மேன்மையையே விரும்பு

மேன்மையையே விரும்பு

-----


    உலகில் எத்தனையோ வகையான மக்களைக் காண்கின்றோம். பலர் பலவகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் வாழ்வில் உயர்கின்றனர்.  சிலர் வழுக்கி வீழ்கின்றனர். மக்கள் வாழ்க்கை அமைவின் போக்கிலே எத்தனை எத்தனையோ மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் காண முடியும். நேற்று, செல்வராக வாழ்ந்தவர் இன்று வறுமையில் உழலுகின்றார். நேற்றுவரை உயர் பதவியில் செருக்கோடு இருந்தவர், இன்று சாதாரண மனிதராக இருக்கின்றார். நேற்றுவரை எல்லா வகையாலும் தாழ்த்தப் பெற்று இருந்தவர் இன்று எதிர்பாராத வகையில் உயர்த்தப் பெறுகின்றார். இதுதான் உலக இயற்கை. "பெருமையும் சிறுமையும் தான்தர வருமே" என்கிறது "வெற்றிவேற்கை" என்னும் நூல். ஒருவனுக்கு மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும், பிறரால் உண்டாவதில்லை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு. செல்வமும் வறுமையும், வாழ்வும் தாழ்வும் நிலையானவை அல்ல. வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம் என்பதை, வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையில் தெளிவாக்கி உள்ளது.

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” 

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஒர் ஊர் நண்ணினும் நண்ணுவர்”

(யானையின் பிடர்மேல் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து, அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமை எய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர்.)


“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்

அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” 

(பிறரை ஏவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும், வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர்)


“அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்

அரசரோடு இருந்து அரசாளினும் ஆள்வர்” 

(வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும், செல்வராகி அரசு அங்கங்களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர்.)


“குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்

அன்றைப் பகலே அழியினும் அழிவர்” 

(மலையளவு பெரும்பொருள் பெற்றவரும், பெற்ற அப்பொழுதே அதனை இழப்பினும் இழப்பர்.)



“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்

கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்” 

(ஏழு நிலைகளுடைய மாளிகையும் அடியுடன் சாய்ந்து அழிந்து, கழுதைகள் மேய்கின்ற பாழ்நிலம் ஆனாலும் ஆகும்.)


“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி

நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” 

(எருதுகளும், கழுதைகளும் மேய்ந்த பாழ்நிலமானது,  பொன்னால் ஆகிய வளையலை அணிந்த  மாதர்களையும், ஆடவர்களையும் பொருந்தி, நெற்குவியல்களைய உடைய பெரிய நகரம் ஆனாலும் ஆகும்.)


    “இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா, வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா” என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்.

    இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மனிதரின் வாழ்க்கையிலும் காணலாம். இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:


“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட,

மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்

சென்று இரப்பர் ஓரிடத்துக் கூழ் எனில், செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற்று அன்று” -- நாலடியார்.

    அறுசுவை உள்ள உணவினை, அன்புள்ள மனைவி ;இன்னும் உண்ணுக, இன்னும் உண்ணுக' என்று ஊட்டி உபசரிக்க உண்டு மகிழ்ந்தவர்களின் வாழ்க்கை அப்படியே நிலைத்து இருக்காது. ஒரு நாள் எல்லாம் மாறி வறுமை நிலையை அடைந்து, ஒருவாய்க் கூழுக்காகப் பிறர் வீடு தேடிச் சென்று பிச்சை எடுக்கவும் நேரிடலாம். நிலையற்ற செல்வம் சீமானை ஏழை ஆக்கும். சீமானும் ஏழை ஆவான். செல்வம் நிலையானது என்று கருதக் கூடியது அல்ல.


“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை

வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட

மனையாளை மாற்றார் கொள”  -- நாலடியார்.

    யானையின் கழுத்து பொலிவு பெறும்படி, குடை நிழலில் பல சேனைகட்குத் தலைவராக ஆரவாரமாய் உலாச்சென்ற மற்றத் தீவினையானது கெடுக்க, அதனால், தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர்.

    “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்நூல்கள்” பலவற்றையும் ஆராய்ந்தால், இத்தகைய எண்ணற்ற சான்றுகளைக் காணலாம். “அவிழ்ச் சுவையே அறிந்து, தமிழ்ச் சுவை அறியாத தம்பங்கள்” இதனைக் கற்றோர்பால் அறிந்து உணரவேண்டும்.  நிலையாமை குறித்து தமது முன்னோர் பாடிவைத்த பாடல்களின் உண்மை நிலையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம். தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.

    தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை. 

    தாழ்மையாக – அமைதியாக, அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறுவார்கள். அவ்வாறு இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக நடப்பார்கள். அப்படிப்பட்டவர்களே பெருந்தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர். அப்படி வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர். தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர் என்னும் உண்மையைத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகிறார்.


“பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.” 


“பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை

பெருமிதம் ஊர்த்து விடல்” 


என்னும் திருக்குறட்பாக்களின் கருத்தை உணர்தல் வேண்டும்.


    உயர்ந்தோர் தாழ்ந்தால்,உலகுக்குக் கெடுதலே இல்லை. ஆனால் தாழ்ந்தோர் உயர்ந்தோராகி, அதிகாரமும் செல்வமும் கிடைக்கப் பெற்றால், அவருக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் கேடு அமைவது இயற்கை. அறிவற்றவனிடத்தில் பெருஞ்செல்வமானது, அவனது முயற்சி எதுவும் இன்றித் தானே வந்து அமைந்த காலத்தில், தொடர்பு ஏதும் இல்லாத அயலார் அதனை நிறைய அனுபவிக்க, தான் மேற்கொள்ளும் செயலில் எல்லா வகையிலும் ஊடுபாடு உள்ள உறவினர் பசித்து இருப்பர் என்ற இன்னொரு கொடுமையையும் திருவள்ளுவ நாயனார் காட்டுகின்றார்.


“ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர், பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை”      -- திருக்குறள்.


    எனவே, நல்லோர்க்கு உயர்வு வந்தால், நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை. அல்லவர்க்கு உயர்வு வந்தால், அவருக்கு மட்டுமன்றி, சமுதாயத்துக்கே தீங்கு விளைவிக்கும். இது நடைமுறையில் காண்கின்ற, யாவரும் அறிந்த உண்மை.  ஒருசிலர் தங்கள் பதவியோ செல்வநிலையோ எவ்வளவு உயர்ந்தாலும் அதனால் இறுமாப்போ கொள்ளாமல், தமது முன்னைய நிலையினையும், தாம் சார்ந்து உள்ள சமூகத்தின் நிலையினையும் எண்ணி, தமது பதவி உயர்வாலும், செல்வ வளத்தாலும் பிறருக்குத் தம்மால் இயன்ற வரையில் நன்மைகளை ஆராய்ந்து ஆய்ந்து செயல்படுவர். ஒரு சிலர் அத்தகைய ஆக்கப்பணி செய்யாவிட்டாலும், தமது உயர்வின் செருக்கால் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். பிறரைச் சிறுமைப் படுத்திச் சிறுசொல் சொல்லமாட்டார்கள். ஆனால் அற்ப அறிவினர்களுக்கு வாழ்வு வந்தால், அந்த வாழ்வின் செருக்கால் அவர்கள் கெடுவதோடு, சமுதாயத்தையும் கெடுத்து, பல கொடுமைகளைச் செய்வார்கள். 

   இந்திரன் தன் நிலையில்லாத பதவியின் செருக்கால், நெறி பிறழ்ந்து, மாற்றான் மனைவியை அடையும் கொடும் செயலைச் செய்து தாழ்வினை அடைந்தான் என்ற புராண வரலாறு எல்லோரும் அறிந்ததே. திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு,  குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும்,  கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். 

 

“சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.”           --- நாலடியார்.

 இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும், மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.   (முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.)


“செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.”

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். 

இதன் பொருள் ---

       இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்தியபோது, தமது அறியாமை காரணமாக,  தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள். சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள். உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள். தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே." 

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர். 

“தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே.”  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார்,  தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர், காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்த உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய்,  இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை - நிழல். மாடு - செல்வம்)

    எனவே, சமுதாயம் செம்மை பெற வேண்டுமானால், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமானால், நல்லவர் உயர்வு பெற வேண்டும். நல்லவர்கள் எக்காலத்திலும், பிற உயிர்க்கு நன்மையையே விரும்புவார்கள். மேன்மை ஒன்றையே விரும்பி, மேன்மை தரும் செயல்களையே செய்வார்கள். எல்லா உயிரும் விரும்புவது மேன்மையே. எனவே, மேன்மையையே விழைதல் வேண்டும்.

“தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ

மன்உயிர்க்கு இன்னா செயல்” -- திருக்குறள்.

தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்ந்து இருக்கும் ஒருவன், பிற உயிர்க்கும் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதை, நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


No comments:

மேன்மையையே விரும்பு

மேன்மையையே விரும்பு -----      உலகில் எத்தனையோ வகையான மக்களைக் காண்கின்றோம். பலர் பலவகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் வாழ்வில் உயர்கின்...