு,

தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது,

ஊரில்லை காணும், ஒளியது ஒன்றுண்டு,

கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.”. – திருமந்திரம்


நீளம் அகலம் சோதி வடிவான நேச மலரும் பூ ---

பூ - இதயமலர். இதய புண்டரீக மலர். இதயக் கமலம். அப் புண்டரீகமலர் மீது ஒரு மின்னொளி வடிவாக இடையறாது ஒரு பரம்பொருள் திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றது.


மாதின் மணமும் போல் நேர் மருவி உண்காதல் உடன் மேவி ---

மாது - அழகு. அழகும் இனிய மணமும்போல் அப் பரம்பொருளைச் சார்ந்து அருட்காதலுடன் இதனுடன் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும்.

"அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே" என்ற சிவஞானபோத எட்டாவது சூத்திரத்தின்படி, அதனுடன் அனன்னியம் பெற்று திருவடியில் ஆன்மா தங்கி நிற்கும். அவ்வாறு நின்ற ஆன்மா, பாசநீக்கம் பெற்று பரமானந்தம் எய்தி, பாவனாதீத நிலையில் நிற்கும்.

அவனே தானே ஆகிய அந்நெறி

ஏகன்ஆகி இறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.. ---  சிவஞானபோதம் 9-ஆம் சூத்திரம்.


சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவையூடே ---

அவை - சபை.  அது சகஸ்ராரம் ஆகிய பேரம்பலம்.

இதயாகாசம் - சிற்றம்பலம்.

சகஸ்ராரம் - பேரம்பலம்.

சகஸ்ராரம் என்பதைத் திருக்கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உணர்த்துகின்றது.

சகஸ்ராரமாகிய மேலைப் பெருவெளியில் சூரியசந்திரர்களுடைய வெய்யிலும் நிலவும் இல்லை. ஆனால், அங்கு இடையறாத ஒரு பேரொளி விளங்கிக்கொண்டு இருக்கும். இடையறாத சிவயோக சாதனை செய்து சகஸ்ரார சித்தி பெற்றோர்களே அதனை அறிவார்கள்.

"வான்இந்து கதிர் இலாத நாடு அண்டி, நமசிவாய வரை ஏறி" என்று பழநித் திருப்புகழில் இதே கருத்தை அடிகளார் கூறி இருக்கின்றார். “இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத பொன் இடம்” என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார். 


தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்தாட ---

தோகைமயில் - தோகைமயில் போன்ற உமையம்மையார். உவமை ஆகுபெயர்.

இனி, மயிலாக இருந்து சிவபெருமானைப் பூசித்தவர் என்றும் பொருள்படும்.  அம்பிகை மயில் உருவுடன் வழிபட்ட திருத்தலம் திருமயிலாப்பூர்.

உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட நடராஜ மூர்த்தியைப் போல் அடியேனும் நடனம் புரிந்து இன்புற வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆடுவது மகிழ்ச்சியினால் விளையும் மெய்ப்பாடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெற்ற ஆன்மா இன்ப நடம் புரியும்.


சோதி அயிலும் தாரும் அருள்வாயே ---

அயில் - கூர்மை. அது வேலாயுதத்தைக் குறிக்கின்றது. வேலை எனக்கு அருள் புரியும் என்பதன் உட்பொருள், வேல் பரபூரண ஞானமாதலின், ஞானத்தை அருள்புரியும் என்பதாகும். காதல் கொண்ட தலைவி காதலனுடைய மலர்மாலையை விரும்புவாள். இங்கே அருட்காதல் கொண்ட பக்குவம் உள்ள ஆன்மா முருகவேளுடைய மலர்மாலையை விரும்புகின்றது.

மால்கொண்ட பேதைக்குஉன்    மணநாறும்

மார்தங்கு தாரைத்தந்து அருள்வாயே.      ---நீலங்கொள் திருப்புகழ்.


வாரி அகிலம் கூச ---

மயில் ஆடுகின்ற போது எழு கடல்களும் அஞ்சின. அகிலம் - எல்லாம்.  

“குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்

திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே.”

என்ற கந்தர் அலங்காரப் பாடலினால், மயிலின் பெருமையை அறிக.


ஆயிரம் பணம் சேடன் வாய்விட ஓட ---

ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் மயிலின் நடனத்தைக் கண்டு அஞ்சி, தனது வாய்களைப் பிளக்கவும், பயந்து ஓடவும் செய்தான். விடவும் ஓடவும் என விரிக்க. 

“செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை

   சிந்தப் புராரி அமிர்தம்

திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்

   தீ விஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல

   சங்கார கோர நயனத்

தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு

   சண்டப் பரசண்ட மயிலாம்”. -– மயில் விருத்தம்.

எண்பாலும் வார்மணி உதிர்ந்து ஓடவே ---

ஆதிசேடனுடைய பணாமகுடங்களில் உள்ள நீண்ட நாகரத்தின மணிகள் உதிர்ந்து, எட்டுத்திக்குகளிலும் சிந்தி ஓடின.  மணிகள் உதிர்கின்ற அளவில் அஞ்சி சேடன் ஓடினான் என்று குறிப்பிடுகின்றார்.


கவின் நிறைந்த மாமயில் விடும் சேவற்கொடியோனே ---

மயிலை ஆடவிடுகின்ற சேவலனே என்று பொருள். மயில் என்ற இடத்தில், இரண்டாம் வேற்றுமை தொக்கி நிற்கின்றது. எனவே, "மயில் விடும்" என்பதற்கு "மயிலை விடும்" என்று பொருள் செய்யப்பெற்றது.

உலகம் இன்புறும் பொருட்டு, நாத தத்துவத்தினின்றும் சுத்தமாயையை கலக்கி, அதினின்றும் ஏனைய தத்துவங்களை இறைவன் உண்டாக்குகின்றான்.

இந்த உட்பொருளை விளக்கவே முருகவேள் மயிலை நடனம் செய்ய விடுகின்றார் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.


சேவல் கொடியோனே ---

சேவல் - நாத தத்துவம். மயில் விந்துத் தத்துவம். நாத தத்துவத்தை உடையவன் முருகன்.

மயில் ஆடுவதனாலும் சேவல் கூவுவதனாலும், சிவதத்துவங்கள் விளக்கமுற்று, அதனால் வித்யா தத்துவங்களும், ஆன்ம தத்துவங்களும் தொழிற்படுகின்றன. 


ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள்பாலா ---

ஆரியன் – பிரமதேவன்.  

அவன் தாதை – பிரமதேவரின் தந்தை ஆகிய திருமால்.

மாலும் அயனும் காணாத சோதி வடிவாய் நின்ற சிவமூர்த்தியின் திருக்குமாரர் முருகவேள்.

பிரமன் - இராஜச குணம். திருமால் - தாமத குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனை அடைய முடியாது.

மால் அயன் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு ---

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.


ஆடல் அருணம் சோதி ---

அருணம் - சிவப்பு. இறைவர் சிவந்த சோதி வடிவானவர். அது கருணை நிறைந்த சோதி என்க.


அருட்சோதி --- அருள்மயமானது.

சுயஞ்சோதி ---  தானே விளங்குவது.

பரஞ்சோதி --- பெரிய பொருளாக விளங்குவது.

சிவசோதி --- மங்கலத்தைத் தருவது.

ஞானசோதி --- அறிவின் வடிவாயது.

ஏமசோதி --- இன்பத்தை வழங்குவது.

வாமசோதி --- அழகியது.

நடனசோதி --- எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது.

இவ்வாறு பற்பல நாமங்களையும் கொண்டது சோதி ஆகும்.


ஆனைமுகவன் தேடி ஓடியே அணங்கு ஆதல் ---

ஆனைமுகவன் - தாரகாசுரன். அவன் போர் எங்கே என்று தேடி வருபவன். தேவர்கட்குப் பெருந்துயர் செய்தவன். மாயையில் வல்லவன்.

அணங்கு - வருத்தம். அவன் வருத்தத்தை அடைதலை அடியவர்களாகிய அமரர் பொருட்டு ஆறுமுகப் பெருமான் புரிந்தனர்.


கருத்துரை


முருகா! சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.









No comments:

பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நீரும்நிலம் அண்டாத (பொது) முருகா!  சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர். தானதன தந்தான தானதன தந்தான      தான...