“செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்
நெறியாரே! திருடிக் கொண்டே
எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத
கள்ளர்இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்
திருநீறு குழைக்குங் கள்ளர்
அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்
கள்ளர்இவர் ஐவர் தாமே.”
இதன் பொருள் ---
செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே - வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் – பொருட்களைத் திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே. இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் - எனின், தீய கள்ளர் யார் என வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய கள்ளருடன் கூடிக் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு குழைத்திடும் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளர்கள் ஆகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவருமே ஆவர்.
‘ஆசாரக் கள்ளர்’ ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோர். இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார். ஆகையால் வெளிப்படையாகத் திருடரெனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், தம்மிடத்துச் செல்வம் இருந்தும் இல்லாதவர் ஓபல நடித்துப் பொருள் குவிப்போர். இவர்கள் தோற்றத்தில் நல்லவராக நடித்து மக்களை ஏமாற்றுவோர் ஆவர்.
அன்று பாடிக் காட்டிய இந்த நிலை, இக்காலத்தில் கண்ணால் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு கள்ளத்தனமாக நடந்துகொள்பவரைக் குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடினார்.
“கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்;
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்;
கண்காணி யாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.” -- திருமந்திரம்.
மேற்பார்வையிட்டு ஏற்பன செய்விப்போன் கண்காணி எனப்படுவான். உயிர்களுக்குக் கண்காணியாக உள்ளவன் இறைவன். இந்த உண்மையினை அறியாது பலர் தவறான செய்கைகள் பலவற்றையும் செய்கின்றனர். அவர்கள் எண்ணத்தில் கண்காணி இல்லை. இன்னும் சிலர் இதை நன்கு அறிந்து வைத்து இருந்தும், சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்காக அடியார் வேடம் பூண்டு பிறரை மருட்டிப் பொருள் குவிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இவர்களுக்கு ஏதும் பொருள் ஈயாவிட்டால், இவர்களால் நமக்குத் துன்பம் ஏதும் உண்டாகுமோ என்னும் அச்சம் காரணமாக இவர்களுக்குப் பொருள் மிக வழங்குவோர் உண்டு. இவர்களுக்குப் பொருளை நிறையத் தந்தால் தாம் செய்த பாவம் தொலைந்து விடும் என்னும் அஞ்ஞானிகளும் இல்லாமல் இல்லை. மேற்பார்வையாளனாகக் கலந்து எங்கும் நலம்பெற, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று அருள்பவன் இறைவன். அங்ஙனம் நின்று அருள்பவனை ஆசாரத்தில் நின்று நற்பண்புகளை வளர்த்துக் கொண்ட உண்மை அடியவர்கள் கள்ளத்தனம் ஒழிந்தவர் ஆவர்.
பத்தி நெறியில் நில்லாமல், வேட மாத்திரத்தால் அடியார் போன்று காட்சி அளித்து, பொருளைக் கருதி, நன்னெறியைப் பிறருக்கு எடுத்து உரைப்பவர்களைப் பித்தர் என்கிறார் திருமூல நாயனார். இப் பித்தர்கள் பெருநோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள்.
“பத்திவிற்று உண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக் குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே." -- திருமந்திரம்.
வேட மாத்திரையால் பத்தி உடையார் போன்று ஏனையார்க்கு நெறிமுறைகளைப் போதித்து, விலைபெற்று வாழும் வஞ்சகர் வீண்பொழுது கழிக்கும் பொருட்பித்தர் ஆவர். அவருக்கே மறுபிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான வினையை நெல்லைக் குற்றி அரிசியாக்கி உண்பது போல், சிவகுருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்து எனச் செய்தவர், பிறப்பு என்னும் விளைநிலத்தைப் பாழ் செய்தவர் ஆவர். திருவடியுணர்வு கைவந்த இவர் சிவப்பித்தர் ஆவார். அவர்களுக்கு எக்காலத்தும் பிறப்பு இல்லை.
No comments:
Post a Comment