83. ஊருடன் கூடி வாழ்

தேரோடும் மணிவீதித் தண்டலையார்

     வளங்காணும் தேசம் எல்லாம்

போரோடும் விறல்படைத்து வீராதி

     வீரரென்னும் புகழே பெற்றார்,

நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு

     நடப்பதுவே நீதி ஆகும்!

ஊரோட உடனோட நாடோட

     நடுவோடல் உணர்வு தானே.


      (தொ-ரை.) தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும் தேசம் எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய  தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரரெனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றியடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும், நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடுநிலை தவறாமல் நடத்தல் அறிவுடைமை அல்லவா?

    ‘ஊரோட உடன் ஓடு!; நாடு ஓட நடுவோடு!' என்பது பழமொழி. ‘ஊருடன் கூடிவாழ்' என்றார் ஒளவையார். “உலகத்தோடு ஒட்ட ஒழிகல்” என்றார் திருவள்ளுவ நாயனார். மாற்றங்களைக் கொண்டது உலகவாழ்க்கை. மனிதர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை உண்டு. ஒழுகலாறுகள் உண்டு. வாழ்க்கை முறையில் வேறுபாடும் உண்டு. சமயநெறிகளிலும் வேறுபாடு உண்டு. இவை ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் இருக்கலாம். ஒத்துப் போகவும் முடியாது. ஆனாலும், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துபோவதுதான் அறிவுடைமை. நல்லவர் என்று கருதி யாரையும் ஏற்றுக் கொள்ளுவதும், தீயவர் என்று கருதி யாரையும் விலக்குவதோ கூடாது. இப்பாடலில், வீராதி வீர்ரெனும் புகழே பெற்றார் என்று குறிப்பிட்டு உள்ளது சிந்தனைக்கு உரியது. பெருவீரராக ஒருவர் இருப்பதால், அவர் மற்றவரை தாழ்வாக எண்ணுவது அறிவுடைமை ஆகாது. அனைத்துத் தரப்பு மக்களோடும் கூடி வாழ்தல் வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் எல்லா நிலையிலும் இருக்கலாம். ஆனாலும், ஒத்துப் போய் வாழ்வதே அறிவுடைமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூறு கூறும். வசு என்றால் பூமி என்று பொருள். பூமி என்றால் பூமியில் வாழும் மனிதர்களைக் குறிக்கும். ‘உலகமே ஒரு குடும்பம்’ என்றும் வழங்கப்பட்டு வருகிறது. (வசுதா + ஏவ + குடும்பகம் = வசுதைவ குடும்பகம்). சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பார்கள். யாருடைய உதவியும் யாருக்கும் எந்த நேரத்திலும் தேவைப்படும்.

வேண்டுதலும், வேண்டாமையும் மனிதனுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் ஆகும். இதை விருப்பு வெறுப்பு என்றும் சொல்லலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒன்றில் விருப்பத்தை வைத்து விட்டால், அதில் உள்ள குற்றம் குறை தோன்றாது. ஒன்றில் வெறுப்பை வைத்து விட்டால், அதில் உள்ள நன்மை தோன்றாது. எனவே, விருப்பு வெறுப்பு கூடாது. விருப்பு, வெறுப்பு காரணமாக, வினைகள் விளைகின்றன. வினைகள் காரணமாக பிறப்பு உண்டாகின்றது. பிறப்பு உண்டானால் இறப்பும் உண்டு. சங்கிலித் தொடர் போல, இவை யாவும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருளை விரும்புவதால்,அது நிலைக்காமல் போய்விடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. வெறுப்புக் கொள்வதால், அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. இந்த அச்சமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. 

 

    வேண்டுதல் --- பற்றாலும், ஆசையாலும், பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.

 

     வேண்டாமை --- வெறுப்பாலும்,  பொருந்தாமையாலும்,  பகைமையாலும் ஒன்றை விரும்பாமை.

 

      நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும், கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும், கருவை கருப்பை மூடியிருப்பது போலவும், ஆசையானது, உண்மை அறிவை விளங்கவொட்டாமல் மறைத்திருக்கிறது. உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமாக,  ஒன்றை விரும்புதலும், ஒன்றை வெறுத்தலும், அவற்றால் விளையும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்று, பிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால், வெறுப்பு வருகின்றது.

      இந்த ஆசையும், அதனால் வினையின் விளைவும்,அதன் காரணமாக விருப்பு வெறுப்புக் கொள்வதும், அதனால் உண்டாகும் பிறப்பு இறப்புத் துன்பங்களும் நம்மைப் பற்றாமல் இருக்கவேண்டுமானால், அவற்றால் வரும் துன்பங்களை இல்லாமல் போக வேண்டுமானால், ஆசையை அடக்க வேண்டும். எது விதிக்கப்பட்டதோ, அதன்படி நடந்துகொள்ளவேண்டும். அப்போது விருப்பு வெறுப்புத் தோன்றாது. பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். தொந்தம் - துவந்தம் - இரட்டைகள் என்னும்,விருப்பு - வெறுப்பு,சுகம் - துக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடவேண்டும்.

“ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்” என்பது வள்ளற்பெருமானாரின் அருள்வாக்கு.


No comments:

23. புல்லரிடம் மூன்று குணங்கள்

“செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம், தங்கு மொழிசந் தனம்போலும், - பங்கியெறி கத்தரியைப் போலும்,இளங் காரிகையே! வஞ்சமனம் குத்திரர்பால் மூன...