பொது --- 1116. கட்டம்உறு நோய்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கட்டம்உறு நோய் (பொது)


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே 

தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


தத்ததன தானான தத்ததன தானான

     தத்ததன தானான ...... தனதான


கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய

     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே


கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு

     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன்


இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி

     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன்


எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத

     இட்டமினி தோடார ...... நினைவாயே


துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்

     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே


மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ

     மத்தமயில் மீதேறி ...... வருநாளை


வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில், மாமாய

     கட்டுவிடும் ஓர் காலம் ...... அளவாவே,


கத்த உறவோர், பாலர், தத்தை, செறிவார், வாழ்வு

     கற்புநெறி தான்மாய, ...... உயர்காலன்


இட்ட ஒரு தூதாளும் முட்ட, வினையால் மூடி,

     இட்ட விதியே ஆவி ...... இழவாமுன்,


எத்தி, உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத,

     இட்டம் இனிதோடு ஆர ...... நினைவாயே.


துட்டர் என ஏழ்பாரும் முட்டவினையாள் சூரர்

     தொக்கில் நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்ட, வடிவேல் வீர! நட்டம் இடுவார் பால!

     சுத்த தமிழ் ஆர் ஞான ...... முருகோனே!


மட்டு மரை நால்வேதன் இட்டமலர் போல் மேவ,

     மத்தமயில் மீது ஏறி ...... வரு நாளை,


வைத்த நிதி போல் நாடி, நித்தம் அடியார் வாழ,

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


பதவுரை

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினை ஆள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாகத் தொட்ட வடிவேல் வீர --- தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        நட்டம் இடுவார் பால --- அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

        சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே --- தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ --- நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து,

மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில், 

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல்

        மாமாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே --- உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு, 

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய --- சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக 

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட --- பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க, 

வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

பொழிப்புரை

        தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

         தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

          நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து, அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில்,  சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடலானது, உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு,  சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க,  வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

விரிவுரை


மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ --- 

மட்டு – நறுமணம். மரை – தாமரை. நால்வேதன் – பிரமதேவன். இட்டமலர் – விருப்பமான மலர். 

பிரமதேவன் விரும்பி வீற்றிருப்பது தாமரை மலர்.


மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- 

மத்தம் - அதிக உற்சாகம்.


வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- 

        வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணையானது என்றும் மாறாத இயல்பை உடையது என்பதா “மாறாத" என்றார் அடிகளார்.

        “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.


"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்

சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,

கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து

முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.”     --- திருஞானசம்பந்தர்.


"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,

சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,

மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.


பல் அடியார் பணிக்குப் பரிவானை,

         பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,

செல் அடியே நெருங்கித் திறம்பாது

         சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,

"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"

         நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.

வல் அடியார் மனத்து இச்சை உளானை,

         வலிவலம் தனில் வந்துகண் டேனே.          --- சுந்தரர்.


"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"....    --- திருவாசகம்.


"தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த

வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய

மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"

தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே."  --- திருவாசகம்.


"உற்ற இடத்தில் உதவநமக்கு

     உடையோர் வைத்த வைப்பு" அதனை,

கற்ற மனத்தில் புகும் கருணைக்

     கனியை விடைமேல் காட்டுவிக்கும்,

அற்றம் அடைந்த நெஞ்சே! நீ

     அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,

செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,

     சிவாயநம என்று இடு நீறே.                 --- திருவருட்பா.


உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்

     ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,

கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்

     கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்

"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"

     இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,

திலகமே, திரு ஒற்றி எம் உறவே,

     செல்வமே, பரசிவ பரம்பொருளே.         --- திருவருட்பா.


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- 

கட்டம் – துன்பம்.

குடில் – குடிசை. உடம்பைக் குறித்தது. 

குடில் - குடிசை. உடம்பைக் குரம்பை என்றும் சொல்வார்கள். எப்போது விழும் என்று தெரியாது. ஆனால், விழுந்தே தீரும் என்பதால் குடில் என்றார்.  இந்த உடம்பு, எலும்பு சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம் முதலிய பல அசுத்தப் பொருள்களால் ஆனது. அந்த அசுத்தங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.  இந்த உடம்பு தனியே துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்காது. இனிப்பு நிறைந்த பொருளைச் சிறிதுதான் உண்ணலாம். விரும்பினாலும், ஒரு பூசணிக்காய் அளவு உண்ண இயலாது.  மனைவியுடன் சிறிது நேரம்தான் இன்புறலாம். தூங்கினால் சுகம்தான். ஓயாது தூங்கிக் கொண்டிருக்க முடியாது.  இப்படி எதை எதை இன்பமாகக் கருதி அனுபவிக்கின்றோமோ, அந்த இன்பங்களை இந்த உடம்பால் தொடர்ந்து அனுபிவிக்க இயலாது. வெயிலும் மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி நுகர்வது இந்த உடம்பு.  


கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய..... வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- 


சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்

         ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,

    பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,

         ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்

     தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்

         ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என”  ---  பழநித் திருப்புகழ்.

        வினை – பிராரத்த வினை. பிராரத்த வினையினை அனுபவித்துக் கழிக்கவே இந்த உடல் இறைவனால் அருளப்பட்டது. வினையை அனுபவிக்க வேண்டி காலம் வரை உடம்பில் உயிர் இருக்கும். வினைப் போகம் தீர்ந்துவிட்டால், உடம்பில் உயிரானது ஒருகணமும் இருக்காது.


“வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய் வினை தான் ஒழிந்தால் 

தினைப் போது அளவும் நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை

நினைப்போரை மேவும் நினையாரை நீங்கி இந் நெறியில் நின்றால்

உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே”  --பட்டினத்து அடிகளார்.


எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- 

ஏத்தி என்னும் சொல் எத்தி என வந்தது. 

ஏத்துதல் – புகழ்தல், உயர்த்தல், வாழ்த்திக் கூறுதல். துதித்தல்.

    இறைவனை நாள்தோறும் வழபாடு செய்ய வேண்டும். காலம் கருதிச் செய்தல் கூடாது. “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது அறிக.

     இறைவனை முத்தமிழால் ஓத வேண்டும் என்றார். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கின்ற பெருமான் ஓதுவாரை நிச்சயம் வாழவைப்பான் என்பது வெளிப்படை. உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழி. இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தான். “நன்பாட்டுப் புலவனாய் சங்கம் ஐறி” என்பார் அப்பர் பெருமான். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே. சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கற்புணையை நற்புணை ஆக்கியது தமிழ்; எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல்தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்; இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 


கருத்துரை


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


No comments:

பொது --- 1116. கட்டம்உறு நோய்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கட்டம்உறு நோய் (பொது) முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே  தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய். தத்த...